கொல்கத்தா vs சன்ரைசர்ஸ்: ஐபிஎல் சாம்பியனை தீர்மானிக்கும் சென்னை ஆடுகளம் யாருக்கு சாதகம்?
பட மூலாதாரம்,GETTY IMAGES
கட்டுரை தகவல்
எழுதியவர், போத்திராஜ்
பதவி, பிபிசி தமிழுக்காக
26 மே 2024, 03:05 GMT
புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்
நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு இறுதிப்போட்டியில் நடைபெறுகிறது.
ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ள அணிகள் எந்த பாலபாடத்தையும் கற்காமல் இந்தக் கட்டம் வரை வரவில்லை. ஏறக்குறைய இரு மாதங்களாக நடந்த லீக் சுற்று ஆட்டம், கடும் வெயில் காலம், ஒவ்வொரு அணி நிர்வாகத்தையும், வீரர்களையும் பரிசோதித்து பார்த்துவிட்டது. அணியின் கலாசாரம், பெஞ்ச் பலம், பல்வேறு சூழல்கள், எதிரணிகளுக்கு எதிராக வியூகம், திட்டம் வகுத்தல் ஆகியவற்றை 2 மாத காலம் ஆய்வு செய்ய வைத்தது.
இதுவரையிலான சவால்களையெல்லாம் தாண்டி இறுதிப்போட்டிக்கு வந்துள்ள இரு அணிகளில் கோப்பை யாருக்கு? இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டால் யாருக்கு கோப்பை?
பேட்டிங் ராட்சதர்கள் நிரம்பிய கொல்கத்தா
கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து பேட்டர் ஜேஸன் ராய் விலகியதால் அவருக்குப் பதிலாக சேர்க்கப்பட்டவர் பில் சால்ட். இங்கிலாந்து அணிக்கு விளையாட செல்லும் முன் கொல்கத்தா அணியின் பேட்டிங்கிற்கு தூணாக இவர் இருந்தார். அவர் இல்லாத நிலையில் குர்பாஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுனில் நரைன் இந்த சீசனில் பேட்டிங்கில் விஸ்வரூபமெடுத்து எதிரணிகளுக்கு சவால் அளித்து வருகிறார். இதுவரை 482 ரன்கள் சேர்த்து 180 ஸ்ட்ரைக் ரேட்டில் நரைன் பேட் செய்து வருகிறார். கடைசி இரு போட்டிகளைத் தவிர்த்து லீக் ஆட்டங்களில் மற்ற அணிகளுக்கு நரைன் பேட்டிங் சிம்மசொப்பனமாகவே இருந்தது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
நடு வரிசையில் ஸ்ரேயாஸ், வெங்கடேஷ், நிதிஷ் ராணா மற்றும் பின்வரிசையில் ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸல், ராமன்தீப் சிங் என அடுத்தடுத்து பேட்டிங் ராட்சதர்கள் நிரம்பிய அணியாக கொல்கத்தா இருக்கிறது. இந்த ஆட்டத்தில் இம்பாக்ட் ப்ளேயர் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார். அந்த வகையில் நிதிஷ் ராணா, வைபவ் அரோரா ஆகிய இருவரில் ஒருவர் இம்பாக்ட் ப்ளேயராக இருக்கலாம். முதலில் பேட் அல்லது சேஸிங்கைப் பொருத்து இருவரில் ஒருவர் இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்படலாம். கொல்கத்தா அணியில் முதல் 7 வரிசை பேட்டர்கள் சுழற்பந்துவீச்சுக்கும், வேகப்பந்துவீச்சுக்கும் எதிராக 150 ஸ்ட்ரைக் ரேட்வைத்துள்ளனர் என்கிறது கிரிக்இன்ஃபோ வலைதள புள்ளிவிவரம்.
பந்துவீச்சில் மிட்ஷெல் ஸ்டார்க் முதல் தகுதிச்சுற்றில் தன்னுடைய பந்துவீச்சின் வீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை எளிதாக்கினார். அந்த தாக்கம் சன்ரைசர்ஸ் அணியில் இன்றும் இருக்கும். இது தவிர பந்தை நன்கு ஸ்விங் செய்யும் வைபவ் அரோரா, நடுப்பகுதி ஓவர்களில் பந்துவீச்சில் வேரியேஷன்கள் செய்யும் ஹர்ஷித் ராணா, ஆந்த்ரே ரஸ்ஸல், தேவைப்பட்டால் பந்துவீச வெங்கடேஷ் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் புதிரான பந்துவீச்சாளரான வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் இருவரும் எந்த அணியையும் நடுப்பகுதி 8 ஓவர்களில் ரன் குவிக்க விடாமல் செய்து விடுகிறார்கள். இருவரின் பந்துவீச்சு கொல்கத்தாவுக்கு பெரிய பலமாகும்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களும் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார்கள். கடந்த 5 போட்டிகளில் மட்டும் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் 47 விக்கெட்டுகளை சாய்த்து, 7.95 எக்னாமி வைத்துள்ளனர். முதல் 8 போட்டிகளில் 31 ரன்கள் சராசரி வைத்திருந்த கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் கடைசி 5 போட்டிகளில் 16 என முன்னேறியுள்ளனர்.
ஆதலால், கடந்த முதல் தகுதிச்சுற்றில் விளையாடிய அதே ப்ளேயிங் லெவன் மாறாமல் வர அதிக வாய்ப்புள்ளது.
சன்ரைசர்ஸ் மீது எதிர்பார்ப்பு
சன்ரைசர்ஸ் அணி பரிசோதனை முயற்சியாக ஷாபாஸ் அகமது, அபிஷேக் ஷர்மாவை ராஜஸ்தானுக்கு எதிராக பந்துவீசச் செய்து வெற்றி பெற்றது. ஆனால், அதே பந்துவீச்சாளர்களுடன் வலிமையான கொல்கத்தாவை எதிர்கொள்வது ஆபத்தானது.
அதேசமயம், கொல்கத்தா அணியில் சுனில் நரைன், வெங்கடேஷ், நிதிஷ் ராணா, ரிங்கு சிங் என 4 இடதுகை பேட்டர்கள் இருக்கிறார்கள். இவர்களைச் சமாளிக்க ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர் தேவை என்பதால், விஜயகாந்த் அல்லது மார்க்ரம் இம்பாக்ட் ப்ளேயராக வரலாம். கடந்த சில போட்டிகளாக மார்க்ரம் பந்துவீச்சு, பேட்டிங்கில் ஜொலிக்காததால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தார். இந்த ஆட்டத்தில் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது.
வேகப்பந்து வீச்சுக்கு உனத் கட்டுக்குப் பதிலாக யான்சென் அல்லது கிளென் பிலிப்ஸ் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், தொடர்ந்து 2 டக்அவுட் ஆகியிருக்கிறார். கடந்த போட்டியிலும் சொதப்பலாக பேட் செய்தது சன்ரைசர்ஸ் அணிக்கு கவலை தரும் விஷயம். அபிஷேக் ஷர்மாவும் கடந்த ஆட்டத்தில் சொதப்பிவிட்டார். ஆதலால் இருவர் மீதான எதிர்பார்ப்பு பைனலில் அதிகரிக்கும்.
ரஸ்ஸல் பந்துவீச்சுக்கு எதிராக அபிஷேக் ஷர்மா மோசமான ரெக்கார்ட் வைத்துள்ளார். ரஸல் பந்துவீச்சில் 12 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ள அபிஷேக் 2 முறை விக்கெட்டை இழந்துள்ளார். ஆனால், வருண், நரைனுக்கு எதிராக அபிஷேக் 175 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். ஆதலால், இன்று அபிஷேக்கை ஆட்டமிழக்கச் செய்ய தொடக்கத்திலேயே ரஸ்ஸல் கொண்டுவரப்படலாம்.
கொல்கத்தா அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பேட்டர் ஹென்ரிச் கிளாசன். ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் கிளாசன் திருப்பிவிடுவார். முதல் தகுதிச்சுற்றில் வருண், ஸ்டார்க் ஓவருக்கு எதிராக 200 ஸ்ட்ரைக் ரேட்டை கிளாசன் வைத்திருந்தார். சுனில் நரைனுக்கு எதிராக 166 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள கிளாசன் 42 பந்துகளில் ஒருமுறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார். கிளாசன் நங்கூரமிட்டால் சன்ரைசர்ஸ் அணிக்கு பெரிய பலமாகும், அதேநேரத்தில் கொல்கத்தாவுக்கு தலைவலியாகும்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
சன்ரைசர்ஸ்க்கு 2வது வாய்ப்பு
சன்ரைசர்ஸ் அணி இதுவரை 2016ம் ஆண்டு மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2018ம் ஆண்டுக்குப்பின் 3வது முறையாக பைனலுக்கு சன்ரைசர்ஸ் முன்னேறியுள்ளது.
2021ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கடைசி இடத்தையும், 2022ம் ஆண்டில் 8-வது இடத்தையும் சன்ரைசர்ஸ் பிடித்தது. கடந்த 2 சீசன்களிலும் கொல்கத்தா அணி 7-வது இடத்தைப் பிடித்தது. ஆனால், ஏலத்தில் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ.20 கோடிக்கு வாங்கி கேப்டனாக்கியது சன்ரைசர்ஸ்.
ஆனால், பதிலடியாக ஐபிஎல் ஏலத்தில் உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளரான மிட்ஷெல் ஸ்டார்க்கை ரூ.24 கோடிக்கு கொல்கத்தா வாங்கியது. ஸ்டார்க் 2015ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் தொடரில் விளையாடாத நிலையில் நம்பிக்கையுடன் அவரை கொல்கத்தா விலைக்கு வாங்கியது. ஒரே நாட்டைச் சேர்ந்த இருவர்(கம்மின்ஸ், ஹெட், ஸ்டார்க்) ஐபிஎல் தொடரில் இரு வெவ்வேறு அணியில் இடம் பெற்று அவர்களுக்குள் நடக்கும் யுத்தமாகவும் இந்த இறுதிப்போட்டி இருக்கப் போகிறது.
இந்த சீசனில் அதிவேகமாக ரன்களைச் சேர்த்த இரு அணிகள் என்றால் அது கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள்தான். இந்த இரு அணிகளுக்கு இடையே சாம்பியன் கோப்பையை கைப்பற்ற நடக்கும் ஆட்டம் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
கொல்கத்தா அணி கடந்த 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கவுதம் கம்பீர் கேப்டன்ஷியில் வென்றது. அதே கவுதம் கம்பீர்தான் இப்போது கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக வந்து, அந்த அணி வலுவாக உருவெடுத்து இறுதிப்போட்டி வரை வந்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
அது மட்டுமல்லாமல் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 2வது முறையாக தான் கேப்டனாக பொறுப்பேற்ற அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்துள்ளார். இதற்கு முன் டெல்லி கேப்டல்ஸ் அணியை பைனலுக்கு ஸ்ரேயாஸ் கேப்டன்ஷிப் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 2016ம் ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபின் 2வது முறையாக சாம்பியன் பட்டத்திற்காக மல்லுக்கட்டுகிறது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், தான் சார்ந்திருக்கும் ஆஸ்திரேலிய அணிக்காக ஆஷஸ் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றைப் பெற்றுக்கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக சன்ரைசர்ஸ் அணிக்கும் பொறுப்பேற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி?
சென்னையில் நேற்று மாலை திடீரென மழை பெய்ததையடுத்து கொல்கத்தா அணியின் பயிற்சி பாதியிலேயே முடிக்கப்பட்டது. ஆனால் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் மழை பெய்ய சிறிதளவு மட்டுமே வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய கணிப்பு கூறுகிறது.
சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கருப்பு மண் கொண்ட விக்கெட்டுக்குப் பதிலாக சிவப்பு மண் கொண்ட விக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஆடுகளம் பேட்டர்களுக்கு விருந்தாக இருக்கும். இரவு நேரப் பனிப்பொழிவை சரியாகக் கணித்து டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்ய வேண்டும்.
சேப்பாக்கம் மைதானத்தைப் பொருத்தவரை ஐபிஎல் போட்டிகளில் முதலில் பேட் செய்த அணிகள் 49 வெற்றிகளைப் பெற்றுள்ளன, அதாவது 58.33 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொடரில் தடாலடி பேட்டிங்கால் எதிரணிகளை கலங்கடித்த சன்ரைசர்ஸ் அணி முதல் பேட்டிங் செய்தே அதிக வெற்றிகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சேஸிங் செய்த அணிகள் 35 வெற்றிகளைப் பெற்று வெற்றி சதவீதம் 35 % ஆக இருக்கிறது. இந்த சிவப்பு மண் விக்கெட் பயன்படுத்தப்பட்டால் சராசரியாக 200 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும். ஒருவேளை கருப்பு மண் விக்கெட்டாக இருந்தால் 165 ரன்கள்தான் சராசரி.
பட மூலாதாரம்,GETTY IMAGES
இதுவரை நேருக்கு நேர்
கொல்கத்தா அணியும், சன்ரைசர்ஸ் அணியும் இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 18 வெற்றிகளும், சன்ரைசர்ஸ் 9 வெற்றிகளும் பெற்றுள்ளன. இன்று ஆட்டம் நடக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை ஒருமுறை மட்டுமே கொல்கத்தா, சன்ரைசர்ஸ் அணிகள் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணியே வென்றுள்ளது.
அது மட்டுமல்லாமல் கடைசியாக இரு அணிகளும் மோதிக்கொண்ட 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் கொல்கத்தா அணி வென்றுள்ளது, 2023, ஏப்ரல் 14ம் தேதி நடந்த ஆட்டத்தில் மட்டும் சன்ரைசர்ஸ் வென்றது. இந்த சீசனில் இருமுறை இரு அணிகளும் மோதிக்கொண்ட நிலையில் அதில் இரண்டிலுமே கொல்கத்தா அணிதான் வென்றது.
ஆக, சன்ரைசர்ஸ் அணியை கடந்த காலங்களில் இருந்து தனது பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் மூலம் கொல்கத்தா அணி ஆதிக்கம் செய்துவருகிறது என்பது தெரியவருகிறது.
இந்த சீசனில் கொல்கத்தா அணியிடம் லீக் சுற்றிலும், ப்ளே ஆஃபின் முதல் தகுதிச்சுற்றிலும் சன்ரைசர்ஸ் அணி தோற்று இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது. ஐபிஎல் வரலாற்றில் லீக் சுற்றிலும், ப்ளே ஆஃப் சுற்றிலும் ஒரு அணியிடம் தோற்ற அணி, பைனலில் வென்று சாம்பியன் பட்டம் ஒருமுறை மட்டும் வென்றுள்ளது. அது மும்பை இந்தியன்ஸ் மட்டும்தான். 2017ம் ஆண்டு புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியிடம் லீக், தகுதிச்சுற்றில் தோற்று பைனலில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.
இந்த முறை கொல்கத்தா அணியை சன்ரைசர்ஸ் அணி வீழ்த்தினால், அந்த வரிசையில் இடம்பிடிக்கும் 2வது அணி என்ற புகழைப் பெறும்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
மழை பெய்தால் என்ன ஆகும்?
ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்காக நாளை ஒருநாள் (திங்கட்கிழமை) ரிசர்வ் டே-ஆக வைக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் இன்று மழை பெய்து ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டால் நாளைய தினம் போட்டி விட்ட இடத்தில் அதாவது எந்த ஓவரில் போட்டி தடைபட்டதோ அதில் இருந்து அப்படியே தொடரும்.
ரிசர்வ் நாளிலும்(திங்கட்கிழமை) மழை பெய்தால் 5 ஓவர்கள் வீச வைத்து வெற்றியாளர் யார் என்பது முடிவு செய்யப்படும். ஒருவேளை 5 ஓவர்களும் வீச முடியாத அளவு காலநிலை இருந்தால், சூப்பர் ஓவர் வீசப்பட்டு வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார்.
ஒருவேளை சூப்பர் ஓவரும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், கொல்கத்தா அணிதான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தமையால், அந்த அணி சாம்பியனாக அறிவிக்கப்படும்.
https://www.bbc.com/tamil/articles/c511vew4781o