IND vs SA: சூர்யகுமார் மீது குறி, கேசவ் மகராஜ் எனும் ஆயுதம் - இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES
கட்டுரை தகவல்
எழுதியவர், க.போத்திராஜ்
பதவி, பிபிசி தமிழுக்காக
54 நிமிடங்களுக்கு முன்னர்
2024ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை நிறைவுக்கு வரவுள்ளது. பிரிட்ஜ்டவுனில் இன்று இரவு நடக்கும் இறுதி ஆட்டத்தில் தோல்வி அடையாத இந்திய அணியும், தென் ஆப்ரிக்க அணியும் சாம்பியன் பட்டத்துக்காக மோதுகின்றன.
இரு அணிகளுமே இதுவரை ஐசிசி தொடர்களில் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதியதில்லை. 2014ஆம் ஆண்டு டி20 அரையிறுதியில் இந்திய அணியுடன் ஒருமுறை மோதிய தென் ஆப்ரிக்கா அதில் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளும் லீக் சுற்று முதல் அரையிறுதி வரை தோல்வியே அடையாமல் இறுதிப்போட்டி வரை வந்துள்ளன. ஒருவேளை இந்தத் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றாலும், தோல்வி அடையாமல் சாம்பியன் வென்ற அணி என்ற பெருமையையும் இந்தியா அல்லது தென் ஆப்ரிக்கா பெறும்.
இந்திய அணியைப் பொருத்தவரை லீக் சுற்று, சூப்பர்-8 சுற்று என அனைத்திலுமே ஆதிக்கம் செய்து வென்றது. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து என அனைத்து அணிகளையும் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஆதிக்கம் செய்து வென்றது. ஒரு போட்டியைக்கூட நெருக்கமாகச் சென்று இந்திய அணி வெல்லவில்லை. இதிலிருந்தே இந்திய அணி எத்தகைய சரிவிலிருந்தும் எளிதாக மீளும், எந்த அணி மீதும் ஆதிக்கம் செலுத்தும் என அறியலாம்.
ஆனால், தென் ஆப்ரிக்கா அணி தோல்வி அடையாமல் இறுதிப்போட்டி வரை பயணித்தாலும், சில போட்டிகளில் கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில்தான் வென்றது. நேபாளம், வங்கதேசம், அணிகளிடம்கூட போராடித்தான் வென்றது. வலிமையான அணியாக இருந்தாலும், எந்த நேரத்தில் சறுக்கும் என்பது அந்த அணிக்கே இன்னும் பிடபடவில்லை.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை நேருக்கு நேர்
இரு அணிகளும் இதுவரை 26 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 14 ஆட்டங்களில் இந்திய அணியும், 11 ஆட்டங்களில் தென் ஆப்ரிக்காவும் வென்றுள்ளன. இந்திய அணிக்கு எதிராக டேவிட் மில்லர் 20 போட்டிகளில் 431 ரன்கள் சேர்த்துள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ரோஹித் சர்மா 17 போட்டிகளில் 420 ரன்களும், சூர்யகுமார் 6 போட்டிகளில் 343 ரன்களும் சேர்த்துள்ளனர்.
பந்துவீச்சில் கேசவ் மகராஜ் 10 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின், புவனேஷ் குமார் சிறப்பாகப் பந்து வீசியிருந்தாலும் இருவரும் தொடரில் இல்லை. குல்தீப் யாதவ் கடந்த ஆண்டு ஜோகன்ஸ்ப்ர்க்கில் 2.5 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்திருந்தார். கடைசியாக நடந்த 5 டி20 போட்டிகளில் தென் ஆப்ரிக்கா 3 போட்டிகளிலும், இந்திய அணி 2 ஆட்டங்களிலும் வென்றுள்ளது.
இந்திய அணிக்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்?
இந்திய அணி கடைசியாக 2013ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. அதன்பிறகு ஏறக்குறைய 10 ஆண்டுகளாக எந்தவிதமான ஐசிசி நடத்தும் போட்டியிலும் கோப்பையை வென்றதில்லை.
இந்திய அணி 2014 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை வந்தது. 2016, 2022 டி20 உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதி, 2016, 2019 ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதி என இந்திய அணி கோப்பைக்காகப் போராடி வருகிறது.
கடந்த ஆண்டு சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் தருணத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. 12 மாதங்களுக்குக்கு உள்ளாக அடுத்த வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்திருக்கிறது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
கடந்த 10 ஆண்டுகளாக நடந்த உலகக்கோப்பைத் தொடர்களில் அரையிறுதி, இறுதிப் போட்டிவரை சென்றும் ஒரு கோப்பையைக்கூட வெல்லாத நிலைதான் இந்திய அணிக்கு இருக்கிறது. ஆதலால், இந்தமுறை 10 ஆண்டுக்கால பஞ்சத்தைத் தீர்த்து, கோப்பையுடன் தாயகம் திரும்ப வேண்டும் என்ற தாகத்துடன் இந்திய அணியினர் உள்ளனர். ஆதாலால் இந்திய அணிக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த தொடராகும்.
இந்திய அணியாவது இறுதிப் போட்டிவரை சென்று தோற்றுள்ளது. ஆனால், தென் ஆப்ரிக்காவின் நிலைமை பரிதாபமானது. 1991ஆம் ஆண்டு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் வந்தது முதல் ஏறக்குறைய 33 ஆண்டுகளாக ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர், டி20 தொடரில் இதுவரை தென் ஆப்ரிக்கா அரையிறுதியைக் கடந்தது இல்லை. ஐசிசி நடத்தும் போட்டிகளில் 1998 சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதற்குப் பின் இதுவரை வேறு எந்தக் கோப்பையையும் வென்றது இல்லை.
முதல்முறையாக தென் ஆப்ரிக்க அணி டி20 உலகக்கோப்பைத் தொடரிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளது. தென் ஆப்ரிக்க அணியில் பல ஜாம்பவான்கள் இருந்த காலத்தில்கூட இறுதிப் போட்டிக்குக்குச் செல்லாத நிலையில் இந்த முறை இறுதிப்போட்டிக்கு வந்துள்ளதால், கோப்பையை வெல்லும் வாய்ப்பைத் தவறவிடாமல் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருக்கிறது.
ஆதலால் இன்று நடக்கும் 40 ஓவர்களும் போட்டியைப் பார்க்கும் ரசிகர்களுக்கும், இரு அணி வீரர்களுக்கும் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும்.
வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலுமே இரு அணிகளும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில்தான் இருக்கின்றன. அதனால் இந்த ஆட்டம் அரையிறுதி போன்று ஒருதரப்பாக அமையாமல், பெரிய ஸ்கோராக, விறுவிறுப்பாக இருத்தல் வேண்டும்.
ஆடுகளம் எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES
பிரிட்ஜ்டவுன் ஆடுகளத்தில் டி20 உலகக்கோப்பையில் இதுவரை 8 ஆட்டங்கள் நடந்துள்ளன, இது 9வது ஆட்டம். இந்த மைதானத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் மோதியுள்ளதால் ஆடுகளத்தின் தன்மை குறித்துத் தெரியும். ஆனால், தென் ஆப்ரிக்கா விளையாடியதில்லை.
இந்த விக்கெட்டில் நடந்த 7 போட்டிகளில் 3இல் முதலில் பேட் செய்த அணிகள் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரு போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகிய அணிகள் அமெரிக்காவை குறைந்த ரன்னில் சுருட்டி எளிதாக சேஸ் செய்துள்ளன. ஒரு போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றுள்ளது.
கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் டி20 போட்டிகளில் அதிகமாக வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்கள் 59 விக்கெட்டுகளை வீழ்த்தி, 20.22 சராசரியும், 7.88 எக்கானமியும் வைத்துள்ளனர். ஒரு போட்டியில் மட்டும் 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஆட்டங்கள் அனைத்தும் 109 முதல் 181 ரன்களுக்குள்தான் சேர்க்கப்பட்டுள்ளது.
இறுதிப்போட்டி, 4ஆம் எண் கொண்ட விக்கெட்டில் நடத்தப்படும் எனத் தெரிகிறது. இது நமீபியா-ஓமன், ஸ்காட்லாந்து-இங்கிலாந்து இடையே ஆட்டம் நடந்த விக்கெட்டாகும். இந்த மைதானத்தில் பவுண்டரி எல்லை சற்று தொலைவாக இருக்கும். மழைக்கான வாய்ப்பு இருந்தாலும் ரிசர்வ் நாள் இருக்கிறது.
இந்த ஆடுகளத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுக்க வேண்டும். டாஸ் வென்று முதலில் பேட் செய்த அணிகள் வென்றுள்ளன, பந்துவீ்ச்சைத் தேர்ந்தெடுத்த இங்கிலாந்து அணி இரு ஆட்டங்களிலும் ஒன்றில் வென்று மற்றொன்றில் தோற்றுள்ளது.
இந்திய அணி இந்தத் தொடரில் 7 போட்டிகளில் 5 போட்டிகளில் முதலில் பேட்டிங்கையே தேர்ந்தெடுத்துள்ளது, இதில் 4 முறை எதிரணியே இந்திய அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது.
தென் ஆப்ரிக்க அணி 3 முறை டாஸ் வென்று அதில் இருமுறை பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இரு அணிகளுமே பந்துவீச்சில் வலிமையாக இருப்பதால் முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை அடித்து பந்துவீச்சில் சுருட்டவே விருப்பம் காட்டக்கூடும். இந்த ஆட்டம் பகலில் நடப்பதால் பனிப்பொழிவுக்கு வாய்ப்பில்லை.
சூர்யகுமார் மீது குறி
பட மூலாதாரம்,GETTY IMAGES
சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை நடுவரிசையில் வெளிப்படுத்தி வருகிறார். நடுப்பகுதியில் ஸ்கோரை திடீரென உயர்த்தி, ரன்ரேட்டை அதிகப்படுத்துவதில் அவரின் பங்கு குறிப்பிடத்தக்கது.
பேக்வார்ட் பாயின்ட் முதல் பேக்வார்ட் ஸ்குயர்லெக் வரை சூர்யகுமார் அனாசயமாக ரன்களை சேர்க்கிறார். வேகப்பந்து, பவுன்ஸரை விரும்பி அடிக்கும் சூர்யகுமார், இதுபோன்ற பந்துவீச்சில் எளிதாக ஸ்கோர் செய்வார். அதிலும் தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை இதற்கு முன் வெளுத்துள்ளார்.
ரபாடாவுக்கு எதிராக 24 பந்துகளில் 66 ரன்கள், நோர்க்கியாவின் 12 பந்துகளில் 32 ரன்கள், யான்செனின் 5 பந்துகளில் 25 ரன்கள் என சூர்யகுமார் வேகப்பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்துள்ளார். தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 298 ஸ்ட்ரைக் ரேட்டை அவர் வைத்துள்ளார்.
ஆதலால் இன்றைய இறுதி ஆட்டத்தில் சூர்யகுமாரை களத்தில் நிலைத்து பேட் செய்யவிடாமல் தடுக்கத் தேவையான உத்திகளை தென் ஆப்ரிக்கா வகுக்கும். ஸ்லோவர் பந்துகளையும் வெளுக்கும் ஸ்கை, 180 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். சரியான லென்த்தில், அதிவேகப்பந்துகளுக்கு எதிராக சூர்யகுமார் திணறுகிறார் என்பதால் அதன் மீது தென் ஆப்ரிக்கா கவனம் செலுத்தும்.
கேசவ் மகராஜ் எனும் ஆயுதம்
இந்திய அணி எந்த அளவு சுழற்பந்துவீச்சில் வலுவாக இருக்கிறதோ அதேபோன்று தென் ஆப்ரிக்காவும் கேசவ் மகராஜ், சம்ஷி என இரு வலுவான சுழற்பந்துவீச்சாளர்களை வைத்துள்ளது.
வேகப்பந்துவீச்சை எளிதாகs சமாளித்து ரோஹித், கோலி விளையாடி விடுவார்கள். ஆனால் பவர்ப்ளேவில் கேசவ் மகராஜ் பந்துவீச்சை ஆடுவதில் சிரமப்படுவார்கள் என்பதால், பவர்ப்ளேவில் மகராஜை பந்துவீச வைக்கலாம்.
பவர்ப்ளேவில் 114 பந்துகளை வீசிய மகராஜ் 143 ரன்கள்தான் விட்டுக்கொடுத்துள்ளார், 7.52 எக்கானமி வைத்துள்ளார் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கோலி, ரோஹித் இருவருமே ஸ்லோவர் இடதுகை பந்துவீச்சுக்குத் திணறுவார்கள் என்பதால், இருவருக்கு எதிராக கேசவ் கொண்டுவரப்படலாம்.
கிளாசன், மில்லர் - குல்தீப், ஜடேஜா
பட மூலாதாரம்,GETTY IMAGES
தென் ஆப்ரிக்க அணியில் சுழற்பந்துவீச்சை எளிதாகச் சமாளித்து ஆடுவதில் கிளாசன், மில்லர் சிறந்த பேட்டர்கள். இந்திய அணியின் சுழல் மும்மூர்த்திகளான அக்ஸர் படேல், குல்தீப், ஜடேஜா மூவரும் இன்றைய ஆட்டத்தில் முக்கியத் துருப்புச் சீட்டுகள்.
கிளாசன், மில்லர் இருவருமே சுழற்பந்துவீச்சை எளிதாக விளையாடுவார்கள் என்றாலும், 3 பேரின் பந்துவீச்சும் வேறுபட்டவை என்பதால் சில சிரமங்கள் இருக்கக்கூடும்.
குறிப்பாக ஜடேஜா பந்துவீச்சில் கிளாசன் பெரிதாக ரன்களை சேர்த்தது இல்லை. ஜடேஜாவின் 16 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே கிளாசன் சேர்த்துள்ளார். குல்தீப் பந்துவீச்சில் மில்லர் 24 பந்துகளில் 24 ரன் சேர்த்து இஇருமுறை விக்கெட்டையும் இழந்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் கிளாசன், மில்லர் விக்கெட்டை வீழ்த்துவதில் குல்தீப், ஜடேஜா முக்கியப் பங்கு வகிப்பார்கள்.
துபேவுக்கு பதிலாக சாம்ஸன்
இந்திய அணியில் ஆல்ரவுண்டர் என்ற பெயரில் ஷிவம் துபே தேர்ந்தெடுக்கப்பட்டார். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பிரமாதமாக ஆடுவார் எனக் கூறி அணியில் சேர்க்கப்பட்டு 37 பந்துகளில் 48 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், 2 முறை ஆட்டமிழந்துள்ளார்.
வேகப்பந்துவீச்சில் 62 பந்துகளில் 59 ரன்களை சேர்த்து பெரிய தாக்கத்தை துபே ஏற்படுத்தவில்லை. ஆதலால், இன்றை ஆட்டத்தில் நடுவரிசைக்கு ஸ்திரமான பேட்டர் தேவை என்பதற்காக துபேவுக்கு பதிலாக சாம்ஸனை களமிறக்கலாம் எனத் தெரிகிறது. வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியிலிருந்து பெஞ்சில் இருக்கும் சாம்ஸனுக்கு இன்று வாய்ப்புக் கிடைக்கலாம்.
அதேபோல தென் ஆப்ரிக்காவில் வேகப்பந்துவீச்சாளர் பார்ட்மேனுக்கு பதிலாக சம்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இந்திய அணிக்கு எதிராக சம்ஷி சிறப்பாக பந்துவீசக் கூடியவர் கடந்த காலங்களில் நிரூபித்துள்ளார் என்பதால் சம்ஷி களமிறங்கலாம்.
வேகப்பந்துவீச்சுக்குச் சாதமாக ஆடுகளத்தில் சம்ஷிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். பார்ட்மேன் டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக்கூடியவர் குறிப்பாக யார்க்கர் வீசுவதிலும், நல்ல லென்த்தில் பந்துவீசுவதிலும் சிறந்தவர் என்பதால், அவரை நிராகரிப்பது கடினம்.
கோலியின் ஃபார்ம்
பட மூலாதாரம்,GETTY IMAGES
விராட் கோலியின் ஃபார்ம் இந்தத் தொடரில் மிக மோசமாக அமைந்துள்ளது. இதுவரை அதிகபட்சமாக 37 ரன்கள் சேர்த்து, மொத்தமாக 75 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியிலும் கோலியின் பேட்டிங் ஏமாற்றத்தை அளித்தது. ஆனால், கோலியின் ஆட்டத்தின் மீது கேப்டன் ரோஹித் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார், இறுதிப்போட்டி வரை காத்திருப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆதலால் கோலியின் ஆட்டம் இன்று மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த டி20 உலகக்கோப்பைதான் கோலிக்கும், ரோஹித்துக்கும் ஏறக்குறைய கடைசியாக இருக்கக்கூடும். இதில் ஏதாவது தாக்கத்தை இருவருமே ஏற்படுத்த முயல்வார்கள் என்பதால் இருவரின் பேட்டிங் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி(உத்தேச வீரர்கள்)
ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே அல்லது சாம்ஸன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா
தென் ஆப்ரிக்கா(உத்தேச வீரர்கள்)
எய்டன் மார்க்ரம்(கேப்டன்), குயின்டன் டீ காக், ரீஸா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், ஹென்ரிச் கிளாசன், மார்கோ யான்சென், கேசவ் மகராஜ், காகிசோ ரபாடா, ஆன்ரிச் நோர்க்கியா, தப்ரியாஸ் சம்ஸி அல்லது பார்ட்மேன்
https://www.bbc.com/tamil/articles/cw4y9nyzzj3o