அச்சம் தவிர்
-------------------
முன்னரே ஒரு தடவை தொலைபேசியில் கதைத்திருந்தாலும், அவனை நேரே பார்க்கும் போது, குறிப்பாக அவனின் நீண்ட தாடி அது நெஞ்சு வரை விழுந்திருந்தது, என்னவெல்லாமோ நினைக்க வைத்தது. அவனின் பெயரிலே அவன் யார், அவனின் மார்க்கம் என்னவென்று தெளிவாக இருக்கின்றது. ஆனாலும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வேலைக்கு வரும் போதும் அப்படியே, அதே தோற்றதுடனேயே வருவார்கள் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
தனியாக வந்து வேலையில் சேர்ந்த அவன் சில மாதங்களின் பின்னர் அவனின் மனைவியை இங்கு வரவழைத்தான். இந்த நாட்டிற்கு உள்ளே வருவதற்கு மிக இலகுவான வழிகளில் ஒன்று இங்கு சட்டரீதியாக வேலை ஒன்றில் இருக்கும் கணவன்மார்களின் மனைவிகளுக்கு உண்டு. அந்த விசாவை கிட்டத்தட்ட எந்தக் கேள்வியும் இல்லாமல் இந்த நாடு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கேயே உழைத்து, இங்கேயே செலவழிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு போல. இதற்காக இங்கு சில பல்கலைகளில் கிடைக்கும் தகவல்களை ஆராய்ந்து அறிக்கைகள் கூட தயார் செய்திருப்பார்கள். இவர்களின் சில ஆராய்ச்சிகளைப் பார்த்தால், அவை 'மயிர் பிளக்கும்' ஆராய்ச்சிகள் போன்றே தோன்றும். ஆனாலும் அவற்றின் பின்னாலும் சில திட்டங்கள் இருக்கும் போல.
மிக நேர்மையானவனாக இருந்தான். அதுவரை நான் அப்படி நேர்மையான ஒரு மனிதனை எங்களின் வேலையில் பார்த்திருக்கவில்லை. மிகத் திறமையானவனும் கூட. அவன் பொய்யே சொல்வதில்லை என்றே தோன்றியது. ஒரு நாள் நேரடியாகவே அதைக் கேட்டேன். மெல்லிய சிரிப்பு ஒன்றே அவனின் பதிலாக இருந்தது. தினமும் ஒரு கத்தியுடனேயே வேலைக்கு வந்து கொண்டிருக்கின்றான் என்று சில நாட்களில் தெரிய வந்தது. கத்தியை அவனின் மேசையில் இருக்கும் ஒரு அலுமாரியில் வைத்துக் கொள்வான். பின்னர் வேலை முடிந்து வீடு போகும் போது அதை கொண்டு போய்க் கொண்டிருந்தான். அவர்களின் மார்க்கத்தில் இருக்கும் இரண்டு பெரிய பிரிவுகளும் இல்லாமல் இன்னொரு பிரிவே அவனுடையது. முதன் முதலாக அந்த மார்க்கத்தில் இருக்கும் அப்பிரிவைப் பற்றி அவனிடமிருந்து கேள்விப்பட்டேன். ஆண்கள் கத்தியுடன் வெளியே போய் வரவேண்டும் என்ற ஒரு கட்டளை அங்கிருந்தது.
சீக்கியர்களுக்கும் இப்படியான ஒரு வழக்கம், கத்தி ஒன்றுடன் போய் வரும், இருந்தது. இன்றும் பஞ்சாப்பில் நகரம் அல்லாத பகுதிகளில் இந்த வழக்கம் இருக்கக்கூடும். 9/11 தாக்குதலின் பின், இங்கு சில இடங்களில் சீக்கியர்கள் தாக்கப்பட்டார்கள், இஸ்லாமியர்கள் என்று தவறாக அடையாளப்படுத்தப்பட்டு. இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் என்று சொன்னால் எவரும் நம்பமாட்டார்கள். இரு பக்கங்களும் ஒரே மாதிரியான தோற்றங்கள் மற்றும் ஆடைகள், ஒப்பனைகள், கத்திகளுடன் இருக்கின்றனர்.
ஒரு நாள் ஏதோ ஒரு விசா சம்பந்தமான அலுவல் ஒன்றுக்காக அவன் நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் குடிவரவு அலுவலகத்திற்கு போக வேண்டியிருந்தது. எங்களின் வேலை இடத்தில் இருந்து ஒரு 25 மைல்கள் தூரத்தில் நகரத்தின் மையப்பகுதி இருக்கின்றது. அங்கே வேறு பல மத்திய, மாநில அரச அலுவலகங்களும் சுற்றிவர இருக்கின்றன. காலையில் இருந்தே அந்தப் பகுதி கூட்டமாக இருக்கும். காரை தரிப்பிடங்களில் நிற்பாட்டுவதற்கே நேரம் எடுக்கும். ஆதலால் அதிகாலையிலேயே போய், அருகே இருக்கும் ஒரு இடத்தில் காரை நிற்பாட்டி விட்டு, அவன் போக வேண்டிய இடத்திற்கு போகச் சொல்லியிருந்தேன். கூகிளுக்கு முந்திய காலம் இது.
காரை நான் சொல்லியிருந்த இடத்தில் விட்டு விட்டு, அருகிலேயே இருக்கும் கட்டிடம் நோக்கி நடக்க ஆரம்பித்தவனுக்கு வலப்பக்கமா அல்லது இடப்பக்கமா, எந்தப் பக்கம் போவது என்ற சந்தேகம் வந்தது. அங்கே நின்ற ஒருவரைக் கேட்போம் என்று, கையில் ஒரு கடதாசியை நீட்டிக் கொண்டே, இந்த இடம் எங்கே இருக்கின்றது என்று அவன் கேட்கப் போனான். இவன் கையை நீட்டிக் கொண்டு வருவதைக் கண்ட அங்கு நின்ற நபர் திரும்பிப் பார்க்காமால் ஓட்டம் பிடித்தார். இவனும் மற்ற பக்கமாக ஓடி, காரை எடுத்துக் கொண்டு அப்படியே வேலைக்கு வந்து, அங்கு நடந்ததைச் சொன்னான்.
அந்த நபர் ஏன் ஓடினார் என்று அவன் என்னைக் கேட்டான். நீ ஏன் ஓடி வந்தாய் என்று நான் கேட்டேன். அந்த நபர் ஓடிப் போய் துப்பாக்கி எடுத்து வந்து சுட்டாலும் என்ற பயத்தில் தான் தான் ஓடி வந்ததாகச் சொன்னான். உன்னுடைய கத்தி எங்கே இருந்தது என்று கேட்டேன். இடுப்பைக் காட்டினான். இப்பவும் அந்தக் கத்தி அங்கேயே இருந்தது. இனிமேல் தான் அது மேசை அலுமாரிக்குள் போகும்.
சில மாதங்கள் அவன் இங்கிருந்து விட்டு இந்தியாவுக்கு திரும்பிப் போய்விட்டான்.