ரகு தாத்தா
- சுப.சோமசுந்தரம்
1981 ஆம் ஆண்டு வெளிவந்த 'இன்று போய் நாளை வா' திரைப்படத்தில், "ஏக் காங்வ் மே ஏக் கிஸான் ரஹ்தா தா" என்ற இந்தி வாக்கியத்தைப் படிக்கும் தமிழ் மாணவன் "ரஹ்தா தா" என்பதை "ரகு தாத்தா" என மீண்டும் மீண்டும் சொல்வதை நகைச்சுவையாகப் படம் ஆக்கியிருந்தார்கள். இன்று வரை அந்த நகைச்சுவை தமிழ்நாட்டு மக்கள் மனதில் பதிந்திருப்பது இம்மண்ணில் அவ்வப்போது ஒன்றிய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிரான சவுக்கடிக்கான ஒரு குறியீடு என்று கூறுவது மிகையாகாது. எனவே 1960களில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழ்நாட்டில் முழுவீச்சில் நடைபெற்ற பின்னணியில் பின்னப்பட்ட கதையை வைத்து இப்போது எடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு 'ரகு தாத்தா' எனப் பெயரிட்டது பொருத்தமான ஒன்றே !
இப்படம் பற்றிய விமர்சனங்கள் பல பத்திரிகைகளிலும் அவரவர் கோணத்தில் வெளிவந்த பிறகு என் பங்கிற்கு ஒரு முழுமையான விமர்சனம் அளிப்பது இந்த என் எழுத்தின் நோக்கமல்ல. பெரும்பாலான அவர்களிடமிருந்து நான் சற்று மாறுபடும் இடங்களையே சுட்ட எண்ணம்.
கிராமியச் சூழலில் ஒரு கட்டுப்பெட்டியான சமூகத்தில் வளர்ந்திருந்தாலும் நாயகி ஒரு முற்போக்குச் சிந்தனையாளராக அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் அவர்களின் தாக்கத்தினால் இந்தி எதிர்ப்பு, பெண்ணியம் பேசும் புதுமைப் பெண்ணாகச் சித்தரிக்கப்படுகிறார். அத்தனை விஷயங்களிலும் அவருக்கு உறுதுணையாய்த் தோளொடு தோள் நிற்கும் தோழனாய் விளங்குபவர் அவருடைய தாத்தா. படத்தின் 'ரகு தாத்தா' அவரே ! அறுபதுகளில் வளர்ந்த என் போன்றோருக்கு இவை வெகு இயல்பாகத் தோன்றுகின்றன. திராவிட இயக்கச் சிந்தனை பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதைக் கண்கூடாகக் கண்டவர்கள் நாங்கள். இடதுசாரி சிந்தனையைப் போலவே அது ஒரு நல்ல அரசியலாக அமைந்தது. எனவே பொதுவாக இக்கால இளைய சமுதாயத்திடம் நல்ல கொள்கை அரசியலும், திரைப்படம் போன்ற கலைகளில் நல்ல ரசனையும் இல்லாமல் போனதே என்று புலம்பும் தலைமுறையும் நாங்களே ! தலைமுறை இடைவெளி என்பது நியூட்டனின் நான்காவது விதியாக அமையலாமோ ! நிற்க.
நாம் கையில் எடுத்துள்ள இப்படத்தின் நாயகி வங்கியில் பணிக்குச் செல்கிறார்; சொல்லிலும் செயலிலும் மட்டுமல்ல, எழுத்திலும் தம் முற்போக்கு சிந்தனைகளைப் பதிய வைக்கும் எழுத்தாளராய்த் திகழ்கிறார். பத்திரிகைகளில் தாம் எழுதும் சிறுகதைகளில் புதுமைப் பெண்களைப் படைக்கிறார். பெண் எழுதுவதைச் சமூகம் பெரிதும் வரவேற்காத காலகட்டத்தில், கயல்விழிப் பாண்டியன் எனும் தம் பெயரைக் க.பாண்டியன் எனும் ஆண் பெயரில் எழுத்துலகில் பதிவு செய்கிறார். அவரைத் திருமணம் செய்யும் நோக்கில் முற்போக்காளனாய் வேடமிட்ட ஒரு பிற்போக்குவாதியிடம் மனதளவில் ஏமாந்து பின் எவ்வாறு தப்பிக்கிறார் என்பதை ஒரு நல்ல நகைச்சுவைச் சித்திரமாக்கி இருக்கிறது படக்குழு.
"முற்போக்குக் கருத்துகளை நகைச்சுவை இழையோடும் கதையம்சத்தோடு வழங்கியதால், கருத்துகள் நீர்த்துப்போய் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை; காமெடி படம் பண்ணலாமா அல்லது கருத்துப்படமாக ஆக்கலாமா என்ற குழப்பத்தில் விளைந்ததாகத் தெரிகிறது" என்ற விமர்சனம் சிலரால் வைக்கப்பட்டுள்ளது. இப்பார்வையில் முற்றிலும் முரண்படுகிறேன் நான். நகைச்சுவையுணர்வு என்பது சான்றாண்மைக்கான அறிகுறி என்பது சர். சார்லி சாப்ளின் போன்றோர் ஏற்கனவே உலகிற்கு எடுத்துக் காட்டிய ஒன்று. அவ்வகையில் இப்படம் தனது உயரிய நோக்கத்தை எந்த குழப்பமும் இன்றித் தெளிவாக வெளிக்கொணர்வதில் வெற்றி பெறுகிறது. கொள்கைகளை மட்டும் பேசினால் இது வெறுமனே ஒரு ஆவணப்படமாக முடிந்திருக்க வாய்ப்புள்ளது. எந்த ஒரு கொள்கையும் தொடக்கத்தில் கசப்பு மருந்தாகவே பெரும்பான்மை மக்கள் சமூகத்தால் பார்க்கப்படும். எனவே அருமையான திட்டமிடல், படமாக்கல் மூலமாக மருந்தைத் தேனில் குழைத்துத் தந்துள்ளது இயக்குநரின் அபார சாதனை.
நாயகியான கீர்த்தி சுரேஷ் முகபாவனையிலும் கண்ணசைவிலும் நவரச நாயகியாக மிளிர்கிறார். 'நடிகையர் திலகம்' திரைப்படத்தில் சாவித்திரி அவர்களை நம் கண் முன் நிறுத்திய கீர்த்தி சுரேஷ் 'ரகு தாத்தா' திரைப்படத்தில் தாமும் ஒரு நடிகையர் திலகம் என்பதை நிரூபிக்கிறார். கீர்த்தி சுரேஷ் அளவிற்கு நடிக்கும் வாய்ப்பை இப்படம் தராவிட்டாலும், தமக்கு அளிக்கப்பட்ட பங்கினில் அப்பேத்திக்குத் தாத்தாவாகத் திறம்பட ஈடு கொடுக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இவர்கள் இருவர் தவிரவும் ஏனைய கதாபாத்திரங்களும் தத்தம் பொறுப்பினைச் செவ்வனே நிறைவேற்றுவது, குறித்து நோக்கத்தக்கது. தக்கோரைத் தேர்வு செய்து குறைந்த முதலீட்டில் படத்திற்கான கதை, உரையாடல் எழுதி இயக்கிய சுமன் குமார் பெரும் பாராட்டுக்குரியவர். பன்முகத்தன்மை படைத்த சுமன் குமாருக்குத் தமிழில் இந்த முதல் முயற்சியே சிறப்பாய் அமைந்துள்ளது. மற்றபடி காட்சி அமைப்பு, ஒளிப்பதிவு அனைத்தும் கிராமியச் சூழலிலும், ஆங்கமைந்த அலுவலகப் பின்னணியிலும் அறுபதுகளின் நெல்லை, தென்காசி, நாகர்கோவிலுக்கு நம்மை இயல்பாய் அழைத்துச் செல்கின்றன. பின்னணி இசை பற்றி எழுத, அத்துறையில் அடியேன் ஒரு ஞான சூனியம் என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். மேலும் படத்தில் லயித்துவிட்டால் பின்னணி இசை என்று ஒன்று இருப்பதே தெரியாத பாமரர்களில் ஒருவன் நான்.
அவ்வப்போது நாடகத் தன்மை, சினிமாத்தனம், காற்றோடு பறக்கும் லாஜிக் இவை இல்லாமல் இல்லை. இந்த அம்சங்கள் நிறைந்த முன்னணி நடிகர்களின் மசாலா படங்களுக்கு நூறு கோடிக்கு மேல் நாம் அள்ளித் தராமல் விடுவதில்லையே ! மேலும் பொய்யுரை, உயர்வு நவிற்சி, இல் பொருள் உவமை அனைத்தும் நிரம்பிய இலக்கிய மரபுகளுக்குச் சொந்தக்காரர்கள்தாமே நாம் ! எனவே சுவை கூட்டுவதாய் இக்குறைகளைப் புறந்தள்ளலாம். கொள்கைப் பரப்புரை எனும் மருந்தில் கலந்த தேனாய்க் கொள்ளலாம்.
இத்துணை எழுதியாயிற்று. திருவாளர் வெகுசனத்தை இப்படம் எவ்வளவு சென்றடைந்திருக்கும் என்று பார்ப்போமா ? வியாழனன்று (15-08-2024) வெளியான படத்தை நான் திங்கட்கிழமை பார்த்தேன். கூட்டம் சுமாருக்கும் குறைவுதான். சிறிய பட்ஜெட்டில் தயாரித்த படம் என்பதால் விளம்பரம் பெரிதாக இல்லை என்பது முதற் காரணமாக இருக்கலாம். சொல்லிக் கொள்ளும் அளவில் தமிழ்ப் படங்கள் வெளிவராத ஒரு இடைவெளிக் காலத்தை விட்டுவிட்டு தங்கலான், டிமான்டி காலனி போன்ற பெரிய பட்ஜெட் படங்களுடன் சேர்த்து வெளியிட்டது இன்னொரு காரணமாக இருக்கலாம். இன்னும் ஓரிரு நாட்களில் பெரும் வெற்றியடையப் போகும், வெற்றியடைய வேண்டிய மாரி செல்வராஜ் அவர்களின் 'வாழை' திரைப்படம் திரையரங்குகளை நிறைக்கப் போகும் நேரம். இத்தகைய காலகட்டத்தில் வெளியிட 'ரகு தாத்தா' படக்குழுவினருக்கு என்ன கால நெருக்கடியோ !
ஆனாலும் பெரியாரையும் அண்ணாவையும் முன்னிறுத்திய ஒரு திரைப்படத்தைத் திராவிட இயக்கத்தினரே பெரிய அளவில் கண்டு கொள்ளாமல் போனதன் காரணமென்ன ? கொள்கைகளைக் காமெடியுடன் கலந்து விட்டதனாலா ? ஏற்கனவே குறிப்பிட்டது போல், ஆவணப்படமாக வந்திருந்தால் இரண்டே நாட்களில் அரங்கத்தை விட்டே படம் ஓடி இருக்குமே ! அண்ணாவையும் பெரியாரையும் ஊறுகாய் போல் தொட்டுக்கொண்டு வணிகம் செய்கிறார்கள் என்ற கோபமா ? வணிகம் ஆகவே இருக்கட்டுமே ! அப்படியாவது நம் தலைவர்கள் மேலும் சிலரைச் சென்றடையட்டுமே ! அல்லது இயக்கத்திற்குத் தொடர்பே இல்லாதவர்கள் நம் கொள்கைகளைப் பேசுவதை நாம் வரவேற்பதில்லையா ? அண்ணாவும் பெரியாரும் திராவிட இயக்கத்திற்கு மட்டுமே உரியவர்களா ? கார்ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு மட்டுமே உரியவரா, என்ன ? எது எப்படியோ இப்படத்தைப் பெரிய அளவில் கண்டு கொள்ளாமல் விட்டது திராவிட இயக்கத்தினரின் தவறே !
இனி OTT தளத்தில் வெளியாகி படம் பலரைச் சென்றடையும் என்று நம்புவோம். அண்ணாவையும் பெரியாரையும் வாசித்து, கேட்டு வளர்ந்த ஒருவன் அப்படித்தான் ஆசைப்பட முடியும். இது போன்ற படங்கள் தோல்வியுற்றால், சிறிது சிறிதாகத் தமிழ்ச் சமூகம் தோற்றுப் போகுமோ என்று இனம் புரியாத, 'இனம்' புரிந்த பயம் தொற்றிக் கொள்கிறது.
https://www.facebook.com/share/p/t54RmctDGCko3Thm/?mibextid=oFDknk