“காலம் எல்லாம் உனக்காகக் காத்திருப்பேன்” நன்முல்லை, ஒரு கடற்கரையோரம் இருந்த, பழமையான மரத்தடியில் அமர்ந்திருந்தாள். மெல்லிய குளிர் காற்றில் அவளின் சேலை அசைந்தது. அவள் கூந்தலில் சூடிய மல்லிகைப் பூக்களின் நறுமணம் உப்புக் காற்றில் கலந்திருந்தது. பழைய மகிழ்வான நினைவுகளால் நிரம்பிய அவளது கண்கள், தனக்கு நன்றாகத் தெரிந்த, ஆனால் பல ஆண்டுகளாகப் பார்த்திராத, ஒரு உருவத்தைத் தேடுவது போல, அடிவானத்தை நோக்கியது. அவளுடைய மகிழ்ச்சியான மற்றும் சோகமான தருணங்களைக் கண்ட கடல், அவள் இதயத்தில் உள்ள வலியை மறந்து, தனது நித்திய தாளத்தைத் தொடர்ந்தது. பனிமலை போல் பரந்திருக்கும் வெண்மணலின் முடிவில், பாரிய கடல் ஆர்ப்பரித்து அலை மேலெழுந்து, அவள் காலை முத்தமிட்டது. அந்த அழகே தனிதான்! ஆனால் அவள் அதை விரும்பி பார்க்கும் நிலையில் இல்லை. அவள் மலரவனைப் பார்த்துப் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த மரத்தடியில் சோக கண்ணீருடன் விடைபெற்று இன்று பத்து ஆண்டுகள். அப்போது அவள் இளமையாகவும் கனவுகள் நிறைந்தவளாகவும் இருந்தாள். அவன், தனது புத்திசாலித்தனமான மனதுடன், அவர்களின் சிறிய கிராமப் பள்ளியில், எப்போதும் தனித்து நின்றான். நன்முல்லை, கல்வியில் அவ்வளவு திறமை இல்லாவிட்டாலும், அவனது இதய நட்சத்திரமாக ஒளிர்ந்துகொண்டு இருந்தாள். அவர்கள் இருவரும் மிக நெருக்கமாக, அன்பாக ஒன்றாக வளர்ந்தார்கள். அவர்களின் பந்தம் குறுகிய தூசி நிறைந்த பாதைகள் மற்றும் அவர்களின் கிராமத்தின் அமைதியான வயல்களுக்கு மத்தியில் வளர்ந்தது. கடற்கரை ஓரத்தில் துள்ளி விளையாடியது. பழைய ஒற்றை மரத்தடியின் கீழ் முழுமைபெற்றது. மலரவன் கொழும்பு மருத்துவ பீடத்திற்குத் தெரிவான செய்தி கிடைத்ததும், அந்தக் கிராமத்தின் பெருமைக்கு எல்லையே இல்லை. அவர்களின் பள்ளியில் இருந்து, இப்படி ஒரு சாதனையை நிகழ்த்திய முதல் மாணவன், அவனே ஆகும். ஆனால், கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நன்முல்லையின் இதயம் கனத்தது. அது ஏன் என்று அப்பொழுது அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் இப்ப கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினாள். அவன் அங்கிருந்து வெளியேற எல்லாம் மாறும் என்று. அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த கடைசி மாலையில், மலரவன் அவளை, அதே கடலோர ஒற்றை மரத்தடியில் சந்திக்கச் சொன்னான். கதிரவன் மறைந்து கொண்டிருந்தது, தண்ணீரின் மேல் ஒரு தங்க நிறத்தை அது வீசியது. அவன், அவளின் இரு கைகளையும் இறுக்கமாகப் பிடித்திருந்தான். அவன் கண்கள் உணர்ச்சியால் நிரம்பி வழிந்தது. “நன்முல்லை” என்று அவன் குரல் கொஞ்சம் நடுங்கியது, “எதுவாக இருந்தாலும் சரி, நான் மருத்தவனானவுடன் உனக்காக இங்கு கட்டாயம் திரும்ப வருவேன்" என்று உறுதியளிதான். "நீ என் உயிர், என் எல்லாம் நீயே. எனக்காக காத்திருங்கள், தயவு செய்து." என்று கெஞ்சினான். அவள் தலையசைத்தாள், அவள் முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது. அவள் நெற்றியிலும் கன்னங்களிலும் மென்மையான முத்தங்களைப் பதித்து அவளை இறுக அணைத்தான். அந்தக் கணம், அவள் உள்ளத்தில் மகிழ்ச்சியான நினைவாகப் பதிந்தது. அவள் என்றென்றும் சுமந்து செல்லும், ஒரு இன்பமான நினைவாக அது இருந்தது. ஆனால் அது ஒரு முடிவாகும் என்று அவள் அன்று நினைக்கவே இல்லை. முதலில் கொடுத்த வாக்கை அவன், கொழும்புப் பல்கலைக்கழகம் போன புதிதில் காப்பாற்றினான். கொழும்பிலிருந்து மின் கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் வந்தன, அவனது படிப்புகள், அவனது வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்கான அவனது கனவுகள் நிறைந்த கதைகள். ஆனால் திங்கள்கள், ஆண்டுகளாக மாற, தொடர்புகள் அடிக்கடி வருவதில்லை. "நான் எனது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்" என்று அவன் தனது கடைசித் தொடர்பு ஒன்றில் கூறினான். பிறகு, மௌனம் தான் பதிலாக இருந்தது. விரைவில் மீண்டும் தொடர்புகொள்வான் என்று, தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு, நன்முல்லை காத்திருந்தாள். ஆனால், நாளாக நாளாக, அவள் ஆழ்மனதில் ஒரு பயம் வளர ஆரம்பித்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவன், தனது இறுதித் தேர்வில் முதலிடம் பெற்றதாகவும், இலண்டனில் படிக்க மதிப்புமிக்க தகுதிசார் கல்வி உதவித்தொகை பெற்றதாகவும், செய்தி அவளை எட்டியது. அவள் இதயம் பெருமிதத்தால் வீங்கியது, ஆனால் அவன் மேலும் விலகிச் செல்கிறான் என்பதை உணர்ந்து, அதுவும் வலித்தது. என்றாலும் அவள் காத்திருந்தாள். அவன், தன் கனவுகளை அடைய தன்னைத் துரத்திக் கொண்டிருப்பதாகவும், அவன் உறுதியளித்தபடியே தனக்காகத் திரும்பி வருவான் என்றும், அவள் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள். மலரவன் இறுதியாகத் தன் மேற்படிப்பை இலண்டனில் முடித்துக் கொண்டு, கிராமத்திற்குத் திரும்பியதும், எண்ணற்ற முறை நன்முல்லை நினைத்திருந்த மகிழ்ச்சியான சந்திப்பு, அங்கு நடைபெறவில்லை. அவன் அங்கு, அந்த இலண்டன் பல்கலைக்கழகத்தில் கண்டு பழகிக், காதலித்த தனது காதலியுடனும் அவளின் பெற்றோருடனும், பெற்றோருக்கு நேரடியாக அறிமுகப்படுத்தவும், தனது திருமணத்தைப் பெற்றோரின் வாழ்த்துடன் உறுதிப்படுத்தவும் திரும்பி வந்ததாக மற்றவர்களிடமிருந்து அவள் கேள்விப்பட்டாள். நன்முல்லையின் இதயம் நொறுங்கியது, ஆனால் அதைத் தனது, தன் கண்களால் பார்க்கும் வரை நம்ப மறுத்தாள். ஒரு நாள் மாலை, அவள் அந்தப் பழைய ஒற்றை மரத்தடியில் நின்றபோது, அவன், தன் வருங்கால மனைவியுடன் கடற்கரையோரம் நடந்து செல்வதைப் பார்த்தாள். அவனைப் பார்த்ததும் அவள் உள்ளம் துடித்தது. ஆனால், அவன் முன்போல் இருக்கவில்லை. அந்த முன்னைய கிராம மண்வாசனை அங்கு இருக்கவில்லை. அதிக மெருகூட்டப் பட்டவனாகவும், அதிக நம்பிக்கையுடையவனாகவும், மற்றும் ஒரு நகர்ப்புற மண் வாசனைதான் அவனில் தெரிந்தது. ஆனால், அவளைப் பொறுத்தவரையில், அவன் இன்னும் அவள் நேசித்த மலரவன்தான். தன் தைரியத்தை எல்லாம் வரவழைத்துக் கொண்டு, அவன் தன்னைக் கவனிக்கும் வரை காத்திருந்தாள். அவர்களின் கண்கள் சிறிது நேரம் சந்தித்தன, ஆனால் அவனது பார்வையில் எந்த உடன்பாடும் இல்லை. அவள் யார் என்று அவனது காதலி கேட்டபோது, அவன் தனக்குத் தெரியாது என்று நிராகரித்தான். "ஓ, சில பைத்தியக்கார கிராமத்து பெண் போலும், " என்று அவன் சாதாரணமாக, ஆனால் கொஞ்சம் உரத்த சத்தத்துடன் கூறினான். "அவள் தன் கணவனை இழந்திருக்கலாம் அல்லது எதையாவது இழந்திருக்கலாம்." என்றான். நன்முல்லையின் உலகம் சிதைந்தது. அவள் கத்த விரும்பினாள், அவனுடைய வாக்குறுதிகளை, அவர்கள் பகிர்ந்து கொண்ட அன்பை அவனுக்கு நினைவூட்ட. ஆனால் அவள் அமைதியாக இருந்தாள். அவளுடைய கண்ணியம் அவளைக்அந்த இடத்திலேயே வேரூன்ற வைத்தது. அவன் விலகிச் செல்வதைக் கண்டு அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. அவன் காதலியுடன் பேசும் போது, அவனது சிரிப்பு காற்றில் அவளுக்கு எதிரொலித்தது. அன்று முதல், நன்முல்லை வாழ்வு, கடலோர மரத்தடியில் நிலைத்தது. கிராமவாசிகள் அவளை அங்கு அடிக்கடி பார்ப்பார்கள். ஒரு புரியாத வெளிப்பாட்டுடன் அவள் அடிவானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பாள். சிலர் அவளைப் பரிதாபமாகப் பார்த்தனர். மற்றவர்கள், அவளை கிராமத்தின் பைத்தியக்காரப் பெண் என்று கேலி செய்தனர். ஆனால் நன்முல்லை அவை எதையும் பொருட்படுத்தவில்லை. அவள் இதயத்தில், மலரவனின் நினைவுகளில், அவன் கொடுத்த வாக்குறுதியில், இன்னும் ஒட்டிக்கொண்டாள். அவள் தொடர்ந்து காத்திருந்தாள், அவன் திரும்புவதற்காக அல்ல, ஆனால் அவள் அறிந்த காதலுக்காக, தன் வாழ்க்கையை வரையறுத்த காதலுக்காக மட்டுமே! மலரவன் எண்ணம் இதயத்தில் எரிய அங்கு இருந்தாள்; கல் மருங்கு எழுந்து, என்றும் ஓர் துளிவரக் காணா நல்மருந்து போல், நலன் அற உணங்கிய நங்கை மென் மருங்குல்போல் வேறுள அங்கமும் மெலிந்தாள். - அசோகா வனத்தில் சீதையின் நிலை / சுந்தர காண்டத்தில் இருந்து இறுதி மூன்று வரியும் எடுக்கப்பட்டது - (மருங்கு – பக்கத்திலே; உணங்கிய – வாடிய) மலரவனின் எண்ணம் அவளை எரித்து துன்புறுத்த, நன்முல்லை, [சீதை அசோக வனத்தில் இருந்தது போல்] கற்பாறைக்குப் பக்கத்திலே [ பழைய ஒற்றை மரத்தின் கீழ் இருந்த] தோன்றி வளர்ந்து, எக்காலத்திலும் ஒரு நீர்த்துளி கூட வருவதை அறியாத உயர்ந்த மூலிகையைப் போல, உடலும் உள்ளமும் அற்றுப்போக வாடிய அவள், மெல்லிய இடையைப் போல, மற்றைய அங்கங்களும் இளைத்து விடும்படி துயருற்று இருந்தாள். ஆண்டுகள் கடந்தன, நன்முல்லையின் தலைமுடி நரைத்தது. ஆனால் அந்த கடலோரத்தில் இருந்த ஒற்றை மரம் வலுவாக நின்றது. அதன் கிளைகள் காற்றில் அசைந்தன. அவளுடைய தளராத காதலுக்கு மௌன சாட்சியாக. ஒரு நாள், கதிரவன் மறைந்து வானம் கருஞ்சிவப்பு நிறமாக மாறியபோது, நன்முல்லை கண்களை மூடிக்கொண்டாள். அவள் உதடுகளில் மெல்லிய புன்னகை இன்னும் தெரிந்தது. அவளுடைய காத்திருப்பு, இந்த மண்ணில் கடைசியாக முடிந்தது. இந்த பிறவியிலோ அல்லது மறுமையிலோ, மீண்டும் தன் மலரவனைக் கண்டுபிடிப்பேன் என்று அவள் நம்பினாள். அதுவரை கடல் அவளின் கிசுகிசுக்களை சுமந்துகொண்டே இருக்கும், மரம் அவள் நினைவுகளைக் காத்துக்கொண்டிருக்கும் - காலம் தாண்டிய காதலுக்குச் சான்றாக! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்