எழுபத்தாறு வருடங்களாக இனவாதத்திலும் சிறுபான்மை அடக்குமுறையில் ஊழல் லஞ்சம் கொலை கொள்ளையிலும் மக்களை ஏமாற்றி தங்களை தக்கவைத்துக்கொண்டது சிங்களம். அதிலிருந்து மக்களை காப்பாற்ற முடியாமல் தாங்களே தலைமை என்று வீராவேச பேச்சுக்களில் காலத்தை கடத்தியது தமிழ்த்தலைமை. இலங்கையில் நடப்பது பயங்கரவாதம் என்று கூறி சர்வதேசத்திடம் ஆதரவு திரட்ட சிங்களத்தால் முடிந்தது என்றால், அதற்கு தலைமை தாங்கி செல்ல தமிழரால் முடிந்ததென்றால், அதற்கு முன்னே தோன்றிய இனவாதத்தையும் கலவரங்களையும் அடக்குமுறைகளையும் அநீதிகளையும் சர்வதேசத்துக்கு கொண்டு செல்ல ஏன் நம்மவர்களால் முடியவில்லை, முயலவில்லை? எல்லோருக்கும் பதவி வேண்டும், அதற்கு அப்பாவி மக்களின் வாக்கு, உயிர், இழப்பு வேண்டும். அப்படி ஊறிப்போன ஒரு கூட்டிலிருந்து வந்த அனுர உடனேயே பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என கனவு காண்பதென்பது முட்டாள்தனம். இனவாதிகளை உடனேயே கைது செய்ய முடியாது, அப்படி செய்யாமல் இனவாதத்தை தீர்க்கவோ நாட்டை கட்டியெழுப்பவோ முடியாது. தமிழ் மக்களின் ஆதரவு இல்லாமல் அவர் தமிழருக்கு நன்மை செய்கிறார் என்கிற ஒரு பொறியே போதும் நாட்டை பற்ற வைக்க. தமிழரும் என்னை தெரிந்தெடுத்துள்ளார்கள், நான் அவர்களுக்கும் ஜனாதிபதி என்பதை அவர் நிரூபிக்க வேண்டிய கடமையுள்ளது. இது சிங்கள பௌத்தநாடு எனும் மாயையை மாற்றவேண்டும். அது அவ்வளவு இலகுவல்ல. நீண்ட பெரிய பொய்யை உடைப்பது சாதாரணமுமல்ல. ஆகவே மக்களே குற்றவாளிகளை காட்டிக்கொடுத்து, கைது செய்து தண்டியுங்கள் என்று சொல்லும் சூழல் வரவேண்டும் குரல் எழ வேண்டும், அதற்கான காரியங்களே ஆரம்பித்துள்ளன. இனவாதிகளுக்கு ஊழல் வாதிகளுக்கு நடுக்கம் ஆரம்பித்து விட்டது. கட்டிலாலை கதிரையாலை விழுகிறார்கள் ஏன் என்றால், அவர்களது அரசியல் கதிரை பலம் நழுவிப்போகிறது. தங்களுக்கு சிறை உறுதியென சொல்கிறார்கள், நாள்தான் தெரியவில்லை. எங்களை தண்டிப்பதை விட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்கிறார்கள். அவர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியே ஊழல்வாதிகளை கைது செய்வதுதான் என்பதே இவர்களுக்கு விளங்கவில்லை. மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் ஊடுருவிப்பாயுமாம். துள்ளிக்குதித்தவர்கள், குரைத்தவர்கள், சவால் விட்டவர்கள் எல்லாம் மௌனிகளாகின்றனர். ஆகவே இவற்றை எல்லாம் கடந்து நீதியை நிலைநாட்டி நாட்டை கட்டியெழுப்பினால் சிங்கப்பூருக்கு ஒரு லீக்குவானி போல் இலங்கைக்கு அனுராவாக இருக்க முடியும். பொறுத்திருந்து பாப்போம், அவர்களுக்குள் இருக்கும் ஊழல்வாதிகள் இனவாதிகளையும் இனங்கண்டு களைய வேண்டும். நிற்க.... தமிழ்மக்களால் அதிக வாக்குகள் அளிக்கப்பட்ட கஜேந்திரனோடு சேர விரும்பாமல் டக்கிளசோடு சேரத்துடிப்பது ஏன்? கையில வெண்ணெயை வைச்சுக்கொண்டு ஊரெல்லாம் அலையுறார் சிவஞானம். ஏனென்றால், தங்களை மிஞ்சினவர் பதவிக்கு வரக்கூடாது, தாம் அடக்கியாள வேண்டுமென நினைக்கிறார்கள். ஒரு கட்சியின் கோப்பை மதிக்காதவர்கள், அதை கட்டிக்காக்க திறமையில்லாதவர்கள், மக்களை எப்படி காப்பாற்றப்போகிறார்கள்? இவர்களெல்லாம் சட்ட மேதைகளாம், ஆரம்பகால உறுப்பினர்களாம், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பார்கள் ஆனால் வடக்கில் தமிழருடன் இணக்கப்பாட்டுக்கு வரமாட்டோம் அல்லக்கைகளோடுதான் கைகோப்போம் என்று அடம் பிடிக்கிறார்கள். விடுங்கள், வெகு விரைவில் டக்கிலஸிடம் குட்டு வாங்குவார்கள். அங்கு சுமந்திரன் பேச்சாளராக இருக்க முடியாது. டக்கிளஸ் போடும் நிபந்தனைகளே போதும் இவர்களுக்கு. எத்தனையோ முறை டக்கிளஸ் இவர்களோடு சேர முயன்றும் சேர்க்கவில்லை. இப்போ அவருக்கு தகுதியானவர்கள் சேரத்துடிக்கிறார்கள்.