ஈரான் மீதான தாக்குதலுக்கு ட்ரம்ப் ஒப்புதல்; தெஹ்ரானை கைவிட மாட்டோம் என்கிறார் கிம்! இஸ்ரேல்-ஈரான் மோதல் வியாழக்கிழமை (19) ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான இஸ்ரேலின் குண்டுவீச்சுத் தாக்குதலில் அமெரிக்கா இணையுமா என்பது குறித்து உலகை ஊகிக்க வைத்துள்ளார் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். ஈரான் மீதான தாக்குதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ஆனால் தெஹ்ரான் அதன் அணுசக்தி திட்டத்தை கைவிடுமா என்பதைப் பார்க்க இறுதி உத்தரவை வழங்குவதில் தாமதம் செய்துள்ளதாகவும் அவர் தனது நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இஸ்ரேலின் தாக்குதலில் இணையலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஏதேனும் முடிவு எடுத்துள்ளாரா என்பதை உறுதியாகக் கூற மறுத்துவிட்டார். அதேநேரம், ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களை எந்த நிபந்தனையும் இல்லாமல் முழுமையாகக் கைவிட வேண்டும் என்றும் அவர் மீண்டும் கூறினார். அமெரிக்காவிற்கு ஒரு சாத்தியமான இலக்கு ஈரானின் ஃபோர்டோ அணு செறிவூட்டல் நிலையமாகும். இது நிலத்தடியில் ஆழமாக கட்டப்பட்டுள்ளது மற்றும் அழிக்க மிகவும் கடினம். மிகவும் சக்திவாய்ந்த குண்டுகள் மட்டுமே அதை அடைய முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது இவ்வாறு இருக்க முன்னதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தனது நாடு சரணடையாது என்று கூறினார். எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் அமெரிக்காவை எச்சரித்தார். சர்வதேச தலைவர்கள் தெஹ்ரான் பிரதிநிதிகளுடன் சந்திப்பு ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை பொதுமக்கள் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தும் என்று உறுதியாக உத்தரவாதம் அளிக்கும்படி தெஹ்ரானை வற்புறுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை (19) ஜெனீவாவில் தங்கள் ஈரானிய பிரதிநிதியுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜெர்மன் தூதரக வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆனால், ராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்தாலும், 10 மில்லியன் மக்கள் வசிக்கும் தெஹ்ரானில் வசிக்கும் சிலர் புதன்கிழமை நகரத்திற்கு வெளியே நெடுஞ்சாலைகளை மறித்து, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க முயன்றனர். மத்திய கிழக்கில் குவிக்கப்படும் அமெரிக்க இராணுவப் படைகள் அண்மைய நாட்களில் அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு அதிக இராணுவப் படைகளை நகர்த்தி வருகிறது. மூன்றாவது கடற்படை அழிப்புக் கப்பல் கிழக்கு மத்தியதரைக் கடலில் நுழைந்துள்ளது. மேலும் மற்றொரு விமானம் தாங்கிக் கப்பல் குழு அரபிக் கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இது ஒரு தற்காப்பு நடவடிக்கை மட்டுமே என்றும், இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் அமெரிக்காவுடன் இணையும் திறனையும் இது வழங்குகிறது என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது. தெஹ்ரான் தனியாக இல்லை மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்த ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஈரானுக்கு எதிரான தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் குறித்து அவர் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த மோதலில் தெஹ்ரான் “தனியாக இல்லை” என்பதை வலியுறுத்தினார். இந்தப் போரில் ஈரான் தனியாக இல்லை. வட கொரிய இராணுவம் மிக உயர்ந்த போர் தயார்நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடினமான காலங்களில் நாங்கள் எங்கள் நண்பர்களை கைவிட மாட்டோம். நாங்கள் ஈரானை முழுமையாக ஆதரிக்கிறோம். அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் அழுத்தக் கொள்கை எங்களுக்கு நன்கு தெரியும். நாங்கள் எங்கள் நண்பர்களுடன் பக்கபலமாக நிற்கிறோம் என கிம் ஜாங்-உன் தனது அதிகாரப்பூர்வ உரையில் அறிவித்தார். எவ்வாறெனினும் மத்திய கிழக்கின் நிலைமை மோசமடைந்து வருகிறது. அண்மைய தாக்குதல்களால் ஈரானில் 450 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும், ஈரானிய தாக்குதல்களால் இஸ்ரேலில் 24 பேர் இறந்துள்ளதாகவும் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1436216