விடை கொடுக்கிறோம், சோதரியே! நண்பர் மோகனின் மனைவி சுமதியின் (பூமா) இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று (21.01.26) ஒஸ்லோவில் நடைபெறுகிறது. நான் நோர்வேயில் இல்லாத காரணத்தினால் இந்த இறுதி வணக்க நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத மிகுந்த கவலையுடன் இப்பதிவை எழுதுகிறேன். பிரியமானவர்கள் பலரின் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை; எனது அம்மா அப்பாவின் இறுதி வணக்க நிகழ்வுகள் உட்பட. சுமதி, நண்பர் மோகனின் மனைவியாகத்தான் எனக்கு அறிமுகமானார். காலப்போக்கில் நாம் குடும்ப நண்பர்கள் ஆகி விட்டோம். அவருடன் பழகிய காலங்களில் அவர் துணிச்சலானதொரு பெண்ணாகவும், குழந்தை உள்ளம் கொண்டவராகவும், நகைச்சுவை உணர்வு மிகுந்தவராகவும், வாழ்க்கையை ரசித்து வாழ்வதில் விருப்பம் கொண்டவராகவும், எவரோடும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் நற்பண்புமிகுந்தவராகவும் இவரை நாம் உணர்ந்து கொண்டோம். சுமதி இளகிய மனம் படைத்தவர். கலையுள்ளம் கொண்டவர். கலைகளை நன்கு ரசிப்பார். இயற்கையை நேசிப்பவர். பயணங்கள் செல்வதிலும், சுற்றுலா போவதிலும் விருப்பம் கொண்டவர். கணவனையும் பிள்ளகளையும் நன்கு நேசித்தவர். நண்பர்களையும் அன்பால் அரவணைத்தவர். வயதின் மூப்பில், வாழும் கால எல்லையெல்லாம் வாழந்து இயற்கையாய் கண் மூடும் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் இரசித்தபடியே வாழ்ந்திருக்க வேண்டியவர். 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நம் எல்லோரையும் அதிர வைத்த அந்தச் சேதி கிடைத்தது. சுமதியை கொடிய புற்றுநாய் தாக்கியுள்ளது என்பதே அந்தச் சேதி. இந்தச் செய்தியினை அவரேதான் சொன்னார். பலரும் புற்றுநோயை மறைப்பதுபோல அவர் அதனை மறைக்க முயலவில்லை. இவரை இக் கொடும் நோய் தாக்கும் என்று எவர் தான் கற்பனை பண்ணினோம் ! புற்றுநோய் என்றாலே உயர் ஆபத்து என்ற எண்ணம் பலருக்கு உண்டு. ஆனால் உண்மைநிலை அவ்வாறு இல்லை. புற்றுநோய் எந்த இடத்தில் வருகிறது, எப்போது கண்டு பிடிக்கப்படுகிறது, எவ்வளவு தீவிரத்தன்மை கொண்டுள்ளது என்பதைப் பொறுத்து நோயின் பாதிப்பு வருகிறது. சிகிச்சை முறையிலும் பாரிய முன்னேற்றங்கள் வந்துள்ளன. நோயால் பாதிக்கப்பட்ட பலர் பூரண குணமாகியுள்ளனர். சுமதிக்கு வந்தது பித்தக் குழாய் புற்றுநோய்( ஆங்கிலத்தில் Bile duct cancer, நோர்வேஜிய மொழியில் Gallegangskreft). இது ஒப்பிட்டளவில் அரிதாக வருகின்ற, ஆனால் ஒரு ஆபத்தான புற்றுநோய் நோய் என்றும் கூறுவார்கள். பித்தக் குழாய் மிக மிக சிறிய உறுப்பாக இருப்பதன் காரணமாகவும், அது அமைந்திருக்கின்ற இடம் பல உறுப்புகளுடன் தொடர்புபட்டிருப்பதன் காரணமாகவும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு கடினமான ஒரு புற்று நோயாகவும் இதனைக் கூறுவார்கள். இந்த நோய் வரும்போது அதனை எதிர்த்துப் போராடுகின்ற போராட்டம் வாழ்வா சாவா என்கின்ற ஒரு போராட்டம் தான். இந்த நோயிலிருந்து போராடி மீண்டும் வருவது மிகவும் கடினமான ஒரு விடயமாக இருக்கப் போகின்றது என்பதனை ஏதோ ஒரு வகையில் சுமந்து உணர்ந்து கொள்கிறார். எனக்கு இந்த இடத்தில் ஏன் இந்த நோய் வந்தது என்கின்ற கவலை ஒரு புறமும், இதனை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்ற தேடல் மறுபுறமாகவும்அந்த நோயை எதிர்கொள்ளத் தயாராகி விடுகிறார். இந்நோய் தொடர்பாக ஒரு வெளிப்படையான அணுகுமுறையை அவர் மேற்கொள்கிறார் தனது நோயின் தன்மை பற்றி தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் ஏறத்தாழ பதினைந்து - பதினாறு மாதங்களாக நோயுடன் போராடிப் போராடி, ஒவ்வொரு காலடியை முன்னோக்கி வைப்பதற்கு முயன்று முயன்று தோற்றுப் போக போக இறுதிக் கணம் வரை மனந் தளராமல் அவர் போராடினார். எமது கண் முன்னால் நாம் நேசித்த ஒரு சோதரி ஒவ்வொரு மருத்துவ முயற்சிகளிலும் முன்னேற்றத்தை காணாமல் போராடிக் கொண்டிருப்பது நம்ம எல்லோருக்கும் மிகுந்த மிகுந்த மனவருத்தத்தை தந்து கொண்டிருந்தது. இறுதியில் இயற்கையின் விதிப்படி 14.01.26 அன்று அவர் இயற்கை எய்தி விடுகிறார். ஏது தான் செய்ய முடியும் எம்மால். சாவை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான நோயுடன் போராடி மருத்துவமனையில் இருக்கின்ற போது அதற்கு மிகுந்த ஒரு மன உறுதி தேவை. அந்நேரத்தில் குடும்ப உறவுகளதும், நண்பர்களதும் அரவணைப்பு ஒரு நோயாளிக்கு மிகுந்த மனபலத்தை தரும். அதனை அனுபவரீதியாக உணர்ந்தவன் நான். நண்பர் மோகனும் பிள்ளைகள் வைதேகி, ஆதிரையும் சுமதியைக் காப்பாற்ற தம்மால் முடிந்ந அனைத்தையும் செய்தார்கள். சிகிச்சை தொடர்பாக நோர்வேயில் மட்டுமல்ல உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள எல்லா வாய்ப்பைக்களையும் தேடினர். எதனையும் விட்டு விடாமல் எல்லாக் கற்களையும்ப புரட்டினார்கள். எதுவும் நோர்வேயினை விட மேம்பட்டதாக இருக்கவில்லை. தனது மனைவி பதினைந்து -பதினாறு மாதங்களாக நோயுடன் போராடிக் கொண்டிருக்கின்ற போது கண்ணை இமை பாதுகாத்தது போல கிடைக்கக் கூடிய ஒவ்வொரு கணமும் தன் மனைவியின் அருகிலேயே நின்றார் நண்பர் மோகன். பிள்ளைகளும் தமது அம்மாவை நோயில் இருந்து மீட்டெடுத்து விட வேண்டும் என்று துடி துடிப்புடன் தாயுடன் தமிக நெருங்கி நின்றார்கள். தான் அருகாமையில் இருக்கின்ற போது சுமதி பாதுகாப்பாக உணர்கிறார் என்பதை புரிந்து கொண்டு மோகன் தனது மனைவியை பராமரித்த விதம் எல்லோருக்கும் மிக மிக உன்னதமான முன்னுதாரணம். சுமதி எம்மை விட்டு பிரிவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் எனது மனைவியும் (அவர் சுமதியின் ஒரு நல்ல நண்பர்) சுமதியின் ஏனைய இரு நண்பர்களும் வைத்தியசாலையில் சுமதியியைப் பார்க்கச் சென்றோம். அவர் இருந்த அறையின் உள்ளே சென்று அவரோடு சிறிது நேரம் கதைத்து விட்டு நான் நண்பர் மோகனுடன் அறையின் வெளியிலிருந்து கதைத்துக் கொண்டிருந்தேன். உள்ளே சுமதியும் எனது மனைவியும் நண்பர்களும் பேசி சிரித்து உற்சாகமாக கதைக்கின்ற சத்தம் எமக்குக் கேட்கிறது. ஏறத்தாழ ஒரு மணி நேரம் போயிருக்கும். நாங்கள் மீண்டும் அறைக்குள் போகும்போது ‘ நல்ல energy உடன் சுமதி இருந்தால் பல விடயங்களையும் கதைத்தோம்’ என என் மனைவியும் நண்பர்களும் சொன்னார்கள். நான் அப்போது சுமதியிடம் ‘நீங்கள் energy யான ஆள் தானே, energy யா இருங்கோ’ என்று சொன்னேன். உடன் அவர் விம்மி அழத் தொடங்கி விட்டார. ‘நானும் எல்லாத்தையும் positive ஆகத்தான் பாக்கிறன், அண்ணா. ஆனால் நினைக்கிற மாதிரி ஒண்டும் நடக்குதில்லை’ என்று கவலையுடன் சொன்னார் . அவர் இதனைச் செல்லும் போது இவர் தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்ற மருத்தவர்களின் தகவல் எமக்குத் தெரிந்திருந்தது. பாசத்துடன் அவரது இரண்டு கன்னங்களையும் எனது இரு கைகளாலும் தடவி விட்டதனைத் தவிர எந்தப் பதிலையும் கூற என்னால் முடியவில்லை. சுமதியின் பிரிவுத்துயரைக் காலம்தான் ஆற்ற வேண்டும். காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும் என்பார்கள். அதனை நம்புவோம். நணபர் மோகனதும் பிள்ளகளதும் தோழணைத்து நாம் நிற்போம். விடை கொடுக்கிறோம், சோதரியே. https://www.facebook.com/share/p/1DbBE4ME6h/?mibextid=wwXIfr