Jump to content

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2405
  • Joined

  • Last visited

  • Days Won

    49

Everything posted by Kavi arunasalam

  1. Kandiah57, உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் இங்கே குற்றவாளி பிடிபட்டிருக்கிறான் என்பது ஆறுதலான விடயம்
  2. 7 31ந்திகதி குற்றவாளியைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் துரிதமாக நடந்தேறின. குற்றம் சாட்டப்பட்டவரது விபரங்கள், கொலைக்கான ஆதாரங்களை எல்லாம் ஆராய்ந்த ஸ்வேபிஸ் ஹால் மூத்த அரச சட்டத்தரணி லுஸ்ரிக், ‘குற்றவாளி என சந்தேகிக்கப்படுவரை கைது செய்து விசாரிக்கலாம்’ என பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார். எந்த இடத்தில் இலக்கத் தகடு இல்லாமல் சில்வர் நிற VW கார் நின்றதோ அதற்கு முன்னாலேயே குற்றவாளி என சந்தேகிக்கப்படுபவருடைய வீடும் இருந்தது. அந்தக் காருக்குப் பக்கத்தில் இருந்து ஆராய்ந்த இரண்டு பொலிஸாருக்கும் அன்று அது தெரிந்திருக்கவில்லை. பொலிஸார் வீட்டுக்குள் சென்ற போது டானியல் ஷோபாவில் அமர்ந்து கோப்பி குடித்துக் கொண்டிருந்தான். பொலிஸாரைக் கண்டதும் எழுந்து கொண்டான். அவனது பத்து மற்றும் பன்னிரண்டு வயதான இரு பெண் குழந்தைகளும் தங்கள் அறையில் நித்திரையில் இருந்தார்கள். அறையை விட்டு வெளியே வந்த டானியலின் மனைவி ஆயுதங்களுடன் இருந்த பொலிஸாரைக் கண்டு பயந்து நின்றாள். வீட்டில் இருந்த அலுமாரிகள் எல்லாம் வெறுமையாக இருந்தன. தரையில் இருந்த சூட்கேஸுகள் நிரம்பி இருந்தன. சேர்பியாவுக்குப் பயணிப்பதற்கு தயாராக எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு, கொஞ்சம் ஆற அமர இருந்து கோப்பி குடித்துக் கொண்டிருந்த டானியல் மாட்டிக் கொண்டான். பொலிஸ் கொமிஸனர் Inge (41) டானியலைக் கைது செய்யும் போது, அவன் எந்த எதிர்ப்பும் காட்டாது அமைதியா இருந்தான். அவனைக் கைது செய்யும் போது அவனது பணப் பையில் பல 100, 200 ரூபா யூரோ தாள்கள் இருந்தன. டானியலுடன் யேர்மனிய மொழியில் உரையாட முடியவில்லை. அவனைக் கைது செய்து பயணிக்கும் போது, பொலிஸ் கொமிஸனர், “குற்றம் செய்ததாக சந்தேகித்து உன்னைக் கைது செய்து விசாரணைக்காக கொண்டு செல்கிறோம்” என எழுதி அதை கூகுளில் சேர்பிய மொழியில் மொழி பெயர்த்து டானியலுக்குக் காட்டிய போதும் டானியல் அதை வாசித்து விட்டு அமைதியாக இருந்தான். டானியல் மேல் சுமத்தப்பட்ட கொலை வழக்கு பன்னிரண்டு தடவைகளாக ஹைல்புறோன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு நடந்த ஒவ்வொரு தடவையும் அவனது பெற்றோர், சகோதரிகள், மனைவி ஆகியோர் சேர்பியாவில் இருந்து வந்து பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்தார்கள். கை விலங்கிடப்பட்ட நிலையிலேயே டானியல் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தான். வழக்கில் மொத்தமாக எழுபத்தி இரண்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். வழக்கின் 12வது அமர்வு 29.09.2023 அன்று நடைபெற்றது. அன்று டானியலின் 32வது பிறந்த தினம். தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர், மூத்த அரச தரப்பு சட்டத்தரணி லுஸ்ரிக் தனது வாதத்தின் தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தார். “எடித்லாங்கின் மரணமும் ஒரு கொலைதான். போதுமான தடயங்களை சேகரித்து வைக்காததும், எடித்லாங்கின் உடல் தகனம் செய்யப் பட்டதாலும் விசாரணைகளை தொடர்ந்து செய்ய முடியாமல் போனதாகவும் பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் குற்றம் சுமத்தப்பட்ட டானியலின் டீஎன்ஏ பரிசோதனையில், அவர் கொலை நடந்த இடத்தில் இருந்தார் என்பதற்கான ஆதாரங்களும் தரப்படவில்லை. ஆகவே அந்தக் கொலையில் டானியலை குற்றவாளியாகச் சேர்க்க முடியாது. ஹைடமேரியின் கொலையில், கொலை நடந்த அன்று, டானியலை முதலாவது மாடியில் கண்டதாக சாட்சியங்கள் சொல்கின்றன. அன்று அவரது கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் பிசுரங்கள் இருந்ததையும் கண்டிருக்கிறார்கள். கொலை நடந்த இடத்தில் டானியல் இருந்தார் என்பதற்கான தடயங்களை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள். டானியலின் ‘டீஎன்ஏ’யும் கொலை நடந்த இடத்தில் எடுத்த ‘டீஎன்ஏ’யும் பொருந்துகின்றன. டானியல் அணிந்திருந்த வெள்ளை அடிடாஸ் சப்பாத்தின் அடையாளங்களும், அது டானியலுடையதுதான் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது. கொலைக்கான ஆயுதம் கண்டுபிடிக்கப்படவில்லை. இல்ஸ்கொபனில், முதியவரைத் தாக்கியது, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட முதியவர், டானியல்தான் அதைச் செய்தது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும், முதியவர் டானியலின் மாதிரிப் படத்தை வரைய உதவி செய்திருக்கிறார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து வரையப்பட்ட மாதிரிப் படம் தொண்ணூறு சதவீதம் டானியலின் முகத்துடன் ஒத்துப் போயிருக்கிறது. அந்தப்படம் பின்னாளில் டானியலை இனம் காண பெரிதும் உதவியாகவும் இருந்திருக்கிறது. முதியவர் வீட்டின் அழைப்பு மணி, மற்றும் புதருக்குள் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி,லீடில் சுப்பர் மார்க்கெற்றின் பிசுரங்கள், ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட தடயங்களை பரிசோதித்த போது அவை டானியலின் ‘டீஎன்ஏ” உடன் பொருந்தின. அன்று டானியல் பயணித்த கார் அவர், 29.12.2022 இல் ஹூஸைனிடம் இருந்து 350 யூரோக்களுக்கு வாங்கியது நிரூபிக்கப் பட்டது. காரை வாங்கும் போது, டானியல் விற்பனைக்கான ஒப்பந்தத்தை செய்ய விரும்பாததால், ஹூஸைன், தன்னுடைய பாது காப்புக்காக டானியலை அவரது கைத் தொலைபேசியில் படம் பிடித்திருக்கிறார். அந்தப் படம், பொலிஸ் திணைக்களத்தினால் வரையப்பட்ட மாதிரிப் படத்துடன் ஒத்துப் போயிருந்ததை கவனிக்க வேண்டும். அத்தோடு குற்றவாளியான டானியலையும் கண்டறிய அந்தப் படம் உதவி இருக்கிறது. ஹேரயுற்றேயின் மரணத்தில், அவர் தாக்கப்பட்டு கொலை செய்த ஆயுதமான சுத்தியல், ஹேரயுற்றேயின் வீட்டில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் கண்டெடுக்கப் பட்டிருந்தது. அந்தக் கொலையில் சேகரிக்கப்பட்ட தடயங்களில் டானியலின் டீஎன்ஏ கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. அவர் அணிந்த சப்பாத்தின் பதிவும் கொலை நடந்த இடத்தில் இருந்திருக்கிறது. டானியலைக் கைது செய்து, அவரது வீட்டைச் சோதனை செய்த போது அவரது வெள்ளை அடிடாஸ் சப்பாத்து கழுவப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருந்தாலும், சப்பாத்து கட்டும் நாடாவில் இரத்தக்கறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அது ஹேரயுற்றேயின் இரத்தம் என்பது நிரூபிக்கப் பட்டுமிருக்கிறது. கொலைக்கான 100 கிராம் உலோக எடையைக் கொண்ட சுத்தியலை அவர் கட்டிடப் பொருள் விற்பனை நிலையத்தில் இருந்து களவாடி தனது ஜக்கற்றினுள் மறைத்துக் கொண்டு, காசாளர் பகுதியில் தொலைபேசி கதைப்பது போல் வெளியேறியது கமராவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வீடியோ நீதி மன்றத்தில் பார்வையிடப்பட்டிருந்தது….” “நான், எனது இரண்டு பிள்ளைகள் மனைவியுடன் ஸ்வேபிஸ் ஹாலுக்கு வந்தது, வாழ்வதற்காக மட்டுமே. யாரையும் நான் கொல்லவும் இல்லை, யாரிடமும் கொள்ளையடிக்கவும் இல்லை. எனக்கு ஆண்டவன்தான் சாட்சி” என்று டானியல் சொன்னான். “ஆயுள் தண்ட னை . தண்டனை முடிவடைந்ததன் பின்னால் டானியலின் நடவடிக்கை கவனிக்கப்பட்டு, விடுதலைக்கு தகுதியானவர் என்றால் மட்டும் அவர் விடுதலை பெற முடியும். அத்துடன் ஆயுள் தண்டனையை அவர் யேர்மனியிலேயே அனுபவிக்க வேண்டும்” என தீர்ப்பு வந்தது. கொலைகள் நடந்து, குற்றவாளி பிடிபட்டு தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது. ஸ்வேபிஸ் ஹால் நகரம் இப்பொழுது அமைதி ஆயிற்றா என்று நீங்கள் கேட்கலாம். 14.10. 2020இல், எல்பிரிடே கூகெரைக் கொன்றது யார் என்று இன்னமும் தெரியவில்லை. அந்தக் கொலையைச் செய்தவர் இன்னமும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டுதானே இருக்கிறார். கொஞ்சம் ஆறப் போட்டு, இரண்டு வருடங்களுக்குப் பின்னாலும் ஏதும் நடக்கலாம். டானியல் கூட ஒருவேளை, கூலிக்குக் கொலை செய்பவனாகவும் இருந்திருக்கலாம். இருந்தால் பார்க்கலாம்.
  3. 6 17.12.2023இல் இல்ஸ்ஹொபன் கிராமத்தில் தோல்வியில் முடிந்த கொள்ளைக்குப் பின்னர், பொலிஸார் தேடிய காரைப் பற்றிய தகவல்களையும் அவர்களால் திரட்ட முடியாமல் இருந்தது. போக்குவரத்துப் பொலிஸாரின் கண்களில் கூட அந்தக் கார் படாமல் எங்கேயோ ஒழித்திருந்தது. வழக்கம் போல் அன்றும், போக்குவரத்துப் பணியில் இருந்தாள் லூயிஸா(21). காரின் வலது பக்கத்தில் அவள் அமர்ந்திருந்தாள். அவளது வேலைத் தோழன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். அவர்களது கார் ஹாகன்பாகர் றிங் என்ற இடத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. இங்குதான் எல்பிரிடே கூகெர் 2020இலும் ஹைடமேரி, எடித்லாங் ஆகிய இருவரும் 2022இலும் கொல்லப்பட்டிருந்தார்கள். “ஒருவேளை அன்று இல்ஸ்கொபனில், முதியவரின் மனைவி இல்லாமல் இருந்திருந்தால், அந்த முதியவரையும் அவன் கொன்றிருக்கலாம்” “இருக்கலாம். ஆனால் கொலையாளி தனியாக இருக்கும் முதுமை அடைந்த பெண்களைத்தானே குறி வைக்கிறான். ஒருவேளை இவன் கொள்ளையடிக்க மட்டும் வந்தவனாக இருக்கும் கொலையாளி வேறு ஒருத்தனாகவும் இருக்கலாம்” திடீரென லூயிஸா, “ நிறுத்து நிறுத்து. காரை நிறுத்து” என்று சென்னாள். “ஏன்? என்ன பிரச்சினை?” “அதிலே ஒரு சில்வர் கலரிலே VW கார் பார்க் பண்ணியிருந்தது. ஒருவேளை நாங்கள் தேடுற காராகக் கூட இருக்கலாம். வா பாத்திட்டு வருவம்” அந்த சில்வர் கலர் காருக்கு முன்னால் லூயிஸாவும் அவளது சக தோழனும் நின்றார்கள். இலக்கத் தகட்டில் பொதிகளை ஒட்டும் நாடாவால் ஒட்டிய தடயங்கள், VW station wagon, Silver நிறம் என அவர்கள் தேடும் காரின் அடையாளங்கள் அத்தனையும் பொருந்தி இருந்தன. ஆனால் காரின் இலக்கத் தகடு மட்டும் இல்லை. பொதுவாக இலக்கத் தகடு இல்லாத கார்களை வீதிகளின் ஓரத்தில் நிறுத்தி வைக்க முடியாது. அத்துடன் இலக்கத் தகடு இல்லாவிட்டால் அது பதிவில் இல்லை என்பது மட்டுமல்ல பயணிக்கவும் முடியாது. கார் பூட்டி இருந்தது. கார் கண்ணாடியூடாக உள்ளை பார்த்தார்கள். ‘ரெட் புள்’ குடிபான ரின்கள், பொதிகளை ஒட்டும் நாடாக்கள் என்பன காருக்குள் இருந்தன. ஆக, கார் பாவனையில் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று இருவரும் தீர்மானித்துக் கொண்டார்கள். அவர்களால் காரின் போனற்றைத் திறக்க முடிந்தது. இயந்திரத்தின் இலக்கத்தை எழுதிக் கொண்டு தங்கள் காருக்குத் திரும்பினார்கள். காரில் அமர்ந்து கொண்டே, தங்கள் வேலைத் தோழனைத் தொடர்பு கொண்டார்கள். “கார் எஞ்சின் ஒன்றின்ரை நம்பர் அனுப்பிறன். அதைப் பற்றி தகவல் வேணும்” தகவல் உடனேயே வந்தது, “அந்தக் கார் இப்ப பதிவிலை இல்லை” “கடைசிப் பதிவு ஆரின்ரை பேரிலை இருந்தது?” “அது… ஹூஸைன் என்றவரின்ரை பேரிலைதான் கடைசியா இருந்திருக்கு. ஆளின்ரை இடம் ஒப்பன் வைலர்” “இந்த விபரத்தை மேலதிகாரிக்குச் சொல்லிவிடு” ஒப்பன் வைலர் ஸ்வேபிஸ் ஹால் நகரில் இருந்து பதினைந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது. திடீரென பொலிஸாரைக் கண்டதும் ஹூஸைனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சம்பிராதய கேள்விகளுக்குப் பிறகு, “VW station wagon, கார் எங்கே?” அந்தக் காரைப் பற்றிக் கேட்ட போது, ஹூஸைனின் முகம் இன்னும் வெளிறியது. “வித்துப் போட்டன்” “யாருக்கு வித்தனீ?” ஹூஸைனின் தலை மெதுவாக நிலத்தை நோக்கி குனிய ஆரம்பித்தது. “ சரி கார் விற்ற ஒப்பந்தத்தைக் காட்டு” “கார் விக்குற போது ஒப்பந்தம் ஒண்டும் போட இல்லை” “அதெப்படி ஒப்பந்தம் இல்லாமல் கார் கை மாறிச்சு?” “வாங்கினவர் அதை, தான் பதிவு செய்யிறன் எண்டு சொன்னவர்” “ஓ, அப்பிடியோ? சரி என்ன விலைக்கு வித்தனீ?” “350 யூரோக்களுக்கு” பொலிஸாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஹூஸைன் தடுமாறிக் கொண்டிருந்தான். பொலிஸார் அங்கிருந்தே “நாங்கள் குற்றவாளியை அடையாளம் கண்டு விட்டோம்” என்று தங்கள் தலைமை அதிகாரிக்கு அறிவித்தார்கள், 01.02.2023 புதன்கிழமை. அதற்கு முதல் நாள் செவ்வாய்க் கிழமை காலையில் டானியலின் மனைவி, குழந்தைகளின் அறையை விட்டு வெளியே வந்த போது அதிர்ந்து விட்டாள். அவள் முன்னால் ஆயுதத்துடன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்
  4. மாரி செல்வராஜா பாணியில் பாடல் படமாக்கப் பட்டிருக்கிறது. நன்றாக இருக்கிறது.
  5. 5 டானியல்(32), சேர்பிய நாட்டைச் சேர்ந்தவன். வேலை வாய்ப்புத் தேடி தனது மனைவி நத்தலி, பத்து, பன்னிரண்டு வயதான இரண்டு பிள்ளைகளுடன், 2022 செப்ரெம்பரில் யேர்மனிக்கு வந்தவன். தெரிந்தவர்கள் மூலமாக ஸ்வேபிஸ்ஹால் நகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவர்களுடன் சேர்ந்தே கட்டிட வேலைகள், தோட்ட வேலைகள் என்று கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். வேலை வாய்ப்புகளுக்காக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து பலர் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இதில் அநேகமானவர்கள் கட்டிடத் தொழிலிலேயே கவனம் செலுத்துகிறார்கள். சிலர் அஸ்பாரகஸ் பிடுங்கி எடுப்பது ஸ்ரோபரி பழங்கள் பறிப்பது போன்ற வேலைகளை தோட்டங்களிலும் செய்வதுண்டு. கறுப்பு வேலை செய்து துரிதமாக பணம் சம்பாதித்துக் கொண்டு தங்கள் நாட்டுக்குப் போய் விடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் டானியல் குடும்பமாக யேர்மனிக்கு வந்தது, நிரந்தரமாகத் தங்குவதற்கான எண்ணமாக இருந்திருக்கலாம். டானியலின் மனைவி நத்தலி, அவுஸ்திரியாவில் சில காலம் வசித்ததால் அவளுக்கு யேர்மனிய மொழி தெரிந்திருந்தது. வேலைகள் ஓரளவுக்குக் கிடைக்க, வாழ்வதற்கு ஓரளவு பணம் அவர்களுக்கு வர ஆரம்பித்தது. தெரிந்தவர்களுடன் தங்கியிருந்தாலும் தங்கள் குடும்பத்துக்கு என்று தனி வீடு தேவை என்பதை உணர்ந்து, அவர்கள் வீடு தேட ஆரம்பித்தார்கள். அப்பொழுதுதான் டானியல் குடும்பத்துக்கு ரன்ஜா (34) அறிமுகமானார். ரன்ஜாவும் அவளது கணவரும் ஸ்வேபிஸ் ஹாலுக்கு அடுத்த நகரத்தில் புதிதாக ஒரு வீட்டை வாங்கியிருந்தார்கள். அங்கு சென்று வாழ்வதற்காக, தற்போது அவர்கள் வாழும் வீட்டை வாடகைக்கு, அதுவும் தற்காலி கமாக யாருக்காவது கொடுக்கலாம் என்று விளம்பரம் செய்ய, முதலாவதாக அவர்கள் முன் வந்து நின்றது டானியலும், அவனது மனைவி, பிள்ளைகளுமே. 1300 யூரோக்கள் மாத வாடகைக்கு அந்த வீடு டானியலுக்குக் கிடைத்தது. நத்தலிக்கு மொழி தெரிந்ததால் டானியலுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. வேலைக்குப் போவது. மாலையில் நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பது என்று அவன் எப்பொழுதும் வெளியிலேதான் இருந்தான். நத்தலி மட்டும் வீட்டில் இருந்தாள். ஹைடமேரியின் கொலையாளியைக் கண்டு பிடிக்க முடியாமல் பொலிஸார் திண்டாடிக் கொண்டிருந்தார்கள். சில தடயங்களை அவர்கள் சேகரித்து வைத்திருந்தாலும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள். நாட்கள் ஒவ்வொன்றாகக் கடக்க, 2020இல் நடந்த கொலையையே துப்புத் துலக்கி கண்டு பிடிக்காதவர்கள், இதைக் கண்டு பிடித்து விடுவார்களா? என்ற ஏளனப் பேச்சு வரத் தொடங்கியது. அதாவது பொலிஸ் துறையின் கையாலகத் தன்மையைக் குறித்து விமர்சனம் பெரிதாக வர ஆரம்பித்தது. மீண்டும் ஒரு புதன்கிழமை. 25.01.2023 ஸ்வேபிஸ் ஹாலில் இருந்து பத்து கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மிஹேல் பாக் என்ற கிராமம் அல்லோலகலப்பட்டது.” ஹேரயுற்றே (83) என்ற மூதாட்டி கொல்லப்பட்டார் " என்ற செய்தி வந்தது. இருந்த தலையிடி காணாதென்று பொலிஸாருக்கு மேலும் தலையிடி கூடியது? ஹேரயுற்றே சாவியால், தனது வீட்டுக் கதவைத் திறந்து உள் நுளையும் போது, பல தடவைகள் மறந்து போய் சாவியை கதவிலே விட்டு விடுவதுண்டு. அதே குடியிருப்பில் வசிக்கும் ஒரு மூதாட்டி இதை அவதானித்து ஹேரயுற்றேயிடம் பல தடவைகள் எச்சரித்தும் இருக்கிறார். “இங்கை யார் வரப்போயினம்?” என்று ஹேரயுற்றே அவருக்குப் பதில் சொல்லியிருக்கிறார். ஆனால் கொலையாளி வந்திருந்தான். கதிரையில் சாய்ந்தபடி அவர் உடல் இருந்தது. அவரைச் சுற்றி இரத்தங்கள் தெறித்திருந்தன. தலை சிதைக்கப்பட்டிருந்தது. கை,தோள்பட்டை, தலை ஆகிய பகுதிகளில் குறைந்தது 26 தடவைகள், தாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பபட்டிருப்பதாக அறிக்கை வந்தது. ஹேரயுற்றே வீட்டுக்கு வெளியே வெறும் 100 மீற்றர் தூரத்தில் ஒரு புதருக்குள் இரண்டு கையுறைகளையும், ஒரு சுத்தியலையைம் பொலிஸார் கண்டெடுத்தார்கள். ஹைடமேரியின் கொலைக்கான ஆயுதம் கிடைக்காது திணறிக் கொண்டிருந்த பொலிஸார் , ஹேரயுற்றேயின் கொலைக்கான ஆயுதம் கிடைத்த போது மிகுந்த உசாரானார்கள். அதைத் துப்புத்துலக்குதலுக்கான பெரும் உந்துதலாக அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். புதிதாக வாங்கிய சுத்தியல்.அதன்மேல் ஒட்டப்பட்டிருந்த விலை கூட இன்னமும் அகற்றப்படவில்லை. பழுப்பு நிறமான கைப்பிடியின் பிற்பகுதி சிவப்பு நிறத்தில் இருந்தது. அந்த சுத்தியலைத் தயாரித்த நிறுவனம் கோனெக்ஸ் என்றிருந்தது. அதை ஸ்வேபிஸ்ஹாலில் விற்பனை செய்பவர்கள் ‘ஹேசெலே’ கட்டிட பொருட்கள் விற்பனை நிலையம் என்பதும் தெரிந்தது. இரண்டு பொலிஸார் ஹேசெலே கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்துக்குச் சென்றார்கள். “சமீபத்தில் இந்தவகையான சுத்தியலை யாராவது வாங்கியிருக்கிறார்களா? என்று பார்த்துச் சொல்லுங்கள்” என உரியவர்களிடம் கேட்டார்கள். கணினியில் நன்றாக அலசிப் பார்த்த அவர்கள் சொன்னார்கள், “யாரும் சமீபத்தில் இந்தச் சுத்தியலை வாங்கவில்லை” என்று “வேறு எங்கே வாங்கலாம்” பொலிசார் கேட்டார்கள். “ஒன் லைனில் கிடைக்கிறது” என்றார்கள்.
  6. 4 ஸ்வேபிஸ் ஹால் நகரசபைக்கு உட்பட்டதுதான் இல்ஸ்கொபன் கிராமம். இது ஸ்வேபிஸ் ஹால் நகரில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் இன்னுமொரு அமைதியான கிராமம். 87 சதவீதமான விவசாய நிலப்பரப்பைக் கொண்டது, இங்கு 6000க்கு சற்று அதிகமான மக்களே வசிக்கிறார்கள். பெரிய தொடர்மாடிக் குடியிருப்புகள் அதிகம் இல்லாத இந்தக் கிராமத்தில் தனித்தனி வீடுகளிலேயே பெரும்பாலானோர் வசிக்கிறார்கள். ஜனவரி 16, திங்கட்கிழமை அன்று, வீட்டின் அழைப்புமணிச் சத்தம் கேட்டு, முதியவர் (86) வந்து கதவைத் திறந்து பார்த்தால் அங்கே, கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒருவர் தனது கையில் லீடில் (Lidl super market) சுப்பர் மார்க்கெற்றின் வாராந்த பிரசுரங்களுடன் நின்றார். பனி விழும் குளிர்காலம். சூரியன் ஓய்வெடுக்கும் தருணம். கறுப்புக் கண்ணாடியுடன், சிரித்துக் கொண்டே, தன் வீட்டுக்கு முன்னால் நின்ற அந்நபரைக் கண்டதும், முதியவருக்கு ஆச்சரியமாக இருந்தது. “என்ன வேண்டும்?” என்று கேட்டார் அவன் கையில் இருந்த லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களைத் தூக்கிக் காண்பித்தான். “இதெற்கெல்லாம் பெல் அடிக்கத் தேவையில்லை. இந்தத் தபால் பெட்டிக்குள் போட்டு விட்டுப் போ” என்றார். அவன் அவரை நெருங்கி வந்தான். ஏதும் பேசவில்லை அவர் கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்தப் பிரசுரத்தைத் திணித்துவிட்டுப் போனான். “யாராயிருக்கும்? நான் சொன்னது இவனுக்கு விளங்கவில்லையா? வின்ரரிலும் கூலிங்கிளாஸ் போட்டிருக்கிறான். தலையில் ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ?” மனதில் எழுந்த கேள்விகளுடன் முதியவர் வாசல் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே போனார். அடுத்தநாள் மதிய நேரம். முதியவர், உணவை முடித்து விட்டு வரவேற்பறையில் இருந்தார். ஒரு குட்டித் தூக்கத்துக்காக அவரது மனைவி ஷோபாவில் படுத்திருந்தார். வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. வழமையாக இந்த நேரங்களில் யாரும் அழைப்பு மணியை அழுத்துவதில்லையே என்ற கேள்வி எழுந்தாலும், எழுந்து வந்து கதவைத் திறந்தார். அதே கறுப்புக் கண்ணாடி அணிந்த மனிதன். அதே உடுப்பு. நேற்றையைப் போல் இன்றும் அவன் கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் பிசுரங்கள். வீட்டின் வாசலில் நின்றபடியே,“நேற்றுத்தானே தந்துவிட்டுப் போனாய். பிறகு எதுக்கு இப்ப? அதுவும் மத்தியான நேரம்” என்று எரிச்சல் கலந்த குரலில் முதியவர் கேட்டார் முதியவரின் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. முதல்நாள் போலவே இன்றும் அவரை நெருங்கி வந்தான். தனது வலது கரத்தால் அவன் விட்ட குத்து, அவர் கண்ணாடிக்குக் கீழ், மூக்கின் மேல் வேகமாக வந்து விழுந்தது. வாசல் படியில் நின்ற முதியவர், நிலைதடுமாறி, வீட்டினுள்ளே விழுந்தார். வீழ்ந்தவர் அதிர்ச்சியில் இருந்து மீள முன்னரே அவரது நெற்றியில் அவனது துப்பாக்கி முனை இருந்தது. வெளியில் கேட்ட சத்தங்கள், முதியவரின் மனைவியின் சிறு தூக்கத்தைக் கலைத்து விட்டிருந்தது. ஷோபாவில் இருந்து எழுந்தவரை, கணவனின் “உதவி, உதவி செய்யுங்கள்” என்ற கூப்பாடு விரைவு படுத்தியது. விழுந்திருந்த முதியவரை அவன் காலால் உதைக்க எத்தனித்தபோது, வாசலோடு ஒட்டியிருந்த அறையின் ஒளி புகாத கண்ணாடிக் கதவினூடாக ஒருவர்( முதியவரின்மனைவி ) ஓடி வருவதை அவதானித்தான். யாரோ வருகிறார்கள் என்ற பதட்டத்தில் அவன் கால் ஒரு அடி பின் வைக்க, அந்தச் சந்தர்ப்பத்தை பயன் படுத்தி, தரையில் விழுந்திருந்த முதியவர் தன் காலால் பலம் கொண்ட மட்டும் கதவைத் தள்ள வாசல் கதவு மூடிக் கொண்டது. அவன் வெளியே. அவர்கள் உள்ளே. தகவல் கிடைத்து பொலிஸார் வந்திருந்தனர். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தான் என்பதை முதியவர் மறக்காமல் சொன்னார். அவன் என் நெற்றியில் துப்பாக்கியை அழுத்திப் பிடித்த போது “நீ பணம்” என்று சொன்னான், என்பதையும் சொன்னார். பொலிஸாருக்குப் புரிந்து விட்டது. வந்தவன் வெளிநாட்டுக்காரன் மட்டுமல்ல, சமிபத்தில்தான் யேர்மனிக்கு வந்திருக்கிறான் என்பதுவும். இல்ஸ்கொபன் கிராமத்தின் வீதிகள், பூங்காவனம், விளையாட்டு மைதானம் என்று எல்லா இடங்களிலும் பொலிஸார் தேடினார்கள். அவன் அகப்படவில்லை. “கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களுடன் கறுப்புக் கண்ணாடியுடன் யாராவது நடமாடியதைப் பார்த்தீர்களா? “ என விசாரித்துப் பார்த்தார்கள். ஒரு பெண் சொன்னாள். “இன்று ஹோம் ஒபீஸ். மதிய இடைவேளைக்கு கொஞ்சம் காற்றாட வெளியே வந்த போது கையில் லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களுடன் ஒருவனைக் கண்டேன். கனிவான முகத்துடன்… “ஹலோ” சொல்லிச் சிரித்தான். நானும் ‘ஹலோ’ சொல்லிவிட்டுப் போனேன்” என்று. ஹேபாப் கடை வைத்திருந்தவர் சொன்னார், “ இங்கு உணவருந்த வருபவர்களை, அவர்கள் வெளியூரா, உள்ளூரா என என்னால் இனம் கண்டு கொள்ள முடியும். அவன் வெளிநாட்டவன்” என்று. ‘வந்தவன் கிராமத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவன் நிச்சயமாக இல்ஸ்கொபனை விட்டு வெளியே போயிருப்பான்’ என்று பொலிஸருக்குப் புலப்பட்டது. “புதிதாக, சந்தேகப்படும்படியான, வெளியாருடைய வாகனங்களை யாராவது கண்டீர்களா?” என்று கேட்டுப் பார்த்தார்கள். கொஞ்சம் பலன் கிடைத்தது. ஒரு கார். அதன் இலக்கத் தகட்டில் பொதிகளை ஒட்டும் நாடாவால் ( duct tape)ஒட்டிய தடயங்கள் இருந்தன. அந்தக் கார் VW station wagon, Silver நிறம் என அடையாளங்களைத் திரட்டிக் கொண்டார்கள். தேடுதலின் போது, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 250 மீற்றர் தூரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை அண்டிய பகுதியின் புதர்களுக்குள் இருந்து ஒரு சோடி கையுறைகளையும் ஒரு விளையாட்டுத் துப்பாக்கியையும், லீடில் சுப்பர் மார்க்கெற்றின் வாரந்த பிரசுரங்களையும் பொலிஸார் கண்டெடுத்தார்கள். அவனுடைய அங்க அடையாளங்களை முதியவரிடம் பெற்று, ஒரு கற்பனை முகத்தை (Fandom image) வரைய ஏற்பாடு செய்தார்கள்.
  7. 3 ஏறக்குறைய 30 சென்டிமீட்டர் நீளத்துக்குக் காய்ந்து போயிருந்த நிலையில் அந்தக் கறை இருந்திருக்கிறது. வீட்டின் வாசலில் இருந்து சமையல் அறைக்குப் போகும் பாதையில் இருந்த இரத்தக்கறை, பார்வைக்கு இலகுவாகத் தெரிந்து விடும் விதமாகவே இருந்திருக்கிறது. ஆனாலும் பொலிஸாரின் கண்களுக்கு ஏனோ அது தெரியாமற் போய் விட்டது. சில வாரங்கள் போய் விட்டதால் அந்தக் கறை இப்பொழுது காய்ந்து கறுப்பு நிறத்துக்கு வந்து விட்டிருந்தது. உலர்ந்த அந்த இரத்தம் எடித் லாங்கின்(86) உடையது என்பதுவும் இப்பொழுது தெளிவாகிவிட்டது. அந்தக்கறையைப் பார்க்கும் போதே, இங்கே ஒரு குற்றம் நடந்திருக்க வேண்டும் என்பது வெள்ளிடை மலை. ஏனோ அது பொலிஸாருக்குத் தெரியாமற் போய் விட்டது. 14.12.2022 அன்று எடித் லாங் தனது சமையலறையில் இறந்திருந்தார். மாலையில் எடித் லாங்கின் மகள் ஹைக்கே(64), தனது தாயார் சமையலறையில் இறந்திருப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் தந்திருக்கிறார். அவரது உடல் சமையல் அறையின் தரையில் இருந்தது. இடது கை பின் நோக்கி நீண்டிருந்தது. யாரோ அவரை அங்கே இழுத்து வந்து விட்டது போலவே அந்தக் காட்சி இருந்தது. அவசர உதவி மருத்துவரும், மருத்துவ உதவியாளர்களும் இதே கருத்தைத்தான் முன் வைத்தார்கள். ஆனால் குற்றப் பிரிவுப் பொலிஸார் அன்று மாலையே விசாரணைகளை நடத்தி, ”இந்த மரணத்துக்கும் வெளியாட்கள் எவருக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. தரையில் விழுந்ததால், தலையில் காயம் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்திருக்கிறது. இது ஒரு விபத்து மரணம்” என்று அறிவித்தார்கள். ‘எடித் லாங் தடுமாறி விழுந்திருக்கிறார், உச்சந் தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. எடித்லாங்கின் கைப்பை திறந்திருந்தது. அந்தக் கைப்பை, பணம் இல்லாமல் வெறுமையாக இருந்தது’ எடித் லாங்கின் மரணச் சான்றிதழில் இப்படித்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் 19.12.2022, திங்கட்கிழமை எடித்லாங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. பொலிஸார் சிரத்தை எடுத்து எடித்லாங்கின் மரணத்தில் சரியான முறையில் விசாரணையை மட்டும் மேற்கொண்டிருந்திருந்தால், அடுத்து நடந்த கொலையை ஒருவேளை தடுத்திருக்கலாம். எடித்லாங்கின் இறப்பு விபத்தால் ஏற்பட்ட மரணம் என அறிவிக்கப் பட்டதால், கொலையாளி தன்னைத் தானே தட்டிக் கொடுத்து , அதே பாணியில் இன்னுமொரு கொலையையும் செய்வதற்கு ஏதுவாக எடித் லாங்கின் மரண விசாரணையின் தீர்ப்பு அமைந்து விட்டிருந்தது. எடித் லாங்கின் உடல் தகனம் செய்யப்பட்டதன் பின்னர் ஹைக்கே தனது தாயாரின் வீட்டை த் துப்பரவு செய்து ஒழுங்கு படுத்துவதற்குச் சென்று பார்த்த போது, தனது தாயார் விபத்தில் இறக்கவில்லை மாறாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான சில தடயங்களைக் கண்டறிந்தார். பாதுகாப்புக்கு என்று போடப்பட்டிருந்த கதவுச் சங்கிலி உடைக்கப் பட்டிருந்தது. தொலைபேசி வயர் துண்டிக்கப் பட்டிருந்தது. கட்டிலின் கீழ் இருந்த மரப் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அந்த மரப் பெட்டியின் மீது இரத்தக் கறை இருந்தது. இந்தத் தகவல்களை உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவித்து தன் தாயின் மரணத்தில் இருந்த சந்தேகத்தையும் ஹைக்கே பதிவு செய்தார். மீண்டும், எடித்லாங்கின் வீட்டை பரிசோதித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக வீட்டைப் பூட்டி ‘சீல்’ வைத்து விட்டுப் போனார்கள். “கொலை நடந்திருப்பதற்கான சாத்தியம் இருப்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கின்றோம். மேலதிகத் தடயங்கள் கிடைக்கவில்லை. எடித் லாங்கின் உடலும் எரிக்கப்பட்டு விட்டது. ஆகவே மேற்கொண்டு எதுவும் செய்வதற்கு இல்லை. நீங்கள் அந்த வீட்டை இனி துப்பரவு செய்து கொள்ளலாம்” என பொலிஸ் தரப்பில் இருந்து, ஹைக்கேக்கு பதில் வந்தது. தாயின் இழப்பில் ஏற்பட்ட சோகம், பொலிஸாரின் கையாலாகத் தனம் எல்லாம் சேர்ந்து ஹைக்கேயால் நிம்மதியாக உறங்க முடியாதிருந்தது. அப்பொழுதுதான் ஸ்வேபிஸ் ஹால் நகரப் பத்திரிகையில் இந்த விடயத்தைப் பற்றி அலசி ஆராய்ந்து கொண்டிருந்த நிருபரின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. பத்திரிகை நிருபர், லுமினோல் எண்ணெய்யை ( Luminol oil)இணையத்தளத்தில் இருந்து வாங்கிக் கொண்டார். சந்தேகப்படும் இடங்களில் லுமினோலை பூசினால், அங்கே இரத்தம் இருந்தாலும், அவை சரியாகத் துடைக்கப்படாமல் இருந்தாலும் அந்தப் பகுதி ஒளிர ஆரம்பிக்கும். கொலைகள் நடக்கும் இடங்களில், விசாரணைகளில் தடயங்களைக் கண்டறிவதற்காக லுமினோலை புலானாய்வாளர்கள் பயன்படுத்துவார்கள். இப்பொழுது பத்திரிகை நிருபர் லுமினோலைப் பயன் படுத்தி ஒளிரும் இடங்களைப் படம் பிடித்துக் கொண்டார். “விசாரணையில் அசட்டையீனம். ஒரு கொலை, விபத்தாக காட்டப் பட்டிருக்கிறது” என்று அடுத்தநாள் பத்திரிகைச் செய்தியின் தலைப்பு இருந்தது. கூடவே, தரைக் கம்பளத்தின் கீழே இரத்தம் உறைந்திருந்தது. கொலையாளி அந்த இரத்தக் கறையை மறைப்பதற்காக, அவசரத்தில் பக்கத்தில் இருந்த கம்பளத்தை எடுத்து இரத்தம் இருந்த இடத்தில் போட்டு மூடி விட்டிருக்கிறார். கதவு வாசலில் இருந்து சமையலறை வரை தரையில் இரத்த அடையாளங்கள் இருக்கின்றன. அது எடித் லாங்கை, வாசலில் வைத்து தாக்கிக் கொலை செய்து விட்டு, கொலையாளி அவரை இழுத்து வந்து சமையலறையில் போட்டதைக் காட்டுகிறது. தரையில் இருந்த இறத்தக் கறையை சமையலறையில் இருந்த துணியினால் துடைத்து, பின் அதை சமையல் அறைத் தண்ணீர் தொட்டியில் கழுவியதற்கான அடையாளங்கள் இருக்கின்றன…” என படங்களுடன் செய்தி வெளியானது. உள்ளூரில் வெளியிடப்பட்ட இந்தச் செய்தியை யேர்மனியின் பல பாகங்களிலும் வெளியாகும் பல பத்திரிகைகள் வாங்கி தங்கள் தங்கள் பத்திரிகைகளிலும் பிரசுரித்தார்கள். இந்தச் செய்தியால், பொலிசார் மீது விமர்சனங்கள் எழுந்தன. பொலிசாரது செயற்பாடுகள் சரியாக அமையவில்லை என்பதால், மக்கள் பொலிசார் மீதான தமது அதிருப்தியை வெளிப்படையாகவே கதைத்தார்கள். பொலிஸாரின் மேலதிகாரி ஊடகவியலாளர்களை அழைத்து, தங்களது பக்க நியாயங்களைச் சொன்னார். “எடித் லாங், மருந்துகளை உட் கொள்பவர். மயக்கம் அவருக்கு அடிக்கடி வருவதுண்டு என்று அவரது குடும்ப வைத்தியர் குறிப்பிட்டிருக்கிறார். முதுமை, தள்ளாட்டம் என்பன காரணமாக அவர் விழுந்ததனால்தான் சம்பவம் நடந்திருக்கிறது என்ற நோக்கிலேயே நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டோம். எதுவானாலும் தவறு நடந்து விட்டது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். அதற்காக வருந்துகிறோம். எடித் லாங்கின் வீட்டில் இருந்து மேற்கொண்டு தடயங்களை எங்களால் பெற முடியவில்ல. ஹைடமேரியின் கொலையில் இருந்து தடயங்களைச் சேகரித்து வைத்திருக்கிறோம். கொலையாளியைக் கண்டுபிடிக்கும் எங்களது வேலை தொடர்கிறது” பொலிஸாரிடம் இருந்து வந்த இந்தக் கருத்தைப் பற்றி எடித் லாங்கின் மகள் ஹைக்கே இப்படிச் சொல்லி இருந்தார், “ எனது தாயார் தலையில் தாக்கப் பட்டு கொல்லப் பட்டிருக்கிறார். பொலிஸார் அதை விபத்து என்றார்கள். நாங்கள் அதை கொலை என்று நிரூபித்திருக்கிறோம். தவறி விழுந்த ஒருவருக்கு உச்சந் தலையில் காயம் எப்படி ஏற்படும் என்றாவது குறைந்த பட்சம் அவர்கள் ஏன் விளங்கிக் கொள்ளவில்லை. ‘தவறு, வருந்துகிறோம்’ போன்ற சொற்களுடன் இந்த விடயத்தை பொலிஸ் தரப்பு கடந்து போயிருக்கிறது. எனக்கு அவர்கள் மேல் இருந்த நம்பிக்கையும் மரியாதையும் வெகுவாகக் குறைந்து விட்டன. மக்கள் மேல் தங்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது என்பது பொலிஸாருக்கும், மரண விசாரணை மேற்கொண்ட அரச சட்டத்தரணிக்கும் தெளிவாகத் தெரிந்து விட்டது. ஆகவே நடந்த இரண்டு கொலைகளை யார் செய்தது என்பதை கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல் அதை விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு வந்தது.. கொலையாளியை க் கண்டு பிடிக்கும் வேலையை அவர்கள் செய்யட்டும். அந்த இடைவெளியில் நாங்கள் இல்ஸ்கொபன் கிராமத்துக்குப் போய் வருவோம்.
  8. 2 எந்த விசாரணைகளூடும் பொலிசாரால் முன்னேற முடியாமல் இருந்தது.. ஆனால் பத்திரிகைகள் விடவில்லை. அதுவும் உள்ளூர் பத்திரிகை ஓடியோடிச் செய்திகளைச் சேகரித்து, முதன்மைச் செய்தியாக வெளியிட்டுக் கொண்டிருந்த து . அதிலும் ஒரு நிருபர், ஆழமாக உள்ளிறங்கி, எடித் லாங்கியின் உறவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அவரது மரணத்தைப் பற்றிய விபரங்களைச் சேகரித்து பத்திரிகையில் வெளியிட ஆரம்பித்தார். எடித் லாங்கைப் போலவே ஹைடமேரி(77)யும் தனியாக வாழ்ந்து வந்த விதவைதான். வோக்கர் (Walker) இல்லாமல் அவரால் நடமாட முடியாது. அவரின் நண்பராக இருந்தவர் ஹூர்ட் (89). அவரும் தனிமையில் இருந்ததால் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கதைத்துக் கொள்வார்கள். ஹைடமேரி இருந்த குடியிருப்பின் வாசல் கதவின் பூட்டு இரண்டு வாரங்களாகப் பழுதாகி இருந்தது. அதைத் திருத்துவதற்கு, அடுத்தநாளான வியாழக்கிழமையே வேலையாள் வருவதற்கு குடியிருப்பின் மேற்பார்வையாளர் ஏற்பாடு செய்திருந்தார். வாசல் கதவு எப்பொழுதும் சாத்தப்பட்டிருப்பதால் வெளியாட்கள் யாருக்கும் கதவின் பூட்டு உடைந்திருப்பது தெரிய வாய்ப்பில்லை. அப்படி யாரேனும் உள்ளே வந்தால் கூட, அவரவர்கள் தங்கள் தங்கள் வீடுகளைப் பூட்டிக் கொண்டே உள்ளே இருந்தால் ஆபத்துக்கள் இல்லை. ஹைடமேரியின் மூப்பு மற்றும் தனிமை காரணமாக அவரது வைத்தியரிடம் இருந்து, ஒரு சாதனம் அவருக்கு கிடைத்திருந்தது. அவருக்கு உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அதில் உள்ள பட்டனை அழுத்தினால், உடனடியாக அவசர மருத்துவர் தொடர்பு கொள்வார். அவரது மகள்மாரும் ஒவ்வொரு நாளும் வந்து அவரைப் பார்த்து அவருக்குத் தேவையானவற்றை எல்லாம் செய்து கொடுத்து விட்டுப் போவார்கள். அன்று புதன் கிழமை, ஹைடமேரியை அன்றைய மாலையில் சந்திப்பதாக ஹூர்ட் சொல்லி இருந்தார். நண்பர் வருவார், அவருடன் மாலையில் கோப்பி அருந்தலாம், நிறையப் பேசலாம் என்று கணக்குப் போட்ட ஹைடமேரி, அவரது வீட்டில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள Nah&Gut கடைக்கு மதியம் சென்று, இரண்டு துண்டு கேக்குகளும்,ஒரு பத்திரிகையும், கிறிஸ்மஸ் தாத்தா வடிவில் உள்ள சொக்கிலேற் ஒன்றையும் வாங்கிக் கொண்டு வந்தார். ஆனால், ஹைடமேரி வாங்கிய இரண்டு கேக் துண்டுகளை அன்று யாருமே சாப்பிடவில்லை. சமையலறை மேஜையில் கேக்குகள் மட்டுமல்ல, கோப்பி போடுவதற்குத் தயாராக கோப்பி பாட் (Coffee pad) போடப்பட்டிருந்த மெசினும் இருந்தது. அவரது நண்பரான ஹூர்ட் உடன் சந்திப்பு அன்று மட்டுமல்ல என்றும் அவருக்கு இல்லாமல் போய்விட்டது. ஹூர்ட் மாலையில் வீட்டுக்கு வரும் பொழுது, ஹைடமேரியின் வீட்டில் விளக்குகள் எரிவதைப் பார்த்திருக்கிறார். அதுவும் ஹைடமேரியின் குளியலறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததாலும், கிறிஸ்மஸ் காலம் என்பதாலும் யாரேனும் விருந்தினர்கள் வந்திருக்கலாம் என்ற நினைத்து, அவர் தன் வீட்டுக்குப் போய்விட்டார். ஹூர்ட், தனது வயது மூப்புக் காரணமாக அதிகளவு வெளியே போவதில்லை. ஹைடமேரியுடன்தான் அவர் பழக்கங்களை வைத்திருந்தார். வியாழக்கிழமையும் ஹைடமேரியிடம் இருந்து அவருக்கு அழைப்பு வரவில்லை. கிறிஸ்மஸ் கொண்டாட்டம் நெருங்குவதால் எல்லோரிடமும் ஒரு பரபரப்பு இருக்கும். அதனால் இந்தக் காலகட்டத்தில் யாரும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. ஹூர்ட்டும் அந்த நினைப்பில் பேசாமல் இருந்து விட்டார். வெள்ளிக்கிழமை காலையில் அன்றைய தினசரியைப் பார்த்த ஹூர்ட்டுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரை அதிர்ச்சியாக்கிய செய்தி, புதன்கிழமை மாலை ஹைடமேரி கொலை செய்யப்பட்ட செய்திதான். ‘பேஸ்போல் துடுப்பு அல்லது அதுபோன்ற ஒரு பொருளால் 20 தடவைகள் வரை தலையில் தாக்கப்பட்டு ஹைடமேரி கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் வீட்டில் இருந்து 1500 யூரோக்கள்வரை களவாடப்பட்டிருக்கின்றது’
  9. அழகானது மட்டுமல்ல அமைதியையும் பழமையையும் பேணிக் காக்கும் ஒரு நகரம்தான், யேர்மனியில் இருக்கும் ஸ்வேபிஸ் ஹால் நகரம். இரண்டாம் உலகப் போரில் குண்டுகளுக்குத் தப்பியது மட்டுமல்லாமல் போர் நடந்து கொண்டிருந்த போது யேர்மனியின் பல நகரங்களுக்கு உணவுகளை வழங்கிய பெருமையையும் இந்த நகரம் தனக்குச் சேர்த்துக் கொண்டுள்ளது.. கோடை என்றில்லை குளிர் காலங்களிலும் பல சுற்றுலாப் பயணிகள் இந்த நகரத்துக்கு வந்து போவார்கள். இரவு நேரத்தில் தேவாலயப் படிக்கட்டுகளில் நடக்கும் நாடகங்களைப் பார்ப்பதற்கு என்றே வெளி நகரங்களில் இருந்து பலர் வருவார்கள். எனக்கு, ஸ்வேபிஸ்ஹால் நகரம் பிடித்துப் போனதால்தான், ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக நான் இந்த நகரத்திலேயே வாழ்கிறேன். இது எனது தாயகத்தில் நான் வாழ்ந்ததை விட அதிகமான வருடங்கள். சரி விடயத்துக்கு வருகிறேன். சனிக்கிழமைகளில் வரும் பத்திரிகையில்தான் அதிகமான விளம்பரங்கள் வருகின்றன. வீடு விற்பனைகள், வேலை வாய்ப்புகள், வர்த்தக விளம்பரங்கள், மரண அறிவித்தல்கள் என்று ஏகப்பட்டவை அடங்கி சனிக்கிழமைப் பத்திரிகை ஊதிப் பெருத்துப் போய் இருக்கும். 17.12.2022 அன்று வந்த பத்திரிகையிலும், வழமைபோலவே எல்லா விடயங்களும் இருந்தன. அதில், மரண அறிவித்தல்கள் பகுதியில் எடித் லாங் (86), 14.12.2022, புதன்கிழமை காலமாகிவிட்டதாகவும் அவரது உடல் 19.12.2022 அன்று தகனம் செய்ய இருப்பதாகவும் தகவல் இருந்தது. என்னைப் போலவே, எடித் லாங்கினைத் தெரியாதவர்கள் அந்த அறிவித்தலைக் கடந்து போயிருப்பார்கள். ஆனால் எடித் லாங்கின் மரணம் ஒரு கிழமை கழித்து செய்தி ஒன்றைச் சொல்லக் காத்திருந்தது. எடித் லாங்கின் வீட்டில் இருந்து 315 மீற்றர் தூரத்தில் வசித்த இன்னும் ஒரு மூதாட்டி, எடித் லாங்கின் இறப்புக்குப் பின் ஒரு கிழமை கழித்து 21.12.2022,புதன் கிழமை அன்று இறந்து போனார். ஒரு கிழமை இடைவெளியில் அதுவும் சொல்லி வைத்தது போல் புதன்கிழமையில் அருகருகே வசித்த இரு மூதாட்டிகளுக்கு மரணம் சம்பவித்திருந்தது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. விசாரணைகளின் பின்னர், எடித் லாங்கின் மரணம், அவர் தரையில் தவறி விழுந்ததால் ஏற்பட்டது என அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் மற்றைய மரணம் ஒரு கொலை என்று அறிவிக்கப்பட்டது. நகரில் சந்தைக்கு வந்தவர்கள், வீதிகளில் சந்தித்துக் கொண்டவர்கள் என எல்லோர் வாய்களும் இந்த மரணங்களைப் பற்றிப் பேசிக் கொண்டன. “ஒருவேளை எடித் லாங்கின் மரணமும் கொலையாக இருக்குமோ?” என்ற சந்தேகம் மெதுவாக எழுந்தது. அதில் உண்மையும் இருந்தது. அமைதியாயிருந்த ஸ்வேபிஸ் ஹால் நகரம் மெது மெதுவாக அதை இழந்து கொண்டிருந்தது. அடுத்தடுத்து இரண்டு மரணங்கள். அதில் ஒன்று விபத்து, மற்றது கொலை, அதுவும் இரண்டும் சிறிய இடைவெளிகளில் உள்ள வீடுகளில் நடந்ததுள்ளன. இதையிட்டு ஸ்வேபிஸ் ஹால் நகரம் வெலவெலத்துப் போயிருந்த நேரத்தில், 25.01.2023 அன்று, அட அதுவும் கூட ஒரு புதன் கிழமைதான், நகரத்தில் இருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த மிஹேல்பாக் என்ற கிராமத்தில் 89 வயதான இன்னுமொரு மூதாட்டி, இறந்து போனார். 'அவரது இறப்பும் கொலைதான்' என விசாரணைகளை முடித்த பொலிஸ் உயர் அதிகாரி அறிவித்தார். யேர்மனியின் ஒரு ஓரமாக அமைதியாக இருந்த ஸ்வேபிஸ் ஹால் நகரம், அரச, தனியார் வானொலிகளில்,தொலைக்காட்சிகளில். இணையத் தளங்களில், சமூக வலைத்தளங்களில்... என்று எல்லாவற்றிலும் அடிபட்டுக் கொண்டிருந்தது. கொலைச் செய்திகளை வாங்கி, வெளி நாடுகளிலும் தங்கள் தங்கள் மொழிகளில் ஊடகங்களில் வெளியிடத் தொடங்கினார்கள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். ஸ்வேபிஸ் ஹால் நகரத்தில் புதன் வந்தாலே நடுக்கம் வர ஆரம்பித்திருந்தது. வயோதிபம் வந்தாலே நடுக்கம் தானாக வந்து விடும். புதன் வந்தாலே ஸ்வேபிஸ் ஹாலில் முதியவர்கள் இன்னும் நடுங்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த நேரத்தில் இன்னொரு கொலையும் எல்லோர் கவனத்துக்கும் வந்தது. ஏற்கெனவே திகிலாகப் பேசப்பட்ட அந்தக் கொலை 2020 இல் நடந்தது. எல்பிரிடே கூகெர் என்பவர் ஸ்வேபிஸ் ஹால் நகரத்தில் தனிமையில் வசித்து வந்தவர். அவர் பியர் தயாரிக்கும் ஒரு நிறுவனத்துக்குச் சொந்தக்காரி. பெரும் செல்வந்தரான அவர் கொலை செய்யப்பட்டிருந்ததும் ஒரு புதன் கிழமைதான். ‘புதன் கிழமைகள் கொலையாளிக்குப் பிடித்த நாள் போல’ என்று பத்திரிகையும் ஒரு குண்டைத் தூக்கிப் போட எழுபதுக்கு மேலே உள்ளவர்கள், அடுத்த புதன் “ நீயா?, நானா? எதுக்கும் வியாழக்கிழமை இருந்தால் பார்ப்போம்” எனப் பேச ஆரம்பித்தார்கள். “கொரோனா வந்து கனக்க வயது வந்தவர்களை அள்ளிக் கொண்டு போயிட்டுது. இப்ப கொலையாளி ஒருத்தன் வந்திருக்கிறான். பொலிஸ் என்னதான் செய்து கொண்டிருக்கு?” என மக்களிடம் இருந்து முணு முணுப்பு வர ஆரம்பித்தது. “தனி ஒரு கொலையாளியா? அல்லது ஒரு குழுவா? கொலைக்கான காரணம் என்ன? இறந்து போன மூவர்களிடம் பெரியளவில் பணம் இருக்கவில்லை. ஒருவேளை பணம் இருக்கிறது என்று போய், எதுவும் கிடைக்காது ஏமாந்து போனதால், கொள்ளையடிக்க வந்தவன்/ வந்தவர்கள் கொலைகளைச் செய்தானா/செய்தார்களா? உறவுகளுக்குள் சொத்துப் பிரச்சினை ஏதாவது இருந்து அதனால் கொலைகள் நடந்திருக்குமா? வெவ்வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்ட கொலைகளை ஒன்றாக ஒரு புள்ளியில் இணைத்துப் பார்க்கிறோமா?” என்று பலவிதமான சந்தேகங்களும் ஊகங்களும் எழுந்தன. பொலிஸாரால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. திணறினார்கள்..
  10. இவரது நாடகத்தை நான் நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் ஈழத்து திரைப்படமான நிர்மலாவில் ஓரங்க நாடகமாக சேர்த்திருந்தார்கள். அதைப் பார்த்திருக்கிறேன். விழா குழுவுக்கு வாழ்த்து!
  11. போகாத இடங்களுக்கு கூட்டிப் போய் இருக்கிறீர்கள். தெரியாத முகங்களை காண வைத்திருக்கிறீர்கள். பயணம் இனிதாக இருக்கிறது ரஞ்சித்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.