Jump to content

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2405
  • Joined

  • Last visited

  • Days Won

    49

Everything posted by Kavi arunasalam

  1. காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதை ஒன்றைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே? அதுபோல்தான்.
  2. Putthan, இறுதிச்சடங்கு நிறுவனத்தில் நடந்த விடயங்களும் அதனால் உரிமையாளர் ஜோகன், தண்டனை பெற்று சிறைக்குப் போனதும்தான் உண்மையான சம்பவம். மற்றும்படி, அன்றியா, அல்போன்ஸ் எல்லாம் புனைவு.
  3. யாழில் பதியப்பட்டிருந்த ஷோபா சக்தியின் ‘சித்திரப் பேழை’ வாசித்தேன். 2014இல் யேர்மனியில் நடந்த ஒரு சம்பவத்தை அவரது கதை எனக்கு நினைவூட்டியது. அதைத்தான், “அப்பா அது நீதானா?” என இங்கே தந்திருக்கிறேன் இதற்குமேல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்க முடியாது என்று அன்றியாவுக்கு புரிந்து விட்டது. ஆனாலும் படுக்கையில்தான் இருந்தாள். அன்றியாவுக்கு அதிகம் பிடித்த இரவுகள் என்றால் அது ஞாயிறு இரவுகள்தான். அந்த இரவுகளில்தான் அடுத்தநாளின் சுமைகள் இல்லாமல் அன்றியா அதிகமாகத் தூங்குவாள். திங்கட் கிழமைகளில், ஏறக்குறைய நண்பகலை பொழுது நெருங்கும் நேரத்தில்தான் படுக்கையைப் பிரிந்து அவள் எழுந்து வருவாள். இந்தத் திங்கட்கிழமை மட்டும் அவளுக்கு சுகமானதாக இருக்கவில்லை. திங்கட்கிழமைகளில் அன்றியாவுக்குச் சொந்தமான, ‘டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரோறண்ட்டுக்கு ஓய்வுநாள். வாரம் ஆறு நாட்கள் சுறுசுறுப்பாக ரெஸ்ரோறண்ட்டில் இருக்கும் அவளுக்கு, வாரத்தில் திங்கள் ஒருநாள் மட்டும்தான் ஓய்வு. ‘டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரரோறண்ட், அவளது தந்தை அல்போன்ஸோ அவளுக்கு விட்டுப்போன சொத்து. ‘ஒரு உணவு விடுதி பத்து வருடங்கள் நன்றாகப் போகும் அதற்குப் பின்னால் ஆட்டம் காணத் தொடங்கும்’ என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் டீ மற்றியோ பிட்ஸா ரெஸ்ரோறண்ட் முப்பது வருடங்களாக வளர்ந்து கொண்டேதான் இருந்தது. உழைப்பை மட்டுமல்ல தனது ஆயுளையும் அதற்குத்தான் அல்போன்ஸோ அர்ப்பணித்திருந்தார். ‘அரக்கனின் உயிர் ஏழு கடல்தாண்டி, ஒரு பெரிய மலையில் ஒரு பொந்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது’ என்று சின்ன வயதில் கதைகள் கேட்டிருக்கிறோம். அதுபோல்தான் அல்போன்ஸின் உயிரும், ‘டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரரோறண்ட்டுக்குள்தான் அது இருந்தது. அல்போன்ஸுக்கு, பொழுது புலர்ந்து மறைவது எல்லாம் டீ மற்றியோ பிட்ஸா’ ரெஸ்ரரோறண்ட்டுக்குள்தான். ஒருநாள் வேலை முடிந்து நள்ளிரவில் அல்போன்ஸ் வீட்டுக்கு வந்த போது, பத்து வயதான அவனது மகள் அன்றியா தனது கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவனது மனைவி அஞ்சலிக்கா வீட்டில் இல்லை. அவள் தனக்கான வாழ்க்கையைத் தேடிக் கொண்டு இன்னொருவனிடம் போய்விட்டாள் என்று அல்போன்ஸுக்கு அடுத்த நாள்தான் தகவல் கிடைத்தது. அதற்குப் பிறகு அன்றியாவுக்கு எல்லாமே அல்போன்ஸ்தான். “அப்பா அது நீ இல்லையா? எப்போதும் என்னுடன் இருப்பாய் என்று நம்பினேனே? ஏமாந்து விட்டேனா?” அன்றியாவால் அதற்குமேல் படுக்கையில் புரள முடியவில்லை. எழுந்து கொண்டாள். கட்டிலின் அருகே இருந்த அலுமாரியில் இருந்து அந்தக் குடுவையை எடுத்துக் கொண்டாள். வரவேற்பறையின் ஷோபாவில் அமர்ந்திருந்த அவளது பார்வை கண்ணாடி மேசைமேல் இருந்த அந்தக் குடுவையிலேயே இருந்தது. அந்தப் குடுவைக்குள்தான் அல்போன்ஸ் இருந்தான். அதற்குள்ளேதான் அன்றியாவும் தன் உயிரை வைத்திருந்தாள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அல்போன்ஸ் இறந்து போய்விட, அன்றியா தன் பலம் எல்லாம் இழந்து விட்டதை உணர்ந்தாள். எத்தனைபேர் வந்து ஆறுதல் சொல்லி இருப்பார்கள். அத்தனையும் அவளைத் தேற்றவில்லை. அவளது அப்பா இல்லாத வீடு அவளுக்குப் பிடிக்கவில்லை. எங்காவது ஓடி விடலாமா? என யோசித்து, தனியாக, சோகத்தில் விழுந்திருந்த போதுதான், தன் தந்தையின் உடலை அடக்கம் செய்வதில்லை, மாறாக எரித்து விடுவது என்ற எண்ணம் அவளுக்கு வந்தது. நண்பர்கள், உறவினர்கள் எல்லாம், “அடக்கம் செய்து விடு” என்று சொல்லிப் பார்த்தார்கள். அன்றியா, தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. யேர்மனியில், பொதுவாக, இறந்தவரின் சாம்பலை மயானத்தில்தான் புதைப்பார்கள். அது மயானத்தில் உடலத்தைப் புதைப்பது போல ஒரு இடத்தில் புதைக்கப்படும். அதற்கான செலவு சில ஆயிரங்கள் ஆகும். அந்தப் பணத்தைச் செலுத்த வசதியில்லாதவர்கள் அதற்கென்று இருக்கும் குறிப்பிட்ட இன்னொரு மயானத்தில் பலரது சாம்பல் குடுவைகளுடன் ஒன்றாகப் புதைப்பார்கள். இவ்வளவையும் சம்பந்தப்பட்ட அலுவலகர்களே உரியவர்களின் விருப்பத்துக்கேற்ப மேற்கொள்வார்கள். அவர்களே நிர்ணயிக்கப்பட்ட நாளில் சாம்பலைக் கொண்டு வந்து தருவார்கள். அவர்கள் முன்னிலையிலேயே சாம்பல்க் குடுவை அடக்கம் செய்யப்படும். இறந்தவரின் சாம்பலை வீட்டுக்குக் கொண்டு சென்று வைத்திருக்கவோ, கடலிலோ,ஆறுகளிலோ கரைக்கவோ, தோட்டத்தில் தாக்கவோ துளியும் அனுமதிக்க மாட்டார்கள். அது சட்டப்படி பிழையானதொரு செயலாகும். “இது சட்டப்படி பிழையானது. பிடிபட்டால் பெரும் சிக்கலாகி விடும்” இறுதிச் சடங்கு செய்யும் நிறுவனத்தின் முதலாளி ஜோகன், அன்றியாவுக்கு அறிவுரை சொன்னார். “என்னால் உங்களுக்கு ஒரு சிக்கலும் வராது” சொல்லிக் கொண்டே தனது பணப்பையை அன்றியா திறந்தாள். அல்போன்ஸின் உடல் எரிக்கப்பட்டு, அவனது சாம்பல் அழகான ஒரு குடுவைக்குள் அடக்கப்பட்டு அவளிடம் வந்து சேர்ந்தது. அன்றிலிருந்து அன்றியாவின் கட்டிலோடு சேர்ந்திருந்த அலுமாரிக்குள் அவளது தந்தை அல்போன்ஸ் இருந்தார். வெள்ளி,சனிக்கிழமைகளில்தான் டீ மற்றியோ பிட்ஸா ரெஸ்டோரண்ட் நிறைந்திருக்கும். மற்றைய நாட்களில் ஓரளவு வாடிக்கையாளர்கள்தான் உணவருந்த வருவார்கள். ஞாயிற்றுக் கிழமையான அன்றும் வாடிக்கையாளர்கள் பெரும் அளவில் இல்லை. அன்றியா, உணவுகளைப் பரிமாறிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த செய்தி அவளுக்குக் கிடைத்தது. அவளுக்குச் செய்தியைச் சொன்னவர் உணவருந்த வந்த ஒரு வாடிக்கையாளர். “ கேள்விப் பட்டனீயோ அன்றியா? ஜோகனை அறெஸ்ற் செய்திட்டாங்களாம்” “எந்த ஜோகன்?” “இறுதிச் சடங்கு நடத்துற ஜோகன்” “ஏன்? அவருக்கு என்ன பிரச்சினை?” “தில்லு முல்லுதான். ஏகப்பட்ட விசயங்கள். நூறு யூரோப் படி சவப் பெட்டிகளை வாங்கி, அப்பிடி இப்பி டி சோடிச்சு, ஏமாத்தி ஆக்களைப் பாத்து விலையை ஆயிரம், இரண்டாயிரம் எண்டு கூட்டிக் குறைச்சுக் குடுத்துப் பணம் பாத்திருக்கிறான்..” “இதிலை என்ன பிழை இருக்கு? அது வியாபாரம். வாங்கிறாக்களை அவர் ஒண்டும் கட்டாயப் படுத்த இல்லையே” “இல்லைத்தான். ஆக்களுக்கு நல்ல விலையான சவப்பெட்டிகளைக் காட்டிப் போட்டு, அடக்கம் செய்யிற போது சாதாரண பெட்டியை மாத்திப் போடுவான். சவப் பெட்டிக்கான காசும் கொம்பனிக் கணக்குக்குப் போகாது. அவன்ரை தனிப்பட்ட எக்கவுண்டுக்குத்தான் போகும்” “அப்பிடி இருக்குமெண்டோ? என்னைப் பொறுத்த வரையிலை அவர் ஒரு நல்ல மனுசன்” “ நீ அப்பிடிச் சொல்லுறாய். கனக்க விசயம் இருக்கு அன்றியா. உடலை எரிச்சுப் போட்டு, ஆக்களின்ரை அவசரத்துக்கு, ஆளாளுக்கு சாம்பல்களை மாத்தியும் குடுத்திருக்கிறான். அங்கை வேலை செய்தவன் பொலிஸுக்கு அறிவிச்சுப் போட்டான். ஆள் மாட்டிட்டான்” ஷோபாவில் இருந்த அன்றியாவின் பார்வை கண்ணாடி மேசைமேல் இருந்த அந்தக் குடுவையில் இருந்தது. “அப்பா உள்ளே இருப்பது நீதானா?” இது ஒரு உண்மைச் சம்பவம் “ஸ்வேபிஸ் ஹால் நகரத்தைச் சேர்ந்த, இறுதிச் சடங்கு நிறுவனத்தின் பொறுப்பாளர் ஜோகன் (33), அதிக பணத்தைப் பெற்றுக் கொண்டு, இறுதிச் சடங்குகளில், மலிவான சவப்பெட்டிகளில் இறந்தவர்களை அடக்கம் செய்தார் என்பதும், 60 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு இறந்தவர்களின் சாம்பல்களை மாற்றியும் கொடுத்திருக்கிறார் என்பதும், நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இது மனித நேயம், உணர்வுகள், உறவினர்களின் துக்கம் பற்றியது. இவை அனைத்தும் இங்கே மதிக்கப்படவில்லை, குற்றவாளி உறவினர்களின் நம்பிக்கையை மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். 102 குற்றங்களை அவர் செய்திருக்கிறார் என்பது நிரூபணமாகி இருக்கிறது. இவற்றுக்காக மூன்று வருடங்களும் எட்டு மாதங்களும் சிறைத் தண்டனை அவருக்கு வழங்கப்படுகிறது” என்று தலைமை நீதிபதி 15.10.2014, புதன்கிழமை தனது தீர்ப்பில் கூறினார்
  4. Putthan, உங்களின் இந்த ஆதங்கம் என்னிடத்திலும் இருக்கிறது. பேனை பெரிதாக்கி பெருச்சாளியாக்கி பேயாகவும் காட்டியிருக்கிறார்கள். “நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டது கவலை அளிக்கிறது. ஆனலும் நிலமையைச் சீராக்கி, நிகழ்ச்சி தொடர்ந்தது” என்று தென்னிந்திய கலைஞர்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், சில தென்னிந்திய ஊடகங்களும் அறியத்தந்திருக்கிறார்கள். இதற்குள் எம்மவர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து இழிந்த அரசியலும் செய்திருக்கிறார்கள். பொலிஸ் அதிகாரி சிங்களத்தில் வேண்டுகோள் விடுத்த போது, “தமிழில் கதை” என்று கத்தினார்கள். அவர் தமிழில் வேண்டுகோள் விடுத்த போதும் எம்மவர்களுக்குப் புரியவில்லை என்பது வேதனை. புலம் பெயர்ந்தவர்கள், தாயகத்தில் வந்து முதலீடு செய்துதான் பணம் பார்க்க வேண்டிய நிலையில் இல்லை. அவர்கள் பொது நலன் கருதியோ, தங்கள் புகழ் விரும்பியோ தாயகத்துக்கு உதவ முன் வரலாம். அதை தங்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளும் திறன் அங்கு இல்லை என்பதைத்தான் நடந்த சம்பவம் காட்டியிருக்கிறது. வீழ்ந்திருந்து கொண்டு இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் வீரம் பேசப் போகிறோம்?
  5. எல்லாம் சரி. துயர் வரும் முன் காப்பதுதானே அறிவு. இந்தக் கட்டுரையை நிகழ்ச்சிக்கு முன்னர், நிலாந்தன் எழுதியிருக்கலாம். முடியட்டும், பிறகு போய் சங்கு ஊதலாம் எனும் விதமாகவே நான் இந்தக் கட்டுரையைப் பார்க்கிறேன். இனி இப்படி நடக்க விடமாட்டேன் நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற பாணியில் கூட, சூளைமேட்டுச் சூரர் சமீபத்தில்அறிக்கை விட்டிருந்தார். இத்தனைக்கும் பல ஆண்டுகளாக இருக்கும் ஈழ மீனவர்களின் பிரச்சனைகளை கடற்தொழில் அமைச்சராக இருந்தும் கூட, தீர்க்க முடியாமல்தான் அவர் இருக்கிறார். “உன் பழங்காலக் கதை இங்கே யாரைக் காக்கும்?” என்றொரு பாடல் வரி இருக்கிறது. எங்கள் மூதாதையர் அப்படிச் செய்தார். இப்படி வாழ்ந்தார் என்று சொல்லிக் கொண்டே இருந்தால், நாங்கள் அங்கேயே தங்கி விட்டோம் என்றுதான் கருத வேண்டும். வெளியே வர இன்னும் பல காலங்கள் தேவைப்படும். நிகழ்ச்சியை திட்டமிடாததால்தான் குழப்பம் வந்ததா? அல்லது திட்டமிட்டு குழப்பினார்களா? என்பது கேள்வி. என்னைப் பொறுத்தவரையில், புலம்பெயர் தமிழர் ஒருவர்நீ ட்டிய கரத்தை, (அது அவரது வியாபார நோக்கமோ? அல்லது சமூக நலனோ?)தாயகத்தில் காயப்படுத்தியிருக்கிறார்கள். கட்டுரையாளர் அதற்குத் தாளம் போட்டிருக்கிறார்.
  6. நியூசிலாந்தில், எனது அம்மாவின் சாம்பலை அடுத்த நாளே வீட்டுக்கு கொண்டு வந்து தந்தார்கள். யேர்மனி சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் சாம்பலோடு சம்பந்தப்பட்ட விடயம் ஒன்று என்னிடம் கைவசம் இருக்கிறது. எழுதலாம் என்று பார்க்கிறேன். சர்வாதிகார நாட்டுப் பட்டியலிலே போட்டிருப்பார்கள்😛
  7. ‘’எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை..” இந்த சினிமா பாட்டு நினைவுக்கு வந்தது
  8. ஷோபா சக்தியின் ‘சித்திரப் பேழை’ வாசித்தேன். கதை நீளமானதாக இருந்தாலும், வழமை போல, அவரது எழுத்து நடை, கதையை இடைவிடாமல் வாசிக்க வைத்தது. இலங்கை, பிரான்ஸ், கியூபா என்று கதையுடன் சேர்த்து நானும் பயணித்த அனுபவம் கிடைத்தது. அழகாகச் சொல்லி முடித்தார். பிரான்ஸுக்குப் பக்கத்தில்தான் யேர்மனி இருக்கிறது. இரண்டுமே ஐரோப்பிய வலயத்துக்குள்தான் இருக்கின்றன. ஆனால் இறந்தவர்களின் சாம்பல் விடயத்தில், இரண்டு நாடுகளிலும் நடை முறையில் மாற்றங்கள் இருப்பதை, ஷோபா சக்தியின் ‘சித்திரப் பேழை’ வாசித்த போது என்னால் அறிய முடிகிறது. யேர்மனியில், பொதுவாக, இறந்தவரின் சாம்பலை மயானத்தில்தான் புதைப்பார்கள். அது மயானத்தில் உடலத்தைப் புதைப்பது போல ஒரு இடத்தில் புதைக்கப்படும். அதற்கான செலவு சில ஆயிரங்கள் ஆகும். அந்தப் பணத்தைச் செலுத்த வசதியில்லாதவர்கள் அதற்கென்று இருக்கும் குறிப்பிட்ட இன்னொரு மயானத்தில் பலரது சாம்பல் பேழைகளுடன் ஒன்றாகப் புதைப்பார்கள். அதற்கான செலவு 400 யூரோக்கள் மட்டுமே! இவ்வளவையும் சம்பந்தப்பட்ட அலுவலகர்களே உரியவர்களின் விருப்பத்துக்கேற்ப மேற்கொள்வார்கள். அவர்களே நிர்ணயிக்கப்பட்ட நாளில் சாம்பலைக் கொண்டு வந்து தருவார்கள். அவர்கள் முன்னிலையிலேயே சாம்பல் பேழை அடக்கம் செய்யப்படும். இறந்தவரின் சாம்பலை வீட்டுக்குக் கொண்டு சென்று வைத்திருக்கவோ, கடலிலே கரைக்கவோ, தோட்டத்தில் தாக்கவோ துளியும் அனுமதிக்க மாட்டார்கள். அது சட்டப்படி பிழையானதொரு செயல். சிலர் சுவிஸ் நாட்டுக்கு இறந்தவரின் சாம்பலை அனுப்பச் சொல்லிவிட்டு, ( அதற்குப் பணம் கொடுக்க வேண்டும்) அங்கே சென்று, தங்கள் விருப்பம் போல் செய்து கொள்வார்கள். ஒரு சிலர் தங்கள் நாட்டுக்கு இறந்தவரின் சாம்பலை எடுத்துச் சென்று, சம்பிரதாய முறைப்படி கடமைகள் செய்ய விரும்புவார்கள். இறந்தவரின் சாம்பலை அவர்கள் தம்மோடு எடுத்துச் செல்வதற்கு எந்த அனுமதியும் கிடையாது. சம்பந்தப்பட்ட அலுவலகர்களே சாம்பலை நேரடியாக குறிப்பிட்ட நாட்டுக்கு, குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள். அனுப்புவதற்கான கட்டணம் தனியாக செலுத்த வேண்டும். எந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்கிறோமா அந்த நாட்டுச் சுங்க அலுவலகம் ஊடாகப் பெற்றுக் கொள்ள ஆவன செய்வார்கள். இறந்தவரின் சாம்பலை கியூபாவுக்கு கொண்டு செல்வதையும், அதை விமானத்தில் கையில் வைத்திருப்பதாகவும், ‘சித்திரப் பேழை’யில் சொல்லி இருப்பது எனக்குப் புதுமையாக இருந்தது. பிரான்ஸ் நாட்டு நடைமுறை அப்படி.
  9. பெரிய பெரிய கட்டுரைகளையே ஒரே மூச்சில் வாசிக்கும் உங்களுக்கே, இதை வாசிப்பதற்கு இன்னும் சில வருடங்கள் வேணும் என்றால் எனக்கு இன்னும் ஒரு ஆயுள் வேண்டும்.
  10. ‘சித்தப்பா’ என்றுதான் அவனை அழைப்போம். கடற்தொழிலாளி. எனது நண்பன். மீன்கள் பிடிக்கும்போது அரிதாக இந்த ‘காளை’ மீன் அகப்படும். அதை சந்தைக்கு அனுப்பாமல், தாங்களே சமைத்துச் சாப்பிடுவதாகவும் மிகவும் ருசியாக இருப்பதாகவும் அவன் என்னிடம் சொல்லி இருக்கிறான். நானும் அதை சாப்பிட ஆசைப்பட, எப்பொழுது அந்த மீன் அவன் விரித்த வலையில் விழுந்தாலும் அது என் வீட்டுச் சட்டிக்குள் வந்து விடும். மேற்கொண்டு அந்த காளை மீன் பற்றிய விபரங்கள் எனக்குத் தெரியாது. காளை மீன் சாப்பிட்டு நாலு தசாப்தங்களுக்கு மேலாயிற்று. சும்மா இருந்த சங்கை எடுத்து டொக்டர் ஊதிப் போட்டு போட்டார்.
  11. வாசித்ததும் ஏங்க வைக்கிறது. மீன் சமைக்கும் வாசம் வந்து போகிறது. எனக்குப் பிடித்தது காளை மீன். இங்கே, ‘குதிப்பு’ மீன் என்று டொக்டர் எதைச் சொல்கிறார்? ஒருவேளை முரல் மீனாக இருக்குமா?
  12. அதிபர் இராமர் (ராமு வாத்தியார்) கடந்த வருடம் பெப்ரவரி 8ந்திகதி காலமாகி இருந்தார். அவரின் ஒரு வருட நிகழ்வில், யாழில் இந்தப் பதிவு அவரது சேவையை எங்களுக்குச் சொல்கிறது. கிராமத்தை முன்னேற்ற அங்கு வாழ்ந்தவர்கள் (எதிர்ப்புகள் வந்த போதும்) ஒற்றுமையாகச் செயற்பட்டார்கள் என்பதோடு வெற்றியும் கண்டார்கள் என்பதை காணமுடிகிறது. இந்த ஒற்றுமை எங்கள் எல்லோரிடத்திலும் இருந்தால்… ராமு வாத்தியாரை மட்டும் அல்ல அவரது மகனையும் பாராட்டுகிறேன் 👍
  13. தமிழ்வானண் கதைகளை நான் வாசித்தது குறைவு. என் காலத்தில் (கபொத சாதாரணம் படித்த நேரம்) அதிகம் வாசித்தது பி.டி.சாமி என்பவர் எழுதிய மர்ம நாவல்கள்தான். அவர் எழுதும் பாணி எனக்குப் பிடித்திருந்தது. பிற்பாடு “அனிதா - இளம் மனைவி’ என்று பத்து வாரங்களில் குமுதம் சஞ்சிகையில் சுஜாதா வேகமாக எழுதிய கதை பிடித்துப் போய் அவர் பக்கம் விழுந்து விட்டேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.