"திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்" யாழ் அகவை 21 ல் .
சம்பவம் : சிவன் கோயிலில் துர்க்கை அம்மனின் முன்னால் தூணுடன் சாய்ந்து இருக்கிறேன்.அம்பாளையே பார்க்கிறேன்.உள்ளம் உலைக்களத்தில் இரும்புபோல் நெக்குருகிறது. தாயே எதோ என்னை நல்லா வைத்திருக்கிறாய்.என்னைவிட எல்லோரும் நல்லாக இருக்க வேண்டும். மனம் பிரார்திக்கின்றது. வெளியே வருகின்றேன் யாரோ என்னை தொடர்ந்து பார்ப்பதுபோல் முதுகில் ஒரு குறுகுறுப்பு.சுற்று முற்றும் பார்க்கிறேன் யாரும் இல்லை. சற்றுநேரத்தில் என் அருகாக ஒரு பெண் விரைந்து சென்று சற்று தூரத்தில் நின்ற எனது மனைவியுடன் கதைத்து கொண்டு இருந்து விட்டு (அவர்கள் இருவரும் ஒரே வகுப்புத் தோழிகள்) மின்னல் போல் சென்று மறைந்து விடுகிறாள்.
அது ஒரு மறக்க நினைத்தாலும் முடியாத பெயர். அன்றாடம் எமது வாழ்வில் நாம் கேட்கும், பார்க்கும், படிக்கும் பெயர்களில் ஒன்று. உதாரணமாக தேவி, கமலா, விஜயா,பத்மா போன்றது.இது வீட்டுக்குள்ளேயே படங்களில்,நாடகங்களில், கதைகளில் வந்து போகும். சுமார் நாற்பது வருடங்கள் தொடர்பே இல்லை.முன்பு இங்கே அப்பப்ப வருவது வழக்கம். இது தற்செயலா.அதுவும் இன்று காலைதான் இந்த கோயிலுக்கு வர முடிவெடுத்தோம்.அவர்களும் எங்காவது வெளிநாட்டில் இருக்கலாம் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். ஒரு மூன்று நிமிடம்தான் இருக்கும் சுனாமி போல வந்து அடிச்சுட்டு போயிட்டாள். வந்தது அவளா அம்பாளா.
மனைவி வந்து என்னிடம் கேட்கிறாள். இப்ப யார் வந்து என்னோடு கதைத்து விட்டு போனது தெரியுமோ என்று. நான் ஒன்றும் சொல்லவில்லை. (சிவன் கோயிலுக்குள் பொய் சொல்ல கூடாது. சுந்தரர் பொய் சொல்லி கண் கெட்டது நினைவு வர நான் மௌனமாக இருந்திட்டன்). நன்றியுடன் அம்மனை பார்த்து வணங்கி விட்டு கதைத்து கொண்டு வெளியில் வருகிறோம். அவள் தொடர்ந்து அவதான் என்று பெயரை சொல்கிறாள்.மகனுக்கும் கொஞ்சம் சொல்கிறாள். நானும் அப்படியா நான் பார்க்கவே இல்லை.....!
இது அன்று எழுதியிருந்தேன் ......இதுக்கு மேல் எழுதவும் முடிவதில்லை."வைடூரியத்தின் நடுவே ஓடும் சுவர்ணரேகைபோல்" சிதையிலும் அழியாத நினைவுகள்........!