Jump to content

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15887
  • Joined

  • Last visited

  • Days Won

    23

Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #7 – தகடூர்ப் பெரும்போர் முடிவு.. தகடூர்க் கோட்டையை சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையின் படைகள் முற்றுகையிட்டிருக்கின்றன. உள்ளே அதியமான் எழினி எந்த நேரமும் கோட்டைக் கதவைத் திறந்துகொண்டு சேரர்களோடு போரிட ஆயத்தமாக இருக்கிறான். இந்தப் போரைத் தடுப்பதற்காக புலவர்கள் அரிசில்கிழாரும் பொன்முடியாரும் கோட்டைக்குள் சென்று, அதியனிடம் ‘என்ன இருந்தாலும் சேரமான் உன்னுடைய அண்ணன் முறையைச் சேர்ந்தவன், அவனுக்கு விட்டுக்கொடுத்துச் செல்லக் கூடாதா’ என்று வேண்டுகோள் விடுத்தனர் என்று பார்த்தோம். ஆனால் அவர்கள் சொல்லைக் கேட்பதாகத் தெரியவில்லை எழினி. அவனோடு இருந்த மற்ற வேளிர்கள் அவனுக்குத் தூபம் போட்டனர். காவற்காட்டுப்போரில் தான் அடைந்த தோல்விகளால்தான் சேரன் புலவர்களைத் தூது அனுப்பியிருக்கிறான் என்று அதியனுக்குப் போதனை செய்தனர். அதனால் எழினி புலவர்களிடம் ‘சேரன் அவ்வளவு வலிமையுடையவன் என்றா சொல்கிறீர்கள், அப்படிப்பட்ட வலிமை உடையவனை வெல்வதே எனக்குப் பெருமை’ என்று சொல்லி நகைத்தான். ‘தம்பி என்று நினைப்பவன், என்னுடைய நாட்டை நானே ஆளட்டும் என்று ஒப்புக்கொள்ளவேண்டியதுதானே’ என்று சீற்றத்துடன் கூறவும் செய்தான். இம்முறையும் தூது தோற்றுவிட்டதால் வருத்தத்துடன் இரண்டு புலவர்களும் சேரன் பாசறைக்குத் திரும்பினர். ‘கொல்லிப் பொருந கொடித்தேர்ப் பொறைய ! நின் வளனும் ஆண்மையும் கைவண்மையும்’ நான் அதியனுக்கு எடுத்துச் சொன்னேன் ஆனாலும் அவன் என் பேச்சைக் கேட்கவில்லை என்று அரிசில் கிழார் சேரமானிடம் கூறினார். அதியமானின் முடிவு போரே என்பதைத் தெரிந்துகொண்ட இரும்பொறை, தன்னுடைய யானைப்படைகளை அழைத்து கோட்டையைத் தாக்கும்படி ஆணையிட்டான். யானைப்போர் தமிழகத்தின் மூவேந்தர்களிடமும் யானைப்படை இருந்ததென்றாலும், காடுகள் நிறைந்த சேரநாட்டின் யானைப் படைகளுக்குத் தனிச்சிறப்பு உண்டு. வலிமையான அந்த யானைகள், மிச்சமிருந்த காவற்காட்டை அழித்து தகடூர்க் கோட்டையை நோக்கி முன்னேறின. யானைப்படை வருவதை அறிந்த தகடூரின் படைத்தலைவர்களில் ஒருவன், குதிரைப்படைக்குத் தலைமை தாங்கி கோட்டைக்கதவைத் திறந்து தன் வீரர்களுடன் வெளியே வந்தான். இரு தரப்பினருக்கும் கடும் போர் மூண்டது. குதிரைகள் யானைப் படையினுள் ஊடுருவின. வேல்களாலும் வால்களாலும் யானைகளில் மேலிருந்த வீரர்களை அதியனின் வீரர்கள் பலர் கொன்றார்கள். அதேபோல யானை மேலிருந்து குதிரைப்படை வீரர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தினர் சேர வீரர்கள். போரில் யாருக்கும் வெற்றி-தோல்வி இல்லாவிட்டாலும் அன்றைய தினத்தின் முடிவில் யானைப்படையின் முன்னேற்றம் தேக்கப்பட்டது. அப்படி யானைகளைத் தேக்கிவிட்டு கோட்டைக்குள் திரும்பிய ஒரு வீரனைப் பார்த்து கோட்டைக்காவலன் ஒருவன் ‘சேர வீரர்களை வெட்டி வீழ்த்தியது சரி, ஆனால் யானைகளையும் வீழ்த்தியிருக்கலாமே’ என்று கேட்டான். அதற்குப் பதிலளித்த குதிரைப்படை வீரன், ‘தானும் விலங்கால் ஒருகைத்தால் வெல்கை நன்றென்னும் நலங்காணேன் நாணுத் தரும் (புறத்திரட்டு 1320)’ என்றானாம். அதாவது யானை என்பது ஒரு விலங்கு, அதிலும் ஒரு கை மட்டுமே உடையது. அப்படிப்பட்ட யானையை வீழ்த்துவது என் வீரத்திற்கு நாணத்தைத் தரும் செயல் என்றான். அடுத்த நாள், யானைகள் மீண்டும் கோட்டையைத் தாக்க முன் சென்றன. தங்கள் துதிக்கையில் மரங்களை எடுத்துக்கொண்டு கோட்டைக் கதவுகளை அவை இடிக்க முயன்றன. மறுபடியும் அதியனின் குதிரைப்படை வீரர்கள் யானைப் படையைத் தாக்க ஆரம்பித்தனர். முந்தைய நாள் போல இம்முறை யானைகளை அவர்கள் விட்டுவைப்பார்கள் என்று தோன்றாததால், சேரர் படைத்தலைவன் தன் வீரர்களுக்கு ஒரு ஆணை பிறப்பித்தான் கட்டி யன்ன காரி மேலோன் தொட்டது கழலே கையது வேலே சுட்டி யதுவும் களிறே ; யொட்டிய தானை முழுதும் விடுத்துநம் யானை காமினவன் பிறிதெறி யலனே (புறத் – 1372) கரிய நிறமுடைய குதிரைகளின் மேலே ஏறி வருகிறவர்களைப் பாருங்கள். பல போர்களில் வென்றதற்கு அடையாளமாக வீரக்கழலைக் காலில் அணிந்திருக்கிறார்கள். அவர்கள் கையிலிருக்கும் வேல்களுக்குக் குறி நம்முடைய யானைகளே ஆகும். நம்முடைய படைபலத்தை முழுவதுமாகக் காட்டி நம் யானைகளைக் காப்பாற்றுங்கள் என்றான் அவன். அப்படியும் அதியனின் வீரர்கள் எறிந்த வேல்கள் யானைகளைக் காயப்படுத்தி வீழ்த்தின. இதன் காரணமாகப் பயங்கரமாகப் பிளிறிக்கொண்டு யானைகள் பின்னே திரும்பி சேரர்படைகளுக்கு சேதத்தை விளைவிக்க ஆரம்பித்தன. ஆயினும் தங்கள் திறமையால் அவற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்து கோட்டைக்கதவுகளை இடிக்க அவற்றை உந்தித்தள்ளினர் சேர வீரர்கள். இதனால் கோட்டையின் பல இடங்களில் சேதம் ஏற்பட்டு விரிசல் உண்டானது. அத்தோடு அன்றைய போர் முடிந்தது. கோட்டை பலவீனமாகத் தொடங்கிவிட்டதை அறிந்த அதியனின் பக்கமிருந்த வேளிர் மன்னன் ஒருவன், அன்றிரவு தன்னுடைய வீரன் ஒருவனை அழைத்தான். ‘வீரனே, சேரர் படைபலம் அதிகம். நம்முடைய அரண்களுக்கு அவர்கள் சேதம் விளைவிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆகவே நீ இப்போதே சென்று சேரர்களின் முக்கியப் படைத்தலைவனையும் முடிந்தால் சேரமானையும் யாருக்கும் தெரியாமல் கொன்றுவிட்டு வந்துவிடு. இதனால் நமது வெற்றி எளிதாகிவிடும்’ என்று கூறினான். இதைக்கேட்ட அந்த வீரன் சீறி எழுந்தான். பரவைவேற் றானைப் பகலஞ்சு வேனா இரவே எறியென்றாய் என்னை – விரைவிரைந்து வேந்தன்நீ யாயினாய் அன்றிப் புகுவதோ போந்தென்னைச் சொல்லிய நா (புறத் – 3̀19) ‘பகலில் சென்று எதிரியோடு போர் செய்யச் சொல்லியிருந்தால் உன்னுடைய ஆணையை உடனே நிறைவேற்றியிருப்பேன். ஆனால் என்னை இரவினில் சென்று ஒரு இழிசெயலைச் செய்யச் சொல்லுகிறாய். தூங்குகிற பகைவர்களைக் கொல்வது எனக்கு ஆண்மையாகுமா? என்னுடைய ஆண்மையைப் பழித்த நீ என்னுடைய அரசன் என்பதால் இந்த அளவோடு உன்னை மன்னித்து விடுகிறேன். வேறு யாராவது என்னிடம் இப்படிச் சொல்லியிருந்தால் அவனுடைய நாக்கை வெட்டி வீழ்த்தியிருப்பேன்’ என்று முழங்கினான் அவன். ஒரு சாதாரணப் படை வீரனுக்கு இருந்த வீர உணர்ச்சியும் அற உணர்ச்சியும் இந்தச் செயலால் விளங்குகிறதல்லவா. மறுநாள் காலையில், கோட்டையில் ஆங்காங்கே வெடிப்பு கண்டிருந்த பகுதிகளை அதியனின் வீரர்கள் வந்து பார்த்தனர். அந்த வெடிப்பின் மூலம் வந்த சூரிய ஒளி ஒரு படைத்தலைவனின் வேலின் மீது பட்டு பிரதிபலித்தாம். ‘அதிராது அற்ற நோக்கு ஞாயிலுள் கதிர்விடு சுடரின் விளங்கும் வெள்வேள்’ என்று அந்த வீரனின் வேலைப் பற்றியும் அந்த நிலையிலும் கலங்காமல் கோட்டையைக் காக்க முனையும் அவன் திறனைப் பற்றியும் புலவர் ஒருவர் பாடினார். அதே சமயம் கோட்டையின் சேதத்தை அறிந்த சேரமான் தன்னுடைய படைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து கோட்டையைத் தாக்க ஆணையிட்டான். இதனால் கோட்டையின் பல பகுதிகளைக் காவல் காத்துக்கொண்டிருந்த தலைவர்கள் சேரர் படைகளோடு போரிட நேரிட்டது. சேரர்களின் வில்வீரர்களும் வேல் வீரர்களும் கோட்டையின் மேல் பொறிகளைச் செலுத்த முயன்ற வீரர்களை அழித்தபடி முன்னேறினர். கோட்டைக்குள் இருந்து எறியப்பட்ட வேல்கள் பல சேர வீரர்களின் உயிரைக் குடித்தன. அதியனின் படைத்தலைவன் ஒருவன் வீரப்போர் புரிந்து சேரர்களின் யானை ஒன்றை வெட்டி வீழ்த்தினான். ஆனால் சேரர் படைத்தலைவன் எறிந்த வேல் ஒன்றால் மாண்டுபோனான். அத்தோடு அன்றைய போர் முடிந்தது. அடுத்த நாள் போர் தொடங்கியபோது, கோட்டைக்குள் இருந்து வீரமிக்க ஒருவன் முன்வந்து சேரர்களோடு போர் புரிய நின்றான். அவனைக் கண்டு வியந்த சேரர் படைத்தலைவன் அவன் யார் என்று கேட்டான். அதற்கான பதிலை அரிசில்கிழார் ஒரு பாடலின் மூலமாகச் சொன்னார் தோல்தா தோல்தா என்றி; தோலொடு துறுகல் மறையினும் உய்குவை போலாய்; நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன் பேரூர் அட்ட கள்ளிற்கு ஓர்இல் கோயின் தேருமால் நின்னே (புறநானூறு 300) ‘படைத்தலைவனே, கேடயம் மட்டுமல்ல, பெரும் பாறாங்கல்லை வைத்து உன்னை மறைத்துக்கொண்டாலும் நீ தப்ப முடியாது. நேற்று யானை ஒன்றை வீழ்த்தி அதன்பின் உன்னால் வேல் எறிந்து கொல்லப்பட்டவனுடைய தம்பி இவன். உன்னைத்தான் தேடுகிறான்’ என்று எச்சரித்தார் புலவர். இந்நிகழ்வையே புறத்திறட்டும் ‘பரூமத யானை பதைப்ப நூறி அடுகளத் தொழிந்தோன் தம்பி! தொடுகழல் நொச்சித் தெரியல் நெடுந்தகை! அச்சம் அறியான் ஆரணங்கினனே’ (புறத் 1342) என்று படம்பிடித்துக் காட்டுகிறது. ஆயினும் சேரர் படைத்தலைவனும் அவன் வீரர்களும் இதைக் கேட்டு அஞ்சவில்லை. முன்னேறி அதியனின் படைகளைத் தாக்கத் தொடங்கினர். நெடுங்கோளாதன் தகடூரில் ஒரு மூதாட்டி வசித்து வந்தாள். அவளுக்கு நெடுங்கோளாதன் என்ற ஒரு மகன் இருந்தான். அன்றைய போரில் அஞ்சாமல் சேரர் படைகளை எதிர்த்துப் போரிட்டான் அவன். ‘வறுந்தலை முதியாள் அஞ்சுதக் கனளே, வெஞ்சமத்து என்செய்கென்னும் வேந்தர்க்கு அஞ்சல் என்பதோர் களிறீன்றனளே’ என்று பகைவர்களை வெட்டி வீழ்த்திக்கொண்டிருக்கின்ற இவள் மகன் மட்டுமல்ல, இவளும் அஞ்சுதற்கு உரியவள் என்று அவளை ஊர் மக்கள் போற்றினராம். அந்த மூதாட்டிக்கு அவன் ஒருவனே மகன், அவன் மட்டுமே அவளுக்குத் தள்ளாத காலத்தில் துணை. இருந்தாலும் தன் மகன் போர்க்களத்திற்குச் சென்று வீரச்செயல்கள் நிகழ்த்துவதை அறிந்து பெருமையே கொண்டிருந்தாளாம் அவள். தருமம் ஈதேயாம் தானமும் ஈதேயாம் கருமமும் காணுங்கால் ஈதாம் – செருமுனையில் கோள்வாள் மறவர் தலைதுமிய என்மகன் வாள்வாய் முயங்கப் பெறின் (புறத் – 1403) தான, தருமங்கள் செய்வது மட்டுமா புண்ணியத்தைத் தரும்? தன்னுடைய கருமத்தைக் கைவிடாதபடி செய்வதும் புண்ணியமே. நாட்டைக் காக்கும் பணியில் என்னுடைய மகன் பகைவர் வாள் பட்டு மடிந்தால் அதுவே எனக்குத் தருமமும் கருமமும் ஆகும் என்று நினைத்தாளாம் அந்த மூதாட்டி. அதுபோலவே நடந்தும் விட்டது. எவ்வளவு பெரிய வீரனானாலும் வலிமைமிக்க சேரர் படையை எதிர்த்து நிற்க இயலுமா? போர்க்களத்தில் நெடுங்கோளாதன் மடிந்தான் என்ற செய்தி அவளை வந்தடைந்தது. அன்றைய போரின் முடிவில் போர்க்களத்திற்குச் சென்றாள் அந்தத் தாய். அவளோடு துணையாகச் சென்றவர்கள் ‘தாயே! அதோ கிடக்கின்றான் உன் மகன்’ என்று அடையாளம் காட்டுகின்றனர். எற்கண்டறிகோ? எற்கண்டறிகோ ? என்மகன் ஆதல் எற்கண்டறிகோ? கண்ணே, கணை மூழ்கினவே; தலையே, வண்ணமாலை வாய்விடக் குறைந்தன; … நெஞ்சே வஞ்சரங் கடந்தன குறங்கே நிறங்கரந்து பல்சரம் நிறைந்தன அதனால் அவிழ்பூ வம்பணைக் கிடந்த காளை கவிழ்பூங் கழற்றின் காய் போன்றனனே! (புறத் 1405) எதைக் கண்டு நான் இவன் என் மகன் என்பதை அறிவேன்? கண்களை கணைகள் குத்திக்கிழித்திருக்கின்றன.. தலை வாளால் வெட்டப்பட்டிருக்கிறது. நெஞ்சிலும் தொடையிலும் உடல் முழுவதும் அம்புகள் துளைத்திருக்கின்றன. இந்த அம்புப் படுக்கையில் கிடக்கும் இவனை என் மகன் என்று எப்படி நான் அறிவேன் என்று புலம்பியபடி தானும் உயிர்துறந்தாளாம் அந்தத் தாய். போரினால் உண்டாகும் அழிவுதான் எத்தனை கொடியது. போரில் தங்கள் படைக்கு சேதம் அதிகமாவது கண்ட அதியமான் எழினி தானே போருக்குச் செல்வதென்று முடிவெடுத்தான். அன்றிரவு ‘பெருஞ்சோறு’ என்னும் தன் படைகளுக்கு விருந்து அளிக்கும் நிகழ்வை நடத்தினான் எழினி. அந்நிகழ்வில் படைகளோடு தானும் அமர்ந்து அவன் உணவு அருந்தியதை ‘உண்டியின் முந்தான் உடனுண்டான் தண்தேறல்’ என்று புகழ்ந்து பாடினார் புலவர் ஒருவர். மறுநாள் காலையில் அவன் போருக்குப் புறப்படும் தருவாயில் அவனை வழிமறித்தான் அவனுடைய பிரதான படைத்தலைவனான பெரும்பாக்கன் என்பவன். தான் முதலில் செல்வதாகவும் பகைவரை வென்று வருவதாகவும் எழினியிடம் அவன் கோரிக்கை விடுத்தான். அதை ஏற்று பெரும்பாக்கனை அனுப்பிவைத்தான் அதியமான். மறுபுறம், அதியன் போருக்கு வருவதைக் கேள்விப்பட்ட பெருஞ்சேரல் இரும்பொறை தானே போர்க்களத்திற்கு வந்து நின்றான். எழினிக்குப் பதிலாக இன்னொருவன் வருவதைக் கண்டு திகைத்த அவன், வருபவன் யாரென்று அரிசில்கிழாரிடன் கேட்டான். மெய்ம்மலி மனத்தில் நம்மெதிர் நின்றோன் அடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டிற் கையிகன் தமருன் தையணற் புரவித் தளையவிழ் கண்ணி யிளையோன் (தொல்காப்பிய உரை) சுடர் விடுகின்ற தேரில் ஏறி வருபவன் தகடூரின் சேனாதிபதியான பெரும்பாக்கன். இவன் மின்னல் போலப் போர் செய்யக்கூடியவன். வேலினால் கணநேரத்தில் உன்னைக் கொல்லக்கூடியவன் என்று எச்சரித்தார் அரிசில்கிழார். அதைக் கேட்டு நகைத்த சேரமான், தன்னுடைய குதிரையை பெரும்பாக்கனின் முன்னே கொண்டு சென்று அவனோடு மோதினான். இருவருக்கும் ஏற்பட்ட கடுமையான போரின் முடிவில் பெரும்பாக்கன் கொல்லப்பட்டான். தொடர்ந்து சேரர் படை வெற்றிமுகத்தில் இருப்பதை அறிந்த எழினி உடனடியாகப் போர்க்களத்திற்கு வந்தான். இருதரப்பிலும் அரசர்கள் முன்னிற்க போர் மிக உக்கிரமாக நடந்தது. சேர வீரன் எறிந்த வேல் ஒன்றினால் படுகாயம் பட்ட அதியமான் களத்தில் வீழ்ந்து மடிந்தான். அதியனின் வீழ்ச்சியைக் கேட்ட தகடூரின் படை சிதறி ஓடியது. சேர வீரர்கள் ‘வெற்றி வேல், வீர வேல்’ என்று வெற்றி முழக்கமிட்டனர். பெரும் வீரனும் வள்ளலுமான அதியமான் மறைந்ததைக் கண்ட சான்றோர்கள் வருந்தினர். கன்றுஅமர் ஆயம் கானத்து அல்கவும் வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும் களம்மலி குப்பை காப்பில வைகவும் விலங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல் வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள் பொய்யா எழினி பொருதுகளம் சேர (புறநானூறு 230) ‘கன்றுகளோடு கூடிய பசுக்களின் கூட்டம் காட்டில் பயமின்றி உலவவும், வெப்பமிக்க பாலை நிலத்தில் வழிப்போக்கர் கொள்ளையருக்கு அஞ்சாமல் செல்லவும், குவியல் குவியலாக நெல் காவலின்றிக் கிடக்கவும் காரணமாக இருந்த வளையாத செங்கோல் உடைய அதியமான் எழினி இறந்துபட்டான். இது கூற்றத்தின் தவறன்றி வேறென்ன ?’ என்று புலம்பினார் அரிசில்கிழார். சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையின் மனத்திலும் மகிழ்ச்சியில்லை. என்ன இருந்தாலும் சேரர் குடியைச் சேர்ந்தவனல்லவா எழினி. அதனால் அதியனின் ஈமச்சடங்குகளைத் தானே முன்னின்று செய்தான் இரும்பொறை. அதியனின் வம்சத்தைச் சேர்ந்த மற்ற ஒருவனுக்கு முடிசூட்டிவிட்டுக் கருவூர் திரும்பினான் சேரமான். ஆயினும் இரும்பொறையின் இந்த வெற்றி வரலாற்றின் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட்டது. ‘தகடூர் எறிந்து நொச்சிதந் தெய்திய அருந்திறல் ஒள்ளிசைப் பெருஞ்சேரல் இரும்பொறை’ பதிற்றுப்பத்தின் பதிகம் இவனை ‘தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை’ என்று புகழ்கிறது. குறிப்பு : தகடூர்ப் போரைப் பற்றிய வர்ணனைகளும், விவரங்களும் பதிற்றுப் பத்து என்ற சங்க இலக்கியத்தில் மட்டுமல்லாது "தகடூர் யாத்திரை" என்ற நூலில் விளக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நூல் இப்போது கிடைக்கவில்லை. அதிலுள்ள சில பாடல்கள் புறத்திரட்டிலும், நச்சினார்க்கினியார் போன்ற உரையாசிரியர்கள் காட்டிய மேற்கோள்களிலும், கலிங்கத்துப்பரணி உரையிலும் கிடைத்துள்ளன. அவற்றைக் கொண்டு எழுதப்பட்டது இந்தக் கட்டுரை). (தொடரும்) எஸ். கிருஷ்ணன் மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com https://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-07/
  2. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #6 – தகடூர்ப் பெரும்போர் தொடர்கிறது.. சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் அதியமான் எழினிக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் உருவாவதைக் கண்டு, அதைத் தடுக்க புலவர் அரிசில் கிழார் எழினியிடம் தூது போனார் என்று பார்த்தோம். அரிசில் கிழாரைப் பற்றியும் அவரது தமிழ்ப் புலமை பற்றியும் கேள்விப்பட்டிருந்த எழினி அவரை நன்கு வரவேற்று உபசரித்தான். அவனுக்கு பல்வேறு அறிவுரைகளைச் சொன்ன அரிசில் கிழார் போரினால் ஏற்படும் அழிவுகள் பற்றியும் சேரனின் படைபலத்தை எதிர்த்து தகடூர்ப் படைகள் தடுமாறும் என்பதையும் விளக்கினார். ஆனால், தன் முடிவில் உறுதியாக நின்ற எழினி போரை நிறுத்த மறுத்துவிட்டான். இதனால் வேதனையுடன் அரிசில் கிழார் கருவூர் திரும்பினார். அவருடைய முகத்தைப் பார்த்ததுமே தூதின் முடிவு இன்னதென்று தெரிந்து கொண்ட இரும்பொறை அவரிடம் நடந்தது என்ன என்பதை விசாரித்தான். அதற்குப் பதிலாக அதியனின் தேவி சொன்ன கூற்று ஒன்றைச் சொன்னார் அரிசில்கிழார். சொல்லுங்காற் சொல்லின் பயன்காணும்; தான்பிறர் சொல்லிய சொல்லை வெலச்சொல்லும், பல்லார் பழித்தசொல்தீண்டாமற் சொல்லும்; விழுத்தக்க கேட்டார்க்குஇனியவாச்சொல்லானேல் – பூக்குழலாய் நல்வயல்ஊரன்நறுஞ்சாந்துஅணியகலம் புல்லலின் ஊடல் இனிது (புறத்திரட்டு – 756) ‘என்னைப் பிரிந்து போருக்குச் செல்ல மாட்டேன் என்று இனிய சொல் ஒன்றை அவன் சொல்வான் என்று நினைத்தேன். ஆனால் சொல்லின் பயன் அறிந்து பிறர் சொன்ன சொல்லை வெல்லும் திறமை உடைய அவன், (தூது வந்த அரிசில் கிழாரிடம்) அப்படிச் சொல்லவில்லை. ஆகவே அவனுடைய சந்தனம் அணிந்த மார்பைத் தழுவுவதை விட, ஊடலே இனிது’ என்று தன்னுடைய தோழியிடம் அரசி சொன்னதாகக் கூறினார் அரிசில் கிழார். அப்படிப்பட்ட தேவிக்குத் துன்பம் விளைவிக்குமாறு இந்தப் போர் வந்து சேர்ந்ததே என்று இரும்பொறையும் கலங்கினானாம். கருவூரில் படைகள் திரட்டப்பட்டுவிட்டன. அந்தப் படைகளோடு தாமே நேரில் சென்று தகடூரைத் தாக்கி உழிஞைப் போர் செய்வது என்று சேரமான் முடிவு செய்துவிட்டான். ஆனால் அவனுக்கும் சிறு கலக்கம் இருந்தது. இந்தப் படைகள் அதியமானையும் அவனோடு சேர்ந்திருக்கும் மற்ற வேளிர்களையும் தோற்கடிக்கப் போதுமானதா என்று யோசித்தான் அவன். சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் அதியமான் எழினிக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் உருவாவதைக் கண்டு, அதைத் தடுக்க புலவர் அரிசில் கிழார் எழினியிடம் தூது போனார் என்று பார்த்தோம். அரிசில் கிழாரைப் பற்றியும் அவரது தமிழ்ப் புலமை பற்றியும் கேள்விப்பட்டிருந்த எழினி அவரை நன்கு வரவேற்று உபசரித்தான். அவனுக்கு பல்வேறு அறிவுரைகளைச் சொன்ன அரிசில் கிழார் போரினால் ஏற்படும் அழிவுகள் பற்றியும் சேரனின் படைபலத்தை எதிர்த்து தகடூர்ப் படைகள் தடுமாறும் என்பதையும் விளக்கினார். ஆனால், தன் முடிவில் உறுதியாக நின்ற எழினி போரை நிறுத்த மறுத்துவிட்டான். இதனால் வேதனையுடன் அரிசில் கிழார் கருவூர் திரும்பினார். அவருடைய முகத்தைப் பார்த்ததுமே தூதின் முடிவு இன்னதென்று தெரிந்து கொண்ட இரும்பொறை அவரிடம் நடந்தது என்ன என்பதை விசாரித்தான். அதற்குப் பதிலாக அதியனின் தேவி சொன்ன கூற்று ஒன்றைச் சொன்னார் அரிசில்கிழார். சொல்லுங்காற் சொல்லின் பயன்காணும்; தான்பிறர் சொல்லிய சொல்லை வெலச்சொல்லும், பல்லார் பழித்தசொல்தீண்டாமற் சொல்லும்; விழுத்தக்க கேட்டார்க்குஇனியவாச்சொல்லானேல் – பூக்குழலாய் நல்வயல்ஊரன்நறுஞ்சாந்துஅணியகலம் புல்லலின் ஊடல் இனிது (புறத்திரட்டு – 756) ‘என்னைப் பிரிந்து போருக்குச் செல்ல மாட்டேன் என்று இனிய சொல் ஒன்றை அவன் சொல்வான் என்று நினைத்தேன். ஆனால் சொல்லின் பயன் அறிந்து பிறர் சொன்ன சொல்லை வெல்லும் திறமை உடைய அவன், (தூது வந்த அரிசில் கிழாரிடம்) அப்படிச் சொல்லவில்லை. ஆகவே அவனுடைய சந்தனம் அணிந்த மார்பைத் தழுவுவதை விட, ஊடலே இனிது’ என்று தன்னுடைய தோழியிடம் அரசி சொன்னதாகக் கூறினார் அரிசில் கிழார். அப்படிப்பட்ட தேவிக்குத் துன்பம் விளைவிக்குமாறு இந்தப் போர் வந்து சேர்ந்ததே என்று இரும்பொறையும் கலங்கினானாம். கருவூரில் படைகள் திரட்டப்பட்டுவிட்டன. அந்தப் படைகளோடு தாமே நேரில் சென்று தகடூரைத் தாக்கி உழிஞைப் போர் செய்வது என்று சேரமான் முடிவு செய்துவிட்டான். ஆனால் அவனுக்கும் சிறு கலக்கம் இருந்தது. இந்தப் படைகள் அதியமானையும் அவனோடு சேர்ந்திருக்கும் மற்ற வேளிர்களையும் தோற்கடிக்கப் போதுமானதா என்று யோசித்தான் அவன். தகடூரை சேர மன்னனின் படைகள் சுற்றி வளைத்தன. தகுந்த காலத்தில் சேரர்களோடு போர் செய்யவேண்டும் என்ற நினைப்பிலும் தன்னுடைய நண்பர்களான சோழர்கள் தனக்கு உதவி செய்ய வருவார்கள் என்று கருதியும் கோட்டைக் கதவை அடைத்துக்கொண்டு உள்ளேயே தன்னுடைய படைகளோடு காத்திருந்தான் அதியமான் எழினி. போர்க்காலத்தில் தங்களுடைய கால்நடைகளை எதிரிகள் கவர்ந்து வெட்சிப்போர் செய்யக்கூடும் என்பதால், அவற்றை வேறொரு இடத்தில் பாதுகாப்பாக அதியனின் ஆட்கள் வைத்து அவற்றிற்குக் காவலும் போட்டிருந்தனர். அதைப் பற்றிய செய்தியை ஒற்றர்களின் மூலமாகத் தெரிந்து கொண்ட சேரர் படை வீரர்கள், அவற்றைக் கவர்வதற்குத் திட்டம் போட்டனர். இது போன்ற போர்களுக்குச் செல்வதன் முன்பு போர் வீரர்கள் நல்ல நிமித்தத்திற்குக் காத்துக் கிடப்பதுண்டு. ஆனால் அவர்களில் ஒரு வீரன் ‘நாளும் புள்ளும் கேளா ஊக்கமோடு எங்கோன் ஏயினன் – அரசனே சொன்ன பிறகு நல்ல நாளும் புள் நிமித்தமும் பார்ப்பது தேவையில்லாதது, உடனே ஆநிரைகளைக் கவர்வதற்குப் புறப்படுவோம்’ என்று ஊக்கத்தோடு கூறினான். இதைக் கேட்டு எழுச்சியுடன் கிளம்பிய சேரர் படைப் பிரிவினர், அதியனின் கால் நடைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று திடீர்த் தாக்குதல் ஒன்றைத் தொடுத்தனர். அங்கிருந்த காவல் வீரர்களால் சேரர் படைகளைச் சமாளிக்க இயலவில்லை. ஆநிரைகளைக் கவர்ந்து கொண்டு தங்களுடைய பாசறைக்குத் திரும்பத் தொடங்கினர் சேர வீரர்கள். ஆனால், இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட தகடூரின் படை வீரர்கள் விரைந்து வந்து சேரர்களை வழிமறித்துப் போரிட்டனர். கடுமையாக நடந்த இந்தப் போரில் சேரர் படை வீரர் கொல்லப்பட்டனர். ஆநிரைகளும் மீட்கப்பட்டன. இப்படி முதல் போரில் பின்னடவைச் சந்தித்தாலும், சேரர் படைகள் ஊக்கத்தோடு தகடூர் கோட்டையைத் தாக்கும் முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கின. அதன் முதல் படியாக, கோட்டையின் முன்பிருந்த காவல் காட்டை அழிக்க ஆணையிட்டான் சேரமான் இரும்பொறை. சேரனின் முன்னோடிப் படைகள் அதை அணுகின. அதைக் காக்க அதியனால் நியமிக்கப்பட்டிருக்கும் படையோடு சண்டையிட வேண்டியிருக்கும் என்ற எண்ணத்தோடு வந்த சேரர் படைத்தலைவன், அங்கே வீரர்கள் எவரும் இல்லாததைக் கண்டு திகைத்தான். அதே நேரத்தில் திடீரென்று கோட்டைக் கதவு திறந்தது, மின்னல் வேகத்தில் வந்த தகடூரின் குதிரைப் படை வீரர்கள் சேரர் படையினரின் இடையே ஊடுருவி அவர்களை வெட்டி வீழ்த்தினர். இந்த தீடீர்த் தாக்குதலால் நிலைகுலைந்த சேரர் படை சிதறி ஓடியது. நொச்சிப்பூவை அணிந்து வந்த தகடூர் வீரர்கள் திறமையாகப் போர் செய்து சேரர்களைப் பின்னுக்குத் தள்ளினர். இதைக் கண்டு கொதிப்படைந்த சேரர் தலைவன், தன்னுடைய படைகளைத் தடுத்து நிறுத்தி அணிவகுத்தான். அவனுக்கு ஆலோசனை சொன்ன படை வீரர்களில் ஒருவன் ‘நிலைமை இன்னதென்று ஒற்றர்களை விட்டு அறிந்துவிட்டு நாம் இங்கே போர் செய்ய வந்திருக்க வேண்டும், இந்தத் தாக்குதலைத் தொடர்ந்தால், நம்முடைய முன்னோடிப் படை முழுவதும் அழிந்து போகும், ஆகவே நாம் பின்வாங்கி விடுவோம்’ என்றான். அதற்கு சேரர் தலைவன் சொன்னான். பலர் ஏத்தும் செம்மல் உடைத்தாற்பலர்தொழ வானுறை வாழ்க்கை இயையுமால்அன்னதோர் மேன்மை இழப்பப்பழிவருபசெய்பவோ தாமேயும் போகும் உயிர்க்கு (புறத்திறட்டு 1315) எப்படியும் போகப் போகும் உயிரைக் காத்துக்கொள்ள, பின்வாங்கிச் செல்வது அழியாப் பழியை உண்டாக்கும். அதை விடுத்து, போர் செய்து வீரசொர்க்கம் அடைவது பலரைப் போற்றச் செய்யும் செயல், அதனால் தேவர்களும் தொழும் வாழ்க்கையை அடையலாம். அப்படிப்பட்ட மேன்மையை அடையப் போர் செய்வதே சிறந்தது என்று தன் வீரர்களை ஊக்கப்படுத்தினான். ஆனால் அதற்குள் தகடூரின் குதிரைப் படை கோட்டைக்குள் சென்று மறைந்துவிட்டது. அந்தப் போரும் அத்தோடு முடிவுக்கு வந்தது. தன்னுடைய படைகளுக்குப் பெருத்த சேதம் விளைவித்த அந்தப் போர்க்களத்தைக் காண வந்தான் சேரமான். அவனோடு அரிசில் கிழாரும் பொன்முடியாரும் வந்தனர். அவர்களைக் கவலையுடன் நோக்கினான் இரும்பொறை. அவனுடைய உள்ளத்தை அறிந்து கொண்ட அவர்கள் சொன்னது. கலையெனப்பாய்ந்தமாவும்மலையென மயங்கமர்உழந்தயானையும்இயம்படச் சிலையலைத்துஉய்ந்தவயவரும்என்றிவை பலபுறங்கண்டோர் முன்னாள் ; ….. நாளை நாமே உருமிசை கொண்ட மயிர்க்கண் திருமுரசிரங்கஊர்கொள்குவமே ‘அரசனே, கவலை கொள்ளாதே, மான் போலப் பாய்ந்து வந்த குதிரைப் படைகளும் வில் வீரர்களும் மலை போன்ற யானைகளைக் கொண்ட நம்முடைய படையை நிலைகுலையச் செய்துவிட்டாலும், இது போன்ற பல போர்களைக் கண்டது நம் படை. ஆகவே நாளை நம்முடைய வெற்றி முரசு ஒலிக்கத்தான் போகிறது, இந்த ஊரை வெற்றி கொள்ளத்தான் போகிறோம்’ என்று ஆறுதல் சொன்னார்கள். காவற்காட்டை அழிக்க மேலும் ஒருமுறை முயற்சி செய்தனர் சேர வீரர்கள். இம்முறை கோட்டைக் கதவைத் திறந்து கொண்டுவந்த தகடூரின் காலாட் படையினர், காவற்காட்டைக் காக்க கடுமையாகப் போர் செய்தனர். அவர்களில் ஒரு வீரன், தன்னுடைய வாளால் பலரை வெட்டிப் போட்டு வீரப்போர் செய்தான். சேரர் படை வீரர்களையே ஒரு கட்டத்தில் அதிர்ச்சியடையச் செய்தது அவனுடைய போர் வல்லமை. முடிவில் பல சேர வீரர்கள் அவன் மீது ஆயுதங்களை எய்தனர். அதனால் உடல் முழுவதும் விழுப்புண்கள் ஏற்பட்டு வீழ்ந்தான் அவன். ‘குழிபல வாயினும் சால்பா னாதே முழைபடு முதுமரம் போலெவ் வாயும் அடை நுழைந் தறுத்த விடனுடை விழுப்புண்’ – பொந்துகள் நிறைந்த முதிய மரத்தைப்போல இவன் உடல் முழுவதும் விழுப்புண்களே உள்ளன. அவை அவனுக்குச் சிறப்பையே தருகின்றன என்று வியந்தார் தமிழ்ப் புலவர் ஒருவர். அந்தப் போரில் தகடூர் வீரன் ஒருவன் எறிந்த வேல், சேரர் படைத் தலைவன் ஒருவனைக் கொன்றுவிட்டது. இதை அறிந்த சேர வீரன் ஒருவன், அந்த வேலுக்கு உரியவனைக் கொன்று அந்த வேலை வெற்றிச் சின்னமாகக் கொண்டுவருவேன். இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று சபதம் செய்தான். அதன்படியே வேலுக்குரியவனைக் கொன்று வெற்றியுடன் திரும்பினான் அவன். அன்றைய போர் அத்தோடு முடிவுக்கு வந்தது. இரு தரப்பிலும் சேதம் அதிகமாகி போர் முற்றுவதைக் கண்ட அரிசில் கிழாரும் பொன்முடியாரும் போரைத் தடுக்க இன்னும் ஒரு முயற்சி செய்ய நினைத்தனர். பெருஞ்சேரல் இரும்பொறையிடம் சென்ற அவர்கள் கால வெகுளிப்பொறைய; கேள் நும்பியைச் சாலுந்துணையும்கழறிச் சிறியதோர் கோல்கொண்டுமேற்சேறல்வேண்டா, அதுகண்டாய் நூல்கண்டார் கண்ட நெறி (புறத்திரட்டு 776) காலனைப் போலக் கோபம் கொண்டு எழுகின்ற பொறையனே, என்ன இருந்தாலும் எழினி உன் தம்பி முறையானவன். அவனது அறியாமையைப் போக்குவதே அண்ணன் முறையிலான உன் செயலாகும் எனவே அறிவுடையோரைக் கொண்டு அவனிடம் தக்கது சொல்லச் செய்வதுதான் சரியான வழி, படை கொண்டு போரிடுவது அல்ல என்று கூறினர். அதற்கு ஒப்புக்கொண்ட இரும்பொறை, அவர்களைத் தகடூர்க் கோட்டைக்குள் தக்க பாதுகாப்போடு அனுப்பினான். எழினியிடம் சென்ற அவர்கள் அவனுக்குப் பலவிதமாக அறிவுரை சொன்னார்கள். தகடூர்க் கோட்டையை எந்திரப் பறவைகளாலும் கல்லெறியும் கவண்களாலும் விற்பொறிகளாலும் பலப்படுத்தி வைத்திருந்த போதிலும் அவை வலிமையான சேரப் படைகளினால் அழிக்கப்பட்டுவிடும், கோட்டையும் வீழ்ந்துபடும் என்று அவனுக்கு உரைத்தனர். போரிட்டு மடியும் வீரர்கள் உடல்களாலும் அவர்கள்மீது விழுந்து மடியும் அவர்களுடைய மனைவிமார்களாலும் போர்க்களம் விரைவில் நிரம்பும் என்றார் பொன்முடியார். ‘இரு தலைப் புள்ளின் ஓருயிர் போல – அதாவது இரு தலைகளை உடைய ஒரு பறவை உண்டு, ஆனால் அதற்கு ஒரே ஒரு வயிறுதான். ஒரே ஒரு உயிர்தான். அதைப் போல சேரமானும் நீயும் ஒருகுடிப் பிறந்தவர்கள், இருவரில் யார் தோற்றாலும் அது சேர வம்சத்திற்குத்தான் அவமானம். ஆற்றில் விழுந்த ஒருவன் ஆற்றின் போக்கோடு நீந்திச் சென்று தப்பிக்க முயல்வதே சரியானதாகும். அதை விட்டுவிட்டு நீரோட்டத்தை எதிர்த்து நிற்க முயல்வது அறிவீனம். அதைப் போல நீ இப்போது சேரனுக்கு அடங்கிப் போவது ஒருவகையில் உனக்கு வெற்றிதான்’ என்றெல்லாம் எடுத்துச் சொன்னார்கள். அவர்களின் அறிவுரையை எழினி ஏற்றானா? போர் முடிவுக்கு வந்ததா? (தொடரும்) எஸ். கிருஷ்ணன் மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com https://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-06/
  3. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #5 – தகடூர் (தர்மபுரி) பெரும் போர் பெரும் அரசுகளுக்கு இடையே நடக்கும் போர்களானாலும் சரி, சாதாரண மனிதர்களுக்கு இடையே நடக்கும் சண்டைகளானாலும் சரி; பெரும்பாலான மோதல்களுக்கு இரண்டு காரணங்கள் இருப்பதைக் காணலாம். திடீரென்று ஏற்படும் ஏதாவதொரு நிகழ்வினாலோ உணர்ச்சிப் பெருக்கினாலோ தொடங்கிவிடும் மோதல் முதல் வகை. நீண்ட நாட்களாக ஏதோ ஒரு பகை நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டு இருக்கும். தங்களுக்கு ஆதாயம் வேண்டிச் சிலர் அந்த நெருப்பு அணைந்துவிடாமல் ‘விசிறிக்கொண்டு’ இருப்பார்கள். ஒரு நாள் திடீரென்று அந்த நெருப்பு வெடித்துச் சிதறிக் கிளம்பிவிடும். இது இரண்டாவது வகை. அப்படிப்பட்ட ஒரு போரைத்தான் இங்கே நாம் பார்க்கப்போகிறோம். தமிழ் இலக்கியங்கள் போர்களைப் பல வகைகளாகப் பிரித்திருக்கின்றன. இதைப் பற்றிய ஒரு பாடல் உண்டு. வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம் வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி அது வளைத்தல் ஆகும் உழிஞை – அதிரப் பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர் செரு வென்றது வாகையாம் அதாவது பகை நாட்டிற்குள் சென்று அவர்களது ஆநிரைகளை (கால்நடைகளை) கவர்வது வெட்சித் திணை ஆகும். அப்படி எதிரிகள் கவர்ந்து சென்ற கால்நடைகளை மீட்கச் செய்யும் போர் கரந்தைத் திணை. பகைநாட்டின் மீது படையெடுத்துச் செல்வது வஞ்சித் திணை, அப்படிப் படையெடுத்து வருபவர்களைத் தடுத்துப் போரிடுவது காஞ்சித் திணை. பகைவரது கோட்டைகளை முற்றுகை இடுவது உழிஞைத் திணைப் போர். அந்தக் கோட்டைகளை எதிரிப் படை பிடித்து விடாமல் தற்காத்துப் போரிடுவது நொச்சித் திணை. நேரே எதிர் எதிராக நின்று போரிடுவது தும்பை. அதில் வென்று அவர்களது பெருமையைப் பேசுதல் வாகைத் திணை என்று போர்கள் வகைப்படுத்தப்படுகின்றன. அந்தந்தப் போர்களுக்குரிய பூக்களைச் சூடிக்கொண்டு வீரர்கள் சண்டை செய்வார்களாம். இந்த வகைகளுக்கு உள்ளேயும் பல உட்பிரிவுகள் உண்டு. இப்போதைக்கு நாம் தகடூர்ப் போரைக் கவனிப்போம். சேர வம்சத்தில் இருந்த பல குடிகளில் குட்டுவன் குடியும் பொறையர் குடியும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இவற்றில் பொறையர் வம்சத்தினர் கொங்கு நாட்டில் உள்ள கருவூர் வஞ்சியைத் (கரூர்) தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். அந்த வம்சத்தில் வந்த சிறப்புமிக்க மன்னர்களில் ஒருவன் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்ற அரசன். தன்னுடைய திறமையினால் சேரநாட்டை வலிமை மிகுந்த அரசாக ஆக்கியவன் வாழியாதன். சங்க காலத்தில் நடந்தவைகளாகப் பாடல்களில் குறிப்பிடப்படும் எல்லாமே கட்டுக்கதை என்ற ஒரு எண்ணம் சிலரிடம் இருந்து வருகிறது. அதைப் பொய்ப்பிக்கும் வண்ணம் கிடைத்த ஒரு கல்வெட்டு ஆதாரம் வாழியாதனுடையது. திருச்சிக்கு அருகிலுள்ள புகளூரில் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று உள்ளது. “தா அமண்ணன் யாற்றூர் செங்காய பன் உறைய் கோஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோன் மகன் ளங் கடுங்கோ ளங்கோ ஆகி அறுத்த கல்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டு ஆராய்ச்சியாளரும் தொல்லியல் நிபுணருமான ஐராவதம் மகாதேவன் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் போற்றப்பட்டுள்ள சேர மன்னனான செல்வக்கடுங்கோ வாழியாதன் (கோஆதன் செல்லிரும்பொறை), அவன் மகன் பெருஞ்சேரல் இரும்பொறை (பெருங்கடுங்கோன்) அவனுடைய மகன் இளஞ்சேரல் இரும்பொறை (இளங்கடுங்கோன்) ஆகியவர்களே என்று நிறுவியுள்ளார். அக்காலத்தில் கொங்கு நாட்டில் பல வேளிர் குல மன்னர்களும் குறுநில அரசர்களும் ஆட்சி செய்து வந்தனர். வளர்ந்து வலிமை பெற்று வரும் சேர நாடு தங்களை விரைவில் வெற்றி கொண்டுவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்தது. அப்படிப்பட்ட மன்னர்களில் ஒருவன் தகடூர் (தற்போதைய தர்மபுரியை) நாட்டை ஆட்சி செய்துகொண்டிருந்த அதியமான். தமிழகத்தின் மூவேந்தர்களுக்கு இணையாக அசோகரின் கல்வெட்டு ஒன்றில் பெயர் குறிப்பிடப்பட்ட பெருமை உடையது அதியன் வம்சம். ‘சத்யபுத்திரர்கள்’ என்ற பெயரில் அசோகர் இந்த வம்சத்தின் அரசர்களைத் தன்னுடைய இரண்டாம் பாறைக் கல்வெட்டில் குறித்திருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள ஜம்பை என்ற இடத்தில் உள்ள தமிழ் பிராமிக் கல்வெட்டும் ‘சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி‘ என்று அதியமான் அரசனான நெடுமான் அஞ்சியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இப்படிப்பட்ட பெருமை உடைய அதியமான்கள் சேர அரசர்களின் வலிமையைக் கண்டு மன அமைதி இழந்தனர். இத்தனைக்கும் அதியமான்களும் சேரர் குடிகளில் ஒருவராவார். ஆயினும் நாடாசையால் சேரர்கள் தங்களைத் தாக்கக்கூடும் என்ற நினைப்பில் தகுந்த ஏற்பாடுகளைச் செய்யத்தொடங்கினர் அதியமான்கள். ஆனால், வாழியாதனுக்கு உடனடியாக அதியமானோடு போர் செய்யும் எண்ணம் ஏதும் இல்லை. அதற்கு இன்னோரு காரணமும் இருந்தது. தகடூருக்கும் சேர அரசுக்கும் இடையே இருந்ததும் கொல்லிக்கூற்றம் என்று அழைக்கப்பட்டதுமான கொல்லி மலையை வல்வில் ஓரி என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் அதியனுக்கு நண்பன். சிறந்த வீரன். வில்வித்தையில் சிறந்தவன் என்பதால் அவனுக்கு அந்தப் பெயர் வந்தது. கடையேழு வள்ளல்களில் ஒருவன் இந்த அரசன். அப்படிப்பட்ட அரசனை வென்றுதான் தகடூரை நெருங்க முடியும் என்பதால் சேர அரசர்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை. ஆனால், திருக்கோவிலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மலையமான் அரசனான காரி என்பவனின் எண்ணம் வேறு மாதிரி இருந்தது. மலையமான்களுக்கும் ஓரிக்கும் இடையே பகை உண்டு. அந்தப் பகையைத் தீர்த்துக்கொண்டது போலவும் ஆயிற்று, கொல்லிமலையை வென்று சேரனிடம் கொடுத்தால் ஒரு பேரரசனின் நட்பைப் பெற்ற மாதிரியும் ஆயிற்று என்று கணக்கிட்டான் காரி. கடையேழு வள்ளல்களில் காரியும் ஒருவன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பெரும்படையுடன் கொல்லிக்கூற்றத்தின் மீது தாக்குதல் ஒன்றைத் தொடுத்தான் காரி. இந்தப் போரில் ஓரி கொல்லப்பட்டான். கொல்லிக்கூற்றமும் வீழ்ந்தது. அதை சேரர்களுக்குக் கொடுத்து அவர்களுடைய நட்பைப் பெற்றான் காரி. முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி செல்லா நல் இசை நிறுத்த வல் வில் ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த (அகம் 209) என்று அகநானூறு இதைப் பற்றிக் குறிப்பிடுகிறது. தன்னுடைய நண்பனான ஓரியைக் கொன்ற ஆத்திரம் ஒருபுறமிருக்க அவனுடைய நாட்டை சேரர்களுக்கு அளித்ததால் மலையமானின் மீது அதியமான் பெரும் கோபம் கொண்டான். ஆனால் சேரர்களுடைய ஆதரவு அவனுக்கு இருந்ததால், அவனை வெல்ல தகுந்த சமயத்தை நோக்கிக் காத்திருந்தான். அது விரைவில் அவனுக்குக் கிடைத்தது. அச்சமயத்தில் பாண்டிய நாட்டில் உள்ள சில சிற்றரசர்கள், பாண்டிய மன்னனுக்கு எதிராகக் கலகம் செய்தனர். அவர்களை அடக்க செல்வக்கடுங்கோன் வாழியாதனின் உதவியை நாடினான் பாண்டியன். தன்னுடைய நண்பனுக்கு உதவும் பொருட்டு சேரமன்னன் ஒரு படையுடன் பாண்டிய நாட்டிற்குச் சென்றான். சிக்கப்பள்ளி என்ற இடத்தில் (தற்போது உத்தரகோச மங்கைக்கு அருகில் உள்ளது) நடந்த போரில் பாண்டியர்கள் வென்றாலும் அவர்களுக்கு உதவியாகச் சென்ற வாழியாதன் கொல்லப்பட்டான். இதனால் சேர நாடு அரசனை இழந்தது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அதியமான், தன்னுடைய நண்பர்களான சோழர்களின் உதவியுடன் திருக்கோவிலூரின் மீது படையெடுத்துச் சென்று மலையமான் காரியைக் கொன்றுவிட்டான். திருக்கோவிலூரையும் தன்னுடைய அரசோடு சேர்த்துக்கொண்டான். சேரநாட்டின் புதிய அரசனாக செல்வக்கடுங்கோ வாழியாதனின் மகனான பெருஞ்சேரல் இரும்பொறை பொறுப்பேற்றான். பதவியேற்ற சில நாட்களில் சேரநாட்டைச் செம்மைப்படுத்துவதில் கவனம் செலுத்தினான் இரும்பொறை. அவன் பெரிய வீரன் மட்டுமல்ல, சிறந்த குணங்கள் கொண்டவனாகவும் இருந்தான். அந்நாளில் அரசனின் முரசுக்கு பெரு மதிப்பு உண்டு. பதவியேற்ற பிறகு ஒரு நாளில் முரசுக்கு நீராட்டு விழா ஒன்றை நடத்தினான் இரும்பொறை. அப்போது அவனைக் காண மோசிகீரனார் என்ற புலவர் வந்தார். அவர் வந்த சமயம் அரசன் அரண்மனையில் இல்லை. அவனுடைய முரசை நீராட்டுவதற்கு எடுத்துச் சென்றிருந்தனர். களைப்பால் அயர்ந்திருந்த மோசிகீரனார், அந்த முரசு வைக்கப்பட்டிருந்த கட்டிலில் அயர்ந்து தூங்கிவிட்டார். உண்மையில் அது பெரும் குற்றமாகும். ஆனால், மோசிகீரனார் விழித்துப் பார்த்தபோது அரசனான பெருஞ்சேரல் இரும்பொறை தனக்குக் கவரி வீசிக்கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். என்னைத் தெறுவர இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை அதூஉம் சாலும், நல் தமிழ் முழுது அறிதல்; அதனொடும் அமையாது, அணுக வந்து, நின் மதனுடை முழவுத்தோள் ஓச்சி, தண்ணென வீசியோயே (புறம் 50) என்னை வாளால் இரண்டாக வெட்டிப்போடாமல் இருந்ததே நல்ல தமிழ் அறிந்தவனான உன்னுடைய அருஞ்செயல். அதோடு விடாமல், என் அருகே வந்து உன் வலிமை மிக்க தோள்களால் குளிர்ந்த காற்று வரும்படி எனக்குக் கவரி வீசினாயே! உன்னை எவ்வாறு புகழ்வது என்று வியந்தார் அந்தப் புலவர். இப்படிச் சிறந்த பண்பு உள்ளவனாக இருந்த இரும்பொறையின் ஆட்சியில் ஒரு பிரச்னை எழுந்தது. முசிறிக்கு அருகில் திருக்காமூர் என்ற ஊர் இருந்தது. அந்த ஊரின் தலைவனாக இருந்த கழுவுள் என்பவன், அக்கம் பக்கத்தில் உள்ள இடங்களில் புகுந்து அட்டகாசம் செய்துவந்தான். கால்நடைகளையும், செல்வங்களையும் கொள்ளை அடிப்பது, வயல்களைப் பாழ் செய்வது போன்ற அவன் செய்த அடாத செயல்களைக் கண்ட அப்பகுதியை ஆண்ட வேளிர்கள், காமூரின் மீது தாக்குதல் ஒன்றைத் தொடுத்தனர். முடிவில் காமூர் தீக்கிரை ஆகியது. கழுவுள் தப்பி ஓடிவிட்டான். ஓடியவன் சும்மா இல்லை, ஓரிக்குப் பின்பு தலைவன் இல்லாமல் தவித்த கொல்லிக்கூற்றத்திற்குச் சென்று தானே அப்பகுதியின் அரசன் என்று பிரகடனம் செய்து கொண்டான். சேரர்களுக்கு எதிராக அப்படிப்பட்ட ஒரு ‘தாதா’ இருப்பது நல்லது என்று நினைத்த அதியமானின் நண்பர்களான குறுநில மன்னர்கள் சிலர் அவனுக்கு ஆதரவு கொடுத்தனார். இந்தச் செய்திகளை எல்லாம் அறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை ஆத்திரமடைந்தான். சேரர்களின் நண்பனான மலையமான் அழிந்தது மட்டுமல்லாமல், அவன் கொடுத்த இடமான கொல்லிக்கூற்றமும் இப்படி மாற்றான் கைக்குச் சென்றதை அவனால் சகித்துக்கொள்ள இயலவில்லை. படை ஒன்றை திரட்டிக்கொண்டு கொல்லிக்கூற்றத்திற்குச் சென்றான் இரும்பொறை. சேரர்களின் பெரும்படை வருவதை அறிந்த கழுவுள்ளின் நண்பர்களான மன்னர்கள் ‘அற்ற குளத்து அறுநீர்ப்பறவைகள்’ போல அவனைக் கைவிட்டு ஓடிவிட்டனர். சளைக்காத கழுவுள் சேரமானோடு போரிட்டான். ஆனால் சேரனை வெல்வது முடியாத விஷயம் என்பதை விரைவில் அறிந்து கொண்ட அவன், போர்க்களத்திலிருந்து தப்பி ஓடி சேரமன்னனின் பாசறைக்குச் சென்றான். பெருஞ்சேரல் இரும்பொறையின் காலில் விழுந்து அவனுடைய நட்பைக் கோரினான். அருள்சுரக்கும் உள்ளமுடைய இரும்பொறை அவனை மன்னித்து தன்னுடைய நண்பனாக்கிக் கொண்டான். கொல்லிக்கூற்றம் மீண்டும் சேரர்களின் வசம் சென்றது மட்டுமல்லாமல், கழுவுள்ளும் சேரனின் பக்கம் சாய்ந்ததை அதியமான் எழினி அறிந்தான் (இவனை நெடுமான் அஞ்சி என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால் பதிற்றுப்பத்து எழினி என்றே அழைப்பதால் நாமும் அப்படியே கொள்வோம்). சேரர் படை விரைவில் அவனைத் தாக்கும் என்று அவனோடு இருந்த வேளிர்கள் அவனுக்குத் தூபம் போட்டனர். அதனால் சேரனைத் தாக்க படைகளைத் திரட்ட ஆரம்பித்தான் எழினி. இந்தச் செய்தியை இரும்பொறை கேள்விப்பட்டான். போர் செய்யும் எண்ணம் அவனுக்கு இல்லை. இருந்தாலும் வந்த சண்டையை விடுவது வீரனுக்கு அழகல்ல என்ற காரணத்தால் அவனும் படைகளைத் திரட்ட ஆரம்பித்தான். அந்த நேரத்தில் அரிசில் கிழார் என்ற புலவர் பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணவந்தார். ஏதோ வந்தோம், அரசனைப் புகழ்ந்து பாடி பரிசு பெற்றுப்போனோம் என்று இல்லாமல், நாட்டைச் சூழ்ந்துவரும் போர் மேகங்களைக் கவனித்தார் அவர். அழிவு தரும் போரைத் தடுப்பதே நல்லது என்று சேரமானுக்கு அறிவுரை சொன்னார். எழினியும் நல்லவனே ஏதோ ஒரு காரணத்தால்தான் போருக்குத் தயாராகிறான். அவனிடம் நான் தூது சென்று வருகிறேன் என்று கோரிக்கை விடுத்தார் அரிசில் கிழார். போரைத் தவிர்க்க விரும்பிய சேரனும் அதற்கு ஒப்புக்கொண்டான். அரிசில்கிழாரின் தூது பலித்ததா? ஏற்படவிருந்த போரை அவர் தடுத்து நிறுத்தினாரா? (தொடரும்) எஸ். கிருஷ்ணன் மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com https://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-05/
  4. "அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே.. " திரி முழுவதும் வாசித்ததில் பாட சாலை நாட்களில் ஒளிந்து மறைந்து " சரோசாதேவி " புத்தகம் படித்த எபேக்ட் கிடைக்குதப்பா.. 👌
  5. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #4 – நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் - ஆவூர் நலங்கிள்ளி என்று ஒரு சோழ அரசன் இருந்தான். இவனைக் கரிகாலச்சோழனின் மகன் என்று சொல்வதுண்டு. “சேட்சென்னி நலங்கிள்ளி” என்றே இம்மன்னன் அழைக்கப்பட்டான். தேர்களை வேகமாகச் செலுத்துவதில் வல்லவன் என்பதால் ‘தேர்வண்கிள்ளி’ என்றும் இவனுக்குப் பெயர் உண்டு. கரிகாலனைப் போலவே இவனும் காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டான். தமிழில் நல்ல புலமை படைத்த இந்த அரசன், தானே பாடல்கள் இயற்றக்கூடியவனாகவும் இருந்தான். நலங்கிள்ளி நல்லவன்தான். ஆனாலும் ஒரு மாதிரியான ஆள். ஒரு நாள் புலவர் ஒருவர் இவனைப் பாடிப் பரிசு பெறலாம் என்று வந்தார். அக்காலத்தில் அரச பதவி ஒரு முள் கிரீடம், சுமை என்ற கருத்து இருந்தது. அவ்வாறு நினைக்காத மன்னர்கள்கூட வெளியில் அப்படிச் சொல்லிக்கொள்வார்கள். பாண்டியன் நெடுஞ்செழியன் நீதிக்காக உயிர் துறந்தபோது, ‘அரசனாக இருப்பவனுக்கு மழை பெய்யாவிட்டால் பயம், உயிர்கள் தவறு செய்தால் அச்சம், கொடுங்கோலுக்கு அஞ்சி அஞ்சி ஆட்சிசெய்யும் மன்னர் குடியில் பிறந்தது துன்பமே அல்லாது சுகமல்ல’ என்று சேரன் செங்குட்டுவன் கூறியதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. நலங்கிள்ளியின் நினைப்பும் இப்படித்தான் இருக்கும், அதைப் பாடிப் பரிசு பெறலாம் என்று நினைத்த புலவர் அவனை நோக்கி இந்தக் கருத்தைச் சொன்னார். ஆனால் அவர் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டான் நலங்கிள்ளி. மண்டமர்ப் பரிக்கு மதனுடை நோன்றாள் விழுமியோன் பெறுகுவ னாயி னாழ்நீர் அறுகய மருங்கிற் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் (புறம் 75) அதாவது வலிமையும் திறமையும் உடையவர் ஆட்சி செய்தால் அரசபாரம் என்பது வற்றிய குளத்தின் அருகில் கிடைக்கும் உலர்ந்த சுள்ளியைப் போல இலகுவானதாகும் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டான் நலங்கிள்ளி. அதற்குப் பிறகு புலவருக்குப் பரிசு கிடைத்ததா என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட நலங்கிள்ளி பெரும் வீரனாகவும் இருந்தான். போதாக்குறைக்கு வலிமையான நால்வகைப் படைகளுடன் ஒரு பெரும் கடற்படையும் அவனிடம் இருந்தது. ‘கடற்படை அடல் கொண்டி மண்டுற்ற மலிர் நோன் தாள், தண் சோழ நாட்டுப் பொருநன்’ என்கிறது புறநானூறு (புறம் 382). அதாவது கடற்படையின் வலிமையால் பகைவரை வென்று பெருஞ்செல்வத்தைக் கொண்ட அரசனாம் நலங்கிள்ளி. வெண்தலைப்புணரி நின் மான்குளம்பு அலைப்ப, வலமுறைவருதலும் உண்டு என்று அலமந்து நெஞ்சு நடுங்கு அவலம் பாயத், துஞ்சாக்கண்ண, வடபுலத்து அரசே (புறம் 31) எங்கே சேரனையும் பாண்டியனையும் கூட்டிக்கொண்டு தங்களோடு போர் செய்ய நலங்கிள்ளி வந்துவிடுவானோ என்று வடபுலத்து அரசர்கள் பயந்து தூக்கமில்லாமல் தவித்தார்களாம். அவன் ஆட்சி செய்தபோது மற்ற மன்னர்களுடைய அரண்மனைகளில் இருந்த வலம்புரிச்சங்குகள், தூக்கணாங்குருவிக் கூடுகளைப்போலத் தாழ்வாரங்களில் தொங்குமாம். ஏன்? அந்தச் சங்குகள் ஊதப்பட்டால் நலங்கிள்ளி தன் மீது போர் அறைகூவல் விடப்படுகிறது என்று நினைத்து போருக்கு வந்துவிடுவானோ என்ற பயத்தினால் சங்குகள் சத்தமில்லாமல் கிடைக்கின்றனவாம்! இப்படி வெளிப்பகைகளுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த நலங்கிள்ளிக்குப் பிரச்னை உள்நாட்டில் இருந்து வந்தது. அவனுடைய உறவினர்களில் ஒருவனும் ஆவூரைச் சேர்ந்தவனுமான நெடுங்கிள்ளி, சோழர்களின் புராதனத் தலைநகரான உறையூரைத் தாக்கிப் பிடித்துக்கொண்டு தானே சோழ அரசன் என்று பிரகடனம் செய்து கொண்டான். இதனால் ஆத்திரமடைந்த நலங்கிள்ளி அவனை எதிர்க்க ஒரு பெரும்படையைத் தன்னுடைய சகோதரனான மாவளத்தான் தலைமையில் அனுப்பிவிட்டு தானும் போர்க்களத்திற்குப் புறப்பட்டான். கிளம்பியவன் தற்போதைய திரைப்படக் கதாநாயகர்கள் போல ‘பஞ்ச்’ வசனமொன்றையும் ஒரு பாடலின் மூலம் உதிர்த்தான். "மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி ஈயெனஇரக்குவர்ஆயின், சீருடை முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம் இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென் …. தெள்ளிதின் துஞ்சு புலி இடறிய சிதடன் போல உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக் கழைதின் யானைக்கால் அகப்பட்ட வன்றிணி நீள் முளை போலச் சென்று அவன் வருந்தப் பொரேஎன்" (புறம் 73) ‘என் காலில் விழுந்து கேட்டால் புகழுடைய முரசையும், என் நாட்டையும் ஏன் என் உயிரையும் கூடத் தருவேன். ஆனால் என் ஆற்றலை மதிக்காது இகழ்ந்து பேசி தூங்குகின்ற புலியின் மீது இடறி விழும் குருடனைப் போல என் மீது படையெடுத்து வந்தால் யானையின் கீழ் விழுந்து நசுங்கும் இள மூங்கிலைப் போல நசுக்கிவிடுவேன்’ என்றான் நலங்கிள்ளி. அவனுடைய படை வலிமையைச் சொல்லும் சுவையான பாடல் ஒன்று உண்டு. "தலையோர் நுங்கின் தீஞ்சோறு மிசைய இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக் கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர" (புறம் 225) அவனுடைய படை செல்லும் வழியில் ஒரு பனங்காடு இருந்ததாம். படையின் முன்னால் செல்பவர்கள் பனை மரத்து இள நுங்கின் இனிய பகுதியை உண்பார்களாம். இடைப் பகுதியில் செல்பவர்கள் பனம் பழத்தை உண்பார்களாம். படையின் கடைசியில் வருபவர்களுக்கோ பிசிரோடு இருக்கும் சுட்டுத் தின்னக்கூடிய கிழங்குதான் கிடைக்குமாம். அதாவது நலங்கிள்ளியின் படை ஒரு இடத்தைக் கடப்பதற்கு நுங்கு காயாகி பழுத்துக் கிழங்காக மாறும் வரை நெடுங்காலம் ஆகுமாம். கொஞ்சம் உயர்வு நவிற்சியாக இருந்தாலும் அவனுடைய படை வலிமையைச் சட்டென்று எடுத்துரைக்கிறதல்லவா இந்தப் பாடல்! சோழர் படை வருவதை அறிந்த நெடுங்கிள்ளி தன்னுடைய ஊரான ஆவூருக்குச் சென்று அந்தக் கோட்டைக் கதவுகளை அடைத்துக்கொண்டான். நலங்கிள்ளியின் படை கோட்டையை முற்றுகையிட்டது. விடாக் கண்டன் கொடாக் கண்டன் கதையைப் போல நெடுங்கிள்ளியும் வெளியே வருவதாக இல்லை, நலங்கிள்ளியும் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே செல்லவில்லை. உணவுப் பொருட்களும் மற்ற அத்தியாவசியப் பொருட்களும் கிடைக்காமல் ஆவூர் மக்கள் பெரும் துன்பத்தில் ஆழ்ந்தனர். இந்த நேரத்தில் இளந்தத்தன் என்ற புலவன் நலங்கிள்ளியைப் பாடிப் பரிசு பெற வந்தான். போர்க்களமாக இருந்தாலும் அவனுக்குப் பரிசில் கொடுத்து அனுப்பி வைத்தான் நலங்கிள்ளி. இளந்தத்தனுக்கு ஆசை விடவில்லை. நெடுங்கிள்ளியையும் பாடிப் பரிசு பெறலாம் என்று ஆவூர்க் கோட்டைக்குள் புகுந்தான் அவன். எதிரியிடமிருந்து ஒற்றன் எவனோ புலவன் என்ற போர்வையில் வந்திருக்கிறான் என்று நினைத்த நெடுங்கிள்ளியின் வீரர்கள் அவனைப் பிடித்துச் சிறையில் அடைத்தனர். அவனைக் கொன்று விடவும் உத்தரவிட்டான் நெடுங்கிள்ளி. இந்தச் செய்தியை கோவூர்க்கிழார் என்ற புலவர் கேள்விப்பட்டார். அவர் பொருநர் என்ற வகுப்பைச் சேர்ந்தவர். பாசறையிலும் போர்க்களங்களிலும் பாடல்களைப் பாடி வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டுபவர்களுக்கு பொருநர் என்று பெயர். ‘சிறு கோலைக் கொண்டு பறையை அடிக்கும்போது அதன் கண் நடுங்குவது போல நலங்கிள்ளியின் பேரைக் கேட்டாலே பகை அரசர்கள் நடுங்குவார்கள்’ என்று பாடியிருக்கிறார் அவர். சோழர்களின் படையோடு சென்ற கோவூர்க்கிழார், முறைப்படி சிறப்பு அனுமதி பெற்று ஆவூர்க்கோட்டைக்குள் சென்று நெடுங்கிள்ளியைச் சந்தித்தார். ‘நெடுவழி பலவற்றைக் கடந்து தானும் தன் உறவினர்களும் வாழவும் வறுமை தீரவும் பாட வந்த புலவன் இளந்தத்தன். ‘வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீதறிந்தன்றோ இன்றே’– அதாவது பரிசுக்கு வருந்திப் பிழைக்கும் புலவர்கள் பிறருக்குத் தீமை செய்ய மாட்டார்கள்’ என்று அவனிடம் எடுத்துக் கூறி இளந்தத்தனை விடுவிக்கச் செய்தார் அவர். மேலும் நெடுங்கிள்ளியிடம் ஆவூரின் நிலைமையை எடுத்துக்கூறி ‘நலங்கிள்ளியின் யானைகள் ஊர்களைப் பாழாக்குகின்றன. கோட்டையின் உள்ளே குழந்தைகள் பாலின்றி அழுகின்றன. மக்கள் எல்லாம் ‘ஓலம்’ எனக் கூக்குரல் இடுகின்றனர். நீ அறத்தை விரும்பினால், இது உன்னுடையது என்று சொல்லி கோட்டைக் கதவுகளை நலங்கிள்ளிக்குத் திறந்து விடு. போரை விரும்பினால், ஆண்மையோடு கதவைத் திறந்து அவனோடு போர் செய். இரண்டையும் செய்யாமல் இப்படி கோட்டைக்குள் ஒளிந்து கொண்டிருப்பது வெட்கக்கேடான செயல்’ என்று இடித்துரைத்தார். (புறம் 44). இதைக் கேட்ட நெடுங்கிள்ளி வீராவேசமுடன் வெளியில் வந்து நலங்கிள்ளியுடன் சண்டையிட்டான். ஆனால் வலிமை மிகுந்த நலங்கிள்ளியின் படை முன்னால் அதிக நேரம் அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தோற்று ஓடி உறையூர் கோட்டைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். ஆனாலும் நலங்கிள்ளி விடாமல் சென்று உறையூரையும் முற்றுகையிட்டான். இப்படித் தொடர்ந்து சோழ நாடு போர்களால் சிக்கித் தவிப்பதைக் கண்ட கோவூர்க்கிழார் இம்முறை நலங்கிள்ளிக்கு அறிவுரை சொன்னார். இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன்; கருஞ் சினை வேம்பின் தெரியலோன் அல்லன்! நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; (புறம் 45) உன்னை எதிர்ப்பவன் பனம்பூ மாலை சூடிய சேரனும் அல்லன், வேப்ப மாலை அணிந்த பாண்டியனும் அல்லன். உன் கண்ணியும் உன்னோடு போர் செய்பவனின் கண்ணியும் சோழருக்கு உரிய ஆத்திப்பூதானே. இருவரில் யார் தோற்றாலும் தோற்பது சோழர் குடி அல்லவா. எனவே இந்தப் போரைத் தவிர்த்துவிடு என்று வேண்டினார் அவர். இதைக் கேட்ட நலங்கிள்ளியின் உள்ளம் இரங்கியது. நெடுங்கிள்ளியோடு சமாதானம் செய்துகொண்டு காவிரிப்பூம்பட்டினம் திரும்பினான் அவன். ஆனாலும் நெடுங்கிள்ளி நீண்ட நாட்கள் சும்மா இருக்கவில்லை. மீண்டும் ஒருமுறை படை திரட்டிக்கொண்டு நலங்கிள்ளியோடு போருக்குப் புறப்பட்டான். காரியாறு என்ற இடத்தில் இந்தப் போர் நடந்தது. இந்த ஊர் வட தமிழகத்தில் திருவள்ளூருக்கும் காளஹஸ்திக்கும் இடையில் உள்ளது என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் சோழ நாட்டு அரசர்கள் இருவர் அவ்வளவு தூரம் சென்று போர் புரிவதற்கான காரணம் எதுவும் இல்லை. ஆகவே இந்த ஊர் சோழநாட்டிலேயேதான் இருந்திருக்கவேண்டும். காரியாற்றுப் போர் மிகக் கடுமையாக நடந்தது. தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த நெடுங்கிள்ளியை முறியடிக்கவேண்டும் என்ற வேகத்தில் நலங்கிள்ளியும் அவன் படைகளும் போரிட்டன. முடிவில் நெடுங்கிள்ளி கொல்லப்பட்டு வீழ்ந்தான். அதன் காரணமாக ‘காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி’ என்ற பெயரைப் பெற்றான். நலங்கிள்ளி சோழ நாட்டின் ஒற்றைத் தலைமைப் பொறுப்பை ஏற்றான். ஆனாலும் தொடர்ந்து நடைபெற்ற இந்த உள்நாட்டுச் சண்டையால் சோழநாடு நிலைகுலைந்தது. அதன்பிறகு முது கண்ணன் சாத்தனார் போன்ற புலவர்கள் நலங்கிள்ளிக்கு அறத்தை எடுத்துக் கூறி சோழ நாட்டில் நல்லாட்சி நிலவுமாறு செய்தனர். (தொடரும்) எஸ். கிருஷ்ணன் மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com https://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-04/
  6. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #3 – வெண்ணிப் போர் தஞ்சையிலிருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் கோயில் வெண்ணி என்ற சிற்றூர் இருக்கிறது. அழகியநாயகி அம்மன் உடனுறை வெண்ணிநாதர் / வெண்ணிகரும்பேஸ்வரர் கோவில் என்ற பாடல்பெற்ற தலத்தைக் கொண்ட ஊர் இது. அந்தக் கோவிலின் தலவிருட்சமாகவும் வெண்ணிப் பூ (நந்தியாவட்டை) உள்ளது. இந்த ஊரில்தான் சரித்திரப் புகழ் பெற்ற வெண்ணிப்போர் நடந்தது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தும் இன்றும் அவ்வூரின் அருகில் நாம் காணக்கூடிய பெரும் வெளி அது உண்மைதான் என்பதைப்பறைசாற்றுகிறது. “கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த வயல் வெள் ஆம்பல்” என்ற நற்றிணையின் 390வது பாடல் இந்த இடம் சோழநாட்டில் வயல்கள் சூழ இருந்த இடம் என்பதை உறுதி செய்கிறது. வெண்ணி என்ற பெயருடைய வேறு ஊர் ஏதும் சோழ தேசத்தில் இல்லையாதலால் கோயில்வெண்ணியே போர் நடந்த இடம் என்று நாமும் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. வெண்ணிப்போர் கரிகால் சோழனுக்கும் அவனை எதிர்த்து வந்த பதினோரு வேளிர்கள், முடியுடை மன்னர்கள் இருவர் ஆகியோர் கொண்ட கூட்டணிப் படைக்கும் இடையில் நடந்தது. முன்பு நாம் பார்த்த தலையாலங்கானப் போர் வெளிப் பகைவர்களால் ஏற்பட்டது. வெண்ணிப்போருக்கான காரணம் உட்பகை. அதிலும் தாயத்தார் பங்குகொண்ட போர் இது என்பதால் பாரதப்போரை ஒத்திருந்தது என்று சொல்லலாம். அரசுரிமைக்காகத் தமிழகத்தில் நடந்த முதற் போராகவே இதை நாம் கருதவேண்டியிருக்கிறது. கரிகாலச்சோழனின் இயற்பெயர் திருமாவளவன் என்று நமக்குத் தெரியும். சோழ மன்னர்களில் பல இளஞ்சேட்சென்னிகள் உண்டு. அதில் ஒருவனான உருவப் பல் தேர் இளஞ்சேட்சென்னிக்கும் அழுந்தூர் வேளிர் குலத்தில் பிறந்த அரசிக்கும் பிறந்தவன் திருமாவளவன். அவன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே இளஞ்சேட்சென்னி இறந்துபட்டான். இந்தச் செய்தியை முடத்தாமக்கண்ணியார் என்ற புலவர் சங்க இலக்கியங்களின் ஒன்றான பத்துப்பாட்டில் உள்ள பொருநர் ஆற்றுப்படையில் குறிப்பிடுகிறார். உருவப் பல் தேர் இளையோன் சிறுவன் முருகற்சீற்றத்து உரு கெழுகுருசில், தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி உருவப் பல்தேர் சென்னியின் மகனான திருமாவளவன் தாயின் வயிற்றிலிருந்தபோதே தாயம் (அரசுரிமை) எய்தினான் என்கிறார் அவர். இளஞ்சேட்சென்னி இறந்துவிட்டதால் நாடு அரசன் இல்லாமல் தவித்தது. நாட்டில் நிலவிய இந்தக் குழப்ப நிலையில் நல்வாய்ப்பாகக் கருதிய அவனுடைய உறவினர்கள், இருங்கோவேள் என்ற வேளிர் அரசனின் தலைமையில் அரசைக் கைப்பற்றச் சதி செய்தனர். அதன் ஒரு பகுதியாக திருமாவளவன் சிறுவனாக இருக்கும் போதுஅவனைத் தீ வைத்துக் கொல்லச் சதியொன்று நடந்திருக்கவேண்டும். அதிலிருந்து வளவன் தப்பிய போதிலும் அவனுடைய கால் தீயினால் கருகியது. இதனாலேயே அவன் கரிகாலன் என்று அழைக்கப்பட்டான். இந்தச் செய்தியை பொருநர் ஆற்றுப்படையிலும் பட்டினப்பாலையிலும் உள்ள தனிப்பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. முச்சக்கரமும்அளப்பதற்கு நீட்டிய கால் இச்சக்கரமேஅளந்ததால்-செய்ச் செய் அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய் புனல் நீர்நாடன் கரிகாலன் கால் நெருப்பு உற்று திருமால் மூன்று உலகங்களையும் காலால் அளந்ததுபோல தன்னுடைய கருகிய காலைக்கொண்டு மூன்று நாடுகளையும் கரிகாலன் வென்றான் என்பது பொருள். பழமொழி நானூறின் பாடல் ஒன்று பின்வருமாறு குறிப்பிடுகிறது. சுடப்பட்டுயிருய்ந்த சோழன் மகனும் பிடர்த்தலைப்பேரானைப்பெற்றுக் – கடைக்கால் செயிரறு செங்கோல் செலீஇயினான் இல்லை உயிருடையார்எய்தா வினை கரிகாலன் என்ற பெயர் அவன் கால் எரிந்ததால் வந்தது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. அகநானூறிலும் புறநானூறிலும் உள்ள பல பாடல்கள் இந்த அரசனை கரிகால் என்றே குறிப்பிடுகின்றன. இப்படிச் சிறுவயதிலேயே தன் உறவினர்களால் துன்புறுத்தப்பட்ட கரிகாலன் அவர்களிடம் சிறைப்பட்டு இளமையில் சில ஆண்டுகளைச் சிறையில் கழிக்க வேண்டியிருந்தது. ஆனால் தன் திறமையினால் அந்தச் சிறையிலிருந்து மீளும் வழிகளைச் சிந்தித்து தக்கார் துணையையும் பெற்று சிறையிலிருந்து தப்பி விடுதலை பெற்றான். ‘கூரிய நகத்தையும் வளைந்த வரிகளையும் கொண்ட புலிக்குட்டி ஒன்று கூட்டில் பிடிபட்டு, உரன் பெற்று வளர்ந்தது. குழியில் பிடிபட்ட யானை தன்னுடைய தந்தத்தினால் குழியின் கரைகளை குத்தி, குழியைத் தூர்த்து அதைக் கொண்டு மேலேறி தப்பித்தது போல கரிகாலன் சிறையிலிருந்து தப்பினான்’ என்று இந்நிகழ்வை வர்ணிக்கிறது பட்டினப்பாலை. இப்படிச் சிறையிலிருந்து தப்பிய கரிகாலனுக்கு அவனுடைய மாமனான இரும்பிடர்த்தலையாரின் உதவி கிடைத்தது. அவருடைய உதவியைக் கொண்டு ‘உரு கெழு தாயம் ஊழின் எய்தி’ சோழநாட்டின் அரசுரிமையைப் பெற்றான் திருமாவளவன். ஆனாலும் வேளிர்கள் பதினோரு பேரும் பாண்டியனுடனும் சேரனுடனும் சேர்ந்து அவன் மேல் போர் தொடுத்தனர். இதுதான் கோவில்வெண்ணி என்னும் வெண்ணிப்பறந்தலையில் நடந்த போர் ஆகும். பறந்தலை என்பதற்கு பொட்டல் வெளி, போர்க்களம் என்று பொருள். இதில் ஈடுபட்ட பாண்டியனின் பெயர் தெரியவில்லை. ஆனால் சேர மன்னனின் பெயர் பெருஞ்சேரலாதன் என்று தெரிகிறது. வேளிர்களுக்கு இருங்கோவேள் தலைமை தாங்கினான். கரிகாலனின் படையை ஒப்பிடும்போது பகைவர் படை மிகப் பெரியது. தலையாலங்கானப் போரில் எரிபரந்தெடுந்தல் என்ற போர் முறையைப் பின்பற்றி சோழ நாட்டில் புகுந்து பகைவர் படையைப் பாண்டியர்கள் தோற்கடித்தனர் என்று பார்த்தோம். அதற்கு நேர் மாறாக, தன்னுடைய படையை விட அதிகமான எண்ணிக்கையில் இருந்த எதிரிகளின் படையை வலுவான உறையூர் போன்ற அரணிலிருந்து வெண்ணியைப் போன்ற பொட்டல்வெளிக்கு இழுக்க கரிகாலன் கையாண்ட வியூகத்தைப் பற்றி பட்டினப்பலையை எழுதிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் இவ்வாறு கூறுகிறார். தலைதவச் சென்று தண்பணைஎடுப்பி வெண்பூக்கரும்பொடு செந்நெல் நீடி மா இதழ்க்குவளையொடுநெய்தலும் மயங்கி, கராஅம்கலித்த கண் அகன் பொய்கை, கொழுங் கால் புதவமொடுசெருந்திநீடி, செறுவும்வாவியும், மயங்கி, நீர் அற்று, காவிரியும் அதன் துணை நதிகளும் வளப்படுத்தியதால் வயல்களும் நீர் நிலைகளும் நிறைந்த மருதநிலப்பகுதியாக சோழ நாடு விளங்கியது. இந்த மருதநிலப் பகுதியில் இருந்த பூக்களும் கரும்புகளும் நெல்லும் குவளையும் நெய்தலும் நிறைந்த வயல்களின் மீது யானைகளை ஓட்டி அவற்றை அழித்ததாம் கரிகாலனின் படை. தவிர, ஏரி, குளம் போன்ற அங்குள்ள நீர் நிலைகளின் கரைகளும் உடைக்கப்பட்டன. இப்படி நிலமெங்கும் அழிக்கப்பட்டு வெள்ளக்காடானதால் மருதநிலத்தின் குடிகள் அவர்களின் இருப்பிடத்திலிருந்து எதிரிகளின் அரண்களை நோக்கி ஓட்டப்பட்டனர். இப்படி வெளியேறிய மக்கள் கூட்டம் பகைவர் படைகளில் குழப்பத்தை ஏற்படுத்தின. இதன் காரணமாக வேளிர் கூட்டணிப் படை அரண்களிலிருந்து வெளியேறி கரிகாலனின் படையை வெண்ணியின் வெளியில் சந்திக்க நேர்ந்தது. இது ஒரு அபாயகரமான வியூகம்தான் என்றாலும், பெரும் வீரனும் திறமைசாலியுமான கரிகாலன் தலைமையில் சோழர் படை எதிரிகளை வேட்டையாடியது. புகழ்பெற்ற இந்தப் போரைப் பற்றி பல புலவர்கள் பாடியிருக்கின்றனர். பொருநர் ஆற்றுப்படையில் முடத்தாமக்கண்ணியார் ‘ஆத்தி மாலையைச் சூடிய கரிகாலன் தன்னுடைய இளைய பருவத்தில், ஒரு யாளி யானையை வேட்டையாடிக் கொன்றது போல பனம் பூவையும் வேம்பையும் தன் தலையில் அணிந்த இரு வேந்தர்களையும் வெண்ணிப் போரில் வென்றான்’ என்கிறார். “இரு பெருவேந்தரும் ஒரு களத்து அவிய, வெண்ணித் தாக்கிய வெருவருநோன் தாள், கண் ஆர் கண்ணி, கரிகால்வளவன்” – பொருநர்ஆற்றுப்படை (146-148) பட்டினப்பாலையை இயற்றிய உருத்திரங்கண்ணனாரின் பாடல் கீழே. “குடவர் கூம்ப, தென்னவன் திறல்கெடசீறி.. மாத்தானைமறமொய்ம்பின் செங்கண்ணால்செயிர்த்து நோக்கி புன்பொதுவர் வழி பொன்ற இருங்கோவேள்மருங்கு சாய” ‘பகைவருடைய அரண்களை எல்லாம் தகர்த்து, குடதிசை மன்னனான சேரன் ஊக்கம் அழிய தென்னவனான பாண்டியன் திறன் அழிய, மாற்றாரின் பெரும் படையின் வலிமையைத் தன்னுடைய சிவந்த கண்ணாலே அழித்து சிறிய செய்கைகளைச் செய்த அரசர்களை (வேளிர்களை) தோற்கடித்து ‘இருங்கோவேள்மருங்கு சாய’ – இருங்கோவேள் மண்ணில் சாயுமாறு போர் செய்தான் கரிகாலன் என்கிறார். சங்க காலப் புலவர்களில் ஒருவரான பரணரோ பெரும் வலிமை பெற்ற கரிகாலனை வேளிர் அரசர்கள் பதினோரு பேர் வெண்ணியில் தாக்கினர். ஆனால் கரிகாலனை எதிர்த்துப் போரிட முடியாமல் தம்முடைய போர் முரசுகளைப் போர்க்களத்திலேயே போட்டுவிட்டு ஓடினர் (அகம் 246) என்று புகழ்கிறார். இந்தப் போரில் கரிகாலனும் சேர மன்னனான பெருஞ்சேரலாதனும் நேருக்கு நேர் சண்டையிட்டனர். கரிகாலன் எறிந்த வேல் சேரனுடைய மார்பில் ஊடுருவி அவன் முதுகிலும் புண்ணை ஏற்படுத்தியது. “இருசுடர்தம்முள் நோக்கி ஒருசுடர் புன்கண் மாலை மலைமறைந்தாங்குத் தன்போல் வேந்தன் முன்புகுறித்துஎறிந்த புறப்புண் நாணி மறத்தகை மன்னன் வாள்வடக்குஇருந்தனன்” முழுமதி தோன்றும் நாளில் சில மணித்துளிகளுக்கு சூரியனும் சந்திரனும் எதிர் எதிர் தோன்றும். ஆனால் அவற்றில் ஒரு சுடர் விரைவில் மறைந்துவிடும். அதுபோல தன்னைப் போன்ற ஒரு வேந்தன் எறிந்த வேலால் ஏற்பட்ட புறப்புண்ணுக்காக வெட்கமடைந்த சேரலாதன் போர்க்களத்திலேயே வடக்கு இருந்து உயிர்விட்டான் என்று கழாத்தலையார் என்ற புலவர் பாடியிருக்கிறார் (புறம் 65). அரசனை இழந்த சேர நாடு பொலிவிழந்தது என்றும் வருந்துகிறார் அவர். கோவில் வெண்ணியைச் சேர்ந்த வெண்ணிக் குயத்தியார் என்ற புலவரும் இந்தப் போரைப் பற்றியும் சேரமான் வடக்கிருந்து உயிர் துறந்ததைப் பற்றியும் பாடியிருக்கிறார். ‘கரிகால்வளவ, நீ நல்லவன் தான் ஆனால் வெண்ணிப்பறந்தலையில் நடந்த போரில் புறமுதுகில் புண் பட்டதால் வெட்கமடைந்து உயிர் துறந்த சேரன் உன்னிலும் நல்லவன் அல்லவா’ என்கிறார் அவர் . கடற் போர் பல செய்த சோழ மரபில் வந்தவனே என்று அப் பெண்பாற் புலவர் அரசனை விளித்துப் பாடுகிறார். “நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி வளி தொழில் ஆண்ட உரவோன் மருக! களி இயல் யானைக் கரிகால் வளவ! சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே, கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப் புகழ் உலக மெய்திப் புறப் புண் நாணி வடக்கு இருந்தோனே” (புறம்-66) கரிகாலன் வெற்றியால் புகழ் பெற்றானாம்! சேரலாதன் வடக்கிருந்து புகழ் பெற்றானாம். ‘ஒருவனது வீரத்தின் புகழ் அடுத்தவனது, வீரத்தின் மானத்தின் புகழ்! எது நல்லது, பின்னது அல்லவா?’ என்று கேட்கும் புலவரின் கேள்வி நயம் வெண்ணிப் போரின் வீரர் வீர நயங்களைவிடச் சிறந்ததாகவே காணப்படுகிறது. சேரன் வீரம், மானம் நாடி மாளத் துணிந்த பெருமித நிலை ஆகிய செய்திகள் தமிழகமெங்கும் பரவின. அப்பெருஞ் சேரனைக் காணும் ஆர்வம் தமிழகம் எங்கும் எழுந்தது. சான்றோர்கள் பலர் தீர்த்த யாத்திரைக்குப் புறப்படும் இக்காலப் பக்தர்களைப் போலப் போர்க் களத்துக்கு விரைந்தனர். மன்னனுடன் வடக்கிருந்து மாளும் மாள்வே புகழ் மாள்வு என்று அவர்கள் துணிந்தனர். “கரிகால் வளவ னொடு வெண்ணிப் பரந்தலைப் பொருது புண் நாணிய சேரலாதன் அழிகள மருங்கின் வாள் வடக்கிருந்தென இன்னா இன்னுரை கேட்ட சான்றோர் அரும் பெறலுலகத் தவனோடு செலீஇயர் பெரும் பிறிதாகி யாங்கு” (அகம்-55) மாமூலனார் என்ற புலவரும் இந்தச் செய்தியை உறுதி செய்கிறார். கரிகால்வளவனோடு வெண்ணிப்பறந்தலையில் போர் செய்து, முதுகில் புண்பட்டதால் நாணமடைந்த சேரலாதன் வடக்கிருந்தான் என்று குறிப்பிடுகிறார் அவர். இப்படிப் பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட வெண்ணிப் போரில் தென்னவன் பாண்டியனைத் தோற்று ஓடச்செய்து, இருங்கோவேளைச் சாய்த்து, சேர மன்னன் உயிர் விட்ட பிறகும் ஒன்பது வேளிர்களின் படை கரிகாலனை மீண்டும் எதிர்த்திருக்கிறது. அவர்களை வாகைப்பறந்தலை என்ற இடத்தில் தோற்கடித்தான் கரிகாலன். #2 வாகைப் பெருந்தலை முதலாவது கரிகாலன் ஆற்றிய மற்றொரு பெரும் போர் வாகைப் பரந்தலைப் போராகும். விரிஉளைப்பொலிந்த பரியுடை நன்மான் வெருவரு தானையொடு வேண்டுபுலத் திறுத்த பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார் சூடாவாகைப் பறந்தலை ஆடுபெற ஒன்பது குடையும் நண்பக லொழித்(திப்) பீடில் மன்னர் போல ஓடுவை மன்னால்! (அகம்-125) என்ற பாடலில் பரணர் இப்போரை விரித்துரைத்துள்ளார். ‘வாகை’ ஒரு இடத்தின் பெயர் என்பதைக் கவிஞர் தமிழ்ப் புலவர் மரபுப் படியே ‘சூடாவாகை’ என்று அடைகொடுத்து தெரிவிக்கின்றார். கவிஞர் அப்படிக் கூறவில்லையானால் வாகை ஒரு போர்க்களம் என்பதை உணராமல் ‘வெற்றிக்குரிய பூ’வாகக் கொண்டு நாம் மயங்க இடமேற்பட்டிருக்கும். கரிகாலன் அப்போரில் ஒன்பது மன்னர்களை எதிர்த்துச் சமரிட்டான். அவர்கள் கரி, பரி, தேர், காலாட்படைகளை மிகுதியாகவே உடையவராய் இருந்தனர். ஆனால் அவர்களால் கரிகாலன் முன் நிற்க முடியவில்லை. கரிகாலன் அரும்பெரும் வெற்றி பெற்றான். ஒன்பது மன்னரும் தம் கொற்றக் குடைகளையும் புகழக் கொடிகளையும் களத்திலே எறிந்துவிட்டு ஓடினர். இவ்வாறு உட்பகைகளை அழித்து தன்னுடைய அரசுரிமையை உறுதி செய்து கொண்ட பிறகு, போரினால் அழிந்த நாட்டின் நீர்வளத்தைச் சீர் செய்தான் கரிகாலன். ‘குளம்தொட்டுவளம்பெருக்கி’, காவிரியின் இரு கரைகளையும் செம்மைப்படுத்தி சோழநாட்டின் நீர் மேலாண்மையைச் செம்மைப்படுத்தியதை ‘தெள்ளருவிச் சென்னிப் புலியே மிருத்திக் கிரி கிரித்துப் பொன்னிக் கரைகண்ட பூபதியும்’ என்று பின்னாளில் புகழ்கிறார் ஒட்டக்கூத்தர். போர் செய்து எதிரிகளை வெல்வது மட்டும் முக்கியமல்ல, அதனால் உண்டாகும் அழிவுகளையும் உடனுக்குடன் சீர் செய்து நல்லாட்சி தருவது இன்றியமையாதது என்று செயலில் காட்டிய அரசன் கரிகால்வளவன். (தொடரும்) எஸ். கிருஷ்ணன் மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com https://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-03/
  7. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #2 – அரபிக் கடலோரம் - கடம்ப தீவுகள் (கடம்ப வீரர்கள், பழங்கோவா அருங்காட்சியகம்) தமிழர்களின் கடற்படை என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருவது சோழர்கள்தான். அதிலும் ராஜராஜனும் ராஜேந்திரனும் கடல் கடந்து பெற்ற வெற்றிகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. இதனால் சோழர்களிடம் மட்டுமே கடற்படை இருந்தது என்ற பிம்பம் உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால் சங்க காலத்திலிருந்தே பாண்டியர்களிடமும் சேரர்களிடமும் வலுவான கடற்படை இருந்தது என்றும் அதைக் கொண்டு அவர்கள் வெற்றிகள் பல பெற்றார்கள் என்பதையும் பல குறிப்புகள் மூலம் அறியமுடிகிறது. அப்படிப்பட்ட கடற்போர் ஒன்றை இங்கே பார்க்கலாம். சங்க காலத்து சேர அரசு வடக்கே ஹோனவார் என்று தற்போது அழைக்கப்படும் வானவாற்றிலிருந்து தெற்கே குமரி வரை பரந்திருந்தது. இப்படி நீண்ட கடற்கரையைக் கொண்டிருந்ததால் கடல் மூலம் நிகழ்ந்த வணிகச் செழிப்புமிக்க நாடாக ஒருபுறம் இருந்தாலும் கடல் புறத்திலிருந்து அடிக்கடி வரும் தொல்லைகளை முறியடிக்க வேண்டிய கட்டாயத்திலும் சேர நாடு இருந்தது. அக்காலச் சேர மன்னர்களில் சிறப்பாக ஆட்சி செய்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இமயமலைக்குச் சென்று சேரர்களின் வில் சின்னத்தை அங்கே பொறித்ததால் அவனுக்கு இமயவரம்பன் என்ற பெயர் வந்ததாகச் சொல்வதுண்டு. அவன் மாந்தை என்று அழைக்கப்பட்ட இடத்திலிருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தான். இது இப்போது கேரளாவில் கண்ணனூருக்கு அருகே இருக்கிறது. பழையங்காடிப் புகைவண்டி நிலையம் இதன் ஒரு பகுதி என்று ஆய்வாளர் ஔவை துரைசாமி குறிப்பிடுகிறார். ‘துறை கெழுமாந்தை‘, ‘கடல் கெழுமாந்தை‘ என்றெல்லாம் இந்நகரம் புகழப்பட்டிருக்கிறது. ஏகிடித் தீவு, கூவகத்தீவு என்று அப்போது அழைக்கப்பட்ட கோவாவிலிருந்து தொடங்கி அரபிக்கடலில் கொங்கணக் கரையோரம் உள்ள பல தீவுகளில் கடம்பர் என்ற இனத்தினர் வசித்து வந்தனர். அவர்களுடைய தலைமையிடமாக கடம்பத் தீவு இருந்தது (Kadmat Island). அந்தத் தீவில் கடம்ப மரம் ஒன்றை காவல் மரமாக வைத்து வழிபட்டு வந்தனர் கடம்பர்கள். கோவா அரசின் பொது போக்குவரத்து துறையின் பெயர் "கடம்பா" என்பது குறிப்பிட தக்கது. பலவகை குடிகள் இவர்களில் உண்டு. கடலோடும் இனத்தினரான இவர்களுக்கு மீன் பிடிப்பது தொழிலாக இருந்தது. இருந்தாலும் அவர்களில் சிலர் கொள்ளையடிப்பதையும் தொழிலாகக் கொண்டிருந்தனர். அரபிக் கடலில் வரும் வணிகக் கப்பல்களைக் கொள்ளையடித்தும், அவ்வப்போது சேர நாட்டுக் கடற்கரையில் திடீர்த் தாக்குதல்கள் நடத்தி ஊர்களைச் சூறையாடியும் அட்டகாசம் செய்து வந்தனர் இந்தக் கூட்டத்தினர். இதனால் பாதிக்கப்பட்ட சேரநாட்டின் மக்கள், அரசனான நெடுஞ்சேரலாதனிடம் முறையிட்டனர். கடம்பர்களை ஒடுக்க நினைத்த சேரலாதன் ஒரு பெரும் கடற்படையோடு கிளம்பினான். கடம்பர்களும் கடற்போர்களில் சளைத்தவர்கள் அல்லர். அவர்களிடமும் வலுவான கடற்படை இருந்தது. வாட்போரிலும் அவர்கள் வல்லவர்களாக இருந்தனராம். எதிர்த்து நின்றவர்களை எல்லாம் வாள் சண்டையில் வென்று அவர்களுடைய நாட்டைக் கவர்ந்து கொள்ளும் திறன் கடம்பர்களிடம் இருந்தது என்கிறது பதிற்றுப்பத்து என்ற சங்க இலக்கியம். பழங்கோவாவில் உள்ள அவர்களுடைய நடுகற்களில் கடம்பர்களின் கப்பல்களும், படை வீரர்களும் செதுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். ஆயிரம் கலங்களைக்கூட விரைவில் திரட்ட வல்லவர்கள் கடம்பர்கள் என்று அவர்களுடைய கடற்படைத் திறனைப் பற்றிச் சொல்வதுண்டு. தம்மை எதிர்த்து வந்த சேரர்களோடு கடலில் மோதினர் கடம்பர்கள். சேரர் கடற்படையும் கடம்பர் படையும் கடுமையாகச் சண்டையிட்டன. கடம்பர் கலங்களைத் தீக்கிரையாக்கிவிட்டு சேரர் படை கடம்பத்தீவில் புகுந்தது. நெடுஞ்சேரலாதனே நேரடியாகக் களத்தில் இறங்கினான். அந்தக் காட்சியை குமட்டூர்க் கண்ணனார் என்ற புலவர் இப்படி வர்ணனை செய்கிறார். நளியிரும்பரம்பின்மாக்கடன்முன்னி அணங்குடைஅவுணர் ஏமம் புணர்க்கும் சூருடைமுழுமுதல்தடிந்தபேரிசைக் கடுஞ்சினவிறல்வேள்களிறூர்ந்தாங்குச் செவ்வாய் எஃகம்விலங்குநர்அறுப்ப … முரண்மிகுசிறப்பின் உயர்ந்த ஒக்கலை பலர்மொசிந்தோம்பியதிரளபூங்கடம்பின் கடியுடைமுழுமுதல்துமியவேஎய் வென்றெறிமுழங்குபணை செய்த வெல்போர் (பதிற்றுப் பத்து 2-1) ‘பெரும் பரப்பைக் கொண்ட கடலின் நடுவே சென்று சூரபத்மன் மாமரத்தின் உருவைக் கொண்டான். அந்த மாமரமான சூரனை முற்றிலும் அழிந்து போகுமாறு வெட்டி வீழ்த்தி, தனக்குரிய பிணிமுகம் என்ற யானையின் மீது வெற்றிச்செருக்கோடு ஊர்ந்து சென்ற முருகப் பெருமானைப் போல நீ பகைவரை வென்று யானை மீது வெற்றி உலாச் சென்றாய். உன்னுடைய வாள் முனை பகைவரை வெட்டி வீழ்த்தியவாறு முன்னேறியது. அதனால் அந்தக் குருதிக் கறையாலே சிவந்து போனது. கடம்பரை அழித்து அவர்களது காவல் மரமான கடம்பையும் அடியோடு வெட்டி வீழ்த்தி அந்த மரத்தினால் வெற்றி முரசினைச் செய்து கொண்டாய்‘ என்று நெடுஞ்சேரலாதனை கண்ணானார் புகழ்கிறார். வயவர்வீழவாள்அரில்மயக்கி, இடம்கவர்கடும்பின்அரசுதலைபனிப்ப, கடம்புமுதல்தடிந்தகடுஞ்சினவேந்தே (பதிற்றுப்பத்து 2-2) கடம்பர்களின் தலைவன் பயத்தால் நடுங்குமாறு உன்னுடைய வாள் வலிமையால் அவர்களை வீழ்த்தி காவல் மரமான கடம்பினை அடியோடு வெட்டிக் கொண்டு வந்த வேந்தனே என்றும் சேரலாதன் புகழப்படுகிறான். இப்படிக் கடற்போரில் கடம்பை அறுத்து நெடுஞ்சேரலாதன் வெற்றி கொண்ட செய்தியை மாமூலனார் என்ற புலவர் சால் பெருந்தானைச்சேரலாதன் மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய பண் அமை முரசின் (அகநானூறு 347) என்று குறிப்பிடுகிறார். சேரன் கடம்பர்களை கடற்போரில் வீழ்த்திய செயலை இளங்கோவடிகளும் சிலப்பதிகாரத்தில் புகழ்கிறார். “மாநீர்வேலிக்கடம்பெறிந்துஇமயத்து வானவர் மருள மலைவிற்பூட்டிய வானவர் தோன்றல்” (காட்சிக் காதை) இப்படிப் பலரால் பாரட்டப்பட்ட சேரலாதன் தன் தலைநகரில் வெற்றி விழா ஒன்றை நடத்தினான். இந்தப் போரில் தோற்று ஓடிய கடம்பர்கள் கொண்கணக்கரையில் இருந்த மற்ற சில தீவுகளிலும் உள்நாட்டிலும் குடி புகுந்தனர். ஆனால் அவர்கள் சும்மா இருக்கவில்லை. தமிழகத்தோடு வணிகம் செய்த மேலை நாடுகளில் யவனம் (கிரேக்க / ரோம் நாடுகள்) முக்கியமானதாக விளங்கியது. மிளகு போன்ற பொருட்களை இங்கிருந்து வாங்கிச் சென்று பண்டமாற்றாகப் பொன்னைக் கொடுத்துச் சென்றார்கள் யவனர்கள் என்று சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன. யவன நாட்டு மதுவுக்கும் இங்கே அதிக மதிப்பு இருந்ததாகத் தெரிகிறது. அப்படி வணிகக் கப்பல்களில் விலை உயர்ந்த பொருட்களை அவர்கள் கொண்டுவரும்போது காவலுக்காக கடற்படை ஒன்றும் அவர்களோடு வந்தது. அப்படி வந்த யவனர்கள் இங்கேயே தங்கி கோட்டைக் காவலர்களாகவும் மெய்க் காப்பாளார்களாகவும் பணி புரிந்ததெல்லாம் வரலாறு. இந்த யவனர்களோடு கடம்பர்கள் சேர்ந்து கொண்டனர். சேரநாட்டின் மீது படையெடுக்கவும் அவர்களைத் தூண்டினர். உள்ளூர்த் தலைவர்களை அழிக்க வெளிநாட்டு ஆட்களைக் கொண்டு வருவதெல்லாம் அப்போதே நடந்திருக்கிறது பாருங்கள். யவனர்களின் கடற்படை கடம்பர்களோடு இணைந்து சேர நாட்டைத் தாக்கியது. ஆனால் சேரர் கடற்படை சளைக்கவில்லை. கடலில் நடந்த கடுமையான போரில் யவனர் கலங்கள் சில அழிக்கப்பட்டன. மீதியுள்ள கப்பல்களின் மீது சேர வீரர்கள் குதித்துப் போர் செய்து பல யவனர்களைச் சிறைப்பிடித்தனர். அப்படிப் பிடிக்கப்பட்ட யவனர்களின் தலை மீது நெய்யை ஊற்றி அவர்கள் கைகளை முதுகின் பின்னால் கட்டி தன்னுடைய நகரத்திற்குச் சேரலாதன் கொண்டுவந்தான். இது அக்காலத்தில் வழங்கப்பட்ட கடுமையான தண்டனைகளில் ஒன்று. தன்னுடைய நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டவர்கள் தலையிடுவதை விரும்பாத சேரமன்னன் இப்படிப்பட்ட தண்டனையை ஒரு உதாரணமாகக் காட்ட விரும்பியிருக்கவேண்டும். நயன்இல்வன் சொல் யவனர்ப்பிணித்து, நெய் தலைப் பெய்து, கை பிற்கொளீஇ அரு விலை நன்கலம்வயிரமொடு கொண்டு பெருவிறல்மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி (பதிற்றுப் பத்து – பதிகம்) பல விலை மதிப்பு மிக்க அணிகலன்களையும் வைரங்களையும் யவனர்களிடமிருந்து கைப்பற்றிக்கொண்டு, தன்னுடைய குடிமக்களுக்கு அவற்றைத் தந்தானாம் நெடுஞ்சேரலாதன். இதையே மாமூலனாரும் குறிப்பிடுகிறார். வலம்படு முரசில் சேர லாதன் முந்நீர்ஓட்டிக்கடம்பறுத்துஇமயத்து முன்னோர் மருள வணங்குவிற்பொறித்து நன்னகர்மாந்தைமுற்றத்துஒன்னார் பணிதிறை தந்த பாடுசால்நன்கலம் பொன்செய் பாவை வயிரமொடு -ஆம்பல் ஒன்று வாய் நிறையக்குவைஇஅன்றவண் நிலந்தினத் துறந்த நிதியத்து (அகம் 127) கடம்பை அறுத்துக் கடம்பர்களை வென்றும் இமயத்தில் வில் சின்னத்தைப் பொறித்தும் பெருமை கொண்ட சேரலாதன் பகைவர்களிடமிருந்து கொண்டுவந்த அணிகலன்கள், பொன்னால் செய்யப்பட்ட பாவை விளக்கு (யவனர்கள் விற்பனை செய்யக் கொண்டுவந்த பொருட்களில் இதுவும் ஒன்று “யவனர் இயற்றிய வினைமாண் பாவை” என்கிறார் நக்கீரர்) வைரம் போன்ற மணிகள் ஆகியவற்றை தன்னுடைய தலைநகரான மாந்தையில் வீரர்களுக்கும் புலவர்களுக்கும் குடிமக்களுக்கும் கொடுத்துவிட்டு மீதியை ஆம்பல் பூக்கள் போலக் குவித்து யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும் என்று விட்டு வைத்திருந்தானாம். ஆனால் அவற்றை (யாரும் எடுத்துக்கொள்ளாததால்) நிலம் தின்று விட்டதாம். இப்படித் தன் கடற்படை வலிமையால் உள்நாட்டுப் பகைவர்களை வென்றது மட்டும் அல்லாமல் மேலை நாட்டிலிருந்து வந்த வலிமையான யவனர் படையையும் கடற்போரில் வெற்றிகொண்டவன் இயமவரம்பன் நெடுஞ்சேரலாதன். (தொடரும்) எஸ். கிருஷ்ணன் மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com https://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-02/
  8. நன்றிகள் தோழர்.. மொத்தம் 13க்கும் மேற்பட்ட போர் களம்கள் உள்ளன..👍
  9. தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #1 – தலையாலங்கானம் ஓங்குதிரைவியன்பரப்பின் ஒலி முந்நீர் வரம்பு ஆக, தேன் தூங்கும் உயர் சிமைய மலை நாறியவியல்ஞாலத்து (மதுரைக்காஞ்சி) நம்முடைய பேச்சாளர்கள் தமிழர்களின் சிறப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது தவறாமல் இடம்பெறும் இரண்டு வார்த்தைகள் காதலும் வீரமும். பண்டைக்காலம் முதலாகவே வீரத்திற்குச் சிறப்பிடம் கொடுத்து வீரர்களின் புகழைப்பாடிய மண் தமிழ் மண். ஆகவே தொடர்ச்சியாகப் பல போர்களைக் கண்ட இடமாகவும் தமிழகம் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. சங்க காலத்தில் நடைபெற்ற போர்களில் மிகச் சிறப்புடையதாகக் கருதப்படுவது தலையாலங்கானம் என்ற இடத்தில் நடந்த போர். சங்க இலக்கியத்தில் புறநானூறு, அகநானூறு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை என்று அதிகமாகப் பாடப்பட்ட போராக இதைச் சொல்லலாம். பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் அவனை எதிர்த்து வந்த ஏழு பேர்களுக்கும் இடையில் நடந்த போர் இது. ஒரு அரசனுக்கு எதிராக இன்னோரு அரசன் சண்டையிடுவது என்பது சாதாரணம். ஆனால் ஓர் அரசனை, அதுவும் வயதில் சிறுவனான நெடுஞ்செழியனை மற்ற முடியுடை மன்னர்களான சோழன், சேரன், ஆகியோர் சேர்ந்து வேளிர் எழுவர் எனும் குழுவாக இணைந்து எதிர்த்தது புதுமையானது. ஒரு புலவர் இந்த அதிசயத்தையே தன்னுடைய பாட்டிலும் பதிந்திருந்திக்கிறார். ஒருவனை ஒருவன் அடுதலும்தொலைதலும் புதுவது அன்று; இவ்உலகத்து இயற்கை; ….. நாடுகெழுதிருவிற்பசும்பூட் செழியன் பீடும்செம்மலும்அறியார்கூடிப் பொருதும் என்று தன்தலை வந்த புனைகழல்எழுவர்நல்வலம் அடங்க ஒருதான்ஆகிப்பொருதுகளத்துஅடலே (புறம் 76) ஒருவனோடு ஒருவன் சண்டையிடுதலும் அழித்தலும் இயற்கை. ஆனால் பசும்பூண்செழியனான நெடுஞ்செழியனின் பெருமை அறியாமல் அவனோடு போர் செய்யத் துணிந்த எழுவரின் வலிமையை அடக்கி அவர்களை அவன் அழித்த செய்தி கேள்விப்படாத ஒன்று என்கிறார் இடைக்குன்றூர்க்கிழார் என்ற புலவர். இந்தப் போருக்கான காரணத்தை ஊகிப்பது கடினமல்ல. வயதில் மிகச் சிறியவனான நெடுஞ்செழியன் அப்போதுதான் பட்டத்திற்கு வந்திருந்தான். ஆகவே அவனை எளிதில் தோற்கடித்துவிட்டு பாண்டிய நாட்டைக் கைப்பற்றிவிடலாம் என்று சோழ அரசன் நினைத்தான். பாண்டிய நாட்டின் செல்வச் செழிப்பு வேறு அவன் கண்களை உறுத்திக்கொண்டிருந்தது. அதனால் ஏற்கெனவே பாண்டியனோடு பகை கொண்டிருந்த சேர அரசனையும் தனக்குத் துணையாகக் கொண்டான். இந்தப் போரில் இடம்பெற்ற சோழன் ‘ராஜசூயம் வேட்டபெருநற்கிள்ளி’ என்று பலர் சொல்வார்கள். ஆனால் அது தவறான கருத்தாகும். காலக்கணக்கின்படி சோழன் கிள்ளிவளவனே இந்தப் போரில் தலையிட்டவன் என்பது ஆய்வாளர்களின் கருத்து. போலவே போரில் ஈடுபட்ட சேர அரசன் ‘யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை’ ஆவான். பாண்டியன் சிறுவனானாலும் அவன் படை வலிமையானது என்பதை அறிந்திருந்த சேரன் தங்களுக்குத் துணையாக வேளிர் பலரை ஒன்று சேர்க்கும் யோசனையைச் சொன்னான். (வேளிர் என்போர் அக்காலத்திய குறுநிலமன்னர்கள். வடக்கிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என்கின்றன சங்ககால நூல்கள்). சோழநாட்டிலிருந்த அழுந்தூரின் வேளிரான திதியனும் பொருநன் என்ற அரசனும் அவர்களோடு சேர்ந்தனர். அதன்பின் எருமையூர் என்ற தற்போதைய மைசூரைஆண்ட வேளிரும் துவார சமுத்திரத்தின் (தற்போதைய ஹளேபீடு) வேளிரான இருங்கோவேண்மானும் தகடூரின் எழினியும் இந்தக் கூட்டணியில் இணைந்தனர். போர் நடந்த தலையாலங்கானம் என்ற இடம் இப்போது திருவாரூர் – கும்பகோணம் சாலையின் அருகே தெக்கூருக்கு அடுத்து இருக்கும் தலையாலங்காடு என்ற ஊர். நாவுக்கரசரின் பாடல் பெற்ற கோவில் ஒன்றைக் கொண்ட ஊர் இது. எப்படி பாண்டியப் படைகள் சோழ நாட்டில் இவ்வளவு தூரம் வந்தன என்பது ஆய்வுக்குரிய ஒன்று. பாண்டிய நாட்டு எல்லையிலிருந்து இந்த எழுவர் படையை பாண்டிய சேனை துரத்திக்கொண்டு இவ்வளவு தூரம் வந்திருக்கவேண்டும். அல்லது தனக்கு எதிராக சோழன் தலைமையில் படைகள் ஒன்று கூடுவதை அறிந்த பாண்டியன் சோழநாட்டிற்குள் ஊடுருவியிருக்கலாம். இல்லையென்றால் ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு பாண்டியப் படைகளை சோழன் தலைமையிலான படைகள் தங்கள் நாட்டின் உள்ளே இழுத்திருக்கவேண்டும். தங்களின் மண்ணில் எதிரியைச் சந்திப்பது சாதகம் என்று அவர்கள் எண்ணியிருக்கலாம். நீண்ட தூரம் வந்த படைகளை முறியடிப்பதும் எளிது. ஆனால் இந்த வியூகம் பாண்டியப் படைகளின் முன்னே செல்லுபடியாகவில்லை என்று தெரிகிறது. எரிபரந்தெடுத்தல் என்ற போர் முறையை பாண்டியர்கள் கையாண்டதாக மதுரைக் காஞ்சி தெரிவிக்கிறது. இந்த முறை தமிழகப் போர்களில் பரவலாகக் கையாளப்பட்ட ஒன்று. போர்கள் நடக்கும் சமயங்களில் படைகள் முன்னேறும்போது வழியிலுள்ள எதிரிகளின் நகரங்களைத் தீயிட்டுக் கொளுத்துவார்கள். அதனால் அங்கே வசிக்கும் மக்கள் சாரி சாரியாக வெளியேறத் தொடங்குவார்கள். இது எதிரிப் படைகளின் முன்னேற்றத்தைத் தடைசெய்வதோடு அவர்களின் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும். கால் என்னக்கடிதுஉராஅய் நாடு கெட எரி பரப்பி, ஆலங்கானத்துஅஞ்சுவர இறுத்து, அரசு பட அமர் உழக்கி, முரசு கொண்டு களம் வேட்ட அடுதிறல் உயர் புகழ் வேந்தே (மதுரைக்காஞ்சி 125 – 130) என்ற வரிகள் இப்படி ஊர்கள் எரியூட்டப்பட்டதைக் குறிப்பிடுகின்றன. இந்தப்போருக்கு பாண்டியன் நெடுஞ்செழியன் புறப்பட்டபோது எதிரி மன்னர்கள் இழிவாகப் பேசியதாக அவனிடம் சொல்லப்பட்டது. மாங்குடி மருதனார் என்ற பெரும் புலவரை ஆசானாகக் கொண்ட நெடுஞ்செழியன் கவித் திறம் கொண்டவனாக இருந்தான். தன்னுடைய சபதத்தை ஒரு பாடல் மூலமாகவே அவன் சொன்னான். நகுதக் கனரே, நாடுமீக் கூறுநர்; இளையவன் இவன் என உளையக் கூறிப், படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானையும், தேரும், மாவும், (புறம் 72) என்று தொடங்கும் இந்தப் பாடலின் பொருள் இது. ‘இவன் இளையவன் என்று என்னுடைய மனம் வருத்தப்படும் வகையில் இழிவாகச் சொல்லிச் சிரித்து, ஏதோ தங்களிடம் தான் நால்வகைப் படைகள் இருக்கின்றன என்று கர்வத்தோடு நம் நாட்டின் மீது படையெடுத்து வரும் அரசர்களைப் போரில் வென்று அவர்களது முரசுகளைக் கைப்பற்றிக் கொள்வேன். அப்படிச் செய்யவில்லை என்றால் என்னைக் கொடுங்கோலன் என்று நாட்டு மக்கள் தூற்றட்டும், மாங்குடி மருதனார் போன்ற அருமையான புலவர்கள் என்னைப் பாடாது நம் நாட்டை விட்டுச் செல்லட்டும், என்னால் காப்பாற்றப்படும் மக்கள் என்னிடம் ஏழைமையின் காரணமாக பொருள் கேட்டு வரும்போது அதைக் கொடுக்க முடியாத வறுமையை நான் அடையட்டும்.’ சிறுவனின் தோற்றம் எப்படி இருந்தது என்பதை இடைக்குன்றூர்க்கிழார் சொல்கிறார். கிண்கிணிகளைந்த கால் ஓண்கழல்தொட்டுக் குடுமி களைந்தநுதல்வேம்பின்ஒண்தளிர் நெடுங்கொடிஉழிஞைப்பவரொடுமிலைந்து குறுந்தொடிகழித்தகைச் சாபம் பற்றி, நெடுந்தேர்க்கொடிஞ்சிபொலியநின்றோன் (புறம் 77) அடடா… கிண்கிணியை அணிய வேண்டிய குழந்தைக் கால்கள் வீரக்கழல்களை அணிந்திருக்கின்றன. பிள்ளைக்குடுமியைக் களைந்து அதன் மேல் பாண்டியர்களுக்கு உரிய வேம்பின் தளிர் சூடியிருக்கிறான், கையில் காப்பு இல்லை ஆனால் வில் இருக்கிறது. இன்னும் சிறுவர்கள் அணியும் ஐம்படைத்தாலியைக் கூட கழற்றவில்லையே. இவ்வளவு அழகனான இவன் யார்? என்று வியக்கிறார் அவர். இந்தப் போரில் பாண்டியர்களின் தளபதியாக இருந்தவனின் பெயர் பழையன் மாறன் என்று தெரியவருகிறது. ஆலங்கானத்தில் பாண்டியப் படைகள் எழுவர் படைகளை எதிர்த்துக் கடுமையாகப் போரிட்டன. ‘தமிழ் மயங்கிய தலையாலங்கானம்’ என்று தமிழகத்து வீரம் முழுவதுமே இந்தப் போர்க்களத்தில் இருந்தது என்கிறார் புலவர் குடபுலவியனார். படைபலத்தைப் பொருத்தவரை பாண்டியப் படைகளைவிட எழுவர் படை எண்ணிக்கையில் அதிகம். ஆனால் பாண்டியனின் நால்வகைப் படைகளும் மிகத் திறமையாகப் போரிட்டன. தேர்ப்படைகளும் யானைப் படைகளும் எதிரிகளின் படைகளை உழுநிலமாக்கி உழுதனவாம். என்னதான் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் எதிரியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கம் தவிர மற்ற ஒற்றுமை ஏதும் இல்லாத கூட்டணிப் படைகளிடையே ஒருங்கிணைப்பும் சரியாக அணிவகுத்தலும் இல்லை. ஆனால் பாண்டியப் படைகளோ இளமையான, வலுமிக்க, வீரம் மிகுந்த அரசனைத் தலைவனாகக் கொண்டிருந்தன. திறமையான படைத் தலைவனால் வழிநடத்தப்பட்டன. எனவே போரின் முடிவு பாண்டியர்களுக்குச் சாதகமாகவே அமைந்ததது. குன்றத்துஇறுத்தகுரீஇஇனம் போல அம்புசென்றுஇறுத்தஅரும்புண்யானைத் தூம்புஉடைத்தடக்கைவாயடுதுமிந்து நாஞ்சில் ஒப்பநிலமிசைப் புரள (புறம் 19) மலையில் சென்று தங்கும் குருவிகள் போல அம்புகளால் துளைக்கப்பட்ட யானைத் தும்பிக்கைகள் அறுந்து கீழே விழுந்து கலப்பைகள் போலப் புரள்கின்றன. அப்படிப்பட்ட கடும் போரில் எழுவரை நீ அழித்தாய் என்று நெடுஞ்செழியனை குடபுலவியனார் புகழ்கிறார். போரில் ஈடுபட்ட ஏழு அரசர்களில் சிலர் இறந்துபட்டனர். சிலர் தப்பியோடினர். சிலர் கைதிகளாகஅகப்பட்டனர். இத்தனைச் சிறப்புகளுக்கும் மகுடம் வைத்ததுபோல் இருந்தது பாண்டியன் நெடுஞ்செழியனின் தலைமைப் பண்பு. போரில் வீரர்கள் காயப்படுவது இயல்பு, ஆகவே வெற்றி பெற்றதோடு நாடு திரும்பலாம் என்று நினைக்காமல். களிறு களம் படுத்த பெருஞ் செய் ஆடவர், ஒளிறு வாள் விழுப் புண் காணிய, புறம் போந்து,…. வேம்பு தலை யாத்தநோன்காழ்எஃகமொடு முன்னோன் முறைமுறை காட்ட, பின்னர், …. வாள் தோள் கோத்தவன்கண் காளை சுவல்மிசை அமைத்த கையன், முகன் அமர்ந்து, … நள்ளென்யாமத்தும் பள்ளி கொள்ளான், சிலரொடுதிரிதரும் வேந்தன் (நெடுநல்வாடை) போர்க்களத்தில் காயம் பட்டுக்கிடக்கிற வீரர்களை நடு யாமத்தில் சென்று பார்ப்பானாம் நெடும்செழியன். அவர்கள் பட்டவிழுப்புண்களைக் கண்டு மனம் வருத்தப்பட்டாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் அவர்களோடு வேண்டுமென்றே வரவழைத்துக்கொண்ட முகமலர்ச்சியோடு உரையாடுவானாம். வீரர்களுக்குத் தலைவன் தரும் இந்த இன்சொல்லைத் தவிர வேறு மருந்து வேண்டுமா என்ன! இப்படிப் பல சிறப்புகளைக் கொண்டு பாரட்டப்பட்டதலையாலங்கானப் போர் இடைக்காலப் பாண்டியர் செப்பேடுகளிலும் புகழப்பட்டது. ‘ஆலங்கானத்து அமர் வென்று ஞாலங்காவல்எய்தியும்’ என்று பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேடுகள் புகழ்மாலை சூட்டுகின்றன. (தொடரும்) எஸ். கிருஷ்ணன் மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.com https://kizhakkutoday.in/thamizhnattu-porkalangal-01/
  10. சந்திரயான் 3ஐ உருவாக்க வேலை பார்த்த டெக்னீஷியன்.. இட்லி விற்கும் அவலம்.. கலங்கடித்த விஞ்ஞானியின் கதை.. சென்னை: இஸ்ரோவின் சந்திரயான்-3 ஏவுதளத்தை உருவாக்குவதில் பணிபுரியும் ஹெச்இசி (ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட்) தொழில்நுட்ப வல்லுநரான தீபக் குமார் உப்ராரியா, ராஞ்சியில் உள்ள சாலையோரக் கடையில் இட்லிகளை விற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சந்திரயான் 3 நிலவில் ஆராய்ச்சிகளை செய்து முடித்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் கிடைத்து வருகின்றன. சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் தற்போது நிலவில் உள்ளது. இதில் பிரக்யான் ரோவர் 14 நாட்கள் முடிந்து தூக்க நிலைக்கு சென்றுவிட்டது. 14 நாட்களுக்கு பிறகு மீண்டும் தென் துருவத்தில் சூரியன் வந்ததும் அது இயங்குமா என்ற கேள்வி உள்ளது. அதில் தற்போது முழு சார்ஜ் உள்ளது. இதனால் 14 நாட்களுக்கு பின் அதை இயங்க வைக்கும் பணிகள் நடக்கும். இன்னொரு பக்கம் இதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தே ஆய்வு செய்து கொண்டு இருந்த நிலையில் அதுவும் தூக்க நிலைக்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்றுவிட்டது. 14 நாட்களாக பிரக்யான் ரோவர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில்தான் அங்கு சூரியன் அஸ்தமனம் ஆனதால் தற்போது இரண்டையும் தூக்க நிலைக்கு கொண்டு சென்றுள்ளன. சந்திரயான் 3 வெற்றி இஸ்ரோவிற்கு மட்டுமின்றி மொத்த நாட்டிற்கும் பெருமை தேடிக்கொடுத்து உள்ளது. இந்த நிலையில், இஸ்ரோவின் சந்திரயான்-3 ஏவுதளத்தை உருவாக்குவதில் பணிபுரியும் ஹெச்இசி (ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட்) தொழில்நுட்ப வல்லுநரான தீபக் குமார் உப்ராரியா, ராஞ்சியில் உள்ள சாலையோரக் கடையில் இட்லிகளை விற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கே இவருக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தால் இவர் இட்லி விற்கும் நிலைக்கு வந்ததாக கூறப்படுகிறது. ராஞ்சியில் உள்ள துர்வா பகுதியில் பழைய சட்டப் பேரவைக்கு எதிரே உப்ராரியா கடை வைத்துள்ளார். சந்திரயான் -3 க்கு ஏவுகணை மேடை மற்றும் கதவுகளை உருவாக்கிய ஹெச்இசி நிறுவனத்தில் வேலை பார்த்த இவர் இட்லி கடையை திறந்துள்ளார்.. 18 மாதங்களாக தனது சம்பளத்தை செலுத்தாததால் அவர் தனது சாலையோர கடையைத் திறந்தார். HEC இன் சுமார் 2,800 ஊழியர்கள் கடந்த 18 மாதங்களாக சம்பளம் பெறவில்லை என்று கூறுகின்றனர். அவர்களில் உப்ராரியாவும் ஒருவர். பலர் வேலையை விட்டுவிட்டு வேறு வேறு வேலைகளுக்கு சென்ற நிலையில்தான் இவர் இட்லி விற்க சென்றுள்ளார். உப்ராரியா இது குறித்து ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், கடந்த சில நாட்களாக இட்லிகளை விற்று வருகிறேன். வேலையில் வருமானம் இல்லாததால் இந்த கடையை திறந்தேன். நான் இன்னும் வேலையை விடவில்லை. அந்த வேலையை பார்த்துக்கொண்டே இட்லி விற்றுவருகிறேன். நான் காலையில் இட்லி விற்றுவிட்டு மதியம் அலுவலகம் செல்கிறேன். மாலையில், வீட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு மீண்டும் இட்லி விற்று வாழ்க்கை நடத்துகிறேன், என்று அவர் கூறியுள்ளார். மேலும், முதலில் கிரெடிட் கார்டு மூலம் எனது வீட்டை நிர்வகித்தேன். 2 லட்சம் கடன் வாங்கினேன். நான் கடனை திருப்பி செலுத்தாதவனாக வங்கி மூலம் அறிவிக்கப்பட்டேன். அதன்பிறகு உறவினர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு வீட்டை நடத்த ஆரம்பித்தேன்.இதுவரை நான்கு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளேன். நான் யாரிடமும் பணத்தை திருப்பித் தராததால், தற்போது உறவினர்கள் கடன் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். பிறகு மனைவியின் நகைகளை அடமானம் வைத்து சில நாட்கள் வீட்டை நடத்தினேன். தற்போது இட்லி விற்கிறேன். என் மனைவி நல்ல இட்லி செய்வார். அதை விற்று தினமும் 300 முதல் 400 ரூபாய் கிடைக்கும். இதில் 50-100 ரூபாய் லாபம். இந்தப் பணத்தில் வீட்டை நடத்துகிறேன். இப்படித்தான் எங்கள் வாழ்க்கை ஓடுகிறது என்று அவர் பேட்டி அளித்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/technician-who-worked-on-chandrayaan-3-launchpad-is-selling-idly-on-the-roadside-540327.html டிஸ்கி எந்த தொழிலும் கேவலம் இல்லையென்றாலும்.. வேலை செய்ததற்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமல் என்னப்பா வல்லரசு..? 😢
  11. கன்னி தீவு போல வள வள என்டு வளர்த்து கொண்டுருக்காமல் சட்டு புட்டு என்டு ஒரு முடிவுக்கு வருவது நல்லது..👌
  12. பளபளக்கும் புத்தம் புதிய 244 மாடி வீடுகள்.. இலங்கைத் தமிழர் வாழ்வில் ஸ்டாலின் செய்த மறுமலர்ச்சி சேலம்: இந்த திராவிட மாடல் ஆட்சியில்தான் இலங்கைத் தமிழர் நலன் மீது புதிய அக்கறை பிறந்துள்ளது. ஆட்சிக்கு வந்த உடனேயே 'அகதிகள் முகாம்' என்ற வார்த்தையை 'மறுவாழ்வு மையம்' என்று மாற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின். உடனே பலர் சொன்னார்கள் பெயர் பலகையை மாற்றிவிட்டால், இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை மாறிவிடுமா என்று. அதற்குத் தன் தரமான செயல் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். ஏறக்குறை 217 கோடி நிதி அவர்களின் நலனுக்காக ஒதுக்கி இருந்தார் ஸ்டாலின். அதன் பலனாக இன்று சேலம் மாவட்டத்தில் பவளத்தானூர், குறுக்குப்பட்டி, அத்திக்காட்டனூர் ஆகிய பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளுக்குச் செயல்பட்டு வந்த தகரக் கொட்டகைகள் முகாம் இன்று ஹைடெக் சிட்டியாக மறுமலர்ச்சி பெற்றுள்ளது. ஆம்! இந்த மக்களுக்காக ஏறக்குறை 244 புத்தம் புதிய வீடுகளைக் கட்டித் தந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அதற்கான விழா விரைவில் வெளிச்சம் பெற உள்ளது. தகரக் கொட்டையில் தவியாகத் தவித்துவந்த நம் சொந்தங்கள் இனி, அழகான கான்கிரீட் வீடுகளுக்குள் கால்வைக்க உள்ளார்னர். இருண்டு போன வாழ்க்கையிலிருந்து இனிமையான வாழ்க்கைக்கு அந்த மக்கள் மாறப்போகிறார்கள். எப்படி இருக்கின்றன வீடுகள்? என்ன நினைக்கிறார்கள் மக்கள்? நம் கேள்விகளுக்கு முதன்முதலாக முகம் காட்டினார் 32 வயதான இளைஞர் யானதன். "எனது தாய், தந்தையர் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்கள். நான் தமிழ்நாட்டில்தான் பிறந்து வளர்ந்தேன். ஆரம்பக் காலத்தில் நான் பள்ளியில் படிக்கவும் அது தொடர்பான ஆவணங்களைத் தயார் செய்வதும் பெரிய சவாலாக இருந்தது. அதன்பிறகு தமிழ்நாட்டு மாணவர்களைப் போல எங்களுக்கும் உரிய உரிமைகள் கிடைக்கத் தொடங்கின. ஆகவே பழைய கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது. இன்றைய காலத்தில் எங்கள் பிள்ளைகளில் இரண்டு பட்டங்களைப் பெற்றவர்கள் ஏறக்குறைய 500 பேருக்கு மேல் இருக்கிறார்கள். இந்நிலையில்தான் 2021இல் கொரோனா காலகட்டத்தில் திமுக ஆட்சி வந்தது. அதன்பின்னர் முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி 217 கோடி ரூபாய் நிதியை எங்கள் மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கினார். அதனால், எங்கள் மாணவர்களுக்குக் கிடைத்துவந்த கல்வி உதவித்தொகை இப்போது 3 மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் மேற்படிப்புக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதைப்போலவே தமிழ்நாட்டுப் பெண்களுக்குக் கிடைப்பதைப் போலவே எங்கள் பெண்களுக்கும் சுய உதவிக்குழு நிதியை அதிகரித்துள்ளார்கள். குடியுரிமை வேண்டும் என்பது எங்களது நீண்டகாலக் கோரிக்கை. அதை ஏற்றுக்கொண்டு அதற்காகத் தனிக்குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். அதில் எங்கள் மக்களையும் உறுப்பினராக இணைத்துள்ளார். இதை எல்லாம் தாண்டி நாங்கள் 40 வருடங்களுக்கு மேலாக 10க்கு 10 வீட்டில்தான் வாழ்ந்துவருகிறோம். அதிலும் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை. பொதுக்கழிப்பிடம்தான் உள்ளது. தனியாகக் கழிப்பறை வசதிகள் இல்லை. அதனால் சுகாதாரக் கேடுகள் அதிகம் ஏற்பட்டுவருகின்றன. இந்தக் கஷ்டங்களை எல்லாம் நாங்கள் தொடர்ந்து அரசுக்குச் சொல்லி வருகிறோம். அதை ஏற்றுக்கொண்டு ஆறு மாதங்களுக்கு முன், அருகில் உள்ள பாம்பம்பாடி என்ற கிராமத்தில் எங்களது இலங்கைத் தமிழ் மக்களுக்காக 234 புதிய வீடுகளை முதல்வர் ஸ்டாலின் கட்டித் தர உத்தரவிட்டார். அதில் எங்களுக்குப் படுக்கையறை, சமையல் அறை, தனி கழிப்பறை, குடிநீர் வசதி, எங்கள் பகுதியில் நூலகம், நியாயவிலைக்கடை, அங்கன்வாடி, தண்ணீர் தொட்டி, சமுதாயக் கூடம் எனப் பல அடிப்படை வசதிகளுடன் அந்த வீடுகளைக் கட்டி வருகின்றனர். அதற்கான பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளது. இந்த வீடுகளைப் பார்க்கும்போதே மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் வாழ்க்கை நரகத்தில் இருப்பதைப் போன்று இருந்தது. மழைக்காலம் என்றாலும் வெயில் காலம் என்றாலும் அது எங்களுக்குக் கஷ்ட காலமாகவே இருந்து வந்தது. ஒரு நிம்மதியான உறக்கம் இல்லாமல் வாழ்ந்துவந்தோம். அதை எல்லாம் இந்தப் புதிய வீடு மாற்றப் போகிறது" என்றார் அடுத்து கவிதா நாகநாதன், "நான் இந்த முகாமில் கடந்த 32 ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறேன். எனக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். கணவர் இறந்துவிட்டார். 2 பிள்ளைகளைப் படிக்க வைத்தது, கல்யாணம் கட்டிக் கொடுத்தது எல்லாம் இந்த முகாமில்தான். ஒரு பையனுக்கு மட்டும் கல்யாணம் ஆகவில்லை. அவன் வேலைக்குச் சென்று வருகிறான். சில மாதங்கள் முன்பாக வந்த மழையில் எங்கள் பழைய முகாமில் தண்ணீர் புகுந்துவிட்டது. பல வீடுகளில் வெள்ளம் வந்துவிட்டது. அப்போது, மழைக்காலம் என்பதால் பாம்பு, பூச்சிகள் எல்லாம் வீட்டுக்குள் வந்துவிட்டன. இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் தவித்தோம். இப்போது முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு என்று சிமெண்ட் வீடுகளைக் கட்டித் தந்துள்ளார். நாங்கள் இப்படிப்பட்ட வீடுகளில் வாழ்வோம் என்று நினைத்துக் கூடப்பார்த்ததில்லை. அந்தளவுக்கு தனித்தனி வீடுகளைக் கட்டித்தந்துள்ளார். நாங்கள் இந்த 32 ஆண்டுகளாக ஒரே முகாமில் ஒட்டுமொத்தமாக வாழ்ந்துவந்தோம். யாருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை என்று இல்லை. சாப்பிடுவது தொடங்கி கழிவறைக்குச் செல்வது வரை எல்லாம் ஒன்றுதான். அதை எல்லாம் தாண்டி இன்றைக்குத் தனி வீட்டுக்குப் போகப் போகிறோம். அதில் சகல வசதிகளும் இருக்கின்றன. இத்தனைக் காலம் ஓலைக் குடிசைபோல இருந்த வீட்டில் வாழ்ந்தோம். அந்தக் கஷ்டம் எல்லாம் சொல்ல ஒரு நாள் போதாது. படாத கஷ்டம் இல்லை. அனுபவிக்காத துயரம் இல்லை. அப்படியே எங்கள் பாதி ஆயுள் கரைந்துவிட்டது" என்கிறார் பெருமூச்சை விட்டபடி. இவரைத் தொடர்ந்து தர்ஷினி, "எங்கள் குடும்பம் 1990இல் இலங்கையிலிருந்து தமிழ்நாடு வந்தது. அப்போது நான் 6 மாதக் குழந்தை. நான் படித்தது எல்லாம் தமிழ்நாட்டில்தான். இத்தனை வருடங்களாக நாங்கள் கஷ்டத்தில்தான் வாழ்ந்தோம். இப்போது ஸ்டாலின் அய்யா ஆட்சியில் வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார். எங்களுக்கு இதுவரை கிடைத்துள்ள நலத்திட்டங்கள் எல்லாம் கலைஞர் ஆட்சியில்தான் கிடைத்திருக்கிறது. அவருக்கு அடுத்து இப்போது அதே அளவுக்கு ஸ்டாலின் பல உதவிகளைச் செய்துவருகிறார். இந்த வீடு கட்டிக் கொடுத்த விஷயத்தில் ஸ்டாலின் எல்லோரையும்விட பல மடங்கு எங்கள் மனதில் உயர்ந்துவிட்டார். இவ்வளவு காலம் அகதி முகாம் என்று சொல்லி வந்தார்கள். அவர் ஆட்சியில்தான் மறுவாழ்வு மையம் என மாற்றி இருக்கிறார்கள். ஒரு வார்த்தைதான். ஆனால், அது தந்த வலி என்பதை உங்களுக்குப் புரியவைக்க முடியாது. அவருக்கு எங்கள் முகாம் மக்களின் சார்பாக நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர் செய்த உதவிக்கு இந்த வார்த்தை எல்லாம் கொஞ்சம் கம்மிதான்" என்கிறார். தன் ஆயுளில் முக்கால்வாசியைக் கழித்துவிட்ட பாட்டி ரீட்டா, "நாங்கள் மூன்று தலைமுறைகளைக் கூட பார்த்துவிட்டோம். எங்கள் காலம் எல்லாம் போய்விட்டது. ஒருநாள் நிம்மதியாகப் படுக்கக் கூட இடமில்லாமல் வாழ்ந்து கழித்திட்டோம். சுகாதாரம் இல்லாமல் எத்தனை நோய் நொடிகளைக் கண்டுவிட்டோம். இனிமேல் எங்களைப் போல யாரும் வாழக் கூடாது. அவ்வளவு இன்னல்கள். அவ்வளவு துயரங்கள். இப்போது இந்தப் புதிய வீடுகளைப் போய் பார்த்தேன். பார்க்கும் போதே மனத்திற்குள் அவ்வளவு நிம்மதி. அதை ஸ்டாலின் அய்யாதான் செய்து தந்துள்ளார். பல உதவிகள் பலர் செய்யலாம். வீடுதான் முக்கியம். காக்கை கூட தனி கூடு இருக்கிறது. இந்த மனிதக் கூட்டமான எங்களுக்கு என்று தனி வீடு இல்லை. பெண்டு பிள்ளைகள் என எல்லாம் ஒரே அறையில் கிடந்தோம். காலைகூட கொஞ்சம் தாராளமாக நீட்ட முடியாது. கொசுக் கடி, துர்நாற்றம் என எத்தனை எத்தனை?" என நம் கண்களை தன் பேச்சால் ஈரமாக்குகிறார் பாட்டி. "இத்தனை ஆண்டுகளாக பவளத்தானூர், குறுக்குப்பட்டி, அத்திக்காட்டனூர் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்துவந்தார்கள். இந்த மக்களுக்காக பாப்பம்பாடி பஞ்சாயத்தில் இடம் தேர்வு செய்து 244 குடியிருப்புகளைக் கட்டி தந்துள்ளோம். இதில் அத்திக்காட்டானூர் முகாம் மக்களுக்கு 55 வீடுகள், பவளத்தானூர் முகாம் மக்களுக்கு 80 வீடுகள், குறுக்குப்பட்டி முகாம் மக்களுக்கு 109 வீடுகள் என அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. வீடுகளின் தரைக்கு டைல்ஸ் போட்டுள்ளோம். அதைப்போலக் கழிப்பறைகள் கூட டைல்ஸ் வசதிகள் கொண்டவை. கின்சன், தனி அறை, ஒரு ஹால், வீட்டுக்கு உள்ளாகவே கழிப்பறை, குளியல் அறை பல வசதிகளைச் செய்து தந்துள்ளோம். ஜன்னல்கூட இந்தக் காலத்திற்கு ஏற்ப நவீன மாடலில் அமைத்துள்ளோம். முறையான சாலை வசதி, மின்சார வசதி, தனித்தனி குடிநீர் குழாய் இணைப்புகள் எனச் செய்து தந்துள்ளோம். வீட்டுக்கு முன்பாக நடைபாதைக்கு 20 அடி தெரு அமைத்துள்ளோம். அதுவும் சிமெண்ட் சாலையுடன் அமைத்துள்ளோம். வீடுகளைத் தவிர்த்து அங்கன்வாடி மையம், பொது நூலகம், இந்த மக்களுக்காகவே நியாயவிலைக்கடைக்கு என்று தனிக்கட்டடம், மகளிர் சுய உதவிக்குழுவுக்காக ஒரு தனிக் கூடம், மொத்தமாக 100 மின் விளக்குகள் எனப் பல வசதிகளைச் செய்து தந்துள்ளோம்" என்கிறார் தாரமங்கலம் பகுதி உதவிப் பொறியாளர் ஸ்ரீநிவாசன். இந்த 2 ஆண்டுகள் ஸ்டாலின் ஆட்சியில்தான் எத்தனை சாதனைகள்! https://tamil.oneindia.com/news/salem/cm-stalin-has-built-244-new-houses-for-sri-lankan-tamils-in-salem-530117.html டிஸ்கி: ஆர் குத்தி அரிசியானாலும் சரி ; மகிழ்ச்சி..😊 ஆனாலும் "தட்ஸ்தமிழ்" செம்பு சத்தம் கொஞ்சம் அதிகம் தான்..
  13. தோழர் குமாரசாமியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂
  14. பெண்களுக்கு பாதுகாப்பான நாடு கைலாசா - ரஞ்சிதா தகவல் . சென்னை: பிரபல சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா, தனக்கென்று தனியாக ஓரு நாட்டை உருவாக்கிக்கொண்டு தனது சீடர்களுடன் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது அவரின் முதன்மை சீடரான ரஞ்சிதா குறித்து சோஷியல் மீடியாக்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் கைலாசா என்று ரஞ்சிதா கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நித்யாநந்தா சிக்காத சர்ச்சைகளே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சலசலப்பில் சிக்கியிருந்த நித்யாநத்தா சமீபத்தில் கைலாசா என புதியதாக ஒரு நாட்டை உருவாக்கி அதில் குடியேறிவிட்டதாக கூறி வருகிறார். தமிழக காவல்துறை அவரை வலைவீசி தேடி( ? ) வருகிறது. இருப்பினும் அவர் சிக்காமல் தொடர்ந்து போக்கு காட்டி வருகிறார். இப்படியாக கைலாசாவில் இருந்துக்கொண்டே தனது சத்சங்கத்தையும் நடத்தி வருகிறார். ஐ.நாவில் அலப்பறை சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும், விரைவில் கைலாசா இந்துக்களின் புனித பூமியாக மாறும் என்று கூறியிருந்தார். இது தொடர்பான போட்டோக்களும் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. போலீசின் தேடப்படும் பட்டியலில் நித்தி இருப்பது இந்த அதிகாரிகளுக்கு தெரியவந்த நிலையில் இந்த ஒப்பந்தங்களையெல்லாம் அவர்கள் ரத்து செய்துவிட்டனர். அதேபோல ஐநா கூட்டத்தில் நித்தியின் சிஷியை விஜய்ப்ரியா பேசிய பேச்சுக்களும் சர்ச்சையாகின. காவல்துறையால் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் நித்தியை பிரதிபலிக்கும் வகையில் விஜய்ப்ரியா பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அவரின் கருத்துக்கள் நிராகரிப்பதாக ஐநா அதிகாரிகள் கூறினர். நிச்சயம் சிக்குவார் ( ? ) இப்படியாக ஆள் இருக்கும் இடம் தெரியாமலேயே சோஷியல் மீடியாக்கள் மூலம் தன்னை பற்றிய பேச்சுக்களை உருவாக்கி வரும் நித்தியானந்தா நிச்சயம் ஒரு நாள் சிக்குவார் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். இப்படி இருக்கையில்தான் நித்தியின் முதன்மை சிஷியையான ரஞ்சிதாவும் தற்போது சோஷியல் மீடியாக்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறார். அவரது லிங்க்டு இன் சமூக வலைத்தள பக்கத்தில் கைலாசாவின் பிரதமர் என்று மென்ஷன் செய்திருந்தார். இதான் இவர் குறித்த பேச்சுக்கள் அதிகம் எழ முக்கிய காரணமாக இருந்தது. இந்நியைில் தற்போது இவர் யூடியூபில் பக்தர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். பக்தரின் கேள்வி பக்தர் ஒருவர் 'பெண்களுக்கான பாதுகாப்பான இடம் எது ?' என கேட்ட கேள்விக்கு 'கைலாசாதான் பாதுகாப்பான இடம்' என்று அவர் பதிலளித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, "கைலாசம் பரமசிவம் பக்கம் நிற்கிறது. இந்துத்துவத்தின் புனிதத்தை ஒரு நெட்வொர்க்காக இணைக்கிறது கைலாசா. பூஜைகள், யோகா, சந்யாசம் உள்ளிட்ட அனைத்து இந்து நெறிமுகளையும் கைலாசா கற்றுத் தருகிறது. இது அசைக்க முடியாத அடித்தளத்தை கொண்டது. தர்மத்தின் பக்கம் கைலாசா கைலாசா எப்போதும் தர்மத்தின் பக்கம் நிற்கும், அதில் எந்த சமரசமும் செய்யாது. வேறு எந்த மிரட்டலுக்கும் கைலாசாவில் இடமில்லை. இந்த உலகம் இரு முக்கிய மாற்றத்தை சந்தித்துள்ளது. ஒன்று செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI டெக்னாலஜி , மற்றொன்று CI எனப்படும் காஸ்மிக் இன்டெலிஜென்ஸ், அது தான் கைலாசா. இந்த உலகின் கேம் சேஞ்ஜராக சுவாமி நித்யானந்தா இருக்கிறார். கைலாசா, முதல் இந்து தேசம். இன்று இந்துக்கள் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து இருக்கிறார்கள். அனைத்தும் இலவசம் அவர்கள் வசிக்கும் நாடுகளில் இந்துக்களுக்கான தேவைகள் கிடைப்பதில்லை. ஆனால், கைலாசாவில் வசிக்கும் இந்துக்களுக்கு முறையான தேவைகள் கிடைக்கிறது. நான் யார் என்கிற கேள்வி உங்களுக்குள் எழுந்தால், நீங்கள் வரவேண்டிய இடம் தான் கைலாசா. கைலாசாவில் எல்லாமே இலவசம். கல்வி இலவசமாக கிடைக்கிறது. சுவாமி நித்யானந்தர் அதில் உறுதியாக இருக்கிறார். விலங்குகளை கொலை செய்வதை அங்கு அனுமதிப்பதில்லை. அதனால் அசைவங்களுக்கு அனுமதியில்லை. சுவாமிஜியின் கடந்த 40 ஆண்டுகளாக வாழ்க்கையில், தர்மத்தின் பக்கம் அவர் நின்றிருக்கிறார். தொடர்ந்து தர்மத்தின் பக்கம் அவர் நிற்பார். காசி, மதுரை மீனாட்சி போன்ற புனிதமான இந்துக்களின் வரலாற்றை, இந்துக்களின் நினைவில் கொண்டு சேர்ப்பதும், போற்றி பாதுகாப்பதும் தான் சுவாமி நித்யானந்தாவின் பணி. 2009ம் ஆண்டு சுவாமி நித்யானந்தரை சந்தித்தேன். என்னை அவர் பார்த்ததும் புன்னகைத்தார். அவர் அனைவரிடமும் பேசினார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவராக இருந்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் பணம், பொருள் சம்பாதிக்கும் எந்த எண்ணமும், நோக்கமும் அங்கு இல்லை. பெண்கள் முன்னேற்றத்தில் கைலாசா எப்போதும் முன்னுரிமை தருகிறது. உலக நாடுகளின் கலந்தாய்வுகளில் தன்னுடைய பிரதிநிதியாக பெண்களை தான் கைலாசா அனுப்புகிறது. மற்ற எந்த நாடுகளும் இதை செய்வதில்லை. பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்று நித்யானந்தர் அறிவித்தார். ஆனால் இன்று கைலாசாவின் பொறுப்புகளில் 98 சதவீதம் பெண்கள், தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். சுதந்திரம், பாதுகாப்பு ஆகியவை கைலாசாவில் இருப்பதாக அங்கு வசிக்கும் பெண்கள் கூறுகின்றனர்" என்று கூறியுள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/actress-ranjitha-said-that-kailash-is-the-safest-country-for-women-524925.html
  15. தூரிகை நாயகன்.. மக்கள் மனங்களில் இடம் பிடித்த ஓவியர் மாருதி மறைவு.. சென்னை: பிரபல ஓவியர் மாருதி உடல்நலக்குறைவு காரணமாக புனேவில் மரணமடைந்தார். ஓவியர் மாருதி மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பத்திரிகை உலக நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்டு 28-ம் தேதி டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் ஓவியர் மாருதி. இவரின் இயற்பெயர் ரங்கநாதன். வேலைச்சூழலின் காரணமாக, மாருதி என்ற புனைப்பெயரில் பத்திரிகைகளில் ஓவியங்கள் வரைந்து அதன் மூலம் பிரபலமானவர். 1969 முதல் இவர் ஓவியங்கள் வரைந்து வந்தவர். இவருக்கு சுபாஷிணி, சுஹாசினி என இரு மகள்கள் இருக்கின்றனர். இவருடைய மனைவி விமலா கொரோனா காலத்தில் மறைந்தார். இவரின் ஓவியத்தைப் பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி இருக்கிறது. இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஓவியர் மாருதி புனே நகரில் மகள் வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் காலமானார். ஓவியர் மாருதி மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ஓவியர் மாருதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ் வார இதழ்களில் தமது தூரிகையால் கோலோச்சி தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற ஓவியர் மாருதி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன். தனித்துவம் மிக்க தனது ஓவியங்களால் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றிருப்பவர். முத்தமிழறிஞர் கலைஞரின் திரைப்படங்களில் பணியாற்றியவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், பத்திரிகை உலக நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/artist-maruthi-passes-away-chief-minister-stalins-condolence-524687.html டிஸ்கி அந்த கால அரசர்களையும் இளவரசிகளையும் புதினங்களுக்கு இடையே கண்ணில் நிறுத்துபவர்..😢
  16. வட தமிழகத்தின் கீழடி . டிஸ்கி: நம்ம வடக்குபட்டு ராமசாமி ஆள் எப்டி.? அவன் உங்களுக்கு ஏதாவது கடன் தரனுமா..? தலைவரின்ட இந்த பகிடிதான் நினைவுக்கு வருகிறது..😄
  17. கடல் வழி பாதையில் அடைப்பு இருப்பதால் தோண்டி தூர்வார நீண்ட நாட்கள் ஆகும் போல கிடக்கு ..😊
  18. நம்பிக்கை கீற்று தென்படுகிறது.. ரொம்ப ஸ்ட்ரிக்கா சொல்கிறார் போல இருக்கு தோழர்..😊
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.