வீதியோரம்.
மலர் .......... 6.
மாலைப்பொழுதில் இருள் கூடிவரும் நேரம், வீதியின் எதிர்பக்கத்தில் சொகுசுக் கார் ஒன்று வந்து நிக்கின்றது. அதில் இருந்து தம்பதிகள் இருவர் வீதியைக் கடந்து கடைக்கு வருகின்றனர். அப்போது அந்தக் காரின் முன்னால் பேரூந்து ஒன்றும் வந்து நிக்க அதில் இருந்து பிரயாணிகளும் தட தடவென்று இறங்கி வருகின்றனர். முன்னாள் வந்த பெண் கடைக்குள் வந்து மலசல கூடத்தை விசாரித்துக் கொண்டு அங்கு செல்கிறாள். அவளைத் தொடர்ந்து அவனும் போகிறான். சிறிது நேரத்தில் தமது கடமைகளை முடித்துக் கொண்டு இருவரும் கடைக்குள் வருகிறார்கள்.கடை ஆட்களால் நிறைந்து இருக்க இரவு வியாபாரம் களைகட்டுகிறது. அவர்கள் இருவரும் தேவையானதை வாங்கி சாவகாசமாய் சாப்பிடுகிறார்கள். பஸ்ஸில் வந்தவர்களும் உணவருந்திவிட்டுப் போக அதுவும் புறப்பட்டுப் போகின்றது. அந்த இடத்தில் வேறொரு மினிவான் வந்து நிக்கின்றது. அந்தப் பெண்ணும் கணவனிடம் நீங்கள் இங்கு இருங்கள், நான் காருக்கு சென்று பிள்ளையை தூக்கிக் கொண்டு வருகிறேன். அவன் இன்னும் எழும்பி இருக்க மாட்டான் என்று சொல்லிவிட்டுப் போகிறாள். சற்று நேரத்தில் எதிர்ப் பக்கத்தில் ஒரே பரபரப்பு.அந்தப் பெண் குழறிக் கொண்டு கடைக்கு ஓடி வருகிறாள். “கடவுளே நான் இனி என்ன செய்வேன் காருக்குள் இருந்த என்ர பிள்ளையைக் காணவில்லையே. தன் மனைவியின் குரல் கேட்டு எழுந்தவன் வெளியே வந்து பார்க்க அவள் காலில் பாட்டா தடுக்க தோளில் துப்பட்டா பறக்க தடுமாறி ஓடி வருகிறாள்.
— என்னடி என்ன ஆச்சு .
— என்னங்க, நம்ம குழந்தையை காரில் காணவில்லை. கதவெல்லாம் திறந்திருக்கு. நீங்கள் காரை சரியாகப் பூட்டினீர்களா என்று கேட்க, அவனும் தான் அவசரத்தில் பூட்டவில்லையோ என யோசித்துக் கொண்டு காருக்கு ஓடுகின்றான். காரின் பின் கதவு திறந்திருக்க பிள்ளை படுத்திருந்த கூடை கீழே கிடக்கு. அதனுடன் இருந்த பையும் அதில் இருந்த மா, பிஸ்கட் எல்லாம் நிலத்தில் சிதறிக் கிடக்கு. சில பொருட்கள் காட்டினுள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பரந்துபோய் கிடக்கு. இருட்டாகி விட்டதால் சிலர் டோர்ச் லைட் அடித்துப் பார்க்க சிலர் வண்டியின் லைட்டை காட்டுப்பக்கமாய் திருப்புகிறார்கள்.ஆங்காங்க்கே விலங்குகளின் காலடித் தடங்கள் தென்படுகின்றன. அவர்கள் எல்லோரும் நரியோ ஓநாயோதான் பிள்ளையை இழுத்துக் கொண்டு ஓடியிருக்கும் என்று கதைத்து கொள்கிறார்கள்.அதற்குள் யாரோ போலீசுக்கு அறிவித்து அவர்களும் வந்திருந்தார்கள். அவனும் அருகில் இருந்த இராணுவத்துக்கு தன்னை அறிமுகப்படுத்தி கடிதம் ஒன்று ஒரு வண்டியில் குடுத்து விட சற்று நேரத்தில் அவர்களும் தகுந்த ஆயத்தங்களுடனும், மோப்ப நாய்களுடனும் இரு ட்ரக்குகளில் வந்து இறங்குகிறார்கள்.எல்லோருமாய் டார்ச் லைட்டுகளுடன் காட்டுக்குள் பல பக்கங்களுக்கும் தடம் பார்த்து பிரிந்து தேடித் போகிறார்கள். அவள் அந்த வீதியோரத்தில் தன் தலையில் அடித்துப் புலம்பிக் கொண்டிருக்கிறாள். கடவுளே ஏழு வருடங்களின் பின் தவமிருந்து பெற்ற பிள்ளை. இன்னும் இருமாதங்களில் அவனுக்கு இரண்டாவது பிறந்தநாள் வருகிறது.நான் இனி என்ன செய்வேன். “கடவுள் இன்பத்தை தரும்போது ஒன்றுக்குப் பத்தாகத் தருவார் . துன்பத்தைத் தரும்போது பத்துக்கு பதினொன்றாய் தருவதுதான் வாடிக்கை போலும்” கதறி அழுகிறாள்.
சில மணி நேரங்களின் பின் காட்டுக்குள் சென்றவர்கள் எல்லாம் வெறுங்கையுடன் திரும்பி வருகின்றார்கள்.ஒரு போலீஸ்காரர் அவர்கள் இருவரிடமும் நடந்த சம்பவங்களையும், அவர்கள் பெயர் விலாசங்களையும் விசாரித்து பதிவு செய்து கொண்டிருக்கிறார். அவன் மனைவி குழந்தையுடன் நாட்டுக்குள் சுற்றுலா போய்விட்டு வரும் வழியில் சிரமபரிகாரம் செய்ய இங்கு வண்டியை நிறுத்தியிருக்கிறான். காரில் வேறு ஏதாவது பொருட்கள் காணாமல் போயிருக்கின்றதா என்று சோதித்துப் பார்க்கின்றார்கள். கார் டாஸ்போர்ட்டில் இருக்கும் பணம் முதலான பொருட்கள் எல்லாம் இருக்கின்றன, அவளது கைப்பையில் இருக்கும் பணம், சிறு நகைகள்,அவசியமான மேக்கப் பொருட்கள் மற்றும் காண்டம் எல்லாம் அப்படியே இருக்கின்றன.
— என்னடி இது, இது எப்படி இங்கே என்று காண்டத்தைக் காட்டி அவன் கேட்க …..
— போதும் நீ முடிட்டு போய் பிள்ளையைத் தேடு…. பிறகு இருக்கு உனக்கு என்று அவள் சொல்ல …..
— என்ன சொல்கிறாய் நீ …..
— உன் வண்டவாளமெல்லாம் எனக்குத் தெரியும்…… பாக்கிறவளோடெல்லாம் படுக்கிற உனக்குதான் இதுகள் தேவை ……எனக்கு இல்லை……என்று சொல்ல இவள் என்ன சொல்ல வருகிறாள்…… யோசிச்சவன் அட …… ஒருவேளை நான் கழுவப் போட்ட களுசான் பொக்கட்டுக்குள் இருந்து எடுத்திருப்பாளோ என்று நினைக்கும் போது ……. நாய்களின் இரைச்சல்களுடன் மற்றவர்களும் அங்கு வந்துவிடுகிறார்கள் …..
அதனால் அவர்கள் அங்கிருந்த தடயங்களை வைத்து பிள்ளையை ஏதோ விலங்குகள்தான் இழுத்துக் கொண்டு போயிருக்க வேண்டும் என்னும் முடிவுக்கு வருகின்றார்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு மேலாகி விட்டது.இரவின் நிசப்பத்தில் காட்டு விலங்குகள் ஊளையிடுவதும் ஆந்தைகள், வௌவால்கள்,சில்வண்டுகள் போன்ற இரவாடிகளின் அலறல்களும் பயங்கரமாய் இருக்கின்றது.இதுவரை இது போன்ற ஒரு இரவு இங்கு இருந்ததில்லை. கடையிலும் கூட்டங்கள் எல்லாம் குறைந்து போய் ஓரிருவர் மட்டும் ஆங்காங்கே இருக்கின்றனர். இவ்வளவு களேபரத்திலும் அந்த விலைமாதுக்களின் தொழில் மட்டும் காட்டுக்குள் ஜோராய் போய் வந்து கொண்டிருக்கு. பின்பு பிள்ளையைத் தொலைத்த தம்பதிகளும் கூட போலீசுக்குப் பின்னால் போய் விட்டார்கள். விநோதனுக்கும் மணிமேகலைக்கும் கூட அந்தசம்பவம் மனசைப் பாதித்த படியால் இருந்தவர்களுக்கு தேவையான உணவுகளைப் பரிமாறிவிட்டு விளக்குகளை அணைத்து கடையை சாத்தி விட்டு வீட்டுக்கு போகிறார்கள். …………………………. 6.
மலர் .......... 🌼 6.
By
suvy ·