Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்புணர்ச்சி, மரணதண்டனை, காயடிப்பு - அ. மார்க்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

      வன்புணர்ச்சி, மரணதண்டனை, காயடிப்பு

- அ. மார்க்ஸ் -        

இரண்டு நாள் முன்னால் கூட (ஜனவரி 3) டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்பாட்டம் நடந்தது. இரு வாரங்களுக்கு முன் (டிசம்பர் 16 இரவு) அந்த முகமும் பெயரும் தெரியாத பெண்ணின் மீது கொடும் வன்முறையை மேற்கொண்ட ஆறு பேர் மீதான விசாரணையை விரைந்து முடித்து உடனடியாகத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பது கோரிக்கை.

அரசும் வழக்கமில்லா வழக்கமாக விரைந்துதான் செயல்படுகிறது. சம்பவம் நடந்து இருபது நாட்களுக்குள் - அந்தப் பெண் உயிர் துறந்து ஐந்து நட்களுக்குள் - டெல்லி போலிஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விட்டது. பத்து அல்லது பதினைந்து அமர்வுகளுக்குள் விசாரணை முடிக்கப்பட்டு ஆறு குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்கப்படும் எனச் செய்திகள் வெளியாகின்றன.

பத்திரிக்கைகளைத் திறந்தால் இரண்டு பக்கங்களுக்குக் குறையாமல் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான செய்திகள்தான். எங்காவது இதுபோன்ற அத்துமீறல்கள் வெளியே தெரிய வந்தால் பெரிய போராட்டங்கள் நடக்கின்றன. காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கிறது. அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு ஓடுகிறார்கள். உடனடி நிவாரணங்கள் அறிவிக்கப் படுகின்றன.

ஊடகங்களில் ஏராளமான கட்டுரைகள், விவாதங்கள், கருத்துக்கள் வெளிப்படுகின்றன. இவற்றில் சில மிக ஆழமாகப் பிரச்சினையை விவாதிக்கின்றன. பெண்கள் மீதான இத்தகைய வன்முறைகளை உடனடியாகத் தடுப்பதற்கான வழிமுறைகள், சட்டத் திருத்தங்கள், கண்காணிப்புகளை அதிகப்படுத்துதல், விரைவான நீதி வழங்கும் வழி முறைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் முதலியன குறித்து எராளமான கருத்துக்கள், யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.

காலங்காலமாக நடந்து வரும் பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து இப்படி ஒரு பிரக்ஞை உருவாகி இருப்பது ஆறுதலை அளிக்கிறது.

பொதுவாக மேலெழுந்துள்ள கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தோமானால் (1) நகர மையங்கள், கல்வி வளாகங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் ஆகியவற்றிலும், பேருந்து மற்றும் ரயில் பெட்டிகளிலும் காவல் இருப்பையும் கண்காணிப்பையும் மிகுதிப் படுத்துதல் (2) அவசர உதவித் தொடர்புகளை (Help Lines) மிகுதிப் படுத்துதல் (3) சட்டத்திலுள்ள ஓட்டைகளை அடைத்தல், பாலியல் வன்முறை தொடர்பான தடையவியல் நுண் கருவிகளின் பயன்பாட்டை அதிகப்படுத்துதல், விரைவு நீதிமன்றங்களை அமைத்தல், காவல் மற்றும் நீதித்துறையினருக்கு பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான உணர்வூட்டல் (Sensitization) ஆகியன ஒரு புறம் முன்வைக்கப்பட்டன. ஓரளவு இவை பொதுக்கருத்துக்களாக உருப் பெற்றன எனலாம். இவற்றில் சில குடிமக்கள் மீதான கண்காணிப்பை (Surveillance) மிகுதிப் படுத்துவனவாகவும், அவர்களின் அந்தரங்கங்களில் தலையிடுவதாகவும் இருந்தபோதும் இன்றுள்ள உணர்ச்சிகரமான சூழலில் இவை ஒரு பொதுக் கருத்தாக உருப்பெற்றதில் வியப்பில்லை.

இன்னொரு பக்கம் வன்புணர்ச்சிக் குற்றங்களுக்கான தண்டனையை அதிகப்படுத்துதல், ஆன்ட்ரோஜின் மருந்துகளைச் செலுத்திக் காயடித்தல், அதாவது ஆண்மை நீக்கம் செய்தல் (Castration)) முதலான கருத்துக்களும் பெரிய அளவில் முன்வைக்கப்பட்டன. வன்புணர்ச்சிக்கு ஆயுள் தண்டனைவரை அளிப்பதற்கு இந்தியச் சட்டங்களில் இப்போதே வழி இருப்பதால் இதனினும் அதிகமான தண்டனை என்பது மரண தண்டனைதான். போராட்டத்தை முன்னெடுத்த மத்திய தர வர்க்கத்தின் ஒரு பகுதியிடமிருந்து மட்டுமின்றி அரசுத் தரப்புகளிலிருந்தும் இக்கருத்து அதிகமாக முன்வைக்கப்பட்டது. காங்கிரஸ், பா.ஜ.க முதலான கட்சிகள், ஜெயலலிதா, மம்தா பானர்ஜி முதலான முதல்வர்கள், சில முக்கிய பத்திரிக்கைகள், அனைத்து மதவாதிகள் எனப் பலதரப்பிலிருந்தும் இக்கருத்து இன்று முன்வைக்கப்படுகிறது.

எனினும் இப்பிரச்சினை குறித்து ஆழமாகச் சிந்திக்கும் சமூகவியலாளர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் முதலானோர் இந்த ஆலோசனைகளை ஏற்கவில்லை. மரண தண்டனை என்பது தண்டனையை அதிகரிப்பதன் மூலம் குற்றச் செயல்கள் குறைந்துவிடும் என்கிற எதிர்பார்ப்பிலிருந்தும், ஆண்மை நீக்கம் என்பது பாலியல் வன்முறைகள் காமவெறியினால் மட்டுமே நிகழ்கின்றன என்கிற நம்பிக்கையிலிருந்தும் எழுகின்றன. இரண்டுமே ஆதாரமற்ற தவறான நம்பிக்கைகள். மரண தண்டனை உள்ள நாடுகளில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாகவோ, இல்லாத நாடுகளில் அதிகரித்துள்ளதாகவோ ஆதாரமில்லை. கடுமையான தண்டனைகள் உள்ள சீனா போன்ற நாடுகளிலோ, முஸ்லிம் நாடுகளிலோ குற்றச் செயல்கள், பாலியல் குற்றச் செயல்கள் உட்படக் குறைந்தபாடில்லை. அதேபோல வன்புணர்ச்சி மற்றும் பாலியல் சீண்டல் குற்றங்கள் பெரும்பாலும் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்காகவும், அவமானப் படுத்துவதற்காகவும், அச்சுறுத்துவதற்காகவுமே மேற்கொள்ளப்படுகின்றன. சில நேரங்களில் மனத் தளர்ச்சி முதலானவையும் காரணமாக அமைகின்றன. வன்புணர்ச்சியையே தொழிலாகக் கொண்ட காம வெறியர்களல் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் மிக மிகக் குறைவு. 92 சதப் பாலியல் வன்முறைகள் ஏற்கனவே தெரிந்த நபர்களால் ஏற்படுபவை. உறவினர்கள், தெரிந்தவர்கள், அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரால் வீடுகள், அலுவலகங்கள், காவல் நிலையங்கள் இப்படியான இடங்களில்தான் நிகழ்த்தப்படுகின்றன.

நேற்று (ஜனவரி 4) உள்துறை அமைச்சகத்தால் டெல்லியில் கூட்டப்பட்ட காவல் மற்றும் நிர்வாக உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் நல்ல வேளையாக இவ்விரு முடிவுகளும் எடுக்கப்படவில்லை. எனினும் சிறுவர் சட்டத்தில் (Juvenile Act), ‘சிறுவர்’ என்பதன் வரையரையின் உச்ச எல்லையை 18 வயதிலிருந்து 16 வயதாகக் குறைக்க வேண்டும் என்கிற கருத்து பலராலும் வற்புறுத்தப்பட்டுள்ளது. டெல்லி வன்முறையில் பங்கேற்ற ஆறு பேர்களில் சுமார் 18 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் அல்லது இளைஞனே முக்கிய பங்கு வகித்தான் என்பது இந்தக் கோரிக்கையின் பின்புலமாக உள்ளது.

அந்தப் பையன்தான் அந்தப் பெயர் தெரியாத பெண்ணையும் அவளது நண்பனையும் அந்த chartered bus ல் ஏறுமாறு கூவி அழைத்துள்ளான். உள்ளே வந்தவர்களிடம், “இந்த நேரத்தில் எங்கே சுத்தீட்டு வர்ரீங்க?” என ஆபாசமாக ஏதோ கேட்டுள்ளான். பெண்ணுடன் கூட வந்த நண்பன் அவனை அறைந்துள்ளான். பையன் திருப்பி அடித்ததோடு மற்றவர்களையும் அடிக்கத் தூண்டியுள்ளான். பிளேடு, இரும்புக் கம்பி ஆகியவற்றைப் பயன்படுத்தச் சொன்னதும் அவனே. 18 வயதுக்குக் குறைவு எனக் காரணம் காட்டி அவனை மரண தண்டனையிலிருந்து விடுவித்து விடக் கூடாது என்பதே சிறுவருக்கான வரையறையை 18லிருந்து 16ஆகக் குறைக்க வேண்டும் என்பதன் பின்னணி.

இந்தச் சிறுவனிடம் இத்தனை வன்முறை குடிகொண்டிருந்ததன் பொருளென்ன? எப்படி நிகழ்ந்தது இது? அந்தச் சிறுவன் சின்ன வயதிலேயே தனது கிராமத்து வீட்டிலிருந்து ஓடி வந்தவன், பிரச்சினையைச் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும் என விரும்பியவர்கள், இந்தச் சிறுவன் தன் குழந்தைமையை இழந்துபோன நிலையின்பால் கவனத்தை ஈர்த்தார்கள். ஆயுத இயக்கங்களால் குழந்தைப் போராளிகளாகக் கட்டாயமாகக் கொண்டு வரப்பட்ட குழந்தைகள் மற்றவர்களைக் காட்டிலும் கொடூரமாக இருக்கும் சாத்தியத்தை கவனப்படுத்தினார் சதானந்த் பட்வர்தன். அமெரிக்க ஆக்ரமிப்பை எதிர்த்த வியட்நாம் போராட்டத்தின்போது ஒரு விட்னாமியச் சிறுமி, அமெரிக்க இராணுவ வீரன் ஒருவனைத் துப்பாக்கி முனையில் நடத்திச் செல்லும் படமொன்று பிரசித்தம். ஏகாதிபத்தியத்தைத் துப்பாக்கி முனையில் நிறுத்திய வீரச்சிறுமி அன்று எல்லோராலும் வியக்கப்பட்டாள். பின்னாளில் அது குறித்த விமர்சனங்கள் வந்தன. குழந்தைகளை இப்படிப் பயன்படுத்துவதன் பன்முகச் சிக்கல்கள் விவாதத்திற்குள்ளாயின.

ஆயுதப் போராட்டங்களால் மட்டுமல்ல, வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுவர்கள் தங்கள் குழந்தைமையை இழக்கின்றனர். நகரத்திற்கு விரட்டப்படுகின்றனர். நகரம் அவர்களை இருகரம் நீட்டி வரவேற்பதில்லை. குறைந்தபட்சமாக அவர்களின் இருப்பைக்கூட அங்கீகரிப்பதில்லை. பல்வேறு உதிரித் தொழில்கள், எடுபிடி வேலைகள், சிறு குற்றச் செயல்கள் இவற்றின்மூலம் உருவான மனநிலையே அவர்களின் இழந்த குழந்தைமையின் இடத்தைப் பூர்த்தி செய்கின்றன.

இன்றைய நகர உருவாக்கம் இத்தகைய குற்றச் செயல்களின் நாற்றங்காலாய் உருப் பெறுவதின் பின்னணியும் கவலைக்குரிய ஒன்று. சென்ற நூற்றாண்டின் முற்பாதிவரை நகரம் என்பது இத்தகைய உதிரித் தொழிலாளிகளிடமிருந்தும், கிராமங்களிலிருந்து கூலித் தொழிலாளிகளாகப் புலம் பெயர்ந்து வருபவர்களிடமிருந்தும், இதர அடித்தள மக்களிடமிருந்தும் இப்படி அந்நியப்பட்டிருக்கவில்லை. Neighborhood – அருகாமை என்கிற கருத்தாக்கம் அப்போது செயலில் இருந்தது. மாளிகையில் வசிப்பவர்களானாலும் குடிசைகளில் வசிப்பவர்களானாலும் பகிர்ந்து கொள்ள ஒரு பொது வெளி இருந்தது. ஏதோ ஒரு வகையில் ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்கும் நிலை இருந்தது. காலையில் ஒரே கடைத்தெருவில் காய்கறிகளோ வீட்டுப் பொருட்களோ வாங்குபவர்களாக அவர்கள் சந்தித்துக் கொள்ளக் கூடும். மாலையில் ஒரே தியேட்டரில் அவர்கள் சினிமா பார்க்கக்கூடும். ஒருவர் பால்கனியில் அமர்ந்தும், மற்றவர் தரையில் அமர்ந்தும் படம்பார்த்திருந்த போதிலும், படம் முடிந்தபின் அவர்கள் ஒரே தியேடரிலிருந்து ஒன்றாக வெளியே வந்திருப்பார்கள்.

இன்று நகரம் முற்றிலும் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. Neighborhood என்கிற கருத்தாக்கம் காற்றில் கரைந்துவிட்டது.. மல்டி ப்ளெக்ஸ்கள், ஷாப்பிங் மால்கள், வால்மார்ட், ரிலையன்ஸ் ரீடெய்ல் ஷாப்கள்… இப்படியான நகரக் கட்டமைப்பிலிருந்து முற்றிலும் அந்நியப்பட்டவர்களாகக ஆகக் கீழே உள்ள மக்கள் வாழ்கின்றனர். இவர்களை நகரத்தின் மையத்திலிருந்து அகற்றி சுமார் 30 கி.மீ தள்ளிக் குடியமர்த்துவதுதான் இன்று உலக வங்கியின் கொள்கையாக உள்ளது. சென்னையில் இப்படி உருவாகியுள்ளதுதான் துரைப்பாக்கம், கண்ணகி நகர் முதலான குடியிருப்புக்கள். உலகத் தரமான நகரங்களின் குப்பைத்தொட்டிகளாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பகுதிகளில் உருவாகி வரும் மாஃபியாக்கள், ரவுடியிசம் ஆகியவற்றைக் காட்டிலும் கவலைக்குரிய அம்சம் இம்மக்களும் நகரத்தின் மத்தியதர மற்றும் உயர் வர்க்கத்தினரும் சந்திக்கும் பொது வெளி ஒன்று இன்று இல்லாமல் போனதுதான்.

நகரம் இன்று விரிவடைந்துகொண்டுள்ளது. பழைய நகர மையங்களிலிருந்து தூரங்களில் புதிய துணை நகரங்கள் உருவாகி வருகின்றன. இடைப்பட்ட தொலைவுகள் விண்ணை முட்டும் கான்க்ரீட் கனவு மாளிகைகளால் நிரப்பப்படுகின்றன. உருவாகி வரும் மத்திய தர வர்க்கத்தின் ஒரு பகுதி இத்தகைய துணை நகரங்களில் வாழ்கின்றனர். பஸ், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் முதலியனவே இந்தத் தொலைவைக் கடக்க இவர்கள் பயன்படுத்தும் சாதனங்கள். இந்தச் சாதனங்களின் பயன்பாட்டின் அடியாக இந்த இரு வர்க்கதினருக்குமிடையே ஒரு Neighborhood உணர்வு உருவாகும் சூழல் இன்றில்லை என்பதுதான் சோகம். ஒரு பஸ் அல்லது ஆட்டோவில் பணி புரியும் ஒரு உதிரித் தொழிலாளிக்கும், அவனைப் பொருத்தமட்டில் ஒரு Non Place லிருந்து வெளிவந்து தனது வாகனத்தில் ஏறும் ஒருவர் மீது ஒரு Neighborhood உணர்வு உறுப்பெறாதபோது அந்த வெற்றிடத்தில் சில நேரம் ஒரு வன்மம் குடிபுகுந்து விடுகிறது.

OMR எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலை இதற்கொரு எடுத்துக்காட்டு. தரமணி தொடங்கி உருவாகியுள்ள பன்னாட்டு நிறுவனங்கள், சாஃப்ட்வேர் தோட்டங்கள் இவற்றினூடாகச் அடிக்கடி ஒரு தொலைக்காட்சி ஸ்டுடியோவிற்கு நான் அழைத்துச் செல்லப்படுவேன், அப்போதெல்லாம் நானே இந்தக் கார்பொரேட் கட்டிடக்கலையம்சங்களின் ஊடாக உருவாகிவரும் புதிய இலக்கணங்களிலிருந்தும் விதி முறைகளிலிருந்தும் அந்நியப்பட்டு உணர்வேன்.

பளபளவெனக் காட்சியளிக்கும் கட்டிடங்கள், இணைப்புச் சாலைகள், அவற்றினூடாக வழுக்கிச் செல்லும் புதிய சொகுசுக் கார்கள், வண்டியை நிறுத்தி அடையாள அட்டைகள், சூட் கேஸ்கள் முதலியவற்றைச் சோதித்த பின்பே அனுமதிக்கும் தானியங்கிக் ‘கேட்’கள், அடையாள அட்டையைப் பொருத்தினால் மட்டுமே திறக்கும் கண்ணாடிக் கதவுகள்…. இவை எல்லாம் என்ன வகையில், இவற்றிலிருந்து அந்நியப்பட்டுப் போயுள்ள அந்த “இரண்டாம் குடிமக்களுக்கு” அர்த்தமாகும்? அவர்களைப் பொருத்த மட்டில் இவை எத்தனை வண்ணமயமாகவும், விண்ணை முட்டுவதாகவும், கண்ணைப் பறிப்பதாகவும் உள்ளபோதும், வெறும் Non Places தான்.

பொது வெளி சாத்தியமில்லாமற் போனதன் விளைவாக இந்த இரண்டாம் குடிமக்களுக்கும், முதற் குடிமக்களுக்கும் ஏற்பட்டுள்ள இடைவெளியில் கொப்புளிக்கும் வன்மம் ஆணாதிக்க மதிப்பீடுகளாலும் குறியீடுகளாலும் தகவமைக்கப்படுவதுதான் வேதனை. மேற்தட்டு வாழ்நிலையானாலும் சரி, அடித்தட்டு வாழ்நிலையானாலும் சரி, உதிரி வாழ்நிலையானாலும் சரி எல்லாமும் ஒன்றுபடும் புள்ளி ஒன்று உண்டென்றால் அது ஆண், பெண் தன்னிலைக் கட்டமைப்புகள்தான். பெண்ணுடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு ஆணும் மேல் நிலைத் தகுதிக்குரியவனாகவே எல்லாச் சமூகங்களிலும் கட்டமைக்கப்படுகிறான். புதிய சூழல்கள் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களின் விளைவாக இன்று ஆளுமை மிக்க பெண்கள் வேறெப்போதுமில்லாத தன்னம்பிக்கையுடன் தம்மை உறுதிப் படுத்திக் கொண்டு வெளிப்படுவதையும், அவர்களின் இருப்பு சகல இடங்களிலும் உணரப்படுவதையும் காணும்போது ஆணின் தன்னிலை பதட்டதிற்குள்ளாகிறது.

தான் நடமாடியும், தொழில் புரிந்தும் தனக்கு எவ்விதத்திலும் சொந்தமில்லாத இந்த நகரவெளியில் ஆளுமை மிக்க இத்தகைய பெண்களைக் காண நேர்கிற ஒரு இரண்டாம் நிலைக் குடிமகனின் தன்னிலையும் இப்படிப் பதட்டத்திற்குள்ளாகிறது. வாய்ப்புக் கிடைக்கும்போது இந்தப் பதட்டம் பெண்ணுடல் மீது வன்முறையாய் விடிகிறது. இந்த வன்முறையின் அளவு, வீச்சு முதலியன சம்பந்தப்பட்ட அந்த ஆண் அல்லது ஆண்களின் அன்றைய மனநிலை, சூழல், வளர்ப்பு, இயல்பு முதலானவற்றைப் பொருத்ததாகிவிடுகிறது.

ஆனால் இந்தப் பதட்டம் எல்லா ஆண்களுக்குமே ஏற்படுகிறது. சக வர்க்கத்து ஆண்கள் மத்தியுலும் கூட ஏற்படுகிறது. ஏன், ஆணாதிக்க மதிப்பீடுகளைச் சுமந்து திரியும் பெண்களிடமும் கூடத்தான் ஏற்படுகிறது. அரைகுறை ஆடையுடன் ஏன் திரிகிறீர்கள், இரவு பத்து மணிக்குப் பெண்கள் ஊர் சுற்றினால் இப்படி ஆகாதா? அய்ய்யோ, பெண்கள் ‘பாரு’க்குப் போவதா? அப்புறம் ஏன் புலம்புகிறீர்கள்? முக்கி முனகி ஆபாசப் பாட்டுப் பாடும் பின்னணிப் பாடகியைக் குறித்து அசிங்கமாக எழுதினால் கோபமென்ன வேண்டியுள்ளது? வீடுகளில் வயது வந்த பிள்ளைகளை தனியே படுக்க வைக்காதீர்கள், செல் போன் வாங்கிக் கொடுக்காதீர்கள், டூ வீலர் வாங்கித் தராதீர்கள் என்றெல்லாம் இரண்டு வாரங்களாக இந்தியாவெங்கும் எழுந்த குரல்கள் எதைக் காட்டுகின்றன? ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு சாத்தியமான வன்புணர்ச்சியாளன் உள்ளான் என்பதைத்தானே? பாதிக்கப்படுபவர்களையே குற்றவாளிகளாக்குவதுதானே இது?

இப்படியெல்லாம் கேட்பவர்கள்தான் மரணதண்டனையையும் காயடிப்பையும் வலியுறுத்துபவர்களாகவும் உள்ளார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். நோயை விட்டுவிட்டு நோய்க் குறிகளுக்கு மரண வைத்தியம் செய்தால் போதும் என்று இவர்கள் மனதார நம்புகின்றனர்.

பிரச்சினை இன்னும் சிக்கலானது. நம் எல்லோருக்குள்ளும் ஒளிந்துள்ள வன்புணர்ச்சியாளர்களைப் பிடுங்கி எறிவதில் அடங்கியுள்ளது இறுதித் தீர்வு. அது மரணதண்டனை மூலமோ காயடிப்பின் மூலமோ சாத்தியமாகப் போவதில்லை.

 

http://www.vallinam.com.my/issue49/essay6.html

எல்லோருக்குள்ளும் ஒளிந்துள்ள வன்புணர்ச்சியாளர்களைப் பிடுங்கி எறிவதில் அடங்கியுள்ளது இறுதித் தீர்வு. அது மரணதண்டனை மூலமோ காயடிப்பின் மூலமோ சாத்தியமாகப் போவதில்லை
  • கருத்துக்கள உறவுகள்

மேற்குநாடுகளில் எல்லோரும் அவிட்டு விட்டவர்கள்தான்.. :D அது நமக்குச் சரிவராது.. :huh:

 

இதனால்தான் அந்தக்காலங்களில் பால்ய விவாகமுறை இருந்ததோ?? :unsure:

மேற்குநாடுகளில் எல்லோரும் அவிட்டு விட்டவர்கள்தான்.. :D அது நமக்குச் சரிவராது.. :huh:

 

இதனால்தான் அந்தக்காலங்களில் பால்ய விவாகமுறை இருந்ததோ?? :unsure:

 

இசை இது தப்பான கருத்துபோலத்தெரிகிறது.சிறுவர்களை நாசப்படுத்தல் ஏற்கமுடியாது.அதற்கு எங்கும் தண்டனையுண்டு.அதேபோல எந்த ஒரு பெண்ணின் சம்மதத்துடனும் யாரும் உறவு வைப்பதில் தப்பே இல்லை.உங்களுக்கு ஒன்று தெரியுமா.பெண் பிள்ளைகள் ருதுவாவதற்கு முன்பு தங்கள் குடும்பத்துக்குள்ளேயே உள்ள சிறுவர்களை முட்டி விடுவார்கள் (இது அவர்களின் பாசை)ருதுவானதின் பின் அவர்களுக்கு இது பற்றி ஏதுமே தெரியாது.சிலர் தொடர்வார்கள்.ஆனால் வன்புணர்வு தப்பானது.பிள்ளைகளைப்போன்றவர்கள் மீது ஆசைப்படுதல் மிகவும் கொடூரமானது.ஆகவே காயடித்து அவர்களை மக்களுடன் சேர்ந்து வாழ விடுதலே சாலச்சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் மிகவும் ஆக்கபூர்வமான வகையில், ஒரு இந்தியனின் பார்வையில், அழகாக, ஆய்ந்து எழுதியிருக்கின்றார்!

 

தனி மனிதன், குடும்பம், சமூகம், மாநிலம், நாடு என்று விரிந்து போகின்றது ஒரு தனிமனிதனின் பார்வை!

 

ஆனால் இந்திய தேசத்தைப் பொறுத்த வரையில், இந்தப் பாதையில் பல தொய்வுகள் ஏற்படுகின்றன.

 

களவு, விபச்சாரம், வரி ஏய்ப்பு, பெண்ணடிமைத் தனம், ஊழல்,ஏழைகள் பணக்காரர்களுக்கான இடைவெளி, தேவையில்லாத சமூகக் கட்டுப்பாடுகள் போன்றவை சமுதாயத்தில் மலிந்திருக்கின்றன!

 

இந்த அடிப்படையான, சமூக ஒழுங்கீனங்கள், ஓரளவுக்காவது நிவர்த்தி செய்யப்படாத வரை, இந்தப் பிரச்சனைகள் ஒரு போதும் தீர்க்கப் படப் போவதில்லை! 

 

வெறும் மரணதண்டனைகளால், அடிப்படைப் பிரச்சனைகள் தீர்ந்து விடாது!

 

உண்மையான பிரச்சனை தீர்க்கப் படும் காலத்தைப் பின்னோக்கி நகர்த்த மட்டுமே, மரணதண்டனைகள் பயன்படும்!

இணைப்புக்கு நன்றிகள், கிருபன்!

Quote "நேற்று (ஜனவரி 4) உள்துறை அமைச்சகத்தால் டெல்லியில் கூட்டப்பட்ட காவல் மற்றும் நிர்வாக உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் நல்ல வேளையாக இவ்விரு முடிவுகளும் எடுக்கப்படவில்லை. எனினும் சிறுவர் சட்டத்தில் (Juvenile Act), ‘சிறுவர்’ என்பதன் வரையரையின் உச்ச எல்லையை 18 வயதிலிருந்து 16 வயதாகக் குறைக்க வேண்டும் என்கிற கருத்து பலராலும் வற்புறுத்தப்பட்டுள்ளது. டெல்லி வன்முறையில் பங்கேற்ற ஆறு பேர்களில் சுமார் 18 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் அல்லது இளைஞனே முக்கிய பங்கு வகித்தான் என்பது இந்தக் கோரிக்கையின் பின்புலமாக உள்ளது"

 

 

சனத்தொகை பெருக்கத்துக்கு இன்னும் உதவும்

 

நல்லதொரு ஆக்கம், நன்றி பகிர்வுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ச‌மூக‌ அறிஞ‌ர்க‌ளை மேற்கோள் காட்டியிருந்தாலும் ஒரு த‌ர‌ப்பு அறிஞ‌ர்க‌ளை ம‌ட்டுமே ஆதரித்து  "ம‌ர‌ண‌ த‌ண்ட‌னை ப‌ய‌ன் த‌ராது" என்று எழுத‌ப் ப‌ட்டிருக்கிற‌து. ம‌ர‌ண‌ த‌ண்ட‌னை மட்டும‌ன்றி எந்த‌க் க‌டுமையான‌ த‌ண்ட‌னையும் குற்ற‌ச் செய‌ல்க‌ளை செய்ய‌க் காத்திருக்கும் ஏனையோரை ப‌ய‌முறுத்தி (deterence) அப்பாவிக‌ளைப் பாதுகாக்கிற‌து. இத‌னால் ம‌ர‌ண‌ த‌ண்ட‌னை இது போன்ற‌ நிதான‌மான‌ திட்ட‌மிட்ட‌ குற்ற‌ங்க‌ளுக்கு வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌ வேண்டும். காய‌டித்த‌லும் ம‌ர‌ண‌ த‌ண்ட‌னை தான். "அது" இல்லாம‌ல் "மொட்டையாக‌த்" திரிய‌ வேண்டிய‌ நிலையை நினைத்தால் காமுக‌ர்கள் சில‌ பேராவ‌து திருந்த‌க் கூடும். சில‌ காமுக‌ர்க‌ள் ப‌ய‌த்தினால் திருந்தும் போது ஒரு பெண்ணோ குழ‌ந்தையோ காப்பாற்ற‌ப் ப‌டக் கூடும். இது தான் முக்கிய‌ம். அதை விட்டு விட்டு ச‌மூக‌த்தை மாற்றுவோம் குற்ற‌ம் குறையும் என்று இருந்தா‌ல் எத்த‌னை பெண்க‌ளை இழ‌க்க‌ வேண்டியிருக்கும்? அவ‌ர்க‌ள் என்ன‌ ச‌மூக‌ மாற்ற‌த்தின் ப‌லிக்க‌டாக்க‌ளா? இந்த‌ ஆறு பேர்க‌ள் போன்ற‌ மிருக‌ங்க‌ள் இல்லாம‌ல் போவ‌தில் என்ன‌ தீமை வ‌ந்து விட‌ப் போகிற‌து ச‌மூக‌த்திற்கு?

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குநாடுகளில் எல்லோரும் அவிட்டு விட்டவர்கள்தான்.. :D அது நமக்குச் சரிவராது.. :huh:

 

:unsure:

அப்படி இருந்தும் எங்களுக்குள் ஒளிந்துள்ள வன்புணர்ச்சியாளனை அடக்கி வைச்சிருக்கோமல்ல :D :D

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களுக்கு ஒரு பிரச்சினை என்று வரும் போது நீதி நியாயங்களைப் பக்கம் பக்கமாக எழுதலாம். அதே பிரச்சினை எனக்கு வரும்போது நீதி நியாயம் எல்லாம் பறந்தோடி விடும். ஒரு பெண்ணை கொன்றுவிடுவதை விட அவளைப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துவது மிகமோசமான குற்றம். இது அவள் உயிரோடு இருக்கும்போதே கொன்றுவிடுவதைப் போன்றது. எனது தாய்க்கு, உடன்பிறந்தாளுக்கு, மனைவிக்கு, மகளுக்கு, மருமகளுக்கு, பேரப்பிள்ளைக்கு இக் கொடுமை நிகழ்ந்தால் எனது தீர்ப்பு என்னவாயிருக்கும் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் கேட்டுப் பாருங்கள். நிச்சயம் அந்தக் கொடூரர்கள் கொல்லப்படவேண்டும் என்றே பதிலாக இருக்கும்.

 

மரண தண்டனையையும், காயடிப்பையும் நான் தீவிரமாக ஆதரிக்கின்றேன். அந்தப் 17 வயதுப் படுபாவியை 18 வயது வந்த பின்னர் தூக்கிலிடவேண்டும் அல்லது அண்ணகனாக்கி விட வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.