Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காலம் தின்ற பாசங்கள்.....

Featured Replies

       யாரும் தன்ர கதையை காது கொடுத்து கேக்கினம் இல்லை என்ற இயலாமையை   மெல்லிய முனுமுனுப்பால் ஒருத்தருக்கும் கேட்டுவிடக்கூடது என்ற கவனத்துடன் கொட்டிக் கொண்டிருந்தாள் கண்மணி. என்னதான், தான் புறுபுறுத்தாலும், யாரும் தன்னை கண்டுகொள்ளப் போவதில்லை என்ற உண்மை கண்மணிக்கும் புரிந்திருந்தது. இருந்தும், அவளால் புறுபுறுப்பதை விட்டு விட  முடியவில்லை.

      புறுபுறுத்துக்கொண்டே வீட்டின் உற்புறத்தை எட்டிப் பார்த்தாள். ஒரு பேத்தி ரிவியிலும், மற்றவள் கணணியிலும் தங்கள் தலையை புதைத்துக்கொண்டிருத்தார்கள். அவர்களை சொல்லிக் குற்றமில்லை உதுகளை வேண்டிகொடுத்து பிள்ளையளைக் கெடுத்து வச்சிருக்கிற தாயையல்லோ சொல்லணும், உதுகளை அடிச்சு கலைக்கனும் ஓடிப்போய் விளையாடுங்கோ எண்டு, கண்டறியாத கரண்டு ஒண்ட கொடுத்து பொடியள் உதிலேயே கிடக்குதுகள். என    தன்மட்டில் கதைத்தபடி திரும்பியவள், கட்டிலில் தலையணைக்கு பக்கத்தில் கிடந்த வியாழன் மாற்றம் என்ற புத்தகத்தை எடுத்துப் பார்க்கத் தொடங்கினாள்.

       இந்த தடவையோடு  குறைந்தது ஒரு ஆறு எழு  தரமாவது அந்த புத்தகத்தை படித்திருப்பாள் கண்மணி. இவள் மூத்தவள் ரோகினி தானே என தனக்குள் சொல்லியபடி மீண்டும் சலிப்பில்லாமல் அதன் பக்கங்களை தட்டித் தேட தொடங்கினாள்.

      கண்மணி, அந்த அறையை தனக்கான எல்லாமுமாக மாற்றி இருந்தாள். அதிக உயரமில்லாத கட்டில், அளவான மேசை, உடுப்புகள் அடுக்கிவைக்கும் ஒரு சின்ன அலுமாரி. சுவாமிப்படத்தட்டு, ஒரு டோர்ச லைட், ஒரு மெல்லிய நீளமான தடி  என அடிப்படைத்தேவைகளையும், ஒரு ரேடியோ, மேசைமின்விசிறி,  என மேலதிக தேவைகளை இயன்றவரை சுருக்கியும், போதிய இடப்பரப்பினை உள்வாங்கியும், வெளிச்சம் வரக்கூடியதாகவும் அறையை ஒழுங்கு படுத்தி இருந்தாள் கண்மணி. கணவன் இறந்தபின் மகளோடு வந்திருக்க தொடங்கிய நாட்களில் உருவாகிய தனிமை மட்டும் அவளை விட்டு நீங்காமல் அந்த அறையை சூழ்ந்திருந்தது.

      எந்த நேரமும் வீட்டு சாமானுகள் எல்லாத்தையும் பரப்பி போட்டு வீட்டு வேலைகள் எல்லாத்தையும் இழுத்து செய்வதையும் பின்  அள்ளி கொட்டுவதுவதும் தெரிஞ்சு அடுக்குவதுமாக இருந்த கண்மணிக்கு அந்த அறைக்குள் அடங்கிக்கிடப்பது பெரும் அசதியாகதான் இருந்தது.

 ஆளணியும் சத்தம் சளாருமாகவே கண்மணியின் காலங்கள் பெரும்பாலும் கழிந்திருந்தது. சூரியன் எழும்ப முதல் எழும்பி தோட்டத்துக்கு போகும் கணவனுக்கு தேநீர் போட்டுக் குடிக்கவைத்து அனுப்பி விட்டு வீட்டு வேலைகளை தொடங்கினாள் என்றால், மகளை பள்ளிக்கூடம் அனுப்பும் வரை ஓய்வு இருக்காது. பின்னர் ஆடுமாடுகளை அவிழ்த்துக்கொண்டு காலைச் சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு வெளிக்கிட்டால் ,கண்மணியிடம் தோட்ட வேலைகளை கொடுத்துவிட்டு சந்தைக்கு கிளம்பிவிடுவார் கண்மணியின் கணவர். வரும் போது மீனோ கறியோ எதோ ஒன்று வரும்.

       மளமள என்று மத்தியான சமையலை முடிக்க, தோட்டத்தில இருந்து வரும் கணவன் குளித்துவிட்டு மகளுக்காகக் காத்திருக்க தொடங்குவார். மகளும் வர மதிய சாப்பாடு முடிய, மகள் விளையாட என்று பக்கத்து வீட்டு பொடிபெட்டையளோடு போய் விடுவாள்.சூரியன் சாய ஆடுமாட்டுக்கு புல்லுவெட்டி, குலை வெட்டி கட்டையில போட்டு, அதுகளை அவிழ்த்து வந்து பால் எடுத்து, தமக்கைக்கும் கொடுத்துவிட்டு காச்சி அப்படியே அடுப்பில விட்டுவிட்டு இரவு சமையலை செய்து நிமிர நேரம் ஒன்பதாகி விடும்.

   ஒன்பதேகால் பி பி சீ செய்தி கேட்டுக்கொண்டே, இரவுச்சாப்பாட்டினை முடிப்பார்கள் மூவரும். மகளுக்கு பாயை போட்டு கொடுத்து விட்டு,விறாந்தையில இருக்கிற வாங்கிலில், கணவரின் படுக்கையை போட்டு சரிசெய்து, அப்படியே செம்பில தண்ணியும் எடுத்து வந்து வைத்துவிட்டு, கோழிகளை எண்ணிப்பார்த்து கூட்டை பூட்டிவிட்டு வந்து கண்மணி படுக்கைக்கு போக மணி பதினொன்று ஆகிவிடும். மறுநாள் விடிய மீண்டும் ஓடத் தொடங்குவாள்.

     காலமும் யுத்தமும் மாறிமாறி அலைக்கழித்தாலும், மகளை படிப்பித்து ஒரு ஆசிரியையாக்கி, கல்யாணமும் கட்டிக்கொடுத்த பின்னாலும், கண்மணியின் ஓட்டம் நிற்கவில்லை. ஊர் உறவுகள் என்றும், கணவன் தொழில் என்றும் தொடர்ந்தும் ஓடிக்கொண்டு இருந்தாள். தொழில் நிமித்தம் யாழ்ப்பாணத்தில் வீடு எடுத்து சென்ற மகள்,  எதுக்கு இப்போ உந்த தோட்ட வேலையள் பேசாமல் விட்டு விட்டு வந்து எங்களோடு வீட்டில இருங்கோ என்று கத்தினாலும், இரு பிள்ளை உன்னோடு தானே வந்திருக்கவேணும், எங்களுக்கு வேற யார் இருக்கிறா? கைகால் இருக்கிறமட்டும் கொஞ்ச நஞ்ச வேலைகளை செய்வம் என்று சமாளித்தபடி கணவனும் மனைவியுமாக தோட்டம் துரவுகளுக்கு போறதும், ஆடுமாடுகளை கவனிப்பதுமாக ஆளைஆள் சார்ந்து போய்கொண்டு இருந்தது காலம்.

   பாடசாலை விடுமுறை காலங்களில் பேரப்பிள்ளைகள் வருவதும் அவர்களுக்கு விதம் விதமாக சமைத்துக்கொடுப்பதும் உறவுகளின் வீடுகளுக்கு அழைத்துசெல்வதும் என பூரித்து போயிருந்தாள். ஆரம்ப காலங்களில் இருந்த நெருக்கங்களை விட மகளை திருமணம் செய்து கொடுத்ததன் பின்னான,  வீட்டில் இருவரும் மட்டுமே இருக்கும் இந்த காலம் மிக நெருக்கமான அன்னியோன்னியமான,  ஒருவரை ஒருவர் அதிகம் சார்ந்து முன் எப்போதும் இல்லாத ஒரு நெகிழ்ச்சியுடன் கூடியதாக இருந்தது கண்மணிக்கு.

    இரவு பி பி சீ செய்தியை கேட்டுகொண்டே  சாப்பிட்டு,சுடுதண்ணி வேண்டிக்குடித்த கணவன் விடிய எழும்பாமல் போக ஊரை எழுப்பியது கண்மணியின் குரல். ஊரே கூடி காரியங்களை முடித்து, எட்டாம் நாள். முப்பத்தோராம் நாள் என சடங்குகளும் முடியதான் கண்மணிக்கு தன் நிலை புரிந்தது. வீடு வெறுமையாகிப்போக, எதுவும் செய்யமுடியாத இயலாமைக்குள் தள்ளப்பட்டு தான் இருப்பதை உணர்ந்து கொண்டாள் கண்மணி. வேறுவழியில்லாத நிலையில் பேரப்பிள்ளைகளுடன் இனி காலத்தை ஓட்டிவிடலாம் என்ற நினைவுடன் மகளுடன் குடிபெயர்ந்தாள்.

     இன்று கண்மணியை பொறுத்தவரை  எந்த ஒரு குறையும் இல்லை. என்ன தேவையோ அதனை சொல்லிவிட்டால் காணும் கிடைத்துவிடும். அதன் விலையை பற்றி கண்மணி கவலைப்படும் அளவுக்கு வீட்டில் வேறு யாரும் கவலைப்படுதில்லை. வேண்டிய பொருள் விலை அதிகமென்றால் அன்று முழுக்க அதே சிந்தனையில் இருந்து திருப்பத் திருப்ப யோசிப்பதை பார்த்த மகள் அதன் பின் வேண்டிய  பொருளில் விலைப்பட்டியலை கிழித்து விட்டு தான் கொடுப்பாள். பேரப்பிள்ளைகளும் படிப்பு படிப்பு என்றும், தங்கட அலுவல்களுக்கும் மூழ்கி கண்மணி என்றொருத்தி இருக்கிறாள் என்ற நினைப்பே இல்லாதவர்கள் போல இருந்தார்கள். கண்மணியும் தனக்கான தேவைகளை வெகுவாக குறைத்துக்கொண்டு வாழப் பழகிவிட்டாலும், இடைக்கிடை முன்னர் வாழ்ந்தவாழ்வு நினைவுகளில் வந்து கண்களில் நீர் கோர்ப்பதை தவிர்க்க முடியவில்லைஅவளால்.

     தனது  இப்போதைய தேவையை யாரும் புரிந்துகொள்கிற மாதிரி தெரியவில்லை என்ற கவலை அடிமனதில் அரித்துகொண்டிருக்கும் எப்போதும். நேரத்துக்கு உணவு, குளியல், படுக்கை என எல்லாம் கிடைத்தாலும், கூப்பிட உடன் வந்து நிற்கும் பேத்திமார் என உறவுகள் சுற்றி நின்றாலும், அவளால் அந்த சூழலுடன் ஒட்டிப்போக முடியவில்லை. தனது பழைய நினைவுகளை இறக்கி வைக்கவும், இன்றைய நிலையை பகிர்ந்துகொள்ளவும் ஒருவரும் இல்லையே ஆதங்கம் எப்போதும் கண்மணிக்குள் உறங்கிக்கிடந்தது.தன்னை இந்த நிலைக்குள் விட்டு விட்டு போன கணவனை திட்டவும் தவறுவதில்லை. கூப்பிட்ட அவசரத்துக்கு ஓடிவரும் பேத்திமார் அலுவலை செய்து கொடுத்துவிட்டு ஒரு கணமும் தாமதியாது தங்களின் அலுவல்களுக்குள் மூழ்கிவிடுவார்கள். மகளும் அவர்களைப்போல இருந்துவிட பெரியதொரு சுமை மனதில் ஏறிவிட்டதை போல கண்மணிக்கு இருந்தது.

     இன்றும் அப்படித்தான்..........யாராவது கதைக்க வரமாட்டர்களா என்ற ஆசையுடன் பேத்திமாரை எட்டிப்பபார்த்தவள்  அவர்கள் தங்கள் அலுவலில் கவனமாக இருக்க, என்ன செய்வது என்று தெரியாமல்  புத்தகத்தை கையில் எடுத்து பேத்தியின் பலனை பார்க்க நினைத்து, ஒற்றைகளை தட்டிக்கொண்ட போதில் ஒரு இடத்தில் மாம்பழப்படத்தை போட்டிருந்தார்கள். அதை கண்ட போதுதான் கண்மணிக்கு நேற்று மாம்பழம் வேண்டியது நினைவுக்கு  வந்தது. உடனேயே பேத்தியை அழைத்து மாம்பழம் ஒன்று வெட்டி தரும்படி கேட்டாள்.

     மூத்தவளும் மாம்பழத்தை வெட்டி சின்ன சின்ன துண்டாக்கி தட்டில் வைத்து கொண்டு வந்து கொடுத்தாள். பிள்ளை நீயும் எடுத்து சாப்பிடு என்றாள் கண்மணி.   வேண்டாம் அம்மாச்சி, நீங்க சாப்பிடுங்கோ என்று விட்டு சென்றுவிட்டாள். அது  கண்மணிக்கு மனதில் சுருக்கென்று குத்தியது போல இருந்தது. ஒரு சின்ன விடயம் தான் அது. ஆனால் தனிமையால் துவண்டு போயிருந்த கண்மணிக்கு அது மிகப்பெரிய  அழுத்தத்தை கொடுத்தது. முந்தி எண்டா இப்படி ஒரு மாம்பழத்துக்கு எவ்வளவு அதகளிப்பட்டு இருப்போம். இப்ப பார் எப்படி இந்த மாற்றம் வந்தது. அரைகுறை மனதோடு மாம்பழத்தை எடுத்து வாயில் வைத்தாள் புளித்தது. எடுத்துப்பார்த்தாள். உறவுகளை போல மாம்பழமும் மாறிவிட்டதே என்று நினைத்தவள் கண்களில் இருந்து சுரந்த துளிகள் மாம்பழத்தின் மீது விழுந்தது. இனி மாம்பழம் துவர்ப்பாகவும் இருக்கும், கண்மணியின் வாழ்க்கையைபோல.

 

முதுமையும் அதனால் வந்த புறக்கணிப்பையும் அழகாக கொழுவியிருக்கிண்றீர்கள் ; பந்தி பிரிக்கும் பொழுது இடைவெளி விட்டுப் பிரித்தால் வாசகர்களுக்கு வாசிப்பது சுலபமாக இருக்கும் . உங்கள் கதைக்கு எனது மனங்கனித்த பாராட்டுக்கள் :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், நேற்கொழுதாசன்!

 

உங்கள் கதை, வாழ்வின் அடி நாதத்தையே, அழகாகத் தொட்டுச் செல்கின்றது!

 

சில நேரங்களில், ஊர்க் கோழிகளின் வாழ்க்கையையும், 'பற்றரி' களில் வளர்க்கப் படும் கோழிகளின் வாழ்க்கையையும் நினைத்துப் பார்ப்பதுண்டு!

 

ஊர்க் கோழிகள், கடகப்பெட்டிகளில், ஒரு முட்டையையிட்டு விட்டு, உலகுக்குக் கொக்கரித்து அறிவிக்கும், அந்தப் பெருமிதம் கண்ணில் வந்து போகின்றது! 

 

'பற்றரி' கோழிகள், முன்னும் பின்னும், இடமும் வலமும், ஓரடி மட்டும் தான் நகரமுடியும்! அவையும் 'மௌனமாக' முட்டையிடுகின்றன!

 

தொடர்ந்து எழுதுங்கள்!

  • தொடங்கியவர்

முதுமையும் அதனால் வந்த புறக்கணிப்பையும் அழகாக கொழுவியிருக்கிண்றீர்கள் ; பந்தி பிரிக்கும் பொழுது இடைவெளி விட்டுப் பிரித்தால் வாசகர்களுக்கு வாசிப்பது சுலபமாக இருக்கும் . உங்கள் கதைக்கு எனது மனங்கனித்த பாராட்டுக்கள் :) :) .

நிச்சயமாக கவனத்தில் கொள்கிறேன் கோமகன் அண்ணை. 

 

வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றிகள்.

  • தொடங்கியவர்

வணக்கம், நேற்கொழுதாசன்!

 

உங்கள் கதை, வாழ்வின் அடி நாதத்தையே, அழகாகத் தொட்டுச் செல்கின்றது!

 

சில நேரங்களில், ஊர்க் கோழிகளின் வாழ்க்கையையும், 'பற்றரி' களில் வளர்க்கப் படும் கோழிகளின் வாழ்க்கையையும் நினைத்துப் பார்ப்பதுண்டு!

 

ஊர்க் கோழிகள், கடகப்பெட்டிகளில், ஒரு முட்டையையிட்டு விட்டு, உலகுக்குக் கொக்கரித்து அறிவிக்கும், அந்தப் பெருமிதம் கண்ணில் வந்து போகின்றது! 

 

'பற்றரி' கோழிகள், முன்னும் பின்னும், இடமும் வலமும், ஓரடி மட்டும் தான் நகரமுடியும்! அவையும் 'மௌனமாக' முட்டையிடுகின்றன!

 

தொடர்ந்து எழுதுங்கள்!

ஒரு கதை சொல்லியாக என்னை மாற்றிக்கொள்ள உங்களை போன்றவர்களின் விமர்சனங்கள் நிச்சயமாக தேவை. 

 

விமர்சியுங்கள் என் தவறுகளை, தளம்பும் இடங்களை கோடிடுங்கள் .

 

நன்றிகள் புங்கையூரன் 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்து என்றால் சொல்லவும் வேண்டுமா நேற்கொழு தாசன். எங்களுக்கும் உந்த நிலைதானோ என எண்ண வைத்துவிட்டது கதை. கதையை அழகாக நகர்த்திச் சென்று  பட்டென முடித்தது போல் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கதை சொல்லியாக அருமையாக எழுதியுள்ளீர்கள்: நீங்கள் எனக்கு மிகவும் பிடித்த உறவுகளுள் ஒருவர்.

ஆனால் நீங்கள் எடுத்த கருவில் எனக்கு பல முரண்படுகள் உள்ளது ( உங்களுடன் அல்ல பொதுவெளியில்) தாய்மை,தியாகம் போன்ற போற்றுதல்களால் பல அப்பாவிகளின் வாழ்வும் அடித்துச் செல்லப்படுகின்றது என்பதை அனேகம் யாரும் பதிவிடுவதிலை. :(

முதுமை பேணப்படாமைக்கான காரணங்களை யாரும் அதிகம் சிந்திப்பதேயில்லை.

 

அம்மா..

 

மூன்றுவரிக் கவிதை - முகபுத்தகத்தில் நண்பன் சொன்னான்

 

முக்கி முனகி ஈரைந்து மாதம்

இடைநொந்து பெற்றாள்

செம்புலத்தாதுவின் சீர்தாங்கி

மார்மேல் பாலாக்கினாள் என்றும்

 

கனிமப் படிமங்களாய்ப் போன

எச்சங்கள் முதல் இன்று வரை

காவியச் சொல்லெடுத்துப் பாடிவிட்டால் போதுமாம்

கள்ளிப்பால் கொடுத்தும்

கரன்சிக்காய் காளை வளர்க்கும்

அம்மாக்கள் எல்லாம் தியாகத்தின் பெயரில்

புனிதர்கள் தான்..!!

 

இந்த இடைவெளி தான் முத்மையைப் பேணவில்லைப் போலும். :rolleyes:

 

தொடர்ந்து எழுதுங்கள்!

  • தொடங்கியவர்

எங்களுக்கும் உந்த நிலைதானோ என எண்ண வைத்துவிட்டது கதை. கதையை அழகாக நகர்த்திச் சென்று  பட்டென முடித்தது போல் உள்ளது.

நன்றி அம்மா. ஆனால் இன்னும் கதையை ஆழமாக சொல்லி இருக்கலாமோ என்று தோணுது  :(

முடிவு குறித்த உங்களின் வெளிப்படுத்தல் குறித்து கவனிக்கிறேன்.அடுத்த கதைகளில் அந்த அத்தவறு ஏற்படாது.

நன்றிகள்  அம்மா 

ஒரு கதை சொல்லியாக அருமையாக எழுதியுள்ளீர்கள்: நீங்கள் எனக்கு மிகவும் பிடித்த உறவுகளுள் ஒருவர்.

ஆனால் நீங்கள் எடுத்த கருவில் எனக்கு பல முரண்படுகள் உள்ளது ( உங்களுடன் அல்ல பொதுவெளியில்) தாய்மை,தியாகம் போன்ற போற்றுதல்களால் பல அப்பாவிகளின் வாழ்வும் அடித்துச் செல்லப்படுகின்றது என்பதை அனேகம் யாரும் பதிவிடுவதிலை. :(

முதுமை பேணப்படாமைக்கான காரணங்களை யாரும் அதிகம் சிந்திப்பதேயில்லை.

 

அம்மா..

 

மூன்றுவரிக் கவிதை - முகபுத்தகத்தில் நண்பன் சொன்னான்

 

முக்கி முனகி ஈரைந்து மாதம்

இடைநொந்து பெற்றாள்

செம்புலத்தாதுவின் சீர்தாங்கி

மார்மேல் பாலாக்கினாள் என்றும்

 

கனிமப் படிமங்களாய்ப் போன

எச்சங்கள் முதல் இன்று வரை

காவியச் சொல்லெடுத்துப் பாடிவிட்டால் போதுமாம்

கள்ளிப்பால் கொடுத்தும்

கரன்சிக்காய் காளை வளர்க்கும்

அம்மாக்கள் எல்லாம் தியாகத்தின் பெயரில்

புனிதர்கள் தான்..!!

 

இந்த இடைவெளி தான் முத்மையைப் பேணவில்லைப் போலும். :rolleyes:

நன்றி ஜீவா. உங்களின் மனதினை எழுத்து வழியாகதொட்டமை குறித்து நானும் மிக மிக மகிழ்கிறேன். உங்களின் ஆதங்கங்கள் எனக்கும் உண்டு.ஒரு கதை சொல்லியாக இன்னும் ஆரம்பத்தில் தான் நிற்கிறேன்.இனி வரும் காலங்களில் அந்தகைய ஆதங்கங்களை பதிவாக்குவோம். கரம் கொடுங்கள். 

 

நன்றிகள் ஜீவா.

தொடர்ந்து எழுதுங்கள்!

நன்றிகள் kkaran. உங்களின் வரவுக்கும் கருத்திடலுக்கும்

காலங்களோடு பாசங்களும் கரைந்துபோகின்றது. இப்பொழுதைய காலம் அதை விரைவாகவே செய்கின்றது.

கதையின்..ஒவ்வொரு வார்த்தைகளிலும் உணர்வுகளை ஆழமாக கோர்த்திருக்கின்றீர்கள்! பாராட்டுக்கள் நேற்கொழுதாசன்! :)

 

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுகளினதும் நினைவுகளினதும் கோர்ப்பு... தெளிந்த தண்ணீரில் விழுந்துகிடக்கும் நிலவைப்போல கதை கண்மணியின் வாழ்க்கையை பிரதி செய்துகொண்டு போகிறது நீளவும்... 

  • கருத்துக்கள உறவுகள்

நேற்கொழுதாசன்,
ஒரு வாழ்வின் முழுமையும் முதுமையும் உங்கள் கதையில் கதையின் நகர்விலும்  உணர்வுகளை அப்படியே பிசகாமல் எழுதிய விதமும் அருமையாக உள்ளது.

எனது அம்மம்மாவை பார்த்ததுபோல உங்கள் கதையில் நடமாடும் கண்மணிப் பாட்டி அப்படியே கண்முன் நிழலாடுகிறார்.
 

வணக்கம், நேற்கொழுதாசன்!

 

உங்கள் கதை, வாழ்வின் அடி நாதத்தையே, அழகாகத் தொட்டுச் செல்கின்றது!

 

உண்மை வாழ்த்துக்கள் தொடர்த்து எழுதுங்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.