Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறுபக்கம் - சிறுகதை

Featured Replies

மீண்டும் சிறுகதை எழுத ஆர்வம் வந்துள்ளது. இக் கதை எனது 20வது வயதில் எழுதப்பட்டது. கருத்தியல்ரீதியில் பிழைகள் இருக்கலாம். சரி பிழைகளை சுட்டிக்காட்டடினால் புதிதாக மீண்டும் எழுத முயற்சிக்கும் எனக்கு உந்துசக்தியாக இருக்கும். நன்றி உறவுகளே. மறுபக்கம்

 
காலை 5.00 மணி துயிலெழுப்பி தனது கடமையைச் சரிவரச் செய்தது. துடித்தெழுந்த காயத்திரி மேலும் 10 நிமிடங்களுக்குத் துயிலெழுப்பியின் நேரத்தை அதிகரித்து வைத்து விட்டு இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தாள். நாம் வேகமாக இயங்குகிறோமோ இல்லையோ சுவிஸ் நாட்டுக் கடிகாரங்கள் வேகமாகத்தான் தமது கடமையைச் செய்து கொண்டிருக்கின்றன. அடுத்து 10 நிமிடமும் 10 வினாடிகளாகக் கரைய, துயிலெழுப்பி மீண்டும் அலறியது. காயத்திரிக்கு இன்றைக்கு வேலைக்குப் போகாமல் இழுத்து மூடிக் கொண்டு படுக்க வேண்டும் போல் இருந்தது. இது தினமும் வரும் எண்ணம்தான். வெளிக் குளிரை நினைத்தபோது உடலெல்லாம் விறைத்தது. என்ன செய்வது புலம் பெயர் வாழ்வில் வேலை தவிர்க்க முடியாத ஒன்றல்லவா? தன்னைச் சுதாகரித்துக் கொண்டு எழுந்தாள். குளியலறை சென்று காலைக்கடன்களை முடித்துக் கொண்டு தொட்டிலை எட்டிப் பார்த்தாள். பிறந்து ஏழு மாதமேயான பிரணவன் தானும் தயார் என்பது போல் சிரித்துக் கொண்டுகிடந்தான்.
 
baby.jpg
உண்மையிலே புலம் பெயர்ந்த நாடுகளில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் மிகவும் பாவம் செய்தவர்கள்.
அந்த அதிகாலைப் பொழுதில் அடுப்படி வேலைகளை முடித்துக் கொண்டு. குழந்தைக்குரிய பால், தேநீர் போன்றவற்றையும் போத்தலில் நிரப்பிக் கொண்டு, குழந்தைக்கும் குளிரிலிருந்து பாதுகாக்கக் கூடிய உடைகளை அணிவித்துக் கொண்டு புறப்படத் தயாரானாள். பேருந்தில் சென்றால் அரை மணிநேர தூரத் தொலைவிலுள்ள அவளது குடும்ப நண்பியான சாந்தியக்கா வீட்டில் பிள்ளையை விட்டு விட்டுத்தான் வேலைக்குச் செல்ல வேண்டும்.
 
"சரியப்பா நான் வேலைக்குப் போட்டு வாறன். நீங்களும் எழும்பி வெளிக்கிடுங்கோவன். இண்டைக்கு ஏழு மணிக்கெல்லே வேலை இப்பவே ஆறு மணி" என்று சுரேசையும் எழுப்பி விட்டாள். சுரேஸ் எழும்பிக் காலைக்கடன்களை முடிக்க மலசலகூடம் செல்ல காயத்திரி கதவைத்திறந்து வெளியே புறப்படச் சரியாய் இருந்தது. தூக்கு மேடைக்குச் செல்லும் கைதி போலப் படபடப்புடன் வாயிற் கதவைத் திறந்தாள். சில்லென்று அடித்த குளிர்காற்று முகத்திலடித்தது கன்னங்களையும் காதுகளையும் குளிர்வித்தது. எதிர்பார்த்த பழகிய குளிர்தான். இருந்தாலும் மெல்ல மெல்லக் குளிர்பட முகமெல்லாம் எரிந்தது. கைப்பையில் இருந்த தொப்பியை எடுத்து அணிந்து காது இரண்டையும் மறைத்துக் கொண்டாள். தலைக்கு மேல்ச் சென்ற வெள்ளம் கழுத்து வரை இறங்கியது போல் இருந்தது.
 
winter_im_dorf.jpgகுழந்தை வண்டிலைத் தள்ளிக் கொண்டு பேருந்து நிலையம் வருவதற்கிடையில் குளிர் அவளை வாட்டி எடுத்துவிட்டது. "கூழோ, கஞ்சியோ குடிச்சாலும் எங்கடை நாடு சொர்க்கம்தான்." என அவள் மனதுக்குள் எண்ணிக் கொண்டு. "அங்கை உள்ளவை நினைப்பினம் அவைக்கென்ன அவை வெளிநாட்டிலை ராஜ வாழ்க்கை வாழினமெண்டு. இஞ்சை நாங்கள் வாழிற வாழ்க்கை எப்பிடிப்பட்டது எண்டு ஆருக்குத் தெரியும்?" என எண்ணியவாறு நின்றவள் பேருந்து வர வண்டிலையும் ஏற்றி தானும் ஏறிக் கொண்டாள்.
 
வண்டிலை ஏற்றும் போதுதான் "காயத்திரி உனக்கென்ன? பிள்ளை வண்டில் ஏத்திறதுக்கு இப்ப பிரச்சனையே இல்லை. றாம், பஸ் எல்லாம் வண்டில் ஏத்தக் கூடி மாதிரி நல்ல வசதியாய் வந்திருக்கு, என்ரை ரண்டும் சின்னனா இருக்கேக்கை எல்லாத்துக்கும் படிதானே. ஆரன் உதவி செய்தால்த்தான் ஏத்தலாம். சுவிஸ்காரர் சாதாரணமாக உதவி செய்ய மாட்டினம். கேட்டால்த்தான் உதவி செய்வினம். அப்ப வந்த புதிசு எனக்கு டொச்சும் தெரியாது. அப்பப்பா வண்டில் ஏத்தி இறக்கிறதுக்கு மட்டும் நான் பட்டபாடு" எனச் சாந்தியக்கா அடிக்கடி சொல்வது ஞாபகத்துக்கு வந்தது.
பேருந்து புறப்பட மீண்டும் சுயநினைவுக்கு வந்தாள். பிள்ளை வண்டிலோடு வந்தபடியால் வண்டில் விடுமிடத்துக்குப் பக்கத்திலுள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தாள். அது ஒவ்வொரு தரிப்பிடத்திலும் பயணிகள் ஏறி இறங்கும் போது கதவைத் திறக்க காற்று அள்ளி வந்த குளிரை அவள் முகத்தில்த் தெளித்தது. அவளுக்கு ஏன் அங்கே இருந்தோம் என்றாகிவிட்டது. ஒருவாறு சாந்தியக்கா வீடு வந்து பிள்ளையை ஒப்படைத்து விட்டு, அடுத்த பேருந்தில் ஏறி வேலைத்தளம் நோக்கிப் புறப்பட்டாள். ஒருவாறு 7.15க்கு வேலைத்தளத்தை வந்தடைந்தாள்.
 
Zimmermaedchen_banner.jpgதன் வேலைக்குரிய உடைகளை அணிந்து கொண்டு வேலைக்குத் தயாரானாள்.வேலை வேறொன்றுமில்லை. உல்லாசப் பயணிகள் வந்து தங்கிச் செல்லும் விடுதி ஒன்றின் துப்பரவுப் பணிப்பெண். ஓவ்வொரு நாளும் 15 முதல் 20 வரையிலான அறைகளைச் சுத்தம் செய்தல் வேண்டும். இலக்கத்தில்த்தான் குறைவே தவிர வேலைக்குக் குறைவேயில்லை. சுரேஸ் அடிக்கடி சொல்லிக் கவலைப்படுவான். "வரேக்கை என்ன மாதிரி இருந்தனீர். இப்ப உந்த வேலைக்குப் போய்ப் பல்லும் தலையுமாய்ப் போனீர். பேசாமல் உந்த வேலையை விடுமப்பா" "இன்னும் முடிக்கேல்லையே, கெதியாச் செய்" என்ற பிரெஞ்சுநாட்டு மேற்பார்வையாளரின் அதட்டல்க் குரல்கேட்டு சுயநினைவுக்கு வந்தவள். "இந்த நாய் எப்பவும் இப்பிடித்தான்" என மனதுக்குள் திட்டியவாறு வேலையைத் தொடர்ந்தாள்.
 
பாசல் நகரில் பெரும்பாலான வேலைத்தளங்களில் அதிகமாகப் பணி புரிவது பிரெஞ் நாட்டவர் தான். சுவிசின் எல்லைப் புறத்தில் வசிக்கும் இவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்கள். இவர்களால் பாசலில் வசிக்கும் சுவிஸ்நாட்டவரும் வெளிநாட்டவரும் படும் தொல்லைகள் ஏராளம். அவர்களது அதட்டலும் அதிகாரத் தோரணையும் எந்தவொரு மானமுள்ள மனிதனாலும் தாங்கிக்கொள்ள முடியாதவை. காயத்திரி மட்டுமென்ன விதிவிலக்கா? அவளும் மனதுக்குள் பொருமியவாறு தன் பணியைத் தொடர்ந்தாள்.
இன்று அவளுக்குச் சற்று நிம்மதியாக இருந்தது. ஏனெனில் சுரேசுக்கு இவளுக்கு முன்னதாகவே வேலை முடிந்துவிடும். அவன் பிரணவனை சாந்தியக்கா வீட்டிலிருந்து கூட்டிச் செல்வான். அதனால் இவள் வேலை முடிந்ததும் நேராக வீட்டுக்குச் செல்லலாம்.
 
ஒருவாறு வேலையும் முடிந்தது. வீட்டுக்குச் சென்று குழந்தை முகம் பார்த்ததும் பட்ட துன்பமெல்லாம் பறந்துபோல் இருந்தது. மேசையைப் பார்த்தாள் காலையில் பிரணவனுக்காகக் கொடுத்துவிட்ட சூப்பிப்போத்தல் அப்படியே இருந்தது. கணவனைக் கூப்பிட்டு விசாரித்தாள். "என்னப்பா குடுத்துவிட்ட பாலும் தேத்தண்ணியும் அப்பிடியே கிடக்கு இவனென்ன குடிக்கேல்லையாமே?" "ஒமப்பா சாந்தியக்கா குடுக்கக் குடுக்க குடிக்கமாட்டனெண்டு அடம்பிடிக்கத் தொடங்கீட்டானாம். அவவும் கனநேரமா முயற்சியெடுத்துக் கொஞ்சம் தானாம் குடிச்சான். அவையைச் சொல்லிப் பிழையில்லையப்பா. அவா தெண்டிச்சுப்போட்டு விட்டிடுவா. நாங்களெண்டா எப்பிடியாவது குடிக்க வைச்சிருப்பம். ஏனப்பா! நான் எந்தினையோ தரம் சொல்லீட்டன். வேலைக்குப் போகாதையும் பிள்ளையைப் பாத்துக் கொண்டிரும் எண்டு. நீர் கேக்கிறீர் இல்லை. என்ன இருந்தாலும் நாங்கள் நாங்கள் எங்கடை பிள்ளையைப் பார்க்கிற மாதிரி வராது." "என்னப்பா எனக்குமட்டுமென்ன பிள்ளையை விட்டிட்டு வேலைக்குபோக விருப்பமே? என்ன செய்யிறது. இந்த நாடுகளிலை ஒராள் உழைச்சுக் குடும்பத்தைக் கொண்டு செலுத்தேலாது. ரண்டு பேரும் வேலை செய்தால்த்தான் ஏதோ இழுபறி இல்லாமல் வாழலாம்." என்று தனது கருத்தை உதிர்த்தாள் காயத்திரி.
 
"என்னவோ நான் சொல்ல வேண்டியதச் சொல்லீட்டன். இனி முடிவெடுக்க வேண்டியது நீர்தான்." எனக் காயத்திரியிடம் பொறுப்பை விட்டு விட்டுத் தொலைக்காட்சியின் முன் போய் அமர்ந்தான்.
காயத்திரியும் இரவுச் சமையலை முடித்து விட்டுப் பிரணவனையும் உறங்க வைத்துவிட்டு, சுரேசுக்கும் தனக்கும் சாப்பாட்டைப் போட்டுக் கொண்டு வந்து சோபாவில் சுரேசுக்கு அருகில் இருந்தாள். "இண்டைக்குக் கொஞ்ச நேரம் ரீவி பாக்கலாம்." என நினைத்துக் கொண்டு சாப்பிட்டு முடித்தாள். தொலைக்காட்சியில் தன்னைத் தொலைத்திருந்தவளுக்கு நித்திரை ஊஞ்சலாட்டியது. எழுந்து படுக்கைக்குச் சென்றாள். அவளுக்கிருந்த உடல் அலுப்புக்குப் படுத்தவுடனேயே உறங்கிவிடலாம் போல் இருந்தது. ஆனாலும் அவளுக்கிருந்த மன உளைச்சல் அவளை உறங்கவிடவில்லை. வேலையா? பிள்ளையா? எனப் பலமுறை மனதுக்குள்ப் பட்டிமன்றம் நடத்தி இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவள் அசதியில் உறங்கிப்போனாள். துயிலெழுப்பியின் தொல்லையில்லாமல் மறுநாள்க்காலை புலர்ந்தது. உடல் அசதியில் மறுநாள்க் காலை 10.00 மணிவரை உறங்கிவிட்டாள். எழுந்தவள் ஒரு தீர்க்கமான முடிவோடு தெளிவாக இருந்தாள்.
 
பேனாவும் எழுதுதாளும் எடுத்துக்கொண்டு வந்து தன் வேலைத்தளத்துக்குப் பணிமுடிப்புக் கடிதமொன்றை எழுதினாள். எழுதிய கடிதத்தை மீள ஒருமுறை வாசித்துப் பார்த்துவிட்டு உறையினுள்ப் போட்டு ஒட்டினாள். ஒட்டிய கடிதத்தை மேசையில் வைத்துவிட்டுத் திரும்பியவளின் கண்களில் அடுத்த மாதம் கட்டவேண்டிய காசுகளின் கூட்டுத்தொகையும் ஊரிலிருந்து காசனுப்பச் சொல்லி வந்திருந்த கடிதங்களும் கண்களில்த் தென்பட்டது. மீண்டும் திரும்பி வேலைத்தளத்துக்கு அனுப்ப வைத்திருந்த பணிமுடிப்புக் கடிதத்தைக் கிழித்துக் குப்பைக்கூடையில்ப் போட்டுவிட்டு, துயிலெழுப்பியை மறுநாள் 5.00 மணிக்கு அலறுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு வழமையான செயல்களைச் செய்யத் தொடங்கினாள்.
 
இணுவையூர் மயூரன்

நன்றி குருத்து மார்ச் 2003

 
 

 

முதல் கதை என்று சொல்லியதை நம்பமுடியவில்லை . சம்பவங்களுக்கான கோர்வைகள் சரியாகவே வந்திருக்கின்றன . சம்பவங்களை சொல்லும் பொழுது உங்கள் சிந்தனை செப்படி வித்தைகளும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் . ஆனால் அது தொடர் வாசிப்பின் மூலமே கைகூடும் . வாழ்த்துக்கள் மயூரன் ,தொடர்ந்தும் எழுதுங்கள்  :)  :)  .

  • தொடங்கியவர்

வரவுக்கும் கருத்துக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி கோமகனாரே

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் நகர்வும் சம்பவ விவரமும் நன்றாக வருகிறது. வாழ்த்துக்கள். மீண்டும் எழுதுங்கள் மயூரன்.

  • 3 months later...
  • தொடங்கியவர்

வரவுக்கும் , கருத்துக்கும், உற்சாகமூட்டலுக்கும் நன்றி சாந்தி அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது  தான் பார்க்கக்கிடைத்தது மயூரன்

 

கதையோடு உறவாடி

இன்றைய  எமது ஐரோப்பிய  வாழ்வியலை

அகதி  வாழ்வின் அவலங்களை

சேர்த்து கோர்த்த விதம் அருமை...... :icon_idea:

 

தொடர்ந்து எழுதுங்கள்

(பிரேஞ்சுக்காறரை குட்டியதற்கு தனியாக ஒருநாள் இருக்கு :D )

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மயூரன். நன்றாக எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து யாழில் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக உள்ளது, மயூரன்!

 

கதையின் நகர்வில், எந்த விதமான தடங்களையும் நான் காணவில்லை!

 

தொடர்ந்து எழுதுங்கள்! :D

  • 2 years later...
  • தொடங்கியவர்
On 31. März 2014 at 7:43 PM, விசுகு said:

தற்பொழுது  தான் பார்க்கக்கிடைத்தது மயூரன்

 

கதையோடு உறவாடி

இன்றைய  எமது ஐரோப்பிய  வாழ்வியலை

அகதி  வாழ்வின் அவலங்களை

சேர்த்து கோர்த்த விதம் அருமை...... :icon_idea:

 

தொடர்ந்து எழுதுங்கள்

(பிரேஞ்சுக்காறரை குட்டியதற்கு தனியாக ஒருநாள் இருக்கு :D )

நன்றி விசுகர். மீளவும் வந்துள்ளேன். முயற்சிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் இந்தக் கதையை வாசித்தேன் , நன்றாக இருந்தது. என்ன செய்வது நாமெல்லாம் சூழ்நிலைக் கைதிகள்..., எமது பிள்ளைகளுக்கு இவ்வளவு கடினமான வாழ்க்கை இருக்காது என நினைக்கின்றேன்....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.