Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சருகுகள்.

Featured Replies

மணிக்கூட்டினைப் பார்த்தான் குமார். ஆறுமணி காட்டியது.
 
"ஐயா  உதில ஒருக்கா காசு  கொடுக்கணும் . இப்ப உடன வந்திடுவன்".|

என்றபடி, படியைநோக்கி  வந்தவனுக்கு முன்னால், மிக வேகத்தோடு வந்து முன் பின் பிரேக்குகளை ஒரே சமயத்தில் அழுத்திப்பிடித்து ஆடிவிட்டு நின்றது பல்சர். அதில் இருந்தது  ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க சிறுவன்.
 
"அண்ண சீக்கரெட் இருக்கோ" மோட்டர்சைக்கிளில் இருந்தபடி கேட்டான்.
 
" உமக்கு தரேலாது நீர் சின்னப்பொடியன்." என்றான் குமார்.
 
அப்போதுதான் கடைக்குள் இருந்து குமாருக்கு உதவியாக வேலைசெய்யும் ஐயா எட்டிப்பார்த்தார்.
 
"அண்ண எனக்கில்ல அப்பாதான்  வேண்டிவரச்சொன்னவர் அதுதான் நான் வந்தனான்" என்றான். இப்போது மோட்டர்சைக்கிளை விட்டு இறங்கி கடையின் சாமான் வேண்டும் பகுதியை அண்மித்திருந்தான்.
 
"தம்பி இவன எனக்கு தெரியும். பக்கத்தில குட்டி சேரிட்ட படிக்கவாறவன். தகப்பனுக்கத்தான் இருக்கும்" என்று கடைக்குள் இருந்தவாறே சொன்னார் ஐயா.
 
"பொடியளை உதுகளை வேண்ட விடுகிற தகப்பன்மாரை சொல்லணும் சரி சரி குடுங்கோ." என்று கூறியவாறு  படியால் இறங்கி சைக்கிளை எடுத்தான் குமார்.
 
      இந்த கடையை ஆரம்பிக்க குமார் அலைந்த அலைச்சல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.  சந்தியில வெறுமனே  பூட்டிக்கிடந்த கடையை, உரிமையாளரிடம் வாடகைக்கு கேட்டான். அவர்கள் உடனேயே மறுத்து விட்டார்கள். காரணம் வேறு சொன்னாலும், முக்கிய காரணம் என்ன என்பதனை குமாரும் அறிவான். பிறகு  வேறு வழியில்லாமல், கோயில் ஐயரையும் விதானையாரையும், பிள்ளையள் வெளிநாட்டில் இருப்பதால் ஊரில் மிகவும் மதிக்கப்படும் ஒருவரையும் கூட்டிக்கொண்டு போய் உரிமையாளரோடு கதைத்து ஒருவாறு கடையை வாடகைக்கு எடுத்துவிட்டான். 
 
      புதிதாக தார் போடப்பட்ட வீதியில் இரைச்சலோடு அவனைக்கடந்து போனது கடைக்கு வந்த சிறுவனின் மோட்டர் சைக்கிள். இப்போது பின் சீற்றிலும் ஒருவன் அமர்ந்திருந்தான். அவர்களின் வயதும், அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் மோட்டார் சைக்கிளை செலுத்தும் வேகமும், குமாருக்கு கால, காலத்தோடு இணைந்த சனத்தின் மாற்றப்படி நிலைகளை இலகுவாக விளங்கப்படுத்தியது. "எல்லாம் காசுதான் தீர்மானிக்கிற மாதிரி ஆகிடுத்து. முந்தி எண்டா ஆளுக்காள் எவ்வளவு உதவியள், எந்தளவு ஒற்றுமை இப்ப... எல்லாத்தையும் கெடுத்துக்கொண்டு இந்த இளம் சமுதாயம் கிளம்புது" என்று தனக்குள் நினைத்தவன் அப்படியே தனது கடந்த காலத்துக்குள் மூழ்கிப்போனான். 
 
     செயின்கவர் இல்லாத சைக்கிளில் பள்ளிகூடம் போகமாட்டன் என்று அடம்பிடித்துபோது, கோபத்தில் அழ அழ அடிச்ச அப்பா இரவு கொத்துரொட்டி கட்டிகொண்டுவந்து தளம்பு இருந்த இடங்களை தடவினார். அப்போது அவரை புரிந்துகொள்ள முடியவில்லை. அது அந்த வயதின் அறியாமை என்று உணர ஐந்து வருட பிரிவு தேவையாய் இருந்தது போலும். இயக்கத்துக்குப் போய் ஐந்து வருடங்கள் கழித்து ஒருமாத லீவில் வந்தபோது முழுமையாக தளர்ந்து போயிருந்த தந்தையின் உடல் நிலையை பார்த்து கட்டிப்பிடித்து அழுதான். எதுக்கு எடுத்தாலும் சண்டை பிடித்த தங்கை அவனின் கையை பிடித்துக்கொண்டு அழுதாள். அம்மா மட்டும் கோபம் மாறாமல் இருந்தாள். அல்லது பாசத்தை ஒளித்து வைத்திருந்தாள்.
 
        காலம் சுமத்திய கடமைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவன், தனிமனித ஒழுக்கங்கள் சரி குழும ஒழுக்கங்கள் சரி இனத்தின் விழுமியங்களை கட்டிக்காப்பவையாகவே இருந்தது. அதனூடாக குமாரும் நீண்ட தூரம் பயணித்து விட்டிருந்தான். இறுதியில் நண்பர்கள் உறவுகள்  கனவுகள் ஆசைகள் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் சிதைத்து, அழிந்து போக, வேறுவழியின்றி சமூகத்தின் மீது கொண்ட நம்பிக்கையால் நடப்பது நடக்கட்டும் என்று நடக்கத்தொடங்க, எந்த மக்களுக்காக தனது காலங்களை இழந்தானோ அந்த சமூகமே  குமாரை காட்டிக்கொடுத்து.
 
       கைது செய்யப்பட்ட குமார் கொடுக்கப்பட்ட தண்டனைகள் மற்றும் புனர்வாழ்வு எல்லாவற்றையும் அனுபவித்து முடித்து ஒரு முன்னாள் போராளியாக  ஊருக்கு திரும்பிவந்து ஆறுமாதங்கள் கடந்திருந்தது. எந்த ஒரு சமூகத்துக்காக தனது காலங்களை இழந்திருந்தானோ அந்த சமூகமே அவனை குற்றவாளியாக்கி ஒதுக்கி வைத்திருப்பதை உணரத்தொடங்கினான். 
 
          நடந்து முடிஞ்ச எல்லாத்துக்கும் தன்னை போன்றவர்கள் தான் காரணம் என்பது போல இப்ப பார்க்கப்படுவதை குமாரால் தாங்கிக்கொள் முடியவில்லை.  ஆசையோடும்,அர்ப்பணிப்போடும் அந்த காலங்களை கடந்து வந்தவர்களைஇங்கே குடும்பத்தினரோடு பாதுகாப்பாக இருந்துகொண்டுநாளையை பற்றிய கவலை எதுவுமின்றிஎதிர்கால வாழ்வை திட்டமிட்டு வாழ்வியலை அமைத்துவிட்டுவிரல்களை நீட்டுகிறார்களே,இவர்களுக்கு முன்னெல்லாம் தலைகுனிந்து நடக்க வேண்டிப்போகிறதேஎன்ற மன அழுத்தத்தால் உடைந்து போனான். 
 
      எதையும்  உள்வாங்கி உணரக்கூடிய தன்மையையும்தாங்க கூடிய தைரியத்தையும் கடந்த காலம் குமாருக்குள் வளர்த்து இருந்தாலும், இந்த மக்களின் மாற்றத்தை  குமாரால் சகிக்க முடியவில்லை. இவர்கள் பார்க்க தனது நிலையை மாற்றிக்காட்ட வேண்டும் என்று தீர்மானித்தான். லீசிங் நிறுவனம் ஒன்றில் வேலைசெய்யும் நண்பனின் உதவியை பெற்று கடை ஒன்றை ஆரம்பித்தான்.
          
         ஒவ்வொரு சிறு நிறுவனங்களும் குமாரின் கடையை தேடி வரத்தொடங்கின. தமது உற்பத்திகளையும்ஏனைய பொருட்களையும் தவணை முறையில் கொடுக்கவும் தொடங்கின. பெயர்ப்பலகை விளம்பரம் என கடைக்கான உதவிகளையும் அவை செய்ய தவறவில்லை. குமாரும் நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தான். தனி ஒருவனாக கடையை நிர்வகிக்க முடியாத அளவுக்கு வியாபாரம் நடைபெறவே தனக்கு துணைக்கு ஒருவரை வேலைக்கு அமர்த்தினான். இப்போது லீசிங் கட்டுப்பணத்தினை நண்பனிடம் கொடுத்தான் செல்கிறான் குமார்.
 
         சந்தி போஸ்ற் லைற் வெளிச்சத்தில் பல்சர் நிற்பதையும், ஆறேழு அவன் வயதொத்த பொடியள் சுற்றிவர நிற்பதையும் கண்டான். " காசு கொடுக்க போகும் போது இதில் யாரும் இல்லை இப்பதான் வந்திருக்கிறாங்கள் போல" என எண்ணியவன் நேரத்தினை பார்த்தான் எட்டுமணி.  "வீடுகளுக்கு போக சொல்லணும்" என்று மனம் உந்தினாலும் "எதுக்கு" என்ற மனநிலை வர பேசாமல் அவர்களை பார்த்துக்கொண்டே  சைக்கிளில் கடந்தான்.
 
 "அத்து இவர்தான் கடையில சீக்கரட் வச்சுக்கொண்டு இல்லையெண்டு சொன்னவர்" குமாருக்கு கேட்கட்டும் என்றே சொன்னான்.
 
"கூப்பிர்ரா கேப்பம் காசு கொடுத்தா சாமானை தரவேண்டியது தானே எதுக்கு இவருக்கு தேவையில்லாத வேலை"  இது மற்றவன்.
 
குமார் அவனையறியாமலேயே சைக்கிளை திருப்பினான். அவர்களுக்கு அருகில் சென்று நிறுத்தினான். சாராய நொடியும், சீக்கரட் புகை மணமும் நாசியை தாக்கியது. குமார் அருகில் வந்ததும் எல்லோரும் பேசாமல் இருந்தனர். கணநேர மௌனத்தை உடைத்தது குமாரின் குரல்.

 
 "என்ன சொன்னனியள். உங்களுக்கு எத்தனை வயது ?இந்த நேரம் எதுக்கு இதில நிக்கிறியள்"?  சில நொடிகள் மௌனம்.
 
" நின்டால் உங்களுக்கென்ன"? அவர்களில் ஒருவன் கேட்டான். யார் கேட்டது என்று குமாருக்கு தெரியவில்லை.
 
"படிக்கிற நேரத்தில இதில நிண்டு குடிக்கிறதும் பத்தாதெண்டு போறவாற ஆக்களோடும் கொழுவிறியள் " முடிக்கவில்லை குமார்.
 
"எங்களுக்கு எங்கட அலுவல் தெரியும்  உங்கட அலுவலை பார்த்துக்கொண்டு போங்கோ"
 
எப்படி அடித்தான் என்று தெரியாமலேயே கதைத்தவன் கன்னத்தில் அறைந்தான் விமல். திரும்ப அவன் முறைத்த போதில் இன்னும் இரண்டு அடியை அடித்தும் விட்டான். அவ்வளவு தான் அனைவரும்  ஓடிவிட்டனர். அடிவேண்டியவன் மட்டும் தலையை பொத்திக்கொண்டு குந்தி இருந்தான்.
 
 "எழும்படா எங்கை இருக்கிரணி" ? குமாரின் குரலில் எழுந்த தொனி  அவனை இன்னும் அச்சப்பட வைத்தது.
 
இன்னும் குறுகி இருந்தான். பக்கத்தில் தானும் குந்தி இருந்து அவனின் முகத்தை திருப்பி பார்த்தான். மீசை அரும்பத்தொடங்கி இருந்தது.
 
"ஓடு வீட்டுக்கு " முகத்தை பார்த்தவுடன் கோபம் மாறிப்போக இரக்க மிகுதியால் கூறினான்.
 
பயந்து பயந்து எழுந்த அவன் சைக்கிளை எடுத்தவுடன் 'இருடா அப்பாவை கூட்டி வாறன்" என்று கத்திக்கொண்டு ஓடத்தொடங்கினான். 
அவர்கள் ஓடுவதை பார்த்த குமார், சைக்கிளை எடுத்துக்கொண்டு கடையை நோக்கிச்சென்றான்.
 
"ஐயா அந்த சீக்கரட் வேண்டின பொடியள் சந்தியில நின்று குடிச்சுக்கொண்டு நின்றவங்கள். அடிச்சுப்போட்டேன்" முடிக்கவில்லை.
 
"ஐயோ எதுக்கு தம்பி உங்களுக்கு தேவையிலாத வேலை.இனி அவங்கள் என்ன செய்யப்போறாங்களோ ?நாளைக்கு கடைக்கு வந்து என்னத்த செய்வாங்களோ"
 
குமாரும் இப்போதுதான் யோசித்தான். பேசாமல் வந்திருக்கலாம் என. "சரி சரி பாப்பம் விடுங்கோ ஐயா" என்று சொல்லிவிட்டு வேலையை கவனிக்க தொடங்கினான்.
 
ஒருமணித்தியாலம் கழிந்திருக்கும்.
அந்த சிறுவனும், தகப்பனும் மோட்டர்சைக்கிளில் வந்து இறங்கிய வேகத்தில்,"எதற்காக மகனை அடிச்சனீர்"? என்று கேட்டார். வந்தவரின் கைவீச்சும், உடல் அசைவும் பணத்திலும் பகட்டிலும் இருக்கும் ஒருவர் என்பதை சொல்லியது குமாருக்கு.
 
"ஐயா இவன் உங்கட மகன் என்று தெரியாது. சந்தியில நின்று குடிச்சிட்டு, நான் வர தேவையிலாமல் கதைச்சவங்கள் அதுதான்"  குமாரை தொடரவிடவில்லை.
 
"என்ன நீ கதைக்கிறாய் எதோ உன்ர காசில குடிச்சமாதிரி. தம்பி சந்தோசமாக இருக்கட்டும் என்று தமையன்காரன் காசு அனுப்பி மோட்டர்சைக்கிள் எடுத்து குடுத்திருக்கிறான். வக்குவழியத்த நீ அவனுக்கு அடிக்கவோ"
 
"அண்ண கண்டபாட்டுக்கு கதையாதையுங்கோ" மறித்தான் குமார்.
 
"என்னடா செய்வாய் உன்னால என்ன செய்யமுடியும். இப்படித்தானே அங்கையும் பொடியளை அடிச்சு அடிச்சு பிடிச்சனியள்? உங்கட புத்தி எங்கை போனாலும் மாறாதுடா. எளியதுகள் எல்லாம் என்ர பிள்ளையில கை வைக்கவோ "? இதுக்கு ஒரு முடிவு கட்டாமல் விடமாட்டன் இன்றைக்கு" என்று இன்னும் அதிகமாக சத்தம் போடத்தொடங்கினார் .
 
"அண்ண இதில நின்று தேவையிலாமல் கதைக்கவேண்டாம். பிறகு நீங்கள் வேற பிரச்சனைகளை சந்திக்கவேண்டு வரும்". இயல்பான வார்த்தைகள் வெளிப்பட்டன குமாரிடமிருந்து.
 
"என்னடா நான் எதுக்கு  பேசாமல் போகணும். ன்ர வண்டவாளம் எனக்குத் தெரியாதே சனத்திந்த காசை அடிச்சுக் கொண்டுவந்து கடையை துறந்துபோட்டு இப்ப எங்கட பிள்ளையளை திருத்த போகினமாம். நாளைக்கு பொலிசை கூடிக்கொண்டு வாரண்டா. என்னையே வெருட்டுறாய் என்ன. ஒரு போத்தில் சாராயத்தோடு உன்ற கடையை மூடப் பண்ணுறன் பார்." அவ்வளவும் தான் குமாரின் காதில் விழுந்தது. 
 
         உடைந்து குறுகிப்போன குமாருக்கு  "சனத்திந்த காசை அடிச்சுக் கொண்டு வந்து கடையை துறந்துபோட்டு" என்ற வசனம் மட்டும்  திருப்ப திருப்ப கேட்டுக்கொண்டிருந்தது. இயலாமையால் தூணில் சாய்ந்துகொண்டவன் "இவர்களுக்காகவா" என்று எண்ணி, பத்து வருடங்களுக்குப்பிறகு மீண்டும் அழத்தொடங்கினான். 

 

நன்றி http://eathuvarai.net/?p=4183

"என்னடா செய்வாய் உன்னால என்ன செய்யமுடியும். இப்படித்தானே அங்கையும் பொடியளை அடிச்சு அடிச்சு பிடிச்சனியள்? உங்கட புத்தி எங்கை போனாலும் மாறாதுடா. எளியதுகள் எல்லாம் என்ர பிள்ளையில கை வைக்கவோ "? இதுக்கு ஒரு முடிவு கட்டாமல் விடமாட்டன் இன்றைக்கு" என்று இன்னும் அதிகமாக சத்தம் போடத்தொடங்கினார் .
 
"அண்ண இதில நின்று தேவையிலாமல் கதைக்கவேண்டாம். பிறகு நீங்கள் வேற பிரச்சனைகளை சந்திக்கவேண்டு வரும்". இயல்பான வார்த்தைகள் வெளிப்பட்டன குமாரிடமிருந்து.
 
"என்னடா நான் எதுக்கு  பேசாமல் போகணும். உன்ர வண்டவாளம் எனக்குத் தெரியாதே சனத்திந்த காசை அடிச்சுக் கொண்டுவந்து கடையை துறந்துபோட்டு இப்ப எங்கட பிள்ளையளை திருத்த போகினமாம். நாளைக்கு பொலிசை கூடிக்கொண்டு வாரண்டா. என்னையே வெருட்டுறாய் என்ன. ஒரு போத்தில் சாராயத்தோடு உன்ற கடையை மூடப் பண்ணுறன் பார்." அவ்வளவும் தான் குமாரின் காதில் விழுந்தது.   /// 
 
இதுதான் இன்றைய நிலை . புலத்துப் பண்ணையார்கள் இருக்கும்வரை இவர்களும் தொடர்வார்கள் . கதைக்கு வாழ்த்துக்கள் கொழுவா :)  :)  .
  • கருத்துக்கள உறவுகள்

ஊர் 83 களுக்கு முன்னர் இருந்த பொற்காலத்திற்குப் போய்விட்டது. அத்தோடு பணம் தாராளமாகப் புரள்வதால் இளைஞர்களும் இளைஞிகளும் நிறையவே மாறிவிட்டார்கள். முன்னர் பிழையான நேரத்தில் பிழையான இடத்தில் நின்றால் வெருட்டி அடித்துக் கலைத்துவிடுவார்கள். வீட்டே வந்து சொன்னால் இன்னும் கூட அடிவிழும்!

கதையை நன்றாக உள்ளது. இடையில் குமார் கன்னத்தில் அறையும்போது விமலாக மாறிவிட்டார்! கோபம் வந்தால் அந்நியனாகிவிடுவாரோ!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குறுந்திரைப்படத்துக்குரிய பண்பைக் கொண்ட கதை ஒன்று!

முன்னாள் போராளி ஒருவரின் இன்னாள் நிலையையும் எங்கடை சனத்தின்ட மனோபாவத்தையும் எடுத்தியம்பும்,

எவ்வித உட்குத்துக்கள் வெளிக்குத்துக்கள் ஏதுமில்லாத நேர்மையான, எளிமையான கதை. 

 
THANKS - Gnanadas Kasinathar

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு எழுத்து உணர்வுபூவமாக எழுதியுள்ளீர்கள் நீங்களே அனுபவப்பட்டதுபோல்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய  யதார்த்தம் இதுதான்...!

  • கருத்துக்கள உறவுகள்

ஒருகாலம் பெருமை கொள்ளப்பட்டவர்கள் இன்று இந்த நிலையில் வாழும் அவலத்தின் காரணங்கள் நாங்களே. கதைக்க நன்றிகள் நெற்கொழுதாசன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.