Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை!

வணக்கம்

எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் சிந்தனைப்போக்கையும் வரலாற்றையும் மாற்றியமைத்தார்கள். அத்தகைய சக்திவாய்ந்த எழுத்தானது அடிப்படைவாதிகளது இருப்பிற்கான களமாக அமைந்துவிடும்போது, அந்தச் சமூகமே சீரழிந்துபோகும் கெடுவாய்ப்பு இருக்கிறது. அந்த இழிநிலையை நோக்கி தமிழிலக்கியம் நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சங்கலந்த ஐயம், அண்மைக்காலமாக சில இலக்கியவாதிகளது பொறுப்பற்ற பேச்சினால் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுள், ஜெயமோகன் செய்துவரும் இலக்கிய மேட்டிமைத்தனங்கள் சொல்லுந்தரமற்றவை.

அதிகாரத்தரப்பை உயர்த்திப்பிடித்தல், சிறுபான்மையினரைத் தரந்தாழ்த்துதல், பிறமதங்கள்பால் சகிப்புத்தன்மையற்று இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தல், இடதுசாரி சிந்தனையாளர்கள்பால் காழ்ப்புணர்வைக் கொட்டுதல், வரலாற்றைத் தன் நிலைப்பாடுகளுக்கியைந்தபடி திரிபுபடுத்துதல் இவற்றோடு ஆணாதிக்கத்தின் தடித்தனமும் அவரது எழுத்துக்களில் புரையோடிக்கிடக்கிறது. காலாகாலமாக ஆண்களே இந்தச் சமூகத்தை வழிநடத்திச் செல்லும் மேய்ப்பர்கள் என்ற ண்மையவாதத்திலிருந்தபடி தொடர்ந்து பெண்களுக்கெதிரான நச்சு வார்த்தைகளை இறைத்துவருகிறார். எழுத்துரு மாற்றம் இன்னபிற விடயங்களில் தனது “மேலான” கருத்துக்களைச் சொல்லி சர்ச்சைகளின்மூலம் “மஞ்சள் ஒளி வட்ட“த்தில் இருந்துகொண்டே இருக்கப் பிரியப்படுகிற அவரது மனச்சிக்கலைப் புரிந்துகொள்கிறோம். ஆனால், எழுதும் பெண்கள்மீது அவரால் பிரயோகிக்கப்படும் கருத்து வன்முறையை இனியும் புறந்தள்ளிக் கடந்துசெல்வதற்கில்லை.

‘பெரிதினும் பெரிதினை’த் தேடுவதாகத் தன்னைக் குறித்துச் சொல்லிக்கொள்ளும் ஜெயமோகன், தமிழிலக்கிய வாசகர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஆர்.சூடாமணி இறந்தபோது எழுதிய அஞ்சலிக் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

“சூடாமணியின் கதைகளில் இலக்கியமதிப்பு மிகக்குறைவு என்றே நான் எண்ணுகிறேன். சூடாமணியை இன்றைய நிலையில் வாழும் இலக்கியகர்த்தாவாக அணுகமுடியாது. தமிழ்ச்சிறுகதை, நாவல் ஆகியவற்றின் பரிமாணத்தில் அவருக்குப் பங்கேதும் இல்லை”எனக் கூறியதன் மூலம், தமிழின் முன்னோடிகளுள் ஒருவரான சூடாமணியின் இலக்கியப் பங்களிப்பையே தடாலடியாக நிராகரித்திருக்கிறார்.

மேலும், அவருக்கு ‘கலைமகள் பாணி எழுத்தாளர்’என்று பெயர் சூட்டிக் குறுக்குகிறார். (பார்க்க: ஆர்.சூடாமணி, நவம்பர் 02, 2010) இங்ஙனம் எழுதுவதன்மூலமாக தமிழிலக்கியத்தின் அறிவித்துக்கொள்ளப்படாத தரநிர்ணயக் கட்டுப்பாளராக தன்னைத் தான் நியமித்துக் கொண்டிருக்கிறார். ஒரு வாசகனாக, படைப்பாளியாக அவ்விதம் சொல்வதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் அதைப் பொறுத்துக்கொண்டோம்.

கேரள இலக்கிய ஆளுமைகளுள் ஒருவரான மாதவிக்குட்டி என்கிற கமலா தாஸ் மறைந்தபோது, அவரைக் குறித்து எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரையில், (பார்க்க: அஞ்சலி: கமலா சுரையா, ஜூன் 01,2009) “இளவயதுத் தோழனின் விந்துவின் வாசனை பற்றிய வர்ணனைகள் அவரைப் புகழ்பெறச் செய்தன”என்று சற்றும் கூச்சமின்றி எழுதுகிறார். மேலும், மாதவிக்குட்டியின் மகன் மாத்ருபூமி ஆசிரியராக இருந்த காரணத்தினாலேயே அவர் மிகையாகப் புகழப்பட்டார் என்றும் எழுதுகிறார். அவர்பாலான தன்னுடைய அசூசை வெளித்தெரிந்துவிடக் கூடாதென்பதற்காக சற்றே புகழ்ந்துவிட்டு, “கமலாவின் பிரச்சனைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான, குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பரவெறியும் கொண்டவர் கமலா.”என்கிறார்.

‘மாதவிக்குட்டி தனது தோற்றம் குறித்துக் கொண்டிருந்த தாழ்வுணர்ச்சியினால், தாளாத காம இச்சை கொண்டிருந்தார் என்பதை அவரது சுயசரிதை வழி அறியமுடிகிறது’ என்றும் கீழ்மைப்படுத்துகிறார். ஆக, படைப்பு முதற்கொண்டு பெண்களின் அனைத்துச் செயற்பாடுகளும் அவர்களது தோற்றம் மற்றும் உடலையே அடிப்படையாகக் கொண்டவை என்பதை ஜெயமோகன் நிறுவமுற்படுகிறார். மேலதிகமாக, தமிழ்கூறும் நல்லுலகில் அறியப்பட்ட படைப்பாளியாக இருக்கக்கூடிய ஜெயமோகனின், அழகு பற்றிய வரைவிலக்கண இலட்சணமும் நமக்குத் தெரிந்துபோகிறது. இந்தப் பாரதத் திருநாட்டில் விசித்திரமான நடத்தைகளோடும் பேச்சுக்களோடும் உலவும் சில ஆண் இலக்கியவாதிகளை எவ்வுணர்ச்சி செலுத்தியது என்பதைக் குறித்து ஜெயமோகன் ஏன் எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை என்பதை, அவரது உள்ளொளிதான் அவருக்கும் நமக்கும் விளக்கிச்சொல்லவேண்டும். இத்தகைய நவீன மனுக்களின் ஆசாடபூதித்தனங்கள், பக்கச்சாய்வுகள் பொதுவெளியில் அம்பலப்படுத்தப்படவேண்டியவை.

பெண் படைப்பாளிகள்மீது இவருக்கு ஆழமான வெறுப்பு இருப்பதை அவர் எழுத்துப்பூச்சினால் என்னதான் மறைக்கமுயன்றாலும் அவரையும் மீறிக்கொண்டு அந்த வெறுப்புணர்வு வெளிப்பட்டுவிடுகிறது. “பெண்-1, பெண்களின் காதல்”

(அக்டோபர் 22, 2012) என்ற கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

“இன்று இளம்வாசகிகளில் கணிசமானவர்கள் நம்முடைய அசட்டுப்பெண்ணியர்களால் ஆரம்பத்திலேயே பார்வை திரிக்கப்பட்டு இலக்கியத்திற்குள் நுழையவே முடியாதவர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள். உண்மையான இலக்கிய அனுபவம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.”

“இங்கே பெண்ணியம் பேசும் பெண் எழுத்தாளர்கள் பலரை நான் கவனித்து வருகிறேன். பொருட்படுத்தும் அளவுக்கு அடிப்படை வாசிப்புள்ள எவரையுமே நான் பார்த்ததில்லை. அவர்களிடம் ஒரு எளிய விவாதத்தை முன்னெடுக்கக்கூடத் தோன்றியதில்லை. அவர்களால் ஒரு சிறு சலசலப்புக்கு அப்பால் பொருட்படுத்தும் இலக்கிய ஆக்கங்கள் எதையுமே உருவாக்க முடியாமல் போனமைக்குக் காரணம் இதுவே.

இவர்கள் பேசும் பெண்ணியம் என்பது இலக்கியவாசகனின் எதிர்பார்ப்பு என்ற சவாலைச் சந்திக்கமுடியாமல், தங்கள் சொத்தைப் படைப்புக்களைப் பொத்திக்கொள்ள உருவாக்கிக்கொள்ளும் ஒரு எளிய தற்காப்புமுறை மட்டுமே”

“இந்தச் சல்லிக்குரல்களை முழுக்கத் தூக்கிவீசிவிட்டு வரும் உண்மையான படைப்பூக்கமும் அதற்கான படைப்புத்திமிரும் கொண்ட பெண்ணெழுத்தாளர்களுக்காகத் தமிழ் காத்திருக்கிறது.”

எத்தனை வன்மம், காழ்ப்புணர்வு, ஒவ்வாமை இருந்தால் இப்படி எழுதமுடியும்! ஒருவருக்குள் இத்தனை மன இருட்டும் வெறுப்புணர்வும் மறைந்திருப்பது அதிர்ச்சியூட்டுவதாயிருக்கிறது. பெண்ணியம் என்ற சொல்லின் பொருள், ‘ஆண்கள்மீதான வெறுப்பு’ என்ற தவறான புரிதலையே ஜெயமோகனும் கொண்டிருக்கிறார். அதனால்தான் அந்தச் சொல்மீது இத்தனை செருப்படி விழுகிறது. மேலும்,‘தமிழ் காத்திருக்கிறது’என்று மொழிவதன் மூலம் அவர் சொல்ல எண்ணுவது ஒன்றுதான்: இங்கு எழுதிக்கொண்டிருக்கும் பெண்களுள் யாருமே குறிப்பிடத்தக்க அளவில் எழுதவில்லை, அவர்கள் அடையாளமற்றவர்கள், ஆகவே, தமிழிலக்கியத்தில் பங்குதாரர்களாக உரிமை கொண்டாடும் பாத்தியதை அற்றவர்கள் என்பதையே அவர் தன் ஆணித்தரமான வாதங்கள் மூலம் மீண்டும் மீண்டும் நிறுவ முயற்சிக்கிறார். மேலும், ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அதை உண்மையென நம்பவைக்கும் உத்தியை, ‘பெண்களுக்கு ஆழமான வாசிப்பு கிடையாது’என்று சொல்வதன் மூலம் இன்றுவரை அவர் செய்துவருகிறார். எழுதுகிற பெண்களது வாசிப்பின் ஆழத்தை ஜெயமோகன் போன்ற இலக்கியப் பிதாமகர்களிடத்தில் அடிக்கடி சென்று நிரூபித்துச் சான்றிதழ் பெற்றுவருவதன் சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

திருவாளர் ஜெயமோகன் சில முடிந்த முடிபுகளைக் கொண்டிருக்கிறார். அவர் இரவும் பகலும் எழுதிக்கொண்டிருக்கிற காரணத்தால், தலையைத் தூக்கி அவற்றை மீள்பரிசீலனை செய்ய அவருக்கு நேரம் இருப்பதில்லை. ‘ஐஸ்வர்யா ராயும் அருந்ததி ராயும்’ (டிசம்பர் 08, 2010) என்ற கட்டுரையில் பெண்வெறுப்புத்தாரை கீழ்க்கண்டவாறு பொழிகிறது.

“ஐஸ்வர்யா ராயை நான் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அழகான பெண். அழகான பெண்கள் வழக்கமாக இருப்பதுபோல அல்லாமல், புத்திசாலியும்கூட”என்கிறார்.

ஆக, அழகான பெண்கள் எல்லோரும் முட்டாள்கள் என்ற முடிந்த முடிவினை அவர் கொண்டிருக்கிறார். இவரைத்தாம் தமிழ் வாசகப்பரப்பு இலக்கியகர்த்தா என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறது என்ற நிலை அவமானகரமானது. அதே கட்டுரையில், “அருந்ததி போராளி அல்ல, வெறும் ஊடகப்பிரமை மட்டுமே!”என்று சொல்கிறார். புக்கர் பரிசுபெற்ற அருந்ததிராயின் நாவல் ஆழமற்றதும் இந்திய வாசகர்களுக்கு ஏமாற்றமளித்ததும் என்கிறார். அது ஒரு படைப்பினை விமர்சனம் செய்யும் உரிமையின்பாற்பட்டது. ஆனால், அருந்ததி ராய் என்ற பெண்மீது, அந்த ‘ஊடகப் பிரமை’மீது ஜெயமோகன் கொண்டிருந்த காழ்ப்புணர்வானது ‘எனது இந்தியா’ (ஜூலை 02, 2012) என்ற கட்டுரையில் மிகக் கேவலமாக வெளிப்பட்டிருக்கிறது.

“அடிப்படையான வரலாற்றுணர்வோ சமநிலையோ இல்லாத அருந்ததி போன்ற குருவிமண்டைகள் ஊடகங்களில் இன்று பெறும் அதீத முக்கியத்துவம் மிக மிக ஆச்சரியமானது” என்கிறார் ஜெயமோகன்.

அருந்ததிராயின் நாவல்மீது, அவர் மேலைத்தேய ஊடகங்களால் அளவுக்குமீறித் தூக்கிப்பிடிக்கப்படுகிறார் என்ற விமர்சனத்தின்மீது எங்களிற் சிலருக்கும் உடன்பாடு உண்டு. ஆனால், ஒருவரை, அவரது தோற்றத்தினை முன்வைத்து இகழும் அற்பத்தனத்தை எக்காரணங்கொண்டும் மன்னிக்கமுடியாது. நொண்டி என்றும், குரூபி என்றும், குருவிமண்டை என்றும், சல்லிக்குரல்கள் என்றும் சகமனிதரை வசைபாடுவது அருவருப்பின் உச்சம். அதையொரு அறியப்பட்ட படைப்பாளி செய்வதென்பதும் அதைச் சகித்துக்கொண்டு, ‘என்றாலும் அவர் நன்றாக எழுதுகிறார்’என்று சிலர் குழைந்து பின்செல்வதும் மனச்சாட்சிக்கு விரோதமான செயலாகும். படுகொலைகளுக்கும் மனக்கொலைகளுக்கும் அப்படியொன்றும் பெரிய வித்தியாசங்கள் இல்லை.

ஆக, இவரது பெண்வெறுப்பு தமிழகத்தையும் தாண்டி அகில இந்தியாவெங்ஙணும் விரிந்துபரந்துசெல்கிறது. அண்மையில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களால், ஆனந்த விகடனில், ‘நம்பிக்கை நட்சத்திரங்கள்’என்று சுட்டப்பட்ட படைப்பாளிகளது பட்டியலைக் குறித்து ஜெயமோகன் கீழ்க்கண்டவாறு தன் “மேலான“ கருத்தினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

“பட்டியலில் உள்ள ஆண்படைப்பாளிகளில் அனைவரும் சிறப்பாக எழுதக்கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள். பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.

இது ஒரு முக்கியமான அம்சம். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது. கொஞ்சம் பெண்ணியமும் பீரிட்டால் பெரும்பாலானவர்கள் ‘எதுக்கு வம்பு, காலங்கெட்ட காலத்திலே?’என்று ஜகாவாங்கிவிடுவார்கள்.”

–‘நாஞ்சில் நாடன் பட்டியல்’(ஜூன் 09,2014)

எழுதுகிற பெண்களை இதைவிடக் கேவலப்படுத்திக் கீழிறக்க முடியாது. பெண்ணியம் பீறிடுகிறதோ இல்லையோ, ஜெயமோகனுள் படிந்து கிடந்த பெண்வெறுப்பு மேற்கண்ட வாசகங்களில் பீறிட்டுப் பாய்ந்திருக்கிறது. இது சகித்துக்கொள்ள இயலாத இழிவுபடுத்தல், அவமானம், எழுந்தமானத்தில் கருத்துரைக்கிற அறிவீனம், பெண்களது தன்மானம்மீது விழுந்திருக்கும் ஆணாதிக்கத்தின் மிலேச்சத்தனமான அடி. பெண்களால் எழுதப்பட்ட அனைத்துப் படைப்புக்களையும் ஜெயமோகன் வாசித்துவிட்டாரா? என்ற கேள்விகளெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். ‘உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்கள் ஆனவர்கள்’என்பதன் பொருள்தான் என்ன? உத்தி என்பது உடலைக் குறிக்கிறதா? வளைந்து நெளிந்து செய்யும் சாகசங்களையும் சமரசங்களையும் குறித்ததா? இத்தகைய இழிவுபடுத்தலுக்கு, பாலியல் நிந்தனைக்கு பதிலடி கொடுக்கும்முகமாக ஜெயமோகன்மீது பொதுநல அவதூறு வழக்குக்கூடத் தொடுக்க இயலும்.

சர்ச்சைகள்மூலம் என்றென்றைக்குமாகத் தனது இருப்பினை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும் ஜெயமோகன், வழக்கம்போல கேள்வியும் பதிலுமாக அடுத்த பதிவில்-‘பெண்களின் எழுத்து’ (ஜூன் 11,2014)- வந்து சப்பைக்கட்டு விளக்கமொன்றை அளித்திருக்கிறார்.

“இந்த ஆண் எழுத்தாளர்களில ஒருத்தர்கூடவா முக்கியமில்லை? ஒருத்தரோட பேட்டியோ படமோ எங்கியாவது வந்திருக்கா? பலரோட முகமே இந்த ஸ்டாம்பு சைஸ் போஸ்டரிலதான வந்திருக்கு. ஏன்?”என்று தனது பாலினம் சார்ந்து ‘தர்க்க’ரீதியாகக் கேள்வியெழுப்புகிறார். ஜெயமோகன் தன்னால் வாங்கப்படும் சஞ்சிகைகளை வாசிக்கிறாரா அன்றேல் எழுதியநேரம் போக அவற்றின்மீது படுத்து உறங்கிவிடுகிறாரா என்பதை அவர்தான் தெளிவுபடுத்தவேண்டும்.

“செய்திகளை அவங்களேகூட திறமையா உருவாக்கிக்கிறாங்க” என்கிறார். பெண்கள்தான் எத்தகைய சூழ்ச்சிக்காரிகளாகவும் விளம்பரமோகிகளாகவும் இருக்கிறார்கள்! நெடுந்தொடர்களில் வரும் (அபத்தமான) வில்லிகளைக் காட்டிலும் படுபயங்கரமானவர்களாயிருக்கிறார்கள் இந்தப் பெண் படைப்பாளிகள்!

“சில பக்கங்களுக்கு பிழையில்லாமல் தமிழ் எழுதக்கூட தெரியாதவர்கள் பலர். உட்கார்ந்து பத்துப் பக்கம் தொடர்ந்து எழுதக்கூடபொறுமையற்றவர்கள்”என்கிறார். பெண் படைப்பாளிகள்மீது காழ்ப்புணர்வுகொண்டு எழுதிய குற்றச்சாட்டுக் கட்டுரையிலேயே எழுத்துப்பிழை விட்ட புத்திசாலி, பெண்படைப்பாளிகளுக்கு இலக்கண வகுப்பெடுப்பதை காலக்கொடுமையன்றி வேறென்னவெனச் சொல்வது? எழுதுகிற பக்க எண்ணிக்கையில் இல்லை இலக்கியம்; அது அதன் செறிவிலும் சாரத்திலும் அழகியலிலும் வடிவத்திலும் இருக்கிறது என்பதை காலந்தான் அவருக்குக் கற்பிக்கவேண்டும். ஆயிரம் பக்கக் குப்பைகளை எழுதி காடழித்து மழைவீழ்ச்சியைக் குறைப்பதைப் பார்க்கிலும், காலத்தால் அழியாத ஒரேயொரு கவிதையை எழுதி வரலாற்றில் நிற்பவர் மேல்.

பெண்ணியவாதிகள்மீது இவருக்கு இருக்கும் எரிச்சலை, அண்மையில் வலையேற்றிய தன்னிலை விளக்கக் கட்டுரையிலும் வெளிப்படுத்துகிறார்.

“இந்தப் பெண்களில் பலர் எழுதும் அசட்டுப் பெண்ணியப்படைப்புகளை பெண்ணியமென்பதற்காக அங்கீகரிக்க வேண்டுமென்றால், இதேபோல மாக்ஸியம், சூழியல் என எதையாவது வைத்து எழுதப்படும் எல்லாப் பிரச்சாரக் குப்பைகளையும் அங்கீகரிக்கவேண்டியதுதானே?”என்கிறார்.

பெண்ணெழுத்தையும் சேர்த்து ஆணே எழுதிக்கொண்டிருக்க அனுமதியாது அலையலையாக எழுதக் கிளம்பியிருக்கும் பெண்களைக் குறித்த ஆற்றாமையாகவும் பதட்டமுமாகவே ஜெயமோகனின் கோபத்தைக் கொள்ளவேண்டியிருக்கிறது.

“உண்மையிலேயே இவ்விசயத்தில் விவாதிக்க நினைப்பவர்கள் தமிழில் கிருத்திகாவுக்குப் பின் பெண்கள் எழுதிய எந்த இலக்கியப்படைப்பில் அவர்கள் முக்கியமான வாசக அனுபவத்தை அடைந்தனர் என்று எண்ணிப்பார்க்கட்டும். பெண்கள் எழுதிய எந்தப் படைப்பு சென்ற முப்பதாண்டுகாலத்தில் தமிழில் பேசப்பட்டது என்பதைக் கணக்கிடட்டும்”என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.

ஆக, கடந்த முப்பதாண்டு காலத் தமிழிலக்கியம் ஆண்களால் மட்டுமே நிறைக்கப்பட்டிருக்கிறது என்ற அடிமுட்டாள்த்தனமான வாதத்தினைச் செய்திருக்கிறார். அம்பை போன்று தமிழில் பெண்ணியச் சிந்தனைகளுக்குத் தமது படைப்பின்வழி வித்திட்டவர்களுக்கும், அந்த முப்பதாண்டு காலப்பகுதியில் எழுதிக்கொண்டிருந்த, எழுதிக்கொண்டிருக்கும் இதர பெண் படைப்பாளிகளுக்கும் தமிழிலக்கியச் சரித்திரத்தில் இடமில்லை என்று சொல்கிறார்.

அவர்களெல்லோரும் ஆணாதிக்கத்தின் துர்க்கந்தத்தில் கற்பூரம்போல கரைந்து போயிருக்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து சொல்லிவருவதன் மூலமாக, இலக்கியத்தில் பெண்களுக்குப் பங்கில்லை, அவர்கள் தொடர்ந்தும் அடையாளமற்றவர்களாகவே நீடித்திருக்கிறார்கள் என்ற வாசக மனப்பிம்பத்தைக் கட்டியெழுப்ப ஜெயமோகன் பெரிதும் முயன்றிருக்கிறார்.

தமிழிலக்கிய வரலாற்றின் பாதையில், கண்களில் பட்டை கட்டப்பட்ட குதிரையின்மீதேறி ஆண் சார்புச் சாட்டையோடு விரைந்து வந்துகொண்டிருப்பது ஜெயமோகனாகவன்றி வேறு எவராக இருக்கவியலும்?

நாஞ்சில் நாடனது சர்ச்சையைக் கிளப்பிய பட்டியலில் இடம்பெற்றிருந்த ‘வகை மாதிரி’களில் ஒருவராகவே இந்தக் கண்டனக் கூட்டறிக்கையில் ஜெயமோகன் மையமாக வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், தமிழிலக்கியச் சூழலிலும் இணையவெளியிலும் ஆணாதிக்கவாதிகளும் கலாச்சாரச் சாட்டையேந்திய காவலர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் என்பதற்குப் பல உதாரணங்களைக் காட்டமுடியும்.மாற்று அரசியற் கருத்துக்களை முன்வைக்கும் பெண்களது ஒழுக்கங் குறித்து கேள்வியெழுப்புவதன் மூலமும், அவர்களைக் குறித்து அவதூறுகளைப் பரப்புவதன்மூலமும், பாலியல்ரீதியான வக்கிரச் சொல்லாடல்கள் மூலமும் பெண்களைப் பின்னடிக்கச்செய்வதே அவர்களது அரசியல் விவாதமாக இருந்துவருகிறது. தனிமனிதத் தாக்குதல்களில் பதிப்பாளர்களோ (சிலர்) அன்றேல் இலக்கியவாதிகளோ (சிலர்) சளைத்தவர்களல்ல என்பதைக் கண்கூடாகக் கண்டுவருகிறோம். அவர்களிற் சிலர் குழுவாகச் சேர்ந்துகொண்டு பெண்களுக்கெதிரான தங்களது எள்ளல்களை, இழிவுபடுத்தல்களை, அவதுாறுகளை ‘நிறுவனமய’ப்படுத்தி வருகிறார்கள். இக்கூட்டறிக்கையின் கனதி மற்றும் விரிவஞ்சி அவர்களது பெயர்களை விலக்கியிருக்கிறோம்.

இனிவருங்காலத்தில் அத்தகையோரின் நிலைப்பாடுகள் குறித்து தொடர் உரையாடல்களை நிகழ்த்தவுள்ளோம். ஆக மொத்தத்தில், ஜெயமோகனால் ‘கண்டுபிடிக்கப்பட்ட’ வார்த்தையொன்றில் சொல்வதானால், இணையம் ஒரு விரிந்த ‘வசைவெளி’யாக மாறிவருகிறது. துரதிர்ஷ்டவசமாக அந்த வார்த்தையைக் கண்டுபிடித்தவரே அதனைப் பிரயோகிப்பவருமாயிருக்கிறார். இலக்கியத்தில் அறம் என்றும், அழகியல் என்றும், உள்ளொளி என்றும் சொற்களை வைத்து சிலம்பாட்டம் ஆடினால் மட்டும் போதாது; சகவுயிரை மதித்தலே மனித விழுமியங்களில் முதன்மையானதாகும் என்பதை முதலில் ஜெயமோகன் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இந்த ஆணாதிக்க சமூகத்தில் குடும்பம் என்ற பாரபட்சங்கள் நிறைந்த அமைப்பினுள் இருந்தபடி எழுதுவதென்பது எத்தனை சிரமத்திற்குரியது என்பதை, அறிவின்பாற்பட்டுச் சிந்திக்கும் அனைவரும் அறிவர். எனினும், அதற்காக பெண்கள் தங்கள் எழுத்தின்மீது மென்சாய்வு காட்டுங்கள் என்று கோரவில்லை;

விமர்சனங்களில் கருணைகூர்ந்திடுங்கள் என்று கையேந்தி நிற்கவில்லை.

இத்தகைய அவதூறுகளை, இழிவுபடுத்தல்களை சகவுயிரிகளாகிய எங்கள்மீது செய்யாதீர்கள் என்பதே எங்களது வேண்டுகோள். எத்தனையோ நூற்றாண்டுகளாக பெண்ணடிமைத்தனம் என்ற ஈயக்குண்டை எங்கள் கால்களில் இழுத்தபடி நகரமுடியாமல் நகர்ந்துகொண்டிருக்கிறோம். இந்நிலையில், படைப்பாளிகள் என்ற முகமூடியை அணிந்தபடி உங்கள் பிற்போக்குவாத எச்சிலை இங்கு வந்து கொட்டாதீர்கள் என்றே நாங்கள் சொல்கிறோம். உங்களைக் குறித்த மிகைபிம்பங்களைக் கட்டியெழுப்ப ஆயிரக்கணக்கிலான வழிகளுண்டு. அவற்றையெல்லாம் விடுத்து, உங்கள் ஆணாதிக்க ‘அறிவாயுதங்களை’ எங்கள்மீது கூர்தீட்டிப் பார்க்க முற்படாதீர்கள்.

ஜெயமோகனது மேட்டிமைத்தனத்திலிருந்து முகிழ்த்தெழும் அபவாதங்களைத் தட்டிக்கேட்கும் பொறுப்பு, பெண்களைப்போலவே சக ஆண் எழுத்தாளர்களுக்கும் உண்டு. எனினும், அவர்களிற் பலர் அதைக் கண்டுகொள்ளாததுபோலவே கடந்துசெல்கிறார்கள். அல்லது, அவரது நிலைப்பாட்டினையே அவர்களும் கொண்டிருந்து அவரது வார்த்தைகளில் உள்ளுக்குள் மகிழ்கிறார்கள். ஒவ்வொரு படைப்பாளியும் தத்தம் மனச்சாட்சியைக் கேள்வி கேட்கவேண்டிய நேரமிது. சக எழுத்தாளர், நண்பர், முன்னுரை எழுதித் தருகிறவர், விருதுகளுக்குப் பரிந்துரைத்தவர், பரிந்துரைக்கவிருக்கிறவர் என்ற சமரசங்களையெல்லாம் பின்தள்ளி மனச்சாட்சியின் குரலுக்கு செவிமடுத்து எழுபவரே மனிதர்! அவரே உண்மையான படைப்பாளி!

தன் இருப்பின் மூலவேர் ஆட்டங்கண்டுவிடுமோ என அஞ்சி எல்லோரையும் சந்தேகிக்கும், தன் வீரத்தை அடிக்கடி பறையறைவித்துக்கொள்ளும், பாதுகாப்பு வளைத்தை இறுக்கமாக்கும் சர்வாதிகாரியின் சஞ்சல மனநிலையையே ஜெயமோகன் தற்போது கொண்டிருக்கிறாரோ என ஐயுறுகிறோம். நூற்றாண்டுகளாக ஆணாதிக்கம் என்ற சகதியினுள்ளிருந்து வெளிவரப் போராடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான ஜெயமோகனின் காழ்ப்புணர்வுச் சாடல்களுக்கு எதிராக, இந்த அறிக்கையினூடாக எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்ஙனம்

அம்பை, குட்டிரேவதி, சுகிர்தராணி, தமயந்தி, கவிதா முரளிதரன், சே.பிருந்தா, அ.வெண்ணிலா, சல்மா, பெருந்தேவி, தமிழச்சி தங்கபாண்டியன், மோனிகா, ஜீவசுந்தரி பாலன், உமா சக்தி, தர்மினி, கவிதா சொர்ணவல்லி, வினோதினி சச்சிதானந்தம், கவின்மலர், மயு மனோ, சக்தி ஜோதி, தமிழ்நதி, லிவிங் ஸ்மைல் வித்யா, ஸ்வாதி ச.முகில், ஆர்த்தி வேந்தன், நறுமுகைதேவி, முபீன் சாதிகா, பாரதி செல்வா, ரமா இன்பா சுப்ரமணியம், ஷஹிதா, கொற்றவை, பரமேஸ்வரி, சபிதா இப்ராஹிம், ச.விஜயலட்சுமி, உமா மோகன், ஹேமாவதி, பிரசாந்தி சேகரம், நாச்சிமகள் சுகந்தி, ஜீவசுந்தரி பாலன், பத்மஜா நாராயணன், கீதா இளங்கோவன், பாலபாரதி, சி.புஷ்பராணி, பானுபாரதி, பவானி தர்மா, இளமதி, கிர்த்திகா தரன், நிலவுமொழி செந்தாமரை, சு.தமிழ்ச்செல்வி, நந்தமிழ்நங்கை, கல்பனா கருணாகரன், சி.மீனா, ஜென்னி டாலி, ப்ரியம்வதா, இந்திராகாந்தி அலங்காரம்,தமிழ்ப்பெண் விலாசினி, கு.உமாதேவி, தேனம்மை லஷ்மணன், அப்துல் ஹக். லறீனா, கீதா நாராயணன், ஃபாயிஸா அலி, பெண்ணியம் இணையத்தளக் குழு (தில்லை, கேஷாயணி, சுகந்தி,வெரோனிக்கா, சரவணன்), லதா சரவணன், ஜீவலக்ஷ்மி, ஷில்பா சார்லஸ், அகல்யா பிரான்ஸிஸ், ராஜ் சுகா, சசிகலா பாபு, சுபாஷினி திருமலை, நிவேதா உதயன், கோதை, சாந்தி, பிறேமா, நிலா லோகநாதன், பரிமளா பஞ்சு, மீசா காதம்பரி

(எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள்)

பிற்குறிப்பு:

இந்தக் கண்டனக் கூட்டறிக்கையோடு உடன்படுகிற ஆண் படைப்பாளிகள்,கலைஞர்கள் இந்தப் பதிவின்கீழ் தமது ஒப்புதலைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

http://www.penniyam.com/2014/06/blog-post_18.html

ஆணாதிக்கதில் ஊறிய மனநிலையும், இந்திய மரபைக் காக்கின்றேன் என்று இந்துத்துவாவை தூக்கிப் பிடிக்கும் மதவெறியும், ஈழப்போராட்டம் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் போராட்டங்கள் அனைத்தையும் எதிர்க்கும் பார்பனிய சிந்தனையும் கொண்டவர் ஜெயமோகன். தான் சுட்டிக் காட்டும் எழுத்தாளர்கள் தான் இலக்கிய கர்த்தாக்கள்/ படைப்பாளிகள் என்று நிறுவ முற்பட்டு அதன் மூலம் அவர்களுக்கும் மேலான ஒரு முதன்மை எழுத்தாளராக தன்னை பிரகடனப் படுத்த விரும்பு விளம்பரதாரி.

 

இவ் அறிக்கையில் ஜெயமோகனைப் பற்றிச் சொல்லியிருக்கும் எந்த ஒரு விடயமும் தவறான விடயம் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

 

தன் இருப்பின் மூலவேர் ஆட்டங்கண்டுவிடுமோ என அஞ்சி எல்லோரையும் சந்தேகிக்கும், தன் வீரத்தை அடிக்கடி பறையறைவித்துக்கொள்ளும், பாதுகாப்பு வளைத்தை இறுக்கமாக்கும் சர்வாதிகாரியின் சஞ்சல மனநிலையையே ஜெயமோகன் தற்போது கொண்டிருக்கிறாரோ என ஐயுறுகிறோம். நூற்றாண்டுகளாக ஆணாதிக்கம் என்ற சகதியினுள்ளிருந்து வெளிவரப் போராடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான ஜெயமோகனின் காழ்ப்புணர்வுச் சாடல்களுக்கு எதிராக, இந்த அறிக்கையினூடாக எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

இதில் ஐயப்பட ஏதுள்ளது?

பெண்களின் எழுத்து பற்றிய என்னுடைய விரிவான கருத்துக்களுக்குப் பதிலாக பெண் எழுத்தாளர்கள் என சிலர் எழுதிய கூட்டறிக்கை ஒன்றை வாசித்தேன்.அவர்களில் நாலைந்துபேரை மட்டுமே நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவர்கள் பெரிதாக ஏதும் எழுதவில்லை என்பது என் எண்ணம். கேள்விப்படாதவர்கள் இவர்களை விட சிறப்பாக எழுதியிருப்பார்கள் என நம்பலாமா என யோசிக்கிறேன்.

வருத்தம் அளித்த அறிக்கை இது. இதில் உள்ள வசைகள், அவதூறுகள், திரிபுகளுக்காக அல்ல. அவற்றை நான் புதியதாகச் சந்திக்கவில்லை. என் படைப்புகளை, கட்டுரைகளை வாசித்தவர்களிடமே நான் பேசவிரும்புகிறேன். அவர்களுக்கு என் கருத்துக்களின் வரலாற்று நோக்கும், என் படைப்புகளில் உள்ள உணர்வுநிலையும் தெரிந்திருக்கும். பிறருக்கும் எனக்கும் தொடர்பே இல்லை.

என் வருத்தம் இதை ஒரு பதிலாக உட்கார்ந்து எழுதிய எவரும் நான் எழுதிய எவற்றையும் வாசித்திருக்கவில்லை என்பதற்கான எழுத்துவடிவ ஆதாரம் இவ்வறிக்கை என்பதனால். இவர்களின் இலக்கியரசனைக்கும், விவாதங்களை எதிர்கொள்ளும் தரத்துக்கும் இதைவிடப்பெரிய சான்று ஏதுமில்லை என்பதனால்.இத்தனைபேர் கூடியும்கூட இந்த தரத்துக்குமேல் ஓர் அறிக்கையை இவர்களால் எழுதமுடியவில்லையே என்பதனால்.

சமகால இலக்கியத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியைப்பற்றி ஓர் அடிப்படைப்புரிதல்கூட இல்லாமல் காழ்ப்பரசியல்சார்ந்த அபத்தமானஅக்கப்போர்களில் இருந்து திரட்டிக்கொண்ட வெறும் வசையை மட்டுமே முன்வைக்கக்கூடிய இத்தகைய ஓர் எதிர்வினையை உண்மையில் நான் எதிர்பார்க்கவில்லை.

இவர்களைப்பற்றி நான் சொன்னவற்றுக்கு இந்த ஒரே அறிக்கை மட்டுமே சான்று. ஆகவே இது வரலாற்றில் நிற்கவேண்டும் என்று எண்ணுகிறேன். ஆகவே இதை இங்கே பதிவுசெய்கிறேன். இன்று என் வாழ்க்கையின் மிகப்பெரிய உலகியல் கனவு என்பது என் மகள் ஓர் எழுத்தாளராக ஆகவேண்டும் என்பதே. ஆனால் இத்தகைய ஓர் அறிக்கையில் கையெழுத்திடும் ஓர் எழுத்தாளராக அவள் ஆனால் அதைவிட பெரிய வீழ்ச்சியாக எதையும் எண்ணமாட்டேன். எழுத்தாளர் என்பவர் எந்த ஒரு எதிர்வினையையும் அறிவுத்தளத்தில்தான் நிகழ்த்தவேண்டும். இத்தகைய எதிர்வினையை நான் குழாயடிகளில் தான் கண்டிருக்கிறேன்.

மீண்டும் என் வருத்தத்தை தெரிவிக்கிறேன். இந்தப்பெண்களை எழுத்தாளர்கள் .அறிவுஜீவிகள் என நம்பி இலக்கிய விமர்சனத்தை முன்வைத்தமைக்காக. மிக எளிய இந்த மனங்களைப் புண்படுத்தும் எண்ணம் என்னிடம் இல்லை. ஒரு தருணத்திலும் நான் எழுத்தாளர்கள் அல்லாத எவரையும் கடுமையாக விமர்சனம் செய்ததில்லை. இதில் கையெழுத்திட்ட அனைவரிடமும் அவர்களைப்புண்படுத்தியமைக்காக மன்னிப்பு கோருகிறேன். அமைதிகொள்ளுங்கள் நண்பர்களே, நீங்கள் வாழும் அந்தச் சில்லறைஉலகில் நான் இல்லை

இதை ஏதேனும் பெண் எழுத்தாளர்கள் வாசிப்பார்கள் என்றால் ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இலக்கியம் என்பது இத்தகைய நாலாந்தர அரசியல் வசைநடவடிக்கை மூலம். கும்பல்கூடி கூச்சலிடுவதன்மூலம் செய்யப்படுவதல்ல. அது அர்ப்பணிப்பின், தவத்தின் விளைவாக நிகழ்வது. அதை அளிக்கும் ஒருவர் இத்தகைய ஓர் அவதூறு- வசை அறிக்கையில் கையெழுத்திடும் கீழ்மை நோக்கிச் செல்லமாட்டார். தனித்து நிற்கும் குரலையே நாம் இலக்கியவாதியின் குரல் என்கிறோம்.

(இந்த அறிக்கைக்கு ஜெயமோகனின் பதில் இது ) 

  • கருத்துக்கள உறவுகள்

நம்மட சுமோவும் கையெழுத்து வைத்திருக்கிறா போல இருக்கு? :) சகறா அக்காவும் கையெழுத்து வைச்சவவோ?????????????????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயமோகன் பதில் இப்படியல்லவா இருக்கின்றது..

///என் வருத்தம் இதை ஒரு பதிலாக உட்கார்ந்து எழுதிய எவரும் நான் எழுதிய எவற்றையும் வாசித்திருக்கவில்லை என்பதற்கான எழுத்துவடிவ ஆதாரம் இவ்வறிக்கை என்பதனால். இவர்களின் இலக்கியரசனைக்கும், விவாதங்களை எதிர்கொள்ளும் தரத்துக்கும் இதைவிடப்பெரிய சான்று ஏதுமில்லை என்பதனால்///

  • கருத்துக்கள உறவுகள்

நம்மட சுமோவும் கையெழுத்து வைத்திருக்கிறா போல இருக்கு? :) சகறா அக்காவும் கையெழுத்து வைச்சவவோ?????????????????????

 

ஆராவது கண்டு பிடித்துச் சொன்னால் சகாறாவின் பச்சைப்புள்ளியைப் பெற்று கொள்வீர்கள்

 

இந்த ரதிக்கு விடுப்புப் பிடுங்கிறதே வேலையாப் போச்சு... :icon_mrgreen:

 

ஜெயமோகனின் எழுத்தும் அவரின் விதண்டாவாத கருத்துக்களும் வெவ்வேறானவை ,ஜெயமோகனில் எழுத்தில் பெரிதாக  எதுவித அரசியலுமில்லை அதைவிட வாசிப்பவர்களை மிக உன்னத நிலைக்கு கொண்டுபோகும் படைப்புகள் அவை .

 

முரண்பாடுகளை  தானாக உருவாக்குவதில் ஏனோ தெரியாது முன்னிலை வகிக்கின்றார் .

கருணாநிதி பற்றிய சர்ச்சை .

எவ்வளவு பணம் தந்தாலும் வணிகபத்திரிகை ,சினிமாவிற்கு எழுத மாட்டேன் என்றுவிட்டு இன்று அதையே தொழிலாக செய்கின்றார் 

பல முக்கிய எழுத்தாளர்களை மிக கேவலமாக மட்டம் தட்டுதல் (பேசும் போதும்அதையே செய்கின்றார்) 

 

இவையெல்லாம் தாண்டி அவர் எழுத்துக்களை மட்டும் நான் நேசிக்கின்றேன் .

 

இந்த பட்டியலில் ஜெயமோகன் மட்டுமல்ல பலர் இருக்கின்றார்கள் .

தமிழ் இலக்கிய உலகத்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. தங்களை கேவலமாக விமர்சித்ததற்காக எழுத்தாளர் ஜெயமோகனுக்கு பெண் எழுத்தாளர்கள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர். அதற்கு ஜெயமோகனும் தமது இணையத்தில் கடும் பதிலளித்துள்ளார். அண்மையில் ஆனந்த விகடன் வார இதழில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் "நம்பிக்கை நட்சத்திரங்கள்" என்ற தலைப்பில் சில படைப்பாளிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு

20-jayamohan-600.jpg

 

எழுதியிருந்தார். இது குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்த கருத்து இது: ஜெயமோகன் கருத்து "பட்டியலில் உள்ள ஆண்படைப்பாளிகளில் அனைவரும் சிறப்பாக எழுதக்கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன். ஆனால், பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள். பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை. இது ஒரு முக்கியமான அம்சம். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது. கொஞ்சம் பெண்ணியமும் பீரிட்டால் பெரும்பாலானவர்கள் ‘எதுக்கு வம்பு, காலங்கெட்ட காலத்திலே?'என்று ஜகாவாங்கிவிடுவார்கள்." பெண் எழுத்தாளர்கள் எதிர்ப்பு ஜெயமோகனின் இந்த கருத்து பெண் எழுத்தாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அம்பை, குட்டி ரேவதி உள்ளிட்ட பல்வேறு பெண் எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து ஜெயமோகனுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், ஆணாதிக்க சமூகத்தில் குடும்பம் என்ற பாரபட்சங்கள் நிறைந்த அமைப்பினுள் இருந்தபடி எழுதுவதென்பது எத்தனை சிரமத்திற்குரியது என்பதை, அறிவின்பாற்பட்டுச் சிந்திக்கும் அனைவரும் அறிவர். எனினும், அதற்காக பெண்கள் தங்கள் எழுத்தின்மீது மென்சாய்வு காட்டுங்கள் என்று கோரவில்லை; விமர்சனங்களில் கருணைகூர்ந்திடுங்கள் என்று கையேந்தி நிற்கவில்லை. இத்தகைய அவதூறுகளை, இழிவுபடுத்தல்களை சகவுயிரிகளாகிய எங்கள்மீது செய்யாதீர்கள் என்பதே எங்களது வேண்டுகோள். எத்தனையோ நூற்றாண்டுகளாக பெண்ணடிமைத்தனம் என்ற ஈயக்குண்டை எங்கள் கால்களில் இழுத்தபடி நகரமுடியாமல் நகர்ந்துகொண்டிருக்கிறோம். இந்நிலையில், படைப்பாளிகள் என்ற முகமூடியை அணிந்தபடி உங்கள் பிற்போக்குவாத எச்சிலை இங்கு வந்து கொட்டாதீர்கள் என்றே நாங்கள் சொல்கிறோம். உங்களைக் குறித்த மிகைபிம்பங்களைக் கட்டியெழுப்ப ஆயிரக்கணக்கிலான வழிகளுண்டு. அவற்றையெல்லாம் விடுத்து, உங்கள் ஆணாதிக்க ‘அறிவாயுதங்களை' எங்கள்மீது கூர்தீட்டிப் பார்க்க முற்படாதீர்கள்" என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயமோகன் பதில் இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெயமோகன், சமகால இலக்கியத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியைப்பற்றி ஓர் அடிப்படைப்புரிதல்கூட இல்லாமல் காழ்ப்பரசியல்சார்ந்த அபத்தமான அக்கப்போர்களில் இருந்து திரட்டிக்கொண்ட வெறும் வசையை மட்டுமே முன்வைக்கக்கூடிய இத்தகைய ஓர் எதிர்வினையை உண்மையில் நான் எதிர்பார்க்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.

tamil.oneindia.in/news/tamilnadu/women-writers-activists-hit-at-jeyamohan-203928.html

  • கருத்துக்கள உறவுகள்

//ஆனால், பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள். பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை. இது ஒரு முக்கியமான அம்சம். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது. கொஞ்சம் பெண்ணியமும் பீரிட்டால் பெரும்பாலானவர்கள் ‘எதுக்கு வம்பு, காலங்கெட்ட காலத்திலே?'என்று ஜகாவாங்கிவிடுவார்கள்." //

இவர் சொன்னதில் என்ன பிழை உள்ளது..? இதைத்தானே இங்கு நெடுக்கரும் சொல்லுறார்?!  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சொன்னதில் என்ன பிழை உள்ளது..? இதைத்தானே இங்கு நெடுக்கரும் சொல்லுறார்?!  :lol: 

 

சரி

செருகியாச்சு :lol:

ஏதோ நம்மால  முடிஞ்சது... :D

பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம்

 

441xNxambai_1960769g.jpg.pagespeed.ic.6C

அம்பை

 

தமிழில் தற்போது எழுதிவரும் ஆண் எழுத்தாளர்களுக்கு இணையாகப் பொருட்படுத்தக்கூடிய அளவில் பெண் எழுத்தாளர்கள் அதிகம் இல்லை என்று சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் எழுதியிருந்தார். அத்துடன், “பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பல வகை உத்திகள் மூலம் ஊடக பிம்பங்களாக ஆனவர்கள். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்குப் பெண்களாகத் தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது” என்றும் கூறியது தமிழ் இலக்கிய உலகில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பெண் எழுத்தாளர்கள் சந்திக்கும் விமர்சனங்களை வரலாற்றுப்பூர்வமாக எழுத்தாளர் அம்பை இக்கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.

வெகு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் எழுத்தாளர் (ஆண் எழுத்தாளர்தான்!) ஒரு மூத்த ஆண் எழுத்தாளருக்கு எழுதிய கடிதத்தில் என் கதைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ‘அம்பையின் கதைகளைப் படிக்கும்போது அவர் உடல் ரீதியாகத் திருப்தியுறாதவர் என்று தெளிவாகத் தெரிகிறது’ என்ற தொனியில் அமைந்திருந்தது அவர் விமர்சனம். கருணை உள்ளம் கொண்ட அந்த மூத்த எழுத்தாளர், அந்தக் கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தார் தன் கருத்தொன்றையும் கூறாமல். உடனே அந்தக் கடிதம் எழுதியவர் எழுதியிருந்த கதைத் தொகுப்பு ஒன்றைப் படித்தேன். தாங்க முடியவில்லை. ‘திருப்தியுற்றவர்கள் கதைகளின் தரம் இதுதான் என்றால், நல்லவேளை நான் திருப்தியுறவில்லை’ என்று தோன்றியது.

பெண் எழுத்து குறித்தும், பொதுவாகப் பெண்களைக் குறித்தும் இருக்கும் இந்த நோலாமை தமிழ் இலக்கிய விமர்சன மரபிலும், தமிழ் இலக்கிய உலகிலும் ஒரு தொடர் கண்ணியாக இருந்துவருகிறது. கல்வியை, உரிமைகளை, வெளிப்பாட்டுக்கான நியாயமான இடத்தைக் கோரும் பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் குறையுள்ளவர்கள், அந்தக் குறை பாடுதான் அவர்களை எல்லா வகையிலும் செயல்படத் தூண்டுகிறது என்ற எண்ணம் பல காலமாக இருந்துவருவதுதான்.

இந்தக் குறைகள்தான் என்ன? அழகின்மை, தோற்றப் பொலிவின்மை, ஓர் ஆணின் துணையின்மை, பெண்களுக்கு இருக்கக்கூடாத அதீத காம இச்சைகள் இவைதான் பெண்களை இயக்கும் அடிப்படையான குறைகள்/காரணங்கள் என்ற கருத்து தொடர்ந்து நிலவிவருகிறது. அத்தனையும் பெண் உடல் மேல் கட்டப்பட்டவை. இவை மட்டும் இல்லாதிருந்தால் பெண்ணின் செயல்பாடும் வெளிப்பாடும் வேறு மாதிரி இருந்திருக்கும் என்ற நோக்கு. பெண் மட்டும் ஆண்கள் உவகையுறும் “பெண் தன்மை” கொண்டவளாக இருந்திருந்தால் சரித்திரத்திலும் இலக்கியத்திலும் அவள் பங்கு வேறு வகைப்பட்டிருக்கும் என்ற கணிப்பு.

பாரதி எழுதிய விமர்சனம்

இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல. சக்ரவர்த்தினி பத்திரிகையில் பாரதியார் 1906-ல் பெண்கள் அரசியல் உரிமை கோருவதைப் பற்றி எழுதும்போது, இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள், திருமணமாகாதவர்கள் என்று குறிப்பிடுகிறார். ஒரு முறை தி. ஜானகிராமனின் கதை ஒன்றைக் குறித்து குகப்ரியை விமர்சித்தபோது, “குகப்ரியை மாமி மடியாக எழுதுபவர்” என்று தி. ஜானகிராமன் பதிலளித்தார் என்று குகப்ரியை என்னிடம் குறிப்பிட்டதுண்டு. ஒரு பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆபாசமான முறைகளில் எழுத்திலும் செயலிலும் என்னைக் கேவலப்படுத்திய பெரும் கவிஞர் கூறியதெல்லாம், இவள் சுதந்திரமானவள் அதனால் நடத்தை கெட்டவள் (நடத்தை கெட்டவள் எனக் குறிப்பிடும் பெண்கள் இத்தகையவர்கள் கணிப்பில் எப்படிப்பட்டவர்கள் என்ற விளக்கங்களை ஆராய்ச்சி செய்யப் பல பக்கங்களும் அசாத்தியப் பொறுமையும் வேண்டும்) என்பதுதான். சமீபகாலத்தில், திருமணம் செய்துகொள்ளாத அல்லது தனிப் பெண்ணாக வாழும் பெண் எழுத்தாளர்களை “உய்விக்க” வரும் சில ஆண் எழுத்தாளர்கள் வைக்கும் முதல் கட்டுப்பாடு இலக்கியக் கூட்டங்களுக்குப் போகக் கூடாது, கவிதைகள் எழுதக் கூடாது என்பதுதான். ஓர் ஆணின் மேலான துணை கிடைத்த பின் ஒரு பெண்ணுக்கு இவை எல்லாம் தேவையா என்ன? இப்படி உய்விக்கப்பட ஆதரவு தராத பெண்களுக்கு ஊடகங்களிலோ வேறு எங்காவதோ வேலை கிடைத்துவிட்டால் தொலைபேசியில் இரவு கூப்பிட்டு “யாருடன் உறவு கொண்டதால் (அவர்கள் இதற்கு உபயோகிக்கும் விரசமான மொழி வேறு) இந்த வேலை கிடைத்தது?” என்று கேட்கும் ஆண் எழுத்தாளர்களையும், தொடர்ந்து இரவில் தொலைபேசியில் கூப்பிட்டு, விரசமாகப் பல ஆண் எழுத்தாளர்கள் பேசுவதால் இரவு வேளைகளில் தொலைபேசித் தொடர்பையே துண்டித்துவிடும், அஞ்சலட்டைகளில் அருவருக்கத்தக்க படங்களை சிலர் வரைந்து அனுப்பித் தொடர்ந்து செய்யும் இம்சைகளால் வீட்டையே மாற்றிய பெண் எழுத்தாளர்களையும் எனக்குத் தெரியும். இவற்றை எல்லாம் பார்க்கும்போதும், இது குறித்து எங்களுக்குள் நாங்கள் பேசிக் கொள்ளும்போதும், சமீபத்தில் பெண் எழுத்து மற்றும் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை நோக்கும்போதும், பெண் வெறுப்பு என்பது எவ்வளவு தீவிரமான, இன்னும் பெயரிடப்படாத மனநோய் என்பது தெரிகிறது.

இலக்கிய உலகில் பெண்ணுக்கு அளிக்கப்படும் இடம் எந்த வகையிலும் ஆணின் இடத்தைக் குலைக்கக் கூடாது, அது இரண்டாம் நிலையிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணமும் தொடர்ந்து இருக்கும் ஒன்றுதான். ராஜம் கிருஷ்ணனின் மலர்கள் நாவலுக்கும், ஜெகச்சிற்பியனின் திருச்சிற்றம்பலம் நாவலுக்கும் முதல் பரிசு ஆனந்த விகடனில் பகிர்ந்து அளிக்கப்பட்டபோது, அவை தொடர்களாக ஆனந்த விகடனில் வெளிவரத் தொடங்கின. தாயற்று, தான் வளரும் உறவுக்காரர்களின் குடும்பத்தில் சிறுமைபடுத்தப்படுவதால் தாழ்வு மனப்பான்மையால் வாடும் ஒரு பெண்ணைப் பற்றிய கதையாகப் பல பக்கங்கள் கொண்ட நாவல் மலர்கள். திருச்சிற்றம்பலம் நாவலைவிட மிகப் பெரியது. மலர்கள் நாவலில் பாதிகூட முடிந்திராதபோது ராஜம் கிருஷ்ணனுக்குக் கடிதம் போயிற்று, ஜெகச்சிற்பியனின் நாவல் தொடர் இன்னும் ஓர் அத்தியாயத்துடன் முடிவதால் மலர்கள் நாவலையும் அடுத்த ஓர் அத்தியாயத்துடன் முடிக்கும்படி. ஒரே பரிசு பெற்ற ஓர் ஆண் எழுத்தாளரின் நாவல் முடியும்போது பெண் எழுத்தாளரின் நாவல் தொடர்ந்து வருவது அவரை அவமானப் படுத்துவதாகும் என்ற நோக்கில் எழுதப்பட்ட கடிதம். சென்னைக்கு வெளியே இருந்த ராஜம் கிருஷ்ணன் விரைந்து வந்து நாவலைத் தேர்ந்தெடுத்தவர்களில் ஒருவரான, கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதனை அணுகி, தனக்கு நியாயம் கிடைக்கும்படிச் செய்யக் கோரினார். கி.வா.ஜ. எடுத்துக் கூறிய பின்தான் மலர்கள் தொடர்ந்து தொடராக வந்தது.

பெண்களின் பொறுப்பு?

நாற்பதுகளில் குமுதினி திவான் மகள் நாவலை எழுதியபோது அதை வெளியிடப் பத்திரிகைகள் முன்வரவில்லை. காரணம் அதில் கலப்புத் திருமணம் இருந்தது. பிறகு அது தொடராக மணிக்கொடியில் வெளிவந்தது. ஒரு பிரபல பதிப்பாளர் ஒரு முறை ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகத்தில் நான் படித்துக்கொண்டிருந்தபோது, என் பேராசிரியரைச் சந்திக்க வந்தார். அப்போது நானும் அங்கே இருந்ததால் என்னைப் பேராசிரியர் அறிமுகப்படுத்தியபோது, சம்பிரதாயத்துக்கு என்னையும் எழுதும்படிக் கூறி, என் எழுத்துக்களை வெளியிட ஆர்வமிருப்பதாகக் கூறினார். கூறிய உடனேயே நம் பண்பாட்டைக் குலைக்காமல் எழுதும் எதையும் தான் வெளியிடத் தயார் என்று சேர்த்துக்கொண்டார். என் எழுத்து பண்பாட்டைக் குலைப்பது என்ற முடிவுக்கு அவர் முதலிலேயே வந்திருந்தார் என்பது தவிர, பண்பாட்டை நிலைநிறுத்துவது பெண்களின் பொறுப்பு என்ற கருத்தும், பண்பாட்டுக்கான விளக்கம் ஒன்றும் அவரிடம் இருந்தது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவர் வெளியிடக்கூடிய புத்தகங்களை நான் எழுதவில்லை என்பது வேறு விஷயம்.

எழுத்துக்கான மரியாதை

எழுத்தை அதன் இலக்கியத் தன்மை கொண்டு அளந்த நல்ல கணங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருந்திருக்கின்றன. கௌரி அம்மாள் எழுதிய கடிவாளம் நாவலுக்கு வ.ரா. முன்னுரை எழுதினார். மங்கை என்ற பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த குகப்ரியைக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. குமுதினி, சாவித்திரி அம்மாள், சரஸ்வதி அம்மாள், ராஜம் கிருஷ்ணன், குகப்ரியை, அநுத்தமா, ஆர். சூடாமணி போன்ற எழுத்தாளர்களின் நாவல்களையும் கதைகளையும் மட்டுமல்ல, அவர்கள் ஆங்கிலத்திலிருந்து செய்த பல மொழிபெயர்ப்புகளையும் வெளியிட கலைமகள் போன்ற பத்திரிகைகள் முன் வந்தன. குமுதினி போன்ற எழுத்தாளர்களுக்கு ஆங்கில இலக்கியத்துடன் நல்ல பரிச்சயம் இருந்ததுடன் மொழிபெயர்ப்பின் அவசியத்தையும் நன்கு உணர்ந்தவர்களாக அவர்கள் இருந்தார்கள். ஆங்கில இலக்கியத் தின் பல நல்ல எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் சூடாமணி. எந்த வித சமரசமும் செய்துகொள்ளாமல் எழுதியவர். அப்படி எழுத என்னைத் தூண்டியவர். பல ஆண் எழுத்தாளர்கள் தீபாவளிக் கதைகளை தீபாவளி மலர்களுக்கும், அரைப் பக்க ஒரு பக்கக் கதைகள், மோதிரக் கதைகள் என்று மற்ற பத்திரிகைகளுக்கும் எழுதிக் குவித்துக் கொண்டிருந்தபோது தனக்குப் பிடித்ததை மட்டும் எழுதியதுடன், என் கவனத்தைச் சிறப்பான இலக்கியத்தின்பால் திருப்பியவர்.

இலக்கிய விமர்சனம் என்பது ஒருவரின் ஜனநாயக உரிமை என்பதில் யாருக்கும் மறுப்பேதும் இல்லை. பெண்-ஆண் என்ற இரு பாலாரின் எழுத்துக்களும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனால் அவை பெண்ணின் தோற்றத்தையும், “அளவுக்கு மீறிய” என்று சிலர் கணிக்கும் இச்சைகளையும், அவள் உடல் மற்றும் வாழ்வு குறித்த கற்பிதங்களையும் ஆதாரமாகக் கொண்ட இலக்கிய அபத்தங்களாக இருக்கக் கூடாது. குன்றுபதேசம் செய்வது தமிழ் இலக்கிய மற்றும் பதிப்பு உலகில் காலம்காலமாக இருக்கும் வியாதி. அதற்கு இலக்காகப் பெண்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் பேனாவை எடுத்து எழுதியோ, மேடையில் பேசியோ, வலைதளத்தில் எழுதியோ பெண்கள் உய்வுறப்படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை கருணை உள்ளம் இவர்களுக்கு!

பெண்கள் என்றால் உருகும் குணம். இத்தகையவர்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றுதான். பெண்கள் தங்கள் வெளிப்பாட்டுக்கான வழிகளையும், தரங்களையும் நிர்ணயிக்க வல்லவர்கள். ஆசான்களைத் தேர்ந்தெடுக்கவும் ஒதுக்கவும் தெரிந்தவர்கள். பெண்களுக்காக இத்தனை சொல்பவர்கள், அவரவர் சொந்த வெளிப்பாடு உய்யும் வழியைப் பார்த்துக்கொண்டால் இலக்கியச் சரித்திரத்தில் இருக்கும் மௌனங்களையும், ஒதுக்கல்களையும் களைய முடியும். அப்படிக் களைய வேண்டியதுதான் இப்போதைய தேவையும்கூட.

இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல.

 

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/article6136159.ece?homepage=true

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.