Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்சூரியன் (மறுபக்கம் - ஆகாயத்தாமரை )

Featured Replies

வினோத்தின் நேர்கொண்ட பார்வையை தவிர்க்கவே அடிக்கடி உடையை சரி செய்வது போல கீழே குனிந்து கொண்டேன். இதை வினோத் அறிந்திருக்க எள்ளளவும் வாய்ப்பில்லை. மனம் ஏனோ ஒரு நிலையில் இல்லாது தவித்தது. அந்த இத்தாலிய உணவகத்தின் யன்னைலினூடே வெளியே பார்க்கிறேன். சவர்க்கார கரைசலை வாயிலே வைத்து ஊதும் வெள்ளை இன சிறுவன். அவன் ஊதும் குமிழி போலவே, என் எண்ணங்களும் வளர்வதும் வெடித்து சிதறுவதுமாக இருந்தன. கடவுள் நிறைய நேரங்களில் எங்கள் எண்ணங்களை எம் கண்முன்னே காட்சி ஆக்குவதில் வல்லவர் என்று யாரோ சொன்னது எனக்குள்ளே வந்து போனது.

ஐரோப்பாவில் இருந்து உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ளவந்திருந்த வினோத்தை சந்திப்பதற்கான ஒழுங்கை மதி ஏற்படுத்திவிட்டு, பழைய நண்பர்களை சந்திக்க என்னை அழைத்தபோது, எனக்குள்ளே நடந்த போராட்டம் பத்து முள்ளிவாய்க்கால்களுக்கு ஒப்பானது.

நம்பி இருந்த என்னை ஏமாற்றியவனை சந்திக்கத்தான் வேண்டுமா. ? இல்லாவிட்டால் அவன் என்னை ஏமாற்றியதுக்கும் பின்னால் எப்பவும் போலவே ஒரு நியாயமான காரணம் இருக்குமா ? என்று என் மனம் ஒற்றை கயிறிலே கட்டிய தோணியை போல அங்கும் இங்கும் அல்லாடியபடியே இருந்தது. எதுக்கும் அவன் இப்போ எப்படி இருக்கிறான் என்று ஒருமுறையாவது பார்க்கவேண்டும் என்று மனம் ஏங்கியதை என் மூளையால் கட்டுப்படுத்த முடியவில்லை.

பதின்மவயது முதற்காதல். யாரையுமே ஏறெடுத்து கூட பார்க்காத என் பெண்மை என்னும் திமிருக்கு சவாலாக வந்தவன். பார்த்த நாளில் இருந்து பார்க்க துடித்த அவன் முகம். கன்னத்திலே தூசி என்று முத்தமிட்ட நேர்மையான திருட்டுத்தனம். அவன் முத்தமிட்ட நாள் இரவு. கடிகாரத்துக்கு 60 நிமிடங்கள் தான் ஒரு மணித்தியாலம் என்று வரையறுத்தவனை கழுவில் ஏற்ற வேண்டும் என்ற எண்ணங்களை கடந்த அந்த இரவுகள். அவனது அரும்பு மீசை குத்திய இடத்தில் இருந்த செல்ல நோ.

வெளியே செல்லும்போது கைதொலைபேசியை கூட மறந்துவிட்டு செல்லும் நான், காதல் எண்ணங்களை மட்டும் இப்போது கூட ஒரு இடைவெளி இல்லாமல் அப்படியே நினைவில் வைத்திருக்க வைக்கும் ஆற்றல் அந்த காதலால் மட்டும் ஏற்பட்டு தான் இருக்க முடியும்.

இத்தாலிய உணவகத்தின் வாசலை அடையும் போது, வினோத்தை காணும் என் மனதின் பதைபதைப்பின் எதிரொலியோ என்னவோ மனோவின் கைத்தொலைபேசி கிணுகிணுத்தது.

கலோ நான் மனோ..

..............................

ஓம் பக்கத்தில தான் நிக்கிறாள் இப்பவே கொடுக்கிறேன்.

ஒருவேளை விநோத்தாக இருக்குமோ ..??

தொலைபேசிய நீட்டிய மனோவிடம் யார் என்ற கேள்வியை கண்கள் தொடுத்தாலும் கைகள் வாங்கி காதினருகே கொண்டு செல்வதில் தயக்கம் எதுவுமே கைகளுக்கு இருந்ததாக தெரியவில்லை.

கலோ மீனா நான் பரத்.

ஒரு கணம் வினோத் மறைந்து என் அன்பு கணவன் பரத் வந்து போனார்.

நாடகங்களின் திரையை மாற்றும் அளவு நேரம் கூடம் மனம் அதற்கு விட்டு வைக்கவில்லை.

சொல்லுங்கோ..

இல்லை உங்கட போனிற்கு அடிச்சு பார்த்தேன் ரிங் போய் கொண்டே இருந்தது.

மனோவுடன் தான் போறீங்கள் என்றாலும் மனசு நீங்கள் பத்திரமா போயிருபீங்களோ எண்டு தான் அடிச்சு பார்த்தேன்.

ஓ திரும்பவும் கைதொலைபேசியை வீட்டிலேயே விட்டிட்டு வந்தது மனசிலே உறைத்தது. இருந்தும் கணவனின் அக்கறையை மனசிலே பாராட்டாமலும் இருக்க முடியவில்லை.

இல்லையப்பா. போனை வீட்டிலேயே மறந்துபோய் விட்டிட்டு வந்திட்டேன் சொறியப்பா. என்று மீனா சொல்லும்போது கணவனின் மீதான காதல் வெளிப்பட தவறவில்லை.

ஓகே வீட்டை போனதும் போன் பண்ணுங்க என்று பாய் சொல்லி வைத்துவிட்டான்.

மனோவின் பின்னால் கதைத்து கொண்டே உள்ளே வந்ததில் வினோத்தை தேடும் கணங்களை தொலைத்துவிட்டேன். தொலைபேசியை மனோவிடம் கொடுக்கவும் நான் வினோத்தை காணவும் சரியாக இருந்தது.

நான் கண்ட வினோத்துக்கு 35 வயசு கூடி இருந்தால் எப்படி இருப்பார் என்று நான் எண்ணியதை விடவும் கொஞ்சம் வயசு போயிருந்தான். முன் தலையிலே சிறு வழுக்கை, வயிறு கொஞ்சம் கூடி இருந்தது. வேலைப்பளுவும் மாலையில் அருந்தும் மதுபானமும் முறையே காரணங்களாக இருக்கலாம் என்று என் மனசுக்குள்ளே சொல்லி கொண்டே வினோத்துக்கு முன்னால் இருந்த ஒரு இருக்கையில் நான் அமர்ந்தேன்.

அவனின் முகத்தில் விழுந்த சிறு சுருக்கத்தின் பின்னான தெளிவு அவன் என்னை அடையாளம் கண்டுகொண்ட அதிர்ச்சியை எனக்கு வெளிக்காட்டியது.

இவ்வளவு வயசானாலும் அவர் என்று அவனை குறிப்பிட என்மனம் ஒப்பவில்லை.

எந்த சலனத்தையும் காட்டிகொள்ளாது மனசை அடக்கி கொண்டேன். எவ்வளவோ அவனோடு பேச வேண்டும் என்று மனம் கொந்தளித்தாலும் அவனாக பேசட்டும் என்று இருந்துவிட்டேன்.

கூடி இருந்த நண்பர்களும் அவர்களின் மனைவிமாரும், இறுதி தரிப்பிடத்தை நோக்கி நகரும் பேரூந்தில் இருந்து படிப்படியாக இறங்கும் பயணிகள் போல இறங்கி சென்று விட்டார்கள்.

நானும் மனோவும் மதியும் வினோத்தும் தான் அங்கே மிஞ்சி இருந்தோம். எங்களுக்குள்ளே இருந்த ஏதோ ஒன்று எங்களை அசையவிடாமல் தடுத்திருந்தன.

பழைய காதல் அப்படியே இருக்குமா அவனிடம். இல்லை கால ஓட்டத்தில் குடும்ப சுமைகளில் அவை கரைந்து போய்விடுமா.

அல்லது என்னைபோல ஒரு பசுமையான நினைவாக மட்டும். மனம் துன்பப்படும்போதெல்லாம் அசைபோட வைத்திருக்கும் மாத்திரை போல தான் எம் காதல் அவனிடமும் இருக்குமா என்று எண்ணங்கள் அலைமோத அவனாக பேசட்டும் என்று காத்திருந்தேன்.

திடீர் என பின்னால் சலசலப்பு, இன்னும் பதின்ம வயது காதலர்கள் போல மனோவும் மதியும் பேசி கொண்டிருந்தார்கள். மதி இப்பவும் வைத்திருந்த தன பழைய காதலை வைன் தந்த போதையில் மனோவிடம் உளறிகொண்டிருந்தான் . யதார்த்ததுக்கு எந்தவிதத்திலையும் ஒத்துவராத இலட்சிய எண்ணங்களை போதையில் மட்டுமே ஆண்கள் வெளிபடுத்துவார்கள் என்பதை மதி மறுபடியும் ஒருமுறை நிரூபித்து கொண்டிருந்தான்.

தாடியே வளராத, மதுவை மணந்து கூட பார்க்காத பெண்களால், தோற்ற காதலை மறக்க ஒரு மன வலிமை வேணும். அது காதல் தோற்ற நாளில் இருந்தே பெண்களால் சிறுக சிறுக கட்டி இப்போ ஒரு கோட்டையாக எங்களுக்குள்ளே இருப்பது மதிக்கோ வினோத்துக்கோ தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

எங்கே ஒரு வார்த்தை கூட பேசாமல் போவிடுவாளோ என்ற எண்ணம் வினோத்தின் முகத்தில் தெரிந்தது. நான் தான் அவன் மௌனத்தை குழப்ப கலோ சொன்னேன்.

பொதுவாக குடும்பவிபரங்களையும் சில சம்பவங்களையும் பரிமாறிக்கொண்டோம். எங்கே ஒரு வார்த்தை பழைய காதலைப்பற்றி நான் சொல்ல மாட்டேனா என்று அவன் மனம் ஏங்குவதை இந்தோனேசியா பூமி அதிர்ச்சி இந்தியாவின் தனுஷ்கோடியில் உணர்வதை போல மெதுவாக உணர்ந்தேன். வாழ்கையும் யதார்த்தமும் காதலையும் தாண்டி பயணிப்பது என்பதை என்றாவது ஒருநாள் அவன் உணருவான் என்ற மனதுடன் விடைபெற்றோம்.

வரும்வழியில் கடற்கரை வீதியில் மனோவை காரை செலுத்த சொல்லிவிட்டு கார் கண்ணாடிவழியே கடலை பார்த்து கொண்டிருந்தேன்.

கடலிலே தெறித்த மாலை சூரியனின் விம்பத்தை அலைகளால் அழித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அலைகள் மீண்டும் மீண்டும் அடித்துக்கொண்டே இருந்தன.

நன்றி - ஆகாயத்தாமரை (வல்வை சகாறா)

http://www.yarl.com/forum3/index.php?/topic/155778-ஆகாயத்தாமரை-வல்வை-சகாறா/

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகலவன் ஆகாயத்தாமரையின் மறுபக்கத்தை எழுதி இருக்கிறீர்கள் அழகான உவமிப்புகள் இந்தோனேசியாவின் பூமி அதிர்ச்சியை தனுஸ்கோடியில் உள்ளவர் உணர்வதுபோல...........................மேலும் சில பளிச்சென்று தெரிகின்றன........ அடுத்து நீங்கள் எழுத முற்பட்டிருக்கும் தளத்தை சற்று மறந்து விட்டீர்களே என்றும் எண்ணத்தோன்றுகிறது...... இதை குறையாக எண்ணவில்லை அழகான உவமிப்பு ஆனால் இடம்பொருள் ஏவல் என்பதில் இடத்தை தவறவிட்டுவிட்டீர்கள்.... சூழலை அதாவது ஒரு பனி கொட்டி உறைந்திருக்கும்  இடத்தில் சவர்க்கார கரைசலை யாரும் ஊதமாட்டார்கள். எழுதும் உத்வேகத்தில் சூழல் சற்று கற்பனையில் சிதறிவிட்டது. சொல்ல எடுத்த கருத்துக்கு அருமையான பொருத்தம் இருக்கிறது ஆனால் அந்த இடத்தை அதன் உறைநிலையை தவறவிட்டுவிட்டீர்கள்.

 

பகலவன் குறை சொல்வது என் நோக்கமல்ல ஆரோக்கியமான சுட்டிக்காட்டுதலாக மட்டுமே இவற்றைப் பாருங்கள்.  உண்மையிலேயே இங்கு பதிவிடப்படும் எழுத்துகளுக்கு என்வரையில் நான் உணர்வதை வெளிப்படுத்தவேண்டும் என்ற அவா அதிகம்  எங்கே என்னுடைய கருத்து வைப்புகள் படைப்பாளிகளை சங்கடப்படுத்திவிடுமோ என்ற பயத்திலேயே வெளிப்படையாக மனந்திறந்து பேசுவதில்லை. இப்போது நீங்கள் ஆகாயத்தாமரையின் மறுபக்கத்தை தொட்டு எழுதியதால் நானும் மனந்திறந்து உங்களுடன் கருத்தாட முடிகிறது. ஒரு வேளை நான் எழுதுவது உங்களைச் சங்கடப்படுத்தினால் மன்னித்துவிடுங்கள்.

 

எதிர்வினை என்ற பதம் தவறானது என்று நினைக்கிறேன். பெண்ணின் மனதை அழகாக எழுதியிருக்கிறீர்கள். இவ்விடயம் தொடர்பாக பெண்களின் மனங்களைத் தேடல் செய்து கொண்டிருக்கிறேன் இன்னும் முழுமையடையவில்லை. கண்களுக்குத் தெரியும் விடயத்தைக் காட்சிப் பொருளாக்கி எழுத விருப்பமில்லை மனதிற்குள் ஆழமாக ஊடுருவி எழுத நினைக்கிறது மனம்..... இருப்பினு; ஒரு ஆணாக இருந்து பெண்ணின் மனதை எழுத நீங்கள் எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. இம்மறுபக்கத்தை எழுதுவதற்கு அனுமதி கேட்டிருந்தீர்கள். ஒரு படைப்பாளி தான் நினைப்பதை எழுதுவதற்கு எவரிடமும் அனுமதி கேட்கவேண்டிய அவசியமே இல்லை. ஒருவருடைய சொந்தக்கதையை எழுதப்போகிறீர்களா அப்போது கண்டிப்பாக அனுமதி பெற்றுத்தான் எழுதவேண்டும் ஆனால் கற்பனையில் எழுத ஒரு படைப்பாளி மற்றவர் அனுமதி வேண்டுவது தவறு. ஏனெனில் அவனுடைய கற்பனைக்கு அவனே சொந்தக்காரன்... தாய் அவன் உருவாக்குவதை வளர்ப்பதும் தகர்ப்பதும் அழகுபடுத்துவதும் அவன் பணி பெற்ற குழந்தையை காட்ட மற்றவர்களின் அனுமதியைத் தாய் நாடமாட்டாள்.

 

கதையில் மனோ மதியினூடகவும் நீங்கள் பேசியிருக்கிறீர்கள். சில விடயங்களை சொல்வதற்கு சரியான சந்தர்ப்பங்கள் அமைவதில்லை ஆனால் சந்தர்ப்பங்களை தவறவிடாமல் பெண்ணாக நின்று பேசியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ஒரு ஆணாக இருந்தாலும் ஓரளவு வெற்றிபெற்றுள்ளீர்கள். என்னுடைய படைப்பை வாசித்து அதன் எதிர்ப்பக்கத்தை எழுதியிருக்கிறீர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்தும் எழுதுங்கள் பகலவன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
கடற்சூரியன் கதையில் பகலவன் இன்னொரு சிறந்த கதைசொல்லியை காண்பித்திருக்கிறீர்கள். வளமையான நகைச்சுவை உணர்வு கடந்து கதை காதலோடு மெல்ல மெல்ல கரைந்து ஒரு காலத்தை கடந்து சென்றுள்ளது. 
 
முன்புபோல இப்போது  நிலமையில்லாமல் சற்று மாற்றம் கண்டுள்ளதை தற்கால எழுத்துக்கள் வெளிக்கொண்டு வருகிறது. எனினும் பெண்களின் காதல் நினைவு என்பது ஏதோ ஒளித்து வைத்து இரகசியம் பேணும் ஒன்றாகவே இன்னும் காக்கப்படுகிறது.காதல் என்பது ஆண் , பெண் இருவருக்கும் உணர்வுகள் நினைவுகள் ஒன்றாகவே இருக்கும். இதனை பலர் 3ம் நபரின் கதையாக நின்றே தங்கள் காதலை ரசிக்கிறார்கள். சொந்த அனுபவமாக எழுதவோ வெளிப்படுத்தவோ துணிவற்றவர்களாகிறார்கள்.
 
தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் பார்வையில் கதாநாயகர்களாக நின்று கொள்வதில் பல எழுத்துக்களும் எழுத்தாளர்களும் முனைவது கூட இச் சமூகம் மீதான பயமே காரணம்.
 
ஒரு பெண்ணின் நிலை சார்ந்து பகலவன் எழுதிய கதையில் குறித்த பாத்திரம் (கற்பனையானாலும் கூட) நேர்மையோடு உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் இல்லையடா தம்பி தொடர்ந்து எழுது இதுதான் உனக்கான ஊக்கம்.
எழுத்துகள் நன்றாக இருக்கிறது பகலவன். பாராட்டுகள்.
 
பெண்ணின் மனதை எழுத முற்படுவதில் இருந்து ஒன்று தெரிகிறது...............
 
உங்கள் அம்மா அல்லது மனைவி வாசிக்கும் பெண் எழுத்தாளர்கள் எழுதும் நாவல்களை நீங்களும் அவ்வப்போது வாசித்துள்ளீர்கள்.  :)
  • தொடங்கியவர்

நன்றி சகாரா அக்கா உங்கள் விமர்சனத்துக்கு. நான் உண்மையில் கோடை காலம் என்று கருதி எழுதிவிட்டேன். என் தவறு தான் மன்னிக்கவும்.

நன்றி அக்கா உங்கள் படைப்பின் கருவை தந்தமைக்கு.

நன்றி சாந்தி அக்கா. மாற்றங்கள் தான் மனிதரை வாழவைப்பது.

நன்றி ஈசன். சிறு வயதில் அருகில் இருந்த நூலகத்தில் பெரும்பாலான பெண் எழுத்தாளர்களின் நூல்களை வாசித்து இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் கதையை வாசிக்க ஆரம்பித்து முடித்தபின்னர் கூட கதையின் இரண்டாம் பாகம் என்று எண்ணி யபடி வாசித்தேனே தவிர யார் எழுதியது என்பது உறைக்கவே இல்லை. எனது மேலோட்டமான வாசிப்புக் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். பின் சகாராவுக்கு  நன்றி கூறிய பின்னர் தான் எனக்கே என்ன இது ஏன் நன்றி  கூறுகிறார் என்று ஒரு நிமிடம் குழம்பிவிட்டது பகலவன். சகாரா ஆணின் உணர்வுகளைக் கூறிய அளவு நீங்கள் பெண்ணின் உள்ளக்கிடக்கையைக் கூறவில்லை. இருந்தாலும் அருமையாக இருக்கிறது உங்கள் எழுத்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணின் வாழ்வின் அழியாத கோலங்களை ஒரு பெண்ணாக இருந்து கதைசொல்லி இருக்கறீர்கள். அழகான உவமானங்கள். நல்ல உரைநடை. பெண்ணின் காதல் நினைவுகள் பொக்கிசமாகப் பூட்டி வைக்கப்பட வேண்டியது என்ற நிலைப்பாடு இப்பெழுது மாறிவிட்டது. எமது பிள்ளைகள் எம்மிடம் திறந்த புத்தகமாகத்தான் பழகுகிறார்கள் அவர்களைப் பார்க்கும் பொழுது நாங்களும் அவர்களைப்போல் மனம் திறந்து பேச எழுத ஏன் நாம் தயங்குகிறோம் என்று சிந்திப்பதுண்டு. நன்றாக எழுதியுள்ளீர்கள் பகலவன் பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

நான் கதையை வாசிக்க ஆரம்பித்து முடித்தபின்னர் கூட கதையின் இரண்டாம் பாகம் என்று எண்ணி யபடி வாசித்தேனே தவிர யார் எழுதியது என்பது உறைக்கவே இல்லை. எனது மேலோட்டமான வாசிப்புக் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். பின் சகாராவுக்கு  நன்றி கூறிய பின்னர் தான் எனக்கே என்ன இது ஏன் நன்றி  கூறுகிறார் என்று ஒரு நிமிடம் குழம்பிவிட்டது பகலவன். சகாரா ஆணின் உணர்வுகளைக் கூறிய அளவு நீங்கள் பெண்ணின் உள்ளக்கிடக்கையைக் கூறவில்லை. இருந்தாலும் அருமையாக இருக்கிறது உங்கள் எழுத்துக்கள்.

நன்றி சுமே அக்கா. என்னால் கூடுமானவரை பெண்ணின் மனசை சொல்ல நினைத்தேன். சகோதரியுடன் பிறந்திருந்தாலும் அவருடன் வாழ்ந்த காலங்கள் கொஞ்சம். காதலி மனசை அறிவதற்கு கடல் தண்ணியிலே கார் ஓட்டலாம். நீங்கள் அறியாததா. நன்றி உங்கள் கருத்துக்கு.

 

 

ஒரு பெண்ணின் வாழ்வின் அழியாத கோலங்களை ஒரு பெண்ணாக இருந்து கதைசொல்லி இருக்கறீர்கள். அழகான உவமானங்கள். நல்ல உரைநடை. பெண்ணின் காதல் நினைவுகள் பொக்கிசமாகப் பூட்டி வைக்கப்பட வேண்டியது என்ற நிலைப்பாடு இப்பெழுது மாறிவிட்டது. எமது பிள்ளைகள் எம்மிடம் திறந்த புத்தகமாகத்தான் பழகுகிறார்கள் அவர்களைப் பார்க்கும் பொழுது நாங்களும் அவர்களைப்போல் மனம் திறந்து பேச எழுத ஏன் நாம் தயங்குகிறோம் என்று சிந்திப்பதுண்டு. நன்றாக எழுதியுள்ளீர்கள் பகலவன் பாராட்டுக்கள்.

நன்றி கண்மணி அக்கா. உங்கள் போன்றவர்களின் வாயால் பாராட்டுகளை பெறும் அளவுக்கு நான் இன்னும் வளர்ந்துவிடவில்லை அக்கா. உங்கள் கதைகள் எனது வழிகாட்டிகள். நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் அக்கா. நன்றி அக்கா கருத்து பகிர்வுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் நன்றாகத்தான் இருக்கின்றது.
ஆகாயத் தாமரைக்கும் கடல் சூரியனுக்கும் எப்போதும் அழிவு இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.