Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நண்பன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1995 இல் அவனை முதன் முதலில் பார்த்தபோது அவனைப் பற்றி எனக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. என்னைச் சுற்றி வலம் வந்துகொண்டிருந்த மற்றையவர்களில் அவனும் ஒருவனாகக் கரைந்துபோயிருந்தான். எதுவென்று புரியாத பயத்திலும், அவசரத்திலும் ஓடிக்கொண்டிருந்த நாட்கள் அவை. 

கிருலப்பனை வீட்டிலிருந்து காலையில் அவசர அவசரமாக பஸ்பிடித்து அரக்கப் பரக்க ஓடி, புதினப்பத்திரிக்கையில் உரைபோட்ட காட்போட் பைலுடனும், வீட்டுக்குப் போட்டுப் பழசாகியிருந்த பாட்டாச் செருப்புடனும், பெல்ட் கட்டாமல் வெறும் பாண்டுடன், கட்டைக் கைச் சேர்ட்டுடன் என்னைப் பார்த்தீர்களென்றால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். 1995 ஒக்டோபரில் மொறட்டுவைப் பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகி முதல் மூன்று மாதங்களிலும் இப்படித்தான் நான் போய்வந்துகொண்டிருந்தேன்.

ஏன் இப்படி உடை என்று கேட்கிறீர்களா? அது அப்படித்தான். அப்படி நாங்கள் உடை உடுத்தால்த்தான் எமது சீனியர்ஸுக்கு மரியாதையாம் ! எனக்கு முதல் அதே பல்கலையில் படித்துக்கொண்டிருந்த நண்பன் ஒருவன் சொன்னான், "மச்சான், நான் சொல்லுற மாதிரி வந்தியெண்டால் தப்புவாய், அதை விட்டுட்டு கொழும்பு ஸ்டைலில வந்தியெண்டால் உரிச்சுப் போடுவான்கள்".ஆக, அந்த நண்பனின் வாக்கை வேத வாக்காக எடுத்துக்கொண்டு கட்டைக் கை சேர்ட், பெல்ட்டில்லாத பாண்ட்டு, செருப்பு, பத்திரிக்கையில் கவர் போட்ட அட்டைப் பயில், பக்கத்துக்கு வாரி இழுக்கப்பட்ட முடியென்று நான் போகும் வழியெங்கும் கூணிக் குறுகி பல்கலை வாசலில் இறங்கியபோது, என்னைப் போலவே அங்கே இன்னும் பலரையும் கண்டபோது, அப்பாடா , நான் மட்டுமில்லை, இங்க பலர் என்னை மாதிரி இருக்கினம் என்று மனதிற்குள் சமாதானம் சொல்லிக்கொண்டேன். அந்தப் பலரில் அவனும் இருந்திருப்பான், ஆனால் அவனை அப்போது கண்டதாக நினைவில்லை. எவன் பிடித்துக்கொண்டுபோய் ராக்கிங்க் கொடுப்பானோ, எவன் வந்து அடிப்பானோ என்று பயதத்தில் மூள்கியிருந்த எனக்கு என்னுடன் கூடவே, என்னைப் போலவே வரும் இவர்கள் யாரென்று ஆராயும் தைரியம் இருக்கவில்லை. 

ஆட்டு மந்தைகள் போல காலையில் பல்கலை வாசலில் இருந்து ஓடிட்டோரியத்துக்கு வரிசையில் அழைத்துச் செல்லப்பட்டோம். வழிநெடுகிலும் எங்களை இரையைப் பார்ப்பதுபோல பார்த்துநின்ற எமது அன்பான சீனியர்கள். முன்னால் பல்கலை உபவேந்தரும், இன்னும் சில விரிவுரையாளர்களும் சென்று கொண்டிருந்தபோதும்கூட, அவ்வப்போது வரிசையின் அருகில் வந்து அன்பாக , ' டேய், நீ எந்த ஊரடா? இண்டைக்கு லெக்‌ஷர் முடிஞ்சபின் எங்கட ரூமுக்கு வாராய், தப்பிப் போனாயெண்டால்,....மவனே நீ செத்தாய்" என்று எனது பயத்தையெல்லாம் தனது அன்பான கட்டளையால் கண்முன்னே கொண்டுவந்து காட்டிய எனது அன்பான சீனியர்கள். சந்தோஷமாகச் சிரித்துக்கொண்டு எம்மை ஏளனமாகப் பார்த்துக்கொண்டிருந்த எமது "தமிழ் அக்காமார்', இடையிடையே சிங்களத்தில், ' அடோ, கரி....! அத ஹவச ஆவே நத்தங்க....' என்று நாங்கள் யாரென்று தெரியாமலேயே உறுமி விட்டுச் சென்ற எமது சிங்கள சீனியர்கள். ஏதோ வேற்றுக் கிரகவாசிகளைப் பார்ப்பதுபோல எங்கள் வரிசையைப் பார்த்துக்கொண்டிருந்த சீனியர்களில், ஒருசில தெரிந்த முகங்கள், ஆனால் முகத்தில் எந்த சிநேகமும் இல்லாமல் எமது முகங்களை வெறித்துக்கொண்டிருக்க, எனது இனிவரும் 3 மாத கால நரக வாழ்வை எண்ணி மனதில் நொந்துகொண்டே மற்றைய ஆடுகளின் பின்னால் தலை குனிந்தபடி நானும் சென்றுகொண்டிருக்கும்போது, அவனும் அதே வரிசையில் எனக்கு முன்னோ அல்லது எனக்குப் பின்னோ வந்துகொண்டிருப்பான், ஆனால் அவன் யாரென்று எனக்கு அறியும் தேவை அப்போது இருக்கவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் போலவே அந்த பாரிய ஓடிட்டோரியத்தில் அமர்ந்திருந்த இன்னும் 600 புதியவர்கள். யார் எவரென்று தெரியாமலேயே ஏதோ பல காலத்து நண்பர்கள் போன்று தாமாகவே வந்து என்னுடன் பேசிய சிங்களவர்கள். நான் தமிழன் என்று தெரிந்தும் தொடர்ந்தும் பேசிய , நான் பல்கலையில் இருந்து வெளிக்கிடும்வரையிலும் அன்றுபோல இறுதிவரை இருந்த அதே சிங்கள நண்பர்கள். நான் தமிழனென்று தெரிந்தும், கொழும்பு என்று தெரிந்து என்னிடமிருந்து வேண்டுமென்றே விலகியிருக்க முயன்ற எனது பின்னாளைய தமிழ் நண்பர்கள். வெளியில் ஓநாய்கள் போல எம்மைப் பிடிக்கக் காத்திருந்த எமது "ஆன்பான சீனியர்களின்" பயமெல்லாம் அந்த கணப்பொழுதிற்காவது மனதிலிருந்து மறைந்துபோயிருக்க, அந்தச் சொற்ப சந்தோசத்தை அந்தப் பொழுதில் நானும், என்னைப் போன்ற அந்த 600 பேரும் அனுபவித்தோம். அந்தக் கூட்டத்தில் அவனும் ஒரு மூலையில் , மற்றைய யாழ்ப்பாண மாணவர்களுடன் இருந்திருப்பான். ஆனால் அவனை அன்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. என்னைப் பாதுகாத்துக் கொள்வதைத்தவிர வேறு எந்த முக்கிய குறிக்கோளும் எனக்கு அப்போது இருக்கவில்லை. 

ஆரம்ப நாட்களில் லெக்‌ஷர்கள்முடிந்த இடைவேளைகளில் தமிழ் மாண்வர்கள் கூட்டமாகக் வெளியே கிளம்பிப் போவார்கள். நான், இன்னும் அந்த ஓடிட்டோரியத்தில் இருந்துகொண்டிருந்த மாண்வர்களிடையே அடைக்கலம் தேடிக் கொண்டிருந்தேன். ஆசிரியர் இல்லாத இடைவேளைகளில் ஓடிட்டோரியத்துக்குள் நுழைந்து என்னை மிரட்டிய தமிழ் சீனியர்கள், "டேய், நீ தமிழ்தானே, உனக்குத் தனியாச் சொல்ல வேணுமோ? மற்றவன்கள் வெளிய வரேக்க உன்னால வெளிய வர ஏலாதோ ? நீ இண்டைக்கு எப்படி வீட்டை போராய் என்று பார்க்கலாம்!', என்று ஒருவர் ஆத்திரமெல்லாம் முகத்தில் தேக்கிவைத்து கத்திவிட்டுச் செல்ல, இன்னொருவர் வந்து, 'டேய் உன்ர பேர் ரஞ்சித் தானே?' என்று தமிழில் கேட்க வேண்டுமென்றே அவருக்குச் சிங்களத்தில் நான் பதிலளிக்க அவருக்கு ஒரே குழப்பம். வெளியே போய் விட்டு மீண்டும் உள்ளே வந்த அவர், 'அடேய் நாயே, சிங்களம் பேசிக் காட்டுறியோ, இண்டைக்கு இருக்கடா மவனே உனக்கு, " என்று கர்ஜித்து விட்டு ஓடிட்டோரியத்துக்கு வெளியே குழுமியிருந்த அவருடைய வேட்டைக் கார நண்பஎர்களுடன் சேர்ந்து என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்க, மனதிற்குள் நினைத்துக்கொண்டேன், 'இவங்களிட்ட மாட்டுப் படுவதில்லை, எப்படியாவது தப்பவேண்டும், நடப்பது நடக்கட்டும்' என்று முடிவெடுத்தேன். இடையிடையே என்னை தங்களின் வேட்டைக்கார சீனியர்களிடம் எப்படியாவது அழைத்துப் போகவேனண்டும் என்பதகற்காக மட்டுமே என்னுடன் வலிய வந்து பேசி, என்னைச் சம்மதிக்க வைக்க படாத பாடுபட்ட எந்து தமிழ் நண்பர்கள். ஆனால் இவர்கள் எவரினதும் வேண்டுகோளையும் கேட்கும் மனநிலையில் நான் இருக்கவில்லை. எதற்காக நான் இவர்களிடம் சித்திரவதை அனுபவிக்க வேண்டும் ? அப்படிஅவர்கள் கோபப்பட்டு என்னுடன் மோதுமளவிற்கு நான் செய்த குற்றமென்ன? இவர்கள் யார் ? இவர்களுக்கும் எனக்குமுள்ள பழைய பகை என்ன ? இப்படி ஆயிரம் கேள்விகள் மனதில் எழ, இல்லை, இதை அனுமதிக்க முடியாது, எப்படியாவது இவர்களிடமிருந்து விலகியிருப்பது என்று முடிவெடுத்துவிட்டேன், இதனால் என்ன நடக்குமோ நடக்கட்டும், பார்த்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்துவிட்டேன். இதனாலேயே என்னை தங்களில் ஒருவனாக ஏற்கமறுத்த எனது யாழ்ப்பாண நண்பர்கள். என்னுடன் பேசினால் தங்களுக்கு ஆபத்து என்று எண்ணி, என்னிடமிருந்து முற்றாக விலகியிருந்த எனது யாழ்ப்பாண நண்பர்கள். அந்த நண்பர் கூட்டத்தில் அவனும் இருந்தான். ஆனால் அவனை அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லெக்‌ஷர்கள் 4 மணிக்கு முடிந்து ஆசிரியர் ஓடிட்டோரியத்திற்குள் வெளியேறும் முன்னமே வந்துவிடுவார்கள் அவர்கள்.முகத்தில் இரையைத் தேடும் வெறி, பரபரப்பு, கூடவே காட்டிக் கொடுக்கும் தலையாட்டிகளாக என்னுடன் அதுவரை அஎத ஓடிட்டோரியத்தில் இருந்த எனது நண்பர்கள் புடைசூழ அந்த வேட்டைக்காரர்கள் உள்ளே வந்தார்கள். அநேகமாக அங்கே படித்த தமிழ் மாணவர்கள் எல்லாம் பல்கலை தொடங்குமுன்னமே சீனியர்களின் அறைகளுக்குச் சென்று "சம்பிரதாயங்களை" செய்து "தீட்சை" பெற்றுக்கொண்டு வந்திருந்தபடியினால், அவர்கள் சீனியர்களின் எடுபிடிகளாக வேட்டைக்கு வந்திருந்தார்கள். "அண்ணை, உவந்தான் நான் சொன்ன ஆள், உவன் கொழும்புத் தமிழ்" என்று ஒருவர் தலையாட்ட, வெறியுடன் உள்ளே நுழைந்திருந்த அந்த சீனியர் கும்பலில் ஒன்று சேர்ட்டைப் பிடிக்க, இன்னொன்று கைய்யைப் பிடிதக்க, என்னை வெளியே இழுத்து வந்தார்கள். வெளியே இன்னும் சில வேட்டைக் காரர்கள் எனக்காகக் காத்திருக்க, இரை அகப்பட்ட திருப்தியில் அவர்கள் ஆர்ப்பரித்துக்கொண்டு தங்களின் அறையை நோக்கி இழுக்க முற்பட, ஒரு கை இவர்களுக்கு மேலாக என்னைப் பிடித்து நிறுத்தியது. 'தம்பி, ஏதாச்சும் பிரச்சினை தாராங்களோ? முகம் பார்த்தேன். நான் இதுவரை கண்டிராத ஒரு தமிழ் முகம். ஆனால் முகத்தில் நட்பும், கருணையும் கலந்திருக்க, அதுவே போதும் என்று நினைத்து, "ஓஒம் அண்ணை, ராக்கிங்க் எண்டு என்னை அவங்கட ரூமுக்கு இழுத்துக்கொண்டு போறாங்கள்" என்று குரல் தழதழக்க நான் கூறவும், 'விடுங்கடா அவனை" என்று அவர்களைத் தள்ளிவிட்டு என்னை பஸ்நிலையம் நோக்கி இழுத்துக்கொண்டு அவர் நடக்கவும், பின்னாலிருந்த வேட்டைக் காரர்க் கூட்டம் என்னை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்க, கூடவே இருந்த தலையாட்டிகள் என்னைப் பற்றி முணுமுணுக்க நான் எதுவுமே யோசிக்காமல் அவசர அவசரமாக அந்த நல்ல சீனியருடன் பஸ்நிலையத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன். 

பஸ்நிலையத்திலும் என்னைத் தொடர்ந்து வந்தது ஒரு வேட்டைக் காரக் கூட்டம். நான் பஸ்ஸில் ஏறியது, கூடவே தொற்றிக்கொண்டு தமிழில் கேவலமாகத் திட்டிக்கொண்டு என்னை எப்படியாவது பஸ்ஸிலிருந்து இறக்கி தமது அறைகளுக்கு கூட்டிச் செல்லும் வெறியில் அந்தக் கூட்டமிருக்க, அதில் ஒருவரை பஸ்ஸிலிருந்து என்னுடன் வந்த சீனியர் வெளியே தள்ளிவிடவும், மீதமிருந்த வேட்டைக் காரர்க் கூட்டம் தாமும் மெதுவாகக் கழன்று கொண்டது. 

அன்றிலிருந்து நான் தீண்டத் தகாதவனாக, "அன்டி" என்று செல்லமாக அழைக்கப்படத் தொடங்கினேன். அப்படியென்றால் என்னவென்று கேட்கிறீர்களா"? அன்டி என்றால், அன்டி - ராக்கிங்க் என்று பொறுள். அப்படியானால் அவன் முற்றாக தமிழ் மாணவர் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்டவன் என்று பொருள், சகல பல்கலை தமிழ் நிகழ்வுகளிருந்தும் ஒதுக்கப்பட்டவன் என்று பொருள், தமிழ் யூனியனிலிருந்து ஒதுக்கப்பட்டவன் என்று பொருள், பட்ச் டிரிப் மற்றும் பக்கெட்டிங்க், என்பவற்றிலிருந்து ஒதுக்கப்பட்டவன் என்று பொருள், இறுதியாக வேறு எந்த தமிழ் மாணவனும் பேசக் கூடாதவனாக இருப்பான் என்று பொருள் !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே எனது முதல் மூன்று மாதங்களும் ஓடிக்கொண்டிருக்க, நான் முற்றாக அன்டியாகிப் போனேன், என்னுடன் எவரும் பேசுவதில்லை. முடிந்தவரைக்கும் கேவலமாகத் திட்டிவிட்டுச் சென்ற எனது தமிழ் சீனியர்கள். ராக்கிங் வேண்டாததால் கிண்டலடித்த என்னுடன் கூடவே படித்த தமிழ் நண்பர்கள், இடைக்கிடையே தரகர் வேலை பார்த்து என்னை எப்படியாவது தமது வேட்டைக் கார எஜமானர்களின் அறைக்குக் கூட்டிச் செல்ல பகீரதப் பிரயத்தனம் செய்த நண்பர்கள், இவர்களை எல்லாரையும் மீறி பிடிவாதமாக அன்டியாக இருந்த நான்...இப்படிக் களிந்த நாட்களுடன் பக்கெட்டிங்கும் வந்து சேர்ந்தது. அதுவரை கடுமையாக என்னை அழைத்துச் செல்ல முயன்ற நண்பன் வந்து கேட்டான், "மச்சான், நீ அவங்கட அறைக்கு வரவேண்டாம், ஆனால் இண்டைக்கு பின்னேரம் பக்கெட்டிங், அதுக்குப் பிறகு உந்த ராக்கிங் எல்லாம் முடிஞ்சு போயிடும், இண்டைக்கு மட்டும் கிரவுண்டுக்கு வா, அங்க பெரிசா ராக்கிங்க் ஒண்டும் தரமாட்டாங்கள், சும்மா பாட்டுப் பாடு, தோப்புக்கரணம் போடு, தூசணம் சொல்லு, நடிச்சுக் காட்டு எண்டுதான் கேட்பாங்கள். அதை மட்டும் செய்தியெண்டால் மச்சான் உன்னை திரும்பவும் சேத்துக்கொள்ளுவாங்கள், எனக்காக வா " எண்டு அவன் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டதால் , 'ரூமுக்கு வரமாட்டேன்' என்ற கண்டிஷனுடன் அவனுடன் சேர்ந்து கிரவுண்டுக்கு நடந்தேன். கிரவுண்டில் என்னை ஆரம்பத்தில் வேட்டையாடக் காத்திருந்த அதே வேட்டைக் காரர்கள். முகத்தில் கோபம் கொப்பளிக்க திட்டித் தீர்த்தார்கள். பாட்டுப் பாடு, தூசணத்தில திருக்குறள் சொல்லு, பெட்டைக்கு லவ் லெட்டர் குடுக்குறமாதிரி நடி...இப்படி அவர்களின் மனதில் படிந்திருந்த வக்கிரங்களை என்னைக் கொண்டு அந்த வெட்டை வெளியில் சொல்லவும், செய்யவும் வைத்தார்கள். நண்பனுக்காகப் பொறுத்துக்கொண்டு அவர்கள் சொன்னவற்றைச் செய்தேன். ஒருவாறு மாலை 4 மணிக்கு ராக்கிங்க் தேர்த்திருவிழா முடிவிற்கு வர நான் கிரவுண்டிலிருந்து கிளம்பினேன். மச்சான், இவ்வளவும் நிண்டுபோட்டு இப்ப வெளிக்கிடுகிறாய், பக்கெட்டிங்க்கும் நிண்டுபோட்டுப் போ என்று அதே நண்பன் கேட்கவும், இல்லை மச்சான். உனக்காத்தான் வந்தனான். எனக்கு உந்த பக்கெட்டிங்க் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தேன். என்னை எப்படியாவது இறுதி நேரத்திலாவது ராக்கிங் வேண்ட வைத்துவிட்டோம் என்கிற திருப்தி அவன் முகத்தில். ஆனால் அன்றைய எனது விட்டுக் கொடுப்புக் கூட என்னை அவர்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளும் தகமையைத் தரவில்லை.

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மூன்று மாத காலத்திலும் அவனை சில தடவைகள் பார்த்திருக்கிறேன். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு மிக அண்மையில் வந்திருந்தாலும், தெகிவளையில் அவன் தங்கியிருந்த வீட்டின் அயலில் இருந்த சில உள்ளூர் தாதாக்களின் பழக்கத்தினால் தனது தோற்றத்தைக் "கொழும்புக் காரனாக 'மாற்ற அவன் படாத பாடு பட்டிருந்தது தெரிந்தது எனக்கு. ராக்கிங் முடிந்தவுடனேயே, தோப்பிளாஸ் டீ  சேர்ட்டுக்கள், பாக்கி டெனிம்கள், டெனிமுக்கு வெளியே விட்டிருந்த கணுக்கால் வரையிலான ஸ்போட்ஸ் சப்பாத்து, ராம்போ பெல்ட், ஒரு பக்கத்திற்கு வாரி இழுக்கப்பட்டு ஜெல் வைத்த நீட்டு முடி, அந்த முடிகளில் முகத்திற்கு முன்னால் வந்து விழும் கற்றையை எப்போதுமே கைய்யில் வைத்துச் சுருட்டியபடி அவன் நின்றிருப்பான். அவனைப் பார்க்கும் எவருக்கும் அவன் பல்கலையில் படிக்கும் மாணவனா என்கிற ஐய்யம் ஏற்படும், என்னைப் போலவே !

அவனைச் சுற்றி எப்போதுமே ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கும். கைய்யில் சிகரெட்டும், ஒற்றைக் கொப்பியும் வைத்துக்கொண்டு அந்த பல்கலைக் கழக வளாகத்தில் அவன் தனது பரிவாரங்களுடன் வலம் வருவான். எப்போதாவது என்னை நேரில்க் கண்டால், மற்றவர்கள் போலல்லாது மச்சான், எப்பிடி இருக்கிறாய் என்று கேட்பான். உவங்கட கதையை விடு, நீ வா என்று இழுத்துச் செல்ல முற்படுவான். நான் ஒதுங்கிக் கொள்வேன். அவனது தாதாத்தனமான தோற்றத்திற்கு பின்னால் உண்மையான மனிதம் இருப்பதை நான் அவ்வப்போது அவதானித்திருக்கிறேன். ஆனாலும் அவன் பற்றிய முழுதான புரிதல் எனக்கு ஏற்பட்டிருக்கவில்லை. 

முதலாம் ஆண்டில் படிக்கும் வெளி மாகாண மாணவர்களுக்கு பல்கலைக் கழக விடுதி கொடுப்பது வழக்கம். அநேகமாக யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவாகி வந்திருந்த எல்லா மாணவர்களுக்கும் அந்த விடுதி வசதி கிடைத்தது. நான்கு நான்கு மாணவர்களாக பகிர்ந்துகொள்ளக்கூடிய விசாலமான அறைகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்கினார்கள். நான் கொழும்பிலிருந்து தெரிவாகி இருந்ததினால் எனக்கு விடுதி வாய்ப்புக் கிட்டவில்லை. கிருலப்பனையில் நான் தங்கியிருந்த வீட்டிலிருந்து அம்மம்மாவும், சித்தியும் அக்காவும் வெளியேறிவிட எனக்கு தங்குவதற்கு இடமில்லாமல்ப் போய்விட்டது. பல்கலைக்கு அருகில் சிங்கள வீடுகளில் தங்குவதென்றால் இரண்டு பிரச்சினை. ஒன்று அளவுக்கதிகமான வாடகை, இரண்டாவது நடுநிசி இரவுகளில் தமிழ் மாண்வர்கள் தங்கும் வீடுகளின் கதவுகளைத் தட்டி, விசாரணை என்கிற பெயரில் இனவாதம் கக்கிய மொரட்டுவைப் போலீஸ். 

ஆக, எனக்கு எந்தத் தெரிவும் இருக்கவில்லை. என்னுடன் பேசிய விரல் விட்டு எண்ணக்கூடிய சில தமிழ் நண்பர்களிடம் எனது நிலை பற்றி சொன்னேன். தமது சீனியர்களின் கட்டளையையும் மீறி என்னுடன் நட்பாக உறவாடிய அந்த நண்பர்கள் எனது கதையைக் கேட்டதும், " மச்சான், ஒரு பிரச்சினையுமில்லை, நீ வா எங்கட ரூமுக்கு, என்ன நாலுபேர் இருக்கிற ரூமுல இப்ப 8 பேர் "கஜை' அடிக்கிறம், உன்னோட சேத்தால் ஒன்பதாகுது, அவ்வளவுதான்னென்று சர்வசாதாரண்மாகச் சொல்லவும், எந்த ரூம்களுக்குப் போவதற்கு நான் முன்னர் மறுத்தேனோ, அதே ரூம்களுக்கு வேறு வழியில்லாமல் நான் அன்று சென்று சேர்ந்துகொண்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்றிலிருந்து எனது பலகலைக் கழக வாழ்வு முற்றாக மாறிப் போனது. எவரையெல்லாம் எனது பகைவர்கள், என்னை விலத்தியவர்கள் என்று நினைத்திருந்தேனோ, அவர்களையெல்லாம் நண்பர்களாகப் பார்க்கவும், அவர்களில் ஒருவனாக என்னைப் பார்க்கவும் முடிந்தது என்னால். காலையில் நேரத்துக்கு எழும்பினால் மட்டும் அன்று லெக்‌ஷர்ஸுக்குப் போவோம். அதுவும் காலையில் பல்துலக்குவதற்கு யாரும் புண்ணியவான் வாங்கி வைத்திருக்கும் பற்பசையில் எல்லோரும் பல் மினுக்குவோம். சவர்க்காரமும் அப்பிடித்தான். அவசர அவசரமாக காலையில் வெளிக்கிட்டு, மேசையில் கிடக்கிற பென்னையோ, பென்சிலையோ எடுத்துக்கொண்டு லெக்‌ஷர் ஹோலுக்குள் போய் அமர்ந்துகொள்வோம். 'மச்சான், உவ என்ன சொல்லுறா எண்டு ஒரு மயிரும் விளங்குதில்லை, நீ கவனமாப் பார், இரவுக்கு வந்து எங்களுக்கு விளங்கப்படுத்து' என்று ஒருவனிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, மற்றையவர்கள் ஒன்றில் அரட்டை அல்லது தூக்கம். சிலவேளைகளில், பாடம் போரடித்தால், ஆளை ஆள் பார்த்து, மச்சான் , மாறுவமோ, கெப்பிட்டலிலை நல்ல படம் வந்திருக்கு, இப்ப போனால் பத்தரை மணி ஷோவுக்குப் போயிடலாம் என்று கண்ணைக் காட்டிவிட்டு இடைவேளையில் எழும்பிச் சென்றுவிடுவோம். 

இந்தக் கூட்டத்தில் அவனும் இருந்தான். எம்மை எல்லாம் வலிந்து கட்டிவைத்திருக்கும் கயிறாக அவனது நட்பு இருந்ததுமவனுக்கென்று வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தை அவன் ஒருபோதுமே தனக்காகக்ச் செலவழித்தது கிடையாது. யாரும் உதவி என்று கேட்டு வந்தால் தன்னிடமுள்ள அனைத்தையுமே ஏன் என்று யோசியாது கொடுத்துவிட்டு, மற்றவனிடன் பாதி பத்திய சிகரட் வாங்கிக் குடித்துக்கொண்டே அமைதியாக இருக்கும் அவனைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.

யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்களில் அதிக புள்ளிகள் பெற்று வந்திருந்த ஒரு சில மாணவரில் அவனும் ஒருவன். ஆனால் எந்தத் தலைக்கணமும் இல்லாமல் எல்லோருடனும் மிகவும் சாதாரணமாக அவன் பழகினான். எவரையுமே அவன் ஒதுக்கி வைத்திருக்கவில்லை. வேண்டுமென்றே தேடித் தேடிப் போய் மற்றையவர்களுடன் பழகுவான். எங்களுடன் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரு தமிழ் மாணவர்களும் படித்தார்கள். அவர்களை எப்போதுமே தனது செட்டைக்குள் வைத்திருப்பதுப்போல அவர்களுடன் மிகுந்த அக்கறையாகவும், மிக நட்பாகவும் பழகுவான். "நான் யாழ்ப்பாணி, நீ மட்டக்களப்பு, நீ திருகோணமலை என்கிற பிரதேசவாதம் வேண்டாம் மச்சான், நாங்கள் எல்லாம் தமிழ் ஆக்கள் மச்சான்' என்று அடிக்கடி சொல்லிக் கொள்வான். அவனது இந்த சமூக அக்கறையே எங்களில் பலரை வித்தியாசமாகச் சிந்திக்கத் தூண்டியது. 

காலையிலும், மாலையிலும் வளாகக் கண்டீனில் சாப்பாடு. காலையில் 6 ரூபாவுக்குப் பாணும் சொதியும், மதியம் 8 ரூபாவுக்கு சோறும், பருப்பும், முட்டையும். இரவு வெளிக்கடையில் கொத்து. இப்படியே எமது உணவுச் சம்பிரதாயம் இருக்கும். தன்னிடம் பணம் இருக்கும்வரை மற்றையவர்களுக்கும் தானே பணம் கொடுப்பான். பணம் இல்லாவிட்டால் பிளேன் டீயுடன் சிகரட்டைப் பற்றவைத்துக்கொண்டு அப்படியே படுத்துவிடுவான். 

அவனுக்கென்று ஊரில் தாயும், தங்கையும் இருந்தார்கள். அவர்களுக்கென்று அவனது மாமியார் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்தை யாரும் கேட்டால் அப்படியே தூக்கிக் கொடுத்துவிட்டு இருந்துவிடுவான். கேட்டால், 'மச்சான், அம்மாவுக்கு அடுத்த மாசம் அனுப்பலாம், பாவம் உவன், நான் கொடுக்காட்டி வேறு ஆர் மச்சான் செய்யிறது/' என்று கேட்டுவிட்டுப் போய்விடுவான். 

சிறிது காலத்திலேயே அவனுடன் நட்பாகிப் போனேன். எனது கவலைகளை அவ்வப்போது அவனுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். நிதானமாகக் கேட்டுக் கொண்டிருந்து ஆறுதல் சொல்லுவான். என்னைப் போலவே இன்னும் பலருக்கு அவன் ஆலோசகனாகவும் மாறிப் போனான்.

மாலைவேளைகளில் எமது ரூம்களில் ஆரம்பிக்கும் கூத்தும் கும்மாளமும் பக்கத்து ரூம் சிங்கள மாண்வர்கள் வந்து அடக்கும்வரை தொடரும். அப்படியிருந்தும் சிலவேளைகளில் ரூம் கதவை மூடிவைத்துக் கொண்டு அரட்டை அடிப்போம். காட்ஸ் அடியும், கடியும் என்று நாங்கள் அடிக்கும் ரகளைகளுக்கு அளவிருக்காது. சிலவேளைகளில் சிங்கள  மாணவர்கள் நாங்கள் அடிக்கும் கூத்தைப் பார்த்து, நீங்கள் இங்கே படிக்கத்தான் வந்திருக்கிறீர்களா/ அல்லது வேறு அலுவல் ஏதாச்சும் பார்க்க வந்திருக்கிறீர்களா என்று கேட்பதும் நடந்திருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே எமது முதலாம் ஆண்டு முடிவிற்கு வர, எமக்கு அடுத்த ஆண்டில் பல்கலைக் கழகத்தில் சேரவிருக்கும் மாணவர்களை வரவேற்கும் காலமும் வந்தது.

பகிடிவதை கொடுமையானதென்னும் கருத்து என்னில் ஆழமாக ஊன்றிப் போயிருக்க, என்னைச் சுற்றியிருந்த நண்பர்களோ தமது இரைதேடும் சந்தர்ப்பத்திற்காக ஆவலாகக் காத்திருந்தது புரியத் தொடங்கியது எனக்கு. கூடவே இருந்துகொண்டு எப்படி அவர்களின் இந்த பகிடிவதையைத் தடுப்பதென்று எனக்குத் தெரியவில்லை. நான் அறையிலிருந்த பல சந்தர்ப்பங்களில் எனது நண்பர்கள் கூட்டிவந்த புதிய மாணவர்களை பகிடிவதை செய்வதை நான் பார்த்திருக்கிறேன். சிலவேளைகளில் அவர்களைத் தடுக்கவும் செய்திருக்கிறேன். பலமுறை வாக்குவாதங்களிலும் ஈடுபட்டிருக்கிறேன். அதற்காக அவர்கள் என்னை ஒதுக்கவில்லை. மச்சான், நீ பேசாம இரு. இது சும்மா பகிடிக்குச் செய்யிறதுதானே? கொஞ்ச நாளில அவங்களும் இதை மறந்துடுவாங்கள் என்று சமாதானம் சொன்னாலும் எனக்கு அது சரியாகப் படவில்லை. சிலவேளைகளில் அந்த அறையை விட்டுக் கிளம்பிச் சென்றுவிடுவேன். தடுக்கமுடியாதபோது, உள்ளேயே இருந்து நடக்கும் கொடுமையைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் காட்டிலும் வெளியேறிச் செல்வது பரவாயில்லை என்று தோன்றும் எனக்கு. 

ஆனால் அவனோ பகிடிவதையில் ஈடுபடவில்லை. அதேவேளை தனது நண்பர்களின் பகிடிவதைச் செயற்பாட்டையும் தடுக்கவில்லை. தனது ஊரிலிருந்து வந்திருந்த ஒரு கஷ்ட்டப்பட்ட மாணவனை தானாகவே அறைக்குக் கூட்டிவந்து மற்றையவர்கள் பகிடிவதை செய்வதை அவன் அனுமதித்தபோது எனக்கு தூக்கிவாரிப் போட்டது. இதற்காகவே அவனுடனும், பகிடிவதையில் ஈடுபட்ட இன்னொரு நண்பனுடனும் கடுமையாக வாக்குவாதப் பட்டேன். அந்தப் புதிய மாணவனை சுருட்டுக் குடிக்கும்படி அவர்கள் வற்புறுத்தியதும், அவன் அழுது அழுது சுருட்டைக் குடித்தபடியே புஷ் அப்ஸ் செய்ததும் இன்னும் கண் முன்னால் நிற்கிறது. ஆனால் அந்தப் புதிய மாணவனும் சிறிது காலத்தில் அந்த அறையில் ஒருவனாகி, எங்களிலும் ஒருவனாகிப் போனான். 

  • கருத்துக்கள உறவுகள்

இடைவெளி விடாமல் தொடருங்கள் ரகுநாதன்.சுவராசியமாய் இருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

கதை நண்பனைப் பற்றிய பலத்த பீடிகையோடு போவதால் எதையும் ஊகிக்க முடியவில்லை.  முடிச்சுக்கள் விரைவில் அவிழுமா என்று தெரியவில்லை!

மொறட்டுவ பல்கலைக்கழக ராக்கிங் அனுபவங்கள் எல்லாம் புதினமாக உள்ளன.  பக்கெட்டிங் என்றால் என்ன?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பக்கெட்டிங் என்றால் ராக்கிங் காலம் முடியும்போது ராக்கிங் வாங்கியவர்கள், தமக்கு ராக்கிங்  கொடுத்தவர்களை முழுகவார்ப்பது. அதாவது அன்றைய நாளில் எந்த சீனியரெல்லாம் ராக்கிங் தந்தார்களோ, அவர்களையெல்லாம் துரத்தித் துரத்தி தண்ணி அடிப்பார்கள். இது, நாங்கள் ஐக்கியமாகிவிட்டோம் என்பதை அடையாளப் படுத்தவாம் !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி, கதைக்கு வருகிறேன்.

எனது முதலாம் ஆண்டு முடியும் தறுவாயில் எனக்கும் அவனுக்கும் இடையே சில சிறிய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருந்தன. எல்லாமே ராக்கிங் பற்றித்தான் என்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஒருபோதும் எமது நட்பை அது பாதித்திருக்கவில்லை. 

முதலாம் ஆண்டு நிறைவடைந்தபின்னர் விடுதிகளில் இருந்த அனைத்து முதலாம் ஆண்டு மாணவர்களும் விடுதியை விட்டு வெளியேறிவிடவேண்டும் என்பது நியதி. அந்தவகையில் நாமெல்லோரும் விடுதிகளை விட்டு வெளியேறி பல்கலைக் கழகத்தைச் சுற்றியும் அமைந்திருந்த சிங்களவர்களின் புறாக் கூடுகள் போன்ற அறைகளில் வேண்டாவெறுப்புடன் அடைக்கலமானோம். 

நான் அவ்வாறு சென்று அடைக்கலமாகியது அன்டி - ராக்கிங் என்று செல்லமாக அழைக்கப்பட்ட மாண்வர் குழுவொன்று வசித்து வந்த வீட்டில். அந்த மாணவ்ர் குழு குறைந்தது 7 அல்லது 8 பேரைக் கொண்டிருந்தது. என்னை விட இரண்டு வருடங்கள் சீனியர்களாகவிருந்தவர்களினால் மொறட்டுவையில் அன்டி - ராக்கிங் என்ற அமைப்பு ஆரம்பமாகியிருந்தது. கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய பகுதிகளிருந்து மொறட்டுவைக்கு வந்திருந்த மாணவர்கள் சிலர், ராக்கிங் வேண்டுவதுமில்லை - கொடுப்பதுமில்லை என்ற வைராக்கியத்தோடு பல்கலைக் கழகம் நுழைந்திருந்தனர். மொறட்டுவைப் பல்கலைக் கழகத்துக்கு இது புதிது என்கிற படியால், ஆரம்பத்தில் மிகவும் கடுமையான சவால்களுக்கு  இந்த அன்டி - ராக்கிங் மாணவர்குழு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. ஏனென்றால் மொறட்டுவைப் பல்கலைக் கழகத்துக்கு வரும் எந்தத் தமிழ் மாணவனும் பகிடிவதையை அனுபவிக்காமல் இருக்கமுடியாது. இது அங்கே எழுதப்படாத சட்டமாக இருந்தது. பல்கலைக் கழக நிர்வாகம் எவ்வளவுதான் பகிடிவதைக்கு எதிராக சட்டங்கள் இயற்றி பேசிவந்தாலும் அவையால் எவற்றையும் நிறுத்திவிட முடியவில்லை. நிர்வாகக் குழுவினரின் கண்முன்னேயே புதிய மாணவர்களை ராக்கிங் செய்வது நடந்திருக்கிறது. அப்படி சிலர் பிடிபடும்பொழுது கூட, சில புதிய மாணவர்கள் பயத்தின் நிமித்தம் எதுவுமே நடக்கவில்லை என்று சொல்லிவிடுவார்கள். ஆகவே பகிடிவதை என்பது குறிப்பாக தமிழ் மாணவர்களைப் பொறுத்தவரையில் கட்டாயம் அனுபவிக்க வேண்டிய கொடுமையாகத்தான் அதுவரை இருந்து வந்தது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராக்கிங் என்பது தவிர்க்கப்பட முடியாதது என்கிற சூழ்நிலையில்த்தான் இந்த 7 அல்லது 8 அன்டி - ராக்கிங் மாணவர்களும் ராக்கிங் வேண்டுவதில்லை என்கிற வைராக்கியத்தோட்டு பல்கலைக் கழகம் நுழைந்திருக்கிறார்கள். இதனால் பலருடன் வெளிப்படையாகவே வாக்குவாதங்களுக்கும், சிறிய கை கலப்புகளுக்கும் ஆளாகவேண்டி ஏற்பட்டிருந்தது. ஆனால், இந்த 7 பேரும் ஒன்றாகவே எப்போதும் சுற்றி வந்ததால் எவருமே இவர்களைத் தொட முடியவில்லை. அதுமட்டுமில்லாமல், அந்த மாணவர் குழுவில் குறைந்தது 2 அல்லது 3 பேர் கொழும்பில் பிறந்த யாழ்ப்பாணத்துத் தமிழர்கள். இவர்கள் இயல்பாகவே சிங்களத்தில் சரளமாக உரையாடுவதாலும், பல சிங்கள மாணவர்களுடன் ந்ட்பாக இருந்ததாலும், இவர்கள் மீது கைவைப்பதென்பது மற்றைய தமிழ் மாணவர்களைப் பொறுத்தவரையில் ஒரு பிரச்சினையாகவே இருந்து வந்தது. 

தம்மால் இவர்களை எதுவுமே செய்யமுடியவில்லையே என்கிற ஆத்திரம், ராக்கிங்க் கொடுத்துவந்த பெரும்பாலான மாணவர்களை இவர்களை ஏதாவது செய்ய வேண்டும் என்கிற நிலைக்குத் தள்ளியது. முதலாவதாக இவர்கள் ராக்கிங் வேண்டாமல் விட்டது தமது சீனியர் என்கிற மரியாதையை உதாசீனம் செய்வதாக அவர்கள் உண்மையாகவே நினைத்திருந்தார்கள். அடுத்தது, இனிவரும் புதிய மாணவர்களுக்கு இந்த அன்டி - ராக்கிங் குழுவினர் ஒரு பிழையான முன்னுதாரணமாக ஆகிவிடுவார்கள் என்கிற பயம். இது தமிழ் மாணவர் மத்தியில் ஆழமாக வேரூன்றியிருந்த ராக்கிங் கலாச்சாரத்தை ஆட்டங் காணச் செய்துவிடும் என்கிற பயத்தினால், இவர்களை என்ன செய்யலாம் என்று யோசித்திருக்கிறார்கள். அதன் விளைவு, இவர்களுடன் அனைத்து விதமான தொடர்புகளையும் மற்றைய மாணவர்கள் வெட்டிவிட வேண்டும். இவர்களை தமிழ் யூனியனிலிருந்தும், ஏனைய தமிழ் கலாச்சார நிகழ்வுகளில் இருந்தும் ஒதுக்கிவிடவேண்டும். இவற்றையும் மீறி எவராவது அவர்களுடன் பேசினார்கள் என்றால் அவர்களையும் அன்டி என்று முத்திரை குத்தி ஒதுக்கிவிடுவது என்று எழுதப்படாத விதியொன்றை அவர்கள் அன்று விதித்தார்கள். அதனால் எவருமே இந்த அன்டி ராக்கிங் மாணவர்களின் பக்கம் தலை வைத்துக்கூடம் பார்க்கப் பயந்தார்கள். இந்தப் பயம் அந்த மாணவர்கள் அன்டி ராக்கிங் குழுவினராக இருந்தார்கள் என்பதற்காக இல்லாமல், அவர்களுடன் கதைத்தால் எம்மையும் அன்டி என்று முத்திரை குத்தி ஒதுக்கிவிடுவார்களே என்பதற்காகத்தான் இருந்தது. 

அன்றிலிருந்து இந்த அன்டி ராக்கிங் மாணவர்கள் என்றால் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்கிற விதி உருவாகி, புதிதாக பல்கலைக் கழகம் வரும் மாணவர்களிடம் இவர்களிடமிருந்து விலகியே இருங்கள் என்கிற கண்டிப்பான கட்டளையும் தவறாமல் இடப்பட்டு வந்தது. ஆக, என்னை முதலாம் நாள் பல்கலைக் கழக வாசலில் வைத்து ராக்கிங் செய்ய முற்பட்ட சீனியர்களை அதட்டி, அவர்களிடமிருந்து என்னைப் பிரித்துச் சென்றது யாரென்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக, அன்டி - ராக்கிங் குழுவென்றால் ஒதுக்கப்பட்டவர்கள் என்கிற நிலையில்த்தான் நானும் எனது இரண்டாம் ஆண்டு தொடக்கத்தில் அந்த அன்டி - ராக்கிங் குழுவினரின் வீட்டில் சென்று அடைக்கலமானேன்.

இதனால் ஆரம்பத்தில் பலராலும் கேள்விகுள்ளாக்கப்பட்டேன். சிலர் சிறிது சிறிதாக என்னைவிட்டு ஒதுங்கத் தொடங்கினார்கள். என்னுடன் இயல்பாகப் பேசிவந்த மாணவர்கள் கூட இப்போது என்னுடன் பேசத் தயங்குவது தெரிந்தது எனக்கு. அப்படியிருந்தும்கூட என்னுடன் மிகவும் நட்பாகவிருந்தவர்களில் ஒரு சிலர் இந்தத் தடையை எல்லாம் மீறி என்னைப் பார்க்க அந்த அன்டி - ராக்கிங் ரூமுக்கு வந்துதான் போனார்கள். 

1993 இல் அன்டி - ராக்கிங் என்கிற மாணவர் குழு அமைக்கப்பட்டபின்னர் ஆரம்பித்த கடுமையான சலசலப்பு 1994 இல் சற்று அடங்கியது. இதற்குக் காரணம், 1994 ஆம் ஆண்டில் பல்கலைக் கழகம் நுழைந்த அனைத்து தமிழ் மாணவர்களிடமும் அன்டி - ராக்கிங் மாணவர் குழாம் பற்றி மிக்கடுமையான பிரச்சாரமொன்று ராக்கிங் கொடுத்து வந்த மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் பல்கலைக் கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளர்கள் அல்லது இன்ஸ்ட்ரக்டர்களாக இருந்தவர்களில் பலர் ராக்கிங்க் கொடுமையை ஆதரித்தவர்கள் என்கிற காரணத்தினால், பல மாணவர்கள் தமது கல்விக்கு இதனால் ஆபத்து ஏதும் நடந்துவிடும் என்கிற பயத்தினால் தாமாகவே முன்வந்து ராக்கிங் வாங்கினார்கள்.

இங்கே இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிடவேண்டும், பல்கலைக் கழகத்தில் நடக்கும் ஒவ்வொரு பாடத்திலும் 'கோஸ்வேர்க்' என்ற ஒரு ஒப்படை அல்லது அஸைன்மென்ட் தருவார்கள். இது ஆய்வுகூடத்தில் நடக்கும் பரிசோதனைகளை அடிப்படையாக வைத்து மாணவர்களால் எழுதப்படும் ஒரு தொகுப்பு. இதற்குப் புள்ளிகளும் வழங்கப்படும்.ஈந்தக் கோஸ்வேர்க் கட்டாயம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அப்படி சமர்ப்பிக்கத் தவறும் இடத்து, மாணவர்கள் கடுமையான சிக்கல்களுக்கு ஆளாகும் வாய்ப்புகளுமுண்டு. ஆகவே பல மாணவர்களைப் பொறுத்தவரை இது மிகவும் முக்கியமானது. குறிப்பாக தமிழ் மூலம் உயர்தரம் படித்துவிட்டு, திடு திடுப்பென்று ஆங்கிலத்தில் தொகுப்பு வழங்குங்கள் என்றால் அவர்கள் என்ன செய்வார்கள் ? ஆகவே அவர்களுக்கு சீனியர்களின் தயவு கட்டாயம் தேவைப்பட்டது. இதை சீனியர்கள் தமக்குச் சார்பாகப் பாவித்துக் கொண்டார்கள். "றாக்கிங் வாங்கவில்லை என்றால், கோஸ்வேர்க் எல்லாம் தரமாட்டோம்' என்கிற பயமுறுத்தல்களும் இருந்தபடியால் பல மாணவர்கள் தெரிந்தே ராக்கிங் வாங்கினார்கள். 

அடுத்ததாக 'குப்பி' என்று அழைக்கப்படும் சீனியர்களினால் புதிய மாணவர்களுக்கு அளிக்கப்படும் விரிவுரைகள். தமக்குத் தெரியாத பாடங்களிலிருந்து வரும் கேள்விகளை தமிழ் சீனியர் மாணவர்கள் வகுப்பறைகளில் வைத்து விளங்கப் படுத்துவார்கள். பல தமிழ் மாணவர்கள் இந்தக் குப்பி வகுப்பை வைத்துத்தான் விரிவுரையாளர்கள் என்ன சொல்லித் தந்தார்கள் என்பதைக் கூடப் புரிந்துகொள்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். குப்பி வகுப்புகளுக்கு மட்டுமே சென்று சோதனைகளில் பிரகாசித்த மாணவர்களும் இருந்தார்கள் என்பது ஆச்சரியம்தான். ஆனால் ராக்கிங் வாங்கிய மாணவர்களுக்கு மட்டும்தான் இந்த குப்பி என்கிற வரப்பிரசாதம் எல்லாம்.  ஆக, இந்த குப்பி கூட மாணவர்களை ராக்கிங் வாங்குவதற்குத் தூண்டியிருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி, கதைக்கு வருவோம்.

1993 இல் முதலாவது அன்டி - ராக்கிங் குழு உருவக்கப்பட்டபின்னர் 1994 இல் வந்த தமிழ் மாணவர்களில் எவருமே அன்டி - ராக்கிங் குழுவின் பக்கம் தலை வைத்தே பார்க்கவில்லை. அப்படியொரு பயம் உருவாக்கப்பட்டு வைத்திருந்தார்கள். அடுத்ததாக 1995. நான் போய்ச் சேர்ந்த ஆண்டு. 

என்னைப் போலவே இன்னும் கொழும்பிலிருந்து வந்த சில மாணவர்களும், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த இன்னொரு மாணவனும்  அன்டிகளாக மாறிப் போக நாங்கள் ஒரு குழுவாக ஒதுக்கப்பட்டிருந்தோம். ஆனாலும் கொழும்பில் பல்வேறு தேவைகளுக்காகவும் (வேறென்ன< சிங்களவும் பேசவும், இடம் காட்டவும்) நான் என்னுடன் படித்த மாணவர்களுக்குத் தேவைப் பட்டதால் என்னை முற்றாக அவர்களால் ஒதுக்க முடியவில்லை. இதனால் ஒரு மெல்லிய நூலிழையில் எமது நட்புத் தொடர்ந்தது. 

இது நடந்தது 1997 இல். புதிதாக இன்னொரு மாணவர் குழுவொன்று பல்கலையில் நுழைந்தபோது அது நடந்தது. வழக்கத்துக்கு மாறாக பெருந்தொகையான தமிழ்மாணவர்கள் அந்தமுறை கொழும்பு மாவட்டத்திலிருந்து தெரிவாகியிருந்தனர். இந்த மாணவர்களில் அநேகமானவர்கள் கொழும்பு நடுத்தர அல்லது மேட்டுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஓரளவு வசதிபடைத்த மாணவர்கள். கொழும்பிலுள்ள பிரபல கல்லூரிகளான சென் தோமஸ், ரோயல் கல்லூரி, சென் ஜோசெப்ஸ், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி ஆகியவற்றிலிருந்து வந்தவர்கள். பெரும்பாலானவர்கள் கொழும்பிலேயே பிறந்து வளர்ந்த தமிழர்கள். அதுமட்டுமல்லாமல் ஒரு சில மாணவர்களின் மூத்த சகோதரர்கள் ஏற்கனவே பல்கலையில் இருந்த அன்டி - ராக்கிங் அமைப்பில் இருந்தபடியினால், இந்த புதிய மாணவர் குலாமுக்கு அன்டி - ராக்கிங் அமைப்பில் இணைவதென்பது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. 

 

பெருமளவிலான தமிழ் மாணவர்கள் அன்டி-ராக்கிங் அமைப்பில் இணைந்துகொண்டது அதுவரை ராக்கிங் கொடுத்துவந்த தமிழ் மாணவர்களுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆகவே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானித்த அவர்கள், முதலில் வெருட்டிப் பார்க்கலாம், அது சரிவராட்டி கை வைக்கலாம் என்று முடிவெடுத்திருக்க வேண்டும். இப்படி அவசரப்பட்ட ராக்கிங் செய்யும் மாணவர்களில் என்னுடன் கூடப் படித்த மாணவர்களும் அடங்கியிருந்தனர். 

  • கருத்துக்கள உறவுகள்

ரகு சிறு வயது முதல் கொண்டே உங்கள் வாழ்க்கை ஒரு போராட்டமாகவே இருந்திருக்கிறது.

பல்கலைக் கழகத்தில் இப்படி எல்லாம் பிரச்சனை என்று தான் 
நான் அந்தப் பக்கம் தலை வைத்தே படுக்கவில்லை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரகு சிறு வயது முதல் கொண்டே உங்கள் வாழ்க்கை ஒரு போராட்டமாகவே இருந்திருக்கிறது.

பல்கலைக் கழகத்தில் இப்படி எல்லாம் பிரச்சனை என்று தான் 
நான் அந்தப் பக்கம் தலை வைத்தே படுக்கவில்லை

 நான் நம்பீட்டன்...!<_<

அட நீங்க வேற ஈழப்பிரியன்ள்ளிக்கூடம் போனால் பல்கலைக் கழகம் போகவேண்டிவரும்  என்று தான் நான் பள்ளிக்கூடப்  பக்கமே   தலை வைத்துப்படுக்கவில்லை. :cool:

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சுவாரஸ்சியமாகப் போகின்றது உங்களின் பல்கலைக்கழக அனுபவங்கள்...! தொடருங்கள் ரகு...!

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சுவாரசியமாகப் போகின்றது. அவசரப்பட்டு முடிக்காமல் பல்கலைக் கழக அனுபவங்களைத் தாருங்கள்.

ராக்கிங் இல்லாத, சீனியர்கள், ஜூனியர்கள் என்ற பேதம் இல்லாத அனுபவம்தான் எனக்கு வாய்த்தது. பாடங்களை விளங்கப்படுத்தவும், கோர்ஸ்வேர்க் ரிப்போர்ட்களைத் தந்துதவவும் ஒற்றுமையாக இணைந்து தமிழர்களாக அடையாளப்படுத்தவும் முன்மாதிரியாக இருந்த பலரைக் கண்ட இடமாகத்தான் பிரித்தானியப் பல்கலைக்கழகம் இருந்தது. இப்போதும் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் இல்லாத ராக்கிங் சிறிலங்காவில் தொடர்ந்து நடைபெறுவது ஏன் என விளங்கவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும். இடையில் கடுமையான வேலை. நேரம் கிடைப்பதே கடிணம். அதனால்த்தான் தொடர்ந்து எழுத முடிவதில்லை......

 

சரி தொடரலாம்,

 

புதிதாக வந்துசேர்ந்த பல தமிழ் மாணவர்கள் அன்டி-ராக்கிங் பக்கம் சாயவே அதுவரை ராக்கிங் கொடுத்துக்கொண்டு வந்தவர்களுக்கு கடும் சினம் ஏற்பட்டிருக்க வேண்டும். இதனால் பல புதிய மாணவர்களுடன் அவர்கள் கடுமையாக நடந்துகொள்ள முயன்றனர். வாயால் அவர்களைத் திட்டுவதில் ஆரம்பித்த இந்த சீனியர்களின் பகிடிவதை, கைகளுக்கு மாறியது.

ஒரு சில புதிய மாணவர்கள் தனியாக மாட்டுப்பட பல சீனியர்கள் கும்பலாக அவர்களைத் தாக்கியுள்ளனர். பல்கலைக் கழக வளாகத்தினுள் நடந்த இந்த தக்குதல் சம்பவத்தில் ஒரு சில புதிய மாணவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகவே, ஒரு சில தமிழ் விரிவுரையாளர்களும் இதில் தலையிட வேண்டியதாயிற்று. 

தாங்கள் செய்ததன் விபரீதம் புரியாது, பல சீனியர்கள் அந்தப் புதிய மாணவர்களைத் தாக்கியதைப் பெருமையாகப் பேசிக்கொண்டு திரிய, தக்கப்பட்ட மாணவர்கள் தமக்கான நேரம் வரும்வரை காத்திருந்தனர்.

புதிய மாணவர்களைத் தாக்கிய குழுவின் முன்னால் நின்று செயற்பட்ட நபர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மயூராபதி அம்மன்கோயிலிக்குச் செல்லும் வழக்கம் உள்ளவர். தக்குதல் நடந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை மாலை வழமை போலவே அவர் மயூராபதி அம்மன்கோயிலுக்குச் சென்றிருக்கிறார். அங்கே அவருக்காக காத்திருந்தது ஒரு குழு. தாக்கப்பட்ட மாணவர்களும் அவர்களது நண்பர்களுமாக அமைந்த இந்தக் குழு இந்த சீனியர் தனது வழிபாடுகளை முடித்துவரும்வரை இருட்டில் கோயிலுக்கு வெளியே காத்திருந்திருக்கிறது. இதுபற்றி எதுவுமே தெரியாத அந்த சீனியரும் வழிபாடு முடிந்து கோயிலுக்கு வெளியே வரவே அவரை சாரமாரியாகத் தக்கத்தொடங்கியது புதிய மாணவர்களின் குழு. வேலை விட்டு வீடு செல்லும் பலர் அந்த வழியே பஸ்களிலும், வேறு வாகனங்களிலும் போய்க்கொண்டிருக்க, இந்த சீனியரை நடுவீதியில் துரத்தித் துரத்தித் தாக்கியிருக்கிறது அந்த புதிய மாணவர் குழு. வெளியார் தலையிட்டு அந்த சீனியரைக் காப்பாற்ற அவருடன் வந்தவர்கள் அவரை கழுபோவிலை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். முகத்திலும், கைய்யிலும் பலமான அடிகாயங்களுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

சீனியர் அடிபட்ட செய்தி பல்கலைக் கழகத்தினுள் தீயெனப் பரவவே, பல சீனியர் தமிழ் மாணவர்கள் (ராக்கிங்கைஆதரிப்பவர்கள்லேதாவது பதிலடி கொடுக்க வேண்டும் என்று பேசுவதற்காக ஒன்று கூடினார்கள். நான் அன்டி அமைப்பைச் சேர்ந்தவன் என்பதால் மந்திராலோசனைகளுக்கு என்னை அவர்கள் அழைக்கவில்லை. 

பல சீனியர்கள் அந்தப் புதிய மாணவர்களுக்குப் பதிலடி கொடுக்கவேண்டும் என்று ஆவேசப்பட்டாலும், பல்கலைக் கழகத்துக்கு வெளியே அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. கொழும்பிலே பிறந்து வளர்ந்த புதிய மாணவர்கள், இந்த சீனியர்கள் செல்லும் வெள்ளவத்தை, தெகிவளை, பம்பலப்பிட்டி ஆகிய பகுதிகளில் நீண்டகாலமாக வசித்து வந்ததினால், சில சீனியர் மாணவர்கள் அவ்வாறான பகுதிகளுக்குச் செல்லவே அஞ்சினர்.

இது இப்படியிருக்க, சீனியர்களைத் தாக்கும் படலம் அத்துடன் நிற்கவில்லை. எவர் எவரெல்லாம் தம்மஐ தனியாக வைத்து பல்கலைக் கழகத்தில் தாக்குதல் நடத்தினார்களோ, அவர்களையெல்லாம் தனித்தனியாக பலகலைக் கழகத்துக்கு வெளியே வைத்துத் தாக்கத்தொடன்கினார்கள் புதிய மாணவர்கள்.ஐப்படி தனித்தனியாக தாக்கியவர்கள் மாட்டுப்பட்டு அடிவாங்கவே பல சீனியர்களுக்கு நடுக்கம் பிடித்தது. 

இந்தப் புதிய மாணவர்களை பல்கலைக் கழகத்திற்குள் வைத்துத் தாக்கியவர்களில் எனது நண்பனின் மிக நெருங்கிய நண்பன் ஒருத்தனும் இருந்தான். 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய மாணவர்களைத் தாக்கியவர்கள் ஒருவர் பின் ஒருவராக இலக்கு வைத்துத் தாக்கப்படவே என்னுடைய நண்பனின் நண்பனுக்கும் நடுக்கம் பிடித்தது. அண்மையில்த்தான் திருமணமாகியிருந்த அவன், எனது நண்பனை தனக்காக சமாதானம் பேச அழைத்திருக்க வேண்டும்.

புதிய மாணவர் வருகையின் பின்னர் எனக்கும் நண்பனுக்குமிடையில் சற்று மனஸ்த்தாபம் ஏற்பபட்டிருந்தது. நான் பகிடிவதையைக் கடுமையாக எதிர்த்ததாலும், அவன் பகிடிவதையில் ஈடுபடாவிட்டாலும் கூட, பகிடிவதைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்ததாலும் அவ்வப்போது கடுமையான வாக்குவாதங்களிலும் நாம் ஈடுபட வேண்டியிருந்தது. 

ஆக, நெருக்கமாக இருந்த நட்பு, சிறிது சிறிதாக மாறி, பேசிக்கொள்ளாத அளவிற்கு அந்நியமாகிவிட்டிருந்தோம் அப்போது நாங்கள்.

இந்நிலையில்த்தான் தனது நண்பனுக்காக சமாதானம் பேசும் முயற்சியில் இறங்கியிருந்தான் அவன்.

அன்டி - ராக்கிங் மாணவர்களின் தலமை அலுவலகமாக நான் தங்கியிருந்த வீடு மாறியிருந்தது. பல புதிய மாணவர்களாலும், பழைய அன்டி ராக்கிங் மாணவர்களாலும் நிறைந்திருந்த அந்த வீடு எப்போது மிகவும் கலகலப்பாகவும், சுருசுருப்பாகவும் இருக்கும்.  பகிடிவதை இல்லையே ஒழிய, கிண்டல்களுக்கும், நைய்யாண்டிகளுக்கும், நக்கல்களுக்கு ஒருபோதுமே குறைவிருக்காது. சின்னியர் ஜூனியர் என்கிற பேதமில்லாது எல்லோரு சகோதரர்போல வாழ்ந்த இடம் அது. சிலவேளைகளில் புதியவர்களின் தொல்லை தாங்காது, "உங்களுக்கு ராக்கிங் தந்தால்த்தாந்தாண்டா திருந்துவீங்கள் " என்று பல சீனியர்கள் கிண்டலாக சலித்துக்கொள்வதும் நடக்கும்.

அப்படியான ஒரு தலமை அலுவலகத்துக்கு நிறை போதையில் தனது நண்பனையும் இழுத்துக்கொண்டு முதன் முதலாக சமாதானம் பேச வந்திருந்தான் அவன். நாங்கள் ஆறு அல்லது ஏழு பேர் அந்தநேரம் எமது வீட்டில் இருந்திருப்போம். தனது நண்பனை இருத்திவைத்துவிட்டு, அவன் பேசத் தொடங்கினான், "அண்ணை, இவன் என்னுயிர் நண்பன், இவனுக்காக என்ர உயிரையும் குடுப்பன். இவன் மற்றவங்கள் மாதிரியில்லை.கௌங்கட ஜூனியரை இவன் அடிக்கையில்லை. அடிச்ச கூட்டத்தில இவனும் இருந்திருக்கிறான், அவ்வளவுதான். ஆனால் இவனையும் நீங்கள் பிழையா நினைச்சுக்கொண்டு அடிக்க திரிரீங்களாம் எண்டு கேள்விப்பட்டேன். நான் இருக்கும் மட்டும் அவனுக்கு அடி விழ விடமாட்டன். எனக்கு அடியுங்கோ, அவனை விடுங்கோ" என்று அரை போதையிலும், கோபத்திலும் பேசிக்கொண்டிருக்க நான் குறுக்கிட்டு, " இவர் அவங்களை அடடிக்கப் போகவில்லையென்றால், என்னத்துக்கு அதில நிண்டவர்?' என்று கேட்கவும், அப்போதுதான் முதன்முதலாக எனது முகம்பார்த்த அவன், "டேய், நீ பேசாத, நீ துரோகி, உனக்கு என்னடா தெரியும் நட்பைப்பற்றி? ' என்று எழுந்து அடிக்க வரவும், மற்றையவர்கள் அவனை தள்ளி மீண்டும் இருக்க வைத்தனர்.

அன்றுடன் அவனுடன் பேசுவதை முழுவதுமாக விட்டு விட்டேன். 

என்னுடன் கோபபட்டுக்கொண்டே அவன் தனது நண்பனையும் அழைத்துக்கொண்டு அன்று போய்விட்டான்.

அதன்பிறகு பலகலைக் கழகத்தில் கணிதத்துறையில் பேராசிரியராக இருந்த ஒரு தமிழரின் மத்தியஸ்த்தத்தின் மூலமனிந்த அடிபிடி ஓரளவுக்குத் தணிந்தது. ஆனால் நேருக்கு நேர் இரு பகுதியினரும் பார்த்துக்கொண்டால், ஆக்கள் பலத்தைப் பொறுத்து முறைத்தலும், நழுவுதலும் நடக்கும். ஆனால் யாரும் யாரையும் தாக்க அதன்பிறகு எத்தனிக்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே இரண்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன. இந்த இரண்டுவருடத்திலும் அவனை பலமுறை நேருக்கு நேராகப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. ஆனால் பேச விரும்பவில்லை. என்னை அவன் அடிக்க வந்தது, துரோகி என்று பேசியதும் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது . அதேபோல அவனும் என்னுடன் பேச முயற்சிக்கவில்லை. 

2000 ஆம் ஆண்டு ஜூலை மாதம். எமது இறுதியாண்டுப் பரீட்சைகள் ஆரம்பமாகியிருந்த நேரம். இரண்டு பாடங்கள் முடிவடைந்து, மூன்றாவது பாடத்திற்காக ஒரு இரவு,  பல்கலைக் கழக விரிவுரை மண்டபம் ஒன்றில் அருகில் நானும் இன்னும் சில தமிழ் மாணவர்களும் அவதிப்பட்டுப் படித்துக்கொண்டிருந்தோம். 

ஒரு பதினொரு மணியிருக்கும். கடுமையான சத்தத்துடன் பலர் நாம் படித்துக்கொண்டிருந்த இடம்நோக்கி வந்துகொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் எம்மருகில் வரவர சத்தமும் அவர்களின் வேகமும் கூடிக்கொண்டு போக, ஏதோ விபரீதம் நடக்கிறதென்பது தெளிவாகப் புரிந்தது. 

அந்தக் கூட்டம் அருகில் வந்தவுடன் அவர்களின் முகங்களை முதன்முதலாகப் பார்த்தேன், அனைவரும் என்னுடன் கூடப் படிக்கும் சிங்கள மாணவர்கள். கைய்யில் கட்டில் சட்டங்க்கள், உடைத்த தும்புக்கட்டைகள், கொட்டன்கள் என்று ஆளாளுக்கு கைகளில் ஒரு ஆயுதம் வைத்திருந்தார்கள். முன்னால் வந்தவனை எனக்கு நன்றாகவே தெரிந்திருந்ததினால், "மச்சாங், மொனவஹரி ப்ரஷ்னையக்த? ' மச்சான், ஏதும் பிரச்சினயோ என்று சிங்களத்தில் சாதாரணமாகக் கேட்டேன். 

'நா, முகுத் நா, அப்பியெக்க பொட்டக் இஸ்ஸராட்ட வரெங்க்" இல்லை, ஒன்றுமில்லை, எங்களுடன் கொஞ்சம் பலகலைக் கழக முன்றலுக்கு வா என்று கேட்டுக்கொண்டே எனது கைய்யைப் பிடித்தான். நான் என்ன நினைக்கிறேன் என்று எதுவுமே எதிர்பார்க்காமல், என்னை இழுத்துக்கொண்டு அவன் முன்னால் நடக்க, அவனுடன் வந்தவர்கள் என்னுடன் படித்துக்கொண்டிருந்த மற்றைய மாணவர்களையும் இழுத்துக்கொண்டு பல்கலைக் கழக வாசலுக்கு வந்தார்கள்.

வாசலில் நான் கண்டது ஆச்சரியத்தையும், பயத்தையும் ஒருங்கே வரவழைத்தது. பலகலைக் கழக வளாக முன் கேட்ட் முழுவதுமாக ஓவென்று திறந்து கிடக்க, கட்டுப்பெத்தை கிராம சிங்களச் சனம் முழுவதுமாக பலகலைக் கழகத்தினுள் கூடியிருக்க, புலிகளைப் பிடிக்கவென மொரட்டுவை பொலிஸ் நிலையத்திலிருந்து இரு டிரக் வண்டிகளும், ஒரு ஜீப்பும் வந்திருந்தது. அந்த நடுச்சாமத்தில் முழுக் கிராமௌம் பாத்திருக்க பல தமிழ் மாணவர்கள் வெறும் சரத்துடன், உடம்பில் வேறு ஒரு உடுப்புமில்லாமல் டிரக்கில் அடைக்கப்பட்டிருந்தார்கள். நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டே சிங்கள மாணவர்கள் என்னை இழுத்த இழுப்பீர்கு நான் போய்க்கொண்டிருந்தேன். 

பல்கலைக் கழக பாதுகாப்பு அதிகாரியின் அறையினுல் என்னை இழுத்துவந்து அவர்கள் விடவும், அங்கே இன்னும் சில தமிழ் மாணவர்களும், மொரட்டுவை பொலிஸ் நிலைய ஓ. ஐ. ஸி பீரிஸும் நின்றிருந்தார்கள். பீரிஸின் கண்கள் சிவப்பாகி, கோபத்தில் கத்திக்கொண்டிருந்தான். என்னைக் கண்டதும், தலையாட்டி போன்று அங்கே நடுவில் நின்றுகொண்டிருந்த ஒரு முஸ்லீம் மாணவனிடம் என்னைக் காட்டி, 'மூவ அந்துரனவத ?/ இவனை உனக்குத் தெரியுமா / என்று கேட்டான். என்னுடன் அந்த 5 வருட காலத்திலும் ஒரு வார்த்தை கூடப் பேசியிருக்காத அந்த முஸ்லீம் தலையாட்டி ஆமென்று தலையாட்டவும், ' உன்னுடன் எப்போதாவது நான் பேசியிருக்கிறேனா/' என்று நான் சிங்களத்தில் கேட்கவும், "கட்ட வஹாபங் கரியா"" , வாயை மூடுடா.....னே..என்று கத்திக்கொண்டே என்னை மற்றைய மணவர்களுடன் தள்ளிவிட்டான். 

12 மணியளவில் அங்கே அந்த நேரம் இருந்த அனைத்து தமிழ் மாணவர்களையும் ஆடு மாடுகளை அடைப்பது போல் டிரக்குகளிலும், ஜீப்பிலும் அடைந்துகோன்டு அவன் மொரட்டுவை பொலீஸ் நிலையம் நோக்கிப் பயணிக்க, முழு ஊருமே ஏதோ புலிகளைப் பிடித்துவிட்ட திருப்தியில் எங்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது.

மொரட்டுவைப் பொலீஸ் நிலையத்தில் நாங்கள் சிறிய அறையொன்றின் உள்ளே அடைக்கப்பட்டோம். அங்கேயிருந்த தமிழ் மாணவர்களில் அந்த கோபக்கார நண்பனும் இருந்திருந்தான். வேலை முடிந்து வீடு போகும் பொலிஸார், வேலைக்கு வரும் பொலிஸார் என்று எம்மைத் தாண்டிச் சென்ற அனைத்துப் பொலிஸ்காரரும் தம் பங்கிற்கு ஒன்றில் அடித்தார்கள் அல்லது கேவலமாகத் திட்டிவிட்டுச் சென்றார்கள். 

மறு நாள் அதிகாலை. கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திலிருந்து ஜெயரட்ணமும், இன்னொருவனும் (நிலாம்டீணாக இருக்கலாம்) வந்திருந்தார்கள். அடித்து அடித்து கேள்விகள் கேட்டார்கள்.  

நான் கொழும்பில் அதிக காலம் இருந்தபடியினால், எனக்கு அவ்வளவகாப் பிரச்சினை இருக்கவில்லை.

ஆனால் எனது நண்பனின் கதை வேறாக இருந்தது. அவன் மாவீரர் குடும்பம். யாழ்ப்பாணத்திலிருந்து கடுமையான பாஸ் நடைமுறைகளுக்கு மத்தியில் அவன் கொழும்பிற்கு வந்திருந்தான். இது ஜெயரட்ணத்தையும், மற்றைஅயவனையும் சிந்திக்க வைத்தது. 

"மற்றவன் எல்லாம் பாஸ் எடுக்கக் கஸ்ட்டப்படும்போது உனக்கு மட்டும் என்னென்று பாஸ் சுலபமாகக் கிடைத்தது ? என்று திரும்பத் திரும்பக் கேட்டு அவனை இருவரும் அடித்தார்கள். அடி வலி தாங்காது அவன் அழுதுகொண்டிருந்தான். 'உனக்கு நாளை காலைக்கு மட்டும்தான் நேரம் இருக்கு. அதுக்குள்ள நீ உண்மையைச் சொல்லாட்டி, உன்னை நாலாம் மாடிக்குக் கொண்டுபோவம். அங்கே போனபிறகு உன்னை ஒருத்தராலையும் கண்டுபிடிக்க ஏலாமல் போகும்" என்று மிரட்டிவிட்டுச் சென்றார்கள். 

அவர்கள் போனபிறகு அவன் எங்களருகில் வந்து அமர்ந்து அழுதுகொண்டிருந்தான். 'மச்சான், நீ யோசியாதை, அவங்கள் என்ன கேட்டாலும் பரவாயில்லை, நீ மாவீரர் குடும்பம் என்௶அதை மட்டும் சொல்லிப் போடாத, கம்பஸுக்கு வாரதுக்காகத்தான் பாஸ் தந்தவங்கள் எண்டு சொல்லு "என்று அவனுக்கு தைரியம் ஊட்டினேன். சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு அவனுடன் முதன் முதலாக அன்று பேசினேன். பதிலுக்கு அவனும் அழுதபடியே ஏதோ சொன்னான். 

அப்படியே 3 நாட்களுக்குப் பின்னர் இறுதியாண்டு மாணவர்களை மட்டும் வெளியே விட்டார்கள். அதன்பின்னர், அவனுடன் அவ்வப்போது பேசினேன். பழைய நட்பு இல்லையென்றாலும் கூட, எப்பிடி மச்சான் இருக்கிறாய் ? என்றதுடன் எமது சம்பாஷணைகள் முடிந்துபோகும். 

பல்கலைக் கழகம் முடிந்தபிறகு அவனைப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களுக்குப் பிறகு, இந்த வருடம் ஆரம்பத்தில் என்னுடன் அதே பல்கலையில் படித்த கனடா வாழ் நண்பனொருவன் தன்னுடன் படித்த எல்லோரையும் வட்ஸ் அப் எனும் கைய்யடக்கத் தொலைபேசி இணைப்பில் சேர்த்துக்கொண்டான். அதன்மூலம் அந்த நண்பனுடன் 15 வருடங்களுக்கு பிறகு பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அவன் பழையவை எல்லாவற்றையும் மறந்து வெகு சாதாரணமாகப் பேசினான். நானும் எனது கோபங்களை மறந்து பேசினேன். 

ஒருமுறை, "இன்றிருக்கும் புரிதல் அன்று எம்மிடம் இருக்கவில்லையே ?' என்று நான் கேட்டதற்கு, சிரித்துக்கொண்டே சமாளித்துவிட்டான்.

இன்று லண்டனில் சந்தோசமாக அவன் வாழ்ந்துவருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. 

சில நேரங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் எமக்கு பலரை அறியவும், சிலரை இழக்கவும் வைக்கின்றன.

பகிடிவதைக்கு ஏன் எதிராக நான் இருந்தேன் என்று இப்போது எண்ணிப் பார்க்கிறேன். அப்படி எதிரானவனாக இல்லாமல் அவர்களுடனேயே இருந்திருந்தால் இன்னும் பலருடம் நெருங்கிப் பழக வாய்ப்புக் கிடைத்திருக்கும் என்றும் நினைக்கிறேன். ஆனால், ஒருவனை வாட்டி வதைத்து, அதில் இன்பம் காணும் ஒரு உணர்வை இன்றுவரை மனம் ஏற்க மறுத்தே வருகிறது.

முற்றும் !

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்துக்கள் அருமை ரகு.
ஒரே மூச்சில் முழுதையும் வாசித்து முடித்தேன்.
எழுத்தாளர் சுஜாதாவின் "ஹாஸ்டல் தினங்கள் " கதை போல விறு விருப்பாக இருந்தது.
கட்டுரையின் முடிவு சற்று சடுதியாக முடிந்ததை போல ஒரு உணர்வு.

என்னுடன் புனித பத்திரீசியார் கல்லூரியில் படித்த மாணவர்கள் ஒரு 15
பேர் (Viber) வைபரில் நீங்கள் கூறியது போல ஒரு (group) க்ரூப் தொடங்கி தினமும் கதைத்து, அரட்டை அடித்து பால்ய நட்பை மீழ எழுப்பி இருக்கிறோம்.

பள்ளி நாட்களில் என்னை கொழும்பான், வடக்கத்தியான் என்று விளையாட்டாய்  சீண்டிய  நண்பர்கள் இன்று என்னை நட்போடு அரவணைத்து அந்த (group) க்ரூப்பிட்கே என்னை தான் லீடர் போல ஆர்ப்பரிக்கிரார்கள்.

வட்டுக்கோட்டையில் தொழில் நூட்ப கல்லூரியில் படிக்கும் எனக்கும் கூட இந்த "ராகிங் " தொல்லை இருந்தது.
கடவுளே என்று நான் கொஞ்சம் நன்றாக பாட்டு பாடுவதானால், மற்றும் என்னுடைய "கண்டித் தமிழ்"     பெரும் பாலானவர்களுக்கு ஹாஸ்யமாக பட்டதினாலும் நான் தப்பித்தேன்.
எந்த ரூமில், எந்த பார்டியில், எந்த மேடையில், எந்த மரத்தடியிலும் என்னை தான் பாட விடுவார்கள்.... நமக்கு அது தானே பொழப்பு !!! tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.