Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறைந்த தமிழக முதல்வர்.... ஜெயலலிதா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த தமிழக முதல்வர்.... ஜெயலலிதா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

CM-Jaya1C_0.jpg

மறைந்த தமிழக முதல்வர்.... ஜெயலலிதா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

ஆர். அபிலாஷ்

Image result for ஜெயலலிதா

ஜெயலலிதாவின் வாழ்க்கை சரிதை ஒன்றை பத்து வருடங்களுக்கு முன்பு படித்தேன். அதில் ஒரு காட்சி என் நெஞ்சை விட்டு நீங்காதது. குழந்தையாய் இருக்கும் போது ஜெயலலிதாவுக்கு விமானப்பணிப்பெண்ணாக பணி புரிந்த தன் அத்தை மீது அன்பும் மதிப்பும் அதிகம். தன் வீட்டிற்கு மேல் விமானம் பறந்தால் அவர் ஓடிச் சென்று மொட்டை மாடியில் நின்று பார்ப்பாராம். வளர்ந்த பின் விமானப்பணிப்பெண் ஆக வேண்டும் என அம்மாவிடம் அடிக்கடி கூறுவாராம். எனக்கு ஜெயலலிதா பற்றி யோசிக்கும் போதெல்லாம் மொட்டைமாடியில் நின்று விமானத்தை தலையுயர்த்தி நோக்கி, அங்கே அதில் தன் அத்தை செல்கிறாரா என கற்பனை செய்யும் ஒரு சிறுமியின் சித்திரம் தான் தோன்றும். வானத்தை எட்டிப் பிடிக்கும் அவா பின்னர் அவர் தமிழகத்தின் அதிகார உச்சத்தில் சிம்மாசனமிட்டு அமர செய்தது.

சினிமா, அரசியல் ஆகியவை அவர் கனவுகளில் இருந்ததில்லை. இரண்டிலும் பெரும் வெற்றிகள் அவர் வாழ்வில் பிறகு மிக மிக எதேச்சையாய் தான் நிகழ்ந்தன. அவர் வாழ்வில் மேற்தட்டை அடைய வேண்டும், ஒரு வசதியான நவநாகரிகமான ஸ்டைலான வாழ்க்கை வாழ வேண்டும் என ஏங்கியிருக்கிறார். பின்னர் இந்த ஏக்கம் துணிச்சலாய், கட்டற்ற அதிகார, கௌரவ வேட்கையாய் அவருக்குள் வளர்ந்திருக்க வேண்டும். தனக்கு கிடைத்த சிறுசிறு வாய்ப்புகளை இறுகப்பற்றிக் கொண்டு மேலே வரும் புத்திசாலித்தனமும் மூர்க்கமும் அவருக்கு இருந்தது.

எம்.ஜி.ஆரிடம் அபாரமான வசீகரமும் மக்கள் செல்வாக்கும் இருந்தது. அவர் அதற்காய் ஏதும் தனியாய் செய்ய வேண்டியிருக்க வில்லை. ஆனால் ஜெயலலிதா இந்த செல்வாக்கை தன் முயற்சிகளாலும் மக்களின் மனநிலை குறித்த துல்லியமான உள்ளுணர்வாலும் சிறுக சிறுக உருவாக்கிக் கொண்டார். எம்.ஜி.ஆரை கடந்து தன்னை ஒரு பிம்பமாக கட்டமைத்தார். எம்.ஜி.ஆரின் வாரிசாக அரசியலுக்கு வந்து, அந்த அடையாளத்திலேயே தேர்தலை வென்றவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் எம்.ஜி.ஆரை மக்களிடம் நினைவுபடுத்த் தேவையிருக்கவில்லை. இது தான் அவரது முக்கிய சாதனை என படுகிறது.

ஜெயலலிதாவை எம்.ஜி.ஆரை விட சிறந்த நிர்வாகி எனலாம். எம்.ஜி.ஆர் வசம் கட்சி இருந்த போது கூட அடுத்த நிலை தலைவர்களை கட்டுப்படுத்துவதில் அவருக்கு சிரமங்கள் இருந்ததாய் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஜெயா ஒரு இசைநடத்துநரின் கோலுக்கு இணங்க வாத்தியங்கள் இசைக்கும் கலைஞர்களை போல அத்தனை குட்டித்தலைவர்களை நடத்தினார். அவர் பிறழ்வுகளை அனுமதிக்கவில்லை. அது மட்டுமல்ல அதிமுகவை கார்ப்பரேட்மயமாக்கி ஒரு வலுவான கட்டமைப்பாக்கினார். தனக்கு கீழுள்ள தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் என ஒவ்வொருவருக்கும் ஒரு கச்சிதமான பணித்திட்டம், வரையறை, இடம் என வகுத்து கட்டுப்படுத்தினார். ஜெயலலிதா தேர்தலின் போது தன் கட்சிக்காரர்களிடம் ஒரு டீக்காரரை சுட்டி ”இவரை ஜெயிக்க வையுங்கள்” என ஆணையிட்டால் அது நிகழும். எந்த அடையாளமும் இல்லாத ஒருவர் ஜெயலலிதா எனும் பிம்பத்தை மட்டுமே வைத்து வெல்ல முடிந்தது. இது ஒருவித franchise செயல்பாட்டு முறை. நீங்கள் KFCயில் முகவர் ஆக சேர்ந்தால் வாடிக்கையாளர்களை வரவழைக்கும், தரத்தை நிரணயித்து விளம்பரப்படுத்தும் பொறுப்பை KFC கார்ப்பரேட் நிறுவனமே எடுத்துக் கொள்ளும். நீங்கள் பணத்தை முதலீடு செய்து நிர்வகித்தால் மட்டும் போதும். இந்த பாணியை ஜெயலலிதா கச்சிதமாய் அதிமுகவில் செயல்படுத்தினார். 

திமுக இன்றும் ஒரு அரை-நிலப்பிரபுத்துவ, அரை-ஜனநாயக அமைப்பே. ஸ்டாலின் முழுக்க பொறுப்பேற்கும் பட்சத்தில் அவர் நிச்சயம் திமுகவை ஒரு அதிமுகவாக மாற்றுவார். ஸ்டாலினுக்கு ஜெயலலிதாவின் நிர்வாக முறை மீது அபிமானம் உண்டு. கேரளா போன்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்னதான் சமத்துவம், தனிமனித உரிமைகள், போராட்டம் என பொங்கினாலும் ஆழத்தில் அவர்கள் ஜெயலலிதா போன்ற தலைவருக்காகவே ஏங்குகிறார்கள். எந்த மலையாளியிடம் பேசினாலும் அவர்களுக்கு ஜெயலலிதா மீதுள்ள மரியாதையும் வியப்பும் தெரிய வரும்.

ஜெயலலிதாவின் ஆட்சியை பொறுத்த மட்டில் பாராட்டத்தக்க முக்கிய அம்சம் அவரது மக்கள் நலத்திட்டங்கள். குறிப்பாய், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா காய்கறிக் கடை, அம்மா மருத்துவ காப்பீடு, மாணவர்களுக்கு மடிக்கணினி போன்ற திட்டங்கள் அவருக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுத் தந்தன. ஒரு பக்கம் மக்களுக்கு தற்காலிக அனுகூலங்களை வழங்கி அவர்களின் கோபத்தை திசைதிருப்பும் ஒரு வியூகம் என இத்திட்டங்களை விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். எனக்கு மற்றொரு காரணத்துக்காக இத்திட்டங்கள் பிடித்திருந்தன. அரசே உற்பத்தி செய்து மக்களுக்கு குறைந்த செலவில் சேவை செய்வது எனும் நோக்கு என்னை கவர்ந்தது. இது ஒரு சோஷலிஸ அணுகுமுறை. தொண்ணூறுகளில் தோன்றிய மிதமிஞ்சிய தாராளமயமாக்கல், கார்ப்பரேட்மயமாக்கம் எளிய மக்களை கடும் நெருக்கடியில் தள்ளின. அடிப்படை வாழ்க்கை தேவைகளுக்காய் கடுமையாய் போராடும் நிலை ஏற்பட்டன. அனைத்து நிலைகளிலும் பெரும் பணக்காரர்களே முதலீடு செய்து லாபம் ஈடு, அதை மேற்தட்டினர் பகிர்ந்து கொண்டு, தம் சேவையாளர்களாக மேல்மத்திய, மத்திய வர்க்கத்தினரை மட்டும் பாவிக்கும் போது பெரும்பகுதி கீழ்த்தட்டினர் கைவிடப்பட்டனர். இப்படி கைவிடப்பட்டவர்களை கைகொடுத்து அணைப்பதே அம்மா மக்கள் நலத்திட்டங்களின் சிறப்பு.

 கடந்த வருடம் வேலை இல்லாமல் நெருக்கடியில் இருந்த போது நான் தினமும் இரண்டு வேளை அம்மா உணவகத்தில் நிறைவாக உண்டேன். ஐந்து ரூபாய் ஒருவேளை உணவு. ஒருநாள் செலவுக்கு இருபது ரூபாய் போதும். வேறெங்கு நீங்கள் இப்படி உண்ண முடியும்? அந்நாட்களில் அங்கு தினமும் உணவருந்த வரும் பலதரப்பட்ட மக்களை கவனித்தேன். அவர்கள் அந்த சேவையை நம்பியே வாழ்ந்தனர். ஒரு நெருக்கடியான நேரத்தில் உணவளித்தவர் மீது நமக்கு ஒரு தீராத பற்று இருக்கும். அதுவே ஜெயலலிதா மீது மக்களுக்கு இருந்த பாசம். எளிய மக்களுக்கு எது தேவை என அவர் தெரிந்து வைத்திருந்தார். அது அவரது வலிமை.

இந்த மக்கள் நலத்திட்டங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்று செல்போன், மென்பொருள், கட்டுமானம் என பலதுறைகளிலும் முதலீடு செய்து லாபம் ஈட்டி அப்பணத்தால் தனது எளிய மக்களை அரவணைக்கும் ஒரு அரசு வர வேண்டும் என்பதே என் ஆசை. மக்களின் வரிப்பணத்தால் மக்களுக்கு சேவை செய்வது ஒரு காலனிய ஆட்சி முறை. இதை எதிர்காலத்தில் ஒழித்துக் கட்ட வேண்டும். ஜெயலலிதாவின் பல செயல்பாடுகள் இதை நோக்கி ஒரு எளிய முதல் கட்டமாக நான் கண்டேன். அவ்விதத்தில் அவரது மறைவு எனக்கு வருத்தம் அளிக்கிறது. அவர் உயிருடன் தொடர்ந்திருந்தால் மேலும் பல மக்கள் நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி இருப்பார்.

எல்லா சமகால அரசியல் தலைவர்களையும் போல ஜெயலலிதாவும் கறைபடிந்தவரே. ஊழல், வருமானத்துக்கு மிஞ்சிய சொத்துக்குவிப்பு, அமைச்சர்களை ஊழல் பணத்தை வசூலித்து தலைமைக்கு ஒப்படைக்கும் ஏவலர்களாக மாற்றியது என பல தவறுகளையும் சேர்த்தே அவர் மதிப்பிடப்படுவார். சமகால இந்தியாவின் எந்த தலைவரும் இந்தவித குற்றச்சாட்டுகளில் இருந்து தப்ப முடியாது தான். ஜெயலலிதாவின் சர்வாதிகார நிர்வாக பாணியும், விமர்சனங்களை சற்றும் சகிக்க முடியாத மனநிலையும், கருணாநிதி போன்ற முதியவரை அவர் நள்ளிரவில் கைது செய்த முறையும், காவல்துறைக்கு அளித்த மிதமிஞ்சிய அதிகாரமும், அதனால் விளைந்த மனித உரிமை மீறல்களும் அவரது பிம்பத்தின் இருண்ட பகுதிகள். அவர் ஒரு ஊழல்வாதியா, சர்வாதிகாரியா, ஆணவம் மிக்கவரா, ஒரு சிறந்த கார்ப்பரேட் நிர்வாகியா, கனிவான மக்கள் தலைவரா? இதில் இன்னதே அவர் என உறுதிப்பட கூற இயலாது. ஆனால் கணிசமான எளிய மக்களின் அன்பைப் பெற்றவராக திகழ்ந்தார். அத்தனை குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் இந்த எளிய அன்புக்காக ஜெயா என்றும் நினைவுகூரப்படுவார். 

http://thiruttusavi.blogspot.co.uk/2016/12/blog-post_5.html?m=1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார்
இந்தியாவின் மகளாய் மறைந்தார்
கவிஞர் வைரமுத்து இரங்கல்

 

ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தின் முற்றுப்புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில் தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று காட்டியவர் வென்று காட்டியவர் தன் போராட்டத்தை முடித்துக்கொண்டுவிட்டார். மாண்டியா மாவட்டம் மேல்கோட்டையில் பிறந்தவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தன் நீண்ட வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார். 
 
அவர் செய்த சாதனைகள் இன்னொரு பெண்ணால் எட்டமுடியாதவை. ஒரு கலையரசி புவியரசி ஆக முடியுமென்றது ஒரு சாதனை. ஒரு நட்சத்திரம் நிலவாக நீண்டது ஒரு சாதனை. திராவிட இயக்கத்தின் ஒரு கிளையின்மீது ஒரு பிராமணப் பெண்மணி பேராதிக்கம் செலுத்தியது ஒரு சாதனை. கலையுலகில் ‘அம்மு’ என்று அறியப்பட்டவர், அரசியல் உலகில் ‘அம்மா’ என்று விளிக்கப்பட்டது ஒரு சாதனை. தமிழ்நாட்டிலிருந்து ஒரு ‘பிரதமர் வேட்பாளர்’ என்று தன்னைப் பிம்பப்படுத்தியது பெருஞ்சாதனை. 
 
போராட்டங்களால் சூழப்பட்டது அவரது வாழ்வு. ஆனால் எந்த நிலையிலும் அவர் தன் கர்வப்பெருமையைக் கரைத்துக்கொண்டதில்லை. மழையில் நனைந்தாலும் சாயம்போகாத கிளியின் சிறகைப்போல இழிவுகளுக்கு மத்தியிலும் அவர்தன் இயல்புகளை மாற்றிக்கொண்டதில்லை.
 
உறுதி என்பது அவர் உடன்பிறந்தது. ஒருமுறை கர்நாடகத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பின்போது, கன்னடப் போராளிகளால் சூழப்பட்டார். ‘கன்னடம் வாழ்க, தமிழ் ஒழிக’ என்று முழங்குமாறு வற்புறுத்தப்பட்டார். ‘கன்னடம் வாழ்க’ என்று சொன்னாலும் செல்வேனே தவிர எந்த நிலையிலும் ‘தமிழ் ஒழிக’ என்று கூறமாட்டேன் என்று துணிந்து நின்று வன்முறைக்கு நடுவிலும் வழிமாறாதவர் மொழிமாறாதவர் ஜெயலலிதா.
 
கலைத்துறையில் அவர் பதித்த தடங்கள் அழகானவை; அழியாதவை. அவரைத் தவிர யாரும் ஆடமுடியாது என்ற நடனங்களும், அவரைத் தவிர யாரும் நடிக்க முடியாது என்ற காட்சிகளும் அவருக்கே சொந்தம். ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் அவர் காட்டிய குணச்சித்திரம் கொண்டாடத்தக்கது. ‘மேஜர் சந்திரகாந்த்’ படத்தில் இறந்ததாக அவர் நடித்தபோது மரணத்திற்கே ஒரு செளந்தர்ய ஒய்யாரம் தந்திருப்பார். ‘ஆயிரத்தில் ஒருவனில்’ அவரது அழகு சந்தனச் சிலையா சந்திர கலையா என்று சொக்க வைக்கும்.
 
சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார்; இந்தியாவின் மகளாய் மறைந்தார். எல்லோர்க்கும் வாய்க்காது இந்தச் சரித்திரம். அவர் உயிரோடிருந்தபோது இந்தப் புகழ்மொழியைச் சொல்லமுடியாத சூழ்நிலையில் இருந்த நான், அவர் இறந்த பிறகு சொல்கிறேனே என்ற துயரம் இறப்பின் வலியை இருமடங்கு செய்கிறது.
 
மறைந்தும் மறையாத கலையரசிக்கு ஒரு ரசிகனாக என் அஞ்சலிப் பூக்களை அள்ளித் தெளிக்கிறேன். எனக்கே ஆறுதல் தேவைப்படும்போது நான் யாருக்கு ஆறுதல் சொல்வது?

http://www.nakkheeran.in/

  • கருத்துக்கள உறவுகள்

2urlfer.jpg

மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கட்கு அஞ்சலிகள்.

எனக்கு மிகவும் பிடித்த தலைவி அவர். அவர் மனம் வைத்தால் எதையும் செய்வார் என்பதால்.

ஆனால் எம்மக்களின் சுயநிர்ணயப்போராட்டத்தில் அவரின் சில சொற்கள் மறக்கமுடியாதன.

மன்னிக்கமுடியாதன. அந்த வலி எமக்கு என்றுமே உண்டு.

அதேநேரம் ஈழத்தமிழினம் எவரையும் பகைத்துக்கொள்ளும் நிலையிலில்லை. 


எம்மால் எவ்வாறு சில சொற்களின் வலிகளை பொறுக்கமுடியவில்லையோ

அதேபோல் மற்றவர் மனம் வலிக்கவும் நாம் எழுதக்கூடாது.
பல கோடி தமிழ் மக்களின் தலைவி அவர்.
சென்று வாருங்கள். அமைதி காணுங்கள்.

6.12.16.  ஜெயலலிதா அம்மையார்..

இறுதி ஊர்வலத்தைப் பார்க்கும்போது தானாகக் கண்ணீர் கசிகிறது.  இவ்வளவுதானா வாழ்க்கை ????. 
எத்தனையோ விமர்சனங்கள் அவர் மீது இருந்த போதிலும் இறுதிக் கட்டத்தில் அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு, அவர் பிரிவின் மீதான துன்பம் பீறிடுகிறது. 
தனியொரு பெண்ணாக, தனக்கெனக் குடும்பமற்றவராக அவர் வாழ்ந்தார் என்னும் உண்மை ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஆறாத் தணலாகப் போய் அமர்ந்திருக்கிறது. 
அதுவே தமிழகத்தின் சாதாரண மக்களிடையே அசைக்க முடியாத அன்பை அவர்மீது ஏற்படுத்தியிருக்கிறது. 
திரைப்படத் துறையிலும் அரசியலிலும் அவர் உண்மையான தாரகையேதான் ! தங்கத் தாரகை !. கால்வைத்த துறை எதுவாக இருந்தாலும், அதில் விருப்பமே இல்லாவிட்டாலும் கூட, அதில் துருவ விண்மீனாய் மின்னினார் என்றால் மிகையில்லை. 
முதல் கட்டம், இரண்டாம் கட்டம் தாண்டி மூன்றாம் கட்ட அரசியலில் அவரிடம் பெரும் மாற்றம் நிகழ்ந்திருந்தது. தனி ஈழத் தீர்மானம் உட்பட, கொள்கைகளில் 'யூ' திருப்பம் எடுத்தார். உடை, தோற்றம் உட்பட அனைத்திலும் ஆடம்பரங்களை அறவே களைந்தார். 
இனி தனக்கென வாழ எதுவுமில்லை, தனக்கு வாழக்கிடைத்த ஆண்டுகளெல்லாம் ஊக்க ஆயுளே என்று உணர்ந்து, மக்களுக்கான வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.  தமிழகத்தின் அரசியல் உரிமைகள் பறிபோகாமல் ஓரளவு அரணாக நின்றவர் !. 
இவரைப் போன்று இனியொரு பெண் ஆளுமை தமிழகத்தில் காணக் கிடைக்காது. 
      என்ன, அவர் அடைந்த உச்சக்கட்ட வாழ்நிலைக்கு இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சியோடு, உடல் நலத்தோடு, அவர் விரும்பியவை கிடைக்கப் பெற்றவையோடு இருந்திருக்கலாம். அந்த ஆதங்கம் நாம் பேச்சுப் பரிமாறிக் கொள்ளும் அனைவரிடமும் பொங்குகிறது. 
இத்தனை ஊசி,மருந்து, வலி, வேதனைகளோடுப் போராடித்தான் முடிவை அடைந்திருக்க வேண்டுமா ?. அப்படித்தான் விதிக்கப் பட்டிருந்ததா அவரது சிம்ம ராசிக்கு ?. 
அதிமுக அனுதாபியாகவோ, ஜெயலலிதாவின் ரசிகையாகவோ இல்லாத என் தாயார் நேற்றிலிருந்து தொலைக்காட்சி பார்த்துக் கண்ணீர் விட்டுக் கொண்டே இருக்கிறார். எனக்கும் கூட அதே உணர்வுதான். அவர் பிரிவு எனக்கு இவ்வளவு துன்பம் தருவதாக இருக்கும் என்று எண்ணியதேயில்லை. இன்னும் சில காலம் இருந்திருக்கலாம் என்கிற ஆதங்கமே ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் இல்லாத தமிழகம் வெறுமையாக இருப்பது போல் தோன்றுவது ஏன் ?. 
கூடுதலாக, அவரை நேசித்த பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களுக்குக் கடைசியாக எதுவும் சொல்லாமல் போய் விட்டாரே !. 

     எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்த வார்த்தைகள் தொண்டைக்குழி தாண்டுமுன் காலன் குறுக்கே வந்து விட்டானோ....
   இறுதி நிமிடத்தில் என்ன நினைத்தீர்கள் அம்மையீர் ?.... 

   #போய்வாருங்கள்அம்மையீர் !...  தமிழகத்தின் வரலாற்றில் தங்கத் தாரகையாக என்றென்றும் வீற்றிருப்பீர் ! 

பிகு :  இறுதி அஞ்சலி செலுத்தச் சென்று கூட்டத்தில் சிக்கி உடல்நலக் குறைவு ஏற்பட்டுத் திரும்பி விட்டேன்... ஒருவேளை உங்களை அந்த சாய்ந்த நிலையில் காண விரும்பவில்லை என்ற உள்மனதின் குரல் வெளியே கேட்டிருக்குமோ !!!!...

தாமரை

6.12.16.  ஜெயலலிதா அம்மையார்..

இறுதி ஊர்வலத்தைப் பார்க்கும்போது தானாகக் கண்ணீர் கசிகிறது.  இவ்வளவுதானா வாழ்க்கை ????. 
எத்தனையோ விமர்சனங்கள் அவர் மீது இருந்த போதிலும் இறுதிக் கட்டத்தில் அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு, அவர் பிரிவின் மீதான துன்பம் பீறிடுகிறது. 
தனியொரு பெண்ணாக, தனக்கெனக் குடும்பமற்றவராக அவர் வாழ்ந்தார் என்னும் உண்மை ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஆறாத் தணலாகப் போய் அமர்ந்திருக்கிறது. 
அதுவே தமிழகத்தின் சாதாரண மக்களிடையே அசைக்க முடியாத அன்பை அவர்மீது ஏற்படுத்தியிருக்கிறது. 
திரைப்படத் துறையிலும் அரசியலிலும் அவர் உண்மையான தாரகையேதான் ! தங்கத் தாரகை !. கால்வைத்த துறை எதுவாக இருந்தாலும், அதில் விருப்பமே இல்லாவிட்டாலும் கூட, அதில் துருவ விண்மீனாய் மின்னினார் என்றால் மிகையில்லை. 
முதல் கட்டம், இரண்டாம் கட்டம் தாண்டி மூன்றாம் கட்ட அரசியலில் அவரிடம் பெரும் மாற்றம் நிகழ்ந்திருந்தது. தனி ஈழத் தீர்மானம் உட்பட, கொள்கைகளில் 'யூ' திருப்பம் எடுத்தார். உடை, தோற்றம் உட்பட அனைத்திலும் ஆடம்பரங்களை அறவே களைந்தார். 
இனி தனக்கென வாழ எதுவுமில்லை, தனக்கு வாழக்கிடைத்த ஆண்டுகளெல்லாம் ஊக்க ஆயுளே என்று உணர்ந்து, மக்களுக்கான வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.  தமிழகத்தின் அரசியல் உரிமைகள் பறிபோகாமல் ஓரளவு அரணாக நின்றவர் !. 
இவரைப் போன்று இனியொரு பெண் ஆளுமை தமிழகத்தில் காணக் கிடைக்காது. 
      என்ன, அவர் அடைந்த உச்சக்கட்ட வாழ்நிலைக்கு இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சியோடு, உடல் நலத்தோடு, அவர் விரும்பியவை கிடைக்கப் பெற்றவையோடு இருந்திருக்கலாம். அந்த ஆதங்கம் நாம் பேச்சுப் பரிமாறிக் கொள்ளும் அனைவரிடமும் பொங்குகிறது. 
இத்தனை ஊசி,மருந்து, வலி, வேதனைகளோடுப் போராடித்தான் முடிவை அடைந்திருக்க வேண்டுமா ?. அப்படித்தான் விதிக்கப் பட்டிருந்ததா அவரது சிம்ம ராசிக்கு ?. 
அதிமுக அனுதாபியாகவோ, ஜெயலலிதாவின் ரசிகையாகவோ இல்லாத என் தாயார் நேற்றிலிருந்து தொலைக்காட்சி பார்த்துக் கண்ணீர் விட்டுக் கொண்டே இருக்கிறார். எனக்கும் கூட அதே உணர்வுதான். அவர் பிரிவு எனக்கு இவ்வளவு துன்பம் தருவதாக இருக்கும் என்று எண்ணியதேயில்லை. இன்னும் சில காலம் இருந்திருக்கலாம் என்கிற ஆதங்கமே ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் இல்லாத தமிழகம் வெறுமையாக இருப்பது போல் தோன்றுவது ஏன் ?. 
கூடுதலாக, அவரை நேசித்த பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களுக்குக் கடைசியாக எதுவும் சொல்லாமல் போய் விட்டாரே !. 

     எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்த வார்த்தைகள் தொண்டைக்குழி தாண்டுமுன் காலன் குறுக்கே வந்து விட்டானோ....
   இறுதி நிமிடத்தில் என்ன நினைத்தீர்கள் அம்மையீர் ?.... 

   #போய்வாருங்கள்அம்மையீர் !...  தமிழகத்தின் வரலாற்றில் தங்கத் தாரகையாக என்றென்றும் வீற்றிருப்பீர் ! 

பிகு :  இறுதி அஞ்சலி செலுத்தச் சென்று கூட்டத்தில் சிக்கி உடல்நலக் குறைவு ஏற்பட்டுத் திரும்பி விட்டேன்... ஒருவேளை உங்களை அந்த சாய்ந்த நிலையில் காண விரும்பவில்லை என்ற உள்மனதின் குரல் வெளியே கேட்டிருக்குமோ !!!!...

தாமரை

FB_IMG_1481107051482.jpg

ஒரு சீன பழமொழி ஒன்று உண்டு -

" ஒரு ராஜா வின் நாய் இறந்ததற்கு , அவரின் மந்திரிகள் கதறி கதறி அழுதனராம் ...ஆனால் அந்த ராஜா இறந்த போது ஒரு மந்திரி கூட ஒருதுளி கண்ணீர் சிந்தவில்லையாம்"

இறுதி ஊர்வலத்தையும் இறுதி மரியாதையையும் பார்த்தபோது எனக்கு இது தான் தோண்றியது !

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கைதாகி அவர் சிறை சென்ற போது , பார்த்த அந்த கதறல் குமுறல் , இன்று அவரின் இறுதி ஊர்வலத்திலோ  குழிக்குள் இறங்கும் போதோ எங்கும் தென்படவில்லை ...

பூத உடல் கடைசியாக தென்படும் போது , சுற்றி ஒரு நாலு பேர்கூட கண்ணீர் விட்டு கதறவில்லை என்று நினைக்கும் போது சற்றே மனது வலிக்கிறது .... "இப்பவாது யாராவது அழுவுங்க டா ...இந்தம்மா இதுக்காகவாது ஒரு குடும்பம் புள்ள குட்டி னு வாழ்ந்திருக்கணும்" என்று என் தாய்  டிவியை பார்த்தபடி சொன்னபோது, அவரின் நா தழுதழுத்திருந்தது ... உலகமே வியக்கும் படி வாழ்ந்த அந்த இரும்பு தலைவிக்கும் சொல்லப்படாத வலிகளும் ஏராளம் இருந்திருக்கும் !!

சுற்றியிருப்பவர்களை விட தூரத்தில் அழும் மூதாட்டிகளில் ஒரே ஒருவரை அந்த கடைசி நொடிகளிலாவது அழைத்து வந்து அருகே விட்டிருந்தால் , அந்த இரும்பு மனிதியின் பூத உடல் இன்னும் நன்றாக உறங்க சென்றிருக்கும் !!

போய் வாருங்கள் அம்மா ... இந்த மூதாட்டி போல் எத்தனை எத்தனையோ பேரின் உண்மையான அஞ்சலி உங்களை வந்து சேரும் !!

One Final Salute To One Incredible Lady !!

-ரா.ராஜகோபாலன்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

"இன்னும் சில காலம் இருந்திருக்கலாம் என்கிற ஆதங்கமே ஓடிக் கொண்டிருக்கிறது"

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சக மனிசியாக அஞ்சலிகள்.

ஆனாலும்.. 1991 இல் எம் இளைஞர்கள்.. தமிழக வீதிகளில் வீடுகளில் பிணமாகக் கிடந்ததை மறக்க முடியவில்லை. அதிலும் முள்ளிவாய்க்கால் நேரத்தில்.. போர் என்றால் ஆக்கள் சாகத்தான் செய்வினம் என்ற அம்மையாரின் வியாக்கியானம்.. ஈழத்தமிழர்கள் அல்ல.. இலங்கைத் தமிழர்கள் என்ற கண்டுபிடிப்புக்கள்.. மனித சாவுகளில் கூட.. சாதாரண மனிதாபிமானத்தைக் கூட இவர்கள் தொலைக்கக் கூடியவர்கள் என்பதைக் காட்டி நின்றது. இவர்களை எல்லாம்.. தலைவர்களாக ஏற்றுக் கொண்ட நடிகைப் பைத்தியமான மக்களைச் சொல்லனும். 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்....! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.