Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மா - சிறுகதை

Featured Replies

அம்மா - சிறுகதை

வழக்கறிஞர் சுமதி, ஓவியங்கள்: ம.செ.,

 

p100f.jpg

 

னக்குக் கல்யாணம். மாப்பிள்ளை பிடித்திருக்கிறது. அப்பா எனக்காக ரொம்பப் பிரயத்தனப்பட்டு இந்த மாப்பிள்ளையைத் தேடிக் கண்டுபிடித்தார். நல்ல படிப்பு - பெரிய வேலை, பெரிய படிப்பு - நல்ல வேலை என்ற வழக்கமான தேடல் தளங்களுக்குப் போகாமல், நான், என் ரசனை, என் எதிர்பார்ப்பு; அதுபோலவே மாப்பிள்ளை, அவர் ஆசைகள், கற்பனைகள் எல்லாவற்றையும் அலசித் தேடிப்பார்த்து எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தினார். நாங்கள் தீவிரமாக நம்பும் விஷயங்கள், எந்தக் காரணத்தைக்கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாத எங்கள் விருப்பங்கள் மற்றும் எங்கள் லட்சியங்களை ஒளிவு மறைவு இல்லாமல் பேசச் சொன்னார். நாங்கள் இருவரும் தேவைகளுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ப, வளைந்துகொடுக்கும் ஒரே அலைவரிசையில் இருந்தோம் என்பதை உணர்ந்து, அப்பாவிடம் சொன்னபோது கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தார்.

அப்பா, எதைச் செய்தாலும் திருத்தமாக இருக்கும். அவரை நினைக்கும்போது எனக்கு அவர் செய்த ஒவ்வொரு விஷயமும் ஞாபகம் வரும். எனக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும், தினமும் என்னை அவர் பக்கத்தில் ஒரு குட்டி நாற்காலியில் அமரவைத்து நியூஸ் பேப்பரைப் படித்துவிட்டு, அதை எனக்குக் கதை மாதிரி சொல்லிச் சொல்லிப் புரியவைப்பார். கடினமான தமிழ் - ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லிக்கொடுத்து அதை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதவைப்பார்.

எம்.பி.ஏ., படித்துவிட்டு பெரிய நிறுவனம் ஒன்றில் பொது மேலாளராக அவர் இருந்ததால், மிக நாகரிகமாக உடை அணிவார். தலை வாரிக்கொள்வதில் இருந்து, ஷூ போடுவது வரை ரசனை, ரசனை. எல்லாமே அப்பாவுக்கு ரசித்துச் செய்ய வேண்டும். எப்போது ஹோட்டலுக்குப் போனாலும் நாகரிகம் மாறாது. அப்பா நடப்பது, உணவு ஆர்டர் கொடுப்பது, அதைச் சாப்பிடும்போது ஃபோர்க், கத்தி, ஸ்பூன் என்று அவர் லாகவமாக அதைப் பயன்படுத்துவது எல்லாமே கவிதையாக இருக்கும்.

p100e.jpg

எனக்கு அப்பா மேல் அப்படி ஒரு பிரமிப்பு. அவரால் மேல்நாட்டு சங்கீதத்தையும் பேச முடியும்; கர்னாடக சங்கீதத்தையும் ரசிக்க முடியும். இந்துஸ்தானிக் கலைஞர்களைப் பற்றியும் துல்லியமாகத் தெரிந்துவைத்திருந்தார். கதைகள் என்று வந்துவிட்டால் லா.ச.ரா., ஜெயகாந்தன், கல்கி, தி.ஜானகிராமன் என்று நிறுத்திக்கொள்ளாமல், சமகால எழுத்தாளர்களையும் வாசிப்பார். அதே மாதிரி ஆங்கிலத்தில் சகலரையும் வாசிப்பார். அப்பா... தமிழ், ஆங்கிலம், இந்தி, சம்ஸ்கிருதம், மலையாளம், கன்னடம் என்று எல்லா மொழிகளிலும் எழுத, படிக்க, பேசக் கற்றுவைத்திருந்தார். இப்படிப்பட்ட அப்பாவைப் பார்த்தால் எப்படி பிரமிப்பு இல்லாமல் இருக்கும்? அந்தப் பிரமிப்பினால்தான் நான் எப்போதும் அப்பா பின்னாடியே சுற்றி அலைந்தேன். அப்பாவின் கம்பீரமே தனி.

அம்மா ஒரு கேரக்டர். உழைப்பாளி. எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வாள். ஆனால், அவளுக்கும் அப்பாவுக்கும் கொஞ்சம்கூட பொருந்தாது. அம்மா, நன்றாகச் சமைப்பாள். ஆனால், அப்பாவுக்குப் பிடித்தாற்போல் அதை அழகுபட எடுத்துவைத்துப் பரிமாறவெல்லாம் அவளுக்குத் தெரியாது. வாரத்துக்கு ஒருமுறை மார்க்கெட்டுக்குப் போய், இரண்டு பெரிய பை நிறையக் காய்கறிகளை வாங்கிக்கொண்டு மூச்சிரைக்கத் தூக்கியபடி வீட்டுக்குள் நுழைவாள். நடுக்கூடத்தில் அந்த மூட்டையைக் கொட்டி காய்கறிகளைப் பிரிப்பாள். அப்போது அவள் கண்களில் அப்படி ஒரு சந்தோஷம் மின்னும்.

p100d.jpg

என்னைப் பார்த்து, ''குடிக்கத் தண்ணீர் கொடேன்...'' என்று குழந்தை மாதிரி கட்டை விரலை உயர்த்திக் கேட்பாள். தண்ணீரைச் சொம்பு நிறைய எடுத்து அதை மடக் மடக்கென்று குடித்துவிட்டு, நடுக்கூடத்தில் ஃபேனை போட்டுக்கொண்டு அசதியில் படுப்பாள். பாதித் தண்ணீர், புடவை மேல் கொட்டியிருக்கும்.

அப்பாவுக்கு, அம்மாவின் இதுமாதிரியான நடவடிக்கைகள் சுத்தமாகப் பிடிக்காது. ''ஏன் இந்தத் தண்ணீரை நாசூக்காகக் குடிக்கத் தெரியவில்லை. காபி குடித்தாலும் இப்படித்தான். புத்தகம் - சொல்லவே வேண்டாம். சுத்தமாகப் படிப்பது கிடையாது. கோணல்மாணலாக நியூஸ் பேப்பரைப் பிரித்துப் படிப்பதோடு சரி. பாட்டுக்கும் அவளுக்கும் தொடர்பே இல்லை. ஐயோ! சினிமா பாட்டைக்கூட ரசிக்காத என்ன பிறவியோ?'' என்று அப்பா சலித்துக்கொள்வார்.

அம்மா, என்னிடம் ஆசையாகத்தான் இருப்பாள். ஆனால், சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்துவாள். பள்ளி நாட்களில் தலையில் பேன் விழுந்துவிட்டால், தலை வலிக்க வாருவாள். நான் முரண்டுபிடிப்பேன். எனக்கும் அவளுக்கும் சண்டை வந்துவிடும். நான் அழுதுகொண்டே அப்பாவிடம் போவேன். ''இல்ல... நிறைய பேன் இருக்கு - அதான்'' என்று அம்மா பயந்தபடியே சொல்வாள். அப்பா, அவளை முறைத்துவிட்டு எனக்கு ஏதோ சமாதானம் சொல்வார். 'அப்பாவுக்குத்தான் என் மேல் எத்தனை ஆசை’ என்று நான் நினைத்துக்கொள்வேன்.

நான், நான்காவது படிக்கும் வரை இதுபோல் நிறைய சம்பவங்கள். எல்லாவற்றிலும் அம்மாவும் அப்பாவும் தனித்தனித் தீவுகளாகவே இருந்தார்கள். ஆனால், அம்மா அப்பாவிடம் அளவுக்கு அதிகமான பயம்கொண்டிருந்தாள். அப்பா, அம்மாவை அடியோடு வெறுத்தார். அவர்களுக்குள் என்ன பிரச்னை என்று எனக்குத் தெரியவில்லை. திடீரென்று, என்னுடைய நான்காம் கிளாஸ் லீவில் அப்பா என்னை அழைத்துக்கொண்டு தனியாக ஒரு வீட்டுக்கு வந்துவிட்டார். இதற்கு எல்லாம் என்ன காரணம் என்று எனக்குப் புரியவே இல்லை. அப்பாவிடம் கேட்க வேண்டும் என்ற துணிவு எனக்கு இப்போது வரை வந்ததே இல்லை. அப்பாவிடம் அதைப் பற்றி கேட்டால்கூட அப்பா வருத்தப்படுவாரோ என்று எனக்குள் ஓர் அச்சம் இருந்தது.

p100c.jpgஎன்னைப் பொறுத்தவரை அப்பா சொக்கத்தங்கம். எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்தார். படிப்பு, சாப்பாடு, பொழுதுபோக்கு எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார். ஆனால், அம்மாவைப் பிரிந்து வந்தவுடன் எனக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது அவர் அலுவலகத்துக்குப் போகாமல் என்கூடவே ஒரு வாரம் இருந்து பார்த்துக்கொண்டார். அப்பாவின் அன்பில் நான் கரைந்து போனேன். அம்மாவை நினைத்து ஏங்குவதும் எப்படியோ என்னிடம் மறைந்துபோனது.

கல்யாணம் முடிவாகி பத்திரிகை அச்சடிக்கும் சூழல் வந்தபோதுதான் நான் அம்மாவை நினைத்தேன். அப்படி நினைத்த நொடி, எனக்கே என் மேல் ஒரு வெறுப்பு வந்தது. 'ச்சே... இப்போதும் என்னை முன்னிறுத்தித்தானே அம்மாவை நினைக்கிறேன். நான் ஏன் இப்படி இருக்கிறேன்? உள்ளூரில் இருந்துகொண்டு நான் ஏன் அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கவே இல்லை? அம்மாவுக்கு அழகியல் உணர்ச்சியும் ரசனையும் இல்லாமல்போனது அவ்வளவு பெரிய குற்றமா?’

பள்ளிக்கூடத்துக்குப் புறப்படும்போது அம்மா எனக்கு முத்தம் கொடுப்பாள். அப்பா அதைப் பார்த்துக் கோபப்படுவார். ''குளிச்சியா? எதுக்கு அழுக்கா ஒரு முத்தம்? போற நேரத்துக்கு'' என்று அம்மாவை அழுத்தமாக, சன்னமான குரலில் கேட்பார். அம்மாவின் கண்கள் கலங்கிவிடும். ''எல்லாத்துக்கும் ஓர் அழுகை... ச்சே!'' என்று சொல்லிக்கொண்டே, தன் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருக்கும் கர்ச்சீப்பால் அம்மாவின் முத்தத்தைத் துடைப்பார். பிறகு, என்னை அழைத்துக்கொண்டு பள்ளிக்கூட வாசலில் விட்டுவிட்டு ஒரு முத்தத்தை தன் கைகளில் வைத்து என்னைப் பார்த்து அதை ஊதுவார். அவர் அப்படி ஸ்டைலாக ஊத, நான் காற்றில் மிதக்கும் அந்த முத்தத்தைப் பெற்றுக்கொண்டு என் யூனிஃபார்ம் ஜோபிக்குள் போட்டுக்கொள்வேன். அந்தச் சம்பவம் ஏனோ இப்போது நினைவுக்கு வந்தது. அம்மாவை இத்தனை நேரம் ஏன் நினைத்துக்கொண்டேன் என்று தெரியவில்லை.

ன்று மாலை அப்பா கல்யாணப் பத்திரிகையைக் கொண்டுவந்தபோது எனக்கு மனசெல்லாம் கனத்துவிட்டது. அம்மா, அந்தப் பத்திரிகையில் இல்லை. நானும் அம்மாவும் பிரிந்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டாலும், அம்மாவை இந்த நேரத்தில் மறக்கமுடியாமல் வலித்தது. அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்று வாயெடுத்தும் துணிவு இல்லாமல் ஓரிருமுறை துடித்துப்போனேன்.

ன்று இரவு அப்பா தூங்கப்போன பின், என் சிறு வயதுப் புகைப்படங்களை எடுத்துவைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அம்மா, ஒரு போட்டோவில்கூட இல்லை. பழைய நினைவுகள் என்னை என்னமோ செய்தன. அப்பா, உள்ளூரில் இருந்தால் நான் அவரோடுதான் தூங்குவேன். அவர் வேலை நிமித்தமாக வெளியூர் போனால், அம்மாவோடுதான் படுக்கை. அம்மா தூங்கும்«பாது கதை சொல்வாள். கட்டையாக இருக்கும் அவள் குரலில் கிசுகிசுப்பாக 'சித்திரக்குள்ளன்’ என்ற ஒருவனை சிருஷ்டித்து, பலப்பல கதைகள் சொல்வாள். அவன் வரும்போது எல்லாம் ஒரு பின்னணி இசை கொடுப்பாள். அவள் கதைகள் சொல்லித் தூங்கும்போது, சுகமாக இருக்கும். அப்பா, திரும்பி வந்தவுடன் சித்திரக்குள்ளன் கதை நின்றுவிடும். அம்மாவோடு தூங்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும், சொல்லமுடியாமல் இருந்துவிடுவேன். அப்பா வந்துவிட்டால், அம்மாவும் இறுகிப்போய் விடுவாள். பயம்... பயம்! அப்படி ஒரு பயம் அப்பாவிடத்தில். அம்மாவை அன்று இரவு முழுக்க நினைத்து அழுதேன்.

காலையில் என் முகத்தைப் பார்த்த அப்பா, ''ஏம்மா... உடம்பு சரியில்லையோ?'' என்றார். அவரிடம் தப்பித்துக்கொள்ள ''ஆமாம்பா. ரொம்ப வாந்தி எடுத்திட்டேன்'' என்றேன்.

p100b%281%29.jpg

அப்பா பதறிப்போய் 'ஃபுட் பாய்சன் ஆகியிருக்கும்; ஆனா, வேண்டாதது வெளிய வந்ததே நல்லது. வா... ஒரு நடை டாக்டரிடம் போகலாம்'' என்றார்.

''இல்லப்பா, இப்ப உள்ள ஒண்ணும் இல்லை. எனக்கு வேண்டியது மட்டும்தான் இருக்கு'' என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன்.

ப்பா, எல்லோருக்கும் பத்திரிகை கொடுக்கத் தொடங்கினார். ஒரு வாரம் ஆகியிருக்கும். அன்று மதியம், வீட்டுக்கு ஒரு கூரியர் தபால் என் பெயருக்கு வந்தது. பெரிய பார்சல். விலாசம் கோணல்மாணலான எழுத்தில் தமிழில் எழுதப்பட்டிருந்தது. அந்த பார்சலைப் பிரித்தபோது ஒரு கவர் அதே எழுத்தில் அதற்குள் இருந்தது. உள்ளே சின்னச் சின்னதாகப் பல கலர் பேப்பர்களில் சுற்றியிருந்த பெட்டிகள் இருந்தன. கவரைப் பிரித்து உள்ளே இருந்த கடிதத்தைப் படிக்கத் தொடங்கினேன்.

'அன்புள்ள சும்மி குட்டிக்கு,

அம்மா ஆசீர்வாதத்துடன் எழுதுவது. உனக்குக் கல்யாணம் என்று கேள்விப்பட்டேன். பக்கத்து வீட்டு புஷ்பாதான் சொன்னாள். பத்திரிகையையும் காட்டினாள். 'மாமி உங்க பொண்ணு சுமித்ராவுக்குக் கல்யாணம் போலயிருக்கு. பத்திரிகை வந்திருக்கு. என்ன அநியாயம் பாருங்க; உங்க பேரே இல்லாம அந்த மனுஷன் இப்படி ஒரு பத்திரிகையைப் போட்டுருக்கார்’ என்று சொல்லிக்கொண்டே வந்து பத்திரிகையைக் காட்டினாள். அவ சொன்னத விடு. பத்திரிகை ரொம்ப அழகா இருக்கு. பையனும் நல்லா இருப்பான்னு நினைக்கிறேன். உனக்குப் புடிச்ச மாதிரியே பையனுக்கும் உன்னைப் புடிச்சிருக்கானு தெரிஞ்சுக்கோடா கண்ணு. உன் கல்யாணத்தைப் பார்க்கணும்னு ஆசை. நான் அங்கே வந்தா, உங்கப்பாவுக்கு ரொம்ப அவமானமாப்போயிரும். உனக்கும் சங்கடம். நான் வர மாட்டேன். என்னமோ உங்கிட்ட ஒரு வார்த்தை பேசணும், உனக்கு ஏதாவது குடுக்கணும்னு தோணித்து... அதான்.

அப்பா, என்னைப் பொண்ணு பார்க்க வந்தபோது நானும் ரொம்பக் குஷியாயிட்டேன். உங்க அப்பா மாதிரி படிச்ச, பதிவிசா இருக்கிறவரை எந்தப் பொண்ணுக்குத்தான் பிடிக்காது. உங்கப்பா, அவர் அம்மா சொல்லை மீறாதவர். அவர் அம்மா என்கிட்ட, 'அது தெரியுமா... இது தெரியுமா’னு எதுவுமே கேட்கலை. அவளுக்கு என்னவோ என்னை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. கல்யாணம் பண்ணப் பிறகுதான், அப்பா, அவர் அம்மா சொல்லை மீற முடியாம என்னைக் கல்யாணம் பண்ணியிருக்கார்னு புரிஞ்சது. ஆனா, நான் கல்யாணத்துக்கு முன்னாடியே யோசிச்சிருக்கணும். என்னை மாதிரி பார்க்க ரொம்ப சுமாரா இருக்கிற ஒரு பொண்ணு, பெரிய வெளியுலக அறிவெல்லாம் இல்லாதவளை எப்படி உங்கப்பாவுக்குப் பிடிக்கும்னு. பொண்ணு பார்த்தபோது நான் சந்தோஷப்பட்ட மாதிரியே உங்க அப்பாவும் சந்தோஷப்பட என்கிட்ட ஒரு விஷயமும் இல்லைனு நான் யோசிக்கலையோ? அதனாலதான் எல்லாம் தப்பாயிடுச்சு.

அப்பாவுக்கு என்னோட இருக்கிறது ஓர் ஆயுள் தண்டனை மாதிரி ஆகிடுச்சு. அவர் அம்மா இருந்த வரைக்கும் என்னைப் பொறுத்துப் போனார். அப்போ உனக்கு இரண்டு வயசுகூட இருக்காது. பாட்டி செத்துப்போனாங்க. அதற்குப் பிறகு எனக்கும் அப்பாவுக்கும் நடுவுல பெரிய பள்ளம். நான் சாதாரணப் பொண்ணு. வேலை பண்ணுவேன். சத்தியமா இருப்பேன். மத்தபடி நீக்குப்போக்கெல்லாம் தெரியாது. ஆனால், அப்பாவுக்கு என்கூட இருக்கிறது நரகமா இருந்ததுபோல. அவருக்கு இருந்த ரசனை, ஞானம், அழகியல் உணர்ச்சி எல்லாம் எனக்கு இல்லையேனு உடைஞ்சுபோயிட்டார். உன்னை எடுத்துக் கட்டிண்டு ஆசைல காட்டுத்தனமா நான் கொஞ்சினாக்கூட, அவருக்குக் கோபம் வரும். உனக்கு நான் முத்தா குடுத்தாக்கூட, அவருக்குப் பிடிக்காது. ஏதோ இன்ஃபெக்ஷன் ஜெர்ம்ஸ்னு கத்துவார்.

கடைசியா ஒருநாள் உன்னைக் கூட்டிண்டு போயே போயிட்டார். இதோ இப்ப வரைக்கும் மாசாமாசம் என் சாப்பாட்டுக்குப் பணம் அனுப்புறார். எனக்கும் வேற கதி இல்லே. வக்கத்துப்போய் நானும் வாங்கிக்கிறேன். ஏனோ அதை நினைச்சா, துக்கமா இருக்கு. உங்கப்பா வேற ஒரு கல்யாணம் பண்ணியிருந்தாக்கூட எனக்கு சமாதானம் ஆகியிருக்கும். இப்படி இருந்ததுதான் எனக்குப் பெரிய தண்டனை. இதோ இப்பவரைக்கும் அவருக்குப் பிடிச்ச மாதிரி வாழறேனானு தெரியாது. இப்ப கொஞ்சம் புஸ்தகம் படிக்கிறேன்; பாட்டுக் கேட்கிறேன். அவர் நினைக்கிறது எனக்கு வரலை. ஆனால், எந்தவிதத்திலும் நான் அவர் வழிக்குப் போகாம ஒதுங்கியிருக்கேன். மனசுல இருந்ததை உன்கிட்ட சொல்லத் தோணித்து. இந்தப் பார்சலை உனக்கு அனுப்பணும்னு தோணித்து.

நான் சொல்ற மாதிரி ஒண்ணொண்ணாப் பிரியேன் - மொதல்ல அந்த நீலக் கலர் பேப்பர் சுத்தின டப்பாவைப் பத்திரமாப் பிரி. அதுக்குள்ளே இருக்கிறது என்ன தெரியுமா? உன் குட்டிக் குட்டிப் பல்லு. உன்னைப் பார்க்கணும்னு தோணும்போதெல்லாம் இந்தப் பல்லைத்தான் பார்த்துப்பேன். உன் நடுப்பல்லு விழுந்தவுடனே நீ ரொம்ப அழுத. நான் உன்னை அடிக்கடி 'ப்ரிட்ஜ் ப்ரிட்ஜ்’னு உன் ஓட்டைப்பல்லைப் பார்த்துக் கேலி பண்ணா, கோவிச்சுண்டு ரூம் ஓரத்துல போய் மொறைச்சுண்டு மூலையில நிந்துப்பே. உன் ரெட்டைப் பின்னலும், ஃப்ரில் வெச்ச சொக்காவும், ரிப்பனும் இப்பவும் அப்படியே மனசுல இருக்கு. ரொம்ப நேரம் நின்னுட்டு அப்படியே உட்கார்ந்து தலையச் சாய்ச்சுத் தூங்கிடுவ. உன்னைத் தூக்கிண்டு போய்ப் படுக்கவெச்சா, எழுந்ததும் 'ஏன் தூங்கவெச்சே?’னு கேட்டு மறுபடியும் அழுவ. அப்பா வருவதற்குள் உன்னைச் சமாதானம் செய்யப் போதும் போதும்னு ஆயிரும்.

p100a.jpg

அப்படியே அந்த ரோஸ் கலர் டப்பாவைப் பிரிச்சுப் பாரு. அதுதான் இப்ப நான் சொன்ன விஷயம் நடந்தபோது நீ போட்டிருந்த ஃப்ரில் வெச்ச சட்டை, ரிப்பன் எல்லாம். அப்புறம், அந்த மஞ்சள் கலர் பாக்கெட் ஒண்ணும் இருக்கும் பார்... அது தொடும்போதே மெத்துன்னு இருக்குல்ல; உள்ள பாரேன். நீ மொதமொதல்ல ஒரு பக்கமாத் திரும்பிப் படுத்தபோது உனக்கு வெச்ச குட்டித் தலைகாணி அது. உனக்கு அப்போ சுருட்டைச் சுருட்டையாத் தலைமுடி இருக்கும். கன்னமெல்லாம் உப்பி அந்தக் கூளித் தலைமுடியோட பக்கவாட்டுல திரும்பி கையை வாய்ல போட்டு சொத்து சொத்துன்னு சத்தம் போட்டுண்டுருப்பே. அழகா இருப்பே. சில சமயம் ஆசை தாங்காம உன் கன்னத்தைக் கொஞ்சமாக் கடிச்சிடுவேன். காட்டுக் கொஞ்சல்தான். ஆசை தாங்காமத்தான். லேசாத்தான் கடிப்பேன். ஆனா, நீ ஓன்னு அழுதுடுவே. அப்பா முறைப்பார். திட்டு விழும். அப்புறம் இரண்டு நாளுக்கு உன்கிட்ட வரவே விட மாட்டார். காவல்காரன் மாதிரி சுத்திச் சுத்தி வருவார்.

சரி, அதுல ஒரு பச்சைக் கவர் இருக்கே... அது ரொம்ப விசேஷம். அதைப் பிரியேன். அதுக்குள்ள ஒரு வெள்ளை வேட்டி இருக்கா. உம்! அது வேட்டி இல்லை. அப்பாவோட அங்கவஸ்திரம். அதுலதான் உனக்குக் குட்டிக் கிருஷ்ணர் வேஷம் போட்டு வேட்டி கட்டிவிட்டேன். அந்த வேட்டியில் உன் வாசனை, அப்பா வாசனை ரெண்டும் இப்பவும் இருக்கும். அதுகூட ஒரு முத்துமாலையும் ஒரு பவழ மாலையும் இருக்கா. அதுதான்டா எங்கிட்ட இருந்த ரெண்டே விலையுள்ள பொருள்கள். உனக்கு அழகா சிவப்பு, வெள்ளைனு மாறி மாறிப் புருவத்துல பொட்டுவெச்சு, நாமம் போட்டு அதுக்கு ஏத்தமாதிரி இந்த ரெண்டு மாலையும் போட்டுவிடுவேன்.

ஒரு குட்டிக் கொண்டையும் மயில் தோகையும் இருக்கா? அதுகூட நான் உனக்கு அப்ப வெச்சுவிட்டதுதான். அதுல இருக்க சின்னப் பவுடர் டப்பாவும் பஃப்பும் நீ பொறந்த உடனே வாங்கினது. அதுல உனக்குப் போட்டு மிச்சம் உள்ள பவுடர் கொஞ்சம் சேத்துவெச்சிருந்தேன். அதுல பவுடர் வாசனையோட உன் வாசனைதான்டா அதிகமா இருக்கும்.

குட்டிக் கண்ணு... வெள்ளைக் கலர் கவர் ஒண்ணு இருக்கா? அதுக்குள்ள ஒரு போட்டோ இருக்கும் பார்’. ஆர்வமாக எடுத்தேன். 'நீயும் நானும் இருக்கும் ஒரே போட்டோ இதுதான். இத உனக்கு அனுப்பலாமா... நானே வெச்சிக்கலாமானு ரொம்ப யோசிச்சேன். ஏன்னா, இதைத் தவிர வேறே எதுவுமே உன் உருவம்னு எங்கிட்ட இல்லை. அப்புறம் இதை உன்கிட்டேயே p100.jpgகுடுத்துடணும்னு தோணித்து. என் போட்டோவே உன்கிட்ட கிடையாதுல்ல? அதான் உன்னை நினைச்சிண்டாலே, எனக்குப் போதும்; போதும். இந்தப் போட்டோவைக்கூட அப்பாகிட்ட ரொம்ப கெஞ்சிக் கேட்டு எடுத்துண்டேன். உன் அழகான முகத்துக்குப் பக்கத்துல என்னைச் சேத்து வெச்சுப் பார்க்கவே அப்பாவுக்குப் பொறுக்கலே. எனக்கு அதைப் புரிஞ்சிக்க முடியுது. ஆனா, அன்னிக்கு யார்கிட்டயும் காட்ட மாட்டேன்னு சத்தியம் பண்ணி அடம்புடிச்சு நான் எடுத்துண்ட போட்டோதான் அது. இதுவரைக்கும் யாருக்கும் காட்டினது இல்ல. நீதான் ஃபர்ஸ்ட். யார்கிட்டயும் காட்டிடாதே. ப்ளீஸ்.

என்கிட்ட இருந்த எல்லாத்தையும் கொடுத்திட்டேன். ஆனா, என்னைக் கொடுத்து உங்க அப்பாவைக் கஷ்டப்படுத் திட்டேன். அதை நினைச்சாத்தான் மனசுக்குப் பாரமா இருக்கு. அதற்குப் பலனை இப்பவே அனுபவிச்சிட்டேன்னு நெனைக்கும்போது, நிம்மதியாகவும் இருக்கு. சரி, இதெல்லாம் இப்போ எதுக்கு? பத்திரமா இரு. சந்தோஷமா இரு. சௌக்கியமா இருடா சும்மி குட்டி.’

அன்புடன்

அம்மா

ந்தப் பார்சலை நான் இறுக்கிக்கொண்டேன். சுயநலம் இல்லாத மனதைவிட எது பெரிய அழகியல், ரசனை, நாகரிகம் என்று உடைந்துபோய் அம்மாவின் அந்தப் படத்தின் மீது விழுந்து அழுது அரற்றினேன் -

''அம்மா  அம்மா காட்டுத்தனமாக் கட்டிக்கோமா - காட்டுத்தனமா என் கன்னத்தைக் கடிம்மா'' என்று கெஞ்சினேன்.

அம்மா என்றோ கொடுத்த முத்தம் கன்னத்தில்... ஈரமாக!

********

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.