Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழ்வெனும் பெருங்கனவு! - சிறுகதை

Featured Replies

வாழ்வெனும் பெருங்கனவு! - சிறுகதை

லைலா எக்ஸ், ஓவியங்கள்: ஸ்யாம்

 

1

ந்த அமைதியான மாலைப் பொழுதில் கழிவறைக்குள் தென்னை விளக்குமாற்றால் சரசரவெனக் கூட்டிக் கழுவும் சத்தம், பள்ளியின் வராந்தா முழுவதும் ஒலித்தது. அரை மணி நேரத்துக்கும் மேலாகக் கேட்ட சத்தம், முழுவதுமாக நின்றுபோன சற்றுநேரத்தில் வெறும் பக்கெட்டை ஒரு கையிலும், பொருள்கள் நிறைந்திருந்த பக்கெட்டை மற்றொரு கையிலும் எடுத்துக்கொண்டு, பள்ளியின் கழிவறையிலிருந்து வெளியே வந்தாள் வித்யா. அந்த பக்கெட்களிலிருந்து ஒரு சொட்டு நீர்கூட, அவள் நடந்துவந்த வராந்தாவில் சிந்தவில்லை. இத்தனைக்கும் அவள் கைகளிலிருந்த அழுத்தமான பிளாஸ்ட்டிக் பக்கெட்டின் விளிம்பு பிளந்துகொண்டிருந்தது. அதில் சிறிய விரிசல் ஒன்றும் இருந்தது. அதன் வெளிப்புறமாகப் பெரிய அளவில் மங்க் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அந்த மங்கில் பிளீச்சிங் பவுடரும் பினாயிலும் இருந்தன. பக்கெட்டின் உள்ளே, கருநீல வண்ணத்தில் டாய்லெட் கழுவும் இரண்டு பிரஷ்கள் இருந்தன.

அது, அரசுப் பள்ளியைவிட சற்றே அதிகமான வசதிகள்கொண்ட அரசு உதவிபெறும் தனியார் பள்ளி. `கவர்மென்ட் ஆயா’ வேலைக்காகச் செய்யவேண்டியவர்களுக்கு வேண்டியதைச் செய்துவிட்டு, போஸ்ட்டிங்குக்குக் காத்திருந்தாள் வித்யா.

p64a.jpg

தன் புடைவையில் மெலிதான மக்கிய துர்நாற்றம் சுற்றிக்கொண்டிருப்பதை, வேலையிலிருந்து விடுபட்ட பிறகுதான், அவள் கவனித்திருக்க வேண்டும். அப்போது கொஞ்சமாக முகத்தைச் சுளித்துக்கொண்டாள். வேலைக்குச் சேர்ந்த ஆரம்ப நாள்களில் குடலைப் பற்றியிழுக்கக் குமட்டிக்கொண்டு வாந்தி எடுத்தவள், போகப்போக அனைத்து துர்நாற்றங்களுக்குள்ளும் புழங்கியிருந்தாள். இருந்தாலும், பல வருடங்கள் சென்றும் சகிப்புத்தன்மை முழுவதுமாகக் கூடிவராததைப் பற்றிய விசனம் அவளுக்கு இருக்கவே செய்தது.

``எவ்ளோதான் ஏற்றி, வாரி, சுருட்டிட்டு வேலை பாத்தாலும், இந்த வாடை எப்படியோ புடவையில பத்திக்கிது” என்று யாரிடமோ கூறுவதைப்போல் தனக்குள் முனகிக்கொண்டாள். பினாயில், நீர், சிறுநீர் எல்லாம் கலந்து ஒற்றைத் துர்நாற்றமாகிவிட்டதிலிருந்து, அவளால் ஒவ்வொன்றையும் பிரித்து உணர்ந்துகொள்ள முடிந்தது. வித்யா, பள்ளிக் கட்டடத்திலிருந்து வெளியேறி, வந்தபிறகும்கூட துர்நாற்றங்கள் மாறி மாறித் தொடர்ந்து வருவதாக அவள் உணரவும், பள்ளியின் பின்புறம் நோக்கி விரைந்தாள்.

``சனியன்பிடிச்சவனுங்க, எப்படித்தான் குடிக்கிறானுங்களோ. இன்னமும் தோதுபடலை”-புடைவையை வரிந்துகட்டிக்கொண்டு, குத்துக்காலிட்டு உட்கார்ந்து, இடுப்பில் செருகியிருந்த சாராயப் பாட்டிலைத் திறந்து, வாயில் கவிழ்த்துவிட்டுச் சொன்னாள் வித்யா. சூரியன், பள்ளிக்குப் பின்புறமாகக் கீழே மெள்ள இறங்கிக்கொண்டிருந்தது. தூரத்தில் பறவைகள் கூடடையும் சத்தங்கள் கேட்டன. பத்தடி தூரத்தில் ஓடிய சாக்கடையில் பன்றிக்குட்டிகள் வசவசவெனத் தாய்ப் பன்றியைச் சுற்றிச் சுற்றி வந்து, சகிக்க முடியாத சத்தத்தை எழுப்பின. சனிக்கிழமை என்பதால் பள்ளி மைதானத்தில் அந்த நேரத்திலும், `கடைசி செட்’ குழந்தைகள் கத்தியபடி விளையாடிக்கொண்டிருந்தனர். ஒருமுறை குழந்தைகளைத் திரும்பிப் பார்த்தவள், பாசஞ்சர் ரயில் ஒன்று மெதுவாகக் கடந்துசெல்வதைப் பார்த்தபடி உட்கார்ந்தி ருந்தாள். உள்ளே சென்ற சாராயத்தால், மெதுவாக போதை ஏறத் தொடங்கவும் சற்றுத் தெம்பாக உணர்ந்தாள்.

வேலையை முடித்துவிட்டுப் பள்ளியின் பின்பக்கம் வித்யா போவதைக் கவனித்த மணி, அவளை நோக்கி விரைந்தாள். சாராயத்தை வாயில் கொட்டிக்கொண்டு, பாட்டிலைத் தூர எறியவும், மணி அவளிடம் வந்துசேரவும் சரியாக இருந்தது. யாரோ வந்து நிற்பதை உணர்ந்து திரும்பியவள், அங்கே மணி நின்று கொண்டிருப்பதைக் கவனித்தும், கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் வசதியாக அசைந்து உட்கார்ந்துகொண்டாள்.

``என்ன வித்யாக்கா, வேலையெல்லாம் முடிச்சுட்டியா?”

``ஏன்டியம்மா... முடியலைன்னா முடிச்சுத் தரப்போறீயா? பெரிய இவ மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டு வந்துட்டா. போவாளா வேலையைப் பார்த்துட்டு...”

``திங்கள்கிழமை மகளிர் மன்றம் மீட்டிங். கரெக்டான நேரத்துக்கு வந்துடு. அதைச் சொல்ல விசாரிச்சா, ரொம்பத்தான் அலட்டிக்கிற.”

``எதைச் சொல்லவந்தியோ அதை மட்டும் சொல்லு. போ... போ...”

``ம்க்கும்... போன தடவையே சண்டை வரப்பார்த்துச்சு. நீ வந்துடு ஆமா சொல்லிட்டேன். இல்லைன்னா, `நீதானே அவளைச் சேர்த்து விட்ட’னு என்னையத்தான் புடிச்சுப்பாளுங்க.”

கோபமற்ற, அதேசமயம் திடமான குரலில் சொல்லிவிட்டு நகர்ந்த மணியையே பார்த்துக்கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தவள், பிறகு தடுமாறி எழுந்து, நின்று நிதானமாகி பள்ளி மெயின் கேட்டை நோக்கி  நடக்கத் தொடங்கினாள். வித்யா, கடக்கும் வரை வழியில் விளையாடிய குழந்தைகள் பயத்துடன் விளையாட்டை நிறுத்திவிட்டு அவளையே கவனித்தனர். இரண்டொரு குழந்தைகள் கண்களால் சைகைகள் காட்டிக் கமுக்கமாகச் சிரித்தனர். வித்யாவின் தலை மறைந்ததும் `ஓஓஓஓ...’ என்று கூச்சலிட்டுக்கொண்டே மீண்டும் விளையாட்டைத் தொடர்ந்தனர்.

வித்யா மெயின் கேட்டைத் தாண்டி, சாலையைக் கவனித்துக் கடந்து, பழம் விற்கும் கிழவியின் அருகில் நின்றாள். கிழவி, தன்னைக் கவனித்தும் கவனிக்காமல் வியாபாரம் பார்ப்பதைச் சட்டைசெய்யாமல், அழுத்தமாக நின்றாள். கிழவி, வியாபாரத்தைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தாள். சற்று நேரம் சென்று வித்யா நகர யத்தனிக்கவும், “இந்தா நில்லு... இதைக் கொண்டுபோய் லெட்சுமிகிட்ட கொடு” என்று தமிழ்ச் செய்தித்தாளில் பச்சை நூலில் சுற்றப்பட்டிருந்த பொட்டலங்கள் இருந்த, பாலித்தீன் பையை அவள் கையில் திணித்தாள். சிறிய அளவில் இன்ப உணர்ச்சியைக் கண்களில் காட்டிவிட்டு, மீண்டும் கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு வித்யா வேகமாக வீட்டுக்கு நடந்தாள்.

ரயில் தண்டவாளத்துக்கு அருகில் கும்பல் கும்பலாகப் பெரும்பாலும் தெருவிலும், துணி மாற்ற மட்டும் வீட்டை உபயோகித்து வாழ்பவர்களில், வித்யாவின் வீடு மிகவும் ஏழ்மையுடன் காணப்பட்டது. வித்யாவை வீட்டு வாசலில் பார்த்தவுடனே லெட்சுமி அவளிடம் ஓடிவந்தாள்.

``ஏய் முண்டம்... படிச்சுட்டுத்தானே இருந்த. என்னவோ என்னை ஒரு மாமாங்கம் கழிச்சுப் பார்க்கிற மாதிரி எதுக்குடி இப்படி ஓடிவர்ற?’’ - அம்மா பேசுவதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் அவளை ஒட்டிக்கொண்டு நின்றாள் லெட்சுமி. அவளைக் கைகளால் தள்ளியபடி, “வந்து ஏன் இப்படி மேல விழற... தள்ளிப்போ அந்தாண்ட” என்று கத்திய வித்யாவின் முகத்தை, லெட்சுமி குறும்புடன் பார்த்தாள். முகத்தில் சட்டென அன்பான, கேலியான புன்னகையைத் தவழவிட்ட லெட்சுமி, “நீங்க குடிச்சிருக்கீங்கதானே?” என்று கேட்டவள், பவ்யமாக நகர்ந்துகொள்வதாகப் பின்னால் ஓர் அடி நகர்ந்து பரிகாசம் செய்தாள்.
``ஆமாண்டி... பெருசா கண்டுகிட்டா. போ... போய் ஒழுங்கா உட்கார்ந்து படிச்சுட்டு இதைச் சாப்பிடு. இதோ... இங்கேதான் போறேன். செத்த நேரத்துல வந்துடுவேன்” என்று சொல்லிவிட்டு, பொட்டலங்கள் உள்ள கவரை அவள் கைகளில் திணித்தாள்.

``நீங்க சாப்பிட்டீங்களா... உங்களுக்கு?”

என்று லெட்சுமி கத்துவதைக்கூடக் காதில் வாங்கிக்கொள்ளாமல் வேகமாக வெளியேறினாள்.

கவர்மென்ட் ஆயா வேலை வாங்கித்தருவதாகச் சொன்ன முருகேசனின் கையில், அப்படி இப்படி என்று அடித்துப் பிடித்துச் சேர்த்த லட்சம் ரூபாய் பணத்தை முழுவதுமாகக் கொடுத்துவைத்திருந்தாள் வித்யா. முருகேசன், ஏமாற்றும் ஆளில்லை என்பதை அவள் தீர்மானமாக நம்பினாள். அந்தத் தொகைக்காக நான்கைந்து மகளிர் மன்றங்களில் வாங்கியிருந்த பணத்துக்கு, ஒரு நாளைக்குப் பதினாறு மணி நேரம் உழைத்து, `லோன்’ கட்டிக்கொண்டிருந்தாள். அவ்வப்போது முன்னிரவில் தனியார் ஆஸ்பத்திரியில் கூட்டிக் கழுவும் வேலைக்கும் போய்க்கொண்டிருந்தாள்.

வித்யா, வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் தெருவை அடைந்த பின்னிரவு நேரத்தில் எல்லோரும் தூங்கியிருந்தனர். வித்யா சோர்வாக வீட்டின் முன்னால் நின்று, மடியைத் தொட்டுப் பார்த்தாள். ஐந்தாயிரம் ரூபாய் கிடைத்திருந்தது. வீட்டுக்கு வெளியே நின்று உள்ளே திரண்டிருந்த இருளை சற்று நேரம் கவனித்துப் பார்த்தவள், இடுப்பில் செருகியிருந்த பாட்டிலைத் திறந்து வாயில் கவிழ்த்துவிட்டு மெதுவாக உள்ளே சென்றாள். லெட்சுமி, கிழவியோடு ஒட்டிக்கொண்டு படுத்திருந்தாள். அவளின் தூக்கத்தைக் கெடுத்துவிடாமல் மெள்ளமாக நகர்ந்தவள், சாய்த்து வைத்திருந்த பாயை ஓரமாக உதறிப்போட்டு சுருண்டு படுத்துக்கொண்டாள்.

2

தூக்கம்போன மறுநொடியே அது திங்கள்கிழமை என்பதுடன், அன்று மகளிர் மன்றக் கூட்டம் என்பதைப் பற்றிய பதற்றத்தில் விழித்துக்கொண்ட வித்யா, எழுந்து நேராகக் குளிக்கப் போய்விடலாமா என யோசித்தாள். சாராயம் குடித்த மறுநாள்களில் குளித்துவிட வேண்டும் என்ற முடிவை விட்டுவிடலாமா என்றும், ஒருபக்கம் யோசித்தபடி வெளியே வந்தவளுக்கு, பொழுது விடிந்து அதிக நேரம் ஆகியிருந்தது உரைத்தது.

அப்போது பாத்திரம் கழுவும் சத்தம் கேட்கவும், வெளியே லெட்சுமிதான் பாத்திரம் துலக்கிக்கொண்டிருக்க வேண்டும் என்பதை யூகித்த வித்யாவுக்குக் கோபம் தலைக்கேறியது. விரைவாகப் புடைவையை அள்ளி, வாரிச் சுருட்டிக் கையில் எடுத்துக்கொண்டு, பாத்திரம் விளக்கும் லெட்சுமியிடம் விரைந்தாள்.

லெட்சுமியின் முன்னால் சென்று சண்டை கட்டுவதைப் போல் நின்றுகொண்டு சேலையை இருக்கமாகப் பிடித்தபடி, ``எழுந்துக்கக் குட்டி” என்றாள். அவளைப் புன்னகையுடன் பார்த்த லெட்சுமி, “ம்மா... இன்னும் கொஞ்சம்தான் இருக்கு. நானே விலக்கிடுறேன் விடுங்க” என்றாள்.

கடுப்பான வித்யா, முடியை அவிழ்த்துவிட்டு இருக்கிக் கட்டியபடி, ``நீ முதல்ல எந்திரி... சொல்லிட்டேன் ஆமாம். காலங்கார்த்தால என் வாயைப் புடுங்காத” என்றாள்.
அவளின் பிடிவாதத்தை அறிந்த லெட்சுமி எழுந்து கொண்டாள்.

“சரி நான் போய் வேற வேலை பார்க்கிறேன்” என்று நகர்ந்தவளை நோக்கி, ``ஏய் இங்க பாரு... `நீ எனக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சா ஒழுங்கா படி’னு ஆயிரம் தடவை சொல்லிட்டேன். நாலு எழுத்து படிச்சவங்களே சொல்ற பேச்சை கேட்க மாட்டாங்கங்கிறது சரியாத்தான் இருக்கு” என்று கத்தினாள்.

``சரி சரி... கத்தாதீங்க” என்ற லெட்சுமி, மேலும் நகராமல் அங்கேயே நின்றாள்.

``நீ நல்லா படிக்கணும்டி. உன்னைப் பள்ளிக்கூடத்துல சேர்த்தப்ப எவ்ளோ கேவலமா பார்த்தாங்கன்னு எனக்குத்தானே தெரியும்” - இப்படி அம்மா ஆரம்பிக்க வேண்டும் என்றே காத்துக்கொண்டிருந்த லெட்சுமி, “அய்யோ ஆரம்பிச்சுட்டீங்களா? இதோட ஆயிரம் தடவை சொல்லிட்டீங்க. கேட்டுக் கேட்டு எனக்கும் அலுத்துப்போச்சு’’ என்றபடி துள்ளிக் குதித்துக்கொண்டு வீட்டின் உள்ளே போனாள்.

லெட்சுமி குழந்தைபோல அப்படிச் சிணுங்கியதை ரசித்துச் சிரித்த வித்யா, அந்த நிகழ்வை மறுபடி ஒருமுறை  வாய்விட்டுப் புலம்பியவாறே பாத்திரங்களைத் துலக்கத் தொடங்கினாள்.

``லெட்சிமினு பேர் வெச்சிருக்கியா? பரவாயில்லையே...” பள்ளிக்கு விண்ணப்பித்தபோது எள்ளலாக முகத்தை வைத்துக்கொண்டு, கேலியாகக் கேட்ட அந்த டீச்சரை ஓங்கி அறையலாம்போல வித்யாவுக்கு ஆத்திரம் வந்தது. அவளைக் கேட்காமலேயே சாதியை டீச்சரே நிரப்பிவிட்டு கண்ணாடி வழியாக `சரிதானே' என்பதுபோல் அலட்சியமாகப் பார்த்தபோது வித்யாவுக்கு ஆத்திரம் அதிகமானது. சென்செக்ஸ் எடுக்கவந்துபோது அவளது வீட்டில் ஆள் இல்லாததால் தோராயமாகத் தகவல்களை வாங்கிக்கொண்டு, “அந்த முக்கு கடையில பழங்கள் விற்குமே அந்தப் பொம்பளைதானே! அதோட முகரையைப் பார்த்தாலே தெரியுமே என்ன சாதின்னு. அதைக் கேட்டு வேற தெரிஞ்சுக்கணுமாக்கும்” என்று சொல்லியபடி அகங்காரமாகச் சிரித்த டீச்சர் இவளாகத்தான் இருக்கும் என்று வித்யா எண்ணினாள்.

``இதுங்களெல்லாம் புள்ளைங்களுக்கு என்னத்தைச் சொல்லிக்கொடுத்துக் கிழிக்கப் போதுங்களோ...” என முனகியபடி கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு பவ்யமான தோரணையில் டீச்சர் முன்பு நின்றிருந்தாள்.

அட்மிஷன் போட்டு முடித்தவுடன் முப்பத்திரண்டு பற்களும் தெரியுமாறு சிரித்துக்கொண்டு அந்த வராந்தாவில் நடந்தது இப்போதுதான் நிகழ்ந்ததைப்போலிருந்தது வித்யாவுக்கு. லெட்சுமியும் அம்மா மேல் உயிரையே வைத்திருந்தாள். பள்ளியிலேயே பலரும் பொறாமைப்படும் அளவுக்கு நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் எடுத்து வந்ததுடன், பத்தாவதில் பள்ளியிலேயே இரண்டாம் இடம் எடுத்திருந்தாள். பார்வைக்குக் கருமையாக இருந்தாலும், கோயில் சிலையைப்போல் மிகவும் லட்சணமாகவும் இருந்தாள்.

``ஏ புள்ள... இந்த மக்குன வாடை வர்ற சேலையையே மோப்பம் பிடிச்சிட்டுப் பக்கத்துல வந்து படுத்திருக்கியே... வாந்தி வரலை?”

பதில் சொல்லாமல் லெட்சுமி சிரிக்கும் சிரிப்புக்காகவே வித்யா கேட்டுக்கொண்டிருப்பாள். பத்தாம் வகுப்பு முடித்துவிட்ட இப்போதும்கூட தன்னையே வளையவரும் லெட்சுமியிடம் எரிந்து விழுவாள் வித்யா.
``உங்களுக்கு என்னதாம்மா பிரச்னை?’’ என லெட்சுமி கேட்டால், “ஆமா.... பிரச்னை, வந்துட்டா கேள்விகேட்டுட்டு. போடி... போய்ப் படிக்கிற வேலையப் பாரு. ஏன் இப்படி என்னையே சுத்திச்சுத்தி வர்ற?” - விதவிதமாக எரிந்துவிழும் அம்மாவைச் சுற்ற வேண்டும் என்றே வளையவருவாள் லெட்சுமி.

வித்யா பாத்திரத்தைக் கழுவிக் கவிழ்த்துவிட்டு, பக்கத்துக் கடையில், இட்லி வாங்கிவந்து லெட்சுமியின் கைகளில் திணித்தாள். “அடுப்பு பத்தவைக்காம இருக்கக் கூடாதுடி” என்று சொல்லிவிட்டு டீ போட அடுப்பின் முன்னாள் குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொண்டாள். அப்போது லெட்சுமியின் அப்பா நல்ல போதையில் படியேறவும், சாப்பிட்டுவிட்டுப் புத்தகங்களை அடுக்கிக்கொண்டிருந்த லெட்சுமி வாரிச்சுருட்டி எழுந்து, பின்கட்டுக்குச் சென்று அம்மாவிடம் பதுங்கிக்கொண்டாள்.

“ஏடி குடிகாரச் சனியனே... காலையிலயே எங்கேடி போய்த் தொலஞ்ச, இருக்கியா?” என்ற கணவனின் கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்லாமல், வித்யா ஊதாங்குழலால் புகை முட்டும் அடுப்பில் ஊதிக்கொண்டிருந்தாள். சுவரில் சாய்ந்து கால்களைப் பரப்பியபடி உட்கார்ந்த லெட்சுயின் அப்பா, பீடியை எடுத்துப் பற்றவைத்துக் குச்சியை ஊதி அணைத்துச் சுண்டிவிட்டு, ஆழமாகப் புகையை இழுத்துவிட்டு மீண்டும் கத்தினான்... “எங்கேடீ போய்த் தொலஞ்ச? பாப்பா... பாப்பா...” எனக் கத்திவிட்டு மீண்டும் புகையை இழுத்துவிட்டான்.

திறுதிறுவென விழித்தபடி எழப்போன லெட்சுமியைப் பார்வையாலே தடுத்து, அவள் கையில் டீயைத் திணித்தாள் வித்யா.

``கிரகம்... வந்துட்டான் காலங்காத்தால குடிச்சுட்டு. அவன் அப்படித்தான் கத்திட்டுக் கிடப்பான். கண்டுக்காம விடு. சாப்பிட்டல? டீயைக் குடிச்சுட்டு இப்படியே ஸ்கூலுக்குக் கிளம்பு. நான் அந்தாளைக் கவனிச்சுட்டு, அப்படியே போய் ஸ்கூல்ல வேலைகளை முடிச்சுட்டு, பட்டுனு திரும்பவந்து சமைச்சுடுறேன். மதியானத்துக்கு வந்து சாப்பிடு, என்ன?” என்று சொல்லிவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் நகர்ந்தாள்.

தன்னைக் கவனிக்காமல் கடந்துசெல்ல முயலும் வித்யாவைப் பார்த்தவன் பட்டென எழுந்து, ``கத்திட்டுக் கிடக்கிறேன்ல காது கேட்கலை?” என்று கத்தியபடி அவளை மறித்தான் லெட்சுமியின் அப்பா.

“எல்லாம் நல்லாவே கேக்குது. நீயெல்லாம் ஒரு ஆளுன்னு உனக்கு மதிச்சு வேற பதில் சொல்லணுமாக்கும்” என்ற வித்யா, நின்றாள்.

“நல்லா சுளையா பணம் வெச்சிருக்கபோல. குடுடி எனக்கு” என்றவன், அவளின் இடுப்பைத் தொட வந்தான். அவனைத் தடுத்துத் தள்ளிவிட்டாள் வித்யா.

நிலைதடுமாறியவனுக்குக் கோபம் தலைக்கேறியது. ஒற்றை நாடி உடம்போடு சோர்வாக இருந்த வித்யாவை, இழுத்துப்போட்டு கோபம் தீர கண்-மண் தெரியாமல் அடித்து, காரித் துப்பிவிட்டுக் கத்தியபடியே வெளியேறினான்.

``ஓடுகாலி... எவன்கூட ஓடிப்போறதுக்குத் திட்டம்போட்டிருக்காளோ. அந்த புரோக்கர் பய வேற வீடு வரைக்கும் வர்றான்” என்று அக்கம்பக்கத்து வீட்டில் எல்லோருடைய காதுகளிலும் விழ வேண்டும் என்றே கத்திக்கொண்டு வெளியேறினான்.

சற்றுநேரம் அவன் அடித்துப்போட்ட இடத்திலேயே அசைவற்றுக் கிடந்தாள் வித்யா. சட்டென எதையோ உணர்ந்தவளாக எழுந்துகொள்ள முயன்றாள். அப்போது நடக்க முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. மெதுவாக உட்கார்ந்தபடியே நகர்ந்து வீட்டு வாசலில் அமர்ந்து, `யாராவது வருகிறார்களா?’ எனப் பார்த்தாள். லெட்சுமியின் சிநேகிதி அவளைத் தேடிக்கொண்டு வீட்டுக்கு வந்தாள்.

“ `அம்மா வர்றதுக்குச் செத்த லேட் ஆகும்னு ஹெட்மிஸ்கிட்ட சொல்லச் சொன்னேன்’னு லெட்சுமிட்ட சொல்லிடு கண்ணு, என்னைத் தேடிட்டிருப்பாங்க. செத்த வெரசா போய்ச் சொல்லிடு கண்ணு” என்றாள் வித்யா.

பதிலாக அவள் பெரிதாகத் தலையாட்டி “சரிங்க அத்தை” என்றாள்.

வித்யா வாசற்படியில் உட்கார்ந்துகொண்டு பேச முடியாமல் பேசுவதைக் கவனித்த பூங்கொடி அருகில் வந்து பார்த்தாள். வித்யாவின் வலது காதும் உதடுகளும் கிழிந்து, ரத்தம் கசிந்துகொண்டிருந்தது. கைகளை முறுக்கி அடித்ததில் அங்கே சதை பிடித்திருந்தது. அவள் கைகளை உதறிக் கொண்டிருந்தாள். முடிக் கற்றைகளும் சேலையும் கலைந்திருக்க காலால் மிதிப்பட்டதில் வித்யாவால் எழ முடியவில்லை. ஆனாலும், கைகளை ஊன்றி எழ முயற்சிசெய்தாள். வித்யாவால் சேலையைச் சரிசெய்யக்கூட முடியாமல் இருப்பதைப் பார்த்து “என்னக்கா நீ, இந்த நிலையில எப்படிப் பள்ளிக்கூடம் போவ? வர மாட்டேன்னு சொல்லியிருக்க வேண்டியதுதானே?” என்றவளுக்குப் பதிலாக, வித்யா சிரித்த சிரிப்பின் அர்த்தம் பிடிபடவில்லை. ஆனாலும், வித்யாவை மெதுவாகத் தூக்கி உட்காரவைத்தாள்.

``செத்த பிடி, நான் கொஞ்சம் நடந்துபார்க்கிறேன். ஸ்கூலுக்குப் போய்தான் ஆகணும்” என்றபடி நடக்க முயன்றவளால் ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியவில்லை.

``பாடையில போறவன், என் புழைப்புல மண்ணைப் போடப் பார்க்கிறானே. நான் என்ன பண்ணுவேன்?” என்றவள் முட்டி மடங்கி கைகளை ஊன்றிக்கொண்டு கீழே விழுந்தாள். நகர்ந்து அப்படியே சுவரில் சாய்ந்து ஆசுவாசப் படுத்திக்கொண்டாள்.

``கொஞ்சம் தண்ணி கொடுடி...” என்று கேட்டவள், கண்களை மூடி, தண்ணீரை வாயிலிருந்து ஒழுகவிட்டபடியே குடித்தவள், முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். அதில் பினாயில் வாடை வீசியது. குமட்டல் வரக் கூடாதே என நினைத்தவள், மீண்டும் சுவரில் சாய்ந்துகொண்டாள்.

3

ரே மணி நேரத்தில் கால் கைகளைச் சரிசெய்துகொண்டு, நீலப் புடைவை ஒன்றை எடுத்து மெதுவாகச் சுற்றிக்கொண்டு தொத்தித் தொத்தி பள்ளி நோக்கி நடந்தாள் வித்யா.

அவசர அவசரமாகக் கழிவறையை நோக்கிச் சென்றவளை நிறுத்திய உதவித் தலைமையாசிரியை, ``ஏன் இவ்வளவு அவசரமா போற, போய் டீ வாங்கிட்டு வந்து கொடுத்துட்டுப் போ” என்றாள்.

“இல்ல டீச்சர், குழந்தைங்க லாம் ஒண்ணுக்கு ஆயி போகுணுமில்ல. நான் துடைச்சு வாரினாத்தானே… இல்லைன்னா நாறிப்போய் குழந்தைங்க எப்படிப் போகுங்க?” என்றாள் புலம்பும் தோரணையில்.

“அதெல்லாம் கழுவி, சுத்தப்படுத்தியாச்சு. நீ போய் டீ வாங்கிட்டு வா... ஓடு” என்று கையில் பணத்தையும் ஃபிளாஸ்கையும் திணித்த டீச்சரை மீற முடியாமல், `யார் கழுவி யிருப்பார்கள்?’ என்று யோசித்துக் கொண்டே டீ வாங்கிவந்து அங்கிருந்த மூன்று டீச்சர்களுக்கும் கொடுத்துவிட்டு அவசரமாகக் கழிவறையை நோக்கி ஓடினாள். சுத்தமான வேலை, துளியும் அழுக்கு இல்லாமல் கழுவப் பட்டிருந்தது. அவள் ஆச்சர்யத் துடன் மைதானத்திலிருந்த மற்ற வேலைகளைச் செய்யத் தொடங்கினாள்.

மதிய உணவுக்கு லெட்சுமி சத்துணவு வரிசையில் நின்று வாங்கிய உணவு நிரம்பிய தட்டைப் பிடுங்கிக்கொண்டு, ``வீட்டுல சாப்பாடு இருக்கு. ஓடிப்போய் சாப்பிட்டுட்டு சீக்கிரமா வா கண்ணு’’ எனத் துரத்தினாள். என்றைக்கும் இல்லாமல் இன்றைக்குத் தன்னை நெருங்காமலேயே தூரத்திலேயே நின்று தட்டைக் கொடுத்துவிட்டு லெட்சுமி ஓடவும், “என்னவோ அவசரம்போல” என அருகில் இருந்த மணியிடம் சொல்லிவிட்டுச் சாப்பிடத் தொடங்கினாள் வித்யா.

லெட்சுமி அப்படி வீட்டுக்கு ஓடுவது, மணிக்கு ஒருபக்கம் பக்கென்று இருந்தது. அதை வித்யாவிடம் சொல்லவும் முடியாமல் தவித்தாள்.

“இந்த ஹெச்.எம்-முக்கு எம்மேல காண்டு பாத்துக்க மணி. `உன் மகளைப் படிக்கவெச்சு என்ன பண்ணப்போற? டெல்லிக்குப் போய் என் பொண்ணு வீட்டுல அஞ்சு வருஷம் வேலை பார்க்கச் சொல்லு. நானே நல்லபடியா நகநட்டு போட்டுக் கல்யாணம் பண்ணிவைக்கிறேன்’னு சொன்னுச்சு. நான் ஒரேடியா `முடியாது’ன்னு சொல்லிட்டேன். பத்தாவது பரீட்சையில் லெட்சுமி நல்ல மார்க் எடுத்ததுல அதுக்கு அவ்வளவு காண்டு” என்று சொல்லிவிட்டு, இரண்டு உருண்டைகளை அடுத்தடுத்து வாயில் போட்டுக்கொண்டாள்.

``ஆமாக்கா... அதுக்குக் காண்டுதான்” என்ற மணி, மேலும் ஏதோ சொல்ல வாயைத் திறந்தவள், வித்யா கவனிக்கும் முன்பே மூடிக்கொண்டாள்.

“`கணக்கு குரூப்புல போடுறா பாரு... பார்த்துக்க இதை. எவனையாவது இழுத்துட்டு ஓடப்போகுது. அதுக்கு இத்தனை பண்றா’னு இன்னொரு டீச்சர்கிட்ட அந்த ஹெச்.எம் சொன்னுச்சு மணி. உடம்பெல்லாம் வினை புடிச்சது” என்று திட்டிவிட்டு வாயைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள்.

“ஏதோ கவர்மென்ட் வேலை வாங்கணுமேன்னு இதுங்களையெல்லாம் அனுசரிச்சுப் போக வேண்டியதா இருக்கு. எல்லாம் என் பொண்ணுக்காகத்தான்...” என மூக்கை  உறிந்துகொண்டாள் வித்யா.

“அந்த புரோக்கர் பய என்னதான்க்கா சொல்றான்?” என்றவளை ஒருமாதிரியாகப் பார்த்த வித்யா, ``இன்னிக்குச் சாயந்திரம் வேலையை முடிச்சுவெச்சுட்டுத்தான் போகணும்டி’’ என்று சொல்லியபடி நடந்தாள்.

ரசமரத்தடியில் உட்கார்ந்து, டீ குடித்துக் கொண்டிருந்த முருகேசன், வித்யாவைப் பார்த்தவுடன் `ஈ...’ என இளித்தபடி அவளுக்கும் ஒரு டீ சொன்னான். வித்யாவும் அவனைப் பார்த்துச் சிரித்தபடி டீயைக் குடித்துக்கொண்டே மெதுவாக வேலையைப் பற்றி விசாரித்தாள்.

``உங்க காஸ்ட்டுக்குத்தான்க்கா அடுத்த ரவுண்டு போடணும். சொல்லியாச்சு. உன்னைத் தவிர, வேற யாரு இருக்கா பெர்மனென்ட் பண்ண? கொஞ்சமும் கவலைப்படாம போ. இன்னும் ஒரு மாசத்துல ஆர்டர் கைக்கு வந்துடும். நம்மளையும் கொஞ்சம் கவனிச்சிக்கோ” என்று நம்பிக்கையோடு சொன்னவன், ``லெட்சுமி நல்லா படிக்கிறாள்ல?” என்று கேட்டதைக் கண்டுகொள்ளாமல் நடந்தாள்.

ஏகப்பட்ட சந்தோஷத்தோடு வீட்டுக்கு வந்தவள், கொடியில் கசக்கிக் காயப்போட்டிருந்த லெட்சுமியின் பாவாடை தாவணியை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டு அருகில் சென்றவளுக்கு, பாவாடையிலிருந்து இதுவரையிலும் இல்லாமல், தான் பழகியிருந்த ஏதோ ஒரு வாடை வந்தது. லெட்சுமிக்குப் பழக்கம் இல்லாததால் சரிவரத் துவைக்கத் தெரியவில்லை என்று நினைத்துக்கொண்டாள்.

p64b.jpg

ஆனால், ஏதோ ஒன்று மண்டைக்குள் குடைய, ஆத்திரமும் அழுகையுமாக வந்தது. தொங்கப்போட்டிருந்த பாவாடையில் கை வைத்துக்கொண்டு வெறித்துப் பார்த்தாள். அவளை யாரோ ஆழமாகக் கேவலப் படுத்தியதுபோலிருந்தது. எதுவுமே செய்துவிட முடியாத குற்றவுணர்வு மனதை அழுத்தியது.

விறுவிறுவென வேகமாக அடியெடுத்து வைத்து அரசமரத்தடியை அடைந்தவளுக்கு, அங்கே முருகேசனைப் பார்க்கவும் சமாதானமாக இருந்தது. அவனிடம் விளக்கிச் சொல்லி காலில் விழப்போவதைப்போல் சைகை காட்டி, பணத்தைத் திரும்பத் தரச்சொல்லி வேண்டிக் கொண்டாள். முருகேசனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. வித்யாவின் தீர்மானமான முடிவின் தாக்கத்தால் ஒப்புக்கொண்டான்.

ள்ளிக்குச் சென்று கூட்டி வாரிக் கழுவிவிட்டுக் காத்திருந்தவளிடம் பணத்தைத் திணித்த முருகேசன், “நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டியே வித்யா. உனக்குப் பைத்தியம்தான் போ” என்றான். எதற்கும் யாரையும் நன்றியோடு பார்க்காத வித்யா, அவனை நன்றியுடன் பார்த்துவிட்டு நேராகக் கிழவியிடம் சென்று நின்றாள். கிழவி அவளைப் பார்த்தவுடனேயே பொட்டலத்தை அமைதியாகக் கொடுத்துவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்.

வாசலில் வித்யாவைப் பார்த்த லெட்சுமி ஓடிவந்து கட்டிக்கொண்டாள். என்றும் இல்லாமல் வித்யாவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அதை விழுங்கி அடக்கிவிட்டு, தொண்டை வலிக்க, “லூஸு... தள்ளிப்போ அந்தாண்ட. இப்படி ஒட்டிக்கிட்டு நிக்காம ஒழுங்கா படிக்கிற வழியைப் பாரு” என்றபடி லெட்சுமியின் பாவாடையை எடுத்துப்போட்டு கெரசின் ஊற்றிக் கொளுத்தினாள். அதன் வெம்மையான வெளிச்சத்தில் லெட்சுமி மிகவும் லட்சணமாகத் தோன்ற, வித்யா கண்களைத் துடைத்துக்கொண்டாள். லெட்சுமிக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவளை அப்படியே விட்டுவிட்டு ரயில்வே லைனில் ஏறி நடக்க ஆரம்பித்தாள் லெட்சுமி.

வித்யாவை ரயிலடியில் பார்த்த மணி, ``அக்கா... முருகேசன் என்கிட்ட கவர்மென்ட் ஆயா வேலைக்குக் காசுக்கு வந்து நிக்கிறான்.

நீ பணத்தைத் திரும்ப வாங்கிட்டியாமா... உண்மையாக்கா?” என்று கேட்டவளுக்கு மூச்சிரைத்தது.

பாசஞ்சர் ரயில் கடக்கும் வரை அமைதியாக நின்றிருந்த வித்யா, “ஆமாம் மணி. பெர்மனென்ட் வேலை மேலிருந்த ஆசையை என் புள்ளைக்காக விட்டுட்டேன் பாத்துக்கோ. பாழாய்ப்போன ஹெச்.எம் இப்படிக் கருவெச்சு என் புள்ளையைக் கக்கூஸ் கழுவவிட்டுட்டாளே. புள்ளை எப்படி இருப்பாளோ, என்ன சொல்வாளோ, எப்படி எடுத்துப்பாளோன்னு பதறிக்கிட்டு வீட்டுக்குப் போனா, லெட்சுமி அப்படியே கொஞ்சமும் முகம் மாறாம துள்ளிக்கிட்டு சந்தோஷமா என்கிட்ட ஓடி வருதுடி. அதுக்கு என்ன தெரியும் சொல்லு? எனக்குத்தானே எல்லாம் தெரியும். அதான் காசு கொடுத்துப் படிக்கிற பள்ளிக்கூடத்துல படிக்கவைக்க பணத்தைத் திரும்ப வாங்கிட்டேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தாள்!

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.