Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேக வலை - சிறுகதை

Featured Replies

தேக வலை - சிறுகதை

சிறுகதை: தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம்

 

ம்மாவின் கற்பைச் சந்தேகிப்பது அனிதாவுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. தொடர்ச்சியான சில சம்பவங்கள், அம்மாவைப் பற்றி அப்படி யோசிக்க வைத்துவிட்டது. கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி முதல் நுகத்தடியைக் கழுத்தில் சுமக்கத் தொடங்கியிருந்தாள் அனிதா. கொஞ்சம் சரியான வேலை கிடைக்கும்வரை ரமேஷைக் காதலிக்கும்  திட்டத்தைத் தள்ளிவைத்திருந்தாள். இந்த நேரத்தில்தான் அம்மாவின் புதிய நடவடிக்கைகளைக் கவனித்தாள். சந்தேகத்துக்கான காரணங்கள் சாதகமாக இருந்தன. அம்மாவின் கைப்பையில் இருந்த அந்த மருந்துச் சீட்டு. அது கருக்கலைப்புக்கான மருந்து என்பதை ‘நெட்’ உதவியால் அனிதா உறுதி செய்திருந்தாள். அடுத்தது, அம்மாவின் கார் டேஷ் போர்டில் இருந்த லாட்ஜ் பில். அடுத்தது அம்மாவின் கைப்பேசியில் புதிதாகப் பதிவுசெய்யப்பட்டிருந்த ஆண் பெயர், எண். அந்த எண்ணில் இருந்து அடிக்கடி வரும் போன்கால்கள், வாட்ஸ்அப் மெசேஜ்கள்...

p68a.jpg

மகள் தன்னிடம் ஏதோ வித்தியாசமாகப் பழகுவதை ஜானகியும் உணர்ந்திருந்தாள். அனிதா பிறந்த அடுத்த ஆண்டே ஜானகி விவாகரத்து வாங்கிக்கொண்டு தனியாக வந்துவிட்டாள். ஜானகியின் உலகத்தில் அனிதா மட்டும்தான். உயிரே அவள்தான். வாழ்வதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்றால், அதற்கு அனிதா நன்றாக இருக்க வேண்டும் என்பதைத் தாண்டிய காரணம் எதுவும் இல்லை. படிப்பு, உணவு, உடை... எல்லாவற்றிலும் மகள் விஷயத்தில் கவனமாக இருந்தாள். சோப்பு வாங்குவதில், செருப்பு வாங்குவதில், வேலை வாங்குவதில்... எல்லாவற்றிலும் அக்கறை காட்டுபவள். ஆனால், சில நாட்களாக ஜானகியை அனிதா பார்க்கும் பார்வையிலேயே ஒரு பிழை தெரிந்தது. தாயைப் பழிக்கும் பிழை.  ‘நாமாக முயன்று அவளுடைய சந்தேகத்தைத் தீர்த்துவைக்கலாம். அல்லது அவளாகக் கேட்பது வரைக் காத்திருக்கலாம். இது என்ன தர்மசங்கடம்? மனதுக்குள்ளேயே விபரீதமாகக் கற்பனை செய்து கொண்டிருப்பவளை என்ன செய்வது?'

காலையில் வாக்கிங் போகும்போது, ‘‘அம்மா நீ ஏற்காட்டுக்கு எதுக்குப் போனே?’’ என்றாள்.
ஜானகிக்கு ஒன்றும் புரியவில்லை.

‘‘ஏற்காடா? நான் அங்கு போனதே இல்லை. இளநீர் சொல்லட்டுமா, அருகம்புல் ஜூஸா?’’

அம்மாவால் எப்படிச் சரளமாகப் பொய் சொல்ல முடிகிறது? அவசரமாக இளநீர், அருகம்புல் எனப் பேச்சை மாற்றுகிறாள். காரில் டேஷ் போர்டில் ஏற்காடு லேக் வியூ ஹோட்டலின் லாட்ஜ் பில் இருந்ததைச் சொன்னால், என்ன சொல்வாள்? ரவி என்பவரின் பெயரில் புக் செய்யப்பட்ட டபுள் பெட்ரூம் ஏ.சி. டீலக்ஸ் அறை. அவசரமாக இன்னொரு பொய்யைத் தயாரிக்கவைத்து அவளைச் சங்கடப்படுத்த வேண்டியிருக்கும் என விட்டுவிட்டாள்.

அதுவும் தான் பெங்களூருவுக்கு இன்டர்வியூ போன நேரத்தில் நிகழ்ந்திருக்கிறது இந்த மலைப் பயணம். மகளைத் தாய் கண்காணிக்க வேண்டிய தருணத்தில், அம்மாவை மகள் போட்டு வாங்குவதில் ஒரு குரூரமான சுவை இருந்தது அனிதாவுக்கு. குரூரம் என்பது பெரிய வார்த்தை... குறுகுறுப்பு இருந்தது.

இந்த வயதில் ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ ஹம்மிங் செய்தபடி மீன் பொறித்துக்கொண்டிருந்தது மகளுக்குக் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருந்தது. அம்மாவைக் காயப்படுத்தாமல் அவளுடைய ரகசியங்களை அவிழ்க்க வேண்டும் எனவும் அனிதா நினைத்தாள். அம்மாவுக்கென பிரத்யேகமாகக் கொஞ்சம் ரகசியம் இருந்தால்தான் என்ன எனவும் நினைத்தாள்.

ஜானகி லஞ்ச் பிரேக்கில் சாப்பிட உட்கார்ந்த நேரத்தில் மகள் கேட்டது நினைவுக்கு வந்தது. ‘ஏற்காடு...’ அதைப்பற்றி மேற்கொண்டு அவளிடம் கேட்காமல் விட்டுவிட்டோமே? ஏற்காடு போயிருக்கிறாயா என அவள் கேட்கவில்லை. போகலாமா எனவும் இல்லை. எதுக்குப் போனே? இப்படித்தானே கேட்டாள். அவளை விட்டுவிட்டு தனியாக நான் ஏன் போகப் போகிறேன். அதுவும் அவளிடம் சொல்லாமல்? அனிதாவுக்கு போன் போட்டுக் கேட்டாள்.

‘‘ஏன் அப்படி கேட்டே?’’

சட்டென்று, ‘‘உன் கார் டேஷ் போர்டில் ஏற்காடு லாட்ஜ் பில் பார்த்தேன். அதான் கேட்டேன்’’ என்றாள். ஜானகிக்கு அது அடுத்த அதிர்ச்சியாக இருந்தது. நான் இதைப் பற்றித்தான் கேட்கிறேன் என அவள் எப்படி அத்தனை சுருக்காகப் பேச முடியும்? ஜானகிக்கு கோபமாகவும்கூட இருந்தது. எதுவாக இருந்தாலும் அம்மாவிடம் நேரடியாகக் கேட்க வேண்டியதுதானே? அதில் ஏதோ உள் அர்த்தம் வைத்துக்கொண்டு யாரையோ கேட்பது மாதிரி ஏன் கேட்க வேண்டும்?

‘‘லாட்ஜ் பில்லா? என்ன அனிதா... பார்த்தவுடன் உடனே கேட்க வேண்டியதுதானே? யார் அதை என் டேஷ் போர்டில் வைத்தது எனத் தெரியவில்லையே? யாரையாவது ட்ராப் பண்ணும்போது மறந்து வைத்துவிட்டுப் போயிருக்கலாம்... அதை அப்படியா கேட்பே?’’

‘‘ஸாரிம்மா... ஏதோ ஆபீஸ் டூரா இருக்குமோன்னு கேட்டேன். நான் அப்ப பெங்களூர் இன்டர்வியூவுக்குப் போயிருந்தேன். அதான்!’’

‘‘நீ அப்படிக் கேட்ட மாதிரித் தெரியலை.’’

‘‘ஸாரிம்மான்னு சொன்னேன்ல? விளையாட்டாத்தான் அப்படி கேட்டேன். நீ ஏன் சீரியஸா எடுத்துக்கிற?’’

‘குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். சே... அம்மாவைப் பற்றி தொடர்ந்து அப்படியான நினைவை வளர்ப்பது சரியல்ல. யாரோ லாட்ஜ் பில்லை மறந்து வைத்துவிட்டார்களாம். இருக்கட்டும் அம்மா.  இருபத்தாறு வயதில் கணவரைவிட்டுப் பிரிந்தாய்... எனக்காகவே வாழ்ந்தாய். யாருடனோ நெருங்கிப் பழகுகிறாய் என்பதால், என் நேசம் குறைந்துவிடாது அம்மா. என் மீது இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ளும் அம்மா, உன் மீதும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். கருத்தடை மாத்திரை எல்லாம் எதற்கு? முன்னெச்சரிக்கையாக இருந்திருக்கலாமே? நானே எப்படி உனக்குச் சொல்ல முடியும்?’

அனிதாவுக்கு 22 வயது. ரமேஷுக்கும் அவளுக்கும் பெங்களூருவிலேயே வேலை கிடைத்துவிடும். பிறகு அம்மாவிடம் அறிமுகப்படுத்திவிட்டுக் கல்யாணத்துக்குத் தேதி குறிக்கலாம் என்றுதான் நினைத்திருந்தாள். அதற்குள் அம்மாவே இப்படிக் குறுக்குசால் ஓட்டுவாள் என நினைக்கவில்லை.

‘ஓ!’ ஜானகிக்கு நினைவு வந்துவிட்டது. ‘ரவி ஒருநாள் தன் காரை வாங்கிக்கொண்டு வெளியூர் போனார். அது ஏற்காடாக இருக்கலாம். ஏதோ கான்ஃபரன்ஸ் என்றார். அந்த பில்தான். காரிலேயே வைத்துவிட்டார். யெஸ். அனிதா பெங்களூர் போயிருந்த சமயம். அதற்குள் என்ன கேள்வி கேட்டுவிட்டாள்? இந்தக் காலத்துப் பசங்களுக்கு தைரியம் அதிகம்தான். அம்மாவையே போட்டுப் பார்க்கிறார்கள்.’

அனிதாவின் செல்பேசி எண்ணை அழுத்திவிட்டுக் காத்திருந்தாள். தன்னுடன் வேலை பார்க்கும் ரவி என்பவர் ஏற்காட்டுக்கு கார் எடுத்துக்கொண்டு போய் வந்ததைச் சொன்னாள். எதற்காக அத்தனை அவசரமாக இப்படி விளக்கம் கொடுக்கிறோம் என ஜானகிக்கே குழப்பமாகத்தான் இருந்தது.

இரவு சாப்பிட உட்கார்ந்தபோது ஜானகியிடம் அந்த மருந்து ரசீதைக் காட்டினாள் அனிதா. ‘‘இது என்ன மாத்திரை அம்மா?’’

‘‘இதெல்லாம் உனக்கு எதற்கு?... எங்கிருந்து எடுத்த இதை?’’

‘அம்மாவிடம் அதற்கு மேல் கேட்க முடியவில்லை. இந்த மருந்து ரசீது என்னுடைய ஹேண்ட் பேக்கில் இருந்திருந்தால், வேறு நியாயம் பேசுவாள்’ அதற்குள் ரவி என்ற நபரிடம் இருந்து ஜானகிக்கு போன் வந்துவிட்டது. பாதிச் சாப்பாட்டில் அப்படியே செல்போனை எடுத்துக்கொண்டு பால்கனி பக்கம் போய் நின்றுகொண்டு அரைமணி நேரம் பேசினாள். அனிதா சாப்பிட்டுவிட்டு டி.வி-யின் முன்வந்து அமர்ந்தாள். சிவாஜிகணேசனும் கே.ஆர்.விஜயாவும் பாடுவதாகக் காட்சி. ‘ஐம்பதிலும் ஆசை வரும்... ஆசையுடன் பாசம் வரும்’ வேண்டுமென்றே கொஞ்சம் சத்தமாக வைத்தாள். ஜானகியும் தன் நிலைக்கு வந்ததுபோல போனை முடித்துக்கொண்டு உள்ளே வந்தாள்.

‘‘யாரும்மா அது ரவி?’’

‘‘அதான் சொன்னேனே... என் ஆபீஸ் ஃப்ரெண்ட். உனக்கு இன்ட்ரடியூஸ் பண்றேன். வெரி நைஸ் ஜென்டில்மென்.’’

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் லோன் சேங்க்‌ஷன் செய்தது ரவியின் தவறு. 45 லட்ச ரூபாய். கடன் வாங்கிய மனிதர் இரண்டு டியூகூட ஒழுங்காகக் கட்டவில்லை. இன்னும் நான்கு மாதங்கள் கட்டவில்லை என்றால்,  ஏல நோட்டீஸ் அனுப்ப வேண்டியதுதான். பிசினஸில் ஏகப்பட்ட வருவாய் இருப்பதாகக் கணக்குக் காட்டியிருந்தான் லோன் வாங்கியவன். இரண்டு வருட இன்காம்டாக்ஸ் ஃபைலிங் ரிப்போர்ட் எல்லாம் இருந்தது. ஆனால், இரண்டு வருடமாகத் திட்டமிட்டு அத்தனை பேப்பர்களையும் தயார் செய்திருக்கிறான். இப்போது லாஸ் கணக்குக் காட்டுகிறான். வேறு சோர்ஸ் இல்லை. ஊரில் தன் பெயரில் நிலம் இருப்பதாகவும் விற்று லோனை அடைத்துவிடுவதாகவும் சொல்கிறான். ஊரில் உள்ள நிலத்துப் பத்திரத்தை அடமானமாக வைக்குமாறு சொன்னால், இன்னும் பங்கு பிரிக்கவில்லை என ஜகா வாங்குகிறான். யாரோ நம்பிக்கையான ஆள் சொன்னதால், ரவி நம்பிவிட்டார். ஜானகிதான் அவ்வப்போது ரவிக்கு ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்தாள்.

பேப்பர்களைவிட மனிதர்கள் நம்பகமானவர்கள் இல்லை. ரவிக்குத் தெரியவில்லை. மனிதர்கள் மீது நம்பிக்கை. படிக்கும் வயதில் தொடங்கி மூன்று தங்கைகளையும் கரைசேர்க்கும் பொறுப்பு. அவருடைய அம்மாவும் அப்பாவும் ரயில்விபத்தில் இறந்துபோனார்கள். தன் 42-வது வயதில்தான் அவருக்குக் கடமை முடிந்தது. நேர்மையான, பண்பான மனிதர். தனக்கு ஓர் உறவைத் தேடிக்கொள்ளலாமா, இப்படியே இருந்துவிடலாமா என மேலும்  ஐந்து வருடங்கள் ஊசலாடி, இப்போது திருமணம் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அவர் முடிவெடுப்பது அவ்வளவு முக்கியமா? அவருக்கு முன்பே சமூகம் எடுத்துவிட்டது.


அனிதா ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு போனை எடுத்தாள். அம்மாதான். ‘‘என் ஹாண்ட் பேக்ல ஒரு மருந்து சீட்டு இருந்ததே அதை எங்க வெச்சேன்னு தெரியலை. நீ எங்கயாவது பார்த்தாயா?’’

‘‘அம்மா ட்ராஃபிக்ல நிக்கிறேன். வீட்டுக்கு வந்து சொல்றேன்.’’

‘‘கொஞ்சம் அவசரம்மா.’’

‘‘ரசீது எங்க இருக்குன்னு தெரியாது. அந்த ரசீதை செல்போன்ல எடுத்து வெச்சிருக்கேன். இப்ப வாட்ஸ்அப்ல அனுப்பறேன்.’’

‘‘போட்டோ எடுத்து வெச்சிருக்கியா? அதை எதுக்குடீ போட்டோ எடுத்த?’’

‘‘சும்மாத்தான்...’’

‘‘என்னது சும்மாத்தான்?’’

அனிதா சிவப்பு பட்டனை அழுத்திவிட்டு, வாட்ஸ்அப்பில் அந்த ரசீதை அனுப்பினாள்.

வீட்டுக்கு வந்ததும் ஜானகி கேட்ட முதல் கேள்வியில் அனிதாவுக்கு ஆத்திரம்தான் வந்தது.

‘‘ஏம்மா... எதுக்கு அதை போட்டோ எடுத்தேன்னு வந்ததும் வராததுமா கேட்கறீயே... உனக்கு எதுக்கு அந்த மருந்துன்னு நான் கேட்கட்டுமா?’’

ஜானகி தீர்மானத்தன்மை மிகுந்த முகத்தோடு, ‘‘கேளுடீ... எங்க பேங்க் அட்டெண்டர் ராஜலட்சுமிக்கு ஏற்கெனவே மூணு பொம்பளைப் பசங்க. இப்ப மறுபடி கன்சீவ் ஆகிட்டா. இதுதான் முதல் மாசம்... கலைக்கணும்னு சொன்னா. டாக்டரிடம் கூட்டிக்கிட்டுப் போனேன். மருந்துச்சீட்டு என் பேக்ல மாட்டிக்கிச்சு. நேத்து நீ வேற அது என்ன மருந்துன்னு கேட்டே... இப்ப அவளுக்கு போன் பண்ணி அந்த மருந்து பேரைச் சொல்லிட்டேன். போதுமா?’’

லாஜிக்காக சரியாகத்தான் இருந்தது. ஜானகி இப்படி பொருத்தமாக ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டதால், அனிதாவுக்கும் சற்றே இயல்பாக மாற முடிந்தது. அம்மாவால் சமாளிக்க முடியாமல் போயிருந்தால், இருவருக்கும் அல்லவா தர்மசங்கடமாக இருந்திருக்கும்? காரில் லாட்ஜ் பில்லை ஒருவர் மறந்து வைத்துவிட்டுப் போகிறார். இன்னொருத்தர் மருந்து சீட்டை மறந்துவிட்டுப் போகிறார். அனிதா மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.

ஆனால், சில நிமிடங்களிலேயே தன் அபத்தக் கற்பனையை அவள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவசர அவசரமாக அந்த மருந்துச் சீட்டின் தேதியைப் பார்த்தாள். அவள் பெங்களூருக்கு இன்டர்வியூ போன தேதி. அந்த மருந்து ரசீதில் இருந்த தேதியும் அம்மா ஏற்காட்டில் இருந்ததாக, தான் நினைத்த தேதியும் ஒன்றுதான். ஒரே நாளில் அம்மா இரண்டு இடங்களில் இருக்க முடியாது. சே... அம்மாவை சந்தேகப்பட்டதன் ஆரம்பமே தப்பு எனத் தெரிந்தது. அம்மா எந்தத் திட்டமும் போட்டு சமாளிக்கவும் இல்லை. பொய் சொல்லவும் இல்லை. மகளுக்கு ஒருவேளை சந்தேகம் ஏற்பட்டிருக்குமோ என்ற கவலையில் சில விளக்கங்களை மெனக்கெட்டு சொன்னாள். ‘ஸாரி அம்மா.’ ஒருத்தரிடம் குறை காண்பதில்தான் மனிதர்களுக்கு எவ்வளவு வேகம்? மனசுக்குள்ளாகவே கன்னத்தில் போட்டுக்கொண்டாள் அனிதா.

மீபகாலமாக அனிதா தன்னைச் சந்தேகிப்பதை ஜானகியால் உணர முடிந்தது.  ‘அந்த மருந்து உனக்கு எதற்கு?' எனக் கேட்டாளே... அது சந்தேகமா, கோபமா? குற்றச்சாட்டா? ரவியை ஒருமுறை வீட்டுக்கு அழைத்துவந்து இவர்தான் அவர் என்பதை விளக்கிவிட்டால், ஒருவேளை அனிதாவுக்கு சந்தேகங்கள் நொறுங்கிவிடும் என நினைத்தாள். அனிதாவின் மனதிலிருக்கும் தீப்பொறியை உடனே அணைப்பது நல்லது. மகளுக்குத் தேவைப்படும் விளக்கம் அவளுக்கேகூட தேவைப்படும் நிலைமை சில நாள்களுக்கு முன் நிகழ்ந்தது.

வங்கியில் மேனேஜர் அறைக்குப் பறவையின் சிறகுகள் போல மார்பளவு உயரத்தில் ஓர் ஊஞ்சல் கதவு உண்டு. போவோரும் வருவோம் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் தள்ளிவிட்டபடி ஓடிக்கொண்டிருப்பார்கள். ஒருமுறை ரவி தன் இரண்டு கைகளாலும் அந்தக் கதவை வெளிப்பக்கம் இருந்து தள்ள முயற்சிப்பதற்குள், ஜானகி உள்பக்கம் இருந்தபடி அதை இழுத்தாள். இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந்துவிட்டது. ரவியின் உள்ளங்கை இரண்டும் ஜானகியின் மார்பகத்தில் அழுந்திவிட்டன. இருவருக்கும் திகைப்பு. ரவி சற்றும் எதிர்பாராதவிதமாக ஜானகியின் காலைத் தொட்டு ‘‘ஸாரி’’ என்றார். ‘‘அய்யோ என்ன சார் நீங்க... பரவாயில்லை’’ என ஜானகியும் உடனே திகைப்பில் இருந்து பெருந்தன்மைக்குத் திரும்பிவிட்டாள். இது நடந்து சில நாட்களாக ரவி எதிர்ப்படவில்லை. எதிர்ப்பட்ட ஒரு நேரத்தில் ஜானகியை ரவி ஏறெடுத்துப் பார்க்கவே சங்கடப்படுவது தெரிந்தது.

‘‘ஏன் ரவி என்கிட்ட பேசாம போறீங்க?’’ என ஜானகிதான் கூப்பிட்டுக் கேட்டாள். அப்போது கேபினில் யாருமில்லை.

‘‘உங்களைப் பார்க்கும்போதெல்லாம் அந்த ஞாபகம்தான் வருது’’ ரவிக்கு மறைத்துப் பேசவும் தெரியாது. ஜானகிக்குச் சிரிப்புதான் வந்தது.

‘‘தெரியாம நடந்ததுதானே... அதுக்காகப் பேசாமலே இருப்பீங்களா?’’

அதன்பிறகு ரவி சொன்னதுதான் பரிதாபமாக இருந்தது. ‘‘எனக்கு அந்த ஷாக்ல இருந்து மீளவே முடியலை.’’

‘‘சரி ரவி... நான் கிளம்பறேன்.’’ ஜானகி விருட்டெனக் கிளம்பிவிட்டாள்.

ரண்டு பேரும் ஒரே புள்ளியில் சிந்தித்தனர். ரவியை ஒருமுறை பார்க்க வேண்டும் என அனிதாவும் நினைத்தாள். அவரைப் பார்த்தால், எல்லா மேகமும் விலகிவிடும் என்பது ஜானகியின் எண்ணமாகவும் இருந்தது. அனிதாவுக்கு ஏதோ சந்தேகம் வந்துவிட்டதைத் தீர்த்துவைப்பது நமக்கு ஒரு வேலையா என நினைக்கும்போதே, மகள் இந்த வயதில் தன்னைச் சந்தேகிப்பதும்கூட ரசனைக்குரிய நினைவாகத்தான் ஜானகிக்கு இருந்தது.

p68b.jpg

ரவி வீட்டுக்கு வந்த நேரத்தில் அனிதாதான் முதலில் பேசினாள்.

‘‘அங்கிள், நீங்கள்தான் ரவியா?’’

‘‘ஆமாம் அனிதா’’ எனக்கும் உன் பெயரைத் தெரியும் என்பதாகக் கண்களைச் சிமிட்டினார். மிருதுவான கைகுலுக்கலில் ஒளி பொருந்திய உண்மையான அந்தக் கண்களில் அனிதா குற்ற உணர்வுக்கு ஆளானாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘‘காலைல கோயமுத்தூருக்கு ட்ரான்ஸ்ஃபர். அங்கே போய் சார்ஜ் எடுக்க வேண்டும். எல்லாமே தப்பாகிவிட்டது. வீட்டை ஏலம் விட்டுத்தான் கடனைத் திருப்ப முடியும் என்று முடிவாகிவிட்டது. எனக்கு ஒரு ப்ளாக் மார்க் இந்த விஷயத்தில்’’ என்று அனிதாவுக்கும் எல்லாமே தெரிந்திருக்கும்போலச் சொன்னார் ரவி.

ஜானகி, ‘‘பேங்க் விவகாரம் எல்லாம் அவளுக்குத் தெரியாது’’ என அவசரமாக முன்வந்தாள். வீட்டில் ஓர் ஆணின் குரலும் வாசனையும் ஜானகிக்கு அந்த நேரத்தில் வினோதமாகத்தான் இருந்தது.
சாப்பிடுவாரா, வெறும் டீயோடு கிளம்பிவிடுவாரா என மனதுக்குள் நினைத்துக்கொண்டே சப்பாத்தி, கோழிக் குருமா, கேசரி அல்வா என ஜானகி விதம்விதமாகச் சமைத்திருந்தாள். இரவு மூவரும் சாப்பிட்டபோது, அறையைக் காலிசெய்துகொண்டு வந்துவிட்டதைச் சொன்னார்.

‘‘எல்லா மெட்டீரியலையும் வேன்ல ஏத்தி கோயமுத்தூர் அனுப்பிட்டேன். இதோ இந்த ஒரு பெட்டி மட்டும்தான்.’’

‘‘அய்யோ அங்கிள். அப்ப நைட் எங்கே ஸ்டே பண்றீங்க?’’

‘‘எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. இந்த ஒரு நைட் தங்கிக்க முடியாதா?’’

‘‘காலையில எத்தனை மணிக்கு ட்ரெய்ன்?’’

‘‘ஆறரை.’’

‘‘அதுவரைக்கும் தங்குறதுக்கு ஓர் அறை தேடுவீங்களா? இந்த ரூம் சும்மாத்தான் இருக்கு. நீங்க இங்கயே தங்கலாம்... என்னம்மா சொல்றே?’’

இப்படி அதிகப்பிரசங்கித்தனமாக ஒரு யோசனை சொல்லிவிட்டு அதற்குச் சம்மதம் கேட்கும் மகளை ஒரு கண்டிப்பு கலந்த பார்வை பார்த்த ஜானகியை ரவியும் கவனிக்கத் தவறவில்லை. ‘‘அது சரியா இருக்காது. நான் கிளம்பறேன்.’’

‘‘நோ ப்ராப்ளம் ரவி சார்... அதனால் என்ன? இப்பவே மணி 9 ஆகிடுச்சு. இனிமே போய் எங்க தங்கிட்டு, காலையில போய் ட்ரெயினைப் பிடிப்பீங்க?’’ மகள் அத்தனை அழுத்தமாகவும் பெருந்தன்மையாகவும் அழைப்பு விடுத்தபின்பு ஜானகி மட்டும் என்ன செய்வாள்?

‘‘பயப்படாதீங்க அங்கிள்...’’ அந்த அறையின் விளக்கையும் ஃபேனையும் இயங்கவைத்து, ‘‘ரொம்ப மோசமாக இருக்காது. வந்து பாருங்க’’ என்றாள் அனிதா.

அவன் இத்தனை நாள் தங்கியிருந்த அறையைவிட அது அழகாகவே இருந்தது. ரவி சிரித்துக்கொண்டே சொன்னார். ‘‘இது எனக்கு அரண்மனை’’ ஒரு வழியாக அனிதாவின் அன்புக்காகவும் பிடிவாதத்துக்காகவும்தான் அன்று ரவி அங்கே தங்குவதற்குச் சம்மதித்தார்.

டி.வி ஓடிக்கொண்டிருந்தது.

‘‘அம்மாவுக்கு முரசு சேனல், சன் லைஃப் இந்த மாதிரிதான் பார்க்கப் பிடிக்கும் அங்கிள். சிவகார்த்திகேயனை விஜய்சேதுபதிம்பாங்க. விக்ரம் பிரபுவை கார்த்திக் பையனாம்பாங்க...’’

‘‘சிவகார்த்திகேயன்னா யாரு?’’ என்றார் ரவி.

‘‘அங்கிள் நிஜமாத்தான் சொல்றீங்களா?’’

‘‘கிரிக்கெட் பிளேயரா?’’

p68c.jpg

‘‘போதும் அங்கிள். நீங்க ரெண்டு பேரும் சன் லைஃப் பாருங்க’’ சேனலை மாற்றிவைத்துவிட்டு, அனிதா வாட்ஸ்அப்பில் எதையோ பார்க்க ஆரம்பித்தாள். அனிதாவுக்கு ரவியை முழுதுமாகப் புரிந்துபோயிருக்கும் என்பதே ஜானகிக்கு சந்தோஷமாக இருந்தது. சோபாவிலேயே சாய்ந்து உறங்க முயற்சி செய்த அனிதாவை, ‘‘உள்ளே போய் படு’’ என அதட்டினாள்.

ரவி வெகு நேரம் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தார். புதிய இடம் தூக்கம் வரவில்லை. நினைவுகளின் துரத்தலும் ஒரு காரணம். ‘தற்செயல் என ஏதாவது உண்டா? செயல் மட்டும்தான் உண்டு. தானாக எதுவும் நடப்பதே இல்லை. ஜானகியின் மீது மோதியது தற்செயலா? இல்லை... நற்செயல்... ஹா... ஹா! சே! தற்செயல் இல்லை. எதிர்பாராதவிதமாக நிகழ்ந்ததா? எதிர்பாராமல் எதிர்பார்த்தது.’

ரவிக்கு இந்த இரவை எப்படியாவது முடித்துவிட்டுக் கிளம்ப வேண்டும்போல இருந்தது. அவர் கையில் எதுவும் இல்லைபோல தோன்றியது. ரவி அறையைவிட்டு வெளியே வந்தபோது, ஹாலில் ஊதா நிறத்தில் மெல்லொளி பாய்ச்சிய ஒரு விளக்குமட்டும் எரிந்துகொண்டிருந்தது. அதே நேரத்தில் ஜானகி அவள் இருந்த அறையில் இருந்து வெளியே வந்தாள். தற்செயல்தான்! உள்ளே மகள் இருக்கிற அவதானிப்பில் மெல்ல கதவைச் சாத்தி வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு, ‘‘என்ன ரவி?’’ என்றாள்.

``தாகமா இருந்தது'' என்றார் ரவி.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.