Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதியம்- உடன் பிறந்தே கொல்லும் வியாதி

Featured Replies

தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்தின் வீரவரலாறு 18 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களின் உயிராலும் இரத்தத்தாலும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் தமிழனத்தின் சாபக்கேடும் உடன் பிறந்தே கொல்லும் வியாதியுமான சாதியத்தை பற்றி இங்கே புலம் பெயர்ந்த நாட்டில் இருந்து பேச வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

இன்று புலம் பெயர்ந்த நாடுகளிலுள்ள புலி எதிர்ப்பாளர்களுடைய பிழைப்புக்கான மூலதனமாக சாதியம் திகழ்கிறது. தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்தை குறுகிய சாதிய வட்டத்துக்குள் அடக்கி கொச்சைப்படுத்தி மக்களை பிளவு படுத்த முனையும் வேலைகளும் திட்டமிட்டு செய்யப்பட்டு வருகின்றன.

மறுபுறத்திலே ஒருவன் தான் இருக்கும் ஊரை மாற்றலாம் தனது பெயரை மாற்றலாம் தனது தொழிலை மாற்றலாம் தனது மதத்தை மாற்றலாம் ஆனால் தனது தாய் தந்தையரையும் தனது பிறப்பையும் அதனால் வரும் சாதிய அடையானத்தையும் மாற்ற முடியாது என்று சொல்கின்ற ஒரு கூட்டமும் 'சாதியா அது எங்கே இருக்கிறது' என்று சிங்களப்பார்வை பார்வை பார்த்து பம்மாத்து விடுகிற ஒரு கூட்டமும் இங்கே புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கிறது.( சிங்களப் பார்வை என்றால் தமிழர்களுக்கு இனப்பிரச்சனை என்ற ஒன்று இருக்கிறதா என்று முழுப் புசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்ப்பது.தமிழர் எல்லாம் பொரிய உத்தியோகத்தில் இருக்கிறார்கள்.வியாபாரம் அவர்கள் கையில் தான் இருக்கிறது. கொழும்பில் இலட்சக்கணக்கான தமிழர்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்று உதாரணம் காட்டுவது)

2000 வருட காலமாக நமது கருத்தியல் தளத்திலே ஆளமாக வேரூன்றி நமது சிந்தனைத் தளத்தை ஆக்கிரமித்திருக்கிற சாதியத்தை நாங்கள் ஒரு 30 வருடப் போராட்டத்தில் முற்று முழுதாக அழித்துவிட முடியாது என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்.

சாதியம் என்பது மாறவில்லை அது அன்று இருந்த வடிவத்தில் இன்றும் அப்படியே இருக்கிறது என்று கூறமுடியாது.இன்று அடிமை குடிமை முறை கிடையாது. தீண்டாமை அன்றிருந்த நிலையில் இன்று இல்லை. ஆனால் அது முற்றாக ஒழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது.

சாதியம் என்பது என்ன? இது எப்போது தோன்றியது? இன்று எங்கள் மத்தியிலே இருக்கக் கூடிய சாதியம் தமிழ் சமூக உருவாக்கத்துடன் தோற்றம் பெற்றதா அல்லது அந்நிய ஆக்கிரமிப்பாளர்களால் திணிக்கப்பட்டதா என்கின்ற வினாக்களுக்கு விடை தெரியாத நிலையில் அல்லது அதை தெரிந்து கொள்ள விரும்பாத நிலையிலேயே எல்லோரும் சாதியைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் வர்க்க அடிப்படையிலான சாதியத்துக்கும் வர்ணக்கோட்பாட்டின் அடிப்படையிலான சாதியத்துக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நம்மவர்கள் புரிந்துகொள்வதே இல்லை.

வர்க்க அடிப்படையிலான சாதி அமைப்பு என்பது அதாவது ஆண்டான் அடிமை- முறையும் மூலதனத்தை அல்லது சொத்தை அடிப்படையாகக் கொண்ட ஏற்றத் தாழ்வுகளும் ஐரோப்பிய சமூகத்தில் கூட இருந்தன. சர்வ வல்லமை பொருந்திய மத குருமார்கள் அரச பரம்பரையினர் பிரபுக்கள் அல்லது பூர்சுவாக்கள் வணிகர்கள் குடியானவர்கள் அல்லது அடிமைகள் என்று ஐரோப்பிய சமூகத்திலும் எற்றத் தாழ்வுகள் இருந்தன.

தமிழ் சமுகத்திலும் குறுஞ்சி முல்லை நெய்தல் மருதம் பாலை என்ற ஐவகை நிலப் பிரிவினை அடிப்படையிலான சமூக அமைப்பும் வலிமை மற்றும் சொத்தின் அடிப்படையிலான ஆண்டான் அடிமை முறையும் மற்ற சமூங்களைப் போலவே இருந்தது. செய்யும் தொழிலை அடிப்படையாக வைத்து மனிதர்களை இழிவுபடுத்தும் முறை தமிழ் சமூகத்தில் ஒரு பொது வழக்கமாக இருந்ததாகத் தெரியவில்லை. அடிமை குடிமை முறை சில தொழில்களை அடிமட்ட மக்கள் தான் செய்யவேண்டும் என்று கட்டாயப் படுத்தி இருந்தது. ஆண்டைகளுக்கும் அடிமைகளுக்கும் இடையிலான ஏற்றத் தாழ்வு என்பது ஏனைய சமூகங்களில் இருந்தததைப் போலவே தமிழ் சமூகத்திலும் இருந்தது. ஆனாலும் பண்டைய தமிழ் சமூகம் காதல் மணத்தையும் களவு மணத்தை ஏற்கொண்ட சமூகமாக இருந்தால் சாதியக் கலப்பு தடுக்கப்படவில்லை என்பதையும் அறிய முடிகிறது.

ஆனால் இன்று தமிழ் சமூகத்துடன் பின்னிப் பிணைந்திருக்கும் சாதிய அமைப்பென்பது அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இது தனக்குத் தானே வேலிபோட்டு தன்னை தானே அடைத்துக்கொன்டுவிட்ட ஒரு சமூக அலகாகாகும். தமிழ் சமுகத்தை தனித்தனி அலகுகளாக்கி எந்த ஒரு அலகும் மற்ற எந்த ஒரு அலகுடனும் இணைவதை 'புனிதம் தீட்டு அகமணமுறை' என்பவற்றின் முலம் தந்திரமாகத் தடுப்பதே இன்றைய இந்த சாதி அமைப்பின் அடிப்படையாகும். 'நான் கடவுளின் படைப்பால் புனிதமானவன். என்னுடைய சாதி புனிதமானது. நான் என்னுடைய சாதி அலகுக்குள் அல்லாத அடுத்த சாதியினனை என்னுடன் சேர்த்துக்கொண்டால் அல்லது என்னுடைய வீட்டுக்குள், கோவிலுக்கள் அனுமதித்தால் ஒன்றாக உண்டு குடித்து உறங்கினால் தீட்டுப்பட்டுவிடும் என்பதே இந்த சாதி அமைப்பு போதித்து வைத்திருக்கும் நீதியாகும். எனவே இந்தப் புனிதத்தை காப்பாற்றுவதற்கு அகமணமுறை அதாவது தங்களது உறவு வட்டத்துக்குள் திருமணம் செய்வது வலியுறுத்தப்படுகிறது. காதல் திருமணமும் கலப்புத் திருமணமும் பாவச் செயலாகவும் எற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் பிரகடனப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு சாதிய அலகும் தன்னை தானே தன்னளவில் புனிதர்கள் என்ற நினைப்போடு மற்ற சாதிய அலகுகளில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதால் ஏனைய சமூகங்களிலும் இனங்கள் மத்தியிலும் (இந்தியா இலங்கை தவிர்ந்த) ஏற்பட்ட தொழில் புரட்சி பொருளாதார மாற்றம் மற்றும் அரசில் புரட்சிகளால் வர்க்க அடிப்படையிலான காரணங்களின் அடிப்படையில் இருந்த சாதி அமைப்பு தகர்ந்தது போல எங்கள் மத்தியல் இருக்கும் சாதி அமைப்பு தகரவில்லை.

என்னளவில் எங்கள் அளவில் நாங்கள் மேலானவர்கள் புனிதர்கள் என்று எங்கள் சிந்தனைத் தளத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கருத்தியலே பௌத்த சிங்கள பேரின வாதிகள் குண்டு வீசி எங்கள் இனத்தையே அழிக்கும் போது சாதியையும் தூக்கிக் கொண்டு ஓடுவதும் புலம் பெயரும் போது அதையும் விமானமேற்றி கூடவே அழைத்து வருவதும் தொடர்கிறது. இந்த கருத்தியல் தான் காட்டிக் கொடுப்புக்களுக்கும் துரோகத்தனத்துக்கும் பிழைப்பு வாதத்துக்கும் கூட அடிப்படையாக இருக்கிறது.

ஈழத் தமிழ் மக்களான நாங்கள் யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு என்ற மூன்று வாழ்வியல் தளங்களை கொண்டவர்கள். இதில் யாழ்ப்பான சமூகமும் அதன் வாழ்வியல் தளமும் மட்டுமே இறுக்கமான சாதியக் கட்டமைப்பை கொண்டதாக இருந்தது. சாதி என்பது தமிழர்களுடைய அடையாளம் என்று இந்த சமூகம் நம்பியது.

யாழ்ப்பாண சமூகத்தின் சாதி அமைப்பு கட்டுள்ள சாதிகள், கட்டற்ற சாதிகள், கட்டுள்ள கலப்புச் சாதிகள், கட்டற்ற கலப்புச் சாதிகள் என்ற நான்கு வரையறைகளைக் கொண்டவையாக இருந்தது.

வெள்ளாளர், பிராமணர், கோவியர். நளவர், பள்ளர், பறையர், வண்ணார், அம்பட்டர், ஆகிய சாதிகள் கட்டுள்ள சாதிகளாக இருந்தன. இதில் வெள்ளாளரும் பிராமணர்களும் அதிகார வர்க்க சாதியினராகவும் ஏனையோர் அடிமைச் சாதியினராகவும் இருந்தனர்.

இந்தியாவை பொறுத்தவரை பிராமணர்கள் முதன்மைச் சாதியினராக இருந்த போதிலும் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர்களுக்கு அடுத்த இடத்திலேயே அவர்களது நிலை இருந்தது.

இந்துத்துவ வர்ணக் கோட்பாட்டின்படி வெள்ளாரர்கள் சூத்திரர்கள் என்ற அடிமட்ட சாதிப் படிநிலைக்குள் அடக்கப்பட்ட போதிலும் ஆறுமுக நாவலர் அதை மறுதலித்து வெள்ளாளர்களை சற்சூத்திரர்கள் அதாவது பிராமணர்களுக்கு நிகரானவர்கள் என்று நிறுவியதும் நிலமும் கோவில்களும் வெள்ளாளர்களுடைய ஆதிக்கத்திலேயே இருந்ததும் பிராமணர்கள் அவர்களது கோவில்களில் ஊழியம் செய்பவர்களாக இருந்ததுமே அவர்களது சாதிப் படி நிலையை பின் தள்ளிவிட்டது.

இந்த கட்டுள்ள சாதி அமைப்பில் கோவியரும் பஞ்சமர்கள் எனப்படும் நளவர், பள்ளர், பறையர், வண்ணார், அம்பட்டர் ஆகியோரும் வெள்ளாளர்களுடைய குடிமைகளாக கருதப்பட்டார்கள். 1920 ம் ஆண்டு இந்த குடிமைமுறை சட்டரீதியாக ஓழிக்கப்பட்டாலும் 1970ம் ஆண்டு வரை அது தேசவழமை என்ற பேரில் கட்டாயப் படுத்தப்பட்டிருந்து. கோவியர்கள் வெள்ளாளர்களுடைய வீட்டு வேலைகளை செய்வதும் அவர்களது உடமைகளாக இருந்த கோவில்களுக்கு ஊழியம் செய்வதும் கட்டாயப்படுத்தப்பட்டு இருந்தது.

ஏனைய பஞ்சமர் சாதிகள் வெள்ளாளர்களின் விளை நிலங்களில் கூலியின்றி வேலை செய்து கொடுப்பது, அவர்களது வீட்டு திருமண ஊர்வலங்களில் "கா" காவிச் செல்வது. அதாவது ஒரு தடியில் ஒரு முனையில் வாழைக்குலை, பலாப்பழம் முதலான பழ வகைகளையும் மறு முனையில் அரிசி முதலான உணவுப் பண்டங்கள் மற்றும் பாத்திரங்கள் முதலான சீர் வரிசைகளையும் கட்டித் தொங்க விட்டு அந்தத் தடியை தோளில் வைத்து அந்த ஊர்வலம் முடியும் வரை காவிக் கொண்டு செல்வதே "கா" காவுதலாகும். மரணச்சடங்கில் பாடை கட்டுவது (பெண்கள்) குடக் குரவை வைப்பது மயானத்தில் பிணத்தை எரியூட்டுவது என்று இந்தக் குடிமை முறை நீண்டு கொண்டு செல்லும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் கட்டற்ற சாதிகளாக முக்குவர், திமிலர், தட்டார், செட்டிகள் முதலானவை இருந்தன. இந்தச்சாதிகள் தங்களுக்குள் இறுக்கமான கட்டுக் கோப்பையும் அகமண முறையையும் கொண்டவையாக இருந்த போதிலும் கட்டுள்ள சாதிகளைப் போல அடிமை குடிமைகளை கொண்டவையாக இருக்கவில்லை.

கட்டுள்ள கலப்புச்சாதிகள் என்ற வரையறைக்குள் நட்டுவர்கள், பண்டாரிகள் முதலானோர் அடக்கப்பட்டனர். தங்களுக்குள் தங்களுக்கு இணையான சாதியனருடன் உறவுகளை பேணிவந்த இவர்கள் அடிமை குடிமைகளை ஒடுக்கும் விடயத்தில் வெள்ளார்களுக்கு இணையானவர்களாகவே இருந்தார்கள்.

கட்டற்ற கலப்புச்சாதிகளாக கரையார், தச்சர், கொல்லர், குயவர் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். அதிகளவுக்கு நெகிழ்வுத் தன்மையைக் கொண்ட இந்தச் சாதியினரிடையே தீண்டாமையும் மற்றவர்களை அடக்கி ஒடுக்கும் மனோபாவமும் ஏனைய மேல்தட்டு மற்றும் இடைநிலை சாதியினரை விடக் குறைவாகவே இருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் எனைய பகுதிகளை விட கரையார சாதியினரை அதிகமாகக் கொண்ட வடமராட்சி கிழக்கு பகுதிகள் சாதிய ஒடுக்குமுறை மிகக் குறைந்த பகுதிகளாக இருந்ததும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

1697ம் ஆண்டு ஒல்லாந்தருடைய ஆட்சிக்காலத்தில் 40 சாதிகள் இருந்ததாக குறிக்கப்பட்டிருக்கிறது. தற்போது 15 முதல் 20 சாதிகளே வழக்கில் இருப்பதாகவும் அதிலும் சில சாதிகள் மறைந்துவிடும் நிலையில் இருப்பதாகவும் 2000ம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழர்கள் தங்கள் வரலாற்றை தொலைத்தற்கும் தங்கள் தேசத்தை தொலைத்ததற்கும் அடிப்படையான இந்தச் சாதியத்துக்கு அடிப்படையாக இருப்பது வைதீக இந்து மதம் என்பதில் யாரும் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம். கி.மு.1 ம் நூற்றாண்டில் வட இந்தியாவிலே ஆட்சியில் இருந்து சுங்க வம்சப் பிரிவைச் சேர்ந்த (பார்ப்பணிய பிரிவு) புஷ்யமித்திரன் என்பவனின் ஆட்சிக்காலத்தில் சுமதி பார்கவா என்ற பிராமணனால் உருவாக்கப்பட்ட மனு தர்மம் என்றே நூலின் மூலமே சாதியம் சட்டமாக்கப்பட்டது. இந்த இந்துத்துவ சட்ட நூலில் வகுக்கப்பட்ட வர்ணக் கோட்பாட்டின் மூலமே குலத் தொழிலும் தீண்டாமையும் அகமணமுறையும் மக்கள் மீது திணிக்கப்பட்டன.

நம்மிலே பலர் வைதீக இந்து மதத்துக்கும் தமிழர் மதத்துக்குள் வேறுபாடு காண முடியாத நிலையிலேயே இருக்கின்றார்கள். அன்பேசிவம் என்பதும் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதும் தான் தமிழர் மதமாகும். சிவலிங்கம் என்பது ஆண் பெண் உறுப்புக்கள் சேர்ந்த வடிவம் என்பதும் கி.பி முதலாம் நூற்றாண்டு வரை ஆரிய வைதீக பிராமணர்கள் இந்த வழிபாட்டு முறையை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. திராவிடர்களை போரில் வெல்ல முடியாத ஆரியர்கள் தங்களது வர்ணக் கோட்பாட்டை தமிழர்கள் மத்தியல் புகுத்தி தந்திரமாக அவர்களை அடிமை கொள்வாற்காக பிச்சாண்டியான சிவனை மஹாதேவனாகவும் முருகனை ஸ்கந்தனாவும் கண்ணனை மகா விஸ்னுவாகவும் காளியையும் ஏனைய பெண் தெய்வங்களையும் சக்தியின் அம்சங்களாகவும் மாற்றிய வரலாற்றை இந்தக் கட்டுரையின் நீட்சி கருதி இங்கே குறிப்பிடவில்லை.

18 ம் நூற்றாண்டில் (1790 என்று நினைக்கிறேன்) தமிழகத்தின் பாண்டிச்சேரி காரைக்கால் பகுதிகளை கொலனிகளாக வைத்திருந்த பிரெஞ்சு அரசின் ஆளுனராக இருந்த தளபதி துப்ளக்ஸ் என்பவர் தமிழ் சமூகம் பற்றி ஒரு ஆய்வை செய்திருக்கிறார்.

இந்த ஆய்வில் முக்கியமான அம்சம் சோழரைப் பற்றியது. ஐரோப்பியர்களான தாங்கள் கடல் கடந்து சென்று நாடுகளைப் பிடித்து கொலனிகளாக வைத்திருப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தச் சோழர்கள் அதாவது தமிழர்கள் கிழககு மற்றும் தெற்காசியாவிலுள்ள பல நாடுகளை பிடித்து தங்கள் ஆட்சியின் கீழ் வைத்திருந்திருக்கிறார்கள். அந்த நாடுகளில் அவர்கள் திரட்டிய செல்வம் எல்லாவற்றையும் அவர்கள் தொழில் துறைகளில் முதலீடு செய்திருந்தால் இன்றைக்கு அவர்களுடைய நாடு பிரான்சை விட பலம் கொண்ட நாடாகவும் வளாச்சியடைந்த நாடாகவும் இருந்திருக்கும். ஆனால் அவர்களுக்கு ஆலோசகர்களாக இருந்த பிராமணர்கள் நீங்கள் சென்ற இடங்களில் எல்லாம் கொலையும் கொள்ளையும் செய்து பாவம் சம்பாதித்துவிட்டீர்கள். இந்த கொடிய பாவம் உங்கள் சந்ததியை அழித்துவிடும் அதற்கு பிராயச்சித்தம் தேடுவதற்கு கோவில்களை கட்டுங்கள் யாகங்கள் நடத்துவதற்கும் வேத பாராயணம் செய்வதற்கும் பிராமணர்களுக்கு தானங்களை வழங்குங்கள் எற்று கூறி அந்த செல்வம் எல்லாவற்றையும் கோவில் கட்டுவதற்கும் சதுர்வேதி மங்கலங்கள் என்ற யாக சாலைகளை அழைப்பதற்கும் செலவழிக்க வைத்துவிட்டார்கள்.இன்று சோழர்களும் இல்லை. அவர்களது இராட்சியமும் இல்லை. அவர்களது குடி மக்களான தமிழர்கள் தங்களது முன்னோர்கள் செய்த பாவம் தீர இன்னமும் கோவில்களில் பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கிறார்கள். சோழர்களை போரில் வெல்ல முடியாத அவர்களது எதிரிகள் மதம் என்ற அவர்களது பலவினத்தை வைத்து அழித்ததை பிரான்ஸ் அரசாங்கம் உதாரணமாகக் கொள்ளவேண்டும் என்று துப்ளக்ஸ் தனது ஆய்வில் தெரிவித்திருக்கிறார்.

சாதி என்பது தமிழ் சமூகம் ஒன்றுபடுவதற்கும் விடுதலை இலக்கை விரைந்து அடைவதற்கும் முக்கியமான தடைக்கல்லாக இருக்கிறது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.

தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் சாதியத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் என்பதிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குள் சாதியம் என்பது நுழைய முடியாது என்பதிலும் சந்தேகமேயில்லை. இதற்கு ஏராளமான நடைமுறை சார்ந்த உதாரணங்கள் இருக்கின்றன. அவை பற்றி இங்கு பேச வேண்டிய தேவையும் இல்லை.

இப்போது பிரச்சனை என்னவென்றால் புலம் பெயர்ந்த சமூகத்தை சீரழிப்பதற்கு சாதியத்தை கையில் எடுப்பதாகும்.

புலம் பெயர்ந்த நாடுகளில் சாதி பார்க்கப்படுகிறதா? அது எந்த வகையில் பார்க்கப்படுகிறது? ஏன் பார்க்கப்படுகிறது? என்பது விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயமாகும். 'நான் திருமணம் செய்யும் போது சாதி பார்ப்பது எனது தனிப்பட்ட உரிமை' என்று கூறுவது தொழில் நிறுவனங்களில் சுவரை வெட்டி கண்ணாடி பொருத்தியும் அறைக்கு அறை கமெராக்கள் பொருத்தியும் வேலை செய்பவர்களை எஜமான் பண்ணையார் ஸ்டைல்களில் கண்காணித்து பழைய அடிமை குடிமை முறைக்கு புத்துயிர் அளிப்பது. அதை நிர்வாகச் செயற்பாடாக நியாயப்படுத்துவது. ஒரு மனிதனுக்கு தான் கண்காணிக்கப்படுகிறேன் என்ற உணர்வு ஏற்படும் போது அவனால் சுதந்திரமாகவும் அர்ப்பணிப்புடனும் வேலை செய்முடியாது என்ற அடிப்படை உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பது. நடுத் தெருவில் ஆட்களை நிறுத்தி அவர்கள் மீது தமது அதிகாரங்களை செலுத்தி தங்கள் மேலாண்மையை நிலை நிறுத்துவது. ஐரோப்பிய சமூகத்தில் கோட்சூட் போட்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்றும் ரை கட்டுவது என்பது பரம்பரையாக வரவேண்டும் என்று சொல்வது. சாதி பார்ப்பவர்களை மறைமகமாக தட்டிக்கொடுத்து அவர்களது செயல்களை ஊக்கவித்துவிட்டு மறு புறத்தில் நமது சமூகம் இன்னும் திருந்தவில்லை என்ற பம்மாத்து விடுவது இப்படி எராளமான விடயங்கள் புலம்பெயாந்த சமூகத்தில் நடக்கின்றன. இவற்றுக்கான அடிப்படைகள் எவை. இந்த போக்குகள் எப்படி புலம்பெயாந்த இளைய சமூகத்தை அந்நியப்பட வைக்கின்றன. இவை எப்படி தமிழ் தேசித்துக்கு துரோகம் செய்கின்றன என்பதை அடுத்த கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன்.

சிவா சின்னப்பொடி

  • Replies 115
  • Views 14.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிவா சின்னப்பொடி அவர்களே,

காலத்திற்குத் தேவையான கருப்பொருட்களை சுமக்கிறது உங்கள் ஆக்கம்.

புலம் பெயர்ந்தோர் மத்தியில் அதாவது இன்றைய சந்ததியிடம் செறிந்து கிடக்கும் சாதியவிசத்தை அழிக்கமுடியாதா? என்றும் ஏங்கும் தமிழர்களில் நானும் ஒருத்தி. தொடர்ந்து வரும் உங்கள் சிந்தனைக் கட்டுரை காண ஆவலுடன் உள்ளோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் மக்களில் பலர் கூட சாதிய வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கிறார்க ள். வெளிநாடுகளிற்கு வந்தாலும் கூட சாதி பார்த்துப்பழுகும் வியாதிக்காரர்கள் நிறையவே எம்முள் இருக்கிறார்கள். நேரடியாக இதைப்பற்றி கேட்கும்போது விளக்குமாற்றை கொண்டுவந்து பூசை அறையில் வைக்கமுடியுமா என்று கேட்கிறார்கள்.

சாதியம் என்ற பெயரில் அப்பாவி மக்களிற்கு யுகம் யுகமாக அநீதி இழைக்கப்பட்டு வந்துள்ளது. அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. கல்வி கற்று உயர்நிலைக்கு டாக்டர், என்ஞீனியர் என்று வந்திருந்தாலும் கூட அவர்களின் சாதியைச் சொல்லி குத்திக்காட்டி நையாண்டி பண்ணும் கேவலங்கள், அவர்களிற்கு உரிய கெளவரங்களை கொடுக்காது ஒதுக்கி வைக்கும் கொடுமைகளெல்லாம் எல்லாம் நடந்துள்ளது. நடக்கின்றது.

நான் சிறுவயதில் இருந்தபோது எமது வீட்டுக்கு கூலி வேலைகள் செய்ய வந்த தொழிலாளர்களிற்கு சிரட்டையில் ஊற்றி தேனீர் கொடுக்கப்படுவதையும், குறைந்த சாதிக்காரர்கள் என்று சொல்லப்படுபவர்களின் வீடுகளிற்கு உயர்ந்த சாதிக்காரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் போனால், அங்கு தவிர்க்கமுடியாத காரணத்தால் ஏதாவது அருந்தவேண்டி ஏற்பட்டால் பேணியில் வாய்வைத்து குடிக்காது அண்ணாந்து குடிப்பதையும் பார்த்திருக்கின்றேன். இவற்றை இப்போது நினைத்து வெட்கித் தலை குனிகின்றேன்.

இங்கு வெளிநாடுகளில் எல்லாச் சாதிக்காரர்களுமே சாப்பாட்டுக்கடைகளில் கண்டவன், கண்டவன் செய்கின்ற கழிவை - கக்கூசு கழுவி சுத்தம் செய்கிறர்கள். பணத்திற்காக எல்லாவிதமான கூலிவேலைகளையும் செய்கிறார்கள். இவ்வாறு உழைத்து பெறும் பணத்தை வைத்துக்கொண்டு திரும்பவும் தங்களுக்குள் உயர்வு, தாழ்வு பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சாதியம் ஒரு வியாதி அல்லது அறியாமை அல்லது ஒரு மனநோய் என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை.

நான் சிறுவயதில் இருந்தபோது எமது வீட்டுக்கு கூலி வேலைகள் செய்ய வந்த தொழிலாளர்களிற்கு சிரட்டையில் ஊற்றி தேனீர் கொடுக்கப்படுவதையும், குறைந்த சாதிக்காரர்கள் என்று சொல்லப்படுபவர்களின் வீடுகளிற்கு உயர்ந்த சாதிக்காரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் போனால், அங்கு தவிர்க்கமுடியாத காரணத்தால் ஏதாவது அருந்தவேண்டி ஏற்பட்டால் பேணியில் வாய்வைத்து குடிக்காது அண்ணாந்து குடிப்பதையும் பார்த்திருக்கின்றேன். இவற்றை இப்போது நினைத்து வெட்கித் தலை குனிகின்றேன்.

மாப்பிளை, ஒரு சின்ன உளவியல் கேள்வி.

எனது அனுபவத்தில் நான் பார்த்ததில், புலம் பெயர் தேசத்தில் மிகமிகப் பெரும்பான்மையான நம்மவர்கள் தாங்கள் சாதியம் ஒழித்தல் பற்றிக் கதைக்கும் போது, எங்கே தாம் சாதியம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கதைப்பதால் மற்றவர் தம்மை ஒடுக்கப்பட்ட ஒருவராகக் கருதிவிடுவாரோ என்ற ஒரு வகைப் பயத்தில், லாவகமாக .....

||நான் சின்ன வயசா இருக்கையில் எங்கட வீட்ட வார ||குறைந்தவர்கள்|| என என் முன்னோர்கள் கருதிய மக்களிற்கு|| இப்படி ஏதோ ஒரு கதை கூறி தமது உயர்நிலையைத் தம்பட்டமடிக்கிறார்கள் என நான் உணர்கிறேன்.

நான் இதை உங்கள் மீது வைக்கும் குற்றச் சாட்டாய் தயவு செய்து விளங்கி விடாதீர்கள். மேற்படி உளவியலை நான் பல இடங்களில் அவதானித்தால் இங்கு இதைக் கேட்கிறேன. இது பற்றிய உங்கள் கருத்து எப்படி இருக்கின்றது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எங்கடை பக்கத்து வீடுகளுக்கு போகும் போது மூக்குப் பேணியென்ற ஒரு பிரத்தியேகப் கப்பில தான் தேனீர் தாறவை. அதை அவர்கள் முகத்தில் வீசியெறிந்து விட்டு வரத்தெரியாத வயது அது. அவர்கள் வீட்டின் பெரியவர்கள் எங்கடை வீட்டுக்கு வாறதென்றால் சோடா தான் குடிப்பினம். ஆனா என்வயதொத்த அந்த வீட்டுக்கார நண்பர்கள் எங்கள் வீட்டில் உணவருந்தி தேனீர் குடித்து போயிருக்கிறார்கள். ஆனா அவர்களுடைய வீட்டில் சொல்ல வேண்டாம் என்பார்கள்.

மாப்பிளை, ஒரு சின்ன உளவியல் கேள்வி.

எனது அனுபவத்தில் நான் பார்த்ததில், புலம் பெயர் தேசத்தில் மிகமிகப் பெரும்பான்மையான நம்மவர்கள் தாங்கள் சாதியம் ஒழித்தல் பற்றிக் கதைக்கும் போது, எங்கே தாம் சாதியம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கதைப்பதால் மற்றவர் தம்மை ஒடுக்கப்பட்ட ஒருவராகக் கருதிவிடுவாரோ என்ற ஒரு வகைப் பயத்தில், லாவகமாக .....

||நான் சின்ன வயசா இருக்கையில் எங்கட வீட்ட வார ||குறைந்தவர்கள்|| என என் முன்னோர்கள் கருதிய மக்களிற்கு|| இப்படி ஏதோ ஒரு கதை கூறி தமது உயர்நிலையைத் தம்பட்டமடிக்கிறார்கள் என நான் உணர்கிறேன்.

நான் இதை உங்கள் மீது வைக்கும் குற்றச் சாட்டாய் தயவு செய்து விளங்கி விடாதீர்கள். மேற்படி உளவியலை நான் பல இடங்களில் அவதானித்தால் இங்கு இதைக் கேட்கிறேன. இது பற்றிய உங்கள் கருத்து எப்படி இருக்கின்றது?

நீங்கள் என்ன கேட்கின்றீங்கள் என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. இங்கு நான் வெட்கித் தலை குனிந்தது எம்மவர்கள் செய்த பிழைகளிற்காகவே! நான் செய்த பிழைகளிற்காக அல்ல!

எனது உளவியல் என்று பார்க்கப்போனால், சிறு வயதிலிருந்தே வீட்டில் கூட சாதியம் பற்றிய இவ்வாறான அறிவுறுத்தல்கள் தரப்படும் போது கூட இந்த சாதியத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை! எனக்கு விளையாடுவதற்கு, பொழுதுபோக்குவதற்கு நண்பர்கள் தேவைப்பட்டது. எனவே எல்லோர் வீடுகளிற்கும் எனது வீட்டிற்கு தெரியாமல் போய் வந்தேன். விளையாடி சந்தோசப்பட்டேன். சாதியம் என்ற வியாதி என்னில் மறைமுகமாக எங்காவது குடியிருந்ததா அல்லது குடியிருக்கிறதா என்பது எனக்கு தெரியாது. ஆனால் எனது மனச்சாட்சியைப் பொருத்தமட்டில் சாதியம் என்ற இந்த மனநோய் எனக்கு இல்லை என்றே கூறுவேன்.

இங்கு உதாரணங்களை சொல்லி கதைத்தால்தான் பிரச்சனையை விளங்கப்படுத்த, மற்றவர்கள் விளங்கிக் கொள்ள முடியும். இதனால் தான் நான் என்ற, எனது என்ற பதங்களை இங்கு பாவிக்க வேண்டியுள்ளது. நான் உயர்ந்த சாதிகாரனோ அல்லது தாழ்ந்த சாதிக்காரனோ என்று யோசித்துக் கொண்டு இருப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை. சிறீ லங்கா அரசின், இந்தியப்படைகளின், கூலிக் குழுக்களின் அட்டகாசங்கள் காரணமாக நான் வேறு பிரச்சனைகளில் ஓடுப்பட்டு திரிய வேண்டி இருந்தது!

நீங்கள் என்ன கேட்கின்றீங்கள் என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. இங்கு நான் வெட்கித் தலை குனிந்தது எம்மவர்கள் செய்த பிழைகளிற்காகவே! நான் செய்த பிழைகளிற்காக அல்ல!

எனது கேள்வி உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அது தான் முதலிலேயே அவ்வாறு எடுத்துக் கொள்ளாதீர்கள் என குறிப்பிட்டிருந்தேன்.

நான் பொதுப்படக் கூற முனைந்தது என்னவெனில், எனது அனுபவத்தில், பலரது உளவியலில் சாதியம் எங்காவது ஒட்டியிருப்பதை பரவலாகக் காணக்கூடியதாய் உள்ளது. நீங்கள் உதாரணமாக மட்டும் தான் உங்கள் அனுபவத்தைக் கூறிநீர்கள் என்பதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் நிட்சயம் இவ்வாறான உதாரணங்கள் அனைவராலும் ஒரே நோக்கத்தில் முன் வைக்கப்படுவதில்லை என்பதே நான் கூற முனைந்த கருத்து. அதாவது சிலரிற்கு ஒரு புறத்தில் சாதியம் ஒழிக்கப்படவேண்டும் என்ற நல்ல எண்ண இருந்தாலும், அவ்வாறு அது ஒழிக்கப்படும் வரை ஏன் தேவையில்லாது அதனால் தாம் பாதிப்பிற்குள்ளாவான் என்ற கவனமும் இருக்கத்தான் செய்கிறது.

சிவாசின்னப்பொடி அவர்களுடைய கட்டுரை மிகவும் ஆழமானது.

ஏற்றத் தாழ்வு மிக்க சாதி என்பதற்கு இந்து மதமே அடிப்படைக் காரணம் என்பதையும், தமிழர் கடவுள்கள் எப்படி ஆரியக் கடவுள்கள் ஆக்கப்பட்டனர் என்பதையும் மிக அழகாக விளக்கி இருக்கிறார்.

நான் இந்தக் களத்தில் அடிக்கடி "ஈழத்தில் பார்ப்பனியம் வேளாளர்கள் வடிவில் இருக்கிறது" என்று சொல்லி வந்திருக்கிறேன். அதையும் சரியான முறையில் இந்தக் கட்டுரை சொல்லி இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.

ஏற்றத் தாழ்வு மிக்க சாதி என்பதற்கு இந்து மதமே அடிப்படைக் காரணம் என்பதையும், தமிழர் கடவுள்கள் எப்படி ஆரியக் கடவுள்கள் ஆக்கப்பட்டனர் என்பதையும் மிக அழகாக விளக்கி இருக்கிறார்.

சபேசன்,

தமிழர்கள் இஸ்லாமியர்களாக மாறி அந்தக் கடவுளரை வணங்குதலோ. ஆல்லது கிறிஸ்தவர்களாக மாறி அந்தக் கடவுளரை வணங்குதலோ உங்களைப் போன்றோரிற்கு பிரச்சினையாய் இருப்பதில்லை ஆனால் இந்துக்கள் ஆரியக்கடவுளரான பிள்ளையார் போன்றோரை வணங்குகிறார்கள் என ஓயாது புலம்பித் தீர்க்கின்றீர்கள். இது குருட்டுத்தனமான பெரியார் விசுவாசம்.

ஒரு விடயத்தில் தெளிவாய் இருங்கள், ஒன்றில் தமிழர்களின் மத சுதந்திரத்தை மதித்து நடவுங்கள் அல்லாது தமிழராகப் பிறந்தவர்களிற்கு மதசுதந்திரம் இருக்கக்கூடாது என்று கூறுங்கள். உங்கள் கருத்தியலிற்கு நீங்கள் உருத்தானவர் அது உங்கள் சுதந்திரம், ஆனால் உங்கள் கருத்து மட்டும் தான் சரி என்பதல்ல.

இந்து மதம் தான் அனைத்திற்கும் மூல பிரச்சினை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஏனெனில் பொதுவில் இந்துக்கள் மதத்தில் கூறிய அனைத்து விடயத்தையும் கைப்பிடிக்கும் உன்னத பக்தர்கள் இல்லை. பஞ்சமா பாதகத்தில் எத்தனை இந்துக்கள் தினமும் செய்கிறார்கள். மக்டொனால்ஸ்சில் கம்பேகர் வேணாம் அது மாடு என்று எத்தனை அனைத்து இந்துக்களும் வாழ்கிறார்களா? ஏனது நண்பர் ஒருவர் கூறுவார் தானொரு Beef eating Beer drinking Hindu என்று.

சுhதியம் ஒரு சார் மக்களிற்கு லாபமாய் இருப்தால் அது தொடர்கிறது. அதற்காக அனைத்துப் பொறுப்பையும் இந்து மதத்தின் தலையில் போடல் ஏற்றுக் கொள்ள முடியாதது.

Edited by Innumoruvan

"இன்னுமொருவன்"!

உங்களுடைய பதிலுக்கும் நான் சொன்ன கருத்துக்கும் என்ன சம்பந்தம்? இதில் பெரியாரை இழுப்பது எதற்கு?

தமிழ் கடவுள்கள் ஆரியக் கடவுள்களாக மாற்றப்பட்டும் துணைக் கடவுள்களாக ஆக்கப்பட்டும் உள்ளன என்ற கருத்தை மறுத்தோ அதரித்தோ கருத்து சொன்னீர்கள் என்றால் அதில் அர்த்தம் இருக்கும்.

இது என்ன சம்பந்தம் இல்லாமல் பேசுகிறீர்கள்?

"இன்னுமொருவன்"!

உங்களுடைய பதிலுக்கும் நான் சொன்ன கருத்துக்கும் என்ன சம்பந்தம்? இதில் பெரியாரை இழுப்பது எதற்கு?

தமிழ் கடவுள்கள் ஆரியக் கடவுள்களாக மாற்றப்பட்டும் துணைக் கடவுள்களாக ஆக்கப்பட்டும் உள்ளன என்ற கருத்தை மறுத்தோ அதரித்தோ கருத்து சொன்னீர்கள் என்றால் அதில் அர்த்தம் இருக்கும்.

இது என்ன சம்பந்தம் இல்லாமல் பேசுகிறீர்கள்?

எந்தக் கடவுகளை துணைக்கடவுளாயோ மூலக்கடவுளாயோ கொள்கிறார்கள் என்பது மக்களின் சுதந்திரம் என்பது நான் சொன்ன கருத்து (இதுக்காகத் தான் கடவுள் எதிர்ப்பு ஆரிய எதிர்ப்புப் பெரியாரை குறிப்பிட நேர்ந்தது) அத்தோடு எனது பதிவை முளவதுமாய் திருப்பிப் படியுங்கள், நீங்கள் இந்து மதத்தின் தலையில் சாதியத்தின் இருப்பிற்கான அனைத்துப் பழியையும் போட்டிருந்தீர்கள் அதை நான் ஏற்க மறுத்து பதிவு இட்டேன்.

"இன்னுமொருவன்"!

கடவுள் எதிர்ப்பும் ஆரிய எதிர்ப்பும் பெரியாருக்கு மட்டும் சொந்தமானது அல்ல

பிறப்பினால் ஏற்றத்தாழ்வு மிக்க சாதியை உருவாக்கியது இந்து மதம்தான். ஏற்றுக் கொள்வதற்கும் ஏற்றுக் கொள்ளமால் விடுவதற்கும் இது நம்பிக்கை அல்ல. இது வரலாறு.

சாதி என்பது மதம் மாறினாலும் விடமுடியாதபடி அது ரத்தத்தில் ஊறிவிடுகிறது.

இதற்கு காரணம் இந்து மதம் 2000 வருடங்களாக சாதியை ரத்தத்தில் பதிய வைத்திருக்கிறது.

அதை மதம் மாறுவதன் மூலம் மாற்றுவது கடினம். இங்கிருந்து அங்கு கொண்டு போய் அந்த மதத்தையும் அழுக்காக்குகின்ற வேலைதான் நடக்கிறது.

Edited by சபேசன்

"

பிறப்பினால் ஏற்றத்தாழ்வு மிக்க சாதியை உருவாக்கியது இந்து மதம்தான். ஏற்றுக் கொள்வதற்கும் ஏற்றுக் கொள்ளமால் விடுவதற்கும் இது நம்பிக்கை அல்ல. இது வரலாறு.

திருப்பவும் நான் கூறுவது என்னவெனில், மதத்தில் கூறப்பட்டுள்ளது என்று அனைத்தையும் நம்மவர்கள் கையாளவில்லை. தமது நலன்களிற்காக தெரிவு செய்து பாவிக்கிறார்கள். அவ்வகையில் சாதியத்தை வாழ வைப்பது அதனால் நலன் பெறும் மக்களே அன்றி இந்து மதம் அல்ல.

எந்தக் கடவுகளை துணைக்கடவுளாயோ மூலக்கடவுளாயோ கொள்கிறார்கள் என்பது மக்களின் சுதந்திரம் என்பது நான் சொன்ன கருத்து (இதுக்காகத் தான் கடவுள் எதிர்ப்பு ஆரிய எதிர்ப்புப் பெரியாரை குறிப்பிட நேர்ந்தது) அத்தோடு எனது பதிவை முளவதுமாய் திருப்பிப் படியுங்கள், நீங்கள் இந்து மதத்தின் தலையில் சாதியத்தின் இருப்பிற்கான அனைத்துப் பழியையும் போட்டிருந்தீர்கள் அதை நான் ஏற்க மறுத்து பதிவு இட்டேன்.

[color="#FF0000"]வர்ணக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இந்த மதம் தானே சாதியத்திற்கு அடிப்படையாக இருக்கிறது.

[color="#FF0000"]வர்ணக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இந்த மதம் தானே சாதியத்திற்கு அடிப்படையாக இருக்கிறது.

சுhதியத்தின் இருப்பிற்கு அடிப்படையாக இருப்பது அதனால் நலன் பெறும் ஒரு சார் மக்கள்.

சுhதியத்தை நடைமுறையில் கையாளும் மிகப்பெரும்பான்மை மக்கள் வர்ணக்கோட்பாடு என்றால் கிலோ என்ன விலை என்பார்கள். நீங்கள் கூறுவது போல் இந்து மத்தின் அடிப்படைகளை ஆராய்ந்து அதில் உள்ள வர்ணக் கோட்பாட்டை இந்துக்கள் ஏற்றுக் கொண்டதால் தான் சாதியம் வாழ்கிறது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

ஆடக்குபவன் தனக்குச் சாதகமான சூழல் நிலைக்க உழைக்கிறான் அவ்வளவே.

"இன்னுமொருவன்"!

நீங்கள் கெட்டிக்காரத்தனமாக விடயத்தை திருப்பப் பார்க்கிறீர்கள்.

சாதியின் அடிப்படை, மூலகாரணம் என்பது இந்து மதம்.

இன்று சாதியை ஈழத்தில் வாழ வைப்பது யார் என்பது இன்னொரு விடயம்.

நாம் சாதி உருவானது எப்படி என்கின்ற வரலாற்றை பேசுகின்ற போது, இன்றைக்கு அது ஈழத்தில் எப்படி உயிர் வாழ்கிறது என்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்.

சாதியினால் நலன்பெறுகின்ற மக்கள் கூட்டமே (பாரதத்தில் பார்ப்பனரும், ஈழத்தில் வேளாளரோடு பார்ப்பனரும்) அதை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

இங்கே எப்படி விவாதம் போகிறது என்பதைக் கவனியுங்கள்

நான்: சாதியை உருவாக்கியது இந்து மதம்

இன்னுமொருவன்: சாதியை வாழ வைப்பது அதனால் நலன் பெறுபவர்கள்

நவம்: சாதியத்திற்கு அடிப்படை இந்து மதம்

இன்னுமொருவன்: சாதியத்தின் இருப்புக்கு அடிப்படை அதனால் நலன் பெறுபவர்கள்

பொதுவாக மதநம்பிக்கை உள்ளவர்களிடம் (அனைத்து மதத்தினரும்) உள்ள பெரிய கெட்ட பழக்கமே இதுதான்.

ஏதாவது கேட்டால் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

சுhதியத்தின் இருப்பிற்கு அடிப்படையாக இருப்பது அதனால் நலன் பெறும் ஒரு சார் மக்கள்.

சுhதியத்தை நடைமுறையில் கையாளும் மிகப்பெரும்பான்மை மக்கள் வர்ணக்கோட்பாடு என்றால் கிலோ என்ன விலை என்பார்கள். நீங்கள் கூறுவது போல் இந்து மத்தின் அடிப்படைகளை ஆராய்ந்து அதில் உள்ள வர்ணக் கோட்பாட்டை இந்துக்கள் ஏற்றுக் கொண்டதால் தான் சாதியம் வாழ்கிறது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

ஆடக்குபவன் தனக்குச் சாதகமான சூழல் நிலைக்க உழைக்கிறான் அவ்வளவே.

இந்தக் கட்டுரையை கொஞ்சம் ஆளமாக படித்தால் உங்களது இந்தப் பதில் வந்திருக்காது .தயவு செய்து தமிழ் சமூகத்தின் ஆன்மாவையே அழிக்கும் இந்தச் சாதியத்தைப்பற்றி ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக எழுதாதீர்கள்.சிவா சின்னப் பொடி அவர்கள் குறிப்பிட்டது போல தயவு செய்து சிங்களப் பார்வை பார்க்காதீர்கள். வர்ணக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இந்த மதம் சாதியத்திற்கு அடிப்படையாக இல்லை என்றால் அதை தர்க்க ரீதியாக விளக்குங்கள்.உங்களது பதில் தமிழர்கள் எல்லோரும் தமிழீழம் கேட்கவில்லை. இனப்பிரச்சனை என்ற ஒன்று கிடையாது. விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாதிகள் தான் தங்களுடைய தேவைகளுக்காக இனப்பிரச்சனை என்ற ஒன்று இருப்பதாக பெரிது படுத்திக் காட்டுகிறார்கள் என்று சிறீலங்கா அரசு சொல்வதைப் போல இருக்கிறது.

சாதியத்தின் வலியையும் வரலாற்றையும் விரிவாகத் தெரிந்து கொள்ள விரும்பினால் சிவா சின்னப்பொடி அவர்களின் வலைத் தளத்தை பாருங்கள்

http://sivasinnapodi1955.blogspot.com/

இங்கே எப்படி விவாதம் போகிறது என்பதைக் கவனியுங்கள்

நான்: சாதியை உருவாக்கியது இந்து மதம்

இன்னுமொருவன்: சாதியை வாழ வைப்பது அதனால் நலன் பெறுபவர்கள்

நவம்: சாதியத்திற்கு அடிப்படை இந்து மதம்

இன்னுமொருவன்: சாதியத்தின் இருப்புக்கு அடிப்படை அதனால் நலன் பெறுபவர்கள்

பொதுவாக மதநம்பிக்கை உள்ளவர்களிடம் (அனைத்து மதத்தினரும்) உள்ள பெரிய கெட்ட பழக்கமே இதுதான்.

ஏதாவது கேட்டால் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

சபேசன்,

முதலாவதாக, என்றோ சாதியம் இருந்தது என்பது இன்றை பிரச்சினையின் அடிநாதம் அல்ல. இன்றும் அது இருக்கின்றது என்பது தான் பிரச்சினை. ஆதனால் தான் அதன் இருப்பைப் பற்றிக் கதைப்பதும் பொருத்தம்

என நான் நினைத்தேன்..

இரண்டாவதாக, நான் திருப்பத்திருப்பக் கூறியுள்ளது போல, இந்து மதத்தில் கூறப்பட்டுள்ளது என்பதற்காக அனைத்தையும் கடைப்பிடிப்பவர்கள் அல்ல நம்மவர்.

உங்களது பதில் தமிழர்கள் எல்லோரும் தமிழீழம் கேட்கவில்லை. இனப்பிரச்சனை என்ற ஒன்று கிடையாது. விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாதிகள் தான் தங்களுடைய தேவைகளுக்காக இனப்பிரச்சனை என்ற ஒன்று இருப்பதாக பெரிது படுத்திக் காட்டுகிறார்கள் என்று சிறீலங்கா அரசு சொல்வதைப் போல இருக்கிறது.

http://sivasinnapodi1955.blogspot.com/

இந்த லாஜிக்கில நம்மால முடியாது சாமி

no more questions your honour

Edited by Innumoruvan

காலத்திற்கு தேவையான கசப்பான உண்மைகளை துணிவாக தொடர்ந்து தருவதற்கு நன்றி அய்யா.

சாதியத்தின் ஆரம்பமும் அடிப்படையும் இந்து மதம் என்பதை ஒத்துக் கொள்கிறோம்.

சாதியத்தை பேண விரும்புபவர்கள் அதிலிருந்து நன்மை அடைபவர்களே என்பது சரி. ஆனால் அவர்கள் எதன் பெயரால் அதை நியாயப்படுத்துகிறார்கள் விளக்கங்கள் கொடுக்கிறார்கள்?

மதத்தின் பெயரால் செய்யப்படுபவற்றிற்கு மதத்தை குற்றம் சாட்ட முடியாது என்றால், மதத்தின் பெயரால் மக்கள் ஏமாற்றப்படுவதை எப்படி தடுப்பது அல்லது குறைப்பது? ஏமாற்றப்படுபவர்கள் மதத்தில் வைத்திருக்கிற நம்பிக்கையால் தானே ஏமாற்றப்பட்டார்கள்? அவ்வாறு ஏமாற்ற பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தைப் பற்றி விளக்கம் கொடுக்கு முனைந்தால் மதத்தை குற்றம் சொல்லாதீர்கள் என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.

மதம் என்பது வெறுமனே தனிநபர் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விடையமாக இல்லை. அது எமது சமுதாயத்தில் உள்ள பல்வேறுபட்ட ஆரோக்கியமற்ற கட்டமைப்புகளை நடத்தைகளிற்கு நியாயம் கற்பிப்பதாக இருந்து ஒட்டுமொத்த இனத்திற்கு பின்னடைவை தருகிறது.

இதற்கு பரிகாரம் எப்படி மதத்திலுள்ள தில்லு முல்லுகள் சுத்துமாத்துகள் பற்றி விளக்கம் கொடுக்காது செய்ய முடியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதி எப்படி வேண்டுமென்றாலும் தோன்றியிருக்கட்டும்.

ஆனால் இன்று அது ஆலமரம் மாதிரி எங்கெங்கெல்லாமோ கிளைகளைப் பரப்பிவிட்டது. இனி வேரைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்க நேரமில்லை.

அந்தக் கிளைகளின் சைஸ் வேரையே தூக்கிச் சாப்பிட்டுவிடும் அளவுக்குப் பெரியது என்பதே இன்னுமொருவனின் வாதம்.

அது எங்கெங்கு தன் கிளைகளைப் பரப்பிவிட்டுள்ளது என்பதை இனங்காண வேண்டும். பிறகு அதை systematic ஆக அழிக்க வேண்டும். அதுக்குப் பிறகும் வேரில் உயிர் இருக்குமானால் அதையும் அழிக்க வேண்டும்.

சாதிவெறி தமிழனின் இரத்தத்தில் இருக்கிறது. அதை அழிப்பது மிக மிகக் கடினமானது. இதை அழிக்க என்னென்ன ஆயுதங்கள் கிடைக்குமோ அவையெல்லாம் பாவிக்கப்பட வேண்டும். சகல விதத்தாலும் சாதியத்திற்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும். 2000 வருடங்களுக்கு முன் சாதி எப்படித் தோன்றியது என்ற ஆராய்ச்சியை விட அதற்கு ஒட்சிசன் இன்று எங்கிருந்து வருகிறது என்று அறிந்து அந்தந்த வழங்கல் பாதைகளை துண்டிக்க வேண்டும்.

1) சட்டம் - சாதியம் சம்பந்தமாக பொது இடங்களில் கதைப்போருக்கு பண அபராதம் (10,000 நடைமுறையில் இருந்தது)

2) ஊக்குவிப்பு - வெவ்வேறு சாதியினர் மணமுடித்தால் இனாமாக இவ்வளவு பணம் (வேறுயாரோ குறிப்பிட்டது போல கலப்புத்திருமணம் என்ற பதத்தை நான் எதிர்க்கிறேன். மனிதனுக்கும் மாட்டுக்கும் நடந்தால் தான் அது அது)

3) குழந்தைகள் - குழந்தைகள் கல்வியில் சாதி என்ற சொல்லே வராதவாறு மற்றியமைத்தல் (பாரதியாரின் "சாதிகள் இல்லையடி பாப்ப்பா" போன்ற விடயங்களை துடைத்தெறிதல்)

4) பெற்றோர்- இங்கு வெளிநாடுகளில் குழந்தையை வன்முறையாக தண்டிக்கும் பெற்றோரை குழந்தைகளோ அல்லது வேறு யாருமோ பொலிசில் சொன்னால் பெற்றோருக்கு கடும் தண்டனை கிடைக்கும். அதேபோல, குழந்தைகளுக்கு சாதிபற்றி சொல்லிக்கொடுக்கும் பெற்றோரை (இதை சிம்பிளாக பள்ளிக்கூடத்தில் குழந்தைக்கு ஒரு இனிப்புக் குடுத்துவிட்டு கேள்வி கேட்பதன் மூலம் பிடிக்கலாம்) கடுமையாக தண்டிக்க வேண்டும். அதாவது சாதி நஞ்சை பிள்ளைகளுக்கு ஊட்டும் பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் பறிமுதல் செய்யப்பட்டு அரச காப்பகத்தில் விடப்படும்

போன்ற பல முனைத் தாக்குதல்களினால் நாங்கள் நினைத்தால், சாதியினை சுத்தமாகவே துடைத்துவிட முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதியத்தை பேண விரும்புபவர்கள் அதிலிருந்து நன்மை அடைபவர்களே என்பது சரி. ஆனால் அவர்கள் எதன் பெயரால் அதை நியாயப்படுத்துகிறார்கள் விளக்கங்கள் கொடுக்கிறார்கள்?

சாதி என்ற ஒரு பேயின் இருப்பை நியாயப்படுத்த மதம் என்ற இன்னொரு பேய் இன்று தேவைப்பட வில்லை. சாதியே போதுமானது (தன்நிறைவு!)

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதத்தின் தார்ப்பரியம் புரியாதவர்கள் அதன் உண்மையான ஆன்மீகக் கோட்பாடுகளை அறியாதவர்கள் மதம் சாதிகளை உச்சரிப்பதாகக் கூறிக்கொள்கின்றனர்.

பதி பசு பாசம் என்ற மூன்றைப்பற்றியோ சைவ சித்தாந்தமும் இந்து மதமும் போதிக்கின்றன. இதில் உயிர் சார்ந்து அவை மனிதனை பாகுபாடின்றி ஆன்மா என்ற நிலையில் அடையாளப்படுத்துகின்றனவே தவிர சாதியத்தைப் புகுத்தவில்லை. இடையில் மதத்தின் பெயரால் செருக்கப்பட்டவற்றை மதத்தின் மீதான குற்றம் குறையாகக் காட்டி மதம் மக்களை ஏமாற்றுகிறது என்பதானது அபந்தமானது. அறிவியல் உலகில் கூட இந்து மதத்தின் கோட்பாடுகள் விளங்கப்படவும் விளக்கப்படவும் முயலப்படுகிறது.

சாதி என்ற உச்சரிப்பை நிறுத்துவதும் அதன் பலவீனத் தன்மைகளை விளக்குதலும் முக்கியம். சாதி என்ற உச்சரிப்பு பல மட்டங்களில் பல்வேறுவடிவங்களில் உலகில் உண்டு. றேசிசம் என்பது உலகின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. சட்டங்கள் போட்டும் றேசிசம் என்பதைக் களைய முடியவில்லை.

சாதி என்பது அர்த்தமற்ற ஒன்று என்பதை விளங்கும் போதே மனித மனங்களில் உள்ள அதன் அடிப்படைகளைத் தகர்க்க முடியும். வன்முறைத்தனமான அணுகுமுறைகளாலதைச் சாதிக்க முடியாது என்பதற்கு ஈழத்தை விட்டு சாதி காவப்படுதலைக் காட்டலாம். சட்டத்தின் மூலமும் களைய முடியாது என்பதற்கு மேற்குலகில் தொடரும் றேசிசத்தைக் காட்டலாம்..! ஆக அடிப்படையில் மனிதப் பாகுபாட்டு நிலை கோட்பாடுகள் மாறுபடும் வகையில் சிந்தனைகளும் சாதிய அடையாளங்களும் மீள உச்சரிக்கப்படாத வகையில் இல்லாது அழிக்கப்பட வேண்டும்.

சாதி அழிப்போம் என்பதும் சாதியை வலியுறுத்துகிறது. சாதி இல்லை என்பதும் சாதியை வலியுறுத்துகிறது. அதாவது சாதி என்ற உச்சரிப்பே அதை நிறுவ முயல்கிறது. சாதி என்றதை நிறுத்தி பாகுபாடுகள் என்ற பதப் பிரயோகத்தின் கீழ் மனித குலத்துள் மனிதரை மனிதர் பாகுபடுத்த போடப்பட்டிருக்கும் போலிக் காரணங்கள் அனைத்தையும் அகற்றி எறிவதே பலமட்டங்களுலும் மனிதப் பாகுபாடுகள் அழிக்கப்படும். பாகுபாட்டு அடையாளங்கள் தகர்க்கப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்முறைத்தனமான அணுகுமுறைகளாலதைச் சாதிக்க முடியாது என்பதற்கு ஈழத்தை விட்டு சாதி காவப்படுதலைக் காட்டலாம். சட்டத்தின் மூலமும் களைய முடியாது என்பதற்கு மேற்குலகில் தொடரும் றேசிசத்தைக் காட்டலாம்..!

மேற்குலகில் றேசிசம் எவ்வாறு வாழ்கிறது என்பதை வசதியாக மறந்துவிட்டு முன்வைக்கப்பட்ட கருத்து. எமக்குள் கலர் வித்தியாசம் இல்லை. மேற்குலகில் சட்டதின் மூலம் சாதியை ஒழிக்கமுடியாமல் இருப்பதற்கு நிறவேறுபாடுகளே காரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.