Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமரந்தா

Featured Replies

அமரந்தா - சிறுகதை

 
 

சிறுகதை: நரன், ஓவியங்கள்: ஸ்யாம்

 

புனே ரயில்வண்டி நிலையத்தில்  இரைச்சலும் பரபரப்பும்  நிறைந்திருந்தது. வெவ்வேறு வயது, நிறம், தோற்றம், மொழி கொண்ட  கலவையான மனிதர்கள்  பயணத்திற்காய் ரயில் நிலையம் முழுக்கப் பரவிக்கிடந்தார்கள்.  நிலையத்தில் அந்த இருவரையும்  கடந்து செல்லும் எல்லாமனிதர்களும் விநோதத் தன்மையோடு சில நொடி நேரம் நிலைகுத்திப் பார்த்து, பின் அவர்களிடமிருந்து   பார்வையைப் பிரித்துக்கொண்டு நடந்தார்கள்.அங்கங்கே கொஞ்சமாய் நரை சிதறியிருந்த  முடிகளோடு   நாற்பந்தைந்து வயதுப்  பெண்ணாய்த் தோற்றமளிக்கும் வயிறு புடைத்த பெண்  அமரந்தா  ஆறாவது நடை மேடையைத் தேடியபடி மெள்ள நடந்து வந்துகொண்டிருந்தாள். உடன் அந்தப் பெண்ணின்  எழுபது சதம்  இளம் வயது தோற்ற சாயலைக்கொண்டிருந்த வேறொரு பெண் அவளின் உடமைகளைத் தாங்கிய பயணப்பெட்டியையும், கைப்பையையும்,  சுமந்து  கொண்டு  நடந்து வந்துகொண்டிருந்தாள்.

p45a_1518500795.jpg

பார்க்கும் எவரும் இளம்பெண் நிச்சயம் நாற்பந்தைந்தின் மகளாய்த்தான் இருக்கும் என்று யூகித்திருப்பார்கள். ஒருசிலர் அந்த  இளம் பெண்ணை அடையாளம் கண்டுகொண்டு  தங்கள் கைப்பேசியில் கேமராவை விரித்து அவளோடு  புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். விளையாட்டுச் சீருடை அணிந்திருந்த உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் தோற்றம் கொண்ட  கொஞ்சம்  பெண்பிள்ளைகள் அவளிடம் அடையாளக் கையொப்பம் கேட்டார்கள்.

அவள், ‘மீரா ஆதிராஜ்’ என்று தன்  கையொப்பத்தைக் கிறுக்கினாள். அவளை அடையாளம் தெரியாத சிலர் அடையாளம் தெரிந்துகொண்ட  மனிதர்களிடம் அவள் யாரென்று ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும்     வினவினார்கள். ‘`மீரா ஆதிராஜ். பிரபல பாட்மின்டன் வீராங்கனை’’ என்று அடையாளம் சொன்னார்கள். நாற்பத்திசொச்சம் அவளின் அம்மாவாகத்தான் இருக்க வேண்டுமென முடிவு செய்துகொண்டார்கள். அமரந்தா கர்ப்பம் தரித்திருப்பதைப்போலத் தெரிந்தாள். ஏழாம்  மாதமாய் இருக்க வாய்ப்புண்டு. வயிற்றின்  மேட்டில் தன் வலது கையின் ஐந்து விரல்களையும் விரித்து வைத்தபடி வேகம் குறைந்து நடந்தாள். ஆறாவது நடைமேடை சிமென்ட் பெஞ்சின் அருகில் வந்ததும்  கையில் கொண்டு வந்திருந்த லக்கேஜ்களை இறக்கி வைத்தாள். அமரந்தா வந்ததும் பெஞ்சில் அமர்ந்துகொண்டாள். களைப்பாய்த் தெரிந்தவளுக்கு, கையிலிருந்த  தண்ணீர் பாட்டிலிலிருந்து  மீரா பருகக் கொடுத்தாள்.

  கர்ப்பகாலங்களில் எடுக்க வேண்டிய 6 ஆகாரங்களைப் பற்றியும் , மருந்துகளைப் பற்றியும்... மிச்சமிருக்கும் கர்ப்பகாலங்களில் உடலைப் பேணிக்கொள்ளும் முறையையும் மீரா சொல்லிக் கொண்டிருந்தாள். மீண்டும் ஒருமுறை கேட்டாள். ``அமரந்தா,  வேலையை விட்டுடேன்.’’ ``இல்ல  மீரா’’ மறுத்துத் தலையாட்டினாள். ``ஹே... மீரா...’’ கை அசைத்தபடி  அருகில்  வந்தார்  மீராவுக்குத் தெரிந்தவர்போல, தோராயமாய்  நாற்பது வயதிருக்கும்  வட இந்தியர். ஒடுக்கமாய் முடியைக் கத்தரித்து முன்னாள் விளையாட்டு வீரரைப்போல் தோற்றமளித்தார். சரியான உணவு முறையையும், உடற்பயிற்சியையும் கைவிட்டிருக்க வேண்டும். கொஞ்சம் வயிறு பெருத்திருந்தது. மீரா அவருக்கு தன் அம்மாவை அறிமுகப்படுத்தினாள் . ``ப்ரஃபஸர் அமரந்தா. என் அம்மா. சென்னையிலிருந்து வந்திருக்காங்க.’’ அவர் இப்போது குழப்பமாக நெற்றியைச் சுருக்கி இருவரையும் பார்த்தார்.  தயக்கமாய்  அமரந்தாவிடம் வணக்கம் சொல்லிக்கொண்டார்.

“அம்மா இது கிஷோர். என்னோட  ட்ரெய்னர்.” அவரின் கண்கள்  அமரந்தாவின் வயிற்றை  சந்தேகமாய்ப் பார்த்தது.  அமரந்தா     எந்தத் தயக்கமுமில்லாமல் சொன்னாள். ``எஸ். கிஷோர். ஐ’ம்  ப்ரெக்னென்ட்.’’ கிஷோர் கொஞ்சம் தடுமாறினார் ``ஓ... டேக் கேர்... டேக் கேர் அமரந்தா. சரி நான் கிளம்புறேன். உடம்ப பார்த்துக்கோங்க’’ என்று சொல்லிவிட்டு அவசரமாக நடந்தார். கொஞ்சம் தள்ளிப் போய் மீண்டும் திரும்பி அந்த வயிற்றைப் பார்த்தார். அவர் எப்படியும் திரும்பிப் பார்ப்பார் என்பது அமரந்தாவுக்குத்  தெரிந்திருக்கும்போல. அவள் சிரித்தபடியே பார்த்துக்கொண்டிருந்தாள்.

இப்போது  மீரா  தன் மணிக்கட்டை உயர்த்தி நேரம் பார்த்துக்கொண்டேயிருந்தாள். அங்கு நிறைய நேரம் இருக்க சங்கோஜப்பட்டவளைப் போலவும் தெரிந்தாள். அமரந்தா அவளைக் கிளம்பிப் போகச் சொன்னாள். ``ட்ரெய்ன் வர இன்னும் அரை மணி நேரம் இருக்கு. உனக்கு ட்ரெய்னிங் இருக்கும். நீ கிளம்பு நான் பாத்துக்குறேன்.’’ தயங்கியவளிடம் ``கிளம்பு’’ என்று அழுத்தமாய்ச் சொன்னாள். மீரா நடக்க ஆரம்பித்தாள். அவள் கிளம்பிச் செல்வதை  அமரந்தா  பின்னாலிருந்து  பார்த்தபடியிருந்தாள்.  ஒரு விளையாட்டு வீராங்கனை என்று எவரும் கணித்துவிடும்படியான உடல்வாகுதான். அமரந்தா  இப்போது கொஞ்சம் தண்ணீரை எடுத்துக் குடித்தாள்.  தன் கைப்பையிலிருந்த  ஓவியம் சார்ந்த மாத இதழை எடுத்துப் புரட்டத்  தொடங்கினாள்.  உப்பும் இனிப்பும் கலந்த பிஸ்கெட் பாக்கெட்டை விரித்துவைத்து, கடித்துக்கொண்டே பக்கங்களைப்  புரட்டத்  தொடங்கினாள். அவளுக்குப் பின் பக்கம் இருந்த ஐந்தாம் நடைமேடையில் சிமென்ட் பெஞ்சில் கூப்பிடு தூரத்தில்  உட்கார்ந்திருக்கும் ஒரு மனிதர் தன்னையே பார்ப்பதைப்போல் உள்ளுணர்வு  தோன்றியது.

இடது புறமாய்த் திரும்பி அவரைக் கவனிக்கத்  தொடங்கினாள். கறுப்பும் வெள்ளையும் சரிபாதியாயிருக்கும் சுருண்ட முடிகளை அழகாய்க் கத்தரித்து பிடரி வரை  சரிய விட்டிருந்தார். காலர் இல்லாத வெள்ளை லினன் சட்டையை முழங்கைக்கு மேல் அகலமான  பட்டையாய் மடித்து விட்டிருந்தார். கீழாடையாய் ஊதா நிற போலோ டெனிம் ஜீன்ஸ். இசை அல்லது ஓவியம் மாதிரியான நுண்கலையைச்  சார்ந்தவராய் இருக்கும்படியான தோற்றம். வயது ஐம்பதை நெருங்கும் போலிருந்தது. பரிட்சயமான மனிதரைப்போல் தெரிந்தார். அவரும் பார்வையை விலக்காமல் பார்த்துக்கொண்டேயிருந்தார்.  ``அமரந்தாதான நீங்க..?’’    ‘`ஆமா’’ ஆச்சர்யமடைந்தாள். ``நீங்க..?’’ அவர் தன் காபி நிறத் தோல்பையைத் தூக்கிக் கொண்டு அவள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு நகர்ந்தார்.

p45b_1518500810.jpg

அமரந்தா   சரசரவென  நினைவுகளைத் தட்டி அவர்  யாராயிருக்குமென்று தேடினாள். சட்டென நினைவுக்குவரவில்லை.  “நான் அபராஜிதன். சென்னை ஓவியக் கல்லூரி.” நினைவுக்கு வந்துவிட்டதாய்  உடம்புக்குள் ஒரு துள்ளல் வந்தது. ‘`ஹே... அபு...’’  எழ முற்பட்டாள். அந்த மனிதனின் கைகளைப் பற்றிக் கொண்டாள். அபராஜிதன்  அமரந்தாவோடு ஓவியக்  கல்லூரியில் உடன் படித்தவன்.  முகம் முழுக்க பெரிய தாமரைப் பூவைப் போல் மலர்ந்தது.

 ``எத்தனை வருஷம் ஆச்சு. எப்படி இருக்க?’’ ``நல்லா இருக்கேன்.’’

நகர்ந்து, அமர இடம் கொடுத்தாள். ``பூனேலயா இருக்க..?’’ என்று கேட்டாள் அமரந்தா.

``இல்ல நான் மும்பைல. இங்க தாகூர் கேலரில  என்னோட ஆர்ட் ஷோ  இருந்தது. முடிஞ்சி கிளம்புறேன்.’’

‘`என்ன சொல்ற உன் ஷோ இருந்ததா?  ரெண்டு மாசமா நான் இங்கதான் இருக்கேன். தவற விட்டுட்டேனே...’’  சட்டென முகத்தில் வருத்தம் தெரிந்தது .

‘`உனக்கு எத்தனை குழந்தைகள் அபு.’’

‘`எனக்கா..?’’ சிரித்துக்கொண்டே சொன்னான். ‘`நான் கல்யாணம் பண்ணிக்கல அமரந்தா. சடங்குகள் மேல பெருசா நம்பிக்கையில்ல. கல்யாணத்துக்கும், குழந்தை பெத்துக்குறதுக்கும் சம்பந்தமில்லைனாலும் ரெண்டு பேருக்கும் விருப்பமில்லை. போன வருஷம் வரை சந்திரிகாவோட இருந்தேன் . சந்திரிகாவும் ஓவியர்தான். இப்போ தனியாத்தான் இருக்கேன்.’’

‘`நீ புனேலயா இருக்க?’’

``இல்ல நான் சென்னைல இருக்கேன் அபு. தெரசா காலேஜ்ல ஃபைன் ஆர்ட்ஸ் ப்ரொஃபஸர். என் பொண்ணு இங்கதான் இருக்கா. மீரா ஆதிராஜ். பேட்மின்டன் பிளேயர்.’’

கண்களை விரித்துக் கேட்டான் . ‘`உண்மையாவா?’’ நம்ப முடியாமல் கேட்டான்.

‘`ஆமா’’

``என்ன சொல்ற அமரந்தா. அந்தப் பொண்ணு ஃபோட்டோவை எதாவது நியூஸ் பேப்பர்ல பார்க்கும்போதெல்லாம் இது எங்கயோ எப்பவோ பார்த்த முகம் போலவே தோணும். இந்த வருஷம் இன்டர்நேஷனல் மேட்ச் ஆடப் போறாங்கள்ல?’’

‘`ஆமா  அபு.  இங்க நிக்கில் கனித்கர் பாட்மின்டன் அகாடமிலதான் ட்ரெய்னிங்.’’

அபராஜிதன் மெள்ள அமரந்தாவின் மேடான வயிற்றைப் பார்த்தான். அவன் கவனிப்பதைப் பார்த்து ``அதை அப்புறம் பேசலாம்’’ என்று சொல்லி வேறு விஷயத்துக்கு நகர்ந்தாள். ``எனக்கு இப்போ சூடா டீ வேணும் அபு.’’ எழுந்து வேகமாய் நடந்தான். டீயோடு வருபவனை சந்தோஷமாய்ப் பார்த்தாள். டீயைக் கொடுத்தபடியே சொன்னான். ``எத்தனை வருஷம் ஆச்சு. இன்னும் அப்படியே இருக்க அமரந்தா. உன்தோற்றம், தைரியம், சந்தோஷம் எதுவுமே மாறல.. கொஞ்சமா எல்லாத்திலயும் நரை விழுந்திருக்கு. அவ்வளவு தான். ஆதி ராஜன்  சார் எப்படி இருக்கார்?’’ டீ கப்பிலிருந்து உதட்டைப்பிரித்து எடுத்து... ``அவர் எங்க இருக்கார்?’’  திரும்ப டீ கப்பில் உதட்டை ஒட்டிக் கொண்டாள்.

``என்ன சொல்ற... சார் இப்போ உன்கூட இல்லையா?’’

``அவர் உலகத்திலயே இல்ல.  விபத்துல  இறந்துட்டார். ஆறு வருஷம் ஆகிடுச்சு.  ஈ.சி.ஆர் ரோட்ல  அவர் புல்லட்ல போகும்போது ஒரு  ஆக்ஸிடென்ட்ல கார் மோதி இறந்துட்டார். சாகும்போது ஐம்பத்திரண்டு வயசு. இதுல என்ன கொடுமைனா அடுத்த நாள்தான் அவருக்குப் பிறந்த நாள் தெரியுமா?’’ சட்டென்று அவளின் குரலில் இறுக்கம் தட்டியது. அபு கேட்டான்.

``சார் உன்னவிட பத்து  வருஷம்  மூத்தவரா?’’

``ஆமா.’’

சிறிது நேரம் அமைதியாயிருந்தார்கள்.

அமரந்தாவுக்குக் கொஞ்சம் குமட்டல் வருவதைப் போலிருந்தது. ``நான் ரெஸ்ட் ரூம் வரைக்கும் போயிட்டு வந்திடுறேன்.’’

``உடன் வரவா?’’ என்று அபு கேட்டதும், ``அதெல்லாம் வேண்டாம்’’ என்று மறுத்து மெள்ள நடந்தாள். அவள் கிளம்பியதும் அபுவின்  நினைவுகள்  சரசரவெனப் பின்னோக்கி ஓடின.  கல்லூரியில்  அமரந்தா அழகு, திறமை, பரபரப்பு கூடிய பெண்ணாக இருந்தாள். ஓவியக்  கல்லூரியில்  எல்லோருக்கும் அவள்மீது விருப்பமிருந்தது. அபுவுக்கும்கூடத்தான். எத்தனை பேர் அவளின்  அன்பைப் பெற விண்ணப்பித்திருந்தார்கள். மூன்றாம் ஆண்டு படிக்கும்போது சேர்ந்தாற்போல் பத்து நாள்கள் விடுமுறை எடுத்திருந்தாள். அவளுக்கு  வகுப்பு எடுக்கும் ஆதிராஜன் சாரும் அதேபோல் சேர்ந்தாற்போல் விடுப்பில் போயிருந்தார். மூன்றாம் நாளே எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இருவரும் வீட்டிலிருந்து கிளம்பிப் போய் திருமணம் செய்துகொண்டார்களென.   அமரந்தாவின் குடும்பத்தில் யாரும் சம்மதிக்க வில்லை என்று சொன்னார்கள். திருமணம் முடித்து இருவரும்  வழக்கம் போல்  கல்லூரிக்கு  வரப் போக இருந்தார்கள். ஆதிராஜன் சாரை ஆண்  பெண்  பாகுபாடில்லாமல் எல்லோருக்கும் பிடிக்கும். சில  மாணவர்களை அவரின் வீடு வரை அனுமதிப்பார்.

வீடு என்பதெல்லாம் இல்லை . விஸ்தாரமும், நீளமுமான ஒரு பெரிய மாடி அறை. நடுவே எந்தத்  தடுப்பும் இருக்காது. முழுக்க வரைந்து முடிக்கப்பட்ட, பாதி வரைந்து முழுமையடையாமல் இருக்கும் பெரிய பெரிய ஓவியங்கள் என அந்தப் பெரிய அறை முழுக்க நிறங்களாய்ச் சிதறிக் கிடக்கும் . ஆதிராஜன் சார்  அடர்ந்த  கறுப்பு நிறம். முகத்திலும் தலையிலும் கரு கரு சுருட்டை முடிகள். கால் சட்டையோடு, பல நிறங்கள் சிதறியிருக்கும் கையில்லாத பனியனை அணிந்தபடி ஆதிராஜன் சார் எதாவது வரைந்துகொண்டிருப்பார். வரையாத நேரங்களில் ஆதிராஜன் சார் கரங்களில் எப்போதும் கறுப்புத் தேநீரும், மறு கையில் வெள்ளை சிகரெட்டும் புகைந்துகொண்டிருக்கும். அப்போதெல்லாம்  அமரந்தா  பாதி நாள்கள் ஆதிராஜன் சாரின் வீட்டில்தான் இருப்பாள். அப்போதே எல்லோரும் பேசிக்கொள்வார்கள். அமரந்தா ஆதிராஜன் சாரைக் காதலிக்கிறாளென. சார் அமரந்தாவைவிடப் பத்து வயதாவது மூப்பிலிருப்பார். `போயும் போயும் அவரையா’ என அபு  உட்பட சக மாணவர்கள் பொறாமையில் புழுவாய் நெளிந்தார்கள்.

ஈரத்தைத் துடைத்தபடி மெதுவாய்  நடந்து வந்து பெஞ்சில் அமர்ந்தாள். அமர்ந்த மறு  விநாடியே  அபு கேட்டான். ``ஏன் அமரந்தா, நீ சாரை கல்யாணம் பண்ணிக்கிட்ட?’’ அமரந்தா சிரித்துக்கொண்டாள். ``நான் உட்பட எத்தனை பேர் உன்னைக் காதலிச்சோம். அதில் எத்தனை பேர் மிக அழகானவர்கள்.’’ சில நொடிகள்அமைதியாகி பின் நிதானித்துத் சொன்னாள். ``இவ்வளவு வருஷமா இந்தக் கேள்விக்கு மட்டும் ஏன் இன்னும் துருப்பிடிக்கலைனு தெரியல. இந்த இடைப்பட்ட வருஷங்கள்ல  உடன் படித்த எத்தனையோ பேரை  சந்திச்சிட்டேன். எல்லோரும் முதல் கேள்வியா இதைக்  கேட்டுட்டாங்க. இப்போ நீ கேட்ருக்க. பொதுவா என்னைப் பாத்து மத்தவங்க கேக்குற எல்லாக் கேள்விக்கும் நான் பதில் சொல்றதில்ல அபு… அப்படி சொல்லிக்கிட்டே இருந்தா. கேள்விகளோட எண்ணிக்கையும், கேக்குறவங்க எண்ணிக்கையும் கூடிக்கிட்டே  இருக்கும். அந்த நேரத்தில அவரை எனக்குப் பிடிச்சிருந்தது அபு. அவ்வளவுதான்.’’

 பேசிக்கொண்டிருக்கும்போதே சென்னை செல்லும் ரயில் நாற்பது நிமிடம் தாமதமாக வருவதாய் ரயில் நிலையத்தின் அறிவிப்பு வந்தது. ``நாம இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருக்கலாம் அபு.’’ சந்தோஷப்பட்டாள். ``உன்னோட ரயில் எத்தனை மணிக்கு?’’  அபுவிடம் கேட்டாள். ``எனக்கு அடிக்கடி இருக்கு. மும்பை இங்க இருந்து மூணு மணி நேரம்தான்.’’ சிறு அமைதிக்குப் பின் அபு அமரந்தாவின் வயிற்றைப் பார்த்தான். ``ஓஹ்... இன்னும் இது பத்தி சொல்லல இல்ல. அது பெரிய கதை.இப்போ நேரம் இருக்கு.’’

``அபு... இப்போ நான் கன்சீவ் ஆகியிருக்கேன்’’ வயிற்றில் கைவைத்துச் சொன்னாள்.

``இந்த வயசுலயா?’’

``ஆமா. டாக்டர்கிட்ட கேட்டேன். நாற்பத்தியேழு வயசாகுது. இன்னும் பீரியட்ஸ் நிக்கல. வரிசை தப்பாம எல்லா மாசமும் சரியா வருதுன்னு சொன்னேன். இப்போ ஏழாவது மாசம்.’’

அபு வெறுமனே  ‘`ம்...’’ மட்டும் சொன்னான்.

``நீ வேறொரு கல்யாணம் பண்ணிக்கிட்டியா  அமரந்தா?’’

``ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்...’’ தாமதமாய் அபுவின் கேள்வியைப் புரிந்து கொண்டவளாய்  ``ஓ... இந்தக் குழந்தை எப்படினு கேக்குறியா?’’

அபு அமைதியாயிருந்தான்.

``இந்தக் குழந்தை மீராவோட குழந்தை அபு. என் வயிற்றில் வளருது. அவ்வளவுதான்.’’

குழப்பமாய் நெற்றிச் சுருக்கத்தோடு அமரந்தாவைப் பார்த்தான்.

``மூணு வருஷம் முன்னாடி மீரா காதல் திருமணம் பண்ணிக்கிட்டா. அவளோட  கணவரும் ஒரு விளையாட்டுவீரர்தான். ஒரிசாவில்  மிகவும் எளிமையான குடும்பம். அந்தக் குடும்பத்திலேயே படித்தவர் இவர்தான்.கல்யாணத்துக்கு முன்னாடியே  மீரா  அவர்கிட்ட சொல்லிட்டா. `கொஞ்ச வருஷத்துக்கு என்னால குழந்தை பெத்துக்க முடியாது. நான் மேட்ச் விளையாடணும். அதுக்கு ஒத்துக்கிட்டாதான் கல்யாணம்’னு சொல்லித்தான் திருமணம் செஞ்சிகிட்டா. சின்ன வயசிலயிருந்தே இன்டர்நேஷனல் மேட்ச் விளையாடுறதுதான் அவளோட லட்சியம். அவரும் அப்போ சந்தோஷமா ஒத்துக்கிட்டாரு. ஆனா இப்போ அவரோட வீட்ல பிரச்னை பண்றாங்க. இப்போ ஒரு வருஷத்துக்குள்ள குழந்தை வேணும்னு சொல்றாங்க.’’

அபு சிறிய தலை அசைவோடு கேட்டுக் கொண்டிருந்தான்.

p45c_1518500828.jpg

``மீரா இந்த வருஷம் இன்டர்நேஷனல் விளையாடுறா. குழந்தைக்கு இன்னும் கொஞ்ச வருஷம் வெய்ட் பண்ணச் சொன்னா அவங்க வீட்ல யாரும் ஒத்துக்கல. கர்ப்பம் தரிச்சா ஒரு வருஷம் விளையாட முடியாது . குழந்தை பிறந்த பின்னாடி ஒரு வருஷமாவது அவளுக்கு ஓய்வு தேவையாயிருக்கும்.  குழந்தை பிறந்த பிறகு மீண்டும் அதே வேகம் அந்த உடலில் இருக்குமான்னு தெரியாது. அந்த இரண்டு வருட ஓய்வு அவளை மனரீதியாவும், உடல் ரீதியாவும் எவ்வளவு தொந்தரவுபடுத்தும். அவளோட கனவெல்லாம் அப்படியே வீட்டுக்குள்ள முடங்கிடும்  அபு. இந்தியாவில் அவள் இப்போது முன்னணி வீராங்கனை. இரண்டு வருஷ ஓய்வு அவளை, ரேங்க்கிங்லயும் அவளை பின்னால தள்ளிடும். ஒரு கர்ப்பத்துக்குப் பின்னாடி பெண் உடம்பு எவ்வளவு சிதைஞ்சி போயிடுது. மீண்டும் அந்த உடம்பைத் தயார்ப்படுத்துறதுக்கு அவள் எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கும். ஆண்களுக்கு இதில் எந்தப் பிரச்னையும் இல்லைல.’’

கொஞ்சமாய் ஆமோதிப்பது மாதிரி அபு தலையாட்டினான்.

``மீராவின் லட்சியம், குழந்தை சார்ந்த ஆசை ரெண்டும் சிதைஞ்சி போயிடாம இருக்க நான்தான் வாடகைத் தாய் முறையைச் சொன்னேன். அதுக்கு அவள் கணவனும், பெரிய தயக்கத்திற்குப் பின் அவரின் குடும்பத்தினரும் சம்மதிச்சாங்க. அவங்க வாடகைத் தாயைத் தேடத் தொடங்கினாங்க. ஒருநாள் விடியக்காலைல எனக்கு நானே அந்த கர்ப்பத்தைச் சுமந்து பெற்றுக்கொடுக்க வேண்டும்னு யோசனை தோணுச்சு. அன்னைக்கே  கல்லூரி   முடிஞ்சதும் டாக்டர்கிட்ட போய் வாய்ப்பும், சாத்தியமும்  இருக்கிறதான்னு கேட்டேன். `நூறு சதம்  வாய்ப்பிருக்குது’னு சொன்னார். சந்தோஷமா இருந்துச்சு. முக்கியம்னு நான் நினைக்கும் சில நண்பர்கள்கிட்ட  என் விருப்பத்தைச் சொன்னேன். எல்லோரும் ஆளுக்கொரு ஆலோசனை சொன்னார்கள். எனக்கு  ஆதரவாய் ஒரு குரல்கூட இல்லை. பெரும்பாலானோரின் கருத்து இந்தக் குழந்தையை நீ பெற்றுக்கொடுக்க வேண்டாம் என்பதுதான். இந்தச் சமூகம் என்னைத் தவறாய்ப் பார்க்கும் என்பதுதான் அவர்களின்  கவலையாகச் சொன்னார்கள். சொந்த மருமகனின், மகளின் உயிரணுக்களை என் கர்ப்பக் குடத்தில் சுமப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம்.

மீராவிடம் யோசனையைச் சொன்னேன். எவ்ளோ சந்தோஷப்பட்டா தெரியுமா ? அவளின் கணவர் வீட்டில் இப்போ வரை கடுமையான எதிர்ப்புதான். மீராவின் கணவருக்கும் தொடக்கத்தில் முழுச் சம்மதமில்லை. கருத்தரித்த பின் மருமகனின் கர்ப்பத்தை மாமியார் சுமப்பதாய் அவரின் குடும்பம் முழுக்க என்னை மண்வாரித் தூற்றியது. சில நாள் மாலை நேரங்கள்ல என்னோடு நடைப்பயிற்சிக்காய் மீராவின் கணவரும் உடன் வருவார். சாலைகளில் நடப்பவர்கள் விநோதமாய்ப் பார்ப்பார்கள். அவர்களுக்குள் என்னைக்  கிண்டல் செய்து பேசிக்கொள்வார்கள். நான் எந்த மனிதரையும் சட்டைசெய்வதில்லை.

கல்லூரியில்  என்னோடு பலரும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. கர்ப்ப காலங்களில் தேவையில்லாத மன உளைச்சலைச் சந்திக்க வேண்டாம் என்பதற்காக ஆறு மாதம் பிரசவ விடுப்புக்கு அனுமதிக்கக் கேட்டேன். `இந்த வயதில் கர்ப்பமா? பொய்  சொல்கிறீர்கள்’ என்று கல்வித்துறை அதிகாரிகள் லீவ் கொடுக்க மறுத்தார்கள். பலமுறை திரும்ப திரும்ப விடுப்புக் கோரி அனுப்பினேன். அதன்பின் வீங்கிய வயிறோடு நான் நேரில் சென்று விளக்கம் கொடுக்க வேண்டியிருந்தது. கிளம்பும்போது ஒரு முதிய பெண் அதிகாரி கூப்பிட்டு அறிவுரை சொன்னார். `ஏன் மேடம்? இந்த வயசுல  கொஞ்சம் கவனமா இருந்திருக்க வேண்டாமா..?’’  என்று சொல்லி முடித்து அமரந்தா வெடித்துச் சிரித்தாள். அபுவும் கொஞ்சமாய் சிரித்தான்.

``கல்லூரியில் நான் என் மாணவிகளிடம் என் கர்ப்பத்தைப்  பற்றி எதையும் மறைக்கவில்லை.இந்தத் தலைமுறை  எவ்வளவு அழகா புரிஞ்சிக்கிறாங்க தெரியுமா அபு?’’ எந்த மாணவியின் முகத்திலும் கொஞ்சமும்   முகச்சுளிப்பு இல்லை. வீட்டில் பல காலமாகப் புழங்காமல் ஒரு அறையோ, ஒரு பகுதியோ இருந்தால்  அது   யாருக்காவது பயன்படட்டும்னு தங்க அனுமதிப்பதில்லையா? இருபத்தி நாலு வருஷமா  இந்த கர்ப்ப அறை எந்தப் புழக்கமுமில்லாமல் காலியாத்தானே இருக்கு. கிட்டத்தட்ட ஐம்பது வயதில் அதன் கர்ப்பம் தரிக்கும் காலம் முடிந்ததும் உள்ளேயே அது வீரியமில்லாமல் இறந்துவிடும். எந்தப் பயன்பாடுமில்லாமல் அனாவசிய உறுப்பாய் அதைப்  பலகாலம் நான் சுமந்தலைய வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காகவும், வெட்டி  கெளரவத்திற்காகவும் இந்த அனுபவத்தை நான் ஏன் இழக்கணும் சொல்லு.’’

அதைத் தீவிரமாய் ஆமோதிப்பதுபோல் அபு தலையாட்டினான்.

``இப்போ இந்த கர்ப்ப காலத்தின் உணர்வு எப்படி இருக்கு  அமரந்தா?’’ அபு சந்தோசமாய்க் கேட்டான்.

``ரொம்ப நல்லா இருக்கு அபு. சந்தோஷமா, ரொம்ப இளமையா என்னை உணர்றேன். உன்னிப்பா கவனிக்கிறேன் அடிக்கடி வயித்துக்குள்ள சளப்...சளப்னு யாரோ உள்ளேயிருந்து நீரை உலப்புவது மாதிரியிருக்கு. கடந்த ஏழு மாதமாய் வீட்டில் எனது அறையில் தங்கியிருக்கும்போது தனியாயிருப்பது மாதிரியான உணர்வே இல்லை. யாரோ உடன் இருப்பதாய் உணர்கிறேன்.

சில நேரம் மட்டும் புழங்கிய ஊரையும், வீதிகளையும் விட்டுட்டு ஒரு புதிய இடத்துக்குப் போகலாமென்றும், பிடித்த ஏதாவதொரு மனிதரோடு மாலை வேளையில் நடைப்பயிற்சி செய்தால் தேவலை என்பது போலவும் தோன்றும். ஆனால், இப்போது அந்தத் தெரு மனிதர்களும், என் பழைய நண்பர்களும் சட்டென என் கையை உதறிவிட்டு என்னிடமிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்கள்.’’ சட்டென உற்சாகம்  வடிந்து  பேசினாள்.

அபு  அமரந்தாவின் கரங்களைப் பற்றிக் கொண்டான். அவளும் அபுவின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டாள்.

சென்னை செல்லும் ரயில் வருவதற்கான அழைப்பை ஒரு பெண் இரண்டு, மூன்று மொழிகளில் உற்சாகமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். சிறு பரபரப்பு அவளிடம் தொற்றிக்கொண்டது.  அமரந்தா  கிளம்ப ஆயத்தமானாள். உடமைகள் தாங்கிய   பெட்டிகளை நான் எடுத்து வைத்துவிடுவேன், நீ ஏதும் அலட்டிக்கொள்ள வேண்டாம் என்று சொன்னான்.

ரயில் வந்து அவள் முன் நின்றதும் முழுக்க குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டியில் அவளின் இருக்கையை  அடையாளம் கண்டு அந்த இடத்தில் அவளின் உடைமைகளைக் கொண்டு வந்து வைத்தான். இறுதியாக, மெள்ள நடந்து வரும்  அமரந்தாவைக் கைபிடித்து ஏற்றிவிட்டான். நீர் பாட்டில்கள் இரண்டு வாங்கி ஓடிவந்து அவளிடம் கொடுத்தான். ``டீ குடிக்கிறியா?’’ என்றும் கேட்டான்.

நிச்சயமாய் வேண்டுமென்றாள். இரண்டு தேநீர் வாங்கி வந்து ஒன்றை  அமரந்தாவிடம் கொடுத்துவிட்டு ஒன்றைத் தான் பருகத்  தொடங்கினான். ரயில் பெட்டி பெரிதும் காலியாக இருந்தது. ரயிலில் சிறிது அசைவு தெரிந்ததாய் உணர்ந்தாள். ஓரிரு விநாடிகளில் அசைவை நன்றாகவே உணர முடிந்தது. பதற்றமாய் அமரந்தா கேட்டாள். ``அபு, வண்டி கிளம்பிடுச்சா?’’ ``ஆமாம்’’ எந்தப் பதற்றமுமில்லாமல் அபு சொன்னான். ``நீ  கீழே இறங்கலயா?’’  என்று கேட்டாள். ``நான்   உன்கூட சென்னைக்கு வரேன்  அமரந்தா. நாலு  மாசம் உன் பக்கத்துல இருந்து உன்னைப் பாத்துக்கப்போறேன்.’’

ஆர்வமும் சந்தோஷமுமாய்… இது பொய்யாகிவிடக் கூடாது  என்று நினைத்தபடியே கேட்டாள்.  ``உனக்கு டிக்கெட் இல்லையே அபு. ``சமாளிச்சிக்கலாம்’’ என்றான்.

``உண்மையா அபு. என்கூட சென்னை வர்றியா?’’ நம்ப முடியாமல் கேட்டாள்.

ஆமோதித்துத் தலையாட்டினான். ``ஆமா உன்கூட  வாக்கிங்  போகணும் அதான்.’’

``உன் வேலைகள் ஏதும் பாதிக்கப்படாதா?’’

``என் வேலை என்ன? வரையுறதுதான. உன் வீட்ல இருந்து வரைஞ்சுக்கிறேன். அதுக்கு ஒரு சிறிய அறை  தந்தால் போதும்.’’

``மொத்த வீட்டையும் எடுத்துக்கோ அபு’’ சந்தோஷமும் உற்சாகமுமாய்ச் சொன்னாள். ``ரொம்ப நாளுக்குப் பிறகு எனக்கும் நிறைய வரைய ஆசையா இருக்கு அபு. இது எனக்கு எவ்வளவு சந்தோஷமான நாள்களா இருக்கப் போகுது தெரியுமா?!’’

அபுவின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டாள்.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.