Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல் சிலம்பம் - சிறுகதை

Featured Replies

கல் சிலம்பம் - சிறுகதை

நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... என்.ஸ்ரீராம், ஓவியங்கள்: அனில் கே.எஸ்.

 

p76a.jpgசெல்லீயக் கோனார் கூட்டாற்று முனைக்கு வந்து சேர்ந்தபோது எங்கும் மூடுபனி கவிழ்ந்துகிடந்தது. விடிவதற்கு இன்னும் வெகுநேரம் இருந்தது. நீரோட்டத்தின் சலசலப்பு, கூடிவருவது போல கேட்டது. மேற்கில் இருந்து கெண்டைக்கால் அளவு நீரோடு வரும் உப்பாறு, தெற்கில் இருந்து இடுப்பு அளவு நீரோடு வரும் அமராவதியுடன் கலக்கும் கூடுதுறை இது. இவர் கைத்தடியை ஈரமண்ணில் ஊன்றிவிட்டு, ஆற்று நீரில் கால் வைத்தார். நீர் குளிர்ந்துகிடந்தது. சிப்பிலி மீன்கள் கலைந்து ஓடின. நீரை அள்ளி முகத்தில் அடித்தார். உள் ஒடுங்கிய கண்களில் கட்டியிருந்த பீழையைத் தேய்த்துக் கழுவினார். நீண்ட வெள்ளைத்தாடியில் நீர் சொட்டிட்டது. பஞ்சுத் திரி போன்ற கேசங்களை ஈரக்கையால் கோதி, ஒழுங்கு செய்தார்.

 

ஆற்றுப்பரப்பைத் தாண்டி அக்கரையை நோக்கினார். அக்கரை இன்னும் நன்றாகப் புலப்படவில்லை. தோப்பு வயலில் தென்னைகள் கரிய உருவம்போல அசைந்தன. நட்டாற்றுப்பாறை ஆயமரமும் தென்படவில்லை. பொழுது கிளம்பட்டும் எனத் திரும்பி வந்து பாறை மீது அமர்ந்தார்.

செல்லீயக் கோனார், இந்த ஊரைவிட்டுப் போய் 50 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனாலும், ஊரைவிட்டுப் போவதற்குக் காரணமான ஒரு சம்பவம், இந்த 50 வருடங்களாக பெரும் மனவேதனையையும் குற்ற உணர்வையும் கொடுத்துக்கொண்டே இருந்தது. புரிந்த பாவத்தை எந்த வழியிலேனும் தீர்ப்பது என்று திரும்பி வந்திருக்கிறார்.

ப்போது செல்லீயனுக்கு 16 வயது இருக்கும். திண்ணைப் பள்ளிக்கூடப் படிப்பை முடித்துவிட்டு ஊரைச் சுற்றிக்கொண்டு திரிந்த காலம். தினமும் தூங்கி எழுந்ததும் பாலக்கரையில் இருந்து நேராக காவிரிக் கரை போய்விடுவான். வடகரை ஊரில் இருந்து சேக்காலிப் பசங்கள் ஏற்கெனவே வந்து காத்திருப்பார்கள். பொழுது இறங்கும் வரை கபடி ஆட்டம்தான். போட்டிக்கு ஊர் ஊராகப் போவார்கள். சுற்றுவெளியில் செல்லீயனின் அணியை அடிக்க எவரும் இல்லை.

ஒரு பங்குனி மாதம். புதன்கிழமை. ஆற்று மத்தியில் மட்டும் கொஞ்சமாக நீர் ஓடிக்கொண்டிருந்தது. மீதமெல்லாம் மணல்வெளி. ஸ்ரீரங்கத்தில் இருந்து சிலம்ப வாத்தியார் கபடி அணி ஒன்றைக் கூட்டி வந்தார். எல்லோரும், இவர்களைவிட சிறியவர்கள். இவர்கள் ஏளனமாகப் பார்த்தனர்.

மணலில் வெயில் ஏறி சூடு பரவுவதற்குள் ஆட்டத்தை முடித்தாக வேண்டும். கோடுகள் தீட்டியதும் இரு அணியினரும் எதிரெதிராகத் தயாராயினர். சிலம்ப வாத்தியார் அழைத்துவந்த குழுவில் ஒருவன் கோட்டைத் தொட்டு வணங்கிப் புறப்பட்டான்.

''கபடி... கபடி... கபடி...''

செல்லீயன் கோஷ்டியினர் அவனைச் சுற்றி வளைத்துப் பிடிக்க எவ்வளவோ பிரயத்தனப்பட்டனர். அவன் லாகவமாக மூன்று பேரை அடித்துவிட்டுத் தப்பினான். இங்கிருந்து செல்லீயன் புறப்பட்டான்.

''கபடி... கபடி... கபடி...''

அவர்கள், கோட்டின் ஓரம் ஒடுங்கி செல்லீயன் விளையாட வழிவிட்டனர். ஐந்து நிமிடங்களுக்கு மேல் இந்த முனைக்கும் அந்த முனைக்கும் ஆடிப்பார்த்தான். அவர்களிடம், எந்த அசைவும் இல்லை; பதற்றமும் இல்லை. புலி பதுங்குவது பாய... தான் ஒரு பலியாடாக அகப்படப் போகிறோம் எனத் தோன்றிய கணம் திரும்பிவிடத் தீர்மானித்தான்.

p76.jpg

கால்களின் ஊன்றுதலை மாற்றி உடம்பை எதிர் திசையில் திருப்பினான். அந்தக் கணம் செல்லீயனின் வலது காலை யாரோ வாரினார்கள். நிலை தடுமாறி விழுந்தான். அதன் பின்பு எழ முடியவில்லை. அழுத்தமான பிடிப்புகள். நடுக்கோடு, ஐந்தாறு தப்படிகள் தாண்டி தெரிந்தது.

''கபடி... கபட்... கப...'' - செல்லீயனுக்கு முனகல் அடங்கியது. இங்கிருந்து போனவன் எவனும் கோட்டைத் தாண்டி திரும்பி வரவில்லை. அங்கிருந்து வந்தவர்கள் எவரையும் இவர்களால் பிடிக்க முடியவில்லை.

அடுத்த சுற்றுக்கு முன்பான இடைவெளியில் இவர்கள் எல்லோர் முகங்களும் இறுகிக்கிடந்தன. 'தோற்றுவிடுவோம்’ எனப் புலம்பினர். செல்லீயன் யோசித்தான். கோரை மீது அமர்ந்தபடி சிலம்ப வாத்தியார் அந்தப் பசங்களுக்கு ஏதோ யோசனை கூறி அனுப்பி வைத்தார்.

எல்லை மாறினர்; சுற்று ஆரம்பித்தது. போன சுற்றில் முதலில் ஆடிவந்த பையனே இந்த முறையும் வந்தான்.

''கபடி... கபடி... கபடி...''

எல்லோரும் வட்டமிட்டு அவனைச் சூழ முயன்றார்கள். ஆனால், அவன் பாதம் லாகவமாக இயங்கியது. நெருங்கினால் பிடி நழுவிவிடும் என தெரிந்தது. செல்லீயன் மட்டும் சட்டென்று முன்னே பாய்ந்தான். அவன் கெண்டைக்காலை வார குனியும் சாக்கில் வலது கையில் குத்தாக மணலை அள்ளிக்கொண்டான். அவன் பாதத்தை பின்னே இழுத்து மறுமுனைக்கு நகர முயன்றான். செல்லீயன் எதேச்சையாக நடந்ததுபோல கை மணலை அவன் முகத்தில் எறிந்தான்.

அவன் தடுமாறினான். புறங்கையால் கண்களைத் தேய்த்தான். செல்லீயன் விரைவாக எழுந்து அவன் காலைப் பிடித்து உள்ளே இழுத்துப் போட்டான். அவன் எழுந்து நீரில் கண்களை அலம்பப் போனான். யாருக்கும் சந்தேகம் இல்லை. அடுத்து செல்லீயன் நடுக்கோடு தாண்டி நுழைந்தான். அவர்கள் முன்பு போலவே பதுங்கினார்கள்.

''கபடி... கபடி... கபடி...''

செல்லீயன் தொடையைத் தட்டிக்கொண்டு பயம் இன்றி நெருங்கினான். அவர்கள் சூழ எத்தனிக்கும்போது செல்லீயன் படுவிரைவாக கால்களால் மணலை விசிறினான். பிடிக்க முன்னேறிய அவர்கள் செல்லீயனைப் பிடிக்காமல் விட்டுவிட்டுப் பின்வாங்கினார்கள்.

செல்லீயன் தெனாவெட்டாக ஆடினான். மறுபடியும் அவர்கள் செல்லீயனைப் பிடிக்க முன்னே வந்தார்கள். செல்லீயன் இந்த முறையும் கால்களால் மணலை விசிறத் தொடங்கினான். மணல் துகள்கள் சிதறி அவர்கள் கலைந்தார்கள். செல்லீயன் வெற்றிப் புன்னகையுடன் திரும்பி நடுக்கோட்டுக்குத் தாவினான்.

அந்தச் சமயத்தில் எங்கிருந்தோ ஒரு மூங்கில் கழி பாய்ந்துவந்து நடுக்கோட்டின் மேல் ஊன்றி நிமிர்ந்து நின்றது. செல்லீயன் திடுக்கிட்டுப் போனான். சிலம்ப வாத்தியார் கோரையில் இருந்து எழுந்து வந்தார்.

p76b.jpg

''ஆருடா சொல்லிக் குடுத்தது வெளையாட்டுல ஏமாத்தறத..? எங்க பசங்க உங்களை பெரிய ஆதர்சமா நெனைக்கிறாங்க... நீங்க எல்லாம் பெரிய வீரங்கனு... உங்களை எதிர்த்து வெளையாடவே பயந்தாங்க... நான்தான் உங்களோட வெளையாண்டா ஆட்ட நுணுக்கங்களைக் கத்துக்கலாமுனு சமாதானப்படுத்திக் கூட்டி வந்தேன். ஆனா, நீங்க அப்படி நடந்துக்கலை. பெருந்தன்மையும் இல்லை. வெளையாட்டுல தோக்கறது சகஜம்... ஆனா, அதை ஏத்துக்கணும். அதுதான் நியதி; தர்மம். முடியலையினா குறுக்கு வழியில எறங்கக் கூடாது... ஏமாத்தக் கூடாது!''

''நாங்க ஒண்ணும் ஏமாத்தலை!''

''எனக்கு பொய் சொன்னாப் புடிக்காது''

''யாரும் பொய் சொல்லல... உங்களுக்குத்தான் தோத்துப்போவோமுனு பயம் வந்திருச்சு.''

சிலம்ப வாத்தியார், செல்லீயன் கையை எட்டிப் பிடித்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் செல்லீயன் சுழன்று அந்தப் பசங்களின் காலடியில் போய் விழுந்தான். சிலம்ப வாத்தியார், மூங்கில் கழியைப் பிடித்தபடி கிட்டத்தில் வந்தார்.

''நீ சின்னப் பையன்... அதனாலதான் உதைக்காம விடறேன்... ஓடிப்போயிடு.''

ன்றிரவு மூன்றாம் சாமம் கடந்த பின்பும் செல்லீயனுக்கு உறக்கமே வரவில்லை. சிலம்ப வாத்தியார் அத்தனை பேர் முன்னிலையில் பிடித்துச் சுழற்றிவிட்டது திரும்பத் திரும்ப ஞாபகத்தில் எழுந்தபடியே இருந்தது. பெரி தாக அவமானப்பட்டுவிட்டதாக உணர்ந்தான். கிழக்கே உதயரேகை படர்ந்தது.

ஸ்ரீரங்கம் சென்று சிலம்ப வாத்தியாரைக் கண்காணித்தான். சிலம்ப வாத்தியார் ரெங்கநாதர் கோயிலில் நுழைந்து தன்வந்தரி பகவானைத் தரிசித்துவிட்டு வெளியே வந்தார். அங்கிருந்து ஆற்றங்கரையை அடைந்தார். சிலம்பப் பயிற்சிக்கூடத்துக்கு இருமருங்கிலும் நாணல் போத்திய வழியில் இறங்கினார்.

ஆள் நடமாட்டம் இல்லாத தனிமை. செல்லீயன் இந்த நாணல் வழியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். புதருக்குள் வீச்சரிவாளோடு பதுங்கிக்கொண்டான். ஒவ்வோர் அரவத்தையும் உற்றுக் கேட்டபடியே இருந்தான். பொழுது உச்சிக்குப் போய்விட்ட வேளையில் சிலம்ப வாத்தியார் திரும்பி வந்தார். கூட யாருமே இல்லை. அவர் நெருங்கியதும் செல்லீயன் வீச்சரிவாளோடு முன்னே தோன்றினான். அவருக்கும் செல்லீயனுக்கும் இடையே 10 அடி தூரமே இருந்தது. திரும்பி ஓடினாலும் ஆறு போய் சேருவதற்குள் துரத்திப் பிடித்து வெட்டிச் சாய்த்துவிடலாம். செல்லீயன், முதல் வெட்டை எங்கு வெட்டுவது என கணித்தபடி நின்றான். சிலம்ப வாத்தியார் கடகடவெனச் சிரித்தார்.

''நீ இந்த உலகத்துல நிறைய கத்துக்கவேண்டியது இருக்கு. வா... வந்து என்னை வெட்டு பார்க்கலாம்.''

செல்லீயன், முன்னே எட்டு வைத்தான். ஆற்றுவெளி எங்கும் படுநிசப்தமாக இருந்தது. காற்று அடங்கி நாணல்கள்கூட அசைவின்றிக் கிடந்தன. இன்னும் ஐந்தடி தூரம்தான் பாக்கி. சிலம்ப வாத்தியார் நகராமல் கம்பீரமாக நின்றிருந்தார். செல்லீயன் எம்பிக் குதித்து முதல் வெட்டை உச்சந்தலையில் இறக்க வேண்டும் என திட்டமிட்டபடி மேலும் ஓர் எட்டு முன்னே வைத்தான்.

சிலம்ப வாத்தியார் சட்டெனக் கீழே குனிந்து, இரண்டு கற்களைப் பொறுக்கினார். எலுமிச்சம் பழத்தைவிட சற்றுப் பெரிய கற்கள். இரண்டையும் ஒரே நேரத்தில் மேலே தூக்கிப் போட்டார். கற்கள் கீழே வந்தன. தன்னுடைய முழங்கையால் கற்களைத் தாங்கி மேலே தட்ட ஆரம்பித்தார். சிலம்ப வாத்தியாரின் இரண்டு தோள்பட்டைகள் மட்டுமே குலுங்கின. கற்கள் இரண்டும் ஒரே நேரத்தில் அந்தரத்தில் போய் கீழே வந்து மறுபடியும் மேலே போகின்றன. முழங்கை எலும்புகளோடு கற்கள் மோதும் சத்தம் விட்டுவிட்டுக் கேட்கிறது.

செல்லீயனுக்குப் புரிந்துவிட்டது. இதில் ஏதோ வித்தை இருக்கிறது. கற்களைப் பார்க்கப் பார்க்க கண்கள் கிறங்கச் செய்தன. சிலம்ப வாத்தியார் சத்தமாகப் பேசினார்.

p76c.jpg

''இப்போ... இடது முழங்கைக் கல் உன் முட்டியைப் பேக்கும்; வலது பக்க முழங்கைக் கல் உன் மூளையைச் சிதறடிக்கும்... பாக்கிறியா?''

செல்லீயன் வீச்சரிவாளை நாணலுக்குள் வீசினான். நெடுஞ்சாண்கிடையாக சிலம்ப வாத்தியார் காலில் விழுந்தான்.

''இது கல் சிலம்பம். கத்துக்கிட்டவனுக்கு எதிரி பயம் கிடையாது..!''

''அப்போ... எனக்கு இதைக் கத்துக்குடுப்பீங்களா?'' - சிலம்ப வாத்தியார் இடது பக்கக் கல்லை அப்படியே முழங்கையில் விசையோடு தட்டினார். நாணல் ஒன்று முறிந்து விழுந்தது. வலது பக்கக் கல் நாணலுக்குள் கிடந்த வீச்சரிவாளில் பட்டுக் கணீரென்று சத்தம் கேட்டது.

செல்லீயன், எழுந்து சிலம்ப வாத்தியாரின் முழங்கையைப் பார்த்தான். சிறு சிராய்ப்பு, காயம் எதுவும் இல்லாமல் எப்போதும் போலவே இருந்தன.

''இதுல முழங்கைதான் சிலம்பக் கோல்...''

தன் பிறகு நான்கு வருடங்கள் செல்லீயன் சிலம்ப வாத்தியாருடனே இருந்தான். சிலம்ப ஆட்டத்தின் எல்லா நுட்பங்களையும் படிநிலைகளை யும் கற்றுத் தேர்ந்தான். கடைசியாக, கல் சிலம்பத்தையும் கற்றுக்கொடுத்தார். ஓர் அமாவாசை தினத்தில் சிலம்ப வாத்தியார் தன் சிலம்பக்கூடத்தை செல்லீயனிடம் ஒப்படைத்துவிட்டு இப்படிச் சொன்னார்,

''கல் சிலம்பத்தை மட்டும் அவசரப்பட்டு யாருக்கும் கத்துக் குடுத்துறாதே... காலம் வரணும்; அதுக்கான ஆளும் வரணும்.''

சிலம்ப வாத்தியார் மெட்ராஸ் போய்விட்டார். தியாகராஜ பாகவதரைப் பிடித்து சினிமாவில் நடிக்க முயல்வதாக கடிதம் எழுதினார். ஒரே ஒரு புராணப் படத்தில் வாயிற்காவலனாகத் தலைகாட்டியதை செல்லீயன் பார்த்தான். அப்புறம் தொடர்பு விட்டுப்போய்விட்டது!

ந்தத் தாரண வருஷத்தில் கடுமையான மழை பெய்வது ஒரு நாளும் ஓயவில்லை. அக்கா ஆவுடையாச்சியை, மேற்கே 150 மைலுக்கு அப்பால் நல்லிமடத்துக்குக் கட்டிக்கொடுத்தார்கள். மாப்பிள்ளை கிருஷ்ணசாமி கோனார், மளிகைக் கடை வைத்திருந்தார். மாட்டு வண்டியில் சீதனத்தோடு செல்லீயனைத் துணைக்கு அனுப்பினார்கள். வண்டி, அடைமழையிலேயே போய் ஆறு தினங்களுக்குப் பின் நல்லிமடத்தை அடைந்தது. அங்கு ஏற்கெனவே விஷக் காய்ச்சல் பரவியிருந்தது. மூன்று தினங்களில் கிருஷ்ணசாமி கோனார் இறந்துபோனார். ஆவுடையாச்சி, விதவைக் கோலம்பூண்டு மளிகைக் கடையைத் தொடர்ந்து நடத்த ஆரம்பித்தாள். செல்லீயன், திருச்சி திரும்ப முடியாமல் ஊரைச் சுற்றிக்கொண்டு வெட்டியாகப் பொழுது போக்கினான்.

இரவில் ஆற்றுக்கு சுறா மீனும் விலாங்கு மீனும் பிடிக்கப்போகும்போது செல்லீயனுக்கு ஊர்க்கவுண்டரின் சிநேகம் கிடைத்தது. இருவரும் சேர்ந்து சேவற்கட்டுக்கும் ரேக்ளா ரேஸுக்கும் போனார்கள். அந்தி பனங்கள், ஜெயிச்ச சேவற்கட்டின் கோச்சைக்கறி... என ஒரு ராஜகுமாரனைப் போல உபசரித்து ஊர்க்கவுண்டர் செல்லீயனை கூடவே வைத்துக்கொண்டார். பிரதிபலனாக செல்லீயன், ஊர்க்கவுண்டருக்கு சிலம்பமும் கற்றுக்கொடுத்து வந்தான்.

நாட்கள் வேகமாக ஓடின. அன்று மழை பெய்து ஓய்ந்த ஒரு சாயங்காலம். செல்லீயன், ஊர்க்கவுண்ட«ராடு அமராவதியைப் பரிசலில் கடந்தான். கூட்டாற்றுமுனை தோப்புவயலைத் தாண்டியதும் ஊர்க்கவுண்டரின் வயல் கண்ணுக்கெட்டும் தூரம் வரை பரந்து கிடந்தது. நெற்பயிர்கள் புடை தள்ளியிருந்தன. வரப்பில் நண்டுகள் கொடுக்கு ஊன்றி நகர்ந்தன. தேங்கிய நீரை வடியும்படி செய்து கொண்டிருந்த பருவக்காரன், ஊர்க்கவுண்டரிடம் சொன்னான்.

''அய்யரு தோப்பு வயல பருவம் பாக்கற கந்தக் குடும்பனுக்கே எழுதிக் குடுக்கறதாப் பேசிக்கிறாங்க...''

ஊர்க்கவுண்டர் பதில் ஏதும் கூறவில்லை.

p76d.jpgறுநாள் செல்லீயனையும் அழைத்துக்கொண்டு மாட்டு வண்டியில் தாராபுரம் அக்ரகாரம் சென்றார். கல்யாணராமர் கோயிலில் உச்சிகால பூஜை முடித்து லட்சுமிகாந்த அய்யர் வந்தார்.

''பழனிச்சாமி, உனக்கு எவ்வளவு முறை சொன்னாலும் புரிய மாட்டேங்குது. அந்தக் குடும்பன் குடும்பம், காலம் காலமா எங்க வயலையே நம்பி இருக்குது. இன்னிக்கு நான் பணத்துக்கு ஆசைப்பட்டு வேற ஆராச்சுக்கும் வித்தா அவுங்க எங்க போவாங்க?''

''நான் வேண்ணா அதே அளவு வயலை வேறு பக்கம் எழுதிவெக்கறேன். நீங்க எனக்குத் தோப்பைக் குடுங்க.''

''ம்ம்ம்... அந்தத் தென்னை மரங்களும், பலா மரங்களும், மாமரங்களும், புளிய மரங்களும் அவன் நட்டு வளர்த்தது. அது அப்படியே இருக்கணுமுனு ஆசைப்படறேன்.''

அய்யர் எழுந்து கும்பிட்டார்.

ன்றிரவு மாட்டுத்தொழுவத்தில் கட்டுச் சேவல்களுக்கு ராகி வைத்தபடி ஊர்க்கவுண்டர் செல்லீயனிடம் சொன்னார்.

''அய்யரு மொதல்ல தோப்புவயலை கந்தக் குடும்பனுக்கு எழுதிவெக்கட்டும். கந்தக் குடும்பங்கிட்ட இருந்து வயலை எப்படி எழுதி வாங்கறதுனு எனக்குத் தெரியும்.''

தன் பின்பு காரியங்கள் துரிதமாக நடந்தன. கந்தக் குடும்பரின் இளையமகன் சாராயம் காய்ச்சும் ஆட்களோடு சேர்ந்து சிறைக்குப் போய்விட்டான். பெரும்பிரயத்தனப்பட்டும் கந்தக் குடும்பரால் அவனை வெளியே கொண்டுவர முடியவில்லை. ஊர்க்கவுண்டர், அவன் மீது சுமத்தியிருந்த குற்றத்தை உடைத்து வழக்கை எதுவும் இல்லாமல் செய்தார். அவன் ஊருக்குள் வந்ததும் அவன் 'பங்கை’ எழுதி வாங்கினார். அவன் மேலும் கொஞ்சம் பணத்தை வாங்கிக்கொண்டு, வடக்கே எங்கோ தேசாந்தரம் போய்விட்டான்.

இப்போது தோப்புவயல் பாதி, ஊர்க்கவுண்டருக்குச் சொந்தமானது. மீதியை கந்தக் குடும்பரும், அவரின் மூத்த மகனும் எழுதிக் கொடுக்க மறுத்துவந்தனர். ஊர்க்கவுண்டர், ஆள் வைத்து மிரட்டிப் பார்த்தார். ஆனால், அவர்கள் மசியவில்லை.

ன்று இளமதியத்தில் செல்லீயனும் ஊர்க்கவுண்டரும் அறுவடை முடிந்து குவித்திருந்த நெற்குதிர்களைப் பார்த்துவிட்டு, ஆற்றை நோக்கி கொழிமணம் தடத்தில் கீழிறங்கிக்கொண்டிருந்தனர். பாம்புத் தாரையோடிய வழி. எங்கும் தாழம்பூவின் வாசனை. ஆற்றைச் சமீபிக்கும் முன் கந்தக் குடும்பரும் அவரின் மூத்த மகனும் திடீரென கூரிய ஈட்டியுடன் எதிர்பட்டனர். ஊர்க்கவுண்டர் பயந்துபோனார். திரும்பி மேலேறித் தப்ப முடியாது. துரத்தி வந்து மடக்கிவிடுவார்கள். அந்தக் கணம் செல்லீயனுக்கு சிலம்ப வாத்தியார் ஞாபகத்தில் வந்து போனார்.

செல்லீயன் சட்டெனக் கீழே குனிந்து இரண்டு கற்களை எடுத்து கல் சிலம்பம் ஆடத் தொடங்கினான். கூரிய ஈட்டியுடன் முன்னே பாயத் தயாரான அவர்கள் ஒரு கணம் ஸ்தம்பித்து கற்களையே பார்த்தபடி நின்றனர். கந்தக் குடும்பர் கத்தினார்.

''இவன் ஜால வித்தக்காரன். உட்டினா அவ்வளவுதான். நம்மளத் தீர்த்துடுவான். போட்டுத் தள்ளீரு.''

மூத்த மகன் வேகமாக முன்னே பாய்ந்தான். ஈட்டியின் கூரியநுனியைக் கண்டதும் செல்லீயன் இடது முழங்கையால் கல்லைத் தட்டினான். மூத்த மகனின் முட்டி உடையும் சத்தம்; கதறல். தொடர்ந்து வலது முழங்கையிலும் கல்லைத் தட்டினான். மூத்த மகனின் தலையில் கல் மோதியது. ரத்தம் சொட்ட அவன் தடத்தில் சரிந்தான். கந்தக் குடும்பர் ஈட்டியை வீசிவிட்டு மகன் மீது விழுந்து கதறினார்.

நீர்பரப்புக்கு மேலாக மீன்கொத்தி நீலச்சிறகை விரித்துப் பறந்தது. அக்கரை தோப்புவயலில் தென்னைகள் நெடிதாக வளர்ந்திருந்தன. நட்டாற்று ஆயமரம் பட்டுப்போய்விட்டது. செல்லீயக் கோனார் தோப்புவயலையே சிறிது நேரம் பார்த்துவிட்டு ஆற்றை ஒட்டி வடக்கு முகமாக நடந்தார். பாதம் பட்டு பனித்திவலைகள் கோரையிலிருந்து தெறித்தன. நல்ல பசி. நேராக நல்லிமடம் போய் சேர்ந்தார். ஊர்க்கவுண்டர் வரவேற்று தன்னை உபசரிக்கும் பிம்பம் எழுந்தபடியே இருந்தது.

வீதிகள் அப்படியே இருந்தன. வீடுகளில் தினுசு மட்டும் மாறியிருந்தது. நாய்கள் குரைத்தப் பின் மௌனமாயின. எதிர்ப்படும் எவரும் செல்லீயக் கோனாரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. நடுவளவில் ஆவுடையாச்சி வீடு விழுந்து குட்டிச் சுவராகியிருந்தது. உடைந்த மண் சட்டிகள் கிடந்தன. அங்கு ஒரு கணம் நின்று வெறித்துவிட்டு மேலும் நடந்தார்.

ஊர்க்கவுண்டரின் வீடு மேற்கு வளவில் கிழக்கு பார்த்த தொட்டிக்கட்டு வீடு. முன்வாசல் தாண்டி நடுமுற்ற நடைமீது நின்று உள்ளே பார்த்தார். ஆசாரத்தில் நான்கைந்து பேர் வட்டமாக உட்கார்ந்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். பூனை ஒன்று தன் பாதத்தை நக்கிக்கொண்டிருந்தது.

p76e.jpg

வெகு நேரத்துக்கு பின் செல்லீயக் கோனாரைப் பார்த்துவிட்டு ஒருவன் எழுந்து அருகில் வந்து விசாரித்தான்.

''செல்லீயக் கோனார்... நானு... ஊர்க்கவுண்டரப் பாக்கணும்...''

''ஊர்க்கவுண்டர் செத்துப்போயீ... ரொம்பக் காலம் ஆயிருச்சு...''

அப்போது சீட்டு விளையாண்டபடி ஓர் இளைஞன் குரல் கொடுத்தான்.

''எங்க பெரிசுக்கு நெறைய சகவாசம். இப்படி தெனமும் யாராச்சும் வந்துட்டேயிருப்பானுக. பத்தஞ்சக் குடுத்துத் தொறத்திவுட்டுட்டு வாப்பா. நீதான் இப்ப வெட்டி வெக்கணும்...''

மோதிரங்கள் நிரம்பிய கைவிரல்களை சட்டைப் பாக்கெட்டில் விட்டு இரண்டு பத்து ரூபாய் தாள்களை எடுத்து நீட்டினான். செல்லீயக் கோனார் வாங்கிக்கொள்ளவில்லை. திரும்பி வந்த வழியே வீதியில் நடந்தார். மீண்டும் நாய்கள் குரைத்தபடி துரத்த ஆரம்பித்தன. வெடித்த எருக்கங்காயில் இருந்து வெளிப்பட்ட விதை சுமந்த பஞ்சுகள் காற்றில் மிதந்து அலைந்தன. ஏறுவெயில் சுள்ளென அடித்தது. பழையபடி கூட்டாற்றுமுனைக்கு வந்து அதே பாறையில் தோப்பையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்தார். பசி அதிகமாயிற்று. நேரம் வெறுமையாக நகர்ந்தது. தன் கடைசிக் காலத்தில் மறுபடியும் இந்த ஊருக்கு வந்திருக்கக் கூடாதோ என நினைத்தார். மனகலக்கம் உண்டானது. சலிப்பும் சோர்வும் மிகுந்தன. கந்தக் குடும்பரைப் பற்றி விசாரிக்க வேண்டாம் என நினைத்தார். திருச்சிக்குக் கிளம்பலாம் என முடிவு செய்து எழுந்தார்.

அப்போது கலப்பையை நுகத்தடியில் கோட்டேறு போட்டுக்கொண்டு ஒருவன் எருதுகளை முடுக்கியபடி கரையேறி வந்தான். செல்லீயக் கோனாரைக் கண்டதும் நின்று கேட்டான்.

''என்ன சாமீ தோப்புவயலையே பார்த்திட்டு இருக்கீங்க... ஆரு சாமீ நீங்க?''

செல்லீயக் கோனார் எரிச்சலாகப் பதிலளித்தார்.

''பரதேசி...''

''பரதேசியா இருந்தாலும் இந்தத் தோப்புவயல் ஆசையைத் தூண்டி மயக்கிரும்.''

''புரியலையேப்பா..?''

''தலைமுறை தலைமுறையா இந்தத் தோப்பு வயலுக்கு ஆராச்சும் ரெண்டு பேரு அடிச்சுக்கிட்டேதான் இருக்காங்க. இப்பவும் ஊர்க்கவுண்டர் மகனுக்கும் மகளுக்கும் சண்டை நடக்குது. மகள் பங்கை நாந்தான் பருவம் பாக்கறேன். இது சாபம் புடிச்ச தோப்புவயலு. இதை அதிக நேரம் பாக்காதீங்க. வாங்க... சாப்பிடலாம்.''

அவன் நுகத்தடியில் மாட்டியிருந்த ஈயப்போசியைக் கழற்றிக்கொண்டு வந்தான். சேம இலையைப் பறித்துவந்து போசியில் இருந்த பாதி சாதத்தைக் கொட்டி செல்லீயக் கோனாரிடம் தந்தான். பழைய சாதத்தின் மணம். பசி. செல்லீயக் கோனாராலும் மறுக்க முடியவில்லை. வாங்கிக்கொண்டார். அவனும் பாறையில் சப்பணமிட்டு அமர்ந்து போசியிலிருந்த மீதி சாதத்தைச் சாப்பிட ஆரம்பித்தான். பாதி சாப்பாட்டில் செல்லீயக் கோனார் தோப்புவயலைக் காட்டிக் கேட்டார்.

''ஏதோ சாபம்னு சொன்னியே... என்னப்பா அது?''

''ஒரு காலத்துல இந்தத் தோப்புவயலு எங்க பாட்டனுக்கு சொந்தமா இருந்துச்சு. ஊர்க்கவுண்டர் ஆசைப்பட்டு எவனோ கல் சிலம்பம் ஆடுறவனைக் கூட்டிவந்து எங்கப்பனை அடிச்சுக் கொன்னுட்டு எங்கள மெரட்டி எழுதி வாங்கிட்டாரு.''

செல்லீயக் கோனார் ஒரு கணம் அதிர்ந்து போனார். பின் சுதாரித்து எழுந்தார். இலையை வீசிவிட்டு நீரில் கை கழுவினார். கைத்தடியை கக்கத்தில் இடுக்கிக்கொண்டு மணலில் தெற்கே நடந்தார். அவன் சத்தமிட்டான்.

''அணையில் இருந்து தண்ணீ தெறந்து வுட்டாச்சு. உப்பாத்துல ஆளுந்தண்ணிக்கு மேலாப் போகுது. உங்களால அக்கரைக்குப் போக முடியாது. சித்த பொறுத்தீங்கனா நானே அந்தாண்ட கொண்டுவந்து வுடறேன்.''

பொழுது, உச்சிக்கு ஏறித் தகித்தது. அவன் சாப்பிட்டு முடித்ததும் போசியை நுகத்தடியில் மாட்டிவிட்டு செல்லீயக் கோனாரோடு உப்பாறு வரை வந்தான். நீர்மட்டம் உயர்ந்து வெண்நுரைகளோடு கலங்கலாக ஓடிக்கொண்டிருந்தது. அவன் செல்லீயக் கோனாரின் தோளைப் பற்றி அக்கரை வரை நீந்தி கரையேற்றினான். நிற்காமல் திரும்பி நீந்தினான். அவன் பார்வையில் இருந்து மறைந்ததும் செல்லீயக் கோனார் கீழே குனிந்து இரண்டு கூழாங்கற்களை எடுத்தார். மேலே வீசினார். கல் சிலம்பம் ஆடத் தொடங்கினார். இதுதான் கடைசி ஆட்டமாக இருக்கும் எனத் தோன்றியது. முழங்கைகள் நடுங்கின. சுதாரித்து கற்கள் கீழே விழாமல் தடுத்து மேலே செலுத்தினார். அந்த நேரத்தில் நீரின் சலசலப்பு கேட்டது. எதிரில் நீர் சொட்டச் சொட்ட அவன் நின்றிருந்தான்.

''நீங்க செல்லீயக் கோனாரா?''

செல்லீயக் கோனாருக்கு முதல்முறையாக சிறிது பயம் எழுந்தது. பதில் கூறாமல் அவனையே பார்த்தார். அவன் மேலும் கிட்டத்தில் வந்து நின்றான். மெள்ளச் சிரித்தபடி கேட்டான்.

''எனக்கு கல் சிலம்பம் கத்துக்குடுப்பீங்களா?''

சிலம்ப வாத்தியார் ஊரைவிட்டு போகும்போது சொன்னது ஏனோ அந்தக் கணத்தில் ஞாபகம் வந்தது. செல்லீயக் கோனாரும் பதிலுக்குச் சிரித்தார்.

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படைப்பின் இலக்கணம் சார்ந்து சமூகத்தின் வாழ்வியல் நிகழ்வுகளை மீண்டும் படைப்பு வெளியில் கொண்டுவரும் சித்திரிப்பின் அழகியலை விடவும் மண் சார்ந்த மீள் படைப்பாக இருப்பது சிறப்பு.
பகிர்விற்கு நன்றி.

கல் சிலம்பம் இன்றும் பயிலுகையில்  இருக்கிறதா? அதுபற்றிய தகவல்கள் இருந்தால் தரமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பழிதீர்த்தல்,பழிவாங்கல் கதை. நல்லாயிருக்கு. நல்லவன்கற்ற வித்தைகளை பெரும்பாலும் தீயவர்களே பயன்படுத்தி கொள்கிறார்கள்......!  tw_blush:

  • தொடங்கியவர்
On 24.2.2018 at 3:24 PM, செல்வி said:

படைப்பின் இலக்கணம் சார்ந்து சமூகத்தின் வாழ்வியல் நிகழ்வுகளை மீண்டும் படைப்பு வெளியில் கொண்டுவரும் சித்திரிப்பின் அழகியலை விடவும் மண் சார்ந்த மீள் படைப்பாக இருப்பது சிறப்பு.
பகிர்விற்கு நன்றி.

கல் சிலம்பம் இன்றும் பயிலுகையில்  இருக்கிறதா? அதுபற்றிய தகவல்கள் இருந்தால் தரமுடியுமா?

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து இணைந்து இருங்கள் யாழில்.

மேலும் நீங்கள் கேட்ட கல் சிலம்பம் பயிலுகை தொடர்பாக எதுவும் எனக்கு தெரியாது.

On 24.2.2018 at 4:28 PM, suvy said:

ஒரு பழிதீர்த்தல்,பழிவாங்கல் கதை. நல்லாயிருக்கு. நல்லவன்கற்ற வித்தைகளை பெரும்பாலும் தீயவர்களே பயன்படுத்தி கொள்கிறார்கள்......!  tw_blush:

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சுவி அண்ணா.

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.