சீனாவுடன் போர்: 120 இந்திய வீரர்கள் பின்வாங்க மறுத்தபோது நடந்தது என்ன?
பட மூலாதாரம்,120 Bahadur team
படக்குறிப்பு,மேஜர் ஷைத்தான் சிங்காக நடிகர் ஃபர்ஹான் அக்தர்
கட்டுரை தகவல்
கீதா பாண்டே
பிபிசி செய்தியாளர்
13 ஜனவரி 2026, 05:42 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
சமீபத்திய பாலிவுட் திரைப்படம் ஒன்று, 1962-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்த போரில் மறக்கப்பட்ட ஒரு போர்க்களத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது.
'120 பகதூர்' என்று இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இந்தி மொழியில் 'பகதூர்' என்றால் 'வீரர்கள்' என்று பொருள். லடாக்கின் கடும் குளிரான இமயமலைப் பகுதியில் உள்ள 'ரெசாங் லா' கணவாயைப் பாதுகாக்க தீரத்துடன் போராடிய இந்திய வீரர்களின் கதையை இத்திரைப்படம் சொல்கிறது.
மேஜர் ஷைத்தான் சிங்காக ஃபர்ஹான் அக்தர் நடித்த இந்தத் திரைப்படம், வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், இந்தியா தோற்ற ஒரு போரில் 'ஒரே ஒரு நம்பிக்கையாக' விவரிக்கப்படும் ஒரு போர்க்களத்தைப் பற்றிப் பேசியதில் வெற்றி பெற்றுள்ளது.
"இக்கதையைச் சொல்வது மிகவும் முக்கியம் என்று நாங்கள் கருதினோம், நிஜ வாழ்வில் இந்தப் போராட்டத்தை எதிர்கொண்ட வீரர்களை நாங்கள் கௌரவிக்க விரும்பினோம்," என்று பிபிசியிடம் தெரிவித்த வசனகர்த்தா சுமித் அரோரா, "நாங்கள் சினிமா சார்ந்து சில சுதந்திரங்களை எடுத்துக்கொண்டாலும், எங்கள் திரைப்படம் வரலாற்று உண்மைக்கு மிகவும் நெருக்கமாகவே உள்ளது"என்று கூறினார்.
எல்லை பதற்றங்களால் இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவு மோசமாக மாறியாததாலும், தகராறுகளைத் தீர்ப்பதற்கான கூட்டங்கள் தோல்வியடைந்ததாலும் இந்தப் போர் மூண்டது.
1959-ல் திபெத்தில் இருந்து தப்பி வந்த தலாய் லாமாவுக்கு இந்தியா தஞ்சம் அளித்தது குறித்து சீனா அதிருப்தியில் இருந்தது.
சீனா இந்தியா மீது தாக்குதல் நடத்தியதில் ஒரு மாத கால போர் தொடங்கியது. இது ஒரு "தற்காப்பு எதிர்-தாக்குதல்" என்று கூறிய சீனா, இந்தியா "சீன நிலப்பரப்பை ஆக்கிரமித்து, சீன வான்வெளிக்குள் அத்துமீறி நுழைவதாக" குற்றம் சாட்டியது.
ஒரு மாதத்திற்குப் பிறகு சீனா ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தை அறிவித்து, படைகளைத் திரும்பப் பெற்று, போர்க் கைதிகளையும் விடுவித்தது. அப்போது, இந்தியா சுமார் 7,000 வீரர்களையும் 38,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும் இழந்திருந்தது.
இரு நாடுகளும் பின்னர் ஆறுகள், ஏரிகள் மற்றும் பனிச்சிகரங்களால் குறிக்கப்பட்ட 3,440 கிமீ (2,100 மைல்) நீளமுள்ள தெளிவற்ற 'லைன் ஆப்ஃ கன்ட்ரோல் ' (LAC) மூலம் பிரிக்கப்பட்டன.
மோதல் நடந்த பகுதிகளில் இருந்த அனைத்து இந்திய நிலைகளையும் தங்கள் படைகள் அழித்ததாகக் கூறுவதைத் தாண்டி, இந்தப் போர் குறித்து சீனா அதிகாரப்பூர்வமாக அதிகம் எதுவும் கூறவில்லை. அதேபோல், ரெசாங் லா போர் குறித்து ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை.
கடல் மட்டத்திலிருந்து 16,000 அடிக்கும் (4,900 மீ) அதிகமான உயரத்தில் நடந்த இந்தப் போர், சீனா வென்ற ஒரு பெரிய போரின் ஒரு பகுதியாகும். இருப்பினும், இந்தியாவில் இது ஒரு "காவியப் போர்" என்றும் "இறுதிவரைப் போராடிய மிகச்சிறந்த போர்களில் ஒன்று" என்றும் நினைவுகூரப்படுகிறது.
இந்தப் போர் பல புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கும் உத்வேகமாக அமைந்துள்ளது.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,1962 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் சீனாவுடனான போருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தப் போர் நவம்பர் 18-ஆம் தேதி அதிகாலை 3:30 மணி முதல் காலை 8:15 மணி வரை நடைபெற்றது.
இந்தக் கணவாய் சுஷுல் விமானத் தளத்திற்கு மிக அருகில் இருந்தது. "அந்தப் பகுதியை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் சாலை வசதிகள் இல்லாத அக்காலத்தில், சுஷுல் விமானத் தளமே முதன்மையான மையப்புள்ளியாக விளங்கியது," என்கிறார் யாதவ்.
120 வீரர்களில் ஐந்து பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். போரில் வீரமரணம் அடைந்த மேஜர் சிங், அவரது துணிச்சலுக்காகவும் தலைமைப் பண்புக்காகவும் இந்தியாவின் மிக உயரிய ராணுவ விருதான 'பரம வீர் சக்ரா' வழங்கி கௌரவிக்கப்பட்டார். 12 வீரர்களுக்கு வீரதீர விருதுகள் வழங்கப்பட்டன.
ஆனால், உயிர் பிழைத்தவர்கள் தங்கள் மேலதிகாரிகளிடம் அந்தத் துணிச்சலான இறுதிப் போர் குறித்துக் கூறியபோது, "துரதிர்ஷ்டவசமாக, யாரும் அவர்களை நம்பவில்லை," என்கிறார் முன்னாள் கடற்படை அதிகாரியும், 2021-ல் வெளியான 'பேட்டில் ஆஃப் ரெசாங் லா' புத்தகத்தின் ஆசிரியருமான குல்பிரீத் யாதவ்.
"அப்போது மன உறுதி குலைந்திருந்தது, நாங்கள் போரில் மிக மோசமாகத் தோற்றிருந்தோம், ஒரு பிரிகேடியர் உட்பட ஆயிரக்கணக்கான வீரர்கள் சீனாவால் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்தனர். எனவே, இவ்வளவு வீரமிக்க ஒரு இறுதிப் போராட்டம் சாத்தியம் தான் என்று யாரும் நம்பவில்லை," எனவும் அவர் கூறுகிறார்.
ரெசாங் லாவில் பணியமர்த்தப்பட்டிருந்த வீரர்கள் போர்க்களத்திலிருந்து ஓடிவிட்டார்கள் அல்லது போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருக்கலாம் என்றே பரவலாக நம்பப்பட்டது.
"போர் முடிந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒரு ஆடு மேய்ப்பவர் தற்செயலாக அங்குள்ள சிதைந்த பதுங்கு குழிகள், வெற்றுத் தோட்டாக்கள் மற்றும் பனியில் உறைந்திருந்த உடல்களைப் பார்த்தார். அதன் பிறகே, அந்தப் போர் குறித்த துல்லியமான தகவல்களை முதன்முதலாகத் திரட்ட முடிந்தது."
13 குமாவோன் பட்டாலியனின் சி கம்பெனியைச் சேர்ந்த அந்த வீரர்கள், மேஜர் சிங்கின் தலைமையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
வெடிமருந்துகள் தீர்ந்துவிட்டால் பின்வாங்குவது குறித்து ஆலோசிக்குமாறு அவரது மேலதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
ஆனால், அவர் தனது வீரர்களுடன் இதுகுறித்துப் பேசியபோது, "நாங்கள் கடைசி மனிதன் இருக்கும் வரை, கடைசித் தோட்டா வரை போராடுவோம்" என்று அவர்கள் பதிலளித்ததாக யாதவ் கூறுகிறார்.
"சீன வீரர்கள் கணவாயைத் தாக்கியபோது, சி கம்பெனி வீரர்கள் போருக்குத் தயாராக இருந்தனர். ஆனால், விரைவில் இந்தியப் படை வீரர்கள் முறியடிக்கப்பட்டனர்."
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,2007ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த விழாவில் ரெசாங் லாவில் இறந்த இந்திய வீரர்களின் மனைவிகள் .
இது ஒரு சமமற்ற போராக இருந்தது.
ஆயிரக்கணக்கான வீரர்களை 120 வீரர்கள் எதிர்கொண்டனர். சீனா 1962-ஆம் ஆண்டு போர் ஆவணங்களை வகைப்படுத்தவில்லை என்றாலும், சுமார் 3,000 சீன வீரர்கள் அந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக இந்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
"அவர்களிடம் நவீன ஆயுதங்கள் இருந்தன, அவர்கள் போருக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் கொண்டிருந்தனர். ஆனால், இந்திய வீரர்களிடம் 'செமி-ஆட்டோமேட்டிக்' துப்பாக்கிகள் மட்டுமே இருந்தன. ஒவ்வொரு வீரரிடமும் வெறும் 600 தோட்டாக்கள் மட்டுமே இருந்தன," என்று அவர் கூறுகிறார்.
பத்திரிகையாளர் ரச்சனா பிஷ்ட், மேஜர் ஷைத்தான் சிங் குறித்து 2014-ல் எழுதிய தனது புத்தகத்தில், சமவெளிப் பகுதிகளிலிருந்து வந்த 'சி கம்பெனி' வீரர்கள் அதற்கு முன்பு பனியைப் பார்த்ததே இல்லை என்றும், அந்த மலைப்பகுதியின் தட்பவெப்ப நிலைக்குப் பழகுவதற்கு அவர்களுக்குப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உயிர் பிழைத்தவர்களில் ஒருவரான சுபேதார் ராம் சந்தர் அந்தப் போர் குறித்து நினைவு கூறுகையில், "வானிலை மிகவும் மோசமாக இருந்தது. எங்களிடம் முறையான குளிர்கால உடைகளோ அல்லது காலணிகளோ இல்லை"என்கிறார்.
"எங்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஜெர்சிகள், பருத்தி கால்சட்டைகள் மற்றும் மெல்லிய கோட்டுகள் அந்த உறைய வைக்கும் காற்றில் எங்களை கதகதப்பாக வைத்திருக்கப் போதுமானதாக இல்லை. வீரர்களுக்குக் கடுமையான தலைவலி ஏற்படும், மருத்துவ உதவியாளர் ஒவ்வோர் இடமாக ஓடிச் சென்று மருந்துகளை வழங்குவார்," என்று அவர் அச்சூழலை விவரித்தார் .
போர் நடந்த நாளிரவில், பனி பொழிந்துகொண்டிருந்ததுடன் வெப்பநிலையும் −24°C ஆக இருந்தது. இது குறித்து சுபேதார் ராம் சந்தர் முன்னர் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "நாங்கள் இவ்வளவு காலம் காத்திருந்த நாள் வந்துவிட்டது என்று எனது மேலதிகாரிகளிடம் சொன்னேன்," என்றார்.
'சி கம்பெனி முதல் அலைத் தாக்குதலை முறியடித்த போதிலும், சீனாவின் மோர்டார் தாக்குதல், பதுங்கு குழிகளையும் கூடாரங்களையும் அழித்து, பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு நடந்த மிகக் கொடூரமான மூன்றாவது அலைத் தாக்குதலில் பெரும்பாலான வீரர்கள் கொல்லப்பட்டனர்' என பிஷ்ட் எழுதியுள்ளார்.
பட மூலாதாரம்,Kulpreet Yadav
படக்குறிப்பு,போர் நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட குண்டு துளைத்த குடுவை
பட மூலாதாரம்,Kulpreet Yadav
படக்குறிப்பு,போர் நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு தலைக்கவசம்
மேஜர் சிங்கின் வீரம் குறித்து சுபேதார் ராம் சந்தர் பகிர்ந்த தகவல்கள் இதயத்தை நெகிழச் செய்பவை.
"அவரது வயிற்றில் பல தோட்டாக்கள் பாய்ந்திருந்தன. ரத்தம் வழிந்தோட, கடும் வேதனையில் மயக்கத்திற்கும் தெளிவான மனநிலைக்கும் இடையே இருந்த நிலையிலும், போரை எவ்வாறு தொடர வேண்டும் என்று எனக்கு அவர் அறிவுறுத்தினார். பின்னர் என்னை பட்டாலியனுடன் இணையச் சொன்னார். உங்களை விட்டு என்னால் போக முடியாது என்று நான் சொன்னேன். அதற்கு அவர், 'நீ போய் தான் ஆக வேண்டும். இது எனது உத்தரவு' என்றார்" என சுபேதார் ராம் சந்தர் பகிர்ந்துகொண்டார்.
உடல்களும் பதுங்கு குழிகளும் கண்டறியப்பட்ட பிறகு, பிப்ரவரி 1963-ல் ஒரு மூத்த ராணுவ அதிகாரி, செஞ்சிலுவைச் சங்கத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களை ரெசாங் லா-வுக்கு அழைத்துச் சென்றார். அந்தப் போர்க்களம் "அன்று என்ன நடந்ததோ, அப்படியே பனியில் உறைந்த நிலையில்" இருந்தது.
இந்தக் கண்டுபிடிப்பு குறித்து தனது புத்தகத்தில் எழுதியுள்ள பிஷ்ட், "அவர்கள் கண்டெடுத்த ஒவ்வொரு வீரரும் துப்பாக்கிச் சூடு, குண்டுவெடிப்பு அல்லது சிதறல்களால் ஏற்பட்ட பலத்த காயங்களுடன் உயிரிழந்திருந்தனர். சிலர் பதுங்கு குழிகளில் பாறைகளுக்கு அடியில் புதைந்து கிடந்தனர், மற்றவர்கள் சிதைந்த துப்பாக்கிகளின் பிடியை இன்னும் இறுக்கமாகப் பிடித்திருந்தனர் எனக் குறிப்பிடுகிறார்.
மேலும், "மருத்துவ உதவியாளர் கையில் ஊசியையும் கட்டுப்போடும் துணியையும் வைத்திருந்தார். மோர்டார் கருவியை இயக்கிய வீரர் ஒரு வெடிகுண்டை ஏந்தியிருந்தார். மேஜர் சிங் ஒரு பாறைக்கு அருகில் கிடந்தார், அவரது இடது கையில் ரத்தக்கறை படிந்த கட்டு இருந்தது, அவரது வயிறு இயந்திரத் துப்பாக்கிச் சூட்டினால் கிழிந்திருந்தது," என்று விவரித்துள்ளார்.
"பெரும்பாலும் அவமானத்துடன் நினைவுகூரப்படும்" ஒரு போரில், மேஜர் ஷைத்தான் சிங்கும் அவரது வீரர்களும் பெரும் புகழைப் பெற்றனர் என்று பிஷ்ட் பதிவு செய்துள்ளார்.
'சி கம்பெனி' பின்னர் 'ரெசாங் லா கம்பெனி' என மறுபெயரிடப்பட்டது. அந்த வீரர்கள் வந்த ஊரான ரேவாரியில் ஒரு நினைவகம் கட்டப்பட்டது.
போர் நிறுத்தத்திற்குப் பிறகு, அந்தக் கணவாய் மனித நடமாட்டமில்லாத பகுதியாகிவிட்டது. தற்போது இது சர்ச்சைக்குரிய நிலப்பகுதியின் ஒரு பகுதியாக உள்ளது.
சி கம்பெனி இவ்வளவு தீரத்துடன் போராடாமல் இருந்திருந்தால், இந்தியாவின் வரைபடம் இன்று முற்றிலும் வேறாக இருந்திருக்கும் என்கிறார் யாதவ்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த வீரர்கள் மட்டும் இல்லையென்றால், லடாக்கின் பாதியை இந்தியா இழந்திருக்கும் என நான் நினைக்கிறேன். சீனா அந்த விமானத் தளத்தையும் சுஷுல் பகுதியையும் கைப்பற்றியிருக்கும்.
"1962-ஆம் ஆண்டு போரில் இந்தியாவுக்கு கிடைத்த ஒரே நம்பிக்கை ஒளி இந்தப் போர் மட்டும் தான்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cwygnp8l2p7o
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.