Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்க ஊர் முதலாளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

எங்க ஊர் முதலாளி

D10_BEADA-_CDBA-4599-_A42_A-9_CD47_AA667 

ஒரு காலத்தில் நகரத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஆளுமை மிகுந்தவர் முதலாளி. எங்கள் துறைமுகப் பகுதியில் கடலின் ஆழம் போதாது, வணிகக் கப்பல்கள் அங்கு வர முடியாது என்ற நிலை இருந்த போது, துறைமுகத்துக்கு ஒரு மைல் தள்ளி வணிகக் கப்பல்களை நிறுத்திவிட்டு, படகுகளில் போய் பொருட்களை ஏற்றி, கரைக்கு கொண்டுவரலாம் என்று செய்து காட்டி பலருக்கு நகரத்தில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை முதலாளியினுடையது.

 முதலாளிக்கு வணிகத் திறமை மட்டுமல்ல பெண்களை வசியப் படுத்தும் கலையும் நன்றாக வரும். முதலாளியுடன் நெருக்கமாகப் பழகும் அவரது நண்பர்களுக்கு, குழந்தை பிறக்கும் போது, தங்களது குழந்தை முதலாளியைப் போல இருந்து விடுமோ என்ற அச்சம் ஒட்டிக் கொள்ளும். அந்த விசயத்தில் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் உடல் உதவி செய்வதில் முதலாளி ஒரு கண்ணன்.

 நகரத்தின் பெரிய கட்டிடமே முதலாளிக்குத்தான் சொந்தம். இலங்கை வங்கி, யாழ் கூட்டுறவு ஸ்தாபனம், குமார் அச்சகம்… என்று பல கடைகள் அந்தக் கட்டிடத்தில் இருந்தன. மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை நிலையம் ஒன்றை அந்தக் கட்டிடத்திலேயே முதலாளியும் தன் பங்குக்கு நடத்திக் கொண்டிருந்தார். அந்த கட்டிடத்துடன் சேர்ந்து  வடக்குப் பக்கமாக இரண்டு சின்னக்கடைகள் இருந்தன. அந்தக் கடைகளை அகற்றி, அதன் நிலத்தை வாங்கி தன் கட்டிடத்துக்கு மேலும் அழகூட்ட முதலாளி விரும்பினார். 

 அந்தக் கடைகளில் ஒன்று யுனைற்ரெட் ஸ்ரோஸ்(புத்தகக் கடை), மற்றது ஜெமினி பன்ஸி பலஸ். இந்த இரண்டு கடைளையும் வல்வெட்டித்துறையைச் சேரந்த அண்ணன் தம்பிகளே நடத்திக் கொண்டிருந்தார்கள். வல்வெட்டித்துறையாரோடு நேரடியாக மோத முதலாளிக்குத் தயக்கமாக இருந்தது. எப்படியாவது அந்தக் கடைகளில் இருந்து அவர்களை வெளியேற்றிவிட வேண்டும் என பல கணக்குகளைப் போட்டுப் பார்த்துக் கொண்டார். முதலாளி போட்ட கணக்கு சிக்கலாக இருந்தது. அடிமானங்கள் பல போட்டுப் பார்த்தும் அண்ணனும், தம்பிகளும் அசைந்து கொடுக்கவில்லை. தனது அடியாட்களை விட்டு ‘பீ முட்டி’ அடித்தும் பார்த்தார். பீ முட்டி’ என்றால் சிலருக்கு அது என்ன என்று புருவங்கள் மேலே எழலாம் என்பதால் அது பற்றிய ஒரு சிறு விளக்கம்.

 அப்பொழுது வாளிக் கக்கூஸ்தான் பரவலாக வீடுகளில் இருந்தன. அப்படியான கக்கூஸ்களில் இருந்து பானை (முட்டி)க்குள் மலங்களை அள்ளி வந்து வேண்டப்படாதவர்கள் வீடுகளுக்கு முன்பாகவோ, கடைகளுக்கு முன்பாகவோ எறிந்து விட்டுப் போவதுதான் ‘பீ முட்டி அடித்தல்’ என்பது.

 பீ முட்டி அடிக்கும் திருவிழா இரண்டு கடைகளுக்கும் முன்னால் ஒவ்வொரு இரவுகளும் நடந்து கொண்டிருந்தன. அண்ணன் தம்பி இருவரும்  சளைக்காமல் கூலிக்கு ஆட்களைப் பிடித்து காலையில் கடை வாசலைத் துப்பரவாக்கி சாம்பிராணி காட்டி தங்கள் வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து ‘போதுமடா சாமி’ என்று ஒதுங்க நினைத்தவர்களுக்குத் தொல்லை தந்து கொண்டிருந்த பிரச்சனை சிறைச்சாலைக்குப் போய் விட்டது.

 முதலாளிக்கு கொஞ்சம் தமிழ்ப் பற்று இருந்தது. அவரின் இந்த தமிழ்ப் பற்றை ஆரம்ப கால போராளிகள் தங்கள் பக்கம் எடுத்துக் கொண்டார்கள். (சுங்கான்) பத்மநாதன் முதலாளியின் கட்டிடத்துக்கு அருகேதான் றேடியோ திருத்தும் கடை வைத்திருந்தார். அதற்கு அடுத்ததாக இருந்த சிறீமுருகன் மெடிக்கல் ஸ்ரோஸ். அதன் உரிமையாளர், ரெலோ இயக்கத்தின் தலைவர்சிறீசபாரத்தினத்தின் அண்ணன் கந்தசாமி.

 பத்மநாதனும், கந்தசாமியும் இணைந்து என்னென்ன செய்தார்கள் என்பது தெரியாது. ஆனால் தாங்களே கைத்துப்பாக்கிகளை உருவாக்க ஆரம்பித்து விட்டார்கள். இதற்கான பொருள் உதவிகள் முதலாளியிடம் இருந்துதான் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆயுதப் போராட்டம் பலமாக இருக்கும் போதே அச்சமில்லாமல் காட்டிக் கொடுக்க ஆட்கள் இருந்த போது அன்றைய காலத்தில் ‘மொட்டைக் கடுதாசி’ எழுதிப் போட ஆளில்லாமல் போகுமா? 

 சுங்கான், அவரது கடை ஊழியர் ஒருவர், கந்தசாமி  இவர்களுடன் முதலாளியும் சிஐடி பஸ்ரியாம்பிள்ளையின் விருந்தினர்களாக சிறைச்சாலைக்குப் போனார்கள். அதன்பிறகு புத்தகக் கடைக்கும் பன்ஸிக் கடைக்கும் பீ முட்டி அடிக்கப்படுவது நின்று போனது. 

 செல்வாக்குகளைப் பாவித்து கொஞ்சக் காலத்துக்குப் பிறகு பஸ்ரியாம்பிள்ளையின் விருந்தினர் மாளிகையில் இருந்து முதலாளி வெளியே வந்தார். ‘சிறை சென்று வந்த செம்மல்’ என்று குரல் எழுப்பிக் கொண்டே அவருக்கு மாலை போடப் போன அடிவருடிகள், “என்ன முதலாளி இப்பிடி புத்தர் மாதிரி அமைதியாப் போனார் என்று சலித்துக் கொண்டு திரும்பி வந்தார்கள்.

 சிறைக்குப் போய் வந்த பின்னர் எந்தவித அடிதடிகளும் இல்லாமல் அமைதியாக இருந்து கொண்டு பிரபலமான மனிதர்களை தனது கட்டிடத்துக்கு அழைத்து விருந்தளித்து மகிழ்ந்து கொண்டிருந்தார். அப்போது, நாட்டுக்கு வந்த சீர்காழி கோவிந்தராஜனையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவரையும்  தன் கட்டிடத்துக்கு கூட்டி வந்து விருந்தளித்தார். இவர் அவருக்கு பருகப் பால் கொடுக்க, அவர் இவரைப் பார்த்து, அமுதும் தேனும் எதற்கு? நீங்கள் அருகினிலே இருக்கையிலேயே எனக்கு” என்று கணீர் குரலில் முதலாளியைப் பார்த்துப் பாட, முதலாளி உள்ளம் உருகிப் போய் நின்றார்.

 தந்தை செல்வா, ஜி.ஜி பொன்னம்பலம் இருவரது மரண ஊரவலங்களையும் அவர்களது கட்அவுட்டுகளை வைத்து நகரத்தில் வரலாறு காணாத இறுதி ஊர்வலங்களை நடத்தி எல்லோரையும் வியக்க வைத்தார். 

 „அட முதலாளிக்கு வேறு முகமும் இருப்பது இதுவரை தெரியாமல் போயிற்றே என்று பலர் பேசிக் கொண்டார்கள். அப்படி நினைத்தவர்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே தெரியாத ஒன்று முதலாளியின் மனதுக்குள் இருந்தது.  1977ல் நடக்க இருந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது, அதுவும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடுவது என்பதே முதலாளியின் மனதில் இருந்த ஆசை.

 சிறைக்குப் போய் வந்திருக்கிறார். தமிழ்தலைவர்களின் இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தியிருக்கிறார். பலருக்கு வேலை வாங்கித் தந்திருக்கிறார். போதுமான பணமும் மக்களிடத்திலான அறிமுகமும் நிறையவே இருக்கிறது. ஆகவே தேர்தலில் போட்டியிடலாம் என்ற எண்ணம் அவருக்கு வந்ததில் தவறு இல்லைத்தான். அவருக்குத்தான் அந்தமுறை போட்டியிட வாய்ப்பு கூட்டணியில் இருப்பதாக நகரில் பேச்சு இருந்தது. “நீங்கள்தான் எங்களது வேட்பாளர் என்று அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் வாக்குக் கொடுத்திருந்தார். இருவரும் நெருக்கமாகவே இருந்ததார்கள்.

 இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழமையான போட்டியாளர் க.துரைரத்தினத்துக்கே போய்ச் சேர்ந்தது. ஐந்து தடவை போட்டியிட்டு நாலு தடவைகள் வென்று பாராளுமன்றம்  போய் வந்து கொண்டிருந்த க.துரைரத்தினத்தின் மேல் முதலாளிக்கு  மட்டுமல்ல, பலருக்கும் அதிருப்தி இருந்தது.  ஆனால் அதைப் பற்றி கூட்டணித் தலமை கண்டு கொள்ளவில்லை.

 அபிமானிகள்  தந்த ஆலோசனையில் ‘உண்மையே வெல்லும்’ என்று சுயேட்சையாக போட்டியிட முதலாளி முடிவு செய்தார். தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் செய்துவிட்டு நகரத்தில் வடக்கே கடலைப் பார்த்துக் கொண்டிருந்த காந்தி சிலைக்கு மாலை போட்டு அபிமானிகளோடு ஊர்வலமாக வந்தார். அவர் நடத்திய தேர்தல் கூட்டங்களில் மேடைகளில் கதிரைகள் எதுவுமே கிடையாது. எல்லோரும் மேடைகளில் சப்பாணி போட்டே அமர்ந்தார்கள்.முதலாளியின் பேச்சும், செயலும் பலருக்கு பிடித்துப் போனது. 

 தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்று உதய சூரியன் சின்னத்தில் முதன் முதலாகப் போட்டியிட்டதாலும், இளைஞர்களிடையே அப்பொழுது இருந்த எழுச்சியும், மேடைகளிலே இரத்தப் பொட்டுகளை புன்னகையுடன் அமிர்தலிங்கம் வாங்கிக் கொண்டிருந்ததாலும், தேர்தலின் முடிவு முதலாளிக்கு முரணாகவே போனது. அந்தத் தேர்தலில் முதலாளியால் 13 சதவீத வாக்குகளே பெற முடிந்தது.

 தேர்தல் முடிவுக்குப் பிறகு அரசியல் என்பது தன்னைவிட பெரிய பெரிய முதலைகள் வாழும் இடம் என்பதை முதலாளி புரிந்து கொண்டார். வியாபாரம், ஆன்மீகம் இரண்டும் தனக்குப் போதும் இனி அரசியலில், அடிதடிகளில் எல்லாம் இறங்க முடியாது என்று ஒதுங்கி இருந்தவரை மீண்டும் பிரச்சினை தேடி வந்தது.

 தனது கட்டிடத்தின் மேல் தளத்தில் இளைஞர்கள் கராட்டி பழகுவதற்கென முதலாளி இடம் ஒதுக்கிக் கொடுத்திருந்தார். ரட்ணசோதி என்பவரே அந்த கராட்டி வகுப்பை நடத்திக் கொண்டிருந்தார். இந்த ரட்ணசோதிதான் பின்னாளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் கராட்டி சொல்லிக் கொடுத்தவர்.“போராளிகளுக்கு முதலாளியின் கட்டிடத்தில் பயிற்சி நடக்கிறது என யாரோ ஒருவர் மொட்டைக் கடுதாசியை புலனாய்வுத்துறைக்கு எழுதிப் போட, ஒருநாள் கட்டிடத்தைச் சுற்றி  நிறைய அதிரப்படை. 

 அதில் இருந்து ஒருவாறு தன்னைக் காப்பாற்றிக் கொண்டாலும் கட்டிடத்தின் தெற்குப் பக்கமாக இருந்த அச்சகத்தால் அவருக்குப் பிரச்சனை வந்தது. அந்த அச்சகத்தின் உரிமையாளரின் தம்பிதான் கிட்டு என்கிற கிருஷ்ணகுமார். ஒரு இரவு அதிரடிப்படை இராணுவத்துடன் வந்து அச்சகத்தை தீ வைத்து முற்றாக அழித்து விட்டுப் போயிற்று. இதற்குள் மாணவர் பேரவை  பகலிலேயே  கட்டிடத்தின் மேற்குப் பக்கமாக இருந்த இலங்கை வங்கியை கொள்ளை அடித்து காவலுக்கு நின்ற ரிசேர்வ் பொலிஸை சுட்டுக் காயப் படுத்திவிட்டும் போனது. 

 கட்டிடத்தின் மேலே கராட்டிப் பிரச்சினை, தெற்கே அச்சகப் பிரச்சினை, மேற்கே வங்கிக் கொள்ளை. முதலாளிக்கு ஒன்று விளங்கிவிட்டது அரசியலும், வியாபாரமும் இனிவரும் காலங்களில் தனக்கு சரிப்பட்டு வராது என்று. அரசியலும், வியாபாரமும் காலை வாரிவிட  அடுத்து அவரது கையில் இருந்தது ஆன்மீகம் மட்டுமே. இவ்வளவு பிரச்சினைகளுக்குள் முதலாளி சிக்குண்டு இருக்கையில் அவரது மகன் போராட்டக்குழுவில் போய் சேர்ந்து விட்டான்.

 இந்திய அமைதிப்படை  முற்று முழுதாக நகரத்தை ஆக்கிரமித்து இருந்த பொழுது, சமூகத்தில் மேல் நிலையில் இருந்தவர்களோடு அவர்கள் தங்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களின் தொடர்பில் முதலாளியும் இருந்தார். முதலாளி இந்தியப்படைக்கு, போராளிகளைப் பற்றி தகவல்கள் கொடுக்கிறார் என்று யாரோ புண்ணியவான் கதையைக் கிளப்பிவிட முதலாளியின் நிலை கவலைக்கிடமாகிப் போனது. வெளி நடமாட்டத்தை குறைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தார். 

 முதலாளிக்கு வேண்டிய ஒருவர் காலமாகிப் போன பொழுது தனது அஞ்ஞாதவாசத்தை துறந்து, அந்த மரண வீட்டுக்குப் போனார். அந்த மரண வீட்டுக்கு அவரது மகன் சைக்கிளில் வந்தான். போராடப் போன மகன் நீண்ட நாட்களுக்குப் பின் தன்னை வந்து சந்தித்ததில் முதலாளிக்கு மகிழ்ச்சி.

 “அப்பா உங்களோடை கதைக்கோணும். வாங்கோ என்று சைக்கிளில் முதலாளியை ஏறச் சொன்னான்.

 “போட்டு இப்ப வந்திடுறன் என்று முதலாளி சொல்லிப் போட்டு போனதால் உடலத்தை எடுக்காமல் மரணவீட்டில் முதலாளிக்காக எல்லோரும் காத்திருந்தார்கள்.  

 “என்ன போனவரை இன்னும் காணேல்லை என்று காத்திருந்தவர்களுக்கு சற்று நேரத்துக்குப் பின் ஒரு செய்தி வந்தது,

 “முதலாளி செத்துப் போனார்

 ஏற்கெனவே தோண்டியிருந்த கிடங்குக்குள் படுக்கச் சொல்லிவிட்டு, அவரை அவரது மகனே சுட்டான் என்று ஒரு கதையும், மகன் கூட்டிக் கொண்டு போனது மட்டும்தான், முதலாளியைச் சுட்டது  வேறொரு போராளி என்றும் இரண்டு கதைகள் ஊருக்குள் வந்தன.

 முதலாளி முதலாளி என்று மரியாதையாக இந்தப் பத்தியில் நான் எழுதியதால் அவரது பெயரை இங்கே நான்  விழிக்கவில்லை. தேர்தலில் வென்று பாராளுமன்றம் போகாவிட்டாலும் தனது பெயருக்கு முன்னால் MP என்ற எழுத்துக்களைக் கொண்ட அவரது பெயர் மு.பொ.வீரவாகு. 

 அவரைப் பார்க்க  விரும்பினால் இங்கே போய்ப் பாருங்கள். 

http://www.uharam.com/2018/01/19.html

 

கவி அருணாசலம்

01.05.2018

 

 
  • கருத்துக்கள உறவுகள்

1970´களில்  நடந்த உண்மைச்  சம்பவங்களை மறக்காமல், ஒரு கோர்வையாக எழுதியுள்ளீர்கள்.
யாராக இருக்கும்.. என்று மனதிற்குள் எழுந்த கேள்விகளுக்கு,  விடைதேடி... தொடர்ந்து வாசித்துக் கொண்டு இருந்த போது  இறுதில்  அவரின் பெயரை பார்த்து....  கேள்விப் பட்ட  பெயராக இருந்தது. கதையின் சிறப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

அக்காலத்தில் கராட்டி க்ளாஸ் எப்படி இருந்தது அருணாசலம்? குட்டிமணி ஒரு சிறந்த கராட்டி வீரர் என கேள்விப்பட்டுள்ளேன் இது உண்மையா? 

வெளி நாடுகளில் இன்னும் இப்படி தமிழர்கள் எதிரும் புதிருமாக கடைகள் போட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள். ஆனால் பீமுட்டி அடிப்பதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2018 at 3:36 PM, colomban said:

அக்காலத்தில் கராட்டி க்ளாஸ் எப்படி இருந்தது அருணாசலம்? குட்டிமணி ஒரு சிறந்த கராட்டி வீரர் என கேள்விப்பட்டுள்ளேன் இது உண்மையா? 

வெளி நாடுகளில் இன்னும் இப்படி தமிழர்கள் எதிரும் புதிருமாக கடைகள் போட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள். ஆனால் பீமுட்டி அடிப்பதில்லை.

Colombian நான் கராட்டி விளையாட்டுப் பக்கம்  போனதேயில்லை.

குட்டிமணிக்கு கராட்டி தெரியுமா என்பது பற்றி எனக்குத் தெரியாது

ஒருவரை ஒருவர் தாக்கும் போது வாயில் இருந்து  சிலேளைகளில்  உதிரும் வார்த்தைகள் பீமுட்டியைவிட நாத்தமாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

வீரவாகு கட்டடம், யுனைரெட் புத்தகசாலை எல்லாம் நன்றாகத் தெரிந்த இடங்கள். ஆனால் வீரவாகுவின் முடிவு இப்படி நடந்தது தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நல்ல பழைய காய் போல ஊர்ல நடந்த அத்தனை கொசிப்புக்களும் தெரிந்திருக்கு. எனக்கு நீங்கள் பெண்ணாக இருப்பியங்களோ என்று ஒரு சந்தேகம்?

  • கருத்துக்கள உறவுகள்

வீரவாகுவின் கதையை முழுமையாகத்தெரியாது ஆனால் அவருடைய மரணம் டொடர்பாக கேள்விப்பட்டிருக்கிறேன் அதன் உண்மைத்தன்மை தெரியாது, இலங்கை இராணுவத்திற்கு காட்டிக்கொடுத்ததிற்காகவே அவர் கொல்லபட்டதாகவும் , இலங்கை இந்திய ஒப்பந்த்தின் பின்னர் புலிகளும் அரச படையினரும் போர் முடிவுக்கு வந்து விட்டது என்றநிலையில் பரஸ்பரம் சந்த்தித்துக்கொள்ளும் ஒருநிகழ்வில் சிங்களத்தளபதி கொடுத்த தகவலின் அடிப்படையிலே புலிகளுக்கு தெரியவந்த்தாகவும் அதுவரை அவர் புலிகளின் ஆள் என்றநில்யிலேயே கருதப்பட்டதாகவும் ஒரு கருத்துநிலவுகிறது

  • கருத்துக்கள உறவுகள்

முதலாளியின் மகன் இப்பொழுது எங்கே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

12 hours ago, கந்தப்பு said:

முதலாளியின் மகன் இப்பொழுது எங்கே

ஏதோ ஒரு வெளிநாட்டில் ?

  • கருத்துக்கள உறவுகள்

வேறுயாராவது கூப்பிட்டால் வீரபாகு வரமாட்டார் என்பதாலேயே மகனை கூட்டிவர சொன்னதாக கதை அடிபட்டது,

கவி, சேர்மன் நடராசா பற்றியும் எழுதுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, MEERA said:

கவி, சேர்மன் நடராசா பற்றியும் எழுதுங்கள்.

சேர்மன் நடராஜாவுக்கு இந்த ஆண்டு நூறாண்டு. ஏதும் நினைவுக்கு வந்தால் எழுதுகிறேன் மீரா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.