Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நால்வருணசாதியை வலியுறுத்தும் பகவத்கீதையைப் பாடமாக வைத்தது தவறு என்று கட்சித்தலைவர்கள் சொல்வது சரியா?

Featured Replies

அண்ணா பல்கலைக்கழகத்தில் நால்வருணசாதியை வலியுறுத்தும் பகவத்கீதையைப் பாடமாக வைத்தது தவறு என்று கட்சித்தலைவர்கள் சொல்வது சரியா?

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

 

அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் தத்துவவியல் படிப்பும், அதில் பகவத் கீதை பாடமும், சமஸ்கிருதமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்குத் தமிழக தலைவர்களும், சமூக வலைத்தளங்களில் மக்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

"சம்ஸ்கிருதம் மற்றும் பகவத்கீதையை கட்டாயப் பாடமாக இல்லாமல், விருப்பப் பாடமாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து விரைவில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும்" என விளக்கம் கொடுத்துள்ளார் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா.

நால்வருண சாதியை மனமுவந்து ஏற்றுக்கொண்டு, கார்ப்பரேட் முதலாளிகளுக்காக, மூளைச்சலவை செய்யப்பட்ட அடிமைகளை உருவாக்கவே சமஸ்கிருத மொழியும், ஆரியபகவத்கீதையும் பாடமாக வைக்கப்பட்டுள்ளது என்ற தமிழக அரசியல் தலைவர்களும், சமூக வலைத்தளங்களின் மூலம் மக்களில் பலரும் முன்னிறுத்தும் குற்றச்சாட்டில் உண்மையுள்ளதா எனப் பார்க்கலாம்.

காலப்போக்கில் பகவத்கீதை என்ற நூலில் பல சூத்திரங்கள் ஆரியர்களால் மனம்போல் சேர்க்கப்பட்டு, மிகப்பெரிய வடிவில் ஆக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு நடத்தும் பொறியியல் பல்கலைக்கழகத்தில், தமிழர்களின் தத்துவ நூற்களான, திருக்குறள் அறம், வள்ளலார் வாழ்வியல் அறம், நாலடியார் சொல்லும் தத்துவங்கள், திருமாலியம், சிவனியம் சொல்லும் சைவசித்தாந்தம் போன்றவைகளை விட்டுவிட்டு, ஆரிய மேலாண்மையைத் தூக்கிப்பிடிக்கும் ஆரியர்கள் கீதையைப் பாடமாக வைப்பானேன்?

தமிழ் மண்ணில் சாதி புகுத்தியது ஆரியரா?

"சங்க இலக்கியத்தில், ஆரியர் குலத்தில் பிறந்த கபிலர் 'பிராமணர்களே நால்வகைச் சாதியைத் தமிழகத்தில் நாட்டியதாக'க் குற்றம் சாட்டுகின்றார்.

பரிதிமாற்கலைஞரின் பார்வையில் ஆரிய வடமொழியாளர்!

தமிழ் நாட்டில் வந்து குடியேறிய ஆரியப் பிராமண அறிஞருள் நேர்மையானவர்கள் சிலர் எக்காலத்திலும் இருந்து வந்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் பரிதிமாற்கலைஞர்; தம் பெற்றோர் இட்ட வடமொழிப் பெயரான சூரியநாராயண சாஸ்திரி என்பதைத் தூய தமிழில் 'பரிதிமாற்கலைஞர்' என்று செம்மையாக்கம் கொண்ட இத்தமிழறிஞர் எழுதிய "தமிழ் மொழியின் வரலாறு" என்னும் நூலின் 202ம் பக்கத்தில் ஆரியர்களைக் குறித்துத் பின்வருமாறு குறிக்கிறார்:

"II வடமொழிக் கலப்பு.

"வடமொழி தமிழ்நாட்டில் வெகுநாள் காறும் இயக்கியும் அதற்குத் தமிழ் மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்கு உற்ற ஆற்றல் இல்லாது போயிற்று.

(1) வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை உணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்ம நூற் பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவராயும் இருந்தமைபற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்;

(2) தமிழர்களிடத்தில்லாதிருந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்' என்ற நால்வகைச்சாதி முறையை மெல்லமெல்ல நாட்டிவிட்டனர். -

'முற்சடைப் பலனில் வேறாகிய முறைமை சொல்

நால்வகைச் சாதி இந்நாட்டில் நீர் நாட்டினீர்'

என்று ஆரியரை நோக்கி முழங்கும் கபிலர் அகவலையும் காண்க.

இன்னும் அவர் தம் புத்திநலங்காட்டித் தமிழரசர்களிடம், அமைச்சர்களெனவும் மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர்;

(3) தமிழரிடத்திருந்த பல அரியவிஷயங்களையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்."

ஆரியப் பிராமணராகப் பிறந்திருந்தும், நேர்மையானவராக வாழ்ந்து, அஞ்சாமல் ஆரியப்புரட்டுக்களை உரக்கச் சொன்ன முதுபெருந் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் தெரிவித்த மூன்று கருத்துக்கள் (தடித்த எழுத்துக்களில் உள்ளவை) இங்கு உற்றுக் கவனிக்க வேண்டியவை.

"தமது சுயநலத்துக்காக ஆரியர்கள் தூக்கிப் பிடித்த நால்வருணத் தத்துவங்கள் மனிதகுலத்துக்கு விரோதம்", என்று தந்தை பெரியார் தொடங்கிய சமூகவிடுதலை இயக்கப் போராட்டங்களினால் தன்னுரிமை பெற்ற தமிழர்களை மீண்டும் அடிமையாக்கும் முயற்சியின் ஒரு பகுதி இது;

'சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம் - நால்வருண சாதிமுறை என்னாலேயே உருவாக்கப்பட்டது'

'Catch them Young', என்று சின்ன வயதிலேயே நால்வருண சாதிமுறை அடிமைத்தனத்தை, பகவான் கிருஷ்ணர் பெயரால் பகவத்கீதை நூலில் ஆரியர்கள் எழுதிச்சேர்த்த மேற்கண்ட அடிமைச் சூத்திரங்களை படிக்கும் காலத்திலேயே பொறியியல் மாணவர்களுக்குப் புகுத்தும் சதிச்செயல் செய்வதன் மூலம், சிறந்த ஆரிய அடிமைகளை உருவாக்கும் திட்டத்தைச் சூரத்தனமாக கையிலே எடுத்துவிட்டார்கள்!

தமிழரல்லாத ஒருவரை அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தராகக் கொண்டுவந்ததன் ஆரியச் சூழ்ச்சி இப்போது ஆட்டம் போடுகிறது!

ஆரியர்கள் வருமுன்பு தமிழர்கள் அனைவரும் சமம் என்ற நிலை இருந்ததைச் சொல்லும் தொல்காப்பியரின் பொருளியல் சூத்திரம்!

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
 கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே. தொல்காப்பியம்.பொருள்இலக்கணம்.4.3

மூவருண மேலோர், நாலாம் வருண கீழோர்-னு சொல்ற அனைவருக்குமான சமநீதி விதிமுறைகள் தமிழ் மண்ணில் இருந்த காலமும் உண்டு என்பது இச்சூத்திரத்தின் பொருள். கபிலருக்கும் முந்தைய இன்னொரு சாட்சியாக தொல்காப்பியம் விளங்குகிறது!

பெரியார் மறைந்துவிட்டார் என்ற அசட்டுத் துணிச்சலில், தமிழர்களை ஆழம்பார்க்கத் துணிந்துவிட்டார்கள் ஆரியர்கள், பல கோடித் தமிழர்களின் உள்ளத்தில் சுயமரியாதைச் சிம்மாசனம் போட்டு கம்பீரமாக வீற்றிருக்கிறார் பெரியார்.

பெரியாரிய சுயமரியாதைச் சிந்தனைகளும், தமிழுணர்வும், ஆரியர்களின் சதியை ஓட ஓட விரட்டும்போதுதான் பெரியார் உயிர்ப்புடன் எங்கும் நிறைந்து வாழ்வதை ஆரிய ஆட்சியாளர்கள் உணர்வார்கள்! வார்த்தை விளையாட்டுகள் செய்து மக்களைக் குழப்புவதில் ஆரியர்களை யாரும் விஞ்சிவிட முடியாது.

ஆரியர் கருத்துக்களை ஆரியர்களைவிட அதிகமாக நேசிக்கும் கோடரிக் காம்புகளாக மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழர்கள், உக்கிரமாக ஆட்டம் போடுகிறார்கள்!

மனிதகுலத்தை பிறப்பின் அடிப்படையில் நான்கு வகையாகப் பிரித்து, உழைக்கும் பெரும்பான்மை மக்களை சூத்திரர்களாக்கி, ஏனைய மூவருக்கும் கொத்தடிமையாக்கும், மனுதரும நூலை, சநாதன தருமம் என்று பெயர் மாற்றம்செய்து, இறைவனின் பெயரால் ஆரியர்கள் எழுதிய பகவத்கீதை சூத்திரங்களை, இன்றைய இளைஞர்களுக்கு 'தத்துவமும், வாழும்முறையும் - Philosophy and Ethics' என்ற பெயரில் திணிக்கிறார்கள்.

கீதையில் குணத்தின் அடிப்படையில் வருணம் சொல்லப்பட்டதாகச் சப்பைக்கட்டு கட்டுவார்கள்!

"நாலு வர்ணம்-ங்கறது, மனிதர் குணத்தின் அடிப்படையிலே, அதாவது, சத்வ, ரஜோ, தமோ குணங்களின் அடிப்படையில் பிரிச்சதே பகவான்தான். ஒரு மனிதனின் குணத்தின் அடிப்படையில்தான் அவனோட வருணம் தீர்மானிக்கப்படுகிறதே தவிர, பிறப்பின் அடிப்படையில் இல்லை";

"चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागशः।
 तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम्।।4.13।।"
 சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகச:
 தஸ்ய கர்தாரமபி மாம் வித்யகர்த்தாரமவ்யயம்."

"பிற்காலத்திலேதான் பிறப்பின் அடிப்படையில வர்ணம் வந்ததே தவிர, பகவான் அப்படியெல்லாம் உருவாக்கலே! அவரவர் குணத்த அடிப்படையாக் கொண்டதாலே, மனுஷாளோட கதிக்கு அவா அவாதான் பொறுப்பே தவிர, பகவான் இல்லன்றதயும் பகவானே கீதைல சொல்றார்", என்று கூலாகக் கதைப்பார்கள் ஆரியர்கள்!

இக்கதை முழுப்பொய் என்பதை ஆரியர் எழுதிய கீதை கொண்டே நிறுவுவோம்!

பகவத்கீதை: அத்தியாயம்-2:. சுலோகம்-47: "உனக்கு விதிக்கப்பட்ட கடமை(கருமத்தை)யைச் செய்ய மட்டுமே உனக்குப் பூரண உரிமை உண்டு. செயல்(கரும)களின் பலன்களில் உனக்கு அதிகாரமில்லை.உனது செயல்(கருமங்)களின் விளைவுகளுக்கு உன்னையே காரணமாகவும் எண்ணாதே. செயலற்ற நிலையிலும் விருப்பம் கொள்ளாதே." பகவான் (பெயரால்)

இதன் பொருள், "பலன் கருதாமல் கடமை(கருமம்)யைச் செய்."-னு பகவான் சொல்றாரு. கடமை(கருமம்)யைச் செய்யாமல் இருப்பதும் பாவம் என்கிது இச்சுலோகம்!

அடுத்த முக்கியமான செய்தி : கீதை: அத்தியாயம்-4 13வது ஸ்லோகம்:

"மூவித இயற்கைக் குணங்களுக்கும் அவற்றின் செயல்களுக்கும் ஏற்ப மனித சமூகத்தின் நால்வகைப் பிரிவுகளும் என்னாலேயே ஏற்படுத்தப்பட்டன. இம்முறையைப் படைத்தவன் நானேயாயினும் மாற்றமற்ற என்னைச் செயல்களுக்கு அப்பாற்பட்டவனாக நீ அறியக் கடவாயாக."

அடுத்ததாக, அத்தியாயம்-9, 32வது சுலோகம் சொல்லும் முக்கியமான செய்தி 'பாவயோனி' பிறப்பைக் குறிக்கும் சொல்!

"ப்ருதாவின் மைந்தனே! என்னிடம் அடைக்கலம் கொள்பவர்கள், அவர்கள் பாவ யோனியில் பிறந்த இழிய பிறவியைச் சேர்ந்தவராயினும் - பெண்டிர், வைசியர்கள்(வணிகர்), சூத்திரர்கள்(தொழிலாளர்) - பரமகதியை அடைய முடியும்.

பாவயோனி வழியாகப் பிறந்த இழிபிறவி என்று சொல்வதால், பிறப்பைக் கொண்டே ஒருவரின் தகுதி தீர்மானிக்கப்படுகிறது என்பதை இச்சூத்திரம் தெளிவாக்குகிறது!

பிறப்பே தகுதியைத் தீர்மானிக்கிறது என்று வெளிச்சம் போடுகிறது கீதையின் பதினெட்டாம் அத்தியாயம். ஸ்லோகம்-41!

"எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே! பிறப்பினால் ஏற்படும் குணபாவங்களால் நிகழும் அவரவர் செயல்(கருமங்)களின் தன்மைகளுக்கு ஏற்ப, பிராமணர்கள், சத்திரியர்கள்,வைசியர்கள், சூத்திரர்கள் என்று பிரித்து அறியப்படுகிறார்கள்.".

இந்தச் சுலோகத்தைக் காட்டி, அவரவர் குணபாவங்களாலேயே நால்வருணம் என்று எல்லோரையும் முட்டாளாக்குவார்கள்.

இதற்கு, சுவாமி பக்தி வேதாந்த பிரபுபாதா அவர்கள் தரும் விளக்கம்:

தாங்கள் வாழும் உடலின் முக்குணத் தன்மைக்கேற்ப, பகவான் விதித்துள்ள செயல்களைச் செய்து பகவானை வழிபடுவதன் மூலம் அனைவரும் வெற்றி பெறலாம்; இச்செயல்களைப் பகவான் ஆறு ஸ்லோகங்களில் விவரித்துள்ளார்.

அவரவர் பிறப்பினால் ஏற்படும் சத்துவ, ரஜ, தமோ குணங்களுக்கு ஏற்ப பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோர் என்னென்ன கடமைகள் அல்லது செயல்கள் செய்யவேண்டும் என்பவை பகவானால் வரையறுக்கப்பட்டுள்ளன" என்பதாகும்.

நால்வருணத்தாருக்கும் பகவானே என்னென்ன செயல்கள் செய்ய வேண்டும் என்பதையும், அச்செயல்களைச் செய்வதன் மூலமே பகவானை வழிபட்டு வெற்றியடைய முடியும் என்பதையும் பகவான் பெயரால் ஆரியர்கள் ஏனையோர்க்கு வரையறுத்துள்ளனர்.

"அடுத்த மூன்று ஸ்லோகங்களில்,

"நால்வருணத்தாரும் இன்னென்ன வேலைகள்தான் செய்ய வேண்டும்" என்று பகவானே வரையறுத்துக் கூறுவதாக எழுதியுள்ளனர் ஆரியர்கள்.

18.42ம் ஸ்லோகம் பிராமணன் செய்யவேண்டிய வேலை என்ன என்று கூறுகின்றது.

"அமைதி, சுய அடக்கம், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, விவேகம், அறிவு மற்றும் முழுமுதற்கடவுளே அனைத்தையும் கட்டுப்படுத்தும் சர்வவல்லமை கொண்டவர் என்னும் ஆத்திக அறிவு ஆகிய தன்மைகளால் பிராமணர்கள் செயல்படுகின்றனர். ஆக, பிராமணர்களின் வேலை, மேற்கூறிய தகுதிகளுடன் தவம் செய்வது"

" கீதை-ஸ்லோகம்.18.43 சத்திரியன் செய்யவேண்டிய வேலை என்ன என்று கூறுகின்றது.

"தீரம், வலிமை, உறுதி, வழமை, போரில் வீரம், ஈகை, மற்றும் தலைமை ஆகியன சத்திரியனின் கருமம் என்கின்றது".

வேளாண்மையும் வைசியனின் தொழிலே!

சூத்திரன் ஏனைய மூவருக்கும் உழைப்பதும், பணிவிடை செய்வதும் ஆகும்!

"கீதையின் 18.44ம் ஸ்லோகம் வைசியனுக்கும், சூத்திரனுக்கும் விதிக்கப்பட்ட கருமங்களைச் சொல்கின்றது. விவசாயம், கால்நடைகளை வளர்த்தல் மற்றும் வியாபாரம் ஆகியன வைசியனின் கருமங்கள் என்றும், ஏனைய மூன்று மேல்வருணத்தாருக்காக உழைப்பதும், பணிவிடை செய்வதும் சூத்திரர்களின் கருமங்களாகும்"

தமிழ் இனத்தில் சூத்திரர் இல்லை என்பதற்கு ஆரியப்புரட்டே சாட்சி!

கீதையில் ஆரியர்கள் சொருகிய 18.44ம் ஸ்லோகம் தொல்காப்பியரின் மரபியலுடன் மாறுபடுகிறது என்பது மிக முக்கியமான செய்தி! .

வேளாண்மை என்னும் விவசாயம் வேளாளர்களின் தொழில் என்று தமிழர்களின் தொல்காப்பியம் மரபியல் சொல்லுகின்றது.

ஆனால், விவசாயம் வைசியரின் தொழிலே என்று ஆரியர்கள் சொருகிய பகவத்கீதை ஸ்லோகம் 18.44 சொல்லுகின்றது.

தமிழர்களே! இந்த ஆரியர் கீதைதான் பகவான் சொன்னதாக உங்கள் பிள்ளைகளின் மூளைகளில் மூளைசலவை செய்து ஏற்றப்படும் என்ற அபாயத்தை உணருங்கள்!

அந்தணன், அரசன், வணிகன், வேளாளன் என்னும் நான்கு பிரிவுகளையே பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று சமன்பாடு செய்யும் புரட்டுவேலையை ஆரியர்கள் தொல்காப்பியர் காலம்தொட்டு செய்துவருகின்றனர்.

ஆரியர்களின் புரட்டு வாதம் முற்றிலும் தவறு என்பதற்கு ஆரியர்களால் சொருகப்பட்ட பகவத்கீதை ஸ்லோகங்களே சாட்சிகளாக நிற்கின்றன!

தமிழ் நாட்டில் சூத்திரர் என்ற பிரிவே இல்லை!

அது மட்டுமல்ல, தமிழகத்தில் சூத்திரர் என்று ஒரு வகுப்பாரே இருந்தது இல்லை என்பது தொல்காப்பியத்திலிருந்து முரண்படும் ஆரியர் சொருகிய பகவத்கீதை சுலோகங்கள் வெளிச்சம் போட்டு சந்தி சிரிக்க வைக்கின்றன!

ஆரிய குருமார்களின் நிலைப்பாடு - பிறப்பாலேயே நால்வருணங்கள் முடிவாகும்!

பிறப்பின் அடிப்படையிலேயே கீதையில் நால்வருணம் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதை, கீதைக்கு விளக்கம் எழுதிய அத்வைத ஸ்மார்த்த குரு ஆதிசங்கரர், துவைத மதகுரு மத்துவர், விசிஷ்ட்டாத்வைதம் மதகுரு இராமானுஜர், பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா ஆகிய ஆரியகுருமார்கள் அனைவரும் தெளிவாக விளக்கம் எழுதியுள்ளனர்.

வருணக்கட்டுப்பாட்டுக்கான மூளைச்சலவைக் கருவியே ஆரியர்களின் பகவத்கீதை ஸ்லோகங்கள்!

மக்கள் தாமாகவே முன்வந்து நால்வருணக் கட்டுப்பாட்டின்படி, அவரவருக்கு விதிக்கப்பட்ட கருமங்களை மனம் உவந்து ஏற்கும் வகையில், இறைமை என்னும் கோட்பாட்டின் மேல் மூளைச்சலவை செய்ய ஆரியர்கள் புனைந்ததே கீதை! ஆரிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்த, மனம்போல், ஸ்லோகங்களை எழுதி, கீதையில் செருகிவிட்டனர்.

கீதையின் 18.45ம் ஸ்லோகம் சூத்திரர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட மனிதர்கள் வருண முறைப்படி, விதிக்கப்பட்ட அடிமை உடலுழைப்பைத் தொழிலை உதறிவிடாமல், தாமாகவே தொடர்ந்து மனமுவந்து செய்வதற்கு, இறைவன் பெயரால் மூளைச்சலவை செய்யவே எழுதப்பட்டது.

18.45ம் ஸ்லோகம்: "மனிதன் அவனவனுக்கு விதிக்கப்பட்ட கருமத்தைத் தவறாமல் செய்வதன் மூலம் பக்குவம் அடைய முடியும்; தனக்கு விதிக்கப்பட்ட கருமத்தில் ஈடுபட்டு எவ்வாறு பக்குவம் அடைவது என்பதைச் சொல்கிறேன், கேட்பாயாக" என்றும்

"18.46ம் ஸ்லோகம் "ஒரு மனிதன் அவன் பிறந்துள்ள வருணசாதிக்கு* விதிக்கப்பட்டுள்ள கருமத்தைச் செவ்வனே செய்வதன் மூலம் எல்லா உயிர்களின் மூலமும், எங்கும் நிறைந்தவருமான இறைவனை அடைந்து முழுமை அடைய இயலும்" பகவான் கிருஷ்ணர் கூறுவதாகப் போகிறது.

"அடிமையாக இருப்பதே இறைவனை அடையும் பக்குவம்", என்று ஒன்றை சூத்திரனின் மூளையில் புகுத்திவிட்டால், எந்த அடக்குமுறைக்கும் அவசியம் நேராது; அவனே அடங்கிப் பணி செய்வான்; ஒருக்காலும் தப்பித்துப் போககூடாது என்பதற்காக, அபாரமான திட்டமிடலுடன் ஆரியர்கள் உருவாக்கிய உளவியல் உத்தியே இந்தத் தொலைநோக்குத் திட்டம்!

அடுத்த ஸ்லோகம் இன்னும் தந்திரமானது! வேறு உயர்ந்த தொழில்களில் திறமை கைவரப்பெற்ற சூத்திரர்கள், ஒருக்காலும் பிறப்பின் அடிப்படையிலான அடிமைக் குலத்தொழிலை விட்டுவிடக் கூடாது என்பதற்காக எழுதிய சூப்பர் டூப்பர் ஸ்லோகம்!

"கீதையின் 18.47ம் ஸ்லோகம்: "ஒருவனுக்குத் தகுதியுடன் கூடிய ஆற்றல் இருந்து, பிற வருணத்தாருக்கு விதிக்கப்பட்ட கருமங்களை மிக நேர்த்தியாகச் செய்வதைவிட, தனது வருணத்துக்கு விதிக்கப்பட்ட சுயதருமக் கருமங்களை, (நேர்த்தியாகச் செய்ய இயலாவிட்டாலும்), செய்வதே சிறந்தது."

இச்சுலோகத்தின் மூலம், பிராமணரைத் தவிர, ஏனைய வருணத்தாருக்கு, இறைவனை அடையும் வழி, "அவனனவன் பிறந்த வருணத்தின் தொழிலையே தொடர்ந்து செய்வது மட்டுமே" என்றும்,

"பிற வருணத்தாருக்கு விதிக்கப்பட்ட தொழில்களுக்கு மாறக்கூடாது; குறிப்பாகப், பிராமணர்களின் வேதக் கல்விக்கோ, வேள்வித் தொழிலுக்கோ முயற்சி செய்யக் கூடாது" என்ற உளவியல்ரீதியான மனத்தடையைச் செவ்வனே உருவாக்குவது என்றும் திட்டமிட்டு, உளவியல் ரீதியான மனமாற்றத்தையும், ஈடுபாட்டையும் ஆரியப்பிராமணர்கள் உருவாக்கினார்கள்!

"கீதையின் 18.48ம் ஸ்லோகம் " நெருப்பு புகையால் சூழப்பட்டிருப்பது போலவே, எந்த முயற்சியும் ஏதேனும் ஒரு குற்றத்தால் சூழப்பட்டிருக்கின்றது. எனவே குந்தியின் மகனே! குற்றம் நிறைந்ததாக இருந்தாலும்கூட, தனது உடன்(வருணத்துடன்) தோன்றிய கருமங்களை ஒருவன் துறக்கக்கூடாது" என்று பகவான் பெயரால், ஆரியர்களுக்காக உயிரையும் விடத் தயாராகும் கூலிப்படையை உருவாக்கும் அடுத்த கட்டத்துக்குத் தாவுகிறார்கள் ஆரியர்கள்.

இச்சுலோகத்தின் மூலம், பிராமணனைத் தவிர்த்த ஏனைய மூன்று வருணத்தாருக்கும் குற்றம், பாவம் உள்ளிட்ட மனிததன்மைகள் வந்துவிடக்கூடாது; குறிப்பாக, ஒரு சூத்திரன் தனது எஜமானன் கொலையே செய்யச் சொன்னாலும், கொலை பாவம் என்று கருதி, தனது எஜமானன் ஏவிய செயலைச்செய்யாமல் இருந்துவிடக் கூடாது என்ற கீழ்ப்படியும் ஒழுங்கைக் கடவுளின் பெயரால் சுயகருமம் என்று நிலைநிறுத்தவே எழுதினார்கள்.

அடிமைத்தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தாலே துறவின் பயனான மோட்சம் என்னும் மோசடி உத்தரவாதம்!

"கீதையின் 18.49ம் ஸ்லோகம் "துறவின் பலன்களை புலனடக்கம், ஜட விஷயங்களில் பற்றின்மை, ஜட சுகங்களில் நாட்டமின்மை இவற்றாலேயே அடைந்துவிட முடியும். இதுவே துறவின் உயர் பக்குவ நிலை" என்று பகவான் பெயரால் செருகப்பட்டுள்ளது.

இதற்கு, சுவாமி பக்தி வேதாந்த பிரபுபாதா அவர்கள் தரும் விளக்கம்: பகவானின் அங்க உறுப்பாகத் தன்னை எப்போதும் நினைப்பதே துறவின் உண்மையான பொருளாகும். எனவே, பகவானின் அங்க உறுப்பான ஒருவன் தனது செயல்களின் பலனை(த் தானே நுகர்வதற்கு எவ்வித உரிமையும் இல்லை😉பகவானாலேயே அனுபவிக்கப்படவேண்டும். இதுவே பகவான் உணர்வு. துறவு நிலை.

இத்தகு மனோநிலையால் பரமனுக்காகவே செயல்படுவதால், ஒருவன் திருப்தியுறுகிறான். இவ்வாறு ஜட நிலையிலான எதிலும் அவன் பற்றற்றவன் ஆகிறான். இறைத்தொண்டினால் கிட்டும் தெய்வீக ஆனந்தத்தைத் தவிர வேறு சுகம் எதுவும் காணாமல் இருப்பதற்கு அவன் பழகிவிடுகிறான்.

ஒரு துறவி தனது முந்தைய செயல்களின் விளைவுகளிலிருந்து விடுபட்டவனாகக் கருதப்படுகின்றான். ஆனால், கிருஷ்ண உணர்வில் இருப்பவனோ, துறவு ஏற்காமலேயே துறவின் பக்குவத்தை அடைகிறான். இதுவே யோகத்தின் பக்குவநிலை ஆகும்." என்கிறார்.

ஆரிய நலனுக்கான பிராமண சுயநலத்தின் உந்துதலால் சுவாமி பிரபுபாதா உதிர்த்த 'யோகத்தின் பக்குவநிலை'யைப் புரிந்து கொள்ள பின்வரும் விளக்கம் உதவும்.

சூத்திர சம்பூகர்களைத் தடுக்கும் ஸ்லோக யுக்தி!

துப்புரவுத் தொழிலாளி வீட்டில் பிறந்த ஒருவனுக்கு கல்வி கற்று, உயர்நிலை பெறவேண்டும் என்று ஆசை வரவே கூடாது; ஏனெனில், அவன் சுயகருமத்தை விடக்கூடாது என்னும் கட்டாயம் இருகிறது. ஆயினும், அந்தச் சூத்திரனுக்கு மனத்தளவில் ஏற்பட்ட ஆசை அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. பிறருக்குத் தெரியாமல், அவன் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்யக் கூடும்!

இராமராஜ்ஜியத்தில், சம்பூகன் என்னும் சூத்திரன் மோட்சமடையத் தவம் செய்து, இராமபிரானால் தலைவெட்டப்பட்டு இறந்த உத்தர இராமாயணக் கதை இதற்குத் தலைசிறந்த உதாரணம்.

இத்தகைய முயற்சிகளை தரும சாத்திர நீதிநூற்கள் இயற்றிச் சொல்லும் சட்டத்தாலோ, அடக்குமுறையாலோ முழுவதும் அடக்கமுடியாது.

ஆனால், பக்தி என்னும் உளவியல் ரீதியலான போதையை ஊட்டிவிட்டால், முழுவதுமாகத் தடுத்துவிடலாம் என்று திட்டம் தீட்டிய ஆரியப் பிராமணர்கள் செருகிய விதியே கீதையின் 18.49ம் ஸ்லோகத்தில் சொல்லப்பட்டது. இது எவ்வாறு வேலைசெய்யும் என்பதைப் பின்வரும் உதாரணம் விளக்கும்.

'யோகத்தின் பக்குவநிலை' என்னும் கருமாந்திரத்தின் மோசடியை விளக்கும் கதை!

ஒருவன் சூத்திர துப்புரவுத் தொழிலாளி வீட்டில் பிறக்கிறான்; எனவே, அவனது சுயதருமம் துப்புரவுத் தொழில் ஆகிவிடுகிறது. பகவான் உணர்வுடைய அவன் தன்னைப் பகவானின் அங்கமாக உணர்கிறான்;

அவன் பகவானுக்காகவே மலம் அள்ளுவதாகக் கருதுவதால், மலத்தின் துர்நாற்றம் அவனைப் பாதிக்காமல், (பகவான் பெயரால் ஆரியர்கள் எழுதிய கீதையில் உறுதியளித்தபடி) பகவானையே சென்றடைகின்றது; மலம் அள்ளும் கருமாந்திரத்தை அவனால் எளிதில் செய்ய முடிகிறது.

(பகவான் உணர்வற்ற ஏனைய மலம் அள்ளும் சூத்திரர்கள் மலத்தின் துர்நாற்றத்தைச் சகித்துக்கொள்ள பட்டைச்சாராயம் குடித்துத் தங்கள் உடல்நலனை இழக்கிறார்கள் என்பதை இங்கு வாசகர்கள் கவனிக்க வேண்டும்.)

இப்படி, பகவானுக்காக மலம் அள்ளும் இறைத்தொண்டினால் கிட்டும் தெய்வீக ஆனந்தத்தைத் தவிர வேறு சுகம் எதுவும் காணாமல் இருப்பதற்கு அவன் பழகிவிடுகிறான்.

மலம் அள்ளும்போதே பகவான் உணர்வில் இருப்பதால், துறவு ஏற்காமலேயே துறவின் பக்குவத்தை அடைகிறான்.

பட்டைச் சாராயத்தின் உதவியில்லாமல் இத்தகைய "யோகத்தின் பக்குவநிலை" அடையும் 'கருமாந்திர'த்துக்குக் பகவான் உணர்வே துணை. உடல் நலமும் காக்கப்படும்.

மதம் ஒரு அபின் போன்ற போதைப்பொருள் என்னும் மார்க்சின் தத்துவத்தை விளக்கும் ஆரியர்கள்!

"மதம் ஒரு 'அபின்' போன்ற போதைப் பொருள்", என்று காரல் மார்க்ஸ் சொன்ன தத்துவத்துக்கு இதுவரை எனக்குப் புரியாமல் இருந்தது; காரல் மார்க்ஸ் தத்துவத்துக்கான சரியான விளக்கத்தை பிரபுபாதா அவர்களின் பகவத்கீதை விளக்கம் தருகின்றது.

இறுதியாக, சம்ஸ்கிருத சாஸ்திரங்களின் மொத்த உண்மை உருவமாக, பக்தி என்னும் இனிப்பு தடவிய நால்வருண நஞ்சை நயமான சொற்களில் வார்த்தெடுத்து, அடிமைகள் தாமாகவே முன்வந்து, வருணதர்மத்தைக் காக்கும் வகையில் ஆரியப்பிராமணர்களால் பகவான் பெயரில் பின்னப்பட்டுள்ள நூலே பகவத்கீதை.

பொறியியல் படிக்கும் சூத்திரர்களைக் குறிவைத்துப் பாடத்திட்டம்!

இப்போது பொறியியல் படிக்கும் பெரும்பான்மைச் சூத்திரர்களை மூளைச்சலவை செய்ய, ஆரியர்கள் உருவாக்கிய கீதையைப் பாடமாக வைத்து, தொடர்ந்து இந்நிலையைத் தக்கவைக்க முயற்சி செய்கிறார்கள்!

திருக்குறளின் உயர்வும், பகவத்கீதையில் ஆரியர்களால் செருகப்பட்ட கீழ்மை ஸ்லோகங்களும்!

இறைவன் திருப்பெயரால், ஆரியர்கள் செய்த கீழ்த்தரமான சுயதரும சித்தாந்தத்தை நோக்கும்போது, மனிதரான திருவள்ளுவர் தம் சகமனிதர்களுக்குச் சொன்ன உயிர் சமத்துவத் தத்துவம் பேசும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் திருக்குறள் அறம், ஞாலத்தினும் மாணப் பெரியது; முற்றிலும் உயர்ந்தது.

அடிமை வேதாளங்களும், ஆரிய விக்கிரமாத்தித்தர்களும்!

தன் முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தன் கதையில் வரும் முருங்கை மரம் ஏறும் வேதாளத்தைப் போல, தமிழ்ப் பண்பாட்டையும், மெய்யியலையும் விழுங்கத் துடிக்கும் ஆரியர்களின் விடாமுயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

ஆரியக் கருத்தியல்களையும், அடக்குமுறைகளையும் தமிழர்கள் எதிர்த்துப் போரிடுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

ஆய்வுக்குறிப்புகள் வேண்டுவோர் கீழ்க்கண்ட கட்டுரைக்குச் சென்று படிக்கவும்:

  1. திருக்குறளும் கீதையின் நால்வருணமும் - குறள் ஆய்வு-5(பகுதி1)

  2. திருக்குறள் நால்வருண சாதிமுறையைப் பின்பற்றிய நூலா? - குறள் ஆய்வு-4(பகுதி2).

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்

உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!

கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு

துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.