Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆர்மீனியாவுடனான போரில் அசர்பைஜான் இராணுவத்தினர் மூவாயிரம் பேர் உயிரிழப்பு- வெளியானது தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்மீனியாவுடனான போரில் அசர்பைஜான் இராணுவத்தினர் மூவாயிரம் பேர் உயிரிழப்பு- வெளியானது  தகவல் | Athavan News

ஆர்மீனியாவுடனான போரில் அசர்பைஜான் இராணுவத்தினர் மூவாயிரம் பேர் உயிரிழப்பு- வெளியானது தகவல்

ஆர்மீனியாவுடனான போரில் அசர்பைஜான் இராணுவத்தினர் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக ஆர்ட்சாக் குடியரசு ஜனாதிபதியின் ஊடக செயலாளர் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

அசர்பைஜானில் ஆர்மீனியர்கள் பெரும்பான்மையாகவுள்ள நகோர்னோ – கராபக் பகுதி தன்னாட்சி பெற்றதாக அறிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப்பகுதியில் அசர்பைஜான் தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து, ஆர்மீனியர்களுக்கு ஆதரவாகவும், அசர்பைஜானின் தாக்குதலுக்குப் பதிலடியாகவும் ஆர்மீனிய இராணுவத்தினர் பீரங்கி ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூண்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஒருவார காலமாக இடம்பெற்றுவரும் இந்தப் போரில், அசர்பைஜான் இராணுவத்துக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆர்ட்சாக் குடியரசின் (Republic of Artsakh) ஜனாதிபதியின் ஊடகச் செயலாளர் வக்ரம் போகொஸியன் (Vagram Pogosyan) தனது பேஸ்புக் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், அசர்பைஜான் இராணுவத்தினரின் இழப்பு மூவாயிரம் படைவீரர்களைத் தாண்டிவிட்டன என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உயிரிழந்த வீரர்களின் பெரும்பாலான உடல்கள் நடுநிலை மண்டலத்தில் உள்ளன. அவற்கைக் கொண்டுசெல்வதற்காக போக்குவரத்து நடவடிக்கைகள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/ஆர்மீனியாவுடனான-போரில்-அ/

  • கருத்துக்கள உறவுகள்

அர்மீனியா - அஜர்பைஜான் ராணுவ மோதல்: ஒருவர் மீது ஒருவர் குண்டு மழை

37 நிமிடங்களுக்கு முன்னர்
A building is on fire after shelling in Stepanakert, disputed Nagorno-Karabakh region. Photo: 3 September 2020

பட மூலாதாரம், REUTERS

 
படக்குறிப்பு, 

ஸ்டெப்பன்க்யர்ட் நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையான மோதல் ஒரு நாட்டின் பகுதி மீது இன்னொரு நாடு குண்டு வீசித் தாக்குதல் நடத்தும் அளவுக்கு மோசமாகியுள்ளது. 

அஜர்பைஜான் நாட்டின் இரண்டாவது மிகப்பரிய நகரமான கஞ்சா மீது அர்மீனிய பாதுகாப்பு படைகள் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளன. 

ஒரு குறிப்பிட்ட இலக்கு மீது தாக்குதல் நடத்தாமல், பரவலான நிலைகள் மீது ஆயுதத் தாக்குதல் நடத்துவது ஷெல் தாக்குதல் எனப்படும்.

குண்டுவீச்சில் இருந்து பொதுமக்கள் தப்பும் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. களத்தில் பிபிசி குழுவும் இருக்கிறது.

 

முதலில் தாக்குதல் நடத்தியது யார்?

நாகோர்னோ - காராபாக் எனும் மலைப் பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே. 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் பிரச்சனை கடந்த வாரம் ஆயுத மோதலாக உருவெடுத்தது. 

நாகோர்னோ - காராபாக் பகுதி அலுவல்பூர்வமாக அஜர்பைஜான் நாட்டுக்கு சொந்தமானது. ஆனால், அப்பகுதி அர்மீனிய இனத்தவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. 

தங்கள் பிராந்திய தலைநகரான ஸ்டெப்பன்க்யர்ட் அஜர்பைஜான் படையினரால் ஷெல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டதால் தாங்கள் கஞ்சா நகரில் உள்ள ராணுவ விமான நிலையம் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக, தங்களைத் தாங்களே தன்னாட்சி அரசாக அறிவித்துக்கொண்டுள்ள நாகோர்னோ - காராபாக் பகுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும் தங்கள் ராணுவ நிலைகள் எதுவும் தாக்கப்படவில்லை என்று அஜர்பைஜான் அரசு தெரிவித்துள்ளது.

சோவியத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது நாகோர்னோ - காராபாக் பகுதி மக்கள் அர்மீனியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து வாக்களித்தனர். 

Conflict in Nagorno-Karabakh
 

அது சோவியத்தின் குடியரசுகளாக அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இருந்தபோதும், சோவியத் ஒன்றியம் உடைந்த பின்னரும் 1988 முதல் 1994 வரையிலான போருக்கு வழிவகுத்தது.

1988 - 1994 காலகட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் நடந்த போரில் குறைந்தது 30,000 பேர் கொல்லப்பட்டனர். பல லட்சம் பேரைத் தங்கள் பூர்விக இடங்களில் இருந்து வேறு இடத்துக்கு செல்லும் நிலைக்கு அந்தப் போர் தள்ளியது. 

1994இல் இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்ட பிறகு தற்போது நிகழும் மோதல்தான் மிகப்பெரிய மோதலாக உள்ளது.

இருநாடுகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் செய்ய வைக்க சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகள் மேற்கொள்ளும் முயற்சி இதுவரை தோல்வியையே சந்தித்து வருகிறது.

அர்மீனியா - அஜர்பைஜான் மோதல்: கொல்லப்பட்டது எத்தனை பேர்?

இதுவரை சமீபத்திய மோதலில் இரு தரப்பிலும் குறைந்தது 220 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரு தரப்பிலும் பாதிப்பு எவ்வளவு என்பது சுயாதீனமாக உறுதிப்படுத்த இயலவில்லை என்பதால் உண்மையான பலி எண்ணிக்கை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இதுவரை உறுதியாகியுள்ள 220 பேர் என்பதை விட அது அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த ஞாயிறன்று ஏழு நாகோர்னோ - காராபாக் பகுதி கிராமங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அஜர்பைஜான் தெரிவித்துள்ளது. எனினும், தாங்கள் தொடர்ந்து முன்னேறி வருவதாக நாகோர்னோ - காராபாக் தன்னாட்சி பகுதி அரசு தெரிவிக்கிறது.

அர்மீனியா - அஜர்பைஜான் இடையே என்ன பிரச்சனை?

மலைகள் சூழ்ந்த பகுதியான நாகோர்னோ - காராபாக் பகுதிகள் யாருக்குச் சொந்தம் என்பதுதான் பிரச்சனை.

Armenia-Azerbaijan: What's behind the Nagorno-Karabakh conflict?

பட மூலாதாரம், AFP

 
படக்குறிப்பு, 

1990களில் அர்மீனிய படைகள் அஜர்பைஜான் படைகளை நாகோர்னோ - காராபாக் பகுதியில் இருந்து விரட்டியடித்தன. (கோப்புப்படம்)

இது குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள இரண்டு தசாப்தங்கள் பின்னோக்கி பயணிக்க வேண்டும்.

அஜர்பைஜான் மற்றும் அர்மீனியா ஆகிய இருநாடுகளும், ஒருங்கிணைந்த சோவித் ஒன்றியத்தின் பகுதிகளாகக் கடந்த காலங்களில் இருந்து வந்தன.

1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றிய கூட்டமைப்பு கலைக்கப்பட்ட பிறகு, அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகியவை தனித்தனி நாடுகளாக உருவாகின.

இதில் அர்மீனியாவில் கிறிஸ்துவ மதத்தினரும், எண்ணெய் வளம் மிகுந்த அஜர்பைஜானில் இஸ்லாமிய மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர். 

இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ள நகோர்னோ-கராபக் என்ற சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில், 1988ம் ஆண்டு முதல் மோதல் நடைபெற்று வருகிறது. 1994ஆம் ஆண்டு இந்த சண்டை முடிவுக்கு வந்தது.

இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர், மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்.

போரில் முடிவில் அந்த நாகோர்னோ - காராபாக் பகுதிகள் அஜர்பைஜானின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது. 

அர்மீனியா - அஜர்பைஜான் ராணுவ மோதல்: ஒருவர் மீது ஒருவர் குண்டு மழை

பட மூலாதாரம், EPA

 

ஆனால் பிரிவினைவாத அர்மீனிய இனத்தவர்களால் இந்தப் பகுதி கட்டுப்படுத்தப்படுகிறது. அர்மீனிய அரசு இவர்களைக் கட்டுப்படுத்துகிறது.

நாகோர்னோ - காராபாக் பகுதி குறித்த விவரம் 

  • மலைப் பகுதியான இதன் பரப்பளவு 4,400 சதுர கிலோமீட்டர்கள்.
  • கிறிஸ்தவ அர்மீனியர்களும், துருக்கிய இஸ்லாமியர்களும் இங்கு வசிக்கின்றனர்.
  • அஜர்பைஜானின் ஒரு பகுதியாகச் சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு இருந்தாலும், அர்மீனிய இனத்தவர்களே இங்கு அதிகம்.
  • 1988 - 1994 இடையே இரு தரப்புக்கும் நடந்த சண்டையில் 30 ஆயிரம் பேர் பலியாகினர், 10 லட்சம் பேர் புலம்பெயர்ந்தனர்.
  • ரஷ்யாவின் ராணுவ தளம் அர்மீனியாவில் உள்ளது.

 

 

https://www.bbc.com/tamil/global-54414687

 

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்குள் துருக்கியின் கை/ஆலோசனை இல்லாமல் இருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதற்குள் துருக்கியின் கை/ஆலோசனை இல்லாமல் இருக்குமா?

இந்தப் புதிய மோதலுக்குக் காரணமே துருக்கிதான்.

நாகர்னோ கரபாக் பிராந்தியம் அசர்பைஜானுக்குச் சொந்தமானதென்று சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் 93% ஆன மக்கள் ஆர்மினியர்கள். ஆகவே ஆர்மினியாவுடன் சேர்ந்து வாழவிரும்புவதாக அவர்கள் பிரகடனப் படுத்தி, இப்பகுதியை ஆர்மீனியாவுக்கு நேச நாடாக தம்வசப்படுத்தி வைத்திருக்கிறார்கள். 

இப்போது யுத்தத்தினைத் தொடங்கியது அசர்பைஜான் தான். துருக்கியின் ராணுவப் பலத்தோடு, இப்பகுதியிலிருந்து ஆர்மீனிய மக்களை துரத்திவிட அசர்பைஜான் முனைகிறது. அதனாலேயே சண்டை.

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆர்மீனியா மீது துருக்கி திட்டமிட்ட இனக்கொலை ஒன்றினை நடத்தியிருந்தது. குறைந்தது 800,000 ஆர்மீனியர்களை துருக்கிய ஒட்டொமான் அரசு கொன்றுதள்ளியிருந்தது. இந்த இனவழிப்பில் அசர் இனத்தினரும் பங்குகொண்டிருந்தனர். ஆகவே, தனது பழைய எதிரிக்க்கு இன்னொரு பாடம் புகட்டவே துருக்கி மீண்டும் இப்போரில் இறங்கியிருக்கிறது. ஆனால், ஆர்மீனியாவில் ரஷ்ஷியா தனது தளங்களை வைத்திருக்கிறது. இதுவரையில் மோதலில் நேரடியாக ஈடுபடவில்லையென்றாலும்கூட, ஆர்மீனியர்களுக்குச் சார்பான போக்கினையே ரஷ்ஷியா கடைப்பிடிக்கும் என்று கருதப்படுகிறது.  ஏற்கனவே சிரியாவில் ரஷ்ஷிய நலன்களுக்கெதிராக துருக்கி செயற்பட்டத்தால் ஏற்பட்ட முறுகல் இன்னும் தணியாத நிலையில், நாகர்னோ கரபாக்கில் துருக்கி வாலாட்டுவது, ரஷ்ஷியாவை வலிந்த போர் ஒன்றிற்குள் இழுப்பதாகவே  அமையும். 
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரஞ்சித் said:

இந்தப் புதிய மோதலுக்குக் காரணமே துருக்கிதான்.

நாகர்னோ கரபாக் பிராந்தியம் அசர்பைஜானுக்குச் சொந்தமானதென்று சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் 93% ஆன மக்கள் ஆர்மினியர்கள். ஆகவே ஆர்மினியாவுடன் சேர்ந்து வாழவிரும்புவதாக அவர்கள் பிரகடனப் படுத்தி, இப்பகுதியை ஆர்மீனியாவுக்கு நேச நாடாக தம்வசப்படுத்தி வைத்திருக்கிறார்கள். 

இப்போது யுத்தத்தினைத் தொடங்கியது அசர்பைஜான் தான். துருக்கியின் ராணுவப் பலத்தோடு, இப்பகுதியிலிருந்து ஆர்மீனிய மக்களை துரத்திவிட அசர்பைஜான் முனைகிறது. அதனாலேயே சண்டை.

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆர்மீனியா மீது துருக்கி திட்டமிட்ட இனக்கொலை ஒன்றினை நடத்தியிருந்தது. குறைந்தது 800,000 ஆர்மீனியர்களை துருக்கிய ஒட்டொமான் அரசு கொன்றுதள்ளியிருந்தது. இந்த இனவழிப்பில் அசர் இனத்தினரும் பங்குகொண்டிருந்தனர். ஆகவே, தனது பழைய எதிரிக்க்கு இன்னொரு பாடம் புகட்டவே துருக்கி மீண்டும் இப்போரில் இறங்கியிருக்கிறது. ஆனால், ஆர்மீனியாவில் ரஷ்ஷியா தனது தளங்களை வைத்திருக்கிறது. இதுவரையில் மோதலில் நேரடியாக ஈடுபடவில்லையென்றாலும்கூட, ஆர்மீனியர்களுக்குச் சார்பான போக்கினையே ரஷ்ஷியா கடைப்பிடிக்கும் என்று கருதப்படுகிறது.  ஏற்கனவே சிரியாவில் ரஷ்ஷிய நலன்களுக்கெதிராக துருக்கி செயற்பட்டத்தால் ஏற்பட்ட முறுகல் இன்னும் தணியாத நிலையில், நாகர்னோ கரபாக்கில் துருக்கி வாலாட்டுவது, ரஷ்ஷியாவை வலிந்த போர் ஒன்றிற்குள் இழுப்பதாகவே  அமையும். 
 

துருக்கி-ரஷ்யா மோதல் முறுகல் சாத்தியமாகமாட்டாது என்றே நான் நினைக்கின்றேன். ஐரோப்பிய யூனியனின் ரஷ்யா மீதான பொருளாதார தடையால்  துருக்கியையே பல பொருளாதாரங்களுக்கு ரஷ்யா நம்பியிருக்க வேண்டியுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அசர்பைஜானுக்கு ஆயுத உதவி: துருக்கிக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய கனடா  இடைக்கால தடை! | Athavan News

அசர்பைஜானுக்கு ஆயுத உதவி: துருக்கிக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய கனடா இடைக்கால தடை!

அர்மீனிய- அசர்பைஜான் நாடுகளுக்கிடையில் மோதல் முற்றியுள்ள நிலையில், அசர்பைஜானுக்கு ஆதரவாக ஆயுத உதவி செய்த குற்றச்சாட்டில், துருக்கிக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய கனடா இடைக்கால தடை விதித்துள்ளது.

துருக்கி நாட்டின் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தயாரிப்பு நிறுவனமான பாய்க்கருக்கு, தாக்குதல் இலக்குகளை குறிவைக்க உதவும் இமேஜிங் கருவிகளை, கனடா நாட்டின் L3Harris Wescam வினியோகிக்கிறது.

இந்நிலையில், அர்மீனியாவுடன் போரில் ஈடுபட்டுள்ள அசார்பைஜான் வெளியிட்ட வான்வழித் தாக்குதல் தொடர்பான காணொளியில், L3Harris Wescam தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை, அசார்பைஜானுக்கு அதன் நட்பு நாடான துருக்கி வழங்கியதாக சந்தேகிக்கும் கனடா, அது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

இதையடுத்து, துருக்கிக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை கனடா நிறுத்திவைத்துள்ளதாக கனடா வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நகோர்னோ-கராபத் என்ற மாகாணத்துக்கு உரிமைக் கொண்டாடும் விவகாரத்தில் அர்மீனிய- அசர்பைஜான் நாடுகளுக்கிடையில் மோதல் முற்றியுள்ள நிலையில், அசர்பைஜானுக்கு ஆதரவாக சிரியா மற்றும் லிபியாவில் உள்ள தனது ஆதரவு கிளர்ச்சியாளர்களை துருக்கி களமிறக்கியுள்ளது.

நூற்றுக்கணக்கான சிரியா மற்றும் லிபிய கிளர்ச்சியாளர்களை துருக்கி, விமானம் மூலம் அசர்பைஜானுக்கு அனுப்பிவைத்துள்ளது. இந்த கிளர்ச்சியாளர்கள் அசர்பைஜானுக்கு ஆதரவாகவும், அர்மீனியாவுக்கு எதிராகவும் சண்டையிட்டு வருகின்றனர்.

இதனிடையே அர்மீனிய- அசர்பைஜான் போரில் வேறுநாட்டை சேர்ந்த கிளர்ச்சியாளர்களை களமிறக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என துருக்கிக்கு ரஷ்யா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை செவிமெடுக்காத பட்சத்தில், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படைகளுடன் சண்டையிட்டு வரும் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ரஷ்யா தனது படைகளை அர்மீனியாவுக்கு ஆதரவாக எந்நேரமும் களமிறக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

http://athavannews.com/அசர்பைஜானுக்கு-ஆயுத-உதவி/

அஸார்பைஜான் ஆர்மேனியா யுத்தம் முனைப்புகள் 2020

ஜனகன் முத்துக்குமார்

1920 ஆர்மேனிய-துருக்கியப் போருக்குப் பிறகு முதல்முறையாக, ஆர்மேனியாவுக்கு எதிரான போரில் துருக்கி வெளிப்படையாகவும் நேரடியாகவும் கடந்த வாரம் முதல் ஈடுபட்டுள்ளமை பிராந்தியத்தில் புது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 27ஆம் திகதி அஸார்பைஜான் இராணுவம், நாகொர்னோ கரபஹ்க்கு எதிராக ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதலை நடாத்த தொடங்கியதுதான் குறித்த இராணுவ நகர்வுகளின் முதல் நிலையாகும். ஆர்மேனியா மற்றும் நாகொர்னோ கராபஹ்க்கு எதிரான இந்த போர் முன்னோடியில்லாத வகையில் அளவு, ஆயுதம் வல்லாண்மை மற்றும் நேரடியான துருக்கியின் ஈடுபாட்டை ஏற்படுத்தியதில் இருந்தே பதற்றமான சூழ்நிலை மேலும் ஒரு யுத்த முனைப்புக்கு வழிவகுத்திருந்தது. இவ்வாண்டு ஜூலை மாதம், அஸார்பைஜான், ஆர்மேனியாவின் தவுஷ் பிராந்தியத்தில் ஒரு குறுகிய கால யுத்த நடவடிக்கையை ஒத்திகை பார்த்திருந்தது. எவ்வாறாயினும், அஸார்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் மற்றும் துருக்கிய ஜனாதிபதி றிசெப் தயீப் ஏர்டோவானின் தற்போதைய நடவடிக்கைகள் இவ்வாண்டு ஜூலை மாத ஆத்திரமூட்டலைப் போலல்லாமல், இந்த முறை ஒரு பிராந்திய போருக்கு வழிவகுக்கும் விதமாகவே அமைந்துள்ளது.

ஆர்மேனியாவுக்கும் அஸார்பைஜானுக்கும் இடையிலான மோதல் தொடர்பான வரலாறானது, ஆர்மேனியாவின் ஒரு பகுதியான நாகொர்னோ கரபாஹ் தொடர்பானது. இது ஆர்மேனிய மக்கள்தொகை கொண்ட தன்னாட்சி பகுதியாக இருந்திருந்தது (சோவியத் ஒன்றியக் காலத்தில் 89% மக்கள் ஆர்மேனியர்களாக இருந்தனர்). சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் விருப்பத்தால், நாகொர்னோ கரபாஹ் 1920 இல் அஸார்ர்பைஜான் சோவியத் சோஷலிச குடியரசில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனினும், 1988 இல் தொடங்கிய கோர்பச்சேவின் சீர்திருத்தங்களை  தொடர்ந்து, நாகொர்னோ கரபாஹ் மக்கள் தங்கள் அரசமைப்பு உரிமைகளைப் பயன்படுத்தி அஸார்பைஜானிடமிருந்து பிரிந்து போவதற்கான குரல்களை எழுப்பத் தொடங்கியிருந்தனர். இதன் விளைவாக, அஸார்பைஜான் -ஆர்மேனிய படைகள் இடையே யுத்தம் மூண்டிருந்ததுடன், அது 1994ஆம் ஆண்டில் பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனிடையே 1992 இல் மீண்டும் நாகொர்னோ கராபாஹ் அதன் சுதந்திரத்தை பிரகடனம் செய்த போதிலும், நிகழ்த்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இன்னும் அது அஸார்பைஜானுடன் இணைந்த பகுதியாகவே பார்க்கப்படுகின்றது. ஆயினும், கராபாக்குக்கு  தொடர்ச்சியாகவே ஆர்மேனியா தனது இராணுவ உதவிகளை வழங்கிவருவதும் - உள்நாட்டு யுத்த முனைப்புக்களை அஸார்பைஜானுக்கு எதிராக தூண்டிவிடுவதுமே குறித்த யுத்த நிலைமைகள் அண்மையில் ஏற்பட வழிவகுத்திருந்தது.

குறித்த மோதலில், துருக்கி அஸார்பைஜானின் முக்கிய ஆதரவாளராக கருதப்படுகிறது. துருக்கியே 1991இல் அஸார்பைஜானை அங்கிகரித்த முதலாவது நாடாகும். துருக்கி தொடர்ச்சியாகவே  அஸார்பைஜானுக்கு இராணுவ  மற்றும் இராஜதந்திர உதவிகளை வழங்கி வருகின்றது. அஸார்பைஜானும் துருக்கியிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்யும் ஒரு நாடாக இருக்கின்றது. துருக்கி ஆர்மேனியாவை எதிர்க்க இன்னொரு காரணமும் உண்டு. குறிப்பாக, ஆர்மேனியப் படைகள் கல்பஜரைக் கைப்பற்றிய பின்னர் துருக்கி - ஆர்மீனிய உறவுகள் முழுமையாகவே துண்டிக்கப்பட்டு விட்டது.  கராபாஹ் தொடர்பாக விடையத்தில் அஸார்பைஜானுடன் ஒற்றுமையுடன் செயல்பட்டு ஆர்மேனியாவுடன் இராஜதந்திர உறவுகளை இயல்பாக்கவும் நிறுவவும் பலதரப்புக்கள் முனைந்திருந்த போதிலும், துருக்கி குறித்த சமரசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் இப்பத்தி, குறித்த போரியல் நடவடிக்கை எவ்வாறான ஒரு பிராந்திய யுத்தத்துக்கு வழிவகுக்க கூடும் என இப்பத்தி ஆராய்கின்றது.

பிராந்தியத்துக்கு வெளியே உள்ளவர்களுக்கு, இந்த ‘உறைந்த மோதல்’ எப்போதுமே தொலைதூரமாகவும் பிற முக்கிய வெளியுறவுக் கொள்கை முக்கியத்துவங்களுடன்  ஒப்பிடும்போது இப்பொது தீர்க்கப்பட தேவை இல்லாத சிந்தனையாக தோன்றியபோதிலும், அண்மைய பதற்றங்கள் குறித்த பிராந்தியத்தில் ஒரு முழு அளவிலான யுத்தத்துக்கு வழிவகுக்கும் என்பதுடன், இது பரந்த அளவில் குறித்த  பிராந்தியத்துக்கு அப்பாலும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றே அஞ்சப்படுகிறது. அஸார்பைஜானின் நீண்டகால நட்பு நாடான துருக்கி, ஆர்மேனியா குறித்த அஸார்பைஜானின் "உள்நாட்டு விவகாரங்களில் இருந்து" விலக வேண்டும் என்று கோரியுள்ளது. ஜனாதிபதி எர்டோகன், அண்மைய உரையில், துருக்கியின் அஜர்பைஜானுடனான முழு ஒற்றுமையை அடிக்கோடிட்டுக் காட்டி, ஆர்மேனியா தனது நாகொர்னோ-கராபாஹ் ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு வலியுறுத்தியிருந்தார்.

மறுபுறம், கூட்டு பாதுகாப்பு உடன்படிக்கை அமைப்பு (Collective Security Treaty Organisation) ஒப்பந்தத்தின் விளைவாக ஆர்மேனியாவின் நெருங்கிய நட்பு நாடாக பரவலாகக் கருதப்படும் ரஷ்யா உடனடியாக இப் போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளமையையும் கவனிக்கவேண்டும். அதற்கும் காரணம் உண்டு. ரஷ்யா, ஆர்மீனியா தனது ஒப்பந்தக் கடமைகளின் மூலம் ரஷ்யாவை மோதலில் ஈடுபடுத்த முயன்றால் அதிலிருந்து ரஷ்யாவால் பின்வாங்க முடியாது என்று கருதுகின்றது. குறிப்பாக, ஆர்மேனியாவுக்கு எதிரான யுத்த நடவடிக்கைகள் ஆர்மேனியாவில் நிலை கொண்டுள்ள ரஷ்யப் படைகள் - ரஷ்யாவின் இராணுவ விருப்புக்களுக்கு மாறுதலாக அமையும் என ரஷ்யா கருதுகின்றது. குறிப்பாக, ஆர்மீனியாவில் கியூம்ரியில் ஒரு இராணுவத் தளத்தை ரஷ்யா பராமரிக்கின்ற நிலைமை, ஆர்மேனியாவை போரில் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தை ரஷ்யாவுக்கு ஏற்படுத்தும். இதன் அடிப்படையிலேயே தான், துருக்கி தனது எல்லைக்குள் ஒரு ஆர்மேனிய ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறி, அஸார்பைஜான் மற்றும் துருக்கி இரண்டாலும் எதிர்க்கமுடியாத அளவான இராணுவ வல்லாதிக்கத்தை கொண்ட ரஷ்யாவை குறித்த யுத்தத்தில் பங்குபற்ற ஆர்மேனியா தூண்டுகின்றது.

ஒரு பரந்த கண்ணோட்டத்தில் மோதலைப் பார்க்கும்போது, ரஷ்யாவும் துருக்கியும் மீண்டும் சிரியாவக்கு வெளியே மற்றொரு பிராந்திய மோதலின் பக்கங்களில் தங்களைக் காண்கின்றன. இரு தரப்பினரின் இராணுவ மற்றும் ஆயுதத் திறன்களும் வேறொரு யுத்தத்தில் போட்டியாக பயன்படுத்தப்படுவதற்கு ஒரு காரணத்தை தேட முடியும். பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா மின்ஸ்க் குழுமத்தின் (மோதலுக்கு அமைதியான தீர்வைக் காண 1992 இல் அமைக்கப்பட்டது) கூட்டு இணைத் தலைவர்களாக ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுத்தலானது, எவ்வளவு விரைவாக பல வல்லாதிக்க நாடுகள் இலகுவில் ஒரு யுத்த முனைப்புக்குள் தள்ளப்படலாம் அல்லது ஈர்க்கப்பலாம் என்பதை புலப்படுத்துகின்றது.  குறிப்பாக, அஸார்பைஜானை அதன் தெற்கு அண்டை நாடான ஈரானின் நட்பு பட்டியலில் சேர்த்தல் ஐரோப்பா மற்றும் யூரேசியா பிராந்தியத்தில் ஒரு சிக்கலான யுத்தத்தை ஏற்படுத்தும் சாத்தியத்தை உருவாக்குகின்றது

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அஸார்பைஜான்-ஆர்மேனியா-யுத்தம்-முனைப்புகள்-2020/91-256454

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஆர்மீனியா vs ஆசர்பைஜான் | இது வெறும் யுத்தம் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யா மேற்படி இரு நாட்டு வெளிநாட்டு அமைச்சர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அஜர்பைஜான், ஆர்மேனியா இடையிலான சண்டை முடிவுக்கு வந்தது

அஜர்பைஜான், ஆர்மேனியா இடையிலான சண்டை முடிவுக்கு வந்தது

 

மாஸ்கோ, 

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியாவின் எல்லையில் உள்ள நாகோர்னோ காராபாக் எனும் மலைப் பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சினை நிலவுகிறது. நீண்டகால இந்த எல்லைப் பிரச்சினை கடந்த மாத இறுதியில் ஆயுத மோதலாக உருவெடுத்தது. நாகோர்னோ காராபாக் பிராந்தியத்தில் அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகளின் ராணுவத்துக்கு இடையே நடந்த கடுமையான சண்டையில் அப்பாவி மக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.


இருநாடுகள் இடையிலான இந்த மோதல் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்திய நிலையில் அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் சமாதான முயற்சியை முன்னெடுத்தன.

அதன்படி ரஷிய அதிபர் புதினின் அழைப்பின் பேரில் அந்த நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் ரஷியா, அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் இடையே நேற்று முன்தினம் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

10 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா ஆகிய இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன.

சர்ச்சைக்குரிய பகுதியில் கிடக்கும் இருதரப்பு மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை ஒப்படைப்பது மற்றும் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் முதல் நாகோர்னோ காராபாக் பிராந்தியத்தில் மேலும் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.

https://www.dailythanthi.com/News/World/2020/10/11015954/The-Fighting-Between-Armenia-and-Azerbaijan-Has-Halted.vpf

ஆர்மேனியா – அஜர்பைஜான் மோதல்களுக்கான காரணம் என்ன?

முன்னைய சோவியத்யூனியனின் இரு குடியரசுகளான ஆர்மேனியாவுக்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
இந்த மோதலிற்கான முக்கிய காரணமாக நகர்னோ கரபாக் பிராந்தியம் குறித்த தசாப்தகால முறுகல்நிலை காணப்படுகின்றது.

azeriar4-300x169.jpg
.1980களின் பிற்பகுதியிலும் 90ன் ஆரம்பத்திலும் இரு நாடுகளும் இரத்தக்களறி மிக்க மோதல்களில் ஈடுபட்டிருந்தன.
நகர்னோ கரபாக் அஜர்பைஜானின் ஒரு பகுதி எனினும் அதன் பிரஜைகள் பெருமளவிற்கு ஆர்மேனியர்கள்.

azer-ar-300x169.jpg

 

1980 களில் சோவியத்யூனியனில் இடம்பெற்றிருந்த குடியரசுகள் மத்தியில் பதற்றம் அதிகரித்தவேளை , நகர்னோ கரபாக் மக்கள் ஆர்மேனியாவின் ஒருபகுதியாக காணப்படுவதற்கு விருப்பம் தெரிவித்து வாக்களித்தனர்.
இதன் காரணமாக மோதல் வெடித்து 1994வரை நீடித்தது.
அதன் பின்னர் நகர்னோ கரபாக் அஜர்பைஜானின் ஒரு பகுதியாக காணப்படுகின்றது ஆனால் அதன் கட்டுப்பாடு ஆர்மேனிய அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற ஆர்மேனிய வம்சாவளிகளின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது.
பல வருடங்களாக உலக நாடுகள் இரு தரப்பிற்கும் இடையில் மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அதன் காரணமாக சமாதான உடன்படிக்கைகள் எவையும் ஏற்படவில்லை.

nagorno-karabakh_conflict_map_v2_640-nc-

ஆர்மேனியா கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு அதேவேளை அஜர்பைஜான் முஸ்லீம்கள் பெரும்பான்மையினத்தவர்களாக காணப்படுகின்றனர்.
அஜர்பைஜான் துருக்கியுடன் நெருங்கிய நட்புறவை கொண்டுள்ள அஜர்பைஜானிற்கும் ரஸ்யாவிற்கும் இடையில் நல்லுறவு காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.
ரஸ்யாவிற்கும் ஆர்மேனியாவிற்கும் இடையில் நல்லுறவு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

download-1-2.jpg
ஆர்மேனியா அஜர்பைஜான் நகர்னோ கரபாக் பகுதி தென்கிழக்கு ஐரோப்பாவின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த மலைப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
பல நூற்றாண்டுகளாக பல தரப்பினர் இந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்- இவர்களில் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் உள்ளனர்.
நவீன கால ஆர்மேனியாவும் அஜர்பைஜானும் 1920களில் சோவியத்யூனியனின் ஒரு பகுதியாக மாறின.
நகர்னோ கரபாக் ஆர்மேனிய இனத்தவர்கள் அதிகமாக வாழும் பகுதியாக காணப்பட்டது.
எனினும் சோவியத்யூனியன் அந்த பகுதியின் கட்டுப்பாட்டை அஜர்பைஜான் அதிகாரிகளிடம் வழங்கியது.
நகர்னோ கரபாக்கில் உள்ள ஆர்மேனியர்கள் இதனை ஏற்க மறுத்ததுடன் தங்கள் பகுதியின் கட்டுப்பாட்டை ஆர்மேனியர்களிடம் ஒப்படைக்குமாறு பல தடவைகள் வேண்டுகோள் விடுத்தனர்.
எனினும் அது சாத்தியமாகவில்லை.
1980களின் பிற்பகுதியில் சோவியத்யூனியன் வீழ்ச்சியடையதொடங்கியவேளையே நகர்னோ கரபாக்கின் பிராந்திய நாடாளுமன்றம் ஆர்மேனியாவின் ஒரு பகுதியாக மாறுவதற்காக வாக்களித்தது.
இதனை ஏற்க மறுத்த அஜர்பைஜான் பிரிவினைவாத இயக்கத்தினை ஒடுக்குவதற்கு முயற்சித்தது.
இது இனங்களுக்கு இடையிலான மோதலாக மாறியது.
ஆர்மேனியாவும் அஜர்பைஜானும் சோவியத்திலிருந்து பிரிந்த பின்னர் முழுமையான யுத்தம் மூண்டது.

azerar1-300x169.jpg
பலஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதுடன் ,இரு தரப்பும் இன சுத்திகரிப்பு படுகொலைகளில் ஈடுபடுகின்றன என குற்றச்சாட்டுகளும் வெளியாகியிருந்தன.
நகர்னோ கரபாக்கை ஆர்மேனிய படையினர் தமது படைகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின்னர் 1994 இல் ரஸ்யாவின் மத்தியஸ்தத்தினால் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இந்த உடன்படிக்கை காரணமாக நகர்னோ கரபாக் தொடர்ந்தும் அஜர்பைஜானிடமே காணப்படுகின்றது எனினும் அதன்கட்டுப்பாடு பிரிவினைவாத ஆர்மேனியர்களிடம் காணப்படுகின்றது.
ஆர்மேனியர்கள் அதனை நிர்வகிக்கின்றனர் ஆர்மேனியா அவர்களுக்கு ஆதரவளிக்கின்றது.

azer-ar3-300x169.jpg

 

பூகோள அரசியல்
இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் பூகோள அரசியல் காரணமாக மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது.
நேட்டோ நாடான துருக்கியே முதன் முதலில் 1991 இல் அஜர்பைஜானின் சுதந்திரத்தை ஆதரித்தது.

azer-ar2-300x169.jpg
இருநாடுகளும் ஒரே கலாச்சார பின்னணியைகொண்டுள்ளன,துருக்கி ஜனாதிபதி அஜர்பைஜானுக்கு தனது ஆதரவை வெளியிட்டு வருகின்றார்.
துருக்கி ஆர்மேனியாவுடன் இராஜதந்திர உறவுகள் எதனையும் கொண்டிருக்கவில்லை.
1993 இல் நகர்னோ கரபாக் தொடர்பில் மோதல்கள் வெடித்தவேளை துருக்கி அஜர்பைஜானுக்கு ஆதரவாக ஆர்மேனியாவுடான எல்லையை மூடியது.

https://thinakkural.lk/article/78772

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்மீனியாவுக்கும் அஸர்பைஜானுக்குமிடையே மோதல் – நாகொர்ணோ-கரபாக் யுத்தத்தில் அதிகரிக்கும் இழப்புகள்

 
thumbnail_3-1-696x464.jpg
 36 Views

சர்ச்சைக்குரிய நாகோர்ணோ-கரபாக் பிரதேசத்தில் ஆர்மீனியன் துருப்புகளுக்கும் அஸர்பைஜான் துருப்புகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இம் மோதலில் அப்பாவிப் பொதுமக்கள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மலைப்பாங்கான இந்தப் பிரதேசம் உத்தியோகபூர்வமாக அஸர்பைஜானின் ஒரு பகுதியாக இருக்கின்ற பொழுதிலும், 1994ஆம் ஆண்டிலிருந்து இப்பிரதேசம் ஆர்மீனியன் இனத்தவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை எந்த ஒரு நாட்டினதும் அங்கீகாரத்தையும் பெறாமல் ஆர்மீனியன் போராளிகளால் தன்னிச்சையாகக் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் இப்பகுதியில் 84 இராணுவ வீரர்கள் உட்பட பொதுமக்களும் கொல்லப்பட்டதாக அக்குடியரசின் அதிகாரிகள் அறிவித்திருக்கிறார்கள்.

2-2.jpg

இது இப்படியிருக்க, அஸர்பைஜானோ தனது இராணுவ இழப்பை இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் பொதுமக்களில் ஏழுபேர் இதுவரை கொல்லப்பட்டிருப்பதாக அந்நாடு அறிவித்திருக்கிறது.

மோதல் ஆரம்பித்து தற்போது ஒரு வாரமாவதுடன் குறிப்பிட்ட பிரதேசத்துக்கு வெளியிலும் மோதல் நகரத் தொடங்கியிருக்கிறது.

ஆர்மீனிய நாட்டின் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ள வார்டேனிஸ் நகரில் ஒரு பேருந்து அஸர்பைஜான் நாட்டின் ஒரு ஆளில்லா விமானத்தின் தாக்குதலுக்கு உள்ளானதாக ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

அதேவேளையில் ஆர்மீனியா மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் இரண்டு அஸர்பைஜான் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அந்நாடு திங்கட்கிழமை தெரிவித்தது. அதே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் ஆர்மீனியாவின் தாக்குதலில் அதற்கு முதல் நாள் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலம் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலைப் பொறுத்தவரையில், 2016ஆம் ஆண்டிற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் மிகக் கடுமையாக தாக்குதல்கள் இவையாகும்.

ஆர்மீனியாவும் அஸர்பைஜானும் மோதல் பிரதேசங்களுக்கு மேலும் அதிக இராணுவத்தை நகர்த்தியிருப்பதுடன் சில பிரதேசங்களில் இராணுவச் சட்டத்தையும் பிரகடனப்படுத்தியிருக்கின்றன. யார் உண்மையில் மோதலைத் தொடங்கியது? என்பது தொடர்பாக இரு நாடுகளுமே ஒன்றையொன்று குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கின்றன.

114679200_7e04c87d-f550-4c70-8b8e-0d3fe6

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோக்கேசஸ் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்த மோதலில் மற்றைய நாடுகளும் நேரடியாகப் பங்குபற்றக்கூடும் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

துருக்கி வெளிப்படையாகவே அசர்பைஜானை ஆதரிக்கும் அதே வேளை ஆர்மீனியாவில் இராணுவ தளத்தைக் கொண்டிருக்கும் ரஷ்யாவோ உடனடிப் போர்நிறுத்தத்தைக் கோரியிருக்கிறது.

அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டும் இருப்பது தொடர்பாகவும் பொதுமக்களின் உடைமைகளும் கட்டமைப்புகளும் சேதப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பாகவும் தாம் அதிக கவலையடைந்திருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரான மிசேல் பச்செலெற் தெரிவித்திருக்கிறார். “மோதல் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

முன்னணி நிலைகளிலிருந்து வரும் பிந்திய தகவல்கள்

கடுமையான சண்டை இரவிரவாகத் தொடர்ந்து நடந்ததாக ஆர்மீனியாவும் அஸர்பைஜானும் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

ஞாயிற்றுக்கிழமை மோதல் தொடங்கியதிலிருந்து தங்களது இராணுவ வீரர்கள் 87 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 120 பேர் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் நாகொர்ணோ-கரபாக் பிரதேசத்தின் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஆர்மென்பிரெஸ் செய்திப் பிரிவு (Armenpress News Agency) தகவல் வெளியிட்டிருக்கிறது.

114680228_nk_english_28-09-2020-nc.png

அஸர்பைஜான் பக்கத்தில் ஏறத்தாழ 400 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு விமானம், நான்கு உலங்கு வானூர்திகள் என்பவற்றுடன் பல டாங்கிகளும் அழிக்கப்பட்டிருப்பதாக அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்திருக்கிறது.

இது இப்படியிருக்க, புஸ_லி-ஜப்ரேயில் (Fuzuli – Jabrayil) அக்டேரே-ரேட்டர் (Aghdere – Terter) ஆகிய பிரதேசங்களில் தாம் இழந்த பகுதிகளை மீளக்கைப்பற்றுவதற்கு ஆர்மீனியன் துருப்புகள் பல தடவைகள் தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன என்று அசர்பைஜான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்ததாக செய்தியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

கவச வாகனங்களையும் ஏனைய இராணுவ வாகனங்களையும் உள்ளடக்கிய ஆர்மீனிய இராணுவ வாகனங்களின் ஒரு தொகுதி முற்றாக அழிக்கப்பட்டிருப்பதாகவும் ஆர்மீனியர்கள் பலத்த இழப்பைச் சந்தித்திருப்பதாகவும் அஸர்பைஜான் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மோதலில் ஏற்படுத்தப்பட்டுள்ள இழப்புகள் தொடர்பாக ஆர்மீனியா மற்றும் அஸர்பைஜான் ஆகிய இருநாடுகளும் வெளிப்படுத்தியுள்ள தரவுகள் சுதந்திர ஊடகங்களால் உறுதிப்படுத்தப்படவில்லை.

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%

இம் மோதல் தொடர்பாக இப்பிரதேசத்தில் உள்ள மற்றைய நாடுகளின் நிலைப்பாடு என்ன?

“இப்பிரதேசத்தில் ஆர்மீனியா தான் மேற்கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பை உடனடியாக முடிவுக்கொண்டு வந்து அப்பிரதேசத்திலிருந்து வாபஸ் பெற வேண்டும் என்றும் அப்படிச் செய்வதே அப்பிரதேசத்தில் மீண்டும் அமைதியை ஏற்படுத்தும்” என்றும் துருக்கிய அதிபரான றிசெப் ரெய்யிப் ஏர்டோகன் (Recep Taayip Erdogan) அறைகூவல் விடுத்திருக்கிறார்.

“தாம் எவ்வளவு தூரம் செல்ல விரும்புகிறார்களோ அவ்வளவு தூரத்துக்கு தமது அஸர்பைஜான் நண்பர்கள் செல்லவேண்டும்” என்று ஏர்டோகானின் முதன்மை ஆலோசகரான இல்நூர் சேவிக் (Ilnur Cevik) கூறியிருக்கிறார்.

இப்பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அஸர்பைஜானுக்கு துருக்கி நேரடியாகவே இராணுவ உதவியை வழங்குவதாக ஆர்மீனியா குற்றஞ்சாட்டியிருக்கிறது. அசர்பைஜான் இக்குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.

ஆர்மீனியா – அஸர்பைஜான் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களுடன் அவசர பேச்சுவார்த்தைகளை நடத்திய ரஷ்ய வெளியுறவு அமைச்சர், உடனடி போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

ரஷ்யா தலைமை தாங்கும் ‘கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பில்’ ஆர்மீனியா அங்கம் வகிக்கும் காரணத்தால் ஆறு அங்கத்தவர்களைக் கொண்ட இந்த அமைப்பிடம் ஆர்மீனியா உத்தியோகபூர்வமாகவே உதவியைக் கோரலாம். ஆனால் அப்படியாக எந்தவிதமான கோரிக்கையும் ஆர்மீனியா இதுவரை விடுக்கவில்லை.

“குறிப்பிட்ட பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்றுவரும் நிகழ்வுகளை தாம் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும்” என்றும் இப்பிரதேசத்தின் மற்றொரு முக்கிய நாடான ஈரான் கூறியிருக்கிறது.

இம்மோதலின் பின்னணி என்ன?

சோவியத்தின் ஆட்சி ஒரு முடிவை அண்மித்துக்கொண்டிருந்த வேளை, (1988இல்) அசர்பைஜான் இராணுவமும் ஆர்மீனிய பிரிவினைவாதிகளும் ஒரு மிக மோசமான யுத்தத்தில் ஈடுபட்டார்கள். அமைதி ஒப்பந்தம் ஒன்று அந்த நேரத்தில் கைச்சாத்திடப்பட, நாகொர்ணோ-கரபாக் பிரதேசம் ஆர்மீனியர்களின் கைகளுக்கு வந்தது.

இந்த யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட அதேவேளை அஸர்பைஜானி இனத்தைச் சேர்ந்த மக்கள் பலர் தமது வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

இப்பிரதேசம் ஆர்மீனியா நாட்டின் ஆதரவில் முற்றுமுழுதாகத் தங்கியிருக்கும் ஒரு தன்னிச்சையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சுதந்திர நாடு. ஆனால் இந்தப் பிரதேசம் ஆர்மீனியா உள்ளடங்கலாக ஐக்கிய நாடுகளில் அங்கம் வகிக்கும் எந்தவொரு நாட்டாலும் அங்கீகரிக்கப்படவில்லை.

இப்பிரதேசத்தைச் சுற்றியிருக்கும் சில அசேரி மக்கள் வாழும் பகுதிகளும் ஆர்மீனியர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன.

இப்பிரச்சினை தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் எந்தவித நிரந்தர அமைதி உடன்படிக்கைக்கும் வழிவகுக்கவில்லை. சோவியத்துக்குப் பிற்பட்ட காலத்தின் உறைநிலைப் பிரச்சினைகளில் ஒன்றாக இப்பிரதேசத்தின் தகராறு விளங்குகிறது.

‘கறுப்புத் தோட்டம்’ என்ற அசேரிச் சொல்லின் ரஷ்ய மொழிப்பதமே ‘கரபாக்’ என்ற சொல்லாகும். அதே வேளையில் ‘நாகொர்ணோ’ என்ற ரஷ்ய மொழிச்சொல்லின் பொருள் ‘மலைப்பாங்கானது’ என்பதாகும். ஆனால் ஆர்மீனிய இனத்தைச் சேர்ந்தவர்களோ ‘ஆட்சாக்’ என்ற புராதன ஆர்மீனியச் சொல்லால் இப்பிரதேசத்தை அழைப்பதையே விரும்புகிறார்கள்.

அவ்வப்போது போர் நிறுத்தம் மீறப்படும் போது இரண்டு பக்கங்களையும் சேர்ந்த இராணுவ வீரர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

துருக்கியுடனும் அசர்பைஜானுடனும் இருக்கும் எல்லைகள் மூடப்பட்டிருப்பதால் முற்றுமுழுதாகத் தரையால் சூழப்பட்டிருக்கும் ஆர்மீனியா பொருண்மியப் பிரச்சினைகளால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

மேற்படி தகராறுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை இதுகாறும் மேற்கொண்டுவரும் ‘பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான ஐரோப்பிய அமைப்பில்’ ரஷ்யா, பிரான்சு, அமெரிக்கா போன்ற நாடுகள் இணை அனுசரணை வழங்குகின்றன.

thumbnail_3.jpg

நாகொர்ணோ-கரபாக் – முக்கிய தகவல்கள்

  • 4400 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட ஒரு மலைப்பாங்கான பிரதேசம் (1700 சதுர மைல்கள்)
  • கிறீஸ்தவ ஆர்மீனியர்களும் முஸ்லிம் துருக்கியர்களும் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசம்
  • சோவியத்தின் ஆட்சிக்காலத்தில் அஸர்பைஜான் குடியரசுக்குள் தன்னாட்சியைக் கொண்ட பிரதேசமாக மாற்றம் பெற்றது.
  • பன்னாட்டு ரீதியில் அஸர்பைஜானின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் ஆர்மீனியன் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • இந்த பிரதேசத்தின் ஆட்சியாளர்கள் ஆர்மீனியா உட்பட எந்தவொரு ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாட்டாலும் அங்கீகரிக்கப்படவில்லை.
  • 1988-94 காலப்பகுதியில் நடைபெற்ற போரில் ஒரு மில்லியன் மக்கள் தமது இல்லிடங்களை விட்டு இடம்பெயர்ந்தார்கள், ஏறத்தாழ 30,000 பேர் கொல்லப்பட்டார்கள்.
  • இப்பிரதேசத்தைச் சுற்றியுள்ள அஸர்பைஜானின் பகுதிகள் சிலவற்றை பிரிவினைப் போராளிகள் தம்வசப்படுத்தியிருக்கிறார்கள்
  • 1994ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்தின் பின்னர் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
  • துருக்கி வெளிப்படையாகவே அஸர்பைஜானை ஆதரிக்கிறது.
  • ரஷ்யா ஆர்மீனியாவில் ஒரு இராணுவ தளத்தைக் கொண்டிருக்கிறது.

-தமிழில் ஜெயந்திரன்-

நன்றி: பிபிசி

https://www.ilakku.org/ஆர்மீனியாவுக்கும்-அஸர்ப/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்மீனிய தாக்குதலில் ஏழு பேர் உயிரிழப்பு! - தமிழ்க் குரல்

சில மணிநேரங்களில் ஒப்பந்தம் மீறப்பட்டது- ஆர்மீனிய தாக்குதலில் ஏழு பேர் உயிரிழப்பு!

அசர்பைஜானின் இரண்டாவது தலை நகரமான காஞ்சாவில் ஆர்மீனிய இராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அசர்பைஜான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்ட சில மணிநேரங்களில் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையில் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடந்த பேச்சு வார்த்தையில் போரை நிறுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

அத்துடன், நாகோர்னோ-கராபக் பகுதியில் இடம்பெற்ற மோதலில் கைதான இரு நாட்டுப் படைவீரர்களின் இடமாற்றம் மற்றும் போரில் இறந்தவர்களை ஒப்படைப்பதற்காக போராட்டத்தை நிறுத்துவது உள்ளிட்ட விடயங்கள் பேச்சுவார்த்தையின் ஒப்புக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த சில நிமிடங்களிலேயே இரு தரப்பினரிடையே மோதல் நடைபெற்றுள்ளதுடன் இருதரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டினை முன்வைத்து வருகிறது.

http://athavannews.com/சில-மணிநேரங்களில்-ஒப்பந்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.