Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Drishyam - 2: திரை விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
 
படம்

நடிகர்கள்: மோகன்லால், மீனா, அன்சிபா ஹசன், எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக், முரளி கோபி, சாய் குமார், அஞ்சலி நாயர்; இசை: அனில் ஜான்சன்; எழுத்து, இயக்கம்: ஜீத்து ஜோசப். வெளியீடு: அமெஸான் பிரைம்.

 

2013ல் ஜீத்து ஜோசப் இயக்கி வெளிவந்த Drishyam திரைப்படத்தின் இரண்டாவது பாகம். பொதுவாக, பெரும் வெற்றிபெற்ற படங்களின் அடுத்த பாகங்களின் கதை, முந்தைய படத்தின் துல்லியமான தொடர்ச்சியாக அமைவது மிகவும் குறைவு. அப்படியே அமைந்தாலும் ரசிக்கும்படியான திரைப்படமாக அமைவது இன்னும் குறைவாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் இந்த இரண்டு விஷயங்களிலும் சாதித்திருக்கிறார்.

முதலில் Drishyam படத்தின் கதையைப் பார்க்கலாம். உள்ளூரில் கேபிள் டீவி நடத்தும் ஜார்ஜ் குட்டிக்கு இரண்டு மகள்கள். அதில் மூத்த மகளிடம் ஒரு இளைஞன் மோசமாக நடந்துகொள்ள, அவனை அவள் கொன்றுவிடுகிறாள். பிறகு, குடும்பமே சேர்ந்து அந்தக் கொலையை எப்படி மறைக்கிறது என்பதுதான் அந்தப் படத்தின் கதை.

மோகன் லால்

பட மூலாதாரம்,DRISHYAM 2 - OFFICIAL TRAILER/AMAZON PRIME

முந்தைய படத்தின் கதை நடந்த ஆறு வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் கதை துவங்குகிறது. கேபிள் டிவி நடத்திக்கொண்டிருந்த ஜார்ஜ் குட்டி (மோகன்லால்) இப்போது சற்று வசதியான மனிதராகியிருக்கிறார். கொஞ்சம் கடன் வாங்கி, ஒரு திரையரங்கையும் நடத்திக்கொண்டிருக்கிறார். ஒரு சினிமா எடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். ஆனாலும், உள்ளூரில் இருப்பவர்கள் அரசல்புரசலாக, அந்த இளைஞனின் கொலையோடு ஜார்ஜ் குட்டியை இணைத்து பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். கொலை நடந்த சமயத்தில் ஜார்ஜ்குட்டி மீது உள்ளூர் மக்களுக்கு இருந்த அபிமானம் மறைந்து, பொறாமை உருவாகியிருக்கிறது.

இதற்கிடையில், அந்த ஊருக்கு வரும் காவல்துறையின் ஐஜி தாமஸ் (முரளி கோபி), இந்த வழக்கை மீண்டும் கையில் எடுக்கிறார். கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் எங்கேயிருக்கிறது என்பதை கண்டறிவதற்காக ஜார்ஜ்குட்டியின் குடும்பத்தைச் சுற்றி ஒரு வலையை விரிக்கிறார். அந்த வலையில் இருந்து ஜார்ஜ்குட்டியும் அவரது குடும்பத்தினரும் எப்படித் தப்புகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு வெற்றிகரமான படத்தின் Sequel முந்தைய படத்திற்கு இணையாக, பல தருணங்களில் அதைவிட அதிகமாக ரசிக்கும் வகையில் இருக்கிறது. படத்தின் முதல் பாதி மிக மெதுவாகத் துவங்குகிறது. சுமார் 45 நிமிடங்கள் கழிந்த பிறகும் பெரிதாக ஏதும் நடக்கவில்லை என்ற சோர்வையும் ஏற்படுத்துகிறது. ஆனால், அதற்குப் பிறகு மெதுவாக வேகமெடுக்கும் திரைக்கதை, க்ளைமேக்ஸை நெருங்கும்போது சீட் நுனியில் உட்கார வைக்கிறது.

படத்தின் முதல் பாதி ஏன் அவ்வளவு மெதுவாக நகர்ந்தது என்பதற்கான நியாயங்களும் பிற்பாதியில் இருப்பதால், 'அட' என்று வியக்கவைக்கிறார் ஜீத்து ஜோசப். தராசை சற்று துல்லியமாகப் பிடித்தால், ஒன்றிரண்டு குறைகள் கண்ணில் படலாம். ஆனால், அதையும் தாண்டி ரசிக்கவைக்கிறது திரைக்கதை.

முதல் பாகத்தில் நடித்திருந்த அதே நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் சிறப்பான நடிப்போடு தொடர்ந்திருக்கிறார்கள். மோகன்லாலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அதகளம் செய்திருக்கிறார் மனிதர். ஐஜியாக நடித்திருக்கும் முரளி கோபிக்கும் இது குறிப்பிடத்தக்க படம். பிரதான பாத்திரங்கள் தவிர, சின்னச் சின்ன பாத்திரங்களில் வருபவர்கள்கூட கவனிக்க வைத்திருக்கிறார்கள். டீக்கடைக்காரராக சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டியிருக்கும் கோழிக்கோடு நாராயணன் நாயர்கூட மறக்க முடியாத பாத்திரமாகியிருக்கிறார்கள்.

அனில் ஜான்சனின் பின்னணி இசை படத்தின் பரபரப்புத் தன்மையைத் தக்கவைக்க உதவுகிறது. சில காட்சிகள் தொலைக்காட்சித் தொடர்களின் காட்சிகளைப் போல இருக்கின்றன. ஆனால், திரைக்கதையின் பலம், இதையெல்லாம் கவனிக்கவிடாமல் நம்மை படத்தோடு ஒன்றை வைத்திருக்கிறது.

த்ரில்லர் பட ரசிகர்கள் நிச்சயம் ரசிக்கக்கூடிய படம். ரசித்த பிறகு படத்தின் சஸ்பென்ஸை யாரிடமும் சொல்லாதீர்கள்!

Drishyam - 2: திரை விமர்சனம் - BBC News தமிழ்

நான் நேற்று பார்த்தேன். நல்ல விறுவிறுப்பான படம். முடிவை யோசிக்கவே முடியவில்லை. முதலாம் பாகத்தினைப் போல, இரண்டாம் பாகமும் சிறப்பாக வந்திருக்கின்றது.

மோகன்லாலின் நடிப்பு பற்றி சொல்லத் தேவையில்லை. உடல்மொழியால் நடிக்கும் நல்ல கலைஞன். மீனாவின் நடிப்பும் நன்றாக உள்ளது. 

தெளிவான திரைக்கதை இப்படியான விறுவிறுப்பு படங்களுக்கு அவசியம். அதை சிறப்பாக செய்து ஒவ்வொரு காட்சிக்கும் இடையில் தொடர்பை காட்டி அசத்தியிருக்கின்றார்கள்.

வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அமேஸன் பிரைமில் படத்தைப் பார்த்தேன். கதை ஆரம்பத்தில் மெதுவாக நகர்கிறது.  பின்னர் சூடு பிடித்தாலும், விரித்த வலையில் இருந்து தப்புவதை இன்னும் கொஞ்சம் நம்பும்படி செய்திருக்கலாம்.

 

—-

த்ரிஷ்யம் 2: குற்றம் புரிதலின் அழகியல்-பேராசிரியர் ராஜ்

எல்லா குற்றவாளிகளும் ஏதோவொரு தடயத்தை விட்டுச் செல்வார்கள் என்றவொரு குறிப்பு தஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் வரும். த்ரிஷயம் 1–இல் குற்றவாளி விட்டுச் செல்லும் தடயம் என்று எதுவுமிருக்காது. இது குற்றமும் விடுதலையும் பற்றியது. ஆனால் குற்றத்தை பார்த்த ஒரு சாட்சி த்ரிஷயம் 2‌ –இல் வருகிறான்.

அவனுடைய துணை கொண்டு குற்றத்தின் முடிச்சியை அவிழ்ப்பது தான் படத்தின் திருப்புமுனை. ஆனால் அதற்கு முன்பே குற்றவாளியை போலீஸ் பாதி நெருங்கியிருக்கும். ஜார்ஜ் குட்டியின் வீட்டின் படுக்கையறை வரை ஒட்டுக் கேட்கப்படும். பொதுவாக கொலைப்பழி போன்றதொரு குற்றச்சாட்டு சுமத்தப்படும் போது அந்த நகரத்தை விட்டு வெளியேறுவதை தான் ஒரு சராசரி குடும்பம் கடைப்பிடிப்பதாக இருக்கும். ஆனால் ஜார்ஜ் குட்டி சொந்த ஊரிலே வாழ்வது என்றெடுத்த முடிவுக்கு பின்னால் பொருளாதார நலன் அடங்கியுள்ளது. பழைய கேபிள் டி.வி. ஆபரேட்டர் அல்ல அவர்; தியேட்டர் முதலாளி. அது ஊரில் வாழும் மற்றவர்களிடம் ஒரு அசூயையை ஏற்படுத்தி இருக்கும். அவர்கள் பொச்சரிப்புடன் ஜார்ஜ் குட்டியை கொலைகாரன் என்று பேசத் தொடங்குவார்கள்.

தமிழ்ப்படங்களில் கையை வாயில் பொத்தி தான் வதந்தியை பேசும் காட்சிகள் இடம் பெறுகிறது. ஆனால் பிறர் வாழ்க்கையை அறிந்து கொள்வதிலுள்ள உந்துதல், துப்புதுருவல், ஒட்டுக் கேட்கும் தன்மை, ஒன்றை ஊதிப் பெரிதாக்கும் வேட்கை என்ற அனைத்து சிறிய குணங்களையும் த்ருஷ்யம் 2 காட்சிப்படுத்தி உள்ளது.

ஆண்கள் கூடுமிடமான ஒரு ஹோட்டலில் தான் அதிகமான விவாதங்கள் நடைபெறுகின்றன. அங்கு எல்லோரும் மாறி இருப்பர். ஆனால் ஹோட்டலை நடத்தும் இக்கா மட்டுமே ஜார்ஜ் குட்டி மீது மாறாத சினேகத்துடன் இருப்பார். இக்கா ஓர் இசுலாமியர். கதையின் நாயகனுக்கு மானசீக தோழனாக இக்காவை காட்டுவதில் கடத்தப்படும் பார்வையாளர் நுகர்வு முக்கியமானது. ஜார்ஜ் குட்டி மீது மற்றவர்கள் தங்கள் சந்தேகத்தை வலுப்படுத்தும் போது இக்கா அதை கலைத்து விடுவார். ஒரு வேளை ஜார்ஜ் குட்டியின் குற்றம் இக்காவுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் படத்தின் இந்த பகுதிகளை தேவையற்ற இழுவை என்று மலையாள படங்களை வெறுக்கும் தமிழ் விமர்சகர்கள் எழுதுகிறார்கள். இந்த படம் கவனப்படுத்தி இருக்கும் இன்னொரு முக்கிய விசயம் போலீசின் குணம் பற்றியது.

சிறிய வழக்குக்கே ஒரு முறைக்கு நான்கு முறை வீட்டுக் கதவை தட்டத் தயங்காதவர்கள் கொலை வழக்கு – அதுவும் முக்கியப் போலீஸ் அதிகாரிக்கு எதிரான தீங்கு – என்றால் விட்டுவிட மாட்டார்கள். ஜார்ஜ் குட்டி குடும்பத்துக்கு தொல்லைகள் கொடுத்த வண்ணமே இருக்கிறார்கள். த்ரிஷ்யம் 1 -இல் போலீஸ் விசாரணை சித்திரவதையாகவும், த்ரிஷ்யம் 2‌–இல் அது புலனாய்வு கலையாகவும் வெளிப்படுகிறது. ஆனால் அடக்குமுறை தொடர்கிறது. ஜார்ஜின் வீட்டருகே இன்னொரு வீட்டில் ஒரு போலீஸ் தம்பதி குடியேறி ஜார்ஜ் குடும்பத்தை நோட்டமிடுகிறார்கள். ஜார்ஜின் மனைவிக்கு பெண் போலீஸ் நெருக்கமாகி அக்குடும்பத்தின் பதற்றத்தை மட்டுமல்லாமல், கொலை செய்ததையும் உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். இது தங்கள் விசாரணை சரியான பாதையில் செல்வதான நம்பிக்கையை போலீசுக்கு ஏற்படுத்துகிறது.

இந்த படத்தை சஸ்பென்ஸ் த்ரில்லராக மட்டுமே பார்க்க விரும்புபவர்களுக்கு லாஜிக் ஓட்டைகள் பெரிதாக தெரிகிறது. படத்தின் முக்கால்வாசி நேரம் சும்மா போவதாக நினைக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியும் இருக்கை முனைக்கு இவர்களை இழுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால் தங்கள் ஏமாற்றத்தை வெளியிடுகிறார்கள். ஆனால் இந்த படம் வேறு பல விசயங்களுக்காகவும் முக்கியமானவை.

பெண் விடுதலைக்கு பெண்கள் குழந்தை பெறக் கூடாது என்ற மகத்தான பிரகடனம் கொண்ட ‘பெண்கள் விடுதலை’ கட்டுரையில் தந்தை பெரியார் பெண்கள் குழந்தை பெறாமலிருந்தால் அது ஆண்களின் சுமையையும் போக்கும் என்கிறார். குழந்தை குட்டிகள் இருப்பதாலேயே ஓர் ஆண் யோக்கியமற்ற காரியங்களில் ஈடுபட நேர்வதாக கூறுகிறார். ஆணுக்கு அநாவசியமான பொறுப்பும், கவலையும் அதனால் கூடுவதாக கூறுகிறார். ஜார்ஜ் குட்டியின் கவலை இரண்டு பெண் குழந்தைகளை பெற்றவரின் கவலை. அதிலிருந்தே அவர் அந்த கொலையை மறைக்கும் எல்லா நேர்மையற்ற செயல்களிலும் இறங்குகிறார். ஜார்ஜின் மனைவி ராணி தாங்கள் எதிர் கொண்டிருக்கும் சிக்கல் குறித்து ஜார்ஜ் அலட்சியமாக இருப்பதாக உளவாளி பெண் போலீசிடம் தெரிவிக்கிறார்.

ஆனால் ஜார்ஜ் குட்டி உள்ளூர போலீஸ் பிடியிலிருந்து எப்படி தப்பிப்பது என்று திட்டமிட்டபடியே இருக்கிறார். போலீஸ் விசாரணை ஒரு தனிநபருக்கு என்ன பாதிப்பை விளைவிக்கும் என்பதற்கு ஜார்ஜ் குட்டியின் மூத்த மகள் சந்திக்கும் பிரச்சினைகளில் வெளிப்படுகிறது. அவள் சற்றே மனநிலை குழம்பியபடியும், வலிப்பு நோயின் வாதையாலும், துர்கனவுகளை சந்தித்தபடியும், சதா பீதியூட்டலுக்கு உள்ளாகியபடி காட்சி அளிக்கிறார். த்ரிஷ்யம் – 1&2 மலையாளத் திரைப்படங்களுக்கே உரிய மனித வாழ்வனுபவத்தை மேனிலையாக சித்தரிக்கிறது. கடன் பிரச்சினைகள், மூத்த மகளின் திருமணத் தாமதம் போன்றவை இருந்தாலும் கூட்டிக் கழித்துப் பார்க்கையில் ஒரு சிறிய கர்வத்தை‌ ஜார்ஜ் குட்டிக்கு வழங்குகிறது. தனது இளைய மகளின் கல்லூரி நண்பர்கள் பார்ட்டிக்கு வரும் நாளுக்கு விரிவான ஏற்பாடுகளை மேற்கொள்வார். அப்போது மனைவி அவர்கள் பொருளாதாரப் பிரச்சினையை கூறும் போது தான் இப்போது தியேட்டர் முதலாளி என்பார். கடன் இன்னும் தீரவில்லை என்று மனைவி நினைவுப்படுத்துவார். த்ரிஷ்யம் 2– இன் இறுதிக் காட்சி வித்தியாசமானது. தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தை சற்று நெகிழ்த்தி படமாக்கும் முயற்சியின் முதல் படியாக நாவலாக ஒரு முக்கிய எழுத்தாளரின் பார்வையில் அது வெளியாகும். அந்த எழுத்தாளர் விவரிக்கும் நாவலின் காட்சிகள் அடிப்படையில் தான் படம் முடிவமைதி கொள்கிறது.

எது எதார்த்தம், எது புனைவு என்று தீர்மானிக்கவியலாத மீஎதார்த்தம் அதில் துலங்குகிறது. எதார்த்தமும் புனைவும் ஒன்று மற்றொன்றில் மயக்கம் கொள்ளும் ஒரு இடைநிலை ஏரணம் (fuzzy reality) தான் த்ரிஷ்யம் 2– இன் ஈற்றமைதி. ஜார்ஜ் குட்டியின் குடும்பத்துக்கான தண்டனை என்ன? அது உடல் நோவல்ல; உள்ள வேதனை. போலீசின் ஒவ்வொரு அசைவையும், நடவடிக்கைகளையும் கண்காணித்தும், முன்ணுணர்ந்துமாக இருக்க வேண்டிய சாபம். நேரடியாக இல்லாத ஒரு மறைமுகத் தண்டனை. அதனை வாழ்நாளெல்லாம் ஜார்ஜ் குட்டி குடும்பம் சந்தித்தபடியே இருக்க வேண்டும். த்ரிஷ்யம் 2 குற்றம் புரிதலின் அழகியல்.

 

https://inioru.com/த்ரிஷ்யம்-2-குற்றம்-புரித/

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் பார்த்து முடித்தேன், நல்ல படம்

 

 

திருந்தாத தமிழ் ரசிகர்கள் | திருத்தும் த்ரிஷ்யம் -வலிமை | சாட்டை | துரைமுருகன் |

  • கருத்துக்கள உறவுகள்

மலையாளிகள் நடிகர்களை நடிகர்களாக பார்க்கிறாங்க அவ்வளவுதான் .

ஐந்து நிமிடத்தில் வாசித்து உள்வாங்கும் ஒரு விடயத்தை 12 நிமிடங்களுக்கு மேல் ஒலிநாடாவில் ஓடவிட்டு அலுப்பு கொடுக்கிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பார்த்தேன் ...முதற் படத்தில் இருந்த சுவாரசியம் இதில் இல்லை ....ஆனாலும் படம் சுவாரசியமாய் இருந்தது ...ஆரம்பத்தில் கதை மெதுவாய் நகர்ந்து பின் சூடு பிடித்தது 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சொல்லுமளவு பெரிதாக ஒன்றுமே இல்லை. சும்மா பில்டப்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.