Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவசங்கர் பாபா யார்? பாலியல் தொந்தரவு புகார்களும் சர்ச்சைகளும் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • எம்.ஏ. பரணி தரன்
  • பிபிசி தமிழ்

தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவசங்கர் பாபா என்று அழைக்கப்படும் சிவசங்கருக்கு எதிராக அவர் நடத்தி வரும் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவிகள் அளித்துள்ள பாலியல் தொந்தரவு புகார்கள், நாளுக்கு நாள் புதிய சர்ச்சைகளை தோற்றுவித்து வருகின்றன. யார் இந்த சிவசங்கர் பாபா? இவருக்கு எதிராக வலுத்து வரும் சர்ச்சைகள் என்ன?

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் 1949ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பிறந்தவர் சிவசங்கர். இவரது தந்தை நாராயண சர்மா, தாய் விஜயலட்சுமி. இவரது தந்தை பள்ளி ஆசிரியர். பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலேயே முடித்த இவர், வேதியியல் துறையில் பட்டப்படிப்பும், சரக்குகள், போக்குவரத்து கையாளல் பிரிவில் முதுகலை படிப்பும் படித்தார்.

கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு சொந்தமாக போக்குவரத்து நிறுவனமொன்றை நடத்திய சிவசங்கர் 1978 முதல் 1983 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட், கட்டட ஒப்பந்ததாரர், ஆவணப்பட தயாரிப்பாளர் போன்ற பன்முக அடையாளங்களுடன் தொழில் உலகில் வலம் வந்தார். இவரது தொழிற்துறை தொடர்புகள் மற்றும் செல்வாக்கு இவருக்கு ரோட்டரி கிளப் ஆஃப் அண்ணாநகர், ஆந்திர வர்த்தக சம்மேளன நிர்வாகக் குழு, இந்தியன் வங்கி நிர்வாக குழு, ரயில்வே ஆலோசனை வாரியம் ஆகியவற்றில் உறுப்பினர் அந்தஸ்தையும், சரக்கு போக்குவரத்து சங்க தலைவர் போன்ற பதவிகளையும் பெற்றுக் கொடுத்தது.

இடையே திருமணம் செய்து கொண்ட சிவசங்கருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 1980களின் பிற்பகுதியில், சென்னை மண்ணடியில் சிறிய இடத்தை நிறுவி அங்கு தன்னை நாடி வருவோருக்கு போதனைகளை வழங்கினார் சிவசங்கர்.

உடல்நலம், திருமணம், வேலைவாய்ப்பு, குழந்தைப்பேறு என தன்னை நாடி வந்த பலருக்கும் அருளுரை எனப்படும் தமது போதனைகளை வழங்கிய அவர், ஏற்கெனவே தமக்கு சமூகத்தில் இருந்த செல்வாக்கு மூலம் வேண்டியவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்க பாலமாக செயல்பட்டார். இதனால், இவரது புகழ் பல நிலைகளில் பரவியது.

விரிவடைந்த சிவசங்கரின் சாம்ராஜ்ஜியம்

சிவசங்கர் பாபா

பட மூலாதாரம்,@SRISIVASHANKARBABA

இந்த கால கட்டத்தில் சென்னை நீலாங்கரையில் தனி பங்களாவில் குடியேறிய அவர், சிறு வயதிலிருந்தே ஆன்மிக ஈடுபாடு உள்ளதாகவும் அதற்கு ரத்னகிரி கோயிலில் உள்ள பாலமுருகன் சுவாமியின் அருளே காரணம் என்றும் கூறத் தொடங்கினார். தமது ஆன்மிக பாதையை வலுப்படுத்தும் நோக்குடன் சம்ரட்சணா என்ற இயக்கத்தை இவர் தொடங்கினார்.

இவரது ஆன்மிக சொற்பொழிவுகளுக்கு 1990களில் தனி ஆதரவாளர்கள் இருந்தனர். இவரது வீட்டுக்குள்ளேயே கோயில் அமைத்திருந்ததால் அவரது வீட்டுக்கு அருகே இருப்பவர்கள், நண்பர்கள், அவர்கள் மூலம் அறிமுகமானவர்கள் என வருகை தந்த பலருள் சிலர் இவரது பக்தர்களாயினர். ஆன்மிக தொடர்புடன் அரசியல் தொடர்பும் இவருக்கு அதிகமானதால், 2001இல் சென்னை கேளம்பாக்கத்தில் சர்வதேச உறைவிட பள்ளியொன்றை எழுப்பினார் சிவசங்கர். பிறகு அதே கேளம்பாக்கத்தில் பல்நோக்கு மருத்துவமனையை கட்டினார் சிவசங்கர்.

ரியல் எஸ்டேட் தொடர்பும் பின்புலமும் இருந்ததால், சிவசங்கரின் ஆன்மிக இயக்கத்துக்கு நன்கொடைகள் பல முனைகளில் இருந்து குவிந்தன. அதனால், கேளம்பாக்கத்தில் இவரது இயக்கத்தின் தொண்டுக்காக இவர் எழுப்பிய கட்டுமானங்கள் விரிவடைந்தன.

இது தவிர முதியோர் இல்லம், கிராமப்புற பயிற்சியகம், வேலைவாய்ப்பு முகாம்கள், மருத்துவ முகாம்கள் போன்றவற்றை அடிக்கடி நடத்தினார் சிவசங்கர்.

இறைவனின் அவதாரம் என்று தன்னை அழைத்துக் கொள்ளத் தொடங்கிய அவர், ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இறைவனுடன் கலப்பதை ஆன்மிகம் என்று போதித்தார். அவரது போதனையால் கவரப்பட்டவர்கள், அவரது பெயருடன் சேர்த்து சிவசங்கர் பாபா என அழைக்கத் தொடங்கினர்.

சிவசங்கரை எதிர்த்த யாகவா முனிவர்

சிவசங்கர் பாபா

பட மூலாதாரம்,@SRISIVASHANKARBABA

1990களில் யதார்த்தமான ஆன்மிகத்தில் ஈடுபாடு மிக்கவராக அறியப்பட்ட யாகவா முனிவர் சென்னை மேடவாக்கத்தில் வசித்து வந்தார். ஆடம்பரமும் ஆர்ப்பரிப்பும் மிக்கவராகவும் ஆடிப்பாடி ஆன்மிக உணர்வை வெளிப்படுத்தக் கூடியவராக சிவசங்கர் பாபா இருக்க, யாகவா முனிவர், மிகப்பெரிய பங்களாவில் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். தனது வீட்டுக் கிணற்றில் புண்ணிய தீர்த்தம் உள்ளதாகவும் பட்சிகளுடன் பேசுவேன் என்றும் கூறி யதார்த்த கருத்துகளை தன்னை பார்க்க வருவோரிடம் வழங்கினார் யாகவா முனிவர்.

இந்த இருவரும் கொள்கை, கருத்துகளில் முரண்பாடு கொண்டிருந்த வேளையில், 1990களின் கடைசி காலகட்டத்தில் இருவரையும் ஒரு நேருக்கு நேர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எதிரெதிரே அமரவைத்தார் தனியார் ஊடக நிகழ்ச்சி இயக்குநரும் தொகுப்பாளருமான வீரபாண்டியன்.

அந்த நிகழ்ச்சியில் சிவசங்கரின் கருத்துகளை கடுமையாக எதிர்த்த யாகவா முனிவர், ஒரு கட்டத்தில் தனது கையில் வைத்திருந்த துண்டால் அவரை அடிக்கவும் செய்ய, அந்த நிகழ்ச்சி, அன்றைய காலகட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசக்கூடியதாக மாறியது. அதன் பிறகு இந்த இருவரின் புகழும் பட்டி, தொட்டியெல்லாம் பரவியது.

இதன் பிறகு சில ஆண்டுகளில் யாகவா முனிவர் காலமானார்.

யாகவா முனிவருக்குப் பிறகு சிவசங்கர் பாபாவை எதிர்த்தவர் பேராசிரியரும் திரைப்பட நடிகருமான பெரியார்தாசன். இருவரும் நேருக்கு நேராக சந்திப்பதை தவிர்த்தபோதும், இவர்களின் கருத்து மோதல்கள் தொடர்பான பல கட்டுரைகளை இந்த செய்தியை எழுதிய நிருபர் 2000ஆம் ஆண்டுகளில் பதிவு செய்திருக்கிறார்.

பெரியார் தாசன் எழுப்பிய பல கேள்விகளுக்கும், தன்னை இறைவனின் அவதாரம் என்பதை தன்னை நம்புபவர்கள் உணர்வார்கள். பெரியார்தாசன் அதை நேரில் அனுபவிக்க வேண்டும் என்று கூறுவார் சிவசங்கர்.

அந்த காலகட்டத்திலேயே சிவசங்கர் மீது ஆள் கடத்தல், பாலியல் புகார்கள் போன்ற சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், அது தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு பிறகு திடீரென அவை அடுத்த கட்டத்துக்கு போகாமல் மறைந்த நிகழ்வுகள் அதிகம்.

இது குறித்து பெரியார்தாசன் எழுப்பிய கேள்விக்கு, சிவசங்கர் நேரடியாக பதில் தரவில்லை. தொழில்களில் போட்டி இருப்பது போல தனக்கு ஆன்மிக உலகில் நிலவும் போட்டியால் பரப்பப்பட்ட வதந்திகளே அவை என்று சிவசங்கர் கூறினார்.

இப்போது சிவசங்கர் மீது என்ன சர்ச்சை?

@SriSivaShankarBaba

பட மூலாதாரம்,@SRISIVASHANKARBABA

சிவசங்கர் நடத்தி வரும் தனியார் உறைவிட பள்ளியில் மாணவிகளிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாகவும், வரம்பு மீறி அவர்களை கட்டிப்பிடித்து முத்தமிட்டதாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாகவும் தரப்படும் புகார்களை அவரது பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சிலர் எழுத்துபூர்வமாக தற்போது கொடுத்துள்ளனர்.

சென்னை நகர காவல்துறையிடமும் தமிழ்நாடு குழந்தைகள் நலக்குழுவினரிடமும் இது தொடர்பான புகார்களை அந்த மாணவிகள் அளித்துள்ளனர்.

பல மாணவிகள் தங்களுடைய பதின்ம வயதில் அனுபவித்ததாக கூறப்படும் பள்ளிகால பாலியல் கொடுமைகளை இப்போது மனம் திறந்து வெளிப்படுத்த முன்வந்துள்ளதாக கூறுகின்றனர். சமூக ஊடகங்களில் பலர் இது குறித்து பகிர்ந்து வருகிறார்கள்.

சிவசங்கர் பாபா

பட மூலாதாரம்,@SRISIVASHANKARBABA

சில மாணவிகள், சிவசங்கரின் சர்ச்சை செயல்பாடுகள் தொடர்பாக பல பெற்றோருக்கும் தெரியும் என்று கூறியுள்ளனர். தமிழ் புலனாய்வு இதழின் யூட்யூப் பக்கத்துக்கு முன்னாள் மாணவி ஒருவர் அளித்த நேர்காணலில், சிவசங்கரின் அழைப்புக்கு இணங்க மாணவிகளுக்கு பல வகையில் அழுத்தம் தரப்படும் என்றும் உதாரணமாக, முதல் இரண்டு பருவ தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைத்து வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அந்த மாணவிகளிடம், சிவசங்கர் பாபாவின் ஆன்மிக சத்சங்கத்துக்கு சென்று அவரை வணங்குமாறு வற்புறுத்தப்படுவார்கள் என்றும் அவ்வாறு செல்லும் மாணவிகளிடம் நெருங்கிப் பழகி பாலியல் தொந்தரவு கொடுப்பதை சிவசங்கர் வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் அந்த முன்னாள் மாணவி கூறியுள்ளார்.

பெரும்பாலான மாணவிகள் உறைவிட பள்ளி விடுதியில் தங்கிப்படித்ததால் அவர்களே சிவசங்கரால் அதிகமாக இலக்கானதாகவும் இது பற்றி பள்ளி ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்தபோது, அவர்கள், சிவசங்கரை இறைவனின் அவதாரம் என்றும் அவரே கிருஷ்ணர் என்றும் கூறியதாக அந்த முன்னாள் மாணவி கூறியுள்ளார்.

வேறு சில முன்னாள் மாணவிகள், சிவசங்கர் தன்னை கிருஷ்ணரின் அவதாரம் என்று அழைத்துக் கொள்வதாகவும், அவரை தேடி வரும் பெண்கள் கோபிகைகள் என்றும் தங்களை கருதி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற புகார்கள், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளன. புகார்களின் தீவிரம் கருதி அவற்றில் சில தமிழ்நாடு காவல்துறையின் குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த புகார்கள் ஆபாசத்தை தூண்டும் வகையிலும் பாலியல் செயல்களுக்கு முகாந்திரமாக இருப்பதாக கருதுவதால், சிவசங்கரை விசாரணைக்கு அழைக்க காவல்துறையினர் திட்டமிட்டனர்.

ஆனால், சிவசங்கர் விசாரணைக்கு ஆஜராகாவில்லை. இந்த நிலையில், தனக்கு எதிரான வழக்குகளில் ஜாமீன் கேட்டு அவரது தரப்பு நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது. அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "சிவசங்கருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்," என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்த காவல்துறையின் தனிப்படையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, சிவசங்கருக்கு எதிரான புகார்கள் அதிகரித்து வருவதால், அவர் டேராடூனில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க அவரது கடவுச்சீட்டை முடக்கவும், அவரை விமான நிலையங்களில் வேறு மாநில காவலர்கள் பார்த்தால் தமிழக காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கும் வகையிலும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகளில் பணியாற்றி வந்த சில ஆசிரியர்கள், தற்காப்புக்கலை பயிற்றுநர் போன்றோருக்கு எதிராக பல்வேறு பாலியல் தொந்தரவு வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், 72 வயதாகும் சிவசங்கருக்கு எதிராகவும் வலுத்து வரும் பாலியல் சீண்டல் புகார்கள், மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

சிவசங்கர் பாபா யார்? பாலியல் தொந்தரவு புகார்களும் சர்ச்சைகளும் என்ன? - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

சிவசங்கரை இறைவனின் அவதாரம் என்றும் அவரே கிருஷ்ணர் என்றும் கூறியதாக அந்த முன்னாள் மாணவி கூறியுள்ளார்.

, சிவசங்கர் தன்னை கிருஷ்ணரின் அவதாரம் என்று அழைத்துக் கொள்வதாகவும், அவரை தேடி வரும் பெண்கள் கோபிகைகள் என்றும் தங்களை கருதி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஒரு மதத்தையே இவ்வாறு பெருமையாக வைத்துக்கொண்டு 

அவ்வாறு மனிதர்கள் உருவாக கூடாது என்று 
எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு சொல்வது? 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

சிவசங்கர் பாபாக்கள் எங்கிருந்து வருகிறார்கள்? : ஆர். அபிலாஷ்

 

இன்று (17 ஜூன் 2021) மறு ஒளிபரப்பான யாகவா முனிவர்-சிவசங்கர் பாபா குடுமிப்பிடி சண்டையை நான் என் பதின்வயதில் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு யாகவா முனிவர் மீது ஒரு மனச்சாய்வு இருந்தது. ஏதோ சக்தி படைத்தவரோ அல்லது குழப்புகிறாரோ, ஒருவேளை சித்தரோ என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். அடுத்து என் அனுபவங்களும் ஓரளவுக்கு வாசிப்பும் அதெல்லாம் இல்லை, இவரும் ஒரு பொய்யர் எனக் காட்டிக் கொடுத்தது. ஏனென்றால் எந்த ஆன்மீகவாதியும் அடிப்படையில் பொய்யரே என்பது என் திடமான நம்பிக்கை. ஆன்மாவே பொய் எனும் போது ஆன்மீகவாதி என்பது எப்படி நிஜமாக இருக்க முடியும்?

202106170036304882_Shiva-Shankar-Baba-ar

நம்முடைய தேசமெங்கும் பரவியிருக்கும் அத்வைதம் இந்த பொய்யர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் நம்மைத் தடுக்கிறது. ஒருவன் பொதுவிடத்தில் ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டால் அவன் ஒரு பொறுக்கி என அந்த இடத்திலேயே முடிவு செய்து விடுவார்கள். அவன் என்னதான் உன்னதமான சிந்தனையாளன், பெரும் பணக்காரன், தியாகி, வள்ளல் என்றாலும் மக்களுக்கு இவ்விசயத்தில் குழப்பமே வராது. ஆனால் ஆன்மீகம் என்றதும் ஒரு குழப்பம் வந்து விடுகிறது – ஆன்மீகவாதி நான் அந்த ‘நோக்கத்தில்’ தொடவில்லை, ஒரு ஆசீர்வாதமாக, என்னுடள் நான் உணரும் ஆன்ம அதிர்வை கடத்திடவே அப்படி செய்தேன் என்றால் மக்களுக்கு ஒருவேளை இது உண்மையோ எனும் குழப்பம் வந்து விடும். இந்த குழப்பத்தை தான் சிவசங்கர் பாபாக்களும், நித்யானந்தாக்களும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த குழப்பமே நம் மண்ணில் எண்ணற்ற சாமியார்கள் தோன்றக் காரணமாகிறது. இவர்களுக்கும் மெய்யியல் தேடலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது முழுக்க வேறொரு பிரச்சனை.

சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பழங்குடிகள் இறைவனை உருவாக்கிய போது அவனை தம் முன்னோர்களாக, செடி, கொடிகள், கற்களாகக் கண்டார்கள். அந்த இறைவன் நம்முடன் திரியும் மற்றொரு மனிதன், அதே நேரம் அவனுக்கு ஏதோ ஒரு சிறப்பியல்பும் உண்டு. சாமியாடிகள் நம் பூர்வப் பண்பாடுகளில், பழங்குடிகள் மத்தியில் இப்படியே தோன்றுகிறார்கள். வரலாற்றின் ஒரு கட்டத்தில் இவர்கள் பூசாரிகள், போதகர்கள் ஆகிறார்கள், மதம் ஒரு நிறுவனமாகிறது. தெய்வம் மனிதனில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு உச்சாணிக்கொம்பில் வைக்கப்படுகிறது. மறுபிறவி, பாவம், புண்ணியம் போன்ற சிந்தனைகள் தோன்றி, நிலப்பிபுத்துவ சூழலின் ஏற்றத்தாழ்வுகளின் கொடுமைகள் மக்களுக்கு புலப்படாத படி மறைத்திட உதவுகிறது. தொழில்மயமாக்கலும், காலனிய ஆதிக்கமும், பின்னர் ஜனநாயகமும் தோன்றிய காலங்களில் மக்களிடம் பரவலாக மதத்தைக் கொண்டு போவது, மத விசுவாசிகளின், பக்தர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது ஆதிக்கவாதிகளுக்கு, அதிகாரவர்க்கத்துக்கு அவசியமாகிறது.

 இந்தியாவில் அத்வைதம் இன்னொரு மாயத்தை நிகழ்த்துகிறது – தெய்வீகம், ஆன்மீகம், பிரம்மம் போன்றவை எல்லாரிடமும், எங்கும் உள்ளவையே, ஆனால் அது சாராணமானது அல்ல, அசாதாரணமானது, அதை உணர ஒரு மனநிலை, வாழ்க்கைமுறை வேண்டும் என்கிறது. இது அடிப்படையில் முரணான ஒரு பார்வை – மனிதனைப் படைத்தவன் கடவுள் என்றால், அனைத்துக்கும் அப்பாலானது பிரம்மம் என்றால், அந்த பண்புகள் ஏதுமில்லாத மனிதனுக்கு அத்தெய்வம் எப்படி தன்னை புலப்படுத்தவோ, மனித வாழ்வில் தன்னை வெளிப்படுத்தவோ முடியும்? (அத்வைதத்துக்கு எதிரான நாகார்ஜுனரின் முக்கியமான கேள்வி இது) ஆனால் இந்த முரணை தத்துவார்த்தமாக சரியாக நிறுவாமலே மக்களை நம்ப வைத்து விட்டார்கள். இதை வைத்து தான் இன்று பாபாக்களால் மிக கழிசடையானவர்களாக, அரசியல்வாதிகளின் கறுப்புப் பணத்தை பதுக்குகிறவர்களாக, பல நூறு பெண்களை, குழந்தைகளை தம் தேவைக்காக துன்புறுத்துகிறவர்களாக, மக்களின் சொத்துக்களை மிரட்டிப் பிடுங்குகிறவர்களாக இருந்தபடி தம்மை அனைத்தையும் கடந்த பிரம்மம், தெய்வப்பிறவி எனக் கூறி ஏமாற்ற முடிகிறது. “ஆம் நான் ஒரு பெண்ணை என் படுக்கைக்கு வற்புறுத்தி கொண்டு சென்றேன், அது ஏன் என்றால் நான் அவளுக்கு கிருஷ்ணனின் அவதாரத்தைக் காட்டிக் கொடுத்தேன்” என்று சிவசங்கர் பாபா கூறுவது எனக்கும் உங்களுக்கு சிரிப்பை வரவழைக்கலாம், ஆனால் பக்தர்களுக்கு அது உண்மையென்றே தோன்றும். ஏனென்றால் அத்வைதத்தின் அடிப்படையே பணம் சேர்ப்பது, வன்முறையில் ஈடுபடுவது, காமத்தை வெளிப்படுத்துவது போன்றவற்றை பிரம்மத்தை உணர்ந்தவன் செய்யும் போது அவை கீழ்மையாக இருக்காது என்பதே. இது ஆன்மீகவாதிகளை அனைத்து மதிப்பீடுகளுக்கும் அப்பாலானவர்களாக மாற்றி விடுகிறது. இது அவர்களை தண்டனைகளுக்கு அப்பாலானவர்களாகவும் ஆக்குகிறது.

 

Sri-Siva-Shankar-Baba-Old-Interview-1170

ஒரு உதாரணத்துக்கு நீங்கள் பகவத் கீதையில் கண்ணன் தன்னை தேரோட்டியாகவும், யுத்த தந்திரங்களை வகுப்பவராகவும், பாண்டவர்களுக்கு உறவுக்காரராகவும், மந்திர வித்தை செய்கிறவராகவும், தசாவதார காட்சி அளிப்பவராகவும் இருந்ததை கவனியுங்கள். நீ யார் என கண்ணனைக் கேட்டால் “நான் புல்லும் அல்ல பூண்டும் அல்ல, கல்லும் அல்ல, மலையும் அல்ல” என ஒவ்வொன்றாக கழித்தபடி செல்வார். அர்ஜுனன் கண்ணனிடம் நான் யாரென்றால் “பார்த்தா, நீ இப்போது என்ன செய்கிறாயோ அதுவே நீ. உன் அறம் இப்போது நீ கொல்ல வேண்டும் எனச் சொன்னால் அதை நீ செய்ய வேண்டும். உன் உறவினர்கள், நண்பர்கள் இப்போது இந்த இடத்தில் உன் உறவினர்களோ, நண்பர்களோ அல்ல. அது அவர்கள் சுமக்கிற உடலெனும் கூடு மட்டுமே. மனிதன் தன் ஆன்மாவை தன் செயலில் மட்டுமே உணர்கிறான், அடையாளங்களிலோ உறவுமுறைகளிலோ அல்ல.” என அவர் ஒரு வாதத்தை கட்டமைப்பார். இதிலுள்ள முரண்: நான் “என்னை” உணர்கிற செயலில் என்னவாக இருக்கிறேன், ஆன்மாவாகத் தானே? செயலில் தோன்றி செயலில் மறைகிற ஆன்மா எப்படித் தோன்றுகிறது? இன்மையில் இருந்து “நான்” தோன்றவே முடியாது. தோன்றிய ஒன்று காணாமல் மறையவும் முடியாது. அதே போல செயலில் ஒன்று தானாக தோன்றவும் முடியாது. இது பௌத்தம் தரும் மறுப்பு. பௌத்தம் ஆன்மாவுக்கு எதிராக வைத்த மறுப்புகளை எதிர்கொள்ள இயலாமல், வைதீகவாதிகள் உருவாக்கிய குழப்பமான, உள்முரண் கொண்ட ஒரு தத்துவப் பிரதியே பகவத் கீதை. அதன் தாக்கத்தை நாம் நீண்ட காலமாக உணர்ந்து வருகிறோம்.

சிவசங்கர் பாபா ஒரு பொய்யர் என தொடர்ந்து பெரியார் தாசன் நிறுவ முயன்ற போது அவரது கேள்விகள் எவற்றுக்கும் பதிலளிக்காமல் “என்னிடம் பெரியார் தாசன் வந்து என் தரிசனத்தை உணர்ந்து கொண்டால் நான் கடவுள் என ஏற்றுக் கொள்வார்” என பதிலளித்தார் சிவசங்கர் பாபா. அதை எப்படி உணர்ந்து கொள்வது? உணரவே முடியாது. ஆனால் அப்படி கற்பனை தான் பண்ண முடியும். உணரும் வரை உங்களுக்கு ஆன்ம முதிர்ச்சி இல்லை என மறைமுகமாக உங்களை மிரட்டுவார்கள். ஒரு கட்டத்தில் நீங்கள் ஒத்துக்கொள்ளவோ அல்லது வாயை மூடிக்கொள்ளவே செய்வீர்கள். நிர்வாண ஆடை அணிந்த மன்னரின் கதை தான்.

 நான் நாளை திருட்டு வழக்கில் கைதானால் என்னை என் நண்பர்கள் கூட வந்து பார்க்க மாட்டார்கள். ஆனால் நான் ஒரு சாமியாராக இருந்து கொலை வழக்கில், பல பெண்களை பலாத்கார செய்த வழக்கில் கைதானாலும், என் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் என்னைப் பார்ப்பதற்காக திரளுவார்கள். பக்தர்களின் இந்த பயங்கர குழப்பத்துக்கு காரணம் முழுக்க முழுக்க அத்வைத சிந்தனையே.

இம்மாதிரியான சுரண்டல்கள், ஏமாற்றுகள் கிறித்துவத்தில், இஸ்லாத்தில் இல்லையா என்றால் சாராம்சவாதத்தை ஏற்கிற எல்லா மதங்களிலும் ஏமாற்று இருக்கவே செய்யும் என்பேன். கிறித்துவத்தை பொறுத்தவரையில் அதுவும் ஆன்மாவை ஏற்கிற மதம் தானே. இஸ்லாமும் அல்லா எனும் ஒரு சாராம்சமான சக்தியை முன்வைக்கிறது. அல்லாவின் கீழே அனைத்து மனிதரும் இருப்பதாக எனும் படிநிலையை உண்டுபண்ணுகிறது. புனிதமாக்கல் இதனால் தோன்றுகிறது. அதே நேரம் கிறித்துவமும், இஸ்லாமும் நிறுவனமயமான மதங்கள் என்பதால் இந்த தில்லுமுல்லுகள் ஓரளவுக்கு கட்டுப்படுத்த வாய்ப்புண்டு. தப்பு நடந்தால் அந்த நிறுவனங்கள் அதற்கு பதில் கூற வேண்டும் எனும் சூழல் உண்டு. இந்து மதம் அப்படியான கட்டுப்பாடுகள் ஏதுமில்லாத ஒரு திறந்த வீடு. ஆகையால் புற்றீசல் போல டுபாக்கூர் சாமியார்கள் புறப்பட்டு வந்தபடியே இருக்கிறார்கள். கூடவே சாமியார்களின் ஆசிரம சொத்துக்கு, நிதி பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாதபடி நம் சட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்விஸ் வங்கியில் வைத்திருப்பதை விட இவர்களிடம் கொடுத்து வைப்பது சுலபம் என்பதால் பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியாகவும் கணக்கற்ற அரசியல் செல்வாக்கு கொண்டவராகவும் ஒரு சாமியார் சில வருடங்களிலேயே இங்கு மாற முடிகிறது.

artworks-000553701489-chnyul-t240x240.jp

இந்த விசயத்தில் யாகவா முனிவர் ஒரு பெட்டிக்கடை நடத்தினால், தன்னை ஒரு சாமான்ய மனிதனாக கண்டு ஒரு சித்தனாக கற்பனை பண்ணினால், பாபா ஒரு கார்ப்பரேட் கம்பனி நடத்தி தன்னை வைதீக அவதாரமாக கற்பனை பண்ணிக் கொண்டார். லாபம் சம்பாதிப்பதில் சிவசங்கர் பாபாவுக்கு கூடுதலாக பேராசையும் கனவுகளும் இருந்தன. யாகவா முனிவருக்கு ரஜினிகாந்த் போன்ற சில நட்சத்திர பக்தர்கள், ஊடகப் புகழ், கூடவே சாமான்ய மக்களின் ஆதரவு போதுமாக இருந்தது. இருவருமே ஒரே வியாபாரத்தில் இருந்ததால் பரஸ்பரம் என்னென்ன தில்லுமுல்லுகள் செய்கிறார்கள் எனும் உள்விவகாரங்களை தெரிந்து வைத்திருந்தார்கள். சன் டிவி பேட்டியில் இதையே போட்டுடைத்தார்கள். சிவசங்கர் பாபா பெண்களை பாலியல் சுரண்டல் செய்கிறார் என்பதை யாகவா முனிவர் தன் நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டதாகவே பேட்டியில் சொல்கிறார். ஆகையால் ஒருநாள் சிவசங்கர் பாபா கைதாவார் என அவர் கணித்தது ஒன்றும் பெரிய தீர்க்கதரிசனம் அல்ல. ஒரு திருடனைப் பார்த்தால் ஒருநாள் மாட்டிக்கொள்வாய் எனக் கூற ஆறாவது அறிவு எல்லாம் தேவையில்லை. யாகவா முனிவர் கொலை செய்தவர், அபின் பயன்படுத்துகிறவர், கடத்தல்காரர் என சிவசங்கர் பாபா கூறியதும் ஊரில் அப்போது இருந்த கிசுகிசுக்களே. இதில் அபின் விசயத்தில் உண்மை இருக்கலாம் – ஏனென்றால் ஆன்மீக ஆர்வலர்கள் போதை வஸ்துக்களை பயன்படுத்துவது நம் மரபிலேயே நீண்ட காலமாக இருக்கிறது. (கொலை, கடத்தல் எல்லாம் உண்மையா எனத் தெரியவில்லை.)

இது போன்ற தில்லுமுல்லுப் பேர்வழிகளை ஒழிப்பதற்கு முதல் வழி ஆன்மா என ஒன்றில்லை எனும் கருத்தை மக்களிடம் பரவலாக கொண்டு சேர்ப்பது மட்டுமே. அடுத்தது, கார்ப்பரேட் சாமியார்கள் தம் வரவு செலவுகளுக்கு அரசிடம் கணக்கு சமர்ப்பித்து, அதற்கான சான்றுகளையும் காட்டி தம்மிடம் சேரும் பணம் சட்டபூர்வமானது என நிரூபிக்கும்படி சட்டத்தை மாற்ற வேண்டும். இப்போதுள்ள ஓட்டையை வைத்து மிகப்பெரிய அளவில் கறுப்புப்பணத்தை கைமாற்றி விடும் ‘ஆன்மீக வங்கிகளாக’ இவர்கள் செயல்படுகிறார்கள். சத்ய சாயி பாபா இறக்கும் போது அவருடைய சொத்து மதிப்பு 64,000 கோடிகள். ஜக்கி வாசுதேவின் சொத்து மதிப்பு 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள். நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு 10,000 கோடிகள்.  ஸ்ரீஸ்ரீயின் மதிப்பு 5 லட்சம் டாலர்கள். சிவசங்கர் பாபா ஒரு சின்ன மீனே – அவருடைய மதிப்பு   5 மில்லியன் டாலர்கள். இந்த ஆன்மீக வங்கிகள் ஒரு சில வருடங்களில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை மிரட்டியும், பணம் கொடுத்தும் வாங்கி பிரம்மாண்டமாக கோயிலளை அமைத்து, அங்கும் வியாபாரம் பார்க்கிறார்கள். ஹெலிகாப்டர், சொந்த விமானங்கள், பிரம்மாண்டமான பங்களாக்கள் என சொகுசாக இருக்கிறார்கள். இந்த சாமியார்கள் எதை செய்தாலும் அதை ஒரு கணக்குவழக்குக்கு உட்பட்டு செய்ய வேண்டும், வெளிப்படையாக இருக்க வேண்டும், முக்கியமாக அது ‘வெள்ளைப் பணமாக’, சொந்தப் பணமாக இருக்க வேண்டும். கேட்டால் இது எங்கள் பணமல்ல, பக்தர்களின் பணம் என கைவிரித்து விடுவார்கள். யாரந்த பக்தர்கள், கணக்கு காட்டு என்றால் அமைதியாகி விடுவார்கள். நாங்கள் இந்து மதத்தை பரப்புகிறோம் (ஜக்கி) அல்லது மக்களுக்கு தொண்டு செய்கிறோம் (சிவசங்கர் பாபா) என சப்பைக்கட்டு கட்டுவார்கள். இதற்கும் முடிவு கட்ட வேண்டும்.

பின்குறிப்பு: அனைத்து மத அறக்கட்டளைகளுக்கும் பொருந்தும்படி இச்சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் இந்துமதம் மட்டும் தாக்கப்படுகிறது எனக் கூக்குரலிட்டு அதன் பின்னால் போய் ஒளிந்து கொள்வார்கள். அத்தோடு, சிறுபான்மை மத நிறுவனங்களும் தொண்டு எனும் பெயரில் வணிகத்தில் ஈடுபட்டு தம்மை அசைக்க முடியாத பொருளாதார, அரசியல் சக்திகளாக உருமாற்றிக் கொள்கிறார்கள். மக்களாட்சியில் பாரதூரமான தாக்கத்தை செலுத்துகிறார்கள். இது சமூகத்தை ஒரு போதும் விடுபட முடியாத சகதியில் தள்ளி விடுகிறது. மதம் என்பது மதமாக மட்டுமே இருப்பது, ஒரு மெய்யியல் விசாரணைக்கான இயக்கமாக மட்டுமே இருப்பது தான் ஆரோக்கியமானது.

 

https://uyirmmai.com/news/society/which-gives-the-space-to-the-origin-of-sivasankar-babas/

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இவர் போன்றவர்களின் வளர்ச்சி  என்பது

மக்களின் அறியாமையை நாடி  பிடிக்க  தெரிந்த வல்லமையில்  இருந்தே  தொடங்குகிறது

மக்கள் சின்ன  சின்ன  விடயங்களை  கூட நம்பும்  நிலையில் இருக்கையில்........

இவர் போன்றவர்கள் தோன்றிக்கொண்டே  தான்  இருப்பார்கள்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரே பகிடிதான் ☺️.😊

 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

உண்மையில் இவர் போன்றவர்களின் வளர்ச்சி  என்பது

மக்களின் அறியாமையை நாடி  பிடிக்க  தெரிந்த வல்லமையில்  இருந்தே  தொடங்குகிறது

மக்கள் சின்ன  சின்ன  விடயங்களை  கூட நம்பும்  நிலையில் இருக்கையில்........

இவர் போன்றவர்கள் தோன்றிக்கொண்டே  தான்  இருப்பார்கள்

அப்படி மக்களின் அறியாமையால் என்றில்லை என்று அபிலாஷ் (மேலுள்ள கட்டுரையில்) சொல்கின்றார்.

👇🏾

39 minutes ago, கிருபன் said:

நான் நாளை திருட்டு வழக்கில் கைதானால் என்னை என் நண்பர்கள் கூட வந்து பார்க்க மாட்டார்கள். ஆனால் நான் ஒரு சாமியாராக இருந்து கொலை வழக்கில், பல பெண்களை பலாத்கார செய்த வழக்கில் கைதானாலும், என் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் என்னைப் பார்ப்பதற்காக திரளுவார்கள். பக்தர்களின் இந்த பயங்கர குழப்பத்துக்கு காரணம் முழுக்க முழுக்க அத்வைத சிந்தனையே.

 

40 minutes ago, கிருபன் said:

நம்முடைய தேசமெங்கும் பரவியிருக்கும் அத்வைதம் இந்த பொய்யர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் நம்மைத் தடுக்கிறது. ஒருவன் பொதுவிடத்தில் ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டால் அவன் ஒரு பொறுக்கி என அந்த இடத்திலேயே முடிவு செய்து விடுவார்கள். அவன் என்னதான் உன்னதமான சிந்தனையாளன், பெரும் பணக்காரன், தியாகி, வள்ளல் என்றாலும் மக்களுக்கு இவ்விசயத்தில் குழப்பமே வராது. ஆனால் ஆன்மீகம் என்றதும் ஒரு குழப்பம் வந்து விடுகிறது – ஆன்மீகவாதி நான் அந்த ‘நோக்கத்தில்’ தொடவில்லை, ஒரு ஆசீர்வாதமாக, என்னுடள் நான் உணரும் ஆன்ம அதிர்வை கடத்திடவே அப்படி செய்தேன் என்றால் மக்களுக்கு ஒருவேளை இது உண்மையோ எனும் குழப்பம் வந்து விடும்.

 

அத்வைதம் என்றால் பிரம்மம் மட்டுமே உண்மை. ஏனையவை அத்தனையும் மாயை. 

துவைதம் என்றால் துவைத நிலையில் உயிர் பிரம்மம் ஆகிய இரண்டும் உண்மையே. அல்லது இறைவன் இவ்வுலகம் இரண்டும் உண்மையே. அத்வைத நிலையில் பிரம்மம் மட்டுமே உண்மை என்பதை மறக்கலாகாது.

விசிஷ்டாத்வைதம் ஒரு விஷேஷ அத்வைதம். அதாவது அத்வைதம் என்னும் கொள்கையோடு ஒரு விஷேஷத் தன்மை கொண்டது. இறைவனும் உயிரும் அல்லது இறைவனும் இயற்கை உலகும் இணைந்து மாற்றத்தோடு கூடிய அழிவற்ற நிலையில் உள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள், நித்தியானந்தாவை புனிதர் ஆக்கிப்போட்டார்.

நித்தியானந்தர், வளர்ந்த பெண்களை தான் மேய்த்துக் கொண்டு திரியுறார்.

உந்த, காமாலை, பச்சை மண்ணுகளை, வதைத்து இருக்குது. 😡

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

அப்படி மக்களின் அறியாமையால் என்றில்லை என்று அபிலாஷ் (மேலுள்ள கட்டுரையில்) சொல்கின்றார்.

👇🏾

 

 

அத்வைதம் என்றால் பிரம்மம் மட்டுமே உண்மை. ஏனையவை அத்தனையும் மாயை. 

துவைதம் என்றால் துவைத நிலையில் உயிர் பிரம்மம் ஆகிய இரண்டும் உண்மையே. அல்லது இறைவன் இவ்வுலகம் இரண்டும் உண்மையே. அத்வைத நிலையில் பிரம்மம் மட்டுமே உண்மை என்பதை மறக்கலாகாது.

விசிஷ்டாத்வைதம் ஒரு விஷேஷ அத்வைதம். அதாவது அத்வைதம் என்னும் கொள்கையோடு ஒரு விஷேஷத் தன்மை கொண்டது. இறைவனும் உயிரும் அல்லது இறைவனும் இயற்கை உலகும் இணைந்து மாற்றத்தோடு கூடிய அழிவற்ற நிலையில் உள்ளது.

 

ஐயோ குழப்புறீயளே....இதுதான் பிரச்சனை .....தெரியாத ,விளங்க முடியாத. புரியாத விடயங்களை மக்களுக்கு புகட்டுவதால் மக்கள் குழம்பி போய் இந்த போலிகளிடம் சரண் அடைகிறார்கள்🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.