சகோதரி திருமணத்திற்காக வைரம் தேடிய இரு நண்பர்களுக்கு 20 நாளில் கிடைத்த அதிர்ஷ்டம்
பட மூலாதாரம்,AMIT RATHAUR
படக்குறிப்பு,சுரங்கத்தில் தோண்டியபோது கிடைத்த வைரங்களுடன் சஜித் முகமது (இடது) மற்றும் சதீஷ் காதிக்.
கட்டுரை தகவல்
விஷ்ணுகாந்த் திவாரி
பிபிசி செய்தியாளர்
16 டிசம்பர் 2025
தன் சகோதரிக்காக ஒரு சகோதரனால் என்ன செய்ய முடியும்?
மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் வசிக்கும் இரண்டு நண்பர்களின் கதை இந்தக் கேள்வியுடன் தொடங்குகிறது.
டிசம்பர் 9-ஆம் தேதி, குளிர்ச்சியான காலை நேரம்.
பன்னா வைர அலுவலகத்தின் வெளியே பெரிதாக எந்த நடமாட்டமும் இல்லை.
ஆனால், பல அடுக்கு காகிதத்தில் சுற்றப்பட்ட ஒரு சிறிய பொட்டலத்தை கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்த சஜித் முகமது மற்றும் சதீஷ் காதிக் ஆகிய இருவருக்கும் இது ஒரு சாதாரண நாள் அல்ல.
அந்தப் பொட்டலத்திற்குள் 15.34 காரட் வைரம் இருந்தது.
அதனுள், பலர் வைரத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையும் இருந்தது, ஆனால் அது ஒரு சிலருக்கே நிஜமாகிறது.
சஜித் ஒரு சிறிய பழக்கடை வைத்திருக்கிறார். சஜித்தும் சதீஷும் கடைக்கு எதிரில் அமர்ந்திருக்கிறார்கள்.
பிபிசியிடம் பேசிய சஜித், "நீங்கள் ஒரு வைரத்தைக் கண்டால், அது தானாகவே உங்களுக்குப் புரியும். அது ஒரு மின்னல் போல இருக்கும். உங்கள் உடல் சிலிர்க்கும், ஆம், இது ஒரு வைரம் தான் என்று நினைப்பீர்கள்" என்று கூறினார்.
பன்னா வைர அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள அரசாங்க வைர நிபுணர் அனுபம் சிங், பிபிசி-யிடம் பேசுகையில், "சதீஷ் காதிக் மற்றும் சஜித் முகமது கண்டுபிடித்த வைரம் 15.34 காரட் கொண்டது. சுரங்கம் சதீஷ் பெயரில் இருந்தது, இருவரும் சேர்ந்து இந்த வைரத்தைக் கண்டுபிடித்தனர்" என்று கூறினார்.
வைரத்தைக் கண்டெடுத்த தருணத்தை நினைவு கூர்ந்த சதீஷ், "இவ்வளவு பெரிய தொகை இவ்வளவு சீக்கிரம் எங்களுக்கு கிடைக்கும் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இப்போது எங்களால் எங்கள் சகோதரிகளுக்கு நன்றாகத் திருமணம் செய்து வைக்க முடியும்" என்கிறார்.
'வைர நகரத்துக்குப்' பின்னால் உள்ள கதை
பட மூலாதாரம்,SIDDARTH KEJRIWAL
படக்குறிப்பு,பன்னாவில் வைரங்களைத் தோண்டுவது வெறும் வேலையல்ல, நம்பிக்கைக்கும் நிச்சயமற்ற தன்மைக்கும் இடையில் எடுக்கப்படும் ஒரு முடிவு.
பண்டேல்கண்ட் பகுதியில் அமைந்துள்ள பன்னா, நாட்டின் 'வைர நகரம்' (Diamond City) என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் இந்த அடையாளத்திற்குப் பின்னால், வறுமை, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வேலைவாய்ப்பின்மை பற்றிய நீண்ட வரலாறும் உள்ளது.
இங்கு, நிலத்தை தோண்டுவது என்பது ஒரு வேலை மட்டுமல்ல, நம்பிக்கைக்கும் நிச்சயமற்ற தன்மைக்கும் இடையே எடுக்கப்படும் ஒரு முடிவு.
சஜித்தும் சதீஷும் வைரத்தைக் கண்டுபிடிக்கும் ஆவலில் அதே பாதையைத் தான் தேர்ந்தெடுத்தனர்.
பன்னாவில் பலரும் தங்கள் முழு வாழ்க்கையையும் வைரங்களைத் தேடுவதிலேயே செலவிடுகிறார்கள். ஆனால் இந்த இரண்டு நண்பர்களும் வெறும் 20 நாட்களில் இந்த வெற்றியை அடைந்துள்ளனர்.
சஜித்தும் சதீஷும் சிறுவயது முதலே நண்பர்கள். அவர்களின் வாழ்க்கையும் ஒரே போல் இருக்கிறது.
இருவரது வீடுகளும் பன்னாவின் ராணிகஞ்ச் பகுதியில் உள்ளன. இவர்களின் முந்தைய தலைமுறையினர் வைரங்களைத் தேடுவதிலேயே தங்கள் வாழ்க்கையைக் கழித்துள்ளனர். சதீஷ் பன்னாவில் ஒரு சிறிய இறைச்சிக் கடை நடத்தி வருகிறார், அதே சமயம் சஜித்தின் குடும்பம் பழக்கடை நடத்தி வருகிறது.
சகோதரிகளின் திருமணத்திற்கான செலவு குறித்து நீண்ட காலமாக இரு குடும்பங்களுக்கும் கவலை இருந்தது. பெரும்பாலும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் இந்த பொறுப்பு குறிப்பிடத்தக்க சவாலாக மாறுகிறது.
"எங்கள் தந்தையும் தாத்தாவும் பல ஆண்டுகளாக நிலத்தைத் தோண்டினார்கள், ஆனால் ஒரு வைரத்தைக் கூட கண்டுபிடிக்கவில்லை"என்று சஜித் கூறுகிறார்.
சதீஷின் குடும்பக் கதையும் வேறுபட்டதல்ல. ஆனால் ஒவ்வொரு முறை அவர்கள் ஒரு மண்வெட்டியை எடுக்கும் போதும், இந்த முறை தங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கக் கூடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ஒரு புறம் உயர்ந்துவரும் குடும்பச் செலவுகளும், சகோதரிகளின் திருமணத்தைப் பற்றிய கவலைகளும் நவம்பர் மாதத்தில் இந்த இரண்டு நண்பர்களையும் வைரங்களைத் தேடுவது என்ற முடிவுக்கு இட்டுச் சென்றன.
பன்னாவைப் பொறுத்தவரை, இந்த முடிவு ஆச்சரியமான ஒன்றல்ல.
நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பல தலைமுறைகளாக வைரங்களைக் கண்டுபிடிக்க போராடி வரும் ஒரு பகுதியில், இரண்டு இளம் நண்பர்களின் முடிவு ஆச்சரியமல்ல. ஆனால் 20 நாட்களுக்குள் அவர்கள் எல்லா இடங்களிலும் பேசப்படத் தொடங்கினர்.
பன்னாவில் வைரம் கண்டுபிடிக்கப்படுவது எப்படி ?
பட மூலாதாரம்,AMIT RATHAUR
படக்குறிப்பு,சுரங்கத்தில் தோண்டிய போது சஜித் முகமது மற்றும் சதீஷ் காடிக் கண்டுபிடித்த வைரம் 15.34 காரட் எடை கொண்டது, இதன் சந்தை விலை ரூ. 50 முதல் 60 லட்சம் வரை இருக்கலாம்.
பன்னாவில் உள்ள தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தால் (NMDC) இயக்கப்படும் மஜ்கவான் வைரச் சுரங்கம், நாட்டின் ஒரே ஒழுங்கமைக்கப்பட்ட வைர உற்பத்தி மையமாகும்.
கூடுதலாக, பன்னாவில் உள்ள எவரும் மாநில அரசிடம் இருந்து 8x8 மீட்டர் நிலப்பரப்பை ஒரு வருடத்திற்கு குத்தகைக்கு எடுத்து சட்டப்பூர்வமாக வைரங்களை வெட்டி எடுக்கலாம். இதற்கான ஆண்டு கட்டணம் 200 ரூபாய்.
தோண்டிய பிறகு உங்களுக்கு நிச்சயமாக வைரம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
சஜித்தும் சதீஷும் அது போன்ற ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து, தோண்டத் தொடங்கினர். கிட்டத்தட்ட இருபது நாட்கள் கடின உழைப்புக்குப் பிறகு, டிசம்பர் 8ஆம் தேதி காலையில், அவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்ட அந்த கல்லைக் கண்டுபிடித்தனர்.
மறுநாள் வைரம் பன்னா வைர அலுவலகத்திற்கு வந்தபோது, அது பரிசோதிக்கப்பட்டு 15.34 காரட் எடை கொண்டதாகக் கண்டறியப்பட்டது.
அதன் விலை குறித்த கேள்விக்கு, அனுபம் சிங் பதில் கூறுகையில், "வைரத்தின் சரியான விலையைக் கூறுவது கடினம், ஏனெனில் இது சர்வதேச சந்தையைப் பொறுத்தது. ஆனால் தற்போதைய மதிப்பீடுகளின்படி, அதன் விலை ரூ. 50 முதல் 60 லட்சம் வரை இருக்கலாம்"என்றார்.
அவரைப் பொறுத்தவரை, பன்னாவில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட விலையுயர்ந்த வைரம் 2017-18 ஆம் ஆண்டில் மோதிலால் பிரஜாபதி என்பவரால் கண்டெடுக்கப்பட்டது.
அந்த வைரம் 42.58 காரட் எடை கொண்டது மற்றும் ஏலத்தில் காரட் ஒன்றுக்கு ₹6,00,000 விலையைப் பெற்றது, அதன் மொத்த மதிப்பு ₹2.5 கோடிக்கும் அதிகமாகும்.
ஏலத்தில் விற்கப்படாமல் எஞ்சியிருக்கும் வைரங்கள் குறித்து கேட்ட போது, பெரும்பாலான வைரங்கள் ஐந்து ஏலங்களுக்குள் விற்கப்படுகின்றன என்று அனுபம் சிங் கூறினார்.
ஒரு வைரம் விற்கப்படாவிட்டால், அதைக் கண்டுபிடித்தவர் அரசாங்கத்திடம் நிர்ணயிக்கப்பட்ட உரிமத் தொகையை (royalty) செலுத்தி அதைத் திரும்பப் பெற்று, பின்னர் தனியார் சந்தையில் விற்கலாம்.
ஏலத்திலிருந்து பெறப்படும் மொத்தத் தொகையில் 12 சதவீதத்தை அரசாங்கம் வைத்துக் கொள்கிறது. மீதமுள்ள தொகை வைரத்தைக் கண்டுபிடித்தவர்களுக்குச் செல்லும்.
பட மூலாதாரம்,SIDDARTH KEJRIWAL
படக்குறிப்பு,பன்னாவில், மாநில அரசிடமிருந்து 8x8 மீட்டர் நிலத்தை ஒரு வருடத்திற்கு குத்தகைக்கு எடுத்து, எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமாக வைரங்களை வெட்டியெடுக்கலாம்.
சஜித் மற்றும் சதீஷின் சகோதரிகள், முதல் முறையாக தங்கள் வாழ்க்கை மாறப் போகிறது என்று உணர்வதாகக் கூறுகிறார்கள்.
சஜித் மற்றும் சதீஷ், தங்களின் மாத வருமானம் சில ஆயிரம் ரூபாயைத் தாண்டாததால், இந்தக் தொகை கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று கூறுகிறார்கள்.
வைரத்தைக் கண்டுபிடித்த செய்தி முதல்முறையாக குடும்பத்தில் புதிய நம்பிக்கையைக் கொண்டு வந்துள்ளது என்று சஜித்தின் சகோதரி சபா பானு கூறுகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "என் தந்தைக்கும் தாத்தாவுக்கும் இந்த அளவுக்கு வெற்றி கிடைத்ததில்லை. என் சகோதரரும் சதீஷ் அண்ணாவும் எங்கள் திருமணங்களை ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளனர். எங்கள் குடும்பம் முழுவதும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
"வைரத்தைக் கண்டுபிடித்த அன்றைய இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. பணத்தை விட, ஒரு பாதுகாப்பான எதிர்காலம், என் சகோதரிகளின் திருமணம், ஒரு வீடு மற்றும் வாழ்க்கையில் ஒருவித நிலைத்தன்மை பற்றியதாகவே என் கனவுகள் இருந்தன" என்று சஜித்தும் சதீஷும் கூறுகிறார்கள்.
"இங்கே, கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை பெரும்பாலான வழிகள் மூடப்பட்டுள்ளன. எனவே பல தலைமுறைகளாக அதிர்ஷ்டம் மட்டுமே மிகப்பெரிய ஆதரவாக உள்ளது"என்று சதீஷ் கூறுகிறார்.
பன்னாவில் ஒரு வைரத்தைத் தேடுவது என்பது நம்பிக்கைக்கும், விரக்திக்கும் இடையில் ஊசலாடும் ஒரு பயணம்.
பெரும்பாலான மக்கள் வெறுங்கையுடன் திரும்புகிறார்கள், ஆனால் ஒருவர் வைரத்தைக் கண்டுபிடிக்கும் போது, அதன் மகிழ்ச்சி ஒரு குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் பரவுகிறது.
அடுத்து மற்றொருவருக்கு கிடைக்கலாம் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c2k488j5ewno
By
ஏராளன் ·