Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடையாள அழிப்பு: சிறு தெய்வ வழிபாட்டை அழிக்கும் ஐயர்கள் — கருணாகரன் — 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடையாள அழிப்பு: சிறு தெய்வ வழிபாட்டை அழிக்கும் ஐயர்கள்

அடையாள அழிப்பு: சிறு தெய்வ வழிபாட்டை அழிக்கும் ஐயர்கள் 

— கருணாகரன் — 

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடைய தெருவில் இருந்த முத்துமாரி, ஒரே நாளில் ராஜராஜேஸ்வரியாகிவிட்டார்.  ராஜராஜேஸ்வரியாகியதோடு சினிமாவில் நடப்பதைப்போல எல்லாமே மாறிவிட்டன. புனருத்தாரணம் அமர்க்களமாகியது. 

இருப்பிட வசதி கூடியது. பொங்கலும் படையலும் பொலியத் தொடங்கின. காலை, மதியம், மாலையும் என முக்காலப் பூசையும் பாராயணமும் நடக்கிறது. ஆட்கள் கூடுகிறார்கள். ஆடலும் பாடலுமென ஒரே கொண்டாட்டமாகியது சூழல். போதாக்குறைக்கு அந்த நாள், இந்த நாள் என்று விசேட பூசைகளும் ஆராதனைகளும். 

முத்துமாரியாக இருந்தபோது, ஐம்பது ஆண்டுகளாக ஒரு சின்னஞ்சிறிய கொட்டகையில்தான் இருக்க வேண்டியிருந்தது. தினம் ஒரு வேளை மட்டுமே ஒரு பூசை. எப்போதாவது ஒரு விசேசம் நடக்கும். அதுவும் சொல்லக் கூடிய அளவுக்குக் கொண்டாட்டமாக இருக்காது. அவரவராகவே வந்து, பொங்கிப் படைத்து, உண்டு, முடித்துச் செல்வார்கள். சிறிய வேண்டுதல்கள், பெரிய உருக்கம். ஆனாலும் ஒரு நெருக்கம் இருந்தது. 

இப்பொழுது ராஜராஜேஸ்வரியோ, மிக விசாலமான இருப்பிடத்தில் சகல ஐஸ்வரியங்களோடும் அமர்ந்திருக்கிறார். 

இதைச் சரியாகச் சொல்ல வேண்டும். முத்துமாரி ராஜராஜேஸ்வரி ஆகினார் என்பதை விட ராஜராஜேஸ்வரி ஆக்கப்பட்டார் என்று சொல்வதே சரியாகும். அதைப்போலவே, ராஜராஜேஸ்வரி சகல ஐஸ்வரியங்களோடும் அமரவில்லை. அமர்த்தப்பட்டிருக்கிறார். எல்லாமே மிகக் கச்சிதமாகச் செய்யப்பட்டுள்ளன. 

இது எப்படி நடந்தது என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கக் கூடும். அது தொழில் ரகசியம். வேறொன்றுமில்லை, சனங்களுடைய அறிவின்மையைப் பயன்படுத்தி ஒரு சாரார் இதைச் செய்திருக்கிறார்கள். சரியாகச் சொன்னால், சனங்களின் மூடத்தனத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 

சினிமாவில் விஜயலட்சுமி, ஸ்மிதாவாக்கப்பட்ட பிறகு புகழும் வாய்ப்பும் கூடியதைப்போல அல்லது அனு என்பவர் திரிஷா என்றாக்கப்பட்டதுக்குப் பிறகு புகழும் வசதியும் அதிகரித்த மாதிரி அல்லது மரியா என்ற பெண் நயன்தாரா எனவாக்கப்பட்டதற்குப் பின் பெருமைகளும் சிறப்பும் கூடியதைப்போல முத்துமாரியும் ராஜராஜேஸ்வரியாக்கப்பட்ட பிறகு கொடி பறக்கத் தொடங்கியது. 

ஆமாம் எல்லாமே தொழிலுக்காகத்தான். 

கோயில் பராமரிப்பையும் பூசைகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதற்காக பிராமணர்களால் செய்யப்பட்ட தந்திரம் இது. உண்மையில் இது ஒரு அடையாள அழிப்பாகும். சிறு தெய்வ வழிபாட்டை அழித்துப் பெருந்தெய்வப் பண்பாட்டுக்குள் மக்களைத் தள்ளுவதாகும். இதைப்பற்றிய ஒரு கதையை த.கலாமணி “வெளிச்சம்” இதழில் “வல்லமை தாராயோ!” என்ற தலைப்பில் 25 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறார். அண்ணமார் தெய்வத்தை பிள்ளையாராக மாற்றப்படுவதே அந்தக் கதையாகும். இதேபோல ஜெயமோகனும் ஒரு கதையை எழுதியிருக்கிறார், “மாடன் மோட்சம்” என்ற தலைப்பில். மாடன் என்ற சிறுதெய்வம், பெருந்தெய்வமாக்கப்படுவதன் அரசியலை மிகுந்த அங்கதத்துடன் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். எல்லாமே அரசியல்தான். பொருளாதார நலனுக்கான அரசியல். 

நாம் இன அழிப்பைப் பற்றி, அடையாள அழிப்பைப்பற்றி, பண்பாட்டு அழிப்பைப்பற்றிப் பேசுகிறோம். அப்படியான அழிப்புகள் பல தரப்பாலும் பல வழிகளிலும் நடக்கின்றன. இந்த அழிப்பில் தனியே அரசாங்கம்தான் ஈடுபடுகிறது என்றில்லை. அல்லது சிங்களத் தரப்புத்தான் செய்கிறது என்று சொல்ல முடியாது. இதை இந்த மாதிரி சாதியாதிக்கச்சக்திகளும் செய்கின்றன. சில அடையாள அழிப்புகள் இனத்தில் பேரால் நடக்கிறது. சில மொழியின் பேரால். இது மதத்தின் பேரால். 

இங்கே நடப்பது மதத்தின் பேரால் நிகழ்கிறது –நிகழ்த்தப்படுகிறது. 

சனங்களுக்கு ஆகம விதிகள் தெரியாது. லேசில் தத்துவம் புரியாது. எல்லோருக்கும் உபநிடதங்களில் பயிற்சியோ அறிவோ இல்லை. இந்து நாகரீகத்தை அல்லது இந்து சமயத்தை  ஒரு பாடமாக பல்கலைக்கழகங்களில் ஆண்டு தோறும் படித்துப் பலர் வெளியேறுகிறார்கள். இந்தத் துறையில் படித்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பலர் உள்ளனர். இதை விட சமய அறிஞர்களாக, பெரியோர்களாகப் பலர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் இருந்தாலும் எவரும் இந்த அடையாள அழிப்பைப் பற்றிப் பேசுவதுமில்லை. இதைக் கண்டிப்பதுமில்லை. 

“ஐயரை எப்படிக் கேள்வி கேட்கலாம்?” என்பதே எல்லோருடைய தயக்கமுமாகும். ஐயர் ஒன்றும் கடவுளல்ல. “நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று சிவனைப் பார்த்து நக்கீரன் கேள்வி கேட்டதாகப் படித்திருக்கிறோம். “நாமார்க்கும் குடியல்லோம். நமனையும் அஞ்சோம்” என்ற திருநாவுக்கரசர் சொன்னதாகச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால், நாம் மட்டும் நமக்குத் தெரிந்த அநீதிக்கே –அடையாள அழிப்புக்கே குரல் கொடுக்க முடியாமல் தடுமாறுகிறோம். ஒரு தெய்வத்தின் அடையாளத்தை மறைத்து, அழித்து இன்னொரு தெய்வமாக்கப்படுவதைப்பற்றிக் கேள்வி கேட்கத் தயங்குகிறோம். 

இது ஏன்? 

எங்களுடைய தெருவில் மட்டும் முத்துமாரி அம்மன் என்ற சிறு தெய்வம் அழிக்கப்படவில்லை. வற்றாப்பளையில், மாத்தளையில், புளியம்பொக்கணையில், புதூரில், இயக்கச்சியில்…. எனப் பல இடங்களிலும் இத்தகைய அடையாள அழிப்புகள் நடந்துள்ளன. இன்னும் பல இடங்களில் தொடர்ந்தும் நடக்கின்றன. 

தெய்வத்தையே மாற்றி விடுகிறார்கள் என்றால் அவர்கள் எப்படியான பேர்வழிகளாக இருப்பர்? 

வரலாற்றில் இப்படிப் பல அடையாள அழிப்புகள் நடந்துள்ளன. வட இந்தியாவில் ராமர் கோயிலை அழித்து பாபர் மசூதி கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. நல்லூரில் மசூதியை உடைத்தே கந்தசாமி கோயில் கட்டப்பட்டதாகச் சொல்வோருண்டு. கந்தசாமி கோயில் இருந்த இடத்தில் –முத்திரைச் சந்தையில் –கிறிஸ்தவ தேவாலயம் கட்டப்பட்டுள்ளது என்ற தகவல்களும் உள்ளது. சைவக் கோயில்கள் இருந்த இடங்களில் இப்பொழுது பௌத்த விஹாரைகளை உருவாக்குவதற்கு முயற்சிகள் நடப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. 

இதெல்லாம் வெளிப்படையான அரசியல் நடவடிக்கைகளின் விளைவுகள். ஆனால், நம்முடைய சூழலில் சத்தமில்லாமல் நடக்கிற –நடத்தப்படுகிற அடையாள அழிப்புக்கு என்ன பெயர்?இதுவும் அரசியல்தான். 

சிறுதெய்வ வழிபாட்டை அழித்து விட்டால், அந்த வழிபாட்டை மேற்கொண்ட சமூகத்தின் பண்பாட்டு வேரைச் சிதைத்து விடலாம். சிறுதெய்வ வழிபாடு என்பது ஏறக்குறைய சுதந்திரமானது. மக்கள் நேரடியாகவே தாங்கள் வழிபடுகின்ற கடவுளுடன் –தெய்வத்துடன் தொடர்புறுவர். அவர்களே அந்தத் தெய்வத்துக்கு பூசை செய்வர். அவர்களே அதைப் பராமரிப்பர். அவர்களே பொங்கிப் படைப்பர். அங்கே இடைத்தரகருக்கு இடமேயில்லை. இடைத்தரகருக்கு எதையும் தட்சிணையாகக் கொடுக்க வேண்டியதுமில்லை.  தாங்கள் வெளியே நின்று விதிக்கப்படும் கட்டளைகளுக்குப் பணிய வேண்டியதுமில்லை. 

சிறு தெய்வ வழிபாடென்பது,வழிபடும் பக்தருக்கும் கடவுளுக்கும் இடையில் தொடரும் மிக நெருக்கமான உறவை அடிப்படையாகக் கொண்டது. உலகத்திலுள்ள பெரும்பாலான மக்களின், மனநிலை, வாழ்க்கை. பொருளாதாரம், அரசியல் என்பற்றை ஆட்டிப் படைக்கும் இந்தப் ‘பெரு தெய்வ வழிபாடுகள்’ சிறு தெய்வ வழிபாடுகளிலிருந்து மருவியது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதைத்தான் கண்ணுக்குத் தெரியாத அரசியல் (Invisible Politics) என்கிறோம். 

தமிழ்ப்பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிறு தெய்வவழிபாடு என்பது, சிறு தெய்வங்களை வணங்கும் மக்கள், அவர்களுக்குத் தெரிந்த மொழியில் பாடுகிறார்கள். தெரிந்த கலைத்துவத்தை  ஆடலாகவும் பாடலாகவும் சமர்ப்பிக்கிறார்கள். தாங்கள் உண்ணும் உணவை, உபயமாகக் கொடுக்கிறார்கள். தங்கள் பிரச்சினையைச் சொல்லி ‘குற்றத்தையும்’ சிலவேளைகளில், ‘தண்டனையையும்’ ஒப்புக் கொள்கிறார்கள். இந்தச் சடங்கு, உரு ஆடுதல், கட்டுச் சொல்லுதல்’ போன்றவையாகப் பரிணமிக்கும்.

இந்திய, இலங்கைத் தமிழர்களிடையே உள்ள சிறு தெய்வ வழிபாடுகள், குல தெய்வ வழிபாடுகள், நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு, காவற் தெய்வ வழிபாடு, எல்லைகத் தெய்வ வழிபாடுகள் என்று பல விதத்தில் அழைக்கப் படுகின்றன.   

தமிழர்களின் சிறு தெய்வ வழிபாட்டு முறைகள், தனித்துவமானவை. இயற்கையின் தத்துவங்களைப் பிரதிபலிப்பவை. மனிதத்தின் மாண்புகளைப் போற்றுபவை. முன்னோர்களுடைய வழிபாட்டின் நீட்சியாகவிருப்பவை, தனது சமூகத்தின் பூர்வீகத்தின் புனிதக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை.

இந்தத் தெய்வங்கள் ஒருகாலத்தில் அந்தக் கிராமத்து மக்களின் முன்னோராகும். தங்களுக்கு நன்மை செய்த தலைவனை வணங்கிய, தங்களுக்காகப் போராடி உயிர் நீத்த வீரர்களை வழிபட்ட, பெண்களுக்காகப் போராடிய பெண்களைத் தெய்வமாக்கிய தமிழரின் அடிவேர்களாகும். இவர்கள் கற்பனையல்ல. கட்டுக்கதைகள் அல்ல. இதிகாசத் திரிபுகள் அல்ல. இந்த வழிபாட்டு முறை அறம் சார்ந்த பாரம்பரியத்தைக் கொண்டது. சிறு தெய்வ வழிபாடு, தென் இந்தியாவுக்கு, ஜைனம், பௌத்தம், பிராமணியம் உள்ளிட முதலே கி.மு. 8ம், 4ம், 4ம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே பரந்திருந்த வழிபாட்டு முறையாகும். 

இதைப்பற்றிய விரிவாக ஆய்வுகள் பலவும் நடத்தப்பட்டுள்ளன. இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. “ஆரிய உள்ளீடு தமிழகத்தில் வந்ததால் சிறு தெய்வங்கள் ‘தீண்டத்தகாத’ கடவுளர்கள் ஆயின. அத்துடன் சில சிறு தெய்வ வழிபாட்டுத் தெய்வங்கள் பெரு தெய்வங்களாக உருமாற்றம் செய்யப்பட்டன. பல்லாயிரம் ஆண்டுகள் பெயரும் புகமும் பெற்று வாழ்ந்த நாகரீகத்தையுடைய தமிழ் இனம், ஆரியரின் வருகையால் பெருமாற்றங்களைக் கண்டது. தமிழர்கள் அவர்கள் செய்யும் தொழில் முறையில் சாதி முறையில் பிரிக்கப்பட்டார்கள். பெரிய சாதிக்கடவுளர்கள் புதிதாக உருவாக்கப்பட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவிருந்தார்கள். வழிபாட்டு முறைகள் பிராமணயத்தின் முறையில் நகர்த்தப்பட்டன. அர்ச்சனை, விசேட பூஜைகள் என்று புதிய ‘வழிபாட்டு’ முறைகள். உருவெடுத்தது” என்கிறார் இது தொடர்பாக ஆய்வு செய்த ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். இதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் இது பன்மைத்துவத்தை நிராகரிக்கும் செயலாகும். மக்களின் உரிமை மீறல்களில் இதுவும் ஒன்றாகும். 

மக்களுடைய வழிபாடுகள் பல வகையாக உள்ளன என்பதை நாம் அறிய வேண்டும். சமூக அடுக்குகள் எப்படிப் பல வகையாக இருந்தனவோ அதற்கமைய வழிபாடுகள் இருந்ததும் உண்டு. வீட்டுத் தெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு, ஊர்த்தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இனத்தெய்வ வழிபாடு, பெருந்தெய்வ வழிபாடு எனப் பல வகைப்படுகின்றன. இன்று எல்லாவற்றையும் மெல்ல மெல்ல உட்கொண்டு பெருந்தெய்வ வழிபாடு வளர்கிறது. இல்லையில்லை. வளர்க்கப்படுகிறது. இதற்குப் பின்னால் உள்ள அரசியல் சாதாரணமானதல்ல. அது நம்மைப் பலியெடுப்பது. இப்பொழுது அதற்கு நம்மை நாமே பலியிடுகிறோம். 
 

 

https://arangamnews.com/?p=8243

 

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சொல்வது "மெல்லெனக் கொள்ளும் விஷம்" என்று........!  🤔

நன்றி கிருபன்.......!  

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் மிகவும் முக்கியமான விடயம் ஒன்றைத் தவிர்த்துவிட்டார். 

சிறு தெய்வ வழிபாடு / குல தெய்வ வழிபாட்டுமுறை என்பது சாதி/தொழில் அடிப்படையிலானது. ஒவ்வொரு சாதியினரும்/தொழில் வகுப்பினரும் தங்களுக்கென்று பிரத்தியோகமான தெய்வங்களையும் அதற்கென பிரத்தியோகமான வழிபாட்டு முறைகளையும் கொண்டது. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரத்தடியிலை சூலாயுதம் வைச்சு நாங்களே விளக்கேற்றி கும்பிட்ட காலம் போய்.......இப்ப கட்டிடம் கட்டி....கோபுரம் கட்டி ஐயர் வைச்சு பூசை செய்து கும்புடீனமாம்.இதெல்லாம் பெருமையாம்....

ஏன் நீங்களே விளக்கு வைச்சு பூசை செய்யலாமே எண்டு கேட்டால்.......தங்களுக்கு நேரமில்லையாம்....😁

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே இருக்கின்ற கடவுள்மார்கள் போதாது என்று கட்டுரையாளருக்கு சிறு தெய்வ வழிபாடும் தேவைபடுகின்றதோ?
சிறு தெய்வ வழிபாடும் முறை என்றால் கோயிலில் இறைச்சி கடையும் நடத்தலாமோ

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அங்கே இருக்கின்ற கடவுள்மார்கள் போதாது என்று கட்டுரையாளருக்கு சிறு தெய்வ வழிபாடும் தேவைபடுகின்றதோ?
சிறு தெய்வ வழிபாடும் முறை என்றால் கோயிலில் இறைச்சி கடையும் நடத்தலாமோ

நீங்கள் விளங்க நினைத்தால் மட்டும் போதாது . விளங்கிக்கொள்ளவும் வேண்டும். இல்லையென்றால் இந்த கட்டுரை உங்களுக்கானதல்ல. பேசாமல் ஒதுங்கிப் போங்கள்.

பலிகொடுத்து வழிபடுதல்  என்பது மனித வரலாற்றுக் காலந்தொட்டு உள்ளது. காலத்துக்கேற்றவாறு வழிபாட்டு முறைகள் மாற்றமடைந்துகொண்டு வருவது இயற்கை. அதற்காக இன்னொருவருடைய பாரம்பரிய வழிபாட்டு முறைகளை இழிவுபடுத்த உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயில் மண்ணு  என்று உங்களைப்போன்ற அறியாதவர்களுக்குத்தான் கூறப்பட்டுள்ளது.

😡

  • கருத்துக்கள உறவுகள்

இது காலா காலமாக நடக்கும் பிரச்சனை..இதில் தொடர்ச்சியாக வென்று வருபவர்கள் ஐயர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பகிடி said:

இது காலா காலமாக நடக்கும் பிரச்சனை..இதில் தொடர்ச்சியாக வென்று வருபவர்கள் ஐயர்கள்..

இதில் யார் வென்றாலும் மக்கள் தொடர்ந்து மூடநம்பிக்கையில் வைத்திருக்கபடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

இதில் யார் வென்றாலும் மக்கள் தொடர்ந்து மூடநம்பிக்கையில் வைத்திருக்கபடுவார்கள்.

எது மூட நம்பிக்கை? சிறு தெய்வ வணக்கமா? அது உங்கள் நம்பிக்கையின் படி பிழை என்பது வேறு மூட நம்பிக்கை என்பது வேறு.. மூட நம்பிக்கை என்று சொல்லும் பொழுது அது ஏன் என்று விளங்கப்படுத்த வேண்டும். அப்படி இல்லமால் போகிற போக்கில் சொல்லக்கூடாது.நீங்கள் எந்த நம்பிக்கை அல்லது மதம் சார்ந்தவராக இருந்தாலும். இன்னொருவரின் நம்பிக்கையை நீங்கள் ஏற்க்காமல் இருக்கலாம் நிராகரிக்கலாம்,ஆனால் அதை மரியாதையீனம் செய்யக்கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பகிடி said:

எது மூட நம்பிக்கை? சிறு தெய்வ வணக்கமா?

முற்காலத்தில் இருந்து சிறு தெய்வ வணக்கம் இருந்து வந்தது என்பதிற்காக அது தான் நல்லது  மூட நம்பிக்கை இல்லாதது, பெரிய கடவுளை வணங்கும் மதங்கள் தான் கெட்டது என்று பொய் சொல்ல மாட்டேன்.
முற்காலத்தில் இருந்து சாதி வேற்றுமைகள் ஏற்ற தாழ்வுகள் பார்த்துவருகின்றது எமது பாரம்பரிய முறை அதனால் சாதி முறை நல்லது என்றும் சொல்லலாம் 😒

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விளங்க நினைப்பவன் said:

முற்காலத்தில் இருந்து சிறு தெய்வ வணக்கம் இருந்து வந்தது என்பதிற்காக அது தான் நல்லது  மூட நம்பிக்கை இல்லாதது, பெரிய கடவுளை வணங்கும் மதங்கள் தான் கெட்டது என்று பொய் சொல்ல மாட்டேன்.
முற்காலத்தில் இருந்து சாதி வேற்றுமைகள் ஏற்ற தாழ்வுகள் பார்த்துவருகின்றது எமது பாரம்பரிய முறை அதனால் சாதி முறை நல்லது என்றும் சொல்லலாம் 😒

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் எண்டமாதிரிதான்…

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2022 at 15:05, விளங்க நினைப்பவன் said:

முற்காலத்தில் இருந்து சிறு தெய்வ வணக்கம் இருந்து வந்தது என்பதிற்காக அது தான் நல்லது  மூட நம்பிக்கை இல்லாதது, பெரிய கடவுளை வணங்கும் மதங்கள் தான் கெட்டது என்று பொய் சொல்ல மாட்டேன்.
முற்காலத்தில் இருந்து சாதி வேற்றுமைகள் ஏற்ற தாழ்வுகள் பார்த்துவருகின்றது எமது பாரம்பரிய முறை அதனால் சாதி முறை நல்லது என்றும் சொல்லலாம் 😒

எது சரி எது தவறு என்பதை ஆராய்ந்து வரையறை செய்து ஏற்பதை நான் பிழை சொல்லவில்லை.. எதையும் மூடத்தனம் என்று பழிக்காதீர்கள் என்கிறேன். சிறு தெய்வ வழிபாடு எம்மைக் காத்த முன்னோர்கள் வழிபாடு.. அவர்களை மதிக்கலாம் ஆனால் வழிபாடு செய்ய வேண்டாம் என்று சொல்லுங்கள் ஏற்கிறேன்..ஆனால் அதை போகிற போக்கில் மூடத்தனம் என்று சொல்ல வேண்டாம் என்கிறேன். அது, அது சார்ந்த நபர்களை காயப்படுத்தும். அப்பொழுது உங்கள் தரப்பு நியாயங்களை ஏற்கும் மனநிலையில் நீங்கள் காயப்படுத்தியவர்கள் இருக்க மாட்டினம்.

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

எது சரி எது தவறு என்பதை ஆராய்ந்து வரையறை செய்து ஏற்பதை நான் பிழை சொல்லவில்லை.. எதையும் மூடத்தனம் என்று பழிக்காதீர்கள் என்கிறேன். சிறு தெய்வ வழிபாடு எம்மைக் காத்த முன்னோர்கள் வழிபாடு.. அவர்களை மதிக்கலாம் ஆனால் வழிபாடு செய்ய வேண்டாம் என்று சொல்லுங்கள் ஏற்கிறேன்..ஆனால் அதை போகிற போக்கில் மூடத்தனம் என்று சொல்ல வேண்டாம் என்கிறேன். அது, அது சார்ந்த நபர்களை காயப்படுத்தும். அப்பொழுது உங்கள் தரப்பு நியாயங்களை ஏற்கும் மனநிலையில் நீங்கள் காயப்படுத்தியவர்கள் இருக்க மாட்டினம்.

உத நாஞ் சொன்னா என்ன பைத்தியக்காறன் என்னுறானுகள்

🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.