Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

30 வயதைக் கடந்த பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 5 பரிசோதனைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பெண்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,அலமுர் சௌமியா
  • பதவி,பிபிசி தெலுங்கு
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

30 வயதிற்குப் பிறகு, பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. சமச்சீரற்ற ஹார்மோன்கள், பலவீனமாகும் எலும்புகள், மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உலக சுகாதார நிறுவனத்தால் வெளியிடப்பட்ட குளோபோகான் 2020 (Globocon 2020) தரவுகளின்படி, இந்தியாவில் ஏற்படும் புற்றுநோய்களில் 13.5% பேருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதாக குறிப்பிடுகிறது. அதே நேரத்தில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பு 9.4% பேருக்கு ஏற்படுகிறது.

இந்தியாவில் தேசிய புற்றுநோய் பதிவேடு திட்டம் (NCRP) நடத்திய ஆய்வில், கடந்த சில ஆண்டுகளாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பது தெரியவந்துள்ளது.

25 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களே மார்பக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், புற்றுநோய் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியாததால் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

இது தவிர, இந்தியாவில் பெண்களைப் பாதிக்கும் மற்றொரு பெரிய பிரச்சனை ரத்த சோகை. 15 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களில் 50 சதவீதம் பேர் வரை ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோயின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், இந்த சிக்கலை சமாளிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அதற்காக 30 வயதை கடந்தப் பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய ஐந்து பரிசோதனைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

1. மார்பகப் புற்றுநோய் கண்டறியும் சோதனை

உடல்நலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேமோகிராபி (Mammography): மார்பகப் புற்றுநோயை கண்டறிய மேற்கொள்ளப்படும் சோதனையின் பெயர்

பல பெண்கள் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளை நோய் முற்றிய நிலை வரை அடையாளம் காண மாட்டார்கள். அதனாலேயே இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது என்று WHO கூறுகிறது. நோய் முற்றிய நிலையில், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 10 முதல் 40 சதவீதம் மட்டுமே என்று எச்சரிக்கிறது.

மார்பகப் புற்றுநோயை இரண்டு முறைகள் மூலம் ஆரம்ப கட்டங்களிலேயே கண்டறிய முடியும் என்று WHO கூறுகிறது.

  • மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பெண்களுக்கு வீட்டிலேயே மார்பக சுயபரிசோதனை நடைமுறைகள் குறித்த பயிற்சி, விழிப்புணர்வு வழங்க வேண்டும்.
  • ஆய்வக சோதனைகள் மூலம் புற்றுநோயின் அறிகுறிகளைக் கண்டறிதல். இதில் முக்கியமானது மேமோகிராபி.

மேமோகிராம் என்பது மார்பகங்களின் எக்ஸ்ரே ஆகும். இதன் மூலம் மார்பகங்களில் கட்டிகள் உருவாகி உள்ளதா என பரிசோதிக்கப்படுகிறது. புற்றுநோயாக இருந்தால், அதை உடனடியாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம்.

40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மேமோகிராபி செய்ய வேண்டும் என்று WHO பரிந்துரைக்கிறது.

இது தவிர, ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் முடிந்த பிறகு, பெண்கள் தங்கள் மார்பகங்களை வீட்டிலேயே சுய பரிசோதனை செய்து கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

"மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மேமோகிராபி பரிசோதனையை பெண்கள் மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது, பெண்கள் வீட்டிலேயே மார்பக சுயபரிசோதனை செய்ய வேண்டும். மார்பகத்தில் வீக்கம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்," என்று உஸ்மானியா மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியை டாக்டர் பிரதிபாலட்சுமி விளக்கினார்.

உடல் பருமன் மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று WHO எச்சரிக்கிறது. மார்பகங்களை தொடர்ந்து கண்காணித்தல், ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது ஆகியவை அச்சுறுத்தலை பெருமளவில் தவிர்க்கலாம் என்று கூறுகின்றன.

2. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சோதனை

உடல்நலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாப் ஸ்மியர் சோதனை (Pap smear test): கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கண்டறிய மேற்கொள்ளப்படும் சோதனை

மார்பகப் புற்றுநோய்க்குப் பிறகு இந்தியப் பெண்களுக்குப் அதிக அளவில் புற்றுநோய் வருவதற்குக் காரணமாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருக்கிறது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், உரிய சிகிச்சை அளிக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இதைச் செய்வதற்கான சிறந்த வழி பாப் ஸ்மியர் சோதனை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக, 30 வயதைக் கடந்த பெண்கள் பாப் ஸ்மியர் சோதனை செய்து கொள்ள வேண்டும்.

"கருப்பை வாயில் இருந்து சில செல்கள் சேகரிக்கப்பட்டு, புற்றுநோயின் அறிகுறிகள் அல்லது புற்றுநோய்க்கு முந்தைய மாற்றங்கள் குறித்து இந்த சோதனையின் போது பரிசோதிக்கப்படுகின்றன. இது மருத்துவமனையில் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் எடுக்கப்டும் எளிதான சோதனை. இந்த சோதனை செய்ய மயக்க மருந்து ஏதும் தேவையில்லை, மேலும் எந்த வலியும் ஏற்படாது. 25 - 65 வயதிற்குட்பட்ட ஒவ்வொரு பெண்ணும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தச் சோதனையை செய்து கொள்ள வேண்டும்," என்று மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஷைலஜா சந்து விளக்குகிறார்.

HPV ஊசி மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுக்க முடியும் என்று டாக்டர் பிரதிபாலட்சுமி கூறுகிறார்.

பெண்கள் பருவமடைவதற்கு முன்பாக (அதாவது 9 முதல் 25 வயதுக்குள்) கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க HPV தடுப்பூசி போட வேண்டும். பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் HPV பரவுகிறது. எனவே அதைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளைப்படுதல்(leucorrhoea), அடிவயிற்றில் வலி, மாதவிடாய் இடையே ரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

திடீர் எடை குறைப்பு, ரத்த சோகை, சோம்பல் போன்ற அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பிரதிபாலட்சுமி கூறினார்.

3. ரத்த அணுக்கள் எண்ணிக்கை சோதனை(CBC)

உடல்நலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவில் 57 சதவீத பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு மாதந்தோறும் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. இது தவிர ஹார்மோன் பிரச்சனைகளும் ரத்த சோகையை உண்டாக்கும். இதில் பெண்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும், உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

"ரத்த சோகை உள்ள பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, எடைக் குறைவாக குழந்தை பிறக்கிறது. பிரசவத்திற்குப் பிறகு அடிக்கடி ரத்தமாற்றம் தேவைப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் அளவும் குறைவதால், உடலில் சில பாதிப்புகள் ஏற்படக்கூடும்.”

“மயக்கம், சோர்வு, இதயம் படபடப்பு, கால் வீக்கம் போன்ற பிரச்னைகளும் ரத்த சோகையால் ஏற்படக்கூடும். ரத்த அழுத்தம் அதிகரித்து இதயத்தில் வீக்கம் கூட ஏற்படலாம், இது மரணத்திற்கு வழிவகுக்கும்,” என்று டாக்டர் பிரதிபாலட்சுமி தெரிவித்தார்.

இந்த பிரச்னைகள் குறித்து சிகிச்சை பெற முழுமையான ரத்த எண்ணிக்கை பரிசோதனை செய்ய வேண்டும். இந்த சோதனையில், உடலில் இருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டு, ரத்தத்தில் உள்ள கூறுகள் சோதனை செய்யப்படும்.

  • ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை (RBC)
  • ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை (WBC)
  • ஹீமோகுளோபின் எண்ணிக்கை
  • ஹீமாடோக்ரிட் (இரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் சதவீதம்)
  • பிளேட்ளட் எண்ணிக்கை

இந்த சோதனையின் மூலம் ரத்த சோகை மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளை கண்டறிய முடியும்.

 

4. தைராய்டு பரிசோதனை

பெண்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எடை அதிகரிப்பு, முடி உதிர்தல், உடல் சோர்வு, மனச்சோர்வு ஆகியவை தைராய்டின் அறிகுறிகளாகும்.

தைராய்டு என்பது தொண்டையில் அமைந்துள்ள ஒரு சுரப்பி. இது T3, T4, THS ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் நோய்வாய்ப்படுவீர்கள்.

தைராய்டு பிரச்சனைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று செயலற்ற அல்லது ஹைப்போ தைராய்டிசம். இரண்டாவது, அதிகப்படியான அல்லது ஹைப்பர் தைராய்டிசம்.

தைராய்டு பிரச்னை இருந்தால், தைராய்டு சுரப்பி உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யாது.

தைராய்டு பிரச்சனையின் அறிகுறிகள் படிப்படியாக வளரும். அறிகுறிகள் தெரிந்தவுடன் தைராய்டு சோதனை (TFT) செய்ய வேண்டும்.

தைராய்டு பிரச்சனை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும். ஆனால் பெண்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று WHO கூறுகிறது.

கர்ப்பம், பிரசவம், தாய்ப்பால் ஊட்டும் காலம், மாதவிடாய் நின்ற பிறகு ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, தைராய்டு சுரப்பி பாதிக்கப்படுகிறது.

அதனால், 30 வயதிற்குப் பிறகு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தைராய்டு பரிசோதனையை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தைராய்டு பிரச்சனை அதிகமாக இருக்கும் போது, தைராய்டு சுரப்பிகள் அதிகமாக உற்பத்தியாகும். இதனால் உடல்நலத்தில் பாதிப்புகளை உருவாக்கும்.

ஹைப்பர் தைராய்டின் அறிகுறிகள்: பயம், பதட்டம், எரிச்சல், மூட் ஸ்விங், தூக்கமின்மை, சோர்வு, தொண்டை வலி, அதிக இதயத் துடிப்பு, நடுக்கம், எடை இழப்பு.

சரியான நேரத்தில் தைராய்டு பரிசோதனையை மேற்கொள்வதன் மூலம் கடுமையான நோய்களைத் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

5. எலும்பு பலவீனம்

உடல்நலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

30 வயதைக் கடந்த பெண்களுக்கு, எலும்பின் அடர்த்தி குறைந்து. எலும்புகள் பலவீனமாகின்றன.

வைட்டமின் D, கால்சியம் சத்துகள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இந்தியப் பெண்களில் 90 சதவீதம் பேர் வைட்டமின் D குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் தாக்கினால், எலும்புகள் உடையக்கூடிய வகையில் வலுவிழக்கின்றன.

இந்த பாதிப்பு ஏற்பட்டால், தும்மல், இருமல் வந்தால் கூட விலா எலும்புகளை உடையும், முதுகெலும்பில் ஏதாவது ஒரு எலும்பு உடையும் வாய்ப்புள்ளது என்று NHS கூறுகிறது.

பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது என்று WHO கூறுகிறது. முக்கியமாக, 45 வயதிற்கு முன்பாக மாதவிடாய் நின்றவர்களுக்கும், கருப்பை அகற்றப்பட்டவர்களுக்கும் இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று WHO கூறுகிறது.

உடலில் வைட்டமின் D அளவைக் கண்டறிய தாமதமின்றி ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இதனுடன், ரத்தத்தில் உள்ள கால்சியம் அளவை சரிபார்க்க வேண்டியது அவசியம் என்றும் கூறப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/c25v2w2y9p8o

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

இந்தியப் பெண்களில் 90 சதவீதம் பேர் வைட்டமின் D குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வெயில் அதிகமாக இருக்கின்ற இந்தியாவில் விற்டமின் D குறைபாடு பெரிய அளவில் இருக்கிறதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

வெயில் அதிகமாக இருக்கின்ற இந்தியாவில் விற்டமின் D குறைபாடு பெரிய அளவில் இருக்கிறதே

வீட்டிற்குள்ளயே இருக்கினமோ? ஆடையால் உடல் முழுவதும் மறைக்கப்படுவதாலும் சூரிய ஒளி பட்டாலும் பயன் இருக்காது தானே.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

வீட்டிற்குள்ளயே இருக்கினமோ? ஆடையால் உடல் முழுவதும் மறைக்கப்படுவதாலும் சூரிய ஒளி பட்டாலும் பயன் இருக்காது தானே.

ஓம் நீங்கள் சொன்ன காரணம் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2023 at 01:33, ஏராளன் said:

வீட்டிற்குள்ளயே இருக்கினமோ? ஆடையால் உடல் முழுவதும் மறைக்கப்படுவதாலும் சூரிய ஒளி பட்டாலும் பயன் இருக்காது தானே.

ஆடையை கொஞ்சம் அப்பிடி, இப்பிடி போடுவம் என்று வெளிக்கிட்டால் அந்த மனிசன் விடுதில்லை, வேற சோலிக்கு வெளிக்கிடுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தி said:

ஆடையை கொஞ்சம் அப்பிடி, இப்பிடி போடுவம் என்று வெளிக்கிட்டால் அந்த மனிசன் விடுதில்லை, வேற சோலிக்கு வெளிக்கிடுது.

வீட்டு மொட்டை மாடில போய் கொஞ்ச நேரம் பொருத்தமான உடையோட சூரியக் குளியல் செய்யுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நந்தி said:

ஆடையை கொஞ்சம் அப்பிடி, இப்பிடி போடுவம் என்று வெளிக்கிட்டால் அந்த மனிசன் விடுதில்லை, வேற சோலிக்கு வெளிக்கிடுது.

 நீங்கள் நந்தினி அக்காவா? :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2023 at 01:33, ஏராளன் said:

வீட்டிற்குள்ளயே இருக்கினமோ? ஆடையால் உடல் முழுவதும் மறைக்கப்படுவதாலும் சூரிய ஒளி பட்டாலும் பயன் இருக்காது தானே.

ஓம், வெளியே போகாமல், போனாலும் சூரிய ஒளி பெரிதும் படாமல் இருத்தல் ஒரு பிரச்சினை.

ஆனால், அதை விட முக்கியமான பிரச்சினை: தோலின் கருமை நிறம். சூரிய ஒளியின் புற ஊதாக்கதிர், தோலின் மேற்பரப்பை ஊடுருவினால் தான் விற்றமின் டி உருவாகும். இது வெள்ளைக் காரர்களில் இலகுவாக நிகழும், கறுப்பு, பிறவுண் தோல்களில் ஊடுருவல் கடினம்.

ஆனால், புற ஊதாக்கதிர் வெள்ளைக்காரர்களின் தோலில் இலகுவாக தோல் (melanoma) புற்று நோயை உருவாக்கும், கருமை கொண்ட தோலுடைய எமக்கு இந்த ஆபத்துக் குறைவு!

  • கருத்துக்கள உறவுகள்

எமது தோல் நிறத்துக்கு குறைந்தது 3மணி நேரம் காலை 10 மணியிலிருந்து பகல் 3  மணிவரையான வெயில் நேராக படவேண்டும். வீட்டுக்கு வெளியே அல்லது யன்னலில் சூரியன் வெளிச்சம் வரும் இடத்தில் இருந்து ஏதாவது ஒரு வேலையை செய்தால் நல்லது.

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

 நீங்கள் நந்தினி அக்காவா? :beaming_face_with_smiling_eyes:

ஐயையோ எப்பிடி இப்பிடி கண்டுபிடிச்சிட்டியல் இவ்வளவு காலமும் கட்டிக்காப்பாத்தின உண்மையை . ‘நுணலும் தம் வாயால் கெடும்” அல்லவா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.