Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்காவிடமிருந்து விலகிச் செல்ல நினைப்பது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
செளதி அரேபியா, கச்சா எண்ணெய், அமெரிக்கா, இளவரசர் முகமது பின் சல்மான், ரஷ்யா, விளாதிமிர் புதின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,தீபக் மண்டல்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

செளதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஏறக்குறைய தொண்ணூறு ஆண்டுகள் பழமையான உறவு இன்று ஒரு முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ளது.

சௌதி அரேபியா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதை விரும்பாத அமெரிக்கா

எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் விவகாரத்தில் அமெரிக்காவின் நெருக்குதலை பொறுத்துக்கொள்ள செளதி அரேபியா தயாராக இல்லை என்று ஒரு உளவுத்துறை ஆவணத்தை மேற்கோள்காட்டி அமெரிக்க செய்தித்தாள் 'வாஷிங்டன் போஸ்ட்' தெரிவித்துள்ளது.

எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் தனது நாட்டின் முடிவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுத்தால் அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கூறியதாக 'வாஷிங்டன் போஸ்ட்' வெளியிட்டுள்ள செய்தி மேலும் தெரிவிக்கிறது.

கச்சா எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக உற்பத்தியைக் குறைத்தால் அதன் விளைவுகளை செளதி அரேபியா சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஆண்டு அக்டோபரில் எச்சரித்திருந்தார்.

 

‘அமெரிக்காவிடம் அடிபணியாமல் முடிவெடுப்போம்’

எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் தனது முடிவை தூதாண்மை மன்றங்களில் மிகவும் கண்ணியமான முறையில் நியாயப்படுத்திய செளதி அரேபியா, அமெரிக்க அழுத்தத்திற்கு அடிபணியாமல் முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் தனக்கு இருப்பதாகக்கூறியது. ஆனால் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளில் செளதி இளவரசரின் அணுகுமுறை கடுமையாக இருந்தது.

அமெரிக்கா எச்சரித்ததை போல நடந்தால் செளதி அரேபியா அமெரிக்காவுடனான தனது உறவை முறித்துக் கொள்வது மட்டுமல்லாமல், அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை எடுப்பதிலிருந்து பின்வாங்காது என்று இளவரசர் கூறினார் என்று வாஷிங்டன் போஸ்ட்டில் வெள்ளிக்கிழமை வெளியான செய்தி தெரிவிக்கிறது.

 

அமெரிக்க-செளதி உறவுக்கும் எண்ணெய்க்கும் இடையிலான தொடர்பு

செளதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டுகள் பழமையானது. 1930களில் செளதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, 'பாதுகாப்புக்கு எண்ணெய்' என்ற கொள்கையை அமெரிக்கா பின்பற்றி வருகிறது. அதாவது எண்ணெய்க்கு மாற்றாக இந்த பிராந்தியத்தின் பெரிய சக்திகளிடமிருந்து அமெரிக்கா, செளதி அரேபியாவுக்கு பாதுகாப்பை வழங்கும்.

செளதி அரேபியா மற்றும் வளைகுடாவில் உள்ள எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு, எண்ணெய்க்கு ஈடாக பாதுகாப்பை வழங்குவது, இந்தப் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை அம்சமாகும். எனவேதான் செளதி அரேபியாவின் வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்காவின் நிழல் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

செளதி அரேபியா, கச்சா எண்ணெய், அமெரிக்கா, இளவரசர் முகமது பின் சல்மான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தவரையில் செளதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு நெருக்கமானதாகவே காணப்பட்டது

அடிப்படைவாத இஸ்லாம், செளதி முடியாட்சியின் கடுமையான சட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் பற்றிய பதற்றங்கள் இருந்தபோதிலும், அமெரிக்காவிற்கும் செளதி அரேபியாவிற்கும் இடையிலான உறவு இதுவரை நன்றாகவே இருந்துவந்துள்ளது.

சமீப காலம் வரை அதாவது டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தவரையில் செளதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு மிகவும் நெருக்கமானதாகவே காணப்பட்டது.

2017 ஆம் ஆண்டு முகமது பின் சல்மான் செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்ட நேரம் வரை இரான் மீது ஆதிக்கம் செலுத்தும் விஷயத்தில் செளதி அரேபியாவும் அமெரிக்காவும் ஒன்றாகவே காணப்பட்டன.

ஆனால் கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையேயான உறவில் விரைவான மாற்றம் ஏற்படும் அறிகுறிகள் தென்படுகின்றன.

அமெரிக்கா மற்றும் செளதி அரேபியா இடையே எழுந்துள்ள சமீபத்திய பதற்றம், எண்ணெய் உற்பத்தியை குறைப்பது தொடர்பானது.

சௌதியை அமெரிக்கா ஏன் தண்டிக்க நினைக்கிறது?

ஜோ பைடன், செளதி அரேபியா, கச்சா எண்ணெய், அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு, வரவிருக்கும் அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்

செளதி அரேபியா எண்ணெய் ஏற்றுமதியைச் சார்ந்து இருப்பதை முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்தாலும், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 40% பங்கை வகிக்கிறது.

யுக்ரேன் போருக்குப் பிறகு பீப்பாய்க்கு 120 டாலராக உயர்ந்த கச்சா எண்ணெய்யின் விலை, தற்போது பீப்பாய்க்கு 75 டாலராகக் குறைந்துள்ளது.

தனது வருவாய் குறைந்து வருவதைக் கண்ட செளதி அரேபியா ஜூலை மாதத்தில் இருந்து தனது எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 10 லட்சம் பீப்பாய்கள் குறைப்பதாக அறிவித்தது.

செளதி அரேபியாவின் இந்த அறிவிப்பு அமெரிக்காவை கோபப்படுத்தியது. ஏனெனில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு, வரவிருக்கும் அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

தற்போது பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருகிறது. உயர் பணவீக்க விகிதம் காரணமாக பைடனின் ஜனநாயக கட்சிக்கு 2024 அதிபர் தேர்தல் கடினமாக இருக்கலாம்.

எண்ணெய் உற்பத்தியை குறைத்து அதன் விலையை அதிகரிக்க விரும்பும் செளதி அரேபியாவை தண்டிக்க அமெரிக்கா நினைப்பதற்கு இதுவே காரணம். ஆனால், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிய செளதி அரேபியா தயாராக இல்லை.

சௌதி அரேபியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்து வருவதில் எண்ணெய் விவகாரம் ஒரு சிறிய பகுதிதான் என்று செளதி அரேபியா-அமெரிக்க உறவுகளின் நிபுணர்கள் கூறுகிறார்கள். உண்மையில் கடந்த சில ஆண்டுகளில் செளதி அரேபியாவின் வெளியுறவுக் கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

"செளதி அரேபியா கடந்த சில ஆண்டுகளாக சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்ற முயல்கிறது. முன்னதாக செளதி அரேபியாவின் வெளியுறவுக் கொள்கை, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையுடன் ஒத்திசைந்து இயங்கியது. ஆனால் இப்போது அது ஒரு திடமான மற்றும் சுதந்திர வடிவத்தை எடுத்துள்ளது," என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்காசிய ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் முதஸர் கமார் தெரிவித்தார்.

அமெரிக்காவை பின்பற்றி வந்த செளதி அரேபியா திசையை மாற்றிக்கொண்டது ஏன்?

செளதி அரேபியா, கச்சா எண்ணெய், அமெரிக்கா, இளவரசர் முகமது பின் சல்மான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தக் கேள்விக்கு பதிலளித்த முதஸர், "மாறிவரும் புவிப் பொருளாதார சமன்பாடுதான் இதற்கு முக்கியக் காரணம். உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி இப்போது அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் விலகிச்செல்கிறது. வளைகுடா நாடுகளின் வணிகப் போக்குகளைப் பார்த்தால் இது நமக்குத்தெரியும். அவர்கள் சீனா, இந்தியா, கொரியா, ஜப்பான் மற்றும் மலேஷியா போன்ற நாடுகளுடன் அதிக வணிகம் செய்கிறார்கள். செளதி அரேபியாவின் அதிக அளவு எண்ணெய், எரியாற்றல் நுகர்வு அதிகரித்துவரும் சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு விற்கப்படுகிறது,” என்றார்.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது செளதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு மிகவும் நன்றாக இருந்தது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளையும் தனக்கு அச்சுறுத்தலாக செளதி அரேபியா கருதியது. இந்த விவகாரத்தில் செளதி அரேபியாவுக்கு டிரம்ப் ஆதரவாக இருந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு டிரம்ப், செளதி அரேபியாவுக்கு தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். ஆனால் செளதியை சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட்டின் செய்தியாளர் ஜமால் கஷோக்ஜியின் படுகொலைக்குப்பிறகு இந்த உறவு புதிய திருப்பத்தை எடுத்தது. இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்தில் நடந்த இந்த கொலையில் செளதி பட்டத்து இளவரசருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஜோ பைடன் தனது தேர்தல் பிரசாரத்தின்போது பட்டத்து இளவரசர் சல்மானை தண்டிப்பது பற்றிக்கூட பேசினார்.

ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அவர் செளதி அரேபியாவுடனான உறவை மேம்படுத்த முயன்றார். ஏனெனில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பாதுகாப்பு கட்டமைப்பில் இருந்து விலகுவது அமெரிக்காவுக்கு சாத்தியமற்றதாக இருந்தது. செளதி அரேபியா இப்போதும் அமெரிக்க ஆயுதங்களை அதிகம் வாங்கும் நாடாக உள்ளது.

ஜோ பைடனை நட்புடன் அணுகாத சௌதி இளவரசர்

செளதி அரேபியா, கச்சா எண்ணெய், அமெரிக்கா, இளவரசர் முகமது பின் சல்மான், ஜோ பைடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

“அமெரிக்காவுடனான உறவிலிருந்து செளதி அரேபியாவை தூரமாகக்கொண்டு செல்ல சல்மான் விரும்புகிறார்.”

"பைடன் அமெரிக்க அதிபரான பிறகு உறவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை போக்க செளதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டார். ஆனால் இளவரசர் சல்மானின் அணுகுமுறை நட்பு பாவத்துடன் இருக்கவில்லை,” என்று இந்திய உலக விவகாரங்கள் கவுன்சில் உறுப்பினரும், மத்திய கிழக்கு விவகாரங்களில் நிபுணருமான ஃபஸூர் ரஹ்மான் சித்திக்கி குறிப்பிட்டார்.

"இளவரசர் சல்மான் பட்டத்து இளவரசராக ஆனபிறகு செளதி அரேபியாவின் கொள்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான உறவுகள் அல்லது பழமைவாத இஸ்லாம் அல்லது எண்ணெய் அரசியல் போன்ற எல்லாவற்றிலிருந்தும் செளதி அரேபியாவை தூரமாகக்கொண்டு செல்ல அவர் விரும்புகிறார். செளதியின் கடந்த காலத்தின் ஒரு பகுதியாக இருந்த எல்லாவற்றிலிருந்தும் அதை விலக்க பட்டத்து இளவரசர் முயற்சி செய்கிறார்,” என்று சித்திக்கி தெரிவித்தார்.

“பட்டத்து இளவரசர் சல்மான், மத்திய கிழக்கில் தற்போதுள்ள பிராந்திய கூட்டணிகள் மற்றும் அமெரிக்க முகாமில் இருந்து விலகிச் செல்ல முயற்சிக்கிறார். செளதி அரேபியாவின் எண்ணெய் சார்பை முடிவுக்குக் கொண்டுவருவதும் அவரது செயல் திட்டத்தில் முன்னுரிமையாக உள்ளது,” என்கிறார் சித்திக்கி.

ரஷ்யாவுடன் நெருக்கம், தனித்துச் செயல்பட விருப்பம்

செளதி அரேபியா, கச்சா எண்ணெய், அமெரிக்கா, இளவரசர் முகமது பின் சல்மான், ரஷ்யா, விளாதிமிர் புதின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

"எரிவாயு விற்கும் இரண்டு பெரிய நாடுகளான செளதி அரேபியாவும் ரஷ்யாவும் ஒன்றாகக் காணப்படுகின்றன"

உலக அரசியலில் ரஷ்யாவின் வலுவான எழுச்சி, செளதி அரேபியாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய பங்கு வகித்துள்ளது என்று ஃபஸூர் ரஹ்மான் கருதுகிறார்.

"2015-16க்குப் பிறகு சிரியா, லிபியா மற்றும் இரானில் ரஷ்யா தனது பங்கை ஆற்றிய விதத்தை கண்ட இளவரசர் சல்மான், புவிசார் அரசியல் நிலைமை வேகமாக மாறி வருவதை உணர்ந்தார். கூட்டணிகளை முறித்து புதிய கூட்டணிகளை உருவாக்க இதுவே சரியான நேரம் என்று இளவரசர் கருதினார்," என்று அவர் தெரிவித்தார்.

முதஸர் கமாரும் இதை உறுதிப்படுத்துகிறார். எரியாற்றல் புவிசார் அரசியலின் பார்வையில், அமெரிக்காவுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையே சில காலமாக இது குறித்த ஒருங்கிணைப்பு காணப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.

"2016 முதல் எண்ணெய் மற்றும் எரிவாயு விற்கும் இரண்டு பெரிய நாடுகளான செளதி அரேபியாவும் ரஷ்யாவும் ஒன்றாகக் காணப்படுகின்றன. இப்போது இந்த இரண்டு நாடுகளும் எரிசக்தி புவிசார் அரசியலில் பெரும் பங்கு வகிக்கின்றன. இதனுடன் அரபு உலகில் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அமெரிக்காவுக்கு இப்போது செளதி அரேபியாவிடம் இருந்து பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. இதன்காரணமாகவும் இப்போது செளதி தனிப்பட்ட மற்றும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை நோக்கி திரும்பத்தொடங்கியுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

மத்தியக் கிழக்கில் நுழையும் சீனா

ஷி ஜின்பிங், செளதி அரேபியா, கச்சா எண்ணெய், அமெரிக்கா, இளவரசர் முகமது பின் சல்மான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

செளதி அரேபியாவின் கச்சா எண்ணெயை அதிக அளவில் வாங்கும் நாடாகவும் சீனா உள்ளது

இதற்கிடையில் மத்திய கிழக்கில் ஒரு கவனிக்கத்தக்க விஷயம் நடந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ரஷ்யாவுடன் கூடவே சீனாவின் செயல்பாடும் இங்கு அதிகரித்தது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சீனா இங்கு பொருளாதார ரீதியாகவும், ராஜிய ரீதியாகவும் பெரும் பங்கு வகிக்கத் தொடங்கியது. சமீபத்தில் செளதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையே ஒப்பந்தம் செய்துவைத்து சீனா ஒரு பெரிய தூதாண்மை சாதனையை படைத்துள்ளது.

சீனாவின் BRI (பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சி) திட்டம், வளர்ந்து வரும் பொருளாதார சக்தி மற்றும் ரஷ்யாவின் ராணுவ வலிமையும் இந்தப்புதிய கூட்டணியை நோக்கி செளதி அரேபியாவை ஈர்த்தது என்று ஃபஸூர் ரஹ்மான் கூறுகிறார்.

செளதி அரேபியாவின் கச்சா எண்ணெயை அதிக அளவில் வாங்கும் நாடாகவும் சீனா உள்ளது. மேலும் அங்கு அதிக முதலீடும் செய்து வருகிறது. சீனாவுடனான அதன் வர்த்தகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தப் பகுதியில் அமெரிக்கா இரண்டு பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. முதலாவது இரான் மற்றும் செளதி அரேபியா இடையேயான ஒப்பந்தம். இருவரும் ஏறக்குறைய முப்பது வருடங்களாக பரம எதிரிகள். ஆனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக இரானின் அடிப்படையில் அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் அரசியல் செய்யும் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.

இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் நுழைவால் அமெரிக்காவுக்கு இன்னொரு பெரிய அடி விழுந்துள்ளது. செளதி அரேபியா மற்றும் இரானுக்கு இடையே சீனா ஒப்பந்தம் செய்துவைத்திருப்பதை பார்க்கும்போது அமெரிக்காவின் தலையீடு வலுவிழந்து வருவது தெளிவாகத்தெரிகிறது.

இதுவரையில் அரபு நாடுகளில் பெரும்பாலான பெரிய ஒப்பந்தங்கள் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் கீழ் செய்யப்பட்டன. ஆனால் சீனாவின் மத்தியஸ்தத்தில் இவ்வளவு பெரிய ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதானது இந்த பகுதியில் அதன் மேலாதிக்கத்திற்கு ஒரு தெளிவான சான்றாகும்.

இங்கு அமெரிக்க தலையீட்டை செளதி அரேபியா அகற்ற விரும்புகிறது என்பது சீனாவின் மத்தியஸ்தத்தின் மூலம் தெளிவாகிறது.

இளவரசர் சல்மான் அரபு இளைஞர்களின் அடையாளமாக விரும்புகிறார்

செளதி அரேபியா, கச்சா எண்ணெய், அமெரிக்கா, இளவரசர் முகமது பின் சல்மான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

"இளவரசர் சல்மான் வயதில் இளையவர். இவ்வளவு இளம் வயதில் செளதி அரேபியாவின் ஆட்சியாளராக மாறுவது பெரிய விஷயம்."

அரபு உலகின் பாதுகாப்பு என்ற பெயரில் இருக்கும் அமெரிக்க 'பாதுகாப்பு கட்டமைப்பில்' இருந்து செளதி விலக விரும்புகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ளன. இவற்றை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்பதே இரானின் கோரிக்கையாக உள்ளது.

ஃபஸூர் ரஹ்மான் இன்னொரு முக்கிய அம்சத்தையும் சுட்டிக்காட்டுகிறார்.

"இளவரசர் சல்மான் வயதில் இளையவர். இவ்வளவு இளம் வயதில் செளதி அரேபியாவின் ஆட்சியாளராக மாறுவது பெரிய விஷயம். ஏனென்றால் 75-80 வயதில் ஆட்சிக்கு வரும் மரபுதான் அங்கு இருந்து வந்துள்ளது," என்று அவர் கூறுகிறார்.

"இளவரசருக்கு நேரம் இருக்கிறது. வயது அவருடைய பக்கம் உள்ளது. அவர் தன்னை அரபு இளைஞர்களின் அடையாளமாக காட்ட விரும்புகிறார். அரபு உலக இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் தலையீட்டை விரும்பாத இளைஞர்கள் மத்தியில் அவர் பிரபலமாக இருக்கிறார்.” என்கிறார் ரஹ்மான்.

‘ரஷ்யா-சீனா கூட்டணியில் செளதி அரேபியா சேர சரியான நேரம்’

இப்போது அமெரிக்காவும் இந்தப் பகுதியில் இருந்து பின்வாங்குவது போல் தெரிகிறது என்கிறார் ஃபஸூர் ரஹ்மான். எனவே ரஷ்யா-சீனா தலைமையிலான கூட்டணியில் செளதி அரேபியா சேர இதுவே சரியான நேரம் என்கிறார் அவர்.

செளதி அரேபியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையின் ஒரு உதாரணம் ரஷ்யா-யுக்ரேன் போரில் தெரிந்தது என்கிறார் அவர். அமெரிக்காவின் எல்லா முயற்சிகளையும் மீறி செளதி அரேபியா வெளிப்படையாக ரஷ்ய எதிர்ப்பு முகாமில் சேரவில்லை. யுக்ரேனை ஆதரித்தாலும் ரஷ்யாவையும் வெளிப்படையாக அது எதிர்க்கவில்லை.

செளதி அரேபியாவின் முன்முயற்சியின் பேரில் சிரியாவை அரபு லீக்கில் சேர்த்தது மற்றொரு உதாரணம். அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் செளதி, அரபு லீக்கின் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதில் சிரியாவையும் சேர்த்தது. இது அமெரிக்காவிற்கு பெரும் அடியாகும்.

சீனாவை மத்தியஸ்தராக்கி இரானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது, ரஷ்யாவை வெளிப்படையாக எதிர்க்காமல் இருப்பது, அரபு லீக்கில் சிரியாவை உறுப்பினராக்கியது, சீனாவிடம் ஆயுதங்கள் வாங்குவது, கூடவே பிஆர்ஐயின் ஒரு பகுதியாக மாறுவது, ஏமனில் அமைதி ஒப்பந்தத்திற்கான முன்முயற்சியை தொடங்குவது. ஜோ பைடனுக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பது மற்றும் ஒபெக் பிளஸ்ஸில் தலைமைப் பாத்திரத்தை வகிப்பது - கடந்த சில ஆண்டுகளில் செளதி அரேபியாவின் இந்த எல்லா நடவடிக்கைகளும், இளவரசர் சல்மான் தலைமையில் அதன் வெளியுறவுக் கொள்கை அச்சமற்றதாகவும் சுதந்திரமாகவும் மாறி வருகிறது என்பதைக் காட்டுகிறது.

https://www.bbc.com/tamil/articles/c0k9vpk01kgo

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தங்களை  பாவிப்பதை சவூதி அறிந்து இருந்தது. இம்முறை  அது பலிக்காமல் போய் விட்டது. சவூதியின் புதிய நண்பர்கள் காரணமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஏராளன் said:

"மாறிவரும் புவிப் பொருளாதார சமன்பாடுதான் இதற்கு முக்கியக் காரணம். உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி இப்போது அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் விலகிச்செல்கிறது.

அமெரிக்காவுக்கு நாலுபக்கமும் அடி விழுகின்றது. அமெரிக்கா தனித்து வாழும்/இயங்கும் வல்லமையுடையது. ஆனால் அமெரிக்காவின் தாரக மந்திரத்துடன் சீவிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தனித்து இயங்க முடியுமா என்றால் நூறு வீதம் இல்லை.

சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் ஒழிந்தது போல் உலக பொலிஸ் தரமும் வெகு விரைவில் அடங்கிப்போகும்.

அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனங்களை வைத்து அரசியல் செய்வதும் இனிவரும் காலங்களில் எடுபடாது.

நிராயுதபாணியாக நிற்கும் அடிமை இனங்களை ஆயுதங்களை வைத்து பயமுறுத்தி ஆட்சி செய்யும் காலமும் மாறும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

US - Saudi relationship: 90 ஆண்டுகால உறவை Saudi prince Mohammed bin Salman முறிக்க நினைப்பது ஏன்?

 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/6/2023 at 18:14, குமாரசாமி said:

அமெரிக்காவுக்கு நாலுபக்கமும் அடி விழுகின்றது. அமெரிக்கா தனித்து வாழும்/இயங்கும் வல்லமையுடையது. ஆனால் அமெரிக்காவின் தாரக மந்திரத்துடன் சீவிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தனித்து இயங்க முடியுமா என்றால் நூறு வீதம் இல்லை.

சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் ஒழிந்தது போல் உலக பொலிஸ் தரமும் வெகு விரைவில் அடங்கிப்போகும்.

அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனங்களை வைத்து அரசியல் செய்வதும் இனிவரும் காலங்களில் எடுபடாது.

நிராயுதபாணியாக நிற்கும் அடிமை இனங்களை ஆயுதங்களை வைத்து பயமுறுத்தி ஆட்சி செய்யும் காலமும் மாறும்.

பரம எதிரி ஈரானின் முற்றத்தில் சவூதியின் வெளிநாட்டு அமைச்சர் இன்று.

அது சரி பிறிக்ஸில் சேர பிரான்ஸ் விண்ணப்பம் கேட்டிருக்காம். 

எனக்கு இவர்தான் நினைவுக்கு வருகிறார்.

sark.jpg

முன்நாள் பிரெஞ்சு ஜனாதிபதியுடன்.

கடாபியும் இப்படித்தான் உலகெல்லாம் ராஜ மரியாதையுடன் உலா வந்தவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, இணையவன் said:

எனக்கு இவர்தான் நினைவுக்கு வருகிறார்.

sark.jpg

முன்நாள் பிரெஞ்சு ஜனாதிபதியுடன்.

கடாபியும் இப்படித்தான் உலகெல்லாம் ராஜ மரியாதையுடன் உலா வந்தவர்.

நம்ப வைத்து கழுத்தறுப்பவர்கள் மேற்குலகினர். இந்த வரலாறுகள் தான் புட்டினை விழிப்படைய வைத்தது.
இதில் பிரத்தியேக விடயம் என்னவென்றால்  ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியாக பூத்துக்குலுங்கி வலம் வந்த சார்கோசியும் பச்சைக்கள்ளன் என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
அதே போல் இன்றைய அமெரிக்க ஜனாதிபதி பைடன் அவர்கள் உதவி ஜனாதிபதியாக இருந்த காலத்தில் உக்ரேனில் எரிபொருள் சம்பந்தமாக செய்த ஊழல்களும் கொஞ்ச நஞ்சமில்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

எனக்கு இவர்தான் நினைவுக்கு வருகிறார்.

sark.jpg

முன்நாள் பிரெஞ்சு ஜனாதிபதியுடன்.

கடாபியும் இப்படித்தான் உலகெல்லாம் ராஜ மரியாதையுடன் உலா வந்தவர்.

சவூதி US இடமுருந்து விலகத் தொடங்கியவுடன் இணையவனுக்கு கோபம் வந்துவிட்டது. அதனால் கடாபியைப் போல சவூதி இளவரசரையும் கொல்லப்பட  வேண்டும்/போகிறார் என முன்னெச்சரிக்கை செய்கிரார். 

😉

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.