Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் லண்டனில் இடம்பெற்ற விபத்தில் காலமானார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: NANTHINI

02 AUG, 2023 | 10:46 AM
image
 

மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் தனது 75ஆவது வயதில் காலமானார். 

இலண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் விமல் சொக்கநாதன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

அவர், தான் எழுதிய 'லண்டனிலிருந்து விமல்' என்ற நூலை அண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அதன் பின்னர், உலக அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீதின் 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' நூலின் அறிமுக விழா கொழும்பில் நடைபெற்றபோது, அந்நிகழ்வினை விமல் சொக்கநாதன் தலைமையேற்று நடத்தியதோடு, நூல் வெளியீட்டிலும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/161454

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நடை பயிற்சிக்காக சென்றபோது விபத்து

மாலை நேரத்தில் தனது வீட்டில் இருந்து நடை பயிற்சிக்காக சென்றபோது மின்வண்டி மோதியதால் துன்பியல் விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது.

ஆழ்ந்த அனுதாபங்கள். எண்பதுகளில்  மிகவும் பிரபலமான அழகுதமிழ் வாசிப்பில்  சிறந்த  பண்பாளர். 

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4322.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவரது பெயரை மறந்துவிட்டேன்.இப்போ தான் ஞாபகம் வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

Published By: NANTHINI

02 AUG, 2023 | 10:46 AM
மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் தனது 75ஆவது வயதில் காலமானார். 
1970  தொடக்கத்தில் எமது குடும்பம் மாத்தளையில் இருந்து கொழும்புக்கு இடம் மாறி வந்தபோது இவர்கள் வீட்டு அனெக்ஸ் இல் தான்  வாடகைக்கு இருந்தோம் (வெள்ளவத்தை பெனிகுக் லேனில் உள்ள கனால் ஒழுங்கை). அப்போதே சட்டப்படிப்பு முடித்து திருமணம் ஆகி தனியாக போய்விட்டார். அனால் அடிக்கடி வீடு வருவார். பெற்றோரின் வேண்டுகோளுக்காகத்தான் சட்டம் படித்தார். 
 
அவரும் அவரது தங்கை யோகா தில்லைநாதனும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சிறுவர் நிகழ்ச்சி ஒளியும் ஒலியும் என பல நிகழ்ச்சிகளை தயாரித்து நடத்தினர்.நானும் அவர்களுடன் சிலதடவை சென்று சிறுவர் நிகழ்ச்சியில் கதையும் வாசித்து இருக்கிறேன். அவரது தம்பி ஒரு வைத்தியர் 60 வயதில் இறந்துவிட்டார். அவரது மனைவி பத்மாவும் ஒரு வழக்கறிஞர். லண்டனில் ஒரு சட்ட நிறுவனம் ஒன்றை இருவரும் நடத்தி வந்தார்கள். மிகவும் பெருந்தன்மையான நல்ல ஒரு மனிதர். 
 
அவரது தம்பி இறந்தபோது ஆங்கிலத்தில் இவ்வாறு எழுதியிருந்தார். :
My beloved Brother Dr RAVE SOCKANATHAN departed in October 2011 in Colombo, Now walking amongst Gods and Holy Saints on streets strewn with Beautiful Flowers. 
இன்று அவரும் கடவுளுடனும், ஞானிகளுடனும் பூக்கள் தூவிய வீதிகளில் தம்பியுடன் நடந்து சென்றுகொண்டிருப்பார். may his sould rest with God🌹🙏🌹
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த திரு விமல் சொக்கநாதன் அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.  அவரது குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.  இளம் வயதில் அவர் இலங்கை வானொலியில் நடத்திய வாலிபர் வட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாசகர் கடிதங்களை வாசித்திருக்கிறேன்.  ஒன்றும் கொண்டு போகாவிட்டாலும் எதையாவது தந்து வாசிக்கச் சொல்லி ஊக்குவிப்பார்.  அதன் பிறகு அவருடனான தொடர்பு அறுந்து போய்விட்டது.  தற்போது அவரது மறைவையிட்டு மிகவும் வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலமானார்: ‘ஒலிபரப்புத் துறையின் ஜேசுதாஸ்’ விமல் சொக்கநாதன்

விமல் சொக்கநாதன்

பட மூலாதாரம்,WIMAL SOCKANATHAN

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பூபாலரட்ணம் சீவகன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

லண்டன் பிபிசியின் தமிழோசை மற்றும் இலங்கை வானொலி மாத்திரமன்றி புலம்பெயர் நாடுகளின் பல தனியார் தமிழ் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் பணிபுரிந்த மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் தனது 79-ஆவது வயதில் லண்டனில் விபத்து ஒன்றில் காலமானார்.

ஒரு சட்டத்தரணியான இவர் பகுதி நேரமாகவும் முழுநேரமாகவும் சுமார் 70 வருடங்கள் ஒலிபரப்புத்துறையில் செயற்பட்டுள்ளார்.

குறைந்தபட்சம் 80கள் வரையிலுமாவது இலங்கையிலும் தமிழகத்தின் தென்பகுதி கிராமங்களிலும் உள்ள வானொலி ரசிகர்களை தன்வசம் கட்டிப்போட்டு வைத்திருந்தது இலங்கை வானொலி. தனியார் வானொலிகளும் தொலைக்காட்சிகளும் இல்லாத அந்தக் காலங்களில் தெற்காசிய நாடுகளைச்சேர்ந்த வானொலி ரசிகர்களுக்கு இலங்கை வானொலி ஒரு வரப்பிரசாதம்.

இலங்கை வானொலியில் அதிகம் ஒலிபரப்பாகும் தென்னிந்திய சினிமாப்பாடல்கள் மாத்திரமல்ல, அந்த வானொலியின் பல ஒலிபரப்பாளர்களின் குரல்களும் அந்த நாட்களில் ரசிகர்களை மிகக்கவர்ந்திருந்தன. இவற்றோடு இலங்கை வானொலியின் நாடகங்களையும் குறிப்பிட்டுச்சொல்ல முடியும்.

அந்த நாட்களில் இலங்கை வானொலியில் மிகப்பிரபலமான ஒரு நிகழ்ச்சி - இசையும் கதையும்.

 

ஒரு சிறிய கதையை அறிவிப்பாளர் படிக்க, இடையிடையே அந்தக்கதையின் சம்பவங்களுக்கு பொருத்தமான தமிழ்த்திரைப்படப் பாடல்களையும் பொருத்தி இசையும் கதையும் தயாரிக்கப்பட்டிருக்கும். எழுபதுகளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இசையும் கதையும் நிகழ்ச்சியை அறிவித்து, கதை சொல்லி நடத்திய இருவர் இன்றுவரை தமிழ் வானொலி உலகில் பிரபலமானவர்கள். அதில் ஒருவர் அப்துல் ஹமீத், அடுத்தவர் விமல் சொக்கநாதன்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட விமல் சொக்கநாதன் 1959 ஆம் ஆண்டே ஒரு சிறார் கலைஞராக, இலங்கை வானொலியின் “சிறுவர் மலர்” நிகழ்ச்சி மூலம் வானொலியில் அறிமுகமாகிவிட்டதாகக் கூறுகிறார் அவரது வானொலிச்சகாவான அப்துல் ஹமீத்.

இலங்கையில் சட்டம் பயிலும் மாணவராக வானொலியின் தேசிய சேவையில் பகுதி நேரக்கலைஞராக இணைந்த விமல், சட்டக்கல்வியை முடித்த பின்னரும் 1971 இல் இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் முழு நேரத்தயாரிப்பாளராக இணைந்து கொண்டார்.

அவர் காலத்தில் அறிமுகமான வாலிப வட்டம் நிகழ்ச்சியே விமல் சொக்கநாதனின் மிகச்சிறந்த நிகழ்ச்சி என்று கூறும் ஹமீத், அந்த நிகழ்ச்சியின் மூலம் இலங்கைத்தீவின் மூலை முடுக்குகளில் எல்லாம் இலைமறை காயாக இருந்த எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு அவர் வாய்ப்பு வழங்கி ஊக்குவித்ததாக பாராட்டுகிறார்.

வானொலிச்சகாவான அப்துல் ஹமீத்

பட மூலாதாரம்,VIMAL CHOKKANATHAN

 
படக்குறிப்பு,

இலங்கை வானொலியின் “சிறுவர் மலர்” நிகழ்ச்சி மூலம் வானொலியில் விமல் சொக்கநாதன் அறிமுகமாகிவிட்டதாகக் கூறுகிறார் அவரது வானொலிச்சகாவான அப்துல் ஹமீத்

மிகக்குறைந்த காலமே இலங்கை வானொலியில் இருந்தாலும் மிகப்பெரிய அளவில் நேயர்களை தனது குரலால் கவர்ந்தவர் விமல் சொக்கநாதன் என்கிறார் இலங்கை வானொலியின் முன்னாள் பிரதிப்பணிபாளர் நாயகங்களில் ஒருவரான ஒலிபரப்பாளர் வி. என். மதியழகன். குறிப்பாக அவரது குரலாலும் முக அழகாலும் தேர்ந்தெடுக்கும் பாடல்களாலும் அவருக்கு பெண் ரசிகைகள் அதிகம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

விமல் சொக்கநாதனின் சங்கநாதம், இசையும் கதையும் போன்ற நிகழ்ச்சிகளும் வானொலி ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலமானவை. இசையும் கதையும் நிகழ்ச்சியில் தமது கதையும் இடம்பெறவேண்டுமெ என்பதற்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் எழுத்தாளரும் உண்டு.

தனது இசையும் கதையும் நிகழ்ச்சி கதாபாத்திரமே கதை சொல்லும் பாணியிலும், விமல் சொக்கநாதனின் நிகழ்ச்சியில் மூன்றாம் நபர் கதை சொல்லும் பாணியிலும் அமைந்திருக்கும் என்று கூறும் ஹமீத், தனது நண்பரான விமல் சொக்கநாதனை “இனிமையான நபர்” என்று வர்ணிக்கிறார்.

சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் லண்டனில் குடியேறிய விமல் சொக்கநாதன் அங்கு தனது சட்டத்தரணியான துணைவியார் சகிதம் ஒரு சட்ட நிறுவனத்தை நடத்தி வந்திருந்தார். இருந்தபோதிலும் லண்டன் பிபிசியின் தமிழோசையில் பகுதி நேரமாக நிகழ்ச்சி வழங்குனராகவும் பணியாற்றி வந்தார். இலங்கை வானொலியில் பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கிவந்த விமல் சொக்கநாதனுக்கு பிபிசியில் செய்தி ஒலிபரப்புப்பணி. குறிப்பாக சிறந்த அறிவிப்பாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் தனது சக ஒலிபரப்பாளர்களால் அங்கு அவர் பாராட்டப்பட்டார்.

 

தனது சேவையில் விமல் சொக்கநாதனின் பணியை பின்வருமாறு நினைவுகூருகிறார் பிபிசி தமிழ் பிரிவின் முன்னாள் ஆசிரியர் திருமலை மணிவண்ணன்.

“பிபிசி தமிழ் ஆசிரியராக, நான், விமல் சொக்கனாதனின் செய்தி வாசிப்பாளர் பணியை சுமார் 17 ஆண்டுகள் பார்த்திருக்கிறேன். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய விமல், லண்டன் வந்த பின், முழு நேர வழக்கறிஞராக இருந்தாலும், ஒலிபரப்புத்துறையில் இருந்த அதீத பற்று காரணமாக, பிபிசி தமிழோசை வானொலிச் சேவையில் பகுதி நேர வாசிப்பாளராக வந்து பணியாற்றினார். மயிலிறகை வருடுவது போன்ற மிருதுவான குரல் அவருக்கு. ஒலிபரப்புத்துறையின் ஜேசுதாஸ் என்று அவரை நான் சொல்வதுண்டு . செய்திகளை வாசிப்பதில் அவர் காட்டிய நேர்த்தி காரணமாக அவருக்கு ஏராளமான விசிறிகள் இருந்தனர். அவர் விபத்தில் இறந்தது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம்.” என்றார் மணிவண்ணன்.

லண்டனில் இலங்கைத் தமிழரின் இசை, நாட்டிய மேடைகளில் விமல் சொக்கநாதன் ஒரு நிகழ்ச்சி வழங்குனராக பிரபலம். அவரது இசை, நடன அறிவு அவருக்கு உதவியது எனலாம். அத்தோடு சாஸ்திரிய இசையின் ஆழமான ரசிகராகவும் அவர் திகழ்ந்தார்.

இலங்கையில் ஒலிபரப்பாளராக மாத்திரம் திகழ்ந்த விமல் சொக்கநாதன் பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்னர் பல்துறை ஊடகங்களிலும் பங்களிப்புகளை செய்திருக்கிறார். பல செய்தித்தாள்களில் பல விடயங்கள் குறித்து ஜனரஞ்சக தொடர் கட்டுரைகளை எழுதிவந்த அவர், வானொலி அறிவிப்பாளர்களுக்கான ஒரு வழிகாட்டி நூலையும் எழுதியிள்ளார். ஊடகர்களுக்கான பல பயிற்சிகளை வழங்கியுள்ளார்.

அண்மையில் தான் பத்திரிகைகளில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல்கள் இரண்டை வெளியிட்டு வைத்தார். இதற்கான நிகழ்வுகளை இலங்கையிலும் சென்னையிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் நடத்திய அவர், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களிலும் அவற்றை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். ஆனால், அதற்கு முன்னதாகவே லண்டனில் விபத்து ஒன்றில் மரணமடைந்தார்.

பல்துறை ஊடகராகத் திகழ்ந்த அவர் தனது அங்கதப்பேச்சுகள் ஊடாக தனது சக ஊடகர்களால் நினைவுகூரப்படுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/c3g4309vlwro

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.......! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.