"சோம்பேறித்தனம்" - இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி பற்றி பாகிஸ்தானில் விவாதிக்கப்படுவது என்ன?
பட மூலாதாரம்,Reuters
படக்குறிப்பு,சூப்பர் 8 போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அபிஷேக் சர்மா வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
4 மணி நேரங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
டி-20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்ததையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் நிபுணர்கள் இது குறித்துத் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகப் பயனர்களும் இந்தப் போட்டியைப் பற்றி வெளிப்படையாக விவாதித்து வருகின்றனர். தென்னாப்பிரிக்காவின் சிறப்பான ஆட்டம், இந்திய அணியின் சராசரி செயல்பாடு மற்றும் அபிஷேக் ஷர்மாவின் மோசமான ஃபார்ம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்தப் போட்டிக்கு முன்னதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட விளம்பரம் ஒன்று இப்போது நீக்கப்பட்டது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
போட்டிக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவை தென்னாப்பிரிக்கா மோசமாகத் தோற்கடித்தது. பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என மூன்று துறைகளிலும் தென்னாப்பிரிக்கா சிறப்பாகச் செயல்பட்டது" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சைச் சிறப்பானது என்று குறிப்பிட்டதோடு, இந்தியாவின் பந்துவீச்சு பலவீனமாக இருப்பதாகவும், அதில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
முன்னாள் பந்துவீச்சாளர் இர்பான் பதான் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்திய அணி ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் பேட்டிங்கில் நாம் போராடுவதை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த உலகக் கோப்பை முழுவதும் பேட்டிங் வரிசை தடுமாறி வருகிறது," என்று பதிவிட்டுள்ளார்.
ஆமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இதில் டேவிட் மில்லர் 35 பந்துகளில் அதிரடியாக விளையாடி 63 ரன்கள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பாகிஸ்தானில் என்ன விவாதிக்கப்படுகிறது?
பட மூலாதாரம்,CPL T20/CPL T20 via Getty Images
படக்குறிப்பு,பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தை கடுமையாக விமர்சித்தார்
இந்தத் தொடரின் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக, முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், அபிஷேக் சர்மாவை ஒரு 'ஸ்லாகர்' என்று அழைத்திருந்தார்.
ஜியோ நியூஸ் நிகழ்ச்சியில் முகமது அமீர் கூறுகையில், "அபிஷேக் சர்மா ஒரு சரியான பேட்டர் அல்ல, அவர் ஒரு ஸ்லாகர்," என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்திய அணி இந்தத் தொடரின் அரையிறுதிக்கு கூட தகுதி பெறாது என்றும் அவர் கூறியிருந்தார்.
மேலும் கூறுகையில், "அவர் பந்தின் திசையை நோக்கி விளையாடுவதில்லை, மட்டையை வெறுமனே சுற்றுகிறார். தட்டையான ஆடுகளங்களில் அவர் சிறப்பாக ஆடுகிறார். ஆனால் தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் பவுன்சி பிட்ச்களில் அவர் சோதிக்கப்படவில்லை. அங்கு அவர் சிறப்பாக விளையாடும்போதுதான், நான் அவரை ஒரு பேட்ஸ்மேனாகக் கருதுவேன்" என்றார்.
இருப்பினும், அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது ஷெஷாத், "நான் அபிஷேக்கை ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகக் கருதுகிறேன்" என்று கூறியிருந்தார்.
நேற்றைய போட்டிக்குப் பிறகு முகமது அமீர் மீண்டும் கூறுகையில், "இந்தியா சிறப்பாக விளையாடும்போது நாம் நல்ல விஷயங்களைச் சொல்கிறோம். ஆனால் அங்கிருந்து நமக்கு வசவுகள்தான் கிடைக்கின்றன. தென்னாப்பிரிக்கா சிறந்த அணியாகச் செயல்பட்டது," என்றார்.
இந்தத் தொடரில் அபிஷேக் சர்மா தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் டக் அவுட் ஆனார். நேற்றைய போட்டியில் அவர் அதிக ரன்கள் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் வெறும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
போட்டிக்குப் பிறகு முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார்.
அதில், "முகமது அமீர், முதலில் நீங்கள் களத்தில் இந்திய அணியின் அதிர்ஷ்டத்தை சிதைத்தீர்கள், இப்போது ஸ்டுடியோவில் இருந்துகொண்டு அவர்களின் அதிர்ஷ்டத்தை சிதைக்கிறீர்கள். அவர்களைச் சற்று மூச்சு விட விடுங்கள். தென்னாப்பிரிக்கா கடந்த டி20 உலகக் கோப்பையை எங்கு முடித்ததோ, அங்கிருந்தே மீண்டும் தொடங்கியுள்ளது. அது ஒரு சிறந்த அணி. டாப் ஆர்டர் தோல்வியடைந்தபோது, லோயர் ஆர்டர் அற்புதங்களைச் செய்தது மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து சோயப் அக்தர் கூறுகையில், "எண்ணங்களை விட ஒழுக்கமே மேலானது என்பதை தென்னாப்பிரிக்கா நிரூபித்துள்ளது. இத்தகைய இலக்குகளை வெறும் சோம்பேறித்தனத்தால் எட்ட முடியாது. இன்னிங்ஸை கட்டமைக்க வேண்டும். மில்லர் மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோரிடமிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்," என்றார்.
சூர்யகுமார் யாதவ் பேட்டி
பட மூலாதாரம்,ICC/ICC via Getty Images
படக்குறிப்பு,நேற்றைய போட்டியில் அபிஷேக் மற்றும் திலக் வர்மா இருவருமே மோசமாக விளையாடியதை அடுத்து , சூர்யகுமார் யாதவின் இந்த கருத்தைச் சுட்டிக்காட்டி சமூக ஊடகப் பயனர்கள் அவர்களைக் கேலி செய்து வருவதுடன், 'தலைக்கனம் பிடித்தவர்கள்' என்றும் விமர்சித்து வருகின்றனர்.
போட்டிக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பத்திரிகையாளர் ஒருவர் இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவிடம், "இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. எனவே சஞ்சு சாம்சன் அணிக்குள் வர வாய்ப்புள்ளதா?" என்று கேட்டார்.
இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த சூர்யகுமார் யாதவ், "அப்படியென்றால் அபிஷேக் சர்மாவுக்குப் பதிலாக அவரை விளையாட வைக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். திலக் வர்மாவுக்குப் பதிலாக அவரை விளையாட வைக்க வேண்டும் என்கிறீர்கள்" எனக் கூறிவிட்டு மீண்டும் சிரிக்கத் தொடங்கினார்.
நேற்றைய போட்டியில் அபிஷேக் மற்றும் திலக் வர்மா இருவருமே மோசமாக விளையாடியதை அடுத்து , சூர்யகுமார் யாதவின் இந்த கருத்தைச் சுட்டிக்காட்டி சமூக ஊடகப் பயனர்கள் அவர்களைக் கேலி செய்து வருவதுடன், 'தலைக்கனம் பிடித்தவர்கள்' என்றும் விமர்சித்து வருகின்றனர்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளம்பரம்
பட மூலாதாரம்,ICC/ICC via Getty Images
படக்குறிப்பு,வெற்றிக்குப் பிறகு தென்னாப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவை சந்திக்கிறார்.
ஒரு விளம்பரத்தின் காரணமாகவும் இந்த போட்டி சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தொடரின் ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வெளியான அந்த விளம்பரத்தில், இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளைச் சேர்ந்த போலி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அந்த விளம்பரத்தில், இரு அணிகளின் வீரர்களும் ஒரு ஹோட்டலில் ஒரே மேஜையில் அமர்ந்திருப்பது போலக் காட்டப்படுகிறது.
அப்போது இந்திய வீரர் அங்கிருக்கும் ஒரே ஒரு கப்கேக்கை நோக்கிச் செல்கிறார், ஆனால் தென்னாப்பிரிக்க வீரர் ஓடிச் சென்று அந்த கப்கேக்கை எடுத்துக்கொண்டு இந்திய வீரரிடம் "சாரி" என்று கூறுகிறார்.
இதற்கு இந்திய வீரர், "உங்களுக்குத் தான் சாரி!" என்று பதிலளிக்கிறார்.
தென்னாப்பிரிக்க வீரர் "ஏன்?" என்று கேட்க, 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நாங்கள் உங்களைத் தோற்கடித்தோம், அதனால் சாரி என்று இந்திய வீரர் அவருக்கு நினைவுபடுத்துகிறார்.
தொடர்ந்து அந்த இந்திய வீரர், "நாங்கள் கோப்பையை வென்றோம், வரவிருக்கும் சூப்பர்-8 போட்டியிலும் வெற்றி பெறுவோம், எனவே இந்த கப்கேக்கை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்" என்கிறார்.
இதைக் கேட்டதும் தென்னாப்பிரிக்க வீரருக்குத் தொண்டையில் கேக் சிக்கிக்கொள்கிறது, அப்போது இந்திய வீரர் "ஓ, ஹோ! சோக்கிங்!" என்று கூச்சலிடுகிறார். (பல முக்கியத் தொடர்களின் முக்கியமான போட்டிகளில் தோல்வியடைவதால், கிரிக்கெட் உலகில் தென்னாப்பிரிக்க அணி பெரும்பாலும் "சோக்கர்ஸ்" என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.)
சூப்பர்-8 போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியடைந்த உடனேயே, இந்த விளம்பரம் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வெளியிடப்படவில்லை.
ஆனால் இந்த விளம்பரம் சமூக ஊடகங்களில் வைரலாகியதுடன், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கோபமும் வெளிப்பட்டது.
பல பயனர்கள் இந்த விளம்பரம் தென்னாப்பிரிக்காவை 'இழிவுபடுத்துவதாக' கூறினர்.
விளம்பரத்தில் தென்னாப்பிரிக்கா 'சோக்கர்' என்று விவரிக்கப்பட்டது, ஆனால் இந்தியாதான் 'சோக்கர்' என்று நிரூபணமாகிவிட்டது என்று சிலர் கூறினர். "தலைக்கனம் கொள்வது சரியல்ல என்பதை இந்தச் சம்பவம் நமது விளம்பரதாரர்களுக்குக் கற்பிக்கக்கூடும்," என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c3rz9gnjj11o
By
ஏராளன் ·
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.