Jump to content

புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழரசியலில் முதலீடு செய்யக்கூடாதா? - நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழரசியலில் முதலீடு செய்யக்கூடாதா? - நிலாந்தன்

 

438796550_122147449748154906_15547973386

 

தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தாயகத்தில் கட்சிகளுக்குள் காணப்படும் அணிகளை புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பும் பிரதிபலித்தது. இந்நிலையில் தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் இரண்டு அணிகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர் தரப்பில் ஆதரவு அணிகள் உண்டு. எனினும் சிறீதரன் அணிக்கு ஆதரவானவர்கள் தனக்கு எதிராகச்  செயல்படுவது குறித்து சுமந்திரன் அதிகம் எரிச்சலடைந்து இருப்பதாகத் தெரிகிறது. அதன் விளைவுதான் அவர் அண்மையில் வழங்கிய ஒரு நேர்காணல் ஆகும். ” கட்சிகள் விற்பனைக்கு உண்டு உங்களுக்கு வேண்டுமா? ” என்று என்று ஒரு புலம்பெயர்ந்த தமிழ் முதலாளியின் சார்பாக பேசிய ஒருவர் தன்னிடம் கேட்டதாக சுமந்திரன் அந்த நேர்காணலில் கூறியிருக்கின்றார். புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகள் சிலர் கட்சிக்குள் செல்வாக்கு செலுத்த முற்படுவதை சுமந்திரன், கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார். தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஓர் அரசியல்வாதி புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பின் மீது இவ்வளவு கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருப்பது இதுதான் முதல் தடவை.

சுமந்திரன் கூறுவதுபோல புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்களில் ஒருவர் இரண்டு சிங்களக் கட்சிகளின் பதிவுகளை வாங்கி இருப்பதாக ஒரு தகவல் ஏற்கனவே வெளிவந்தது.  அந்த முதலீட்டாளரின் அலுவலர் என்று கருதப்படும் ஒருவர் யாழ்ப்பாணத்தில் சில கட்சித் தலைவர்களை சந்தித்து உரையாடியும் இருக்கிறார். தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த போகிறோம் அதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவை வெல்ல வைக்கப் போகிறோம் என்றும் அவர் கதைத்திருக்கிறார். ஏனைய கட்சிகளை ஒருங்கிணைப்பது அவருடைய நோக்கம் என்று ஊகிக்கப்பட்டது. எனினும் அந்த முயற்சி பின்னர் தொடர்வதாகத் தெரியவில்லை.

இவ்வாறு கட்சிகளை வாங்குவது; கட்சிப் பிரமுகர்களுக்கு நிதி உதவி செய்வது; கட்சிப் பிரமுகர்களை புலம்பெயர்ந்த நாடுகளுக்கு அழைத்துக் கொண்டாடுவது; அல்லது புலம்பெயர்ந்த நாடுகளுக்கு வரும் கட்சி பிரமுகர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்வது; தாயகத்தில் நிகழும் போராட்டங்களுக்கு நிதி அனுசரனை புரிவது; வெளிநாடுகளில் பிரகடனங்களை வெளியிடுவது… போன்ற பல்வேறு வழிகளிலும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தாயகத்து அரசியலின் மீது செல்வாக்குச் செலுத்த முற்படுகின்றது.

இது தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல சீக்கியர்கள், சில ஆப்பிரிக்க சமூகங்கள், ஆர்மீனியர்கள் போன்ற புலப்பெயர்ச்சி நடந்த எல்லாச் சமூகங்களிலும் இது ஒரு அரசியல் யதார்த்தம். புலம்பெயர்ந்த யூதர்கள் கடந்த நூற்றாண்டில், இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியதோடு நவீன அரசியலில் புலம்பெயர் சமூகங்களின் யுகம் துலக்கமான விதங்களில் மேலெழுந்து விட்டது. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை ஈழப் போரின் காசு காய்க்கும் மரமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் காணப்பட்டார்கள். 2009க்கு பின்னரும் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து தொடர்ந்து போராடுவது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம்தான். நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் கூர்முனை போல காணப்படுவது அவர்கள்தான். ஐநா மைய அரசியலில் அவர்கள்தான் பிரதான செயற்பாட்டாளர்கள்.

அதுமட்டுமல்ல தாயகத்தில் உள்ள கட்சிகளுக்கும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் நிதி உதவிகளைச் செய்து வருகின்றது. 2009 க்கு பின் தமிழ் மக்கள் தமது சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டு எழுவதற்கு புலம்பெயர்ந்த தமிழ் சமூகமே உதவியது. நிதி ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தாயகத்தில் உள்ள மக்களை தோல்விகளிலிருந்தும் காயங்களில் இருந்தும் அவமானத்திலிருந்தும் இழப்புணர்விலிருந்தும் மீட்டெடுத்ததில் புலம்பெயர்ந்த தமிழ்ச்  சமூகத்துக்குக் கணிசமான பங்கு உண்டு. கடந்த 15 ஆண்டுகால அரசியலில் தாயகத்தில் இடம்பெற்ற பெரும்பாலான எழுச்சிகள் போராட்டங்களின் பின்னணியில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமே உண்டு. எழுக தமிழ், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம், பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்… போன்ற எல்லாவற்றின் பின்னணியிலும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் உண்டு.

அதுபோல 2009 க்கு முன்பு சுனாமியின் தாக்கத்திலிருந்து தாயகம் மீள்வதற்கும் 2020 க்கு பின் பெருந்தொற்று நோய்க்காலத்திலும் அண்மை ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடியிலும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் பெருமளவுக்கு உதவியது.

அதேசமயம் தாயகத்து அரசியல் நிலைமைகளின் மீது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ரிமோட் கண்ட்ரோல் செய்ய முற்படுகிறது என்ற குற்றச்சாட்டிலும் உண்மைகள் உண்டு. கள யதார்த்தத்துக்கு வெளியே பாதுகாப்பாக இருந்து கொண்டு, தாயகத்தில் தன்னியல்பாக எழுச்சி பெறும் செயற்பாட்டாளர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படுவது; காணாமல் ஆக்கப்பட்ட வர்களுக்காகப் போராடும் சங்கங்களுக்கிடையில் பிரிவுகளை ஏற்படுத்தியது; பல்கலைக்கழக மாணவர்களும் உட்பட தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களை ரிமோட் கொண்ட்ரோல் செய்ய முற்படுவது; தாயகத்தோடு கலந்தாலோசிக்காமல் ஈழத் தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரகடனங்களை தயாரிப்பது… போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் புலம்பெயர்ந்த தரப்பில் உள்ள சில தனி நபர்களின் மீதும் சில நிறுவனங்களின் மீதும் உண்டு.

சுமந்திரன் அந்த நேர்காணலில் கூறுவது போல புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பு தீவிரமான அரசியல் நிலைப்பாடுகளை எடுக்கின்றது. அதற்கு முதலாவது காரணம், தாயகத்தை விட்டுப் பிரிந்து வாழ்வதால் ஏற்படும் பிரிவேக்கம்.  இரண்டாவது காரணம், புலம்பெயர்ந்த நாடுகளில் காணப்படும் ஒப்பீட்டளவில் சுதந்திரமான அரசியல் சூழல். மூன்றாவது காரணம் சீனச்சார்பு இலங்கை அரசாங்கங்களின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முற்படும் மேற்கத்திய நாடுகள் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களை மறைமுகமாக ஊக்குவிப்பது, வளர்த்து விடுவது.

இது போன்ற காரணங்களால் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் தாயகத்தை விடவும் அதிகம் உணர்ச்சிகரமாகவும் எழுச்சிகரமாகவும் சுதந்திரமாகவும் போராடக் கூடியதாக இருக்கின்றது. அவ்வாறான தீவிர நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் சுமந்திரனை தேசிய நீக்கம் செய்யும் ஓர் அரசியல்வாதியாகப் பார்க்கிறார்கள். அவர் வெளி நாடுகளுக்கு வரும்போது அவருக்கு எதிர்ப்புக்கு காட்டுகிறார்கள். இப்பொழுது கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவில் அவர்கள் சுமந்திரனை ஒரு வில்லனாகப் பார்க்கிறார்கள். கட்சி சுமந்திரனை நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடும் ஆவேசத்தோடும் காணப்படுகிறார்கள். இவற்றால் சுமந்திரன் எரிச்சலடைந்ததன்  விளைவே மேற்சொன்ன நேர்காணல் ஆகும்.

புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் நாட்டுக்குள் முதலீடு செய்ய வரும்பொழுது அரச புலனாய்வுத்துறை அவர்களை கண்காணிக்கும். அக் கண்காணிப்பை மீறி அவர்கள் எதையும் செய்ய முடியாது. அவ்வாறு புலனாய்வுத் துறையின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் தமிழ் முதலீட்டாளர்கள் தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கிறார்கள் என்று எடுத்த எடுப்பில் தீர்ப்புக் கூறுவது சரியா? இதே விதமான குற்றச்சாட்டுக்கள்தான் தடுப்பிலிருந்து வந்த முன்னாள் இயக்கத்தவர்கள் மீதும் வைக்கப்பட்டன. 2009க்குப் பின்னரும் புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் நாட்டில் சுதந்திரமாக முதலீடு செய்வதில் உள்ள அரசியல் ராணுவ வரையறைகளை அது உணர்த்துகின்றது. அது இன ஒடுக்குமுறையின் ஒரு பகுதி தான். இந்த இடத்தில் ஒடுக்குமுறைக்கு எதிராகத்தான் கதைக்கலாமே தவிர ஒடுக்கப்படும் தரப்பு புலனாய்வுத் துறையின் முகவராக செயல்படுகிறது என்ற பொருள்பட யாரும் கதைக்க முடியாது.

தீவிரமான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை எடுத்தால் அது தென்னிலங்கையில் இனவாதத்தைத் தூண்டும் என்பது சம்பந்தர் வழமையாகக் கூறும் ஒரு வாதம். இது எப்படியிருக்கிறது என்று சொன்னால், குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் ஒரு பெண்ணைப் பார்த்து நீ வாய் காட்டியபடியால்தான் உன்னுடைய கணவன் உன்னைத்  தாக்குகிறான் என்று கூறுவதைப் போன்றது. இங்கு குடும்ப வன்முறை பிழை என்ற நிலைப்பாட்டைதான் முதலில் எடுக்க வேண்டும். தமிழ் மக்கள் இப்பொழுது தனிநாடு கேட்கவில்லை. தாங்கள் ஒரு தேசமாக இருப்பதற்குரிய அடிப்படைகளைத் தான் கேட்கிறார்கள். தாங்கள் ஒரு தேசமாக இருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கேட்பது குற்றமா? அப்படிக் கேட்டால் அது சிங்கள இனவாதிகளை உசுப்பேத்தும் என்று சொன்னால் சிங்கள இனவாதிகளை உசுப்பேத்தாமல் இருக்க எப்படிப்பட்ட அரசியலை தமிழ் மக்கள் முன்னெடுக்க வேண்டும்? அதற்கு பெயர்தான் நல்லிணக்கமா?

கடந்த 15 ஆண்டுகளிலும் சம்பந்தர் அப்படிப்பட்டதோர் அரசியலுக்குத்தான் தலைமை தாங்கினார். 2015 ஆம் ஆண்டிலிருந்து ஐநாவின் நிலை மாறுகால நீதிக்கான தீர்மானத்தின் பிரகாரம் சம்பந்தர் ரணில் விக்கிரமசிங்கவோடு இணைந்து ஒரு புதிய யாப்பை உருவாக்க முயற்சித்தார். அதற்காக அவர் அதிகமாக விட்டுக் கொடுத்தார். அந்த உத்தேச யாப்பின் இடைக்கால வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா என்ன சொன்னார் தெரியுமா? சம்பந்தரைப் போல விட்டுக் கொடுக்கும் ஒரு தலைவரை இனிக் காண முடியாது. சம்பந்தரின் காலத்தில் ஒரு தீர்வைப் பெறவில்லை என்றால் பிறகெப்பொழுதும் பெற முடியாது என்ற பொருள்பட  டிலான் பெரேரேரா நாடாளுமன்றத்தில் பேசினார். அதில் உண்மை உண்டு சம்பந்தர் அந்தளவுக்கு அடியொட்ட வளைந்து கொடுத்தார். ஆனால் அந்த விட்டுக்கொடுப்பின் விளைவாக கூட்டமைப்பு எதைப் பெற்றது?

நிலைமாறகால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேன அதைக் காட்டிக்கொடுத்தார். 2018, ஒக்டோபர் மாதம் அவர் ஒரு யாப்புச்சதிப்  புரட்சியில் ஈடுபட்டு நிலைமாறு கால நீதியைத் தோற்கடித்தார். இது தொடர்பாக 2021ஆம் ஆண்டு வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பின்போது சுமந்திரன் பின்வரும் பொருள்படக் கூறினார்…  கடந்த ஆறு ஆண்டுகளாக (அதாவது 2015 இலிருந்து) ஒரு பரிசோதனையை முன்னெடுத்தோம். அதில் தோற்று விட்டோம்… என்று. அதுதான் உண்மை. சம்பந்தர் அந்தளவுக்கு விட்டுக் கொடுத்தும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தை மகிழ்விக்க முடியவில்லை.

அதுதான் இலங்கைத்தீவின் யதார்த்தம். இப்படிப்பட்டதோர் பின்னணியில் ஒடுக்குமுறையைத்தான் விமர்சிக்க வேண்டுமே தவிர ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் மக்களின் தீவிரத்தையல்ல. இக்கட்டுரையில் முன் சொன்ன உதாரணத்தைப் போல குடும்ப வன்முறை சரியா பிழையா என்ற நிலைப்பாடு தான் இங்கு முக்கியம். மனைவி வாய் காட்டினாரா அல்லது ருசியாகச் சமைக்க வில்லையா என்பது இங்கு விவாதமே அல்ல.

எனவே புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பில் ஒரு பகுதி தீவிரமான நிலைப்பாடுகளை எடுக்கிறது என்பதற்காகவோ அல்லது தாயகத்து அரசியலின் மீது அளவுக்கதிகமாக செல்வாக்கு செலுத்த விளைகிறது என்பதற்காகவோ அவர்களை தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குபவர்கள் என்று கூறுவது யாருக்கு இறுதியாகச் சேவகம் செய்யும்?

தமிழ்த் தேசிய அரசியல் சமூகம் என்பது புலம்பெயர்ந்த தமிழர்களையும் உள்ளடக்கியதுதான். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாயகத்தின் நீட்சியும் அகட்சியும் தான். அவர்களும் ஈழத் தமிழ் ரத்தம்தான். ஈழத் தமிழர்களுக்கு இரண்டு சிறகுகள் உண்டு. ஒன்று தமிழகம் மற்றது புலம்பெயர்ந்த தமிழ் சமூகம். இதில் ஒரு சிறகை வெட்டினாலும் ஈழத் தமிழர்கள் பறக்க முடியாது.

தேர்தல் காலங்களில் கட்சிக்குக் காசை வாரி வழங்கியது போலவே கட்சிக்குள் அணிகள் தோன்றும் போது அந்த அணிகளையும் புலம்பெயர்ந்த தமிழர்கள் கையாளப் பார்ப்பார்கள் என்பது ஒர் அரசியல் யதார்த்தம். கட்சி தனக்குள் உடையும் பொழுது புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டுமல்ல அரச புலனாய்வுத் துறையும் அதற்குள் புகுந்து விளையாடும். எனவே இதுவிடயத்தில் முதலில் விமர்சிக்க வேண்டியது புலம்பெயர்ந்த தமிழர்களை அல்ல. மாறாக, தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒரு மூத்த கட்சியை இரண்டாக உடைத்த கட்சிக்காரர்களைத் தான் விமர்சிக்க வேண்டும்.
 

https://www.nillanthan.com/6725/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கனடாவில் இருந்து வாங்கிக் கொண்டு போன காசுக்கே கணக்குக் காட்டவில்லை...இப்படி எத்தினை பில் இருக்குது...புதுசாக காசைக் கொடுத்து தலையிடி உண்டாக்க வேண்டாம் என்றுதான் சொல்லுறார்...அல்லது தன் தலைவரா வந்தாப்பிறகு தரச்சொல்லி சொல்லுறாரோ தெரியாது...எதுக்கும் பும்பெயர்ஸ்  யோசிச்சு செய்யுங்கோ..

Edited by alvayan
எழுத்துப்பிழை
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

புலம்பெயர் தமிழர்கள் என்பது வியாபாரிகளால் ஆனது அல்ல. ஆனால் கூட்டமைப்பு விசேடமாக தமிழரசுக் கட்சி தமது சொந்த சுயநல தேவைகளுக்காக புலம்பெயர் தமிழர்களில் மிக மிக சிறிய வீதம் உள்ள வியாபாரிகளை பணக்காரர்களைத்தான் நாடுகிறது. எனவே மாற்றமடைய வேண்டியது கூட்டமைப்பே தவிர புலம்பெயர் தமிழர்கள் அல்ல. 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
  • Like 1
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@விசுகு மன்னிக்க வேண்டும் அண்ணா… விருப்பு குறியை மாற்ற முடியவில்லை

  • Thanks 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.