Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற சிங்கப்பூர் எயர்லைன்ஸ்விமானம் நடுவானில் கடுமையாக குலுங்கியதில்  பயணியொருவர் உயிரிழந்துள்ளார்- 20 பேர் காயமடைந்துள்ளனர்.

குறிப்பிட்ட விமானத்தில் 211 பயணிகள் உட்பட 229 பேர் பயணித்துக்கொண்டிருந்தனர் என சிங்கப்பூர் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக சிங்கப்பூர் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

நடுவானில் கடுமையாக குலுங்கிய சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானம் -பயணி ஒருவர் பலி | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Flight Turbulence: நடுவானில் திடீரென குலுங்கிய சிங்கப்பூர் விமானம்; பயணி உயிரிழந்த சோகம்!

 
Published:Today at 9 AMUpdated:Today at 9 AM
 
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்
லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் நடுவானில் திடீரென கடுமையாகக் குலுங்கியதால் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, லண்டனின் ஹீத்ரோவிலிருந்து நேற்று புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் SQ 321 போயிங் 777-300ER என்ற விமானம் மியான்மர் அல்லது தாய்லாந்துக்கு இடையில் நடுவானில் குலுங்கியதாகக் கூறப்படுகிறது.
 
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்
 
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்
 

இந்த சம்பவத்தால், விமானம் உடனடியாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில், `சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ 321 போயிங் 777-300ER, லண்டன் ஹீத்ரோவிலிருந்து சிங்கப்பூருக்கு மே 20-ம் தேதி இயக்கப்பட்டது. வழியில் விமானம் கடுமையாகக் குலுங்கியது.

 

பின்னர், பாங்காக்குக்குத் திருப்பிவிடப்பட்ட விமானம் இன்று மாலை 03:45 மணியளவில் தரையிறங்கியது. விமானத்தில் மொத்தம் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்தனர். இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணி ஒருவர் உயிரிழந்தார். அதோடு சிலர் காயமடைந்தனர். இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 
 
 
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் Singapore Airlines
 

விமானத்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும், பணியாளர்களுக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதே எங்கள் முன்னுரிமை. தாய்லாந்திலுள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து தேவையான மருத்துவ உதவிகளை வழங்குகிறோம். அதோடு, தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்க ஒரு குழுவை பாங்காக்குக்கு அனுப்புகிறோம்' என்று தெரிவித்திருக்கிறது.

விமானம் திடீரென தனது வேகத்தில் வேக மாறுபாட்டைக் காணுதல் உள்ளிட்ட சில காரணங்களால் இத்தகைய நிகழ்வு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், விமானம் இதுபோன்று சிலசமயம் எந்த நேரத்திலும் குலுங்கக்கூடும் என்பதால் பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

https://www.vikatan.com/trending/viral/singapore-airlines-passenger-died-after-flight-commit-severe-turbulence-in-en-route?pfrom=home-main-row

 

Edited by பிழம்பு
link

சென்ற மார்ச் மாதமும் அவுஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்து செந்றுகொண்டிருந்த போயிங் விமானம் ஒன்று குலுங்கியதால் 50 பேர் காயமடைந்தனர். இது தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

 

பிரெஞ்சு மூலம் : https://www.lemonde.fr/economie/article/2024/03/11/un-boeing-787-de-latam-airlines-rencontre-un-probleme-technique-cinquante-personnes-blessees_6221350_3234.html

Turbulence இனால் ஒருவர் பலியானார் எனும் செய்தியை இன்று தான் முதன் முதலாக கேள்விப்படுகின்றேன். 

இனி பிளேனில் போகும் போதும் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் கடுமையான காற்றுக் கொந்தளிப்பின் போது செங்குத்தாக மேலெழும்பி, அப்படியே ஒரெயடியாக பல ஆயிரம் அடிகள் கீழே வந்திருக்கின்றது. அந்தக் கணத்தில் சீட் பெல்ட் போட்டிருக்காத பயணிகள் மேலே பறந்து, தலைக்கு மேலே இருக்கும் பெட்டிகளில் மிகப் பலமாக இடிபட்டிருக்கின்றார்கள்.

கடும் கொந்தளிப்பு பகுதிகளை முன்னரே கண்டு அறிவித்திருக்கா விட்டால், அது FAA இன் தவறு என்கின்றனர். அப்படி அறிவித்திருந்தாலும், கொந்தளிப்பின் ஊடே செல்லும் விமானங்களும் இருக்கின்றன என்றும் சொல்கின்றனர். கொந்தளிப்பை சுற்றிப் போனால் எரிபொருள் அதிகம் தேவைப்படலாம் என்ற காரணத்திற்காக.    

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

விமானம் கடுமையான காற்றுக் கொந்தளிப்பின் போது செங்குத்தாக மேலெழும்பி, அப்படியே ஒரெயடியாக பல ஆயிரம் அடிகள் கீழே வந்திருக்கின்றது. அந்தக் கணத்தில் சீட் பெல்ட் போட்டிருக்காத பயணிகள் மேலே பறந்து, தலைக்கு மேலே இருக்கும் பெட்டிகளில் மிகப் பலமாக இடிபட்டிருக்கின்றார்கள்.

கடந்த சில வருடங்களாக அடிக்கடி விமானப் பயணங்கள் .

ஒரு தடவை எழும்பி நடந்தோ கழிவறைக்கோ போய் வந்தால் மீண்டும் இருக்கைப் பட்டியை அணிந்து கொள்வேன்.

இது பழகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

கடந்த சில வருடங்களாக அடிக்கடி விமானப் பயணங்கள் .

ஒரு தடவை எழும்பி நடந்தோ கழிவறைக்கோ போய் வந்தால் மீண்டும் இருக்கைப் பட்டியை அணிந்து கொள்வேன்.

இது பழகிவிட்டது.

👍....

இருக்கைப் பட்டியை (நல்ல தமிழ்.....) எப்போதும் போட்டிருப்பது நல்லதே... 

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, இணையவன் said:

சென்ற மார்ச் மாதமும் அவுஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்து செந்றுகொண்டிருந்த போயிங் விமானம் ஒன்று குலுங்கியதால் 50 பேர் காயமடைந்தனர். இது தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

 

பிரெஞ்சு மூலம் : https://www.lemonde.fr/economie/article/2024/03/11/un-boeing-787-de-latam-airlines-rencontre-un-probleme-technique-cinquante-personnes-blessees_6221350_3234.html

இதே சம்பவங்கள் ஈரானிய,ரஷ்ய,வடகொரிய விமானங்களில் நடந்திருந்தால் தகர டப்பா பீலிங்கில் கருத்து எழுதியிருப்பீர்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இதே சம்பவங்கள் ஈரானிய,ரஷ்ய,வடகொரிய விமானங்களில் நடந்திருந்தால் தகர டப்பா பீலிங்கில் கருத்து எழுதியிருப்பீர்கள். 😂

 

இதுவே சிறீ லங்கன் எயார் லைன்ஸ் என்றால் நீங்களே அடித்து துவைத்து கொடியில் காயப்போட்டு இருப்பீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நடுவானில் திடீரென குலுங்கிய விமானம், தூக்கி வீசப்பட்ட பயணிகள் - சிங்கப்பூர் விமானத்திற்குள் என்ன நடந்தது?

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்

பட மூலாதாரம்,REUTERS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜோயல் கிண்டோ, சைமன் ஃப்ரேசர்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 21 மே 2024
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

லண்டனில் இருந்து கிளம்பிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடுமையான கொந்தளிப்பில் (டர்புலன்ஸ்) சிக்கிக் குலுங்கியதில் பிரிட்டனைச் சேர்ந்த 73 வயதான நபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதனால் சிங்கப்பூர் செல்வெவேண்டிய அந்த போயிங் 777-300ER விமானம் பாங்காக்கிற்கு திருப்பி விடப்பட்டது. உள்ளூர் நேரப்படி 15:45 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1:30 மணி) அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் நிலை திடீரெனத் தாழ்வானதாகவும், மக்கள் மற்றும் பொருட்கள் கேபினைச் சுற்றித் தூக்கியெறியப்பட்டதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

விமானத்தில் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்ததாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த ஜெஃப் கிச்சன் என்ற 73 வயது நபர் உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று பாங்காக்கில் உள்ள அதிகாரிகள் கூறுகின்றனர். அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை குறித்து தகவல்கள் இல்லை.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்

பட மூலாதாரம்,REUTERS

சிங்கப்பூர் விமானம் குலுங்கியது

பட மூலாதாரம்,REUTERS

பயணிகள் சொல்வது என்ன?

பிபிசி-யிடம் பேசிய, அந்த விமானத்தில் பயணம் செய்த லண்டனைச் சேர்ந்த ஆண்ட்ரூ, "காபி என்மீது முழுவதும் கொட்டிவிட்டது" என்று கூறினார். "விமானத்தின் நிலை தாழ்ந்த சில வினாடிகளில், ஒரு பயங்கரமான அலறல் போன்ற ஒரு சத்தம் கேட்டது," என்றார்.

இந்தக் கொந்தளிப்பு நிலையடைந்தவுடன், 'தலையில் காயம்' ஏற்பட்டு 'வேதனையால் அலறிய' ஒரு பெண்ணுக்குத் தன்னால் உதவ முடிந்தது என்று ஆண்ட்ரூ கூறினார்.

பாங்காக்கில் உள்ள விமான நிலையத்தின் ஒரு சிறப்புப் பகுதியில் பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்கிறார் ஆண்ட்ரூ. "எனக்கு வேறொரு விமானம் கிடைக்கும். இவை மிகவும் அரிதான நிகழ்வுகள்," என்று அவர் கூறினார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய மற்றொரு பயணி, விமானம் திடீரென "மேல்நோக்கிச் சாய்ந்து, நடுங்கியது," என்றார்.

"நான் அடுத்து நடக்கப் போவதற்காக மனதளவில் தயாராகத் துவங்கினேன். திடீரென்று விமானத்தின் நிலை பயங்கரமாகத் தாழ்ந்தது. அதனால் அமர்ந்திருந்த மற்றும் சீட்பெல்ட் அணியாத அனைவரும் உடனடியாக விமானத்தின் மேற்கூரையில் சென்று மோதினர்," என்று 28 வயதான மாணவர் ஸஃபரான் ஆஜ்மீர் கூறினார்.

"சிலரது தலை பேக்கேஜ் கேபின்களின் மேல் இடித்து, அதைக் குழியாக்கி, விளக்குகள் மற்றும் முகமூடிகள் இருக்கும் இடங்களில் மோதி அவ்விடங்கள் உடைந்தன," என்றார்.

 
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்
சிங்கப்பூர் விமானம் குலுங்கியது

பட மூலாதாரம்,REUTERS

விமானத்திற்குள் என்ன நடந்தது?

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ321 இல் பயணித்த ஒரு பயணி, பிபிசி 5 லைவ்விடம் பேசியபோது, "மிகவும் இயல்பான" பயணம் திடீரென மோசமானதாக மாறியது என்று கூறினார்.

லண்டனைச் சேர்ந்த ஆண்ட்ரூ, தனது பல ஆண்டு விமான பயண அனுபவத்தில் அந்த கொந்தளிப்பை "நம்ப முடியாத அளவிற்கு கடுமையானது" என்று விவரித்தார்.

விமானத்தின் இந்த மோசமான நிலை சில வினாடிகள் மட்டுமே நீடித்ததாகத் தோன்றினாலும், அதன் பிறகு நடந்த காட்சி "பயங்கரமானது" என்று ஆண்ட்ரூ கூறினார்.

"தலையில் பயங்கர காயத்துடன் இரத்தம் தோய்ந்த ஒரு வயதான பெண்மணி" இருப்பதைப் பார்த்ததை அவர் நினைவு கூர்ந்தார், மற்றொரு பெண் "முதுகில் ஏற்பட்ட வலியால் கத்தினார்".

மாரடைப்பால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பிரிட்டிஷ் நபரின் அருகில் அமர்ந்திருப்பதாகவும், விமானத்தின் எஞ்சிய பயண நேரம் முழுமையும் தரையில் படுத்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு மிகவும் மோசமாக காயமடைந்த மற்றொரு நபரைப் பார்த்ததாகவும் ஆண்ட்ரூ கூறினார்.

பாங்காக்கில் சிகிச்சை

விமானத்தில் இருந்த 31 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீதமுள்ள பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவைப்படும் இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விமான நிறுவனம் தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து பயணிகளுக்கு மருத்துவ உதவிகளைச் செய்து வருவதாகவும், கூடுதல் உதவி அளிக்க ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து அதிகாரிகள் ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசரகாலக் குழுக்களை சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட், பயணிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அரசாங்கம் உதவி செய்யும் என்றார்.

"லண்டனில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ321-இல் நடந்த சம்பவம் குறித்து அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்," என்று அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

 
சிங்கப்பூர் விமானம் குலுங்கியது

பட மூலாதாரம்,REUTERS

143 பயணிகள் சிங்கப்பூர் சென்றடைந்தனர்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் குலுங்கியதில் காயமின்றி தப்பிய 143 பேர், பாங்காக்கில் இருந்து மற்றொரு விமானத்தில் சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 131 பயணிகளும், 12 விமானப் பணியாளர்களும் சிங்கப்பூரை சென்றடைந்துவிட்டதாக அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

காற்றுக் கொந்தளிப்பில் சிக்கிய விமானத்தில் இருந்த 79 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுக்கு சிகிச்சை தேவைப்படுவதால் பாங்காக்கிலேயே தொடர்ந்து இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் விமானம் குலுங்கியது

பட மூலாதாரம்,REUTERS

காரணம் என்ன?

இச்சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கொந்தளிப்பு (Turbulence) பொதுவாக விமானம் மேகத்தின் வழியாகப் பறக்கும்போது ஏற்படுகிறது. ஆனால் ரேடாரில் தெரியாத 'தெளிவான காற்றுக் கொந்தளிப்பும்' உள்ளது.

"பல லட்சம் விமானங்கள் இயக்கப்படும் சூழலில் கடுமையான கொந்தளிப்பால் ஏற்படும் காயங்கள் ஒப்பீட்டளவில் அரிதானவை. இருப்பினும், கடுமையான கொந்தளிப்பு கடுமையான காயங்களுக்கு வழிவகுக்கும், அல்லது துரதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தைப்போல உயிரிழப்புக்கு வழிவகுக்கும்," என்று விமான நிபுணர் ஜான் ஸ்ட்ரிக்லேண்ட் பிபிசியிடம் கூறினார்.

கொந்தளிப்புகளைச் சமாளிப்பது எப்படி என்று விமானக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது, என்றார் அவர்.

காலநிலை மாற்றம் எதிர்காலத்தில் கடுமையான கொந்தளிப்பை உருவாக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன காட்டுகிறது.

https://www.bbc.com/tamil/articles/c8447dr2rv3o

  • கருத்துக்கள உறவுகள்

விமானக் குலுங்கல் என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது?

விமான குலுங்கல்கள் ஏன் ஏற்படுகின்றன??

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சமீபத்தில், லண்டனிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் குலுங்கியதால் (டர்புலன்ஸ் - turbulence) ஒருவர் உயிரிழந்துள்ளார், பலர் காயமடைந்துள்ளனர்.

விமானம் பறந்து கொண்டிருக்கும் உயரம் திடீரெனத் தாழ்ந்ததால், உள்ளே இருந்த பயணிகளும் அவர்களின் உடைமைகளும் தூக்கிவீசப்பட்டன. தாய்லாந்தின் பாங்காக்கில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அடிக்கடி விமானத்தில் பயணிப்பவர்கள், ஒரு விமானம் குலுங்கும் போது ஏற்படும் திடீர் உலுக்குதலை அறிந்திருப்பார்கள். இது விமானத்தை வெவ்வேறு திசைகளில் நகர்த்தலாம், விமானம் பறந்து கொண்டிருக்கும் உயரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

பெரும்பாலான நேரங்களில் மேகங்களில் மேலும் கீழும் காற்று வீசும் போது, விமானங்கள் குலுங்கும் என்று பிபிசி வெதரின் முன்னாள் விமானப்படை அதிகாரியான சைமன் கிங் கூறுகிறார்.

அவற்றில் பெரும்பாலானவை மிகவும் லேசானதாக இருக்கும். ஆனால் , இடியுடன் கூடிய 'குமுலோனிம்பஸ்' மேகம் போன்ற பெரிய மேகங்களில், காற்றின் மாறுபட்ட இயக்கங்கள் மிதமான அல்லது கடுமையான குலுங்கலை ஏற்படுத்தும்.

விமானக் குலுங்கல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,சமீபத்தில், லண்டனிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் குலுங்கியதால் ஒருவர் உயிரிழந்துள்ளார், பலர் காயமடைந்துள்ளனர்  

‘இந்த வகை விமானக் குலுங்கலைத் தவிர்ப்பது கடினம்’

மேகங்கள் இல்லாத இடத்தில் நடைபெறும் மற்றொரு விதமான குலுங்கல் இருக்கிறது. இது, மேகங்கள் அற்ற ‘தெளிவான காற்றில்’ நடைபெறும் குலுங்கலாகும். இந்த வகை குலுங்கல் எங்கு நடைபெறுகிறது என்பதை கண்டறிய கடினமானதாக இருக்கும்.

இந்த வகை குலுங்கல் ‘ஜெட் ஸ்ட்ரீமைச்' சுற்றி நிகழ்கிறது. வானில் வேகமாக ஒரு நதி பாய்ந்து சென்றால் எப்படி இருக்கும், அது போல வேகமாக செல்லும் காற்று தான் 'ஜெட் ஸ்ட்ரீம்' எனப்படுகிறது. இது பொதுவாக 40,000-60,000 அடி உயரத்தில் காணப்படும் என்று விமான வல்லுநர் மற்றும் வணிக பைலட் கை கிராட்டன் கூறுகிறார்.

ஜெட் ஸ்ட்ரீமில் பாயும் காற்றின் வேகத்துக்கும் அதைச் சுற்றியுள்ள காற்றின் வேகத்துக்கும் இடையில் மணிக்கு 100 மீட்டர் வேகம் வித்தியாசம் இருக்கும் என்று அவர் கூறுகிறார். வேகமாக நகரும் காற்றுக்கும் மெதுவாக நகரும் காற்றுக்கும் இடையிலான உரசல்கள் குலுங்கலை ஏற்படுத்தும். இவை எப்போதும் இருக்கும், இவற்றைத் தவிர்ப்பது மிகவும் கடினம்.

உதாரணமாக, ஐரோப்பாவிலிருந்து வட அமெரிக்காவுக்கு விமானம் மூலம் செல்கிறீர்கள் என்றால், இதை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் கடினம் என்கிறார் கிராட்டன். இது கடுமையான குலுங்கல்களை ஏற்படுத்தும் என்கிறார்.

 
விமான குலுங்கல்கள் ஏன் ஏற்படுகின்றன??

பட மூலாதாரம்,GETTY IMAGES

விமான குலுங்கல் எவ்வளவு ஆபத்தானது?

கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் இணை பேராசிரியரான கிராட்டன் கூறுகையில், குலுங்கல்களால் ஏற்படும் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும் வகையில் விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன, என்றார்.

குலுங்கல் காரணமாக ஒரு விமானம் முற்றிலும் அழிய 'சாத்தியமில்லை' என்றும் அவர் கூறுகிறார்.

எனினும், இது ஒரு விமானத்திற்கு எந்த நன்மையும் செய்யாது. அதனால்தான் விமானிகள் அதைத் தவிர்க்க அல்லது மெதுவாக இயக்க முயல்வார்கள். மேலும் சீட் பெல்ட் அணிய அறிவுறுத்துவார்கள்.

தீவிரமான குலுங்கல் ஏற்படும் போது, ஒரு விமானத்திற்குக் கட்டமைப்புச் சேதங்கள் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடுமையான குலுங்கலின் போது சீட் பெல்ட் அணியாமல் இருக்கும் பயணிகள் தூக்கி வீசப்பட வாய்ப்புண்டு.

ஆனால் குலுங்கலின் விளைவாக இறப்புகள் மற்றும் காயங்கள் ஏற்படுவது மிக அரிதானதே என்று விமான பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

விமானப் போக்குவரத்து நிபுணர் ஜான் ஸ்ட்ரிக்லேண்ட் கூறுகையில், லட்சக்கணக்கான விமானங்கள் இயக்கப்படும் சூழலில் கடுமையான குலுங்கல் காரணமாக் ஏற்படும் காயங்கள் 'ஒப்பீட்டளவில் அரிதானவை' என்று கூறுகிறார்.

2009 மற்றும் 2022-க்கு இடையில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட விமான நிறுவனங்களில், குலுங்கல்கள் காரணமாக 163 'கடுமையான காயங்கள்' ஏற்பட்டதாக அமெரிக்காவின் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது. ஒரு ஆண்டுக்கு சராசரியாக 12 நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

 

விமானிகள் குலுங்கல்களை எவ்வாறு கையாளுகிறார்கள்?

விமானிகள் பறப்பதற்கு முன்பு சில விமான முன்னறிவிப்பைப் பெறுவார்கள், இதில் வானிலை தரவு அடங்கும். அவர்கள் இந்தத் தகவலை அறிந்து கொண்டு தங்கள் பாதைகளைத் திட்டமிடுவார்கள்.

உதாரணமாக, இடியுடன் கூடிய மழை நிகழ்வுகளை அவர்கள் தவிர்த்துக் கொள்ள முடியும். ஆனால் 'தெளிவான காற்று' குலுங்கலைத் தவிர்ப்பது அவ்வளவு எளிதல்ல.

அதே வழித்தடங்களில் அவர்களுக்கு முன்னால் சென்ற மற்ற விமானங்களும் ஏதேனும் குலுங்கல்கள் இருந்தால் தெரிவிப்பார்கள் என்று கிராட்டன் கூறுகிறார். அந்தப் பாதைகளில் செல்வதை விமானிகள் தவிர்க்க முயற்சிப்பார்கள், அல்லது அதன் தாக்கத்தை குறைக்க விமானத்தின் வேகத்தை குறைப்பார்கள்.

விமான குலுங்கலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விமானக் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயணிகள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்யலாம்?

பயணிகளைப் பொறுத்தவரை, சீட் பெல்ட் அணிந்து கொண்டு இருக்க வேண்டும். குலுங்கல் எப்போது நடைபெறும் என்று கணிக்க முடியாததால், எல்லா நேரங்களிலும் பயணிகளை சீட் பெல்ட் அணிந்துகொள்ளுமாறு விமானிகள் அறிவுறுத்துகிறார்கள்.

 
விமான குலுங்கல்கள் ஏன் ஏற்படுகின்றன??

பட மூலாதாரம்,GETTY IMAGES

விமானக் குலுங்கல்கள் அடிக்கடி ஏற்படுகின்றவா?

சில ஆராய்ச்சியாளர்கள் காலநிலை மாற்றம் விமானக் குலுங்கல்களை அதிகமாக்கியுள்ளது என்று கருதுகின்றனர்.

கடந்த ஆண்டு, இங்கிலாந்தில் உள்ள ரீடிங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 1979 மற்றும் 2020-க்கு இடையில் கடுமையான விமான குலுங்கல்கள் 55% அதிகரித்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

கார்பன் வெளியேற்றம் காரணமாக காற்றின் வெப்பம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக் அதிக உயரத்தில் காற்றின் வேகத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுவே விமான குலுங்கல்கள் அதிகரிக்க காரணம் என்று அவர்கள் கூறினர்.

விமானக் குலுங்கல்களின் அதிகரிப்புக்கு, விமானப் பயன்பாட்டின் அதிகரிப்பும் காரணமாக இருக்கலாம் என்று கை கிராட்டன் கூறுகிறார்.

விமானங்கள் அதிகமாகப் பறக்கும் வானில், ஒரு விமானத்திலிருந்து மற்றொரு விமானம் குறைந்தபட்ச பாதுகாப்பான தூரத்தில் இருக்க வேண்டும் என்பதால், ஒரு வழிதடத்தை தவிர்ப்பது விமானிகளுக்கு எளிதானதாக இருக்காது.

https://www.bbc.com/tamil/articles/clkk0wnk8n4o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.