Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் சில பாடல்களுடன் சில சம்பவங்கள் இணைந்தே இருக்கும். பாடலைக் கேட்டவுடன், பாடலின் முதல் ஓரிரு வரிகளின் பின், பாடல் பின்னால் ஒலிக்க மனம் அந்தப் பழைய நினைவில் மூழ்கிவிடும்.  மீண்டு இன்றைய உலகத்திற்கு திரும்பி வருவதே சிலவேளைகளில் பெரும் சிரமம்தான்.

பழைய நினைவுகளை மீட்பது என்பது தேன் தடவிய விசம் போன்று என்று ஒரு இடத்தில் எழுதப்பட்டிருந்ததை பார்த்திருக்கின்றேன். ஊக்கத்தை கெடுத்து விடும் என்ற பொருளில் சொல்லியிருப்பார்கள் போல.

ஆலால கண்டன் போல விசம் முழுவதும் உள்ளிறங்காமல் இடையிலேயே தடுத்து நிறுத்தி விட்டு, நினைவுகளை இடையில் கலைத்து விட்டு, ஊக்கமது கைவிடேல் என்று வாழ வேண்டும் போல...............😜.

***********************************************************************************

பாடல் ஒன்று - கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
--------------------------------------------------------------------------
எத்தனை தடவைகள் தான் ஊரின் ஒரு எல்லையிலிருந்து மற்ற எல்லைக்கு நடப்பது. என்னதான் தெருவெங்கும் குழாய் மின்விளக்குகள் பத்து அடிகளுக்கு ஒன்று என்று இரண்டு பக்கங்களிலும் கட்டப்பட்டு, அவை பளிச்சென்று பகல் போல எரிந்து கொண்டிருந்தாலும், சூடான தேநீர் கோப்பி மற்றும் குளிரான இனிப்பு பானங்கள் என்று தாராளமாக, இலவசமாகவே, பல இடங்களில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், கால்கள் போதும் போதும் என்று கெஞ்ச ஆரம்பித்திருந்தது. அக்காவின் கால்களின் நிலைமையும் அதுவே தான். ஆனால் அக்காவிற்கு பாடல்கள் மேல் இருக்கும் ஆசை பூமிக்குள் கொதித்து எரிந்து கொண்டிருக்கும் எரிமலை போன்றது. அன்று அது வெளியே வந்து ஆகாயம் வரை பரவிக் கொண்டிருந்தது. பாடல்களை கேட்பதில் மட்டுமே அவரின் கவனம் குவிந்திருந்தது.
 
அந்த இரவில் ஊரின் பிரதான வீதியில் பத்து இசைக்குழுக்கள் பாடிக் கொண்டிருந்தன. இரண்டு மைல்கள் நீண்ட வீதியில் ஓரளவிற்கு சரியான இடைவெளிகள் விட்டு இசைக்குழுக்களின் மேடைகள் இருந்தன. ஒரு இசைக்குழுவின் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் அக்கா, 'சரி வா, அடுத்ததிற்கு போவோம்.............' என்று சொல்லிக் கொண்டே, என் பதிலை எதிர்பார்க்காமலேயே, எழும்பி நடந்து கொண்டிருந்தார். அவர் பின்னால் நான் ஓடிக் கொண்டிருந்தேன்.
 
அக்காவிற்கும் எனக்கும் ஒரு வயது தான் இடைவெளி. ஆனால் அக்கா எங்களிருவருக்கும் இடையில் ஒரு தலைமுறை இடைவெளி இருப்பது போல நடந்துகொள்வார். அவருக்கு எல்லாமே தெரிந்தும் இருந்தது. எனக்கு எதுவுமே தெரியாது என்று தான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தனர். அதனாலோ என்னவோ ஒரு நசிந்த விரலை கவனமாக பொத்திப் பொத்தி பார்ப்பது போல அக்காவும் அம்மாவும் என்னைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 
 
மண்டைதீவிலிருக்கும் ஒரு சாத்திரியார் தான் வீட்டில் எல்லோருக்கும் குறிப்புகள், ஜென்ம பலன், எழுதி இருந்தார். என்னைத் தவிர மற்ற எல்லோருடைய குறிப்புகளிலும் அவர்கள் ஆஹா, ஓஹோ என்று வருவார்கள் என்று இருந்தது. என்னுடைய குறிப்பு மட்டும் படு மோசமாக இருந்தது. வீட்டில் எல்லோருக்கும் நல்ல குறிப்புகளும், எனக்கு மட்டுமே மோசமாகவும் இருந்தபடியால் வீட்டில் எல்லோரும் எல்லா குறிப்புகளையும் சரியே என்று நம்பியும் இருந்தனர். மண்டைதீவு சாத்திரியார் எழுதிய குறிப்பின் படி நான் கடைசியாக படிக்கும் வகுப்பு பத்தாம் வகுப்புத்தான். அத்துடன் கல்வி முடிந்து விடும் என்று தெளிவாக எழுதி இருந்தார். நான் அந்தக் குறிப்பை பல தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்திருக்கின்றேன். திருமணம் அந்நிய வழியில் நடக்கும் என்றும் ஜென்ம பலனில் எழுதப்பட்டிருந்தது. அந்நிய வழி என்றால் என்னவென்ற சந்தேகம் எப்போதும் இருந்தது, ஆனால் நான்  எவரையும் இது சம்பந்தமாக இன்று வரை விசாரிக்கவில்லை.  
 
அக்காவும் நானும் ஊரின் ஒரு எல்லையில் நடந்து கொண்டிருக்கும் இசைக்குழுவின் மேடை போடப்பட்டிருந்த பாடசாலை மைதானத்தின் முன் மீண்டும் வந்து விட்டிருந்தோம். இது நாலாவது தடவை. இதற்கு மேலால் என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது, இங்கேயே இருப்போம் என்று நான் அக்காவிடம் கெஞ்சினேன். அக்கா என்னைக் கவனிக்கவில்லை. அவர் மேடையையே பார்த்துக் கொண்டிருந்தார். கிழக்கு மேற்காக நீண்ட மைதானத்தில் மேடை வடக்குப் பக்கமாக அமைக்கப்பட்டிருந்தது. மைதானத்தின் மேற்குப் பக்கத்தில் ஒரு வரிசை வீடுகள், அதன் பின்னர் இராணுவ முகாம். மைதானத்தின் வடக்குப் பக்கமாக, மேடையின் பின்னால், பனைமரங்கள், அதன் பின்னால் கடல். தெற்குப் பக்கத்தில் வீதி, அதன் பின்னர் பாடசாலை. அக்கா மைதானத்திற்குள் கால் வைக்காமல் வீதி ஓரத்திலேயே நின்று கொண்டிருந்தார். திரும்பி நடந்து விடுவாரோ என்று நான் ஏங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தேன்.
 
இராணுவ முகாமில் இருந்து பல இராணுவ வீரர்கள் அங்கங்கே வந்து நின்று இசைக்குழு பாடுவதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கைகளில் எதுவும் இல்லை. அவர்கள் எல்லோரும் சாதாரண உடையிலேயே இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் வேறு, நாங்கள் வேறு என்றும், எங்களுக்கிடையில் ஏதோ சில அடையாள வித்தியாசங்கள் இருப்பதும் வெளிப்படையாகவே இருந்தன.
 
மேடையின் பின்னால், கொஞ்சம் மேற்குப் பக்கமாக, முன் நின்ற மிக உயர்ந்த சில பனைமரங்களின் முன்னால் மிகப்பெரிய ஒரு போர்டிகோ கட்டப்பட்டிருந்தது. கட் அவுட்டை நாங்கள் போர்டிகோ என்று சொல்வோம். இன்று நடிகர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வைக்கும் கட் அவுட்டுகளை விட என்னுடைய ஊரில் சிறப்பானதும், பெரியதுமான கட் அவுட்டுகளை அன்றே வைப்பார்கள். ஐம்பது அடிகளில் கூட சாதாரணமாக செய்து வைப்பார்கள். எல்லா கட் அவுட்டுகளும் சாமியின் உருவங்களாகவோ அல்லது அழகிய பெண்ணின் உருவங்களாகவோ மட்டுமே இருக்கும். ஆண் உருவங்களில் கட் அவுட் வைப்பதில்லை போல. நான் பார்த்ததில்லை. 
 
அந்த மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட் பிரமாண்டமாக இருந்தது. லவனும் குசனும் ஒரு குதிரையை கையில் பிடித்துக் கொண்டு இருப்பது போன்ற மிக உயர்ந்த ஒரு கட் அவுட். பனைமரங்களிற்கு மேலால் லவனும் குசனும் நின்றார்கள். அவர்கள் இருவருக்குமிடையில் ஒரு வெள்ளைக் குதிரை. சீதாப்பிராட்டியின் புத்திரர்களின் அதே அளவு கம்பீரத்துடன் அந்தப் புரவியும் அங்கே நின்று கொண்டிருந்தது.
 
அடுத்த பாடல் 'கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான். கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்..................' என்று அந்த இசைக்குழுவின் அறிவிப்பாளர் அறிவித்தது எதிரொலித்துக் கொண்டிருந்தது.
 
'சரி............. வா, போய் இருப்பம்...........' என்று அக்கா மைதானத்திற்குள் நடந்தார். நான் அக்காவைப் பின்தொடர்ந்தேன்.

Edited by ரசோதரன்

  • Replies 76
  • Views 4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    பாடல் இரண்டு - செந்தூர பூவே செந்தூர பூவே --------------------------------------------------------------------------- ஊரில் பல பாடசாலைகள் இருந்தன. வீட்டுக்கு அருகிலேயே ஒரு பாடசாலை இருந்தது.

  • ஏதோ இந்த வரி நன்றாக இருப்பது போல உணர்கின்றேன், உங்கல் எழுத்துக்கள் நாளுக்கு நாள் முன்னேற்றம் காட்டுகிறது, கலை கலைக்காகவே என படித்தவர்களுக்குள் கும்மியடிக்கும் இலக்கிய வட்டத்திற்குள் புகாமல் எங்களை ப

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    எனக்கும் இப்படியான எண்ணம் வந்தது. ரசோதரன் யாழுக்கு கிடைத் பொக்கிசம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரசோதரன் said:

மனதில் சில பாடல்களுடன் சில சம்பவங்கள் இணைந்தே இருக்கும். பாடலைக் கேட்டவுடன், பாடலின் முதல் ஓரிரு வரிகளின் பின், பாடல் பின்னால் ஒலிக்க மனம் அந்தப் பழைய நினைவில் மூழ்கிவிடும்.  மீண்டு இன்றைய உலகத்திற்கு திரும்பி வருவதே சிலவேளைகளில் பெரும் சிரமம்தான்.

பழைய நினைவுகளை மீட்பது என்பது தேன் தடவிய விசம் போன்று என்று ஒரு இடத்தில் எழுதப்பட்டிருந்ததை பார்த்திருக்கின்றேன். ஊக்கத்தை கெடுத்து விடும் என்ற பொருளில் சொல்லியிருப்பார்கள் போல.

ஆலால கண்டன் போல விசம் முழுவதும் உள்ளிறங்காமல் இடையிலேயே தடுத்து நிறுத்தி விட்டு, நினைவுகளை இடையில் கலைத்து விட்டு, ஊக்கமது கைவிடேல் என்று வாழ வேண்டும் போல...............😜.

இது என்ன டெலிபதியோ தெரியவில்லை - மூன்று நாள் முன்னம் இதை நானும் யோசித்தேன்.

இன்ஸ்டாவில் nostalgia drains your energy - even if you go back, others won’t be there என்பதாக ஒரு படம் சிந்தனையை தூண்டியது.

எனக்கு பாடல்கள் போலவே மணமும்.

சில மணங்கள் நல்ல நினைவுகளை, சில மணங்கள் கெட்ட நினைவுகளை உசுப்பி விட்டு விடும்.

19 minutes ago, ரசோதரன் said:

அந்நிய வழி என்றால் என்னவென்ற சந்தேகம் எப்போதும் இருந்தது

Blonde bombshell ?🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

எனக்கு பாடல்கள் போலவே மணமும்.

சில மணங்கள் நல்ல நினைவுகளை, சில மணங்கள் கெட்ட நினைவுகளை உசுப்பி விட்டு விடும்.

சில மணங்கள் அப்படியே தான், கோஷான். உதாரணமாக, உழுத்தம் மாவின் மணம் போன்ற ஒன்று பாம்புகள் பற்றிய நினைவுகளையும், என்னவென்று ஒரு காரணம் இல்லாமலேயே, சுப்பிரமணியம் சோடா தொழிற்சாலைக்கு பின்னால் இருந்த சில இடங்களையும் நினைவிற்கு இழுத்துக் கொண்டு வரும். பாம்பின் கொட்டாவி உளுத்தம் மாவின் மணத்தை ஒத்தது என்று சிறுவயதில் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

பாம்பு கொட்டாவி விடுமா என்று கூட எனக்கு உண்மையில் தெரியாது.....................🤣.

31 minutes ago, goshan_che said:

Blonde bombshell ?🤣

🤣...................

அமெரிக்கா போகின்றேன் என்று வீட்டில் சொன்னவுடன், ஏன் போகின்றாய், எப்பொழுது போகின்றாய் என்று கூட வீட்டில் கேட்கவில்லை. 'சரி போ...............ஆனால், ஒரு கல்யாணத்தை கட்டிக் கொண்டு போ........' என்று மட்டுமே சொன்னார்கள்.

மண்டைதீவுச் சாத்திரியார் சொன்னது எல்லாமே தவிடுபொடியாகிக் கொண்டிருந்தாலும், 'அந்நிய வழி' என்பது சரியாகி விடுமோ என்று ஒரு பயம் அவர்களின் மனதில் இருந்தது போல............🤣

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரசோதரன் said:

பாம்பு கொட்டாவி விடுமா என்று கூட எனக்கு உண்மையில் தெரியாது.....................🤣.

எனது வீட்டின் பின்புறம் பெரிய வளவு ஒன்றுளது. அடர்ந்த காடு போல இருக்கும். அதற்குள் ஒரு பாம்பு குடும்பம் வாடகை இன்றியே பலகாலம் வசித்து வந்தது.

அடிக்கடி நாய்க்கும் பாம்புக்கு WWE நடக்கும்.

சிலவேளை ஒரு பச்சை மணம் அடிக்கும் அதை பாம்பு கொட்டாவி மணம் என்பார்கள்.

சில சமயம் இந்த resident snakes ஐ விட இன்னும் சிலது வீட்டுக்குள் கூட வந்து விடும். அதை அப்பா தடியால் அடித்து மண்ணெண்ணை ஊத்தி கொழுத்துவார். அவருடன் கூடவே 6 பாட்டரி டோர்ச், மண்ணெணை போத்தல், பார்தடி சகிதம் நிற்கும் துணைப்படை நான்.

அப்போதும் ஒரு மணம் வரும்.

In-house subject specialist @Justin அண்ணாதான் இது கொட்டாவியா அல்லது கெட்ட ஆவியா என விளக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரசோதரன் said:

மண்டைதீவுச் சாத்திரியார் சொன்னது எல்லாமே தவிடுபொடியாகிக் கொண்டிருந்தாலும்

அப்போ உங்கள் வாழ்க்கை ஆஹா ஓஹோ என்று இருக்கிறது என்று சொல்கிறீர்கள்.

‘பாம்பின் உழுத்தமா கொட்டாவி’ என்று சொல்வதை நானும் அனுபவித்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரசோதரன் said:

மனதில் சில பாடல்களுடன் சில சம்பவங்கள் இணைந்தே இருக்கும். பாடலைக் கேட்டவுடன், பாடலின் முதல் ஓரிரு வரிகளின் பின், பாடல் பின்னால் ஒலிக்க மனம் அந்தப் பழைய நினைவில் மூழ்கிவிடும்.  மீண்டு இன்றைய உலகத்திற்கு திரும்பி வருவதே சிலவேளைகளில் பெரும் சிரமம்தான்.

முன்னர் காதலிக்க பாட்டு

காதல் தோல்விக்கு பாட்டு

காதல்வெற்றிக்கு பாட்டு

நையாண்டிக்கு பாட்டு.

17 hours ago, ரசோதரன் said:

மண்டைதீவிலிருக்கும் ஒரு சாத்திரியார் தான் வீட்டில் எல்லோருக்கும் குறிப்புகள், ஜென்ம பலன், எழுதி இருந்தார். என்னைத் தவிர மற்ற எல்லோருடைய குறிப்புகளிலும் அவர்கள் ஆஹா, ஓஹோ என்று வருவார்கள் என்று இருந்தது. என்னுடைய குறிப்பு மட்டும் படு மோசமாக இருந்தது. வீட்டில் எல்லோருக்கும் நல்ல குறிப்புகளும், எனக்கு மட்டுமே மோசமாகவும் இருந்தபடியால் வீட்டில் எல்லோரும் எல்லா குறிப்புகளையும் சரியே என்று நம்பியும் இருந்தனர். மண்டைதீவு சாத்திரியார் எழுதிய குறிப்பின் படி நான் கடைசியாக படிக்கும் வகுப்பு பத்தாம் வகுப்புத்தான். அத்துடன் கல்வி முடிந்து விடும் என்று தெளிவாக எழுதி இருந்தார். நான் அந்தக் குறிப்பை பல தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்திருக்கின்றேன். திருமணம் அந்நிய வழியில் நடக்கும் என்றும் ஜென்ம பலனில் எழுதப்பட்டிருந்தது. அந்நிய வழி என்றால் என்னவென்ற சந்தேகம் எப்போதும் இருந்தது, ஆனால் நான்  எவரையும் இது சம்பந்தமாக இன்று வரை விசாரிக்கவில்லை.  

சாத்திரியார் எழுதியது சரியாகவே எழுதியிருப்பார்.

ஆனால் உங்களுக்கு

 பின்னால் பிறந்தவர்

உங்களுக்கு குழந்தை(கள்) 

குடும்பத்தில் யாரும் தவறியிருந்தால்

உங்களின் பலன் மாறும்.

இதை நான் சொல்லவில்லை.

@alvayan  உங்க ஊர்க்கார சாத்திரியார் தான் சொன்னார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kavi arunasalam said:

அப்போ உங்கள் வாழ்க்கை ஆஹா ஓஹோ என்று இருக்கிறது என்று சொல்கிறீர்கள்.

‘பாம்பின் உழுத்தமா கொட்டாவி’ என்று சொல்வதை நானும் அனுபவித்திருக்கிறேன்.

கவிஞரே, உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோன்றுகின்றது...............🤣.

மணடைதீவுச் சாத்திரியார் சொன்னது போல வாழ்க்கை அப்படி ஒன்றும் மோசமாக இல்லை............ அதுவும் யாழ் களத்தில் இணைந்த இந்த ஒரு வருடத்தில் வாழ்வு நல்லாகவே இருக்கின்றது என்று தான் சொல்ல வந்தேன்............😜.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரசோதரன் said:

பாம்பு கொட்டாவி விடுமா என்று கூட எனக்கு உண்மையில் தெரியாது

எனது அப்பப்பாவின் அக்கா படுகிழவி எங்களுடன் தான் இருந்தார்.

8-9 வயது மட்டும் நான் பிறந்து வளர்ந்தது மண்வீடு தான்.

அடிக்கடி பாம்புப் பிரச்சனை தான்.

ஆனாலும் பாம்பு வரமுதலே அந்தக் கிழவி என்ன திசையில் பாம்பு கொட்டாவி வருது என்று சொல்லுவா.

3 minutes ago, ரசோதரன் said:

அதுவும் யாழ் களத்தில் இணைந்த இந்த ஒரு வருடத்தில் வாழ்வு நல்லாகவே இருக்கின்றது என்று தான் சொல்ல வந்தேன்...

அப்படி என்னதான்யா விசேடம்?

எங்களுக்கும் சொல்லலாமில்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

சாத்திரியார் எழுதியது சரியாகவே எழுதியிருப்பார்.

ஆனால் உங்களுக்கு

 பின்னால் பிறந்தவர்

உங்களுக்கு குழந்தை(கள்) 

குடும்பத்தில் யாரும் தவறியிருந்தால்

உங்களின் பலன் மாறும்.

இதை நான் சொல்லவில்லை.

@alvayan  உங்க ஊர்க்கார சாத்திரியார் தான் சொன்னார்.

அல்வாயன் சாத்திரியாரா........... அப்ப பகுதிநேரமாகத்தான் அரசியல் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றார்.............🤣.

என்ன சாத்திரங்களோ, அண்ணா.............. ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் எடுத்து கொடுத்துக் கொண்டிருக்கின்ற படங்களைப் பார்த்தால், இந்தப் பிரபஞ்சத்தில் நாங்கள் எல்லாம் ஒரு சொல் கூட கதைக்க கூடாது என்று தான் தெரிகின்றது............ ஒரு தூசுக்கு கூட நாங்கள் சமானம் இல்லை போல..................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்படி என்னதான்யா விசேடம்?

எங்களுக்கும் சொல்லலாமில்ல.

அண்ணா, நீங்கள் பலர் இங்கு களத்தில் பழம் தின்று மரம் நட்ட அளவு அனுபவம் உள்ளவர்கள். நாங்கள் ஓரிருவர் புதியவர்கள். எங்களுக்கு இது ஒரு குழந்தைப் பிள்ளையை முட்டாசிக்கடைக்குள் எதை வேண்டும் என்றாலும் எடு என்று விட்டது போலத்தான் இருக்கின்றது......................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

@alvayan  உங்க ஊர்க்கார சாத்திரியார் தான் சொன்னார்.

அல்வாயில்..கன சாத்திரிமார் இருக்கினம்...என்னுடைய நண்பர் ஒருதர்கோடாலியைக் காணவில்லை என்று நினைத்தகாரியம்(ஓரு பகுதி)கேட்கப் போனார்...சாத்திரி சொன்னார் உங்க வீட்டுக்குப் பின்னால் சட்டியால் மூடி வைத்திருக்கு போய் பார்....முடிஞ்சுது

அப்ப அல்வாயான்சாத்திரத்தை நம்புவியளோ....

7 hours ago, ரசோதரன் said:

அல்வாயன் சாத்திரியாரா........... அப்ப பகுதிநேரமாகத்தான் அரசியல் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றார்.............🤣.

இரண்டுமே எனக்கு சுத்த சூனியம்...இந்த களத்திலை ஒரு 15 வருட அனுபவம்...அடிபிடி..குத்து ..வெட்டைப் பார்த்து..இதிலை நின்று பிடிக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்

 ரஸோவின்  திரி திசைமாறுவதுபோல (எனக்கு )இருக்கு ....பாம்பு கதையைத் தொடங்கி    சாத்திரத்தில் வந்து நிற்கிறது .   

அந்தக் காலத்தில் (இப்போதும் கூட ) சினிமா பாட்டு  காதலர்களுக்கு தூது போனது என்றால் மிகை ஆகாது . 

நீ வருவாய் என நான் இருந்தேன் ....

நான் என்ன சொல்லிவிடடேன் என் மயங்குகிறாய் 
உன் சம்மதம் கேட்ட்டேன் தலை   குனிந்தயோ ? 

மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால்  அவளை மறந்து விடலாம் 
இருப்பதோ ஒரு மனது ...இரண்டுமனம்  வேண்டும் இறைவனிடம் கேட்பேன்.....

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில்  கலந்த உறவே 

காதலிக்கு / காதலனுக்கு  மடல் எழுத  கவிதை வரிகள் தேடுவார்கள். இருக்கவே இருக்கு சினிமா வரிகள். அக்காலத்தில் சினிமா எல்லோருடைய வாழ்விலும் நுழைந்த ஒன்று அதிலும்பாடல்கள் காலத்தால் அழியாதவை . சினிமா கதா நாயகன் கதா நாயகியாக கற்பனை    செய்வார்கள்.  சிலது (காதல் ) முட்டி மோதி வெல்லும் சிலது தோற்று  போகும். 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

 ரஸோவின்  திரி திசைமாறுவதுபோல (எனக்கு )இருக்கு ....பாம்பு கதையைத் தொடங்கி    சாத்திரத்தில் வந்து நிற்கிறது .    

👍..................

'பத்துப்பாட்டு' என்று தலைப்பு வைத்து பத்து சினிமாப் பாடல்களில் சுற்றி இருக்கும் பழைய நினைவுகளை எழுத வேண்டும் என்று தான் இதை ஆரம்பித்தேன், அக்கா. சினிமாப் பாடல்களுக்கும், என்னுடைய நினைவுகளுக்கும் பத்துப்பாட்டு என்று சங்க இலக்கியங்கள் சொல்வதை தலைப்பாக வைப்பது என்று வந்த அந்த எண்ணத்தை பின்னர் தலையில் ஒரு குட்டுக் குட்டி தடுத்து நிறுத்தினேன்.................🤣.

ஆனாலும் பத்து பாடல்கள் எழுதுவதாகத்தான் இருக்கின்றேன். சீமானின், திராவிடத் திரிகளிலேயே எழுதக் கிடைக்கும் பொழுதெல்லாம் போய்விட்டது, அக்கா..................🤣.

இன்றைக்கு முடிந்தால் இரண்டாவது நினைவை எழுதுவதாக உள்ளேன்..............

சிலராவது தொடர்ந்து அவர்களின் அனுபவங்களை பகிர்வார்கள் என்றும் நினைக்கின்றேன்............. பலதும் பத்துமாக வேறு சில விடயங்களும் வந்து போகும் போல..............👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல் இரண்டு - செந்தூர பூவே செந்தூர பூவே
---------------------------------------------------------------------------
ஊரில் பல பாடசாலைகள் இருந்தன. வீட்டுக்கு அருகிலேயே ஒரு பாடசாலை இருந்தது. கொஞ்ச தூரத்திலும் ஒரு பாடசாலை இருந்தது. ஆனால் என்னை வீட்டிலிருந்து அதிக தூரத்தில் இருக்கும் பாடசாலையிலேயே சேர்த்தார்கள். என்னை மட்டும் இல்லை, எங்கள் வீட்டில் எல்லோரும் அந்தப் பாடசாலைக்கு தான் போய் வந்து கொண்டிருந்தார்கள். அது தான் எங்களின் பரம்பரைப் பாடசாலை என்று காரணம் கூறப்பட்டது. சார்பட்டா பரம்பரைக் கதைகள் போல பரம்பரைப் பெருமைகள் எதுவும் வெளி வந்திருக்காத அந்த நாளில், இது என்ன பெரிய பரம்பரை, இதற்காக நான் ஏன் நேர்த்திகடன் போல தினமும் நடக்க வேண்டும் என்று அலுப்பாக இருந்தது. அந்தப் பாடசாலையில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது.
 
சில நாட்களில் நான் போகும் பொழுது பாடசாலையின் கதவுகள் திறந்திருக்காது. அவ்வளவு முன்னரே அங்கு போயிருக்கின்றேன். படிப்பில் எக்கச்சக்கமான ஆர்வம் என்றோ, பாடசாலையில் விருப்பமோ என்றில்லை. இது ஒரு பிறவிப் பழக்கம். இன்றும் இது தொடர்கின்றது. பாடசாலைக்கு அருகிலேயே ஒரு ஆசிரியரின் வீடு இருந்தது. அவர் வீட்டில் போய்க் கேட்டால், வந்து கதவைத் திறந்துவிடுவார்கள். ஆசிரியர் அலுத்திருக்கமாட்டார், ஆனால் அவர் வீட்டில் இருந்தவர்களுக்கு இது அலுப்பாக இருந்திருக்கக்கூடும்.
 
பாடசாலை முடிந்தால் வீட்டை எப்போதும் போய்க் கொள்ளலாம். தேடவே மாட்டார்கள். ஒரு நாள் பூரா போகாமல் இருந்தால் கூட, அப்படி ஒரு நாளும் நடக்கவில்லை, அடுத்த நாள் வந்து விடுவான் என்று இருந்திருப்பார்களோ தெரியாது. எப்போதும் பாடசாலைக்கு வருவது ஒரே வழியில் தான் என்றாலும், திரும்பிப் போவதற்கு மூன்று வழிகள் இருந்தன. வந்த வழியிலேயே, தெருக்களினூடாக, திரும்பிப் போவது முதலாவது வழி. இரண்டாவது வழி கடற்கரையின் வழியே நடந்து போய், பின்னர் ஒரு ஒழுங்கையினூடாக பிரதான வீதியைக் கடந்து வீட்டுக்கு போகும் வழி. மூன்றாவது வழி கடலினூடாக நடந்து போவது. முழங்கால் ஆழம் வரை இருக்கும் கடலுக்குள் போய், பின்னர் அப்படியே நடப்பது. இது ஒரு பெரிய உடற்பயிற்சியாக இன்று உலகெங்கும் செய்யப்படுகின்றது. நாங்கள் அன்று முழங்கால் அளவு ஆழக் கடலில் பறந்திருக்கின்றோம். பவளப்பாறைகள் காலைக் கிழித்து இரத்தம் சொட்டச் சொட்ட எதுவுமே நடக்காத மாதிரி இருந்திருக்கின்றோம்.
 
கடல் பொங்குவதும், கடல் வற்றி நீர் உட் போவதும் ஒரு சுழற்சியில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு. சில நாட்களிலேயே இந்த அறிவு அனுபவத்தில் வந்துவிட்டது. எந்த நேரம் கடல் பொங்கும், எப்போது நீர் வற்றும் என்று தெரிய ஆரம்பித்திருந்தது. பாடசாலை விடும் நேரத்தில் கடல் பொங்கும் என்று தெரிந்தால், அன்று அந்தப் பாதையை தவிர்த்து, வந்த வழியிலேயே தெருக்களினூடாக வீட்டுக்கு போக வேண்டும். அப்படியே உடனேயே நேரே போய் வீட்டை என்ன தான் செய்வது. போகும் வழியில் மூன்று வாசிகசாலைகள் இருந்தன. சந்தியில் இருந்த வாசிகசாலை பெரியது. ஆங்கில, தமிழ் செய்தித்தாள்கள், ஆனந்த விகடன், குமுதம் போன்ற இந்திய வார வெளியீடுகள், டொமினிக் ஜீவாவின் மல்லிகை என்று எல்லா வகையானவைகளும் அங்கே போடப்பட்டுக்கொண்டிருந்தன.
 
அந்த வயதில் எப்போதும் என்னை ஈர்த்தது சினிமாச் சஞ்சிகைகளான பொம்மையும், ஜெமினி சினிமாவும் தான். ஒரு பத்து வயது அளவில் இருக்கும் பையனுக்கு இவை தான் அன்றைய டிக்டாக். ஜெமினி சினிமாவில் நடுப்பக்கத்தில், இரண்டு பக்கத்தையும் சேர்த்து, ஒரு நடிகையின் படம் இருக்கும். ஆனால் அதை யாரோ புதிதாக ஜெமினி சினிமாவை போட்ட அன்றே கிழித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். இதை ஒரு பிரச்சனையாக பெரியவர்கள் கதைத்தார்கள். எல்லோரும் அந்தப் படத்தை பார்த்த பின், அந்தப் படத்தை கிழித்துக் கொண்டு போனால் பரவாயில்லை என்று நினைத்தார்களோ என்னவோ. அதனால் ஜெமினி சினிமாவிற்கு கிட்டே போய் வருபவர்களை எல்லோரும் கொஞ்சம் கவனமாகவே பார்க்காத மாதிரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். பொம்மைக்கு அவ்வளவு காவலும், கண்காணிப்பும் இருக்கவில்லை.
 
அன்று பொம்மையில் வரும் கேள்வி - பதில் பகுதி மிகவும் பிடிக்கும். அன்று ஆகப்பெரிய அறிவாளிகள் என்று நான் நினைத்திருந்தது எம்ஜிஆரையும், சிவாஜியையும் தான். ஒரு பொம்மையில் கேள்விகளுக்கு சிவாஜி பதிலளித்து இருந்தார். இந்த வருடத்தின் சிறந்த பாடல் எது என்று அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 'செந்தூர பூவே செந்தூர பூவே...........' என்று அவர் பதில் சொல்லியிருந்தார். நான் இந்த பாடலை அதுவரை கேட்டிருக்கவில்லை. இந்தப் பாட்டை எப்படியாவது கேட்டு விடவேண்டும் என்று மனதில் குறித்து வைத்துக்கொண்டேன்.
 
அடுத்த நாள், வழமை போலவே, நான் பாடசாலை போன பொழுது, பாடசாலைக் கதவு பூட்டியிருந்தது. மெதுவாக ஆசிரியரின் வீட்டுக்குள் போனேன். 'சரி வா.................' என்று ஆசிரியர் திறப்புக் கொத்துடன் வந்தார். அந்த நேரம் அவர்களின் வானொலியில் 'செந்தூர பூவே செந்தூர பூவே..........' என்று ஆரம்பித்தது. நான் அசையவேயில்லை.
 
ஆயிரம் தடவைகள் அல்லது அதற்கு மேலும் இந்தப் பாட்டைக் கேட்டுவிட்டேன். இந்தப் பாடல் அசைய விடுவதேயில்லை. காணொளியாகப் பார்த்தாலும் அப்படியே. ஶ்ரீதேவியை அவரின் வீட்டில் இருந்து கூட்டி வந்து, இந்தப் பாடலில் அப்படியே நடிக்க வைத்திருப்பார்கள். அவர் இந்தப் பாடலில் கொஞ்சம் கறுப்பாக இருப்பது போல இருக்கும். ஒரு ஊரில் இருக்கும் மிக அழகான பெண் போன்று தான் இருப்பார். ஒரு நடிகை போன்று இந்தப் பாடலில் அவர் இருக்கவில்லை. 
 
இப்போது எப்போது இந்தப் பாடலைக் கேட்டாலும் அப்படியே அவரின் கடைசி நாட்களும் ஞாபகத்திற்கு வரும். அது வேற ஶ்ரீதேவி, செந்தூரப் பூ ஶ்ரீதேவி வேற என்றும் மனதில் தோன்றிக் கொண்டிருக்கின்றது.
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் விருப்பம்

  • கருத்துக்கள உறவுகள்

                             "சித்திர செவ்வானம் சிரிக்கக் கண்டேன்"

78 இல் வந்த பாட்டு.அந்தநேரம் வெளிநாடு போகவென்று யாழும் கொழும்புமாக அலைந்த நேரம்.

மனைவி வீட்டுக்கு போய் எல்லோருக்கும்  சேர்த்து போய்வருகிறேன் என்று சொல்ல போவேன்.

சிலவேளைகளில் இந்த பாட்டை ஒலிபரப்புவார்கள்.

எனக்காகவே ஒலிபரப்புவது போல ஒரு பிரமை.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/1/2025 at 10:51, ரசோதரன் said:

எனக்கு எதுவுமே தெரியாது என்று தான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தனர். அதனாலோ என்னவோ ஒரு நசிந்த விரலை கவனமாக பொத்திப் பொத்தி பார்ப்பது போல அக்காவும் அம்மாவும் என்னைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

ஏதோ இந்த வரி நன்றாக இருப்பது போல உணர்கின்றேன், உங்கல் எழுத்துக்கள் நாளுக்கு நாள் முன்னேற்றம் காட்டுகிறது, கலை கலைக்காகவே என படித்தவர்களுக்குள் கும்மியடிக்கும் இலக்கிய வட்டத்திற்குள் புகாமல் எங்களை போன்றவர்களை மனதில் வைத்து இதே போலவே தொடர்ந்து எழுதுங்கள்😁.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

எனக்கும் இப்படியான எண்ணம் வந்தது.

ரசோதரன் யாழுக்கு கிடைத் பொக்கிசம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, vasee said:

🤣......

அப்படியான எண்ணம் வருவது இல்லை, வசீ............ இனிமேல் அது சுத்தமாகவே வராது போல...

  • கருத்துக்கள உறவுகள்
On 23/1/2025 at 00:51, ரசோதரன் said:

மண்டைதீவு சாத்திரியார் எழுதிய குறிப்பின் படி நான் கடைசியாக படிக்கும் வகுப்பு பத்தாம் வகுப்புத்தான். அத்துடன் கல்வி முடிந்து விடும் என்று தெளிவாக எழுதி இருந்தார்.

18 hours ago, ரசோதரன் said:

பரம்பரைப் பாடசாலை என்று காரணம் கூறப்பட்டது. சார்பட்டா பரம்பரைக் கதைகள் போல பரம்பரைப் பெருமைகள் எதுவும் வெளி வந்திருக்காத அந்த நாளில், இது என்ன பெரிய பரம்பரை, இதற்காக நான் ஏன் நேர்த்திகடன் போல தினமும் நடக்க வேண்டும் என்று அலுப்பாக இருந்தது. அந்தப் பாடசாலையில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது.

மண்டைதீவு சாத்திரியாருக்கு உங்கள் ஊரில் இருந்த பாடசாலை பற்றித் தெரிந்திருக்கின்றது.

அதுசரி செந்ரதூரப் பூவை எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் இப்படியான எண்ணம் வந்தது.

ரசோதரன் யாழுக்கு கிடைத் பொக்கிசம்.

17 hours ago, vasee said:

எனக்கு எதுவுமே தெரியாது என்று தான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தனர். அதனாலோ என்னவோ ஒரு நசிந்த விரலை கவனமாக பொத்திப் பொத்தி பார்ப்பது போல அக்காவும் அம்மாவும் என்னைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

ஒரு கதாசிரியர் சில விடயங்களை சொல்லாமல் சொல்வதுண்டு, இந்த வரியில் அவர் ஒரு பெண் மூத்த சகோதரம் கொண்ட குடும்பத்தில் கடைசி பிள்ளையாக் உள்ளதாக கதாசிரியர் சொல்லாமல் சொல்வது போல இந்த வரியில் எனக்கு பட்டது, ஆனால் சாத்திரம் பற்றிய குறிப்பில் அவருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட சகோதரிகள் உள்ளார் என்பதனை ஒரு கதையினூடே நேரடியாக இல்லாமல் குறிப்ப்பாக சொல்லியிருக்கும் விதம் பலருக்கு புரிந்திருக்காது என்றே நினைத்தேன் ஆனால் உங்களுக்கும் சில கள உறவுகளுக்கும் புரிந்துள்ளது (வில்லவன்) தெரிகிறது.

2 hours ago, ரசோதரன் said:

🤣......

அப்படியான எண்ணம் வருவது இல்லை, வசீ............ இனிமேல் அது சுத்தமாகவே வராது போல...

அது ஒரு பரிணாம வளர்ச்சி, தவிர்க்க முடியாது.😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kavi arunasalam said:

அதுசரி செந்ரதூரப் பூவை எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா?

இல்லை கவிஞரே, நான் செந்தூர பூவை இதுவரை பார்த்ததில்லை. தேனி மாவட்டத்தில் பார்க்க வேண்டிய ஏராளமான இடங்களும், விடயங்களும் இருக்கின்றன போல . இளையராஜாவும், பாரதிராஜாவும், வைரமுத்துவும், அவர்களைத் தொடர்ந்து அங்கிருந்து வந்தவர்களும் தேனியை எல்லோர் மனதிலும் பதிய வைத்துவிட்டனர்.

முள்முருக்கம் பூவைப் போல, ஆனால் கொஞ்சம் வெளிறிய சிவப்பு நிறத்தில், அடர்த்தியாக இந்தப் பூ தெரிகின்றது படத்தில்.

பூவைப் பற்றித்தானே கேட்டீர்கள்...................😜.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, vasee said:

அது ஒரு பரிணாம வளர்ச்சி, தவிர்க்க முடியாது.😁

🤣..................

பதினைந்து அல்லது இருபது வருடங்களின் முன், சில மிக அருமையான ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துகளை சில தளங்களில் நான் வாசிப்பதுண்டு. இப்படியெல்லாம் எழுதவும் முடியுமா என்று ஆச்சரியப்பட வைத்தவர்கள் அவர்கள். போராட்ட காலம் அதன் நெருக்கடிகள் என்றில்லாமல், சாதாரண வாழ்க்கைகளையும் எழுதியிருந்தனர். அவர்கள் அன்று எழுதிய சில கதைகள் அப்படியே இன்றும் மனதில் தங்கி நிற்கின்றன. 

பின்னர் அவர்கள் காணாமல் போனார்கள். இணைய தளங்களில் எங்கும் அவர்களின் எழுத்துகளை நான் காணவில்லை. அவர்களின் முகப்புத்தகங்களில் சில தகவல்களை பதிந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன், ஆனால் நான் முகப்புத்தகங்களை முற்றாக தவிர்த்துக் கொண்டிருப்பதால், எனக்கு அவர்களிடம் இருந்த அந்த இணைப்பு அப்படியே விடுபட்டுவிட்டது.

இங்கு தான் நீங்கள் சொல்லும் பரிணாம வளர்ச்சி அவர்களின் பாதைகளில் நடந்ததை பின்னர் தெரிந்துகொண்டேன். எழுத்தில் இருந்து அவர்கள் சினிமாவிற்கு போயிருந்தனர். அதுவே தான் எழுத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி என்று பலரும் நினைத்துக் கொள்கின்றனர்.

அவர்கள் பணி செய்த சில படங்களையும் பார்த்தேன். மோசமான படங்கள், எந்த விதமான அனுபவத்தையும் கொடுக்காத, பல வகைகளில் செயற்கையான கதை, நடிப்பு என்பன. ஏன் இவர்கள் இப்படி ஆகினார்கள் என்று கவலையாக இருந்தது.

இவர்கள் இந்த வளர்ச்சியை தேடிப் போகாமல், எழுதிக் கொண்டே இருந்திருக்கலாம் என்று தான் எனக்குத் தோன்றுகின்றது. 

அன்று எங்களின் சில எழுத்தாளர்கள் அ. முத்துலிங்கம் அவர்களை பகிடி செய்வார்கள். ஈழத்தின் சிறந்த எழுத்தாளர் அ. முத்துலிங்கம் என்று சில இடங்களில், விமர்சகர்களால் சொல்லப்பட்டிப்பதால், இந்த ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம். இது அந்த உலகில் மிகச் சாதாரண ஒரு வழக்கம், ஒருவரை ஒருவர் மதிக்காமல் இருப்பது.

ஆனால், முத்துலிங்கம் அவர்கள் எழுத்துடன் மட்டுமே நின்று கொண்டார். பின்னர் ஒரு காலத்தில் திரும்பிப் பார்க்கையில், முத்துலிங்கம் அவர்கள் தான் முன்னுக்கு தெரியப் போகின்றார் போல.

பரிணாம வளர்ச்சி என்ற பாதையில் கட்டாயம் போக வேண்டும் என்றில்லை போல, வசீ..............

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

நான் கூறவந்த இலக்கிய பரிணாம வளர்ச்சி என்பது ஒரு சிறுபான்மை கொண்ட உயர் இலக்கிய அறிவு கொண்ட சமூகத்திற்காக இலக்கணத்திற்கான இலக்கியமாக பார்க்கின்ற ஒரு நிலை, கலையும் இலக்கியமும் மக்களுக்கானது, அது சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்த உதவ வேண்டும், அதனை சாமானிய மக்களாலும் விளங்கி கொள்ளமுடியுமாக இருத்தல்.

யாழ்களம் பல இலக்கிய முயற்சிகளை உருவாக்கி உள்ளது ஆனால் அதிலிருந்து ஒரு சிறந்த இலக்கிய படப்பாளிகளாக பலர் மாற முடியாமல் போய்விட்டது.

இலக்கியவாதிகள் சுயமாக சிந்திக்ககூடிய, சமூக சிந்தனை கொண்டவர்களாக இருக்கவேண்டும், வார்த்தைகளை இரசிக்கும் வண்ணம் கோர்த்து எழுதுவது ஒரு ஜனரஞ்சகமான எழுத்தாளர்களை உருவாக்கலாம் ஆனால் சிறந்த இலக்கியவாதிகளை உருவாக்க முடியாது.

யாழ்களத்தில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு எழுத்தாளர்களின் ஆரம்ப முயற்சி உற்சாகம் தருவதாக இருக்கும் ஆனால் அவர்கள் அடிப்படை சமூக சார்பான புரிதல் இல்லாமல் இருப்பார்கள், அதனை அறியாத நிலையிலேயே இருப்பார்கள் அதனை சுட்டிக்காட்டும் போது அதனை புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள், முரண்படுவார்கள்.

உதாரணங்களை குறிப்பிட விரும்பவில்லை அது தனிப்பட அவர்கள் மனதினை பாதிக்கலாம்.

பொதுவாக சிறந்த இலக்கியவாதிகள் மார்க்சிய சிந்தனாவாதிகளாக இருப்பது அவர்கள் சமூக நலனில் அக்கறை கொண்டவர்களாக இருப்பதால் அது ஒரு தற்செயல் நிகழ்வாக நிகழ்ந்துவிடுகிறது.

பானையில் இருப்பதுதானே அகப்பையில் வரும், சிறந்த சமூக சிந்தனை இல்லாதவர்களால் சிறந்த இலக்கியங்களை படைக்கமுடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, vasee said:

👍.....................

நீங்கள் எழுதியிருப்பதை சில தடவைகள் மீண்டும் மீண்டும் கவனமாக வாசித்து புரிந்துகொள்ள முயன்றேன், வசீ. ஒரு தனிமனிதன் தன்னுடைய வளர்ச்சியாக எண்ணி ஒரு பாதையில் முன்னே போவதையே நான் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் ஒரு செயற்பாட்டின் வளர்ச்சியை சொல்லியிருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். யோசித்துப் பார்த்தால், ஆச்சரியமாக இருக்கின்றது. இவை இரண்டும் ஒன்று அல்ல என்பது மட்டும் இல்லை, இவை எதிர் எதிரானவை போன்றும் தோன்றுகின்றன.

செவ்விலக்கியங்கள், சாஸ்திரிய கலைகள் என்று சொல்லப்படுபவை உலகெங்கும் சாமானிய மக்களால் புரிந்து கொள்ளப்படக் கூடியவையோ அல்லது ரசிக்கப்படக் கூடியவையோ இல்லை. உதாரணமாக, கர்நாடக சங்கீதத்தை சொல்லலாம். சாமானிய மக்களால் ஒரு சாஸ்திரிய சங்கீதம் ஏன் ரசிக்கப்பட முடியாமல் இருக்கின்றது என்ற கேள்விக்கு, சாமானிய மக்களுக்கு அதில் பரிச்சயம் இல்லை, பயிற்சி இல்லை என்பதே சொல்லப்படும் காரணம். அதை ரசிப்பதற்கான பயிற்சியே ஒரு பெரும் முயற்சி என்கின்றனர். இதே தான் செவ்விலக்கியங்கள் என்று சொல்லப்படுபவைக்கும். ஆனாலும், இவைதான் ஒரு மொழியின், ஒரு கலாச்சாரத்தின், ஒரு மக்கள் கூட்டத்தின் பெருமைகளாக, அதன் தொடர்ச்சியை முன்கொண்டு செல்லுபவைகளாக கருதப்படுகின்றன. இங்கு ஒரு முரண்பாடு இருக்கின்றது போலத் தோன்றுகின்றது, ஆனால் இதில் முரணே இல்லை என்கின்றனர். ஒன்றிலிருந்து இன்னொன்று உருவாகும் என்கின்றனர். சாஸ்திரிய சங்கீதத்தில் இருந்து மெல்லிசை/திரையிசை உருவாவது போல, செவ்விலக்கியம் ஒன்றிலிருந்து கல்கியின் 'பொன்னியின் செல்வன்' உருவானது போல.

முதலில் அம்புலி மாமா, பின்னர் பட்டுக்கோட்டை பிரபாகர், பின்னர் சுஜாதா, பின்னர் பாலகுமாரன், அதன் பின்னர் புதுமைப்பித்தன், அசோகமித்திரன், உலக இலக்கியங்கள் என்று ஒரு பாதையில் போனது மட்டும் இல்லை, ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு போகும் போது, நாங்கள் கடந்து போவதை நிராகரித்துக் கொண்டும் தானே போகின்றோம். ஆனால், இதில் இருக்கும் ஒவ்வொருவரையும் அவர்கள் தான் இலக்கியவாதிகள் என்று சொல்லி அங்கேயே நிற்பவர்களும் ஏராளமாக இருக்கின்றார்கள். ஆகவே இலக்கியம் என்பதை, அதன் அழகியலை ஒரு சட்டத்துக்குள் வரையறை செய்து கொள்ள முடியாதோ என்று தான் தோன்றுகின்றது.

இடதுசாரி அல்லது தீவிர கொள்கைப் பிடிப்பாளர்களிடம் இருந்து வரும் ஆக்கங்கள் தட்டையானவை என்ற பொதுவான அபிப்பிராயம் இருக்கின்றது. மனிதர்களின் நுண்ணிய உணர்வுகளுக்கும், அகப் போராட்டங்களுக்கும் அங்கே இடமே இல்லை. அந்தக் கலைஞனின், எழுத்தாளனின் கொள்கைப் பிரகாரம் ஒரு நியாயம் அவர்களின் படைப்புகளில் இருக்கும், ஆனால் பெரும்பாலான மனித வாழ்க்கைகள் நுண்ணிய உணர்வுகளால் தானே ஆக்கப்பட்டவை. எமக்குள் தோன்றும் தரிசனங்களை எவ்வித மறைப்புகளும் இன்றி வெளிப்படுத்துவதற்கு சில சிந்தனைகள், கொள்கைகள் தடையாகவும் ஆகலாம். 

தனிப்பட்ட ரீதியில், நான் ஒரு வாசகனே. என்னால் வாசிக்க கூடிய நாள் வரையில் நான் ஒரு வாசகனாவே தான் இருக்கப் போகின்றேன் என்று தான் நம்புகின்றேன். சில வேளைகளில் 'சரி, இன்று ஏதாவது எழுதுவோம்...........' என்று மனதில் தோன்றுவதை அப்படியே எழுதுகின்றேன். சட்டியில் இருப்பது தான் வருவது போல, எழுத்தில் உள்ளிருப்பது அப்படியே வருகின்றது.  ஒரு சாதாரண மனிதனின் வாக்குமூலங்களாகவே இவைகளை நான் நினைக்கின்றேன்.

உங்களின் கேள்விகளும், கருத்துகளும், விளக்கங்களும் பல திசைகளிலும் சிந்திக்கத் தூண்டுபவை, வசீ.................❤️.    

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.