Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

WhatsApp-Image-2025-03-22-at-11.23.52.jp

பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு.

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ புதிய கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு றிவோரா ஹோட்டலில் கைச்சாத்தானது.

நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை தொடர்ந்து உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்குவதற்காக புதிய முயற்சியொன்றை பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டு ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கடந்த 15 ம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

இதனையடுத்து நடக்கவிருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் இணைந்து களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானதையடுத்து பிரிந்திருந்த கருணா மற்றும் பிள்ளையான் மீண்டும் இணைந்துள்ளனர்.

https://athavannews.com/2025/1426117

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதற்கல்ல....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

நல்லதற்கல்ல....

முஸ்லீம்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடுவார்களாம் 😂

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

முஸ்லீம்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடுவார்களாம் 😂

அதில் ஒருவருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை” தீர்ப்பு அளித்து உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ புதிய கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு றிவோரா ஹோட்டலில் கைச்சாத்தானது.

இதற்கு திரைமறைவில் உழைத்தவர்கள் யாரோ?

அயல்நாட்டு ராஜதந்திரிகள் தான் அண்மைக் காலங்களில்

குறுக்கும் நெடுக்குமா ஓடுப்பட்டுத் திரிந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நல்ல மூவ்! அப்ப தான் யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்ற தெளிவான பார்வை மக்களுக்குக் கிடைக்கும்!😂

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளான கருணா - பிள்ளையான் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்தது ஏன்?

ஸ்ரீலங்கா, தமிழீழ விடுதலைப் புலிகள், கருணா அம்மான், பிள்ளையான் , கிழக்கு தமிழர் கூட்டமைப்பு, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி

படக்குறிப்பு, 21 வருடங்களுக்குப் பின்னர் அரசியல் ரீதியாக இணைந்த தலைவர்கள்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்

  • பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை

  • 22 மார்ச் 2025, 12:06 GMT

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் 21 வருடங்களின் பின்னர் அரசியல் ரீதியில் இணைந்துள்ளனர்.

மட்டக்களப்பில் இன்று (22) இடம்பெற்ற சந்திப்பின் போது, இருவருக்கும் இடையில் கனவான் என்ற பெயரிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

கிழக்கு மாகாண தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தாம் மீண்டும் இணைந்துக்கொண்டதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு உதயம்

ஸ்ரீலங்கா, தமிழீழ விடுதலைப் புலிகள், கருணா அம்மான், பிள்ளையான் , கிழக்கு தமிழர் கூட்டமைப்பு, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி

படக்குறிப்பு,கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது, கடந்த 15ம் தேதி உருவாக்கப்பட்டது

கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் இருப்பை உறுதிப்படுத்தி, கிழக்கு தமிழர்களின் வளர்ச்சியையும், சுபீட்சத்தையும் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியாக கிழக்கு தமிழர் கூட்டமைப்பு தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறது.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது, கடந்த 15ம் தேதி உருவாக்கப்பட்டது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகமும் இணைந்து இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கடந்த 15ம் தேதி கைச்சாத்திட்டிருந்தனர்.

எதிர்வரும் மே மாதம் 06ம் தேதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் இரண்டாம் கட்டமாக விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியும் இன்று (22) இணைந்துக்கொண்டுள்ளது.

இலங்கையில் தலைமறைவாக இருந்தபோலீஸ் மாஅதிபர் சரண் - 'பிரபாகரனை தேடுவதை போன்று தேடினோம்'

இலங்கையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூராட்சி சபைத் தேர்தல் - எப்போது, எப்படி நடக்கும்?

இலங்கையில் பெண் மருத்துவர் துஷ்பிரயோகம் - நாடு முழுவதும் போராட்டம் நடத்திய மருத்துவர்கள்

கச்சத்தீவு, தமிழ்நாடு - இலங்கை மீனவர் பிரச்னைக்கு தீர்வு என்ன? பிபிசிக்கு இலங்கை அமைச்சர் பேட்டி

21 வருடங்களுக்கு முன்னர் பிரிந்த கருணா அம்மான் - பிள்ளையான்

ஸ்ரீலங்கா, தமிழீழ விடுதலைப் புலிகள், கருணா அம்மான், பிள்ளையான் , கிழக்கு தமிழர் கூட்டமைப்பு, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி

படக்குறிப்பு, 21 வருடங்களுக்கு முன் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறினர்

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகளாக விளங்கிய விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) மற்றும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோர் 21 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிவதாக 21 வருடங்களுக்கு முன்னர் மார்ச் மாதம் 04ம் தேதி கருணா அம்மான் அறிவிப்பை வெளியிட்டதாக சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

தமிழீழ போராட்டத்தில் வடக்கு மாகாண தமிழர்களினால், கிழக்கு மாகாண தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்ததை எதிர்த்து, அப்போதைய தளபதியாக விளங்கிய கருணா அம்மான் குரல் எழுப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

''கிழக்கு மாகாண போராளிகள் மீது விடுதலைப் புலிகள் படையெடுத்து தாக்குதல் நடத்தியதை அடுத்து, சகோதர படுகொலைகளை ஊக்குவிக்க முடியாது என்ற அடிப்படையில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறுமாறு கருணா அம்மான் பணித்ததை தொடர்ந்து நானும் வெளியேறினேன்'' என்கிறார் சிவநேசத்துரை சந்திரகாந்தன்.

''தமிழீழ போராட்டம் என்கின்ற போர்வையில் வடக்கு தலைமைகளினால் கிழக்கு மாகாணம் வஞ்சிக்கப்பட்டு வந்ததை எதிர்த்து கருணா அம்மான் குரல் எழுப்பினார். அவருடைய கருத்தை ஏற்று நாமும், எம்மை போன்ற போராளிகளும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறினோம். ஆயுத இயக்கமாக ஒன்றும் சாதிக்க முடியாது என்பதால் ஒரு ஜனநாயக பாதையில் ஜனநாயக இயக்கமாக நாங்கள் ஒன்றுப்பட்டு செயற்பட முயன்றோம்.'' என சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

''தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை நான் உருவாக்கியபோதிலும் நானும் கருணா அம்மானும் ஒன்றாக இணைந்து பயணிக்க முடியாத துரதிஷ்டவசமான சில சம்பவங்கள் நடந்தது. நாங்கள் இரண்டு பேரும் தூர விலக வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. இருந்தாலும் நான் முதலமைச்சராக மக்களால் தெரிவு செய்யப்பட்டேன். கருணா அம்மான் நாடாளுமன்றத்தில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக வந்து மக்களுக்கு பணியாற்றினார்'' என சிவநேசத்துரை சந்திரகாந்தன் கூறுகின்றார்.

அரசியல் ரீதியில் இணைய காரணம் என்ன?

ஸ்ரீலங்கா, தமிழீழ விடுதலைப் புலிகள், கருணா அம்மான், பிள்ளையான் , கிழக்கு தமிழர் கூட்டமைப்பு, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி

கிழக்கு மாகாண தமிழர்களுக்காக கடந்த காலங்களை மறந்து, சரி செய்து, இந்த புதிய கனவான் ஒப்பந்தத்தின் ஊடாக இணைந்துக்கொண்டதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவிக்கின்றார்.

''இந்த மாகாணத்தினுடைய பல்லின மக்கள் வாழ்கின்ற சூழ்நிலையில் தமிழ் மக்களின் எதிர்காலம் அவர்களுடைய அரசியல் அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைப்பது. கல்வி, பொருளாதார, சுகாதார, உட்கட்டமைப்பு மேம்பாடு, மாகாண சபையின் அதிகாரம் என்கின்ற போது நாங்கள் தொடர்ந்தும் பிரிந்து செயற்பட்டு கொண்டிருப்பது மக்களுக்கும் பின்னடைவை கொடுத்து, இந்த மாகாணத்திற்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.

நான் குறிப்பிட்டதை போன்று பல்லின மக்கள் வாழ்கின்ற அடிப்படையில் எமது சமூகம் தொடர்ந்தும் பின்தள்ளப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அந்த அடிப்படையில் கடந்த காலங்களை மறந்து சரி செய்து, எதிர்காலத்தில் ஒரு உறுதியான கிழக்கு மாகாண அரசியல் இயக்கத்தை நிர்வ வேண்டும் என்ற பகிரங்க கோரிக்கை காரணமாக நாங்கள் இன்று பிரதான தளபதிகளாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் கனவான் ஒப்பந்தத்தை செய்திருக்கின்றோம்.'' என அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

கருணா அம்மான் என்ன சொல்கின்றார்?

''தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை எதிர்த்து நின்று, வெற்றியடைந்தவர்கள் என்பது உண்மையில் நாங்கள் மட்டும்தான்'' என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதை தொடர்ந்து, நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

''இது இணைவு என்பதல்ல. நாங்கள் இணைந்து தான் தொடர்ந்தும் இருந்திருக்கின்றோம். இன்று தேவையை கருத்திற் கொண்டு கூடியிருக்கின்றோம். நான் மத்திய அரசாங்கத்தில் வேறொரு பாதையில் இருந்தபடியால், அதேபோன்று பிள்ளையான் அவர்கள் முதலமைச்சராக இருந்த அந்த அடிப்படையில் இருவரும் அந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி பாரிய அபிவிருத்திகளை ஏற்படுத்தி பல மாற்றங்களை உருவாக்கியிருந்தோம்.

நானும் பிள்ளையானும் பல துயரங்களை சந்தித்திருக்கின்றோம். ஏனென்றால், விடுதலைப் புலிகள் இயக்கத்தை எதிர்த்து நின்று, வெற்றியடைந்தவர்கள் என்பது உண்மையில் நாங்கள் மட்டும் தான். அந்த தலைமைத்துவத்தின் தவறான முடிவால்தான் நாங்கள் இன்று வெளியேறியிருந்தோம்.'' என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.

''மீண்டும் நாங்கள் இணைந்துள்ளோம். எந்த நோக்கத்திற்காக நாங்கள் அன்று போராட்டத்திலிருந்து ஜனநாயக வழியில் வந்து கிழக்கு மாகாண மக்களையும், கிழக்கு மாகாண இளைஞர்களையும், கிழக்கு மாகாண தமிழ் பிரதேசங்களை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக வந்தோமோ, அதேநோக்கத்திற்காக தற்போது மீண்டும் நாங்கள் இணைந்திருக்கின்றோம். எமது இணைவு என்பது முடிவற்ற வளர்ச்சி பாதையை நோக்கியதாக இருக்கும் என்பதை நான் இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன். '' என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்ததன் பின்னர் தாம் அரசியல் ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும், அரசியல் ரீதியான ஒருமைப்பாடு இருவருக்கும் இடையில் இருக்கவில்லை என சிவநேசத்துரை சந்திரகாந்தன், பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.

எனினும், இன்று தானும், கருணா அம்மானும் இணைந்துக்கொண்டு அரசியல் ரீதியில் செயற்படும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c1en12d67njo

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் சக்தியாக எழுந்து நிற்போம்

MediaFile-6-3-780x470.jpeg

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பையும் பலப்படுத்திக் கொண்டு அரசியல் ரீதியாக நிரூபிக்கக் கூடிய சக்தியாக எழுந்து நிற்பதே எங்கள் நோக்கமாக இருக்கின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்னும் புதிய கூட்டணி கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இணைந்து கொண்டதுடன் அதற்கான கனவான் புரிந்துணர்வு ஒப்பந்தம்  மட்டக்களப்பில் கைச்சாத்திடப்பட்டது.

இதனை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பில் பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பிள்ளையான், “இற்றைக்கு 21 ஆண்டுகளுக்கு முன்னர் இதே மார்ச் மாதம் அளவில் என்று நினைக்கின்றேன் வன்னிக் காடுகள் அதிர்கின்ற அளவிலே எங்கள் தளபதி ஒரு அறிவிப்பைச் செய்கின்றார். 

அனைவருக்கும் தெரியும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலே வடக்குத் தலைமைகளால் கிழக்கு மாகாணம் வஞ்சிக்கப்பட்டு வருவதை எதிர்த்துக் குரல் எழுப்பினார். 

அவருடைய கருத்தை ஏற்று நான் உட்பட சுமார் ஆறாயிரத்துக்கும் அதிகமான போராளிகள் போர்க்கொடி தூக்கினோம். ஆனாலும் சிறிலங்கா அரசுடன் கூட பேச்சுவார்த்தை நடத்திய விடுதலைப் புலிகளின் வடக்குத் தலைமை ஆயிரம் ஆயிரம் மாவீரர்களைக் கொடுத்த எம்முடன் பேசமறுத்தமை கசப்பான விடயங்கள். 

இந்த நிலையில் நாங்கள் அங்கிருந்து வெளியேறி ஆயுத இயக்கமாக ஒன்றும் சாதித்து விட முடியாது என்பதை உணர்ந்து ஒரு ஜனநாயக இயக்கமாக நாங்கள் ஒன்றிணைந்து செயலாற்ற முனைந்தோம். 

கட்சியாக நாங்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை உருவாக்கினாலும் நானும் கருணா அம்மானும் ஒன்றாக இணைந்து பயணிக்க முடியாத சில துரதிர்ஷ்டவச நிகழ்வுகள் நடந்தன.

இருப்பினும் அரசியல் ரீதியில் அவர் அவரால் இயன்ற மக்கள் சேவையை ஆற்றியிருக்கின்றார். மறுபுறத்தில் நாங்களும் ஆற்றியிருக்கின்றோம். 

தற்போது பல்லின மக்கள் வாழும் இந்த மாகாணத்திலே தமிழ் மக்களினுடைய எதிர்காலம் அவர்களின் அரசியல் அதிகாரத்தினைத் தக்க வைப்பது, கல்வி பொருளாதார சுகாதார உட்கட்டுமான மேம்பாடு, மாகாணசபையின் அதிகாரம் என்பவற்றைப் பார்க்கும் போது நாங்கள் தொடர்ந்தும் பிரிந்து செயற்பட்டுக் கொண்டிருப்பது இந்த மக்களுக்கும் இந்த மாகாணத்திற்கும் பின்னடைவை ஏற்படுத்தும். ஏனெனில் எமது சமூகம் தொடர்ந்து பின்தள்ளப்படுகின்ற அபாயம் ஏற்பட்டிருப்பதை நாங்கள் உணர்கின்றோம். 

கடந்த கால கசப்புகளை மறந்த் எதிர்காலத்தில் ஒரு உறுதியான கிழக்கு மாகாண அரசியற் தளத்தை நிறுவ வேண்டும் என்ற பகிரங்க பிரயத்தனத்தின் காரணமாகவும் எமது கட்சியின் சிரேஸ்ட தலைவரின் முயற்சியின் காரணமாகவும் நாங்கள் கருணா அம்மானுடன் ஒப்பந்தத்தைச் செய்திருக்கின்றோம். 

இதனூடாக நாங்கள் எமது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கும், சிறந்த ஒரு அரசியற் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கின்றோம். 

நாங்கள் அண்மையில் உருவாக்கியுள்ள கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பையும் பலப்படுத்திக் கொண்டு அரசியல் ரீதியாக நிரூபிக்கக் கூடிய சக்தியாக எழுந்து நிற்பதே எங்கள் நோக்கமாக இருக்கின்றது. 

எனவே எமது கிழக்கு மாகாண மக்களே நாங்கள் முன்னமே கூறிய 21 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற வஞ்சிப்பு போலவே 70, 80 ஆண்டு காலமாக நாங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றோம், வஞ்சிக்கப்பட்டிருக்கின்றோம், பல கஸ்டமான சம்பவங்களைக் கடந்து வந்திருக்கின்றோம். 

2008ம் ஆண்டின் பின் ஓரளவு எமது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திய சமூகமாக நாம் நின்றிருக்கின்றோம். இப்போது அந்த நிலைமை சற்று மாறுபட்டிருக்கின்றது. 

அதேபோன்று ஏனைய தேசிய மட்ட அரசியல் சக்திகளுக்குச் சமமாக நாங்கள் எழுந்து நிற்க வேண்டிய அவசியம் கருதியும், எங்களது போராட்டத்திற்கு நாங்கள் கொடுத்த விலைகளை நாங்கள் உயிர்வாழுகின்ற போதே எமது மக்களைத் தூக்கி நிறுத்தி அவர்களை முடியுமானவரை அபிவிருத்தி செய்துவிட வேண்டும் என உறுதியான எண்ணப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். 

இந்த கட்டமைப்பு இனி ஒருபோதும் சிதைவடையாமல் கருத்து பேதங்கள் இல்லாமல் உறுதியாக இருப்பதற்கான விட்டுக்கொடுப்புகளைச் செய்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். 

இந்த இணைவை இயற்கையும் ஏற்றுக் கொள்ளும் அதேபோன்று எமது மாகாணத் தமிழ் மக்களும் ஏற்றுக் கொண்டு எம்முடன் கைகோர்த்துச் செயற்பட வேண்டும் என கோருகிறேன்” என்றார்.

https://akkinikkunchu.com/?p=317365

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

அரசியல் சக்தியாக எழுந்து நிற்போம்

large.IMG_8230.jpeg.afa6280704273ffb55e5

  • கருத்துக்கள உறவுகள்

கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் இணைவு; கிழக்குத் தமிழருக்கு ஆபத்தான கூட்டு

karuna-pillayan-viyalan.jpg

கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது கிழக்கு தமிழர்களின் பலத்தினை குறைக்கின்ற,வடக்கு,கிழக்கில் பிரிவினையை ஏற்படுத்தி பிரித்தாளும் ஒரு கூட்டமைப்பாகவே இருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யம் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கடந்த காலத்தில் ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் போன்றோர் இணைந்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பதனை உருவாக்கி இருப்பதாக ஊடகங்கள் மூலமாக அறிந்து கொண்டேன்.

நீதிமன்ற தீர்ப்பு ஒன்று கூறப்பட்டிருக்கின்றது. பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. நாங்கள் சொல்லவில்லை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது.

ஆகவே கூட்டமைப்பு அமைப்பது என்பது சாதாரண விடயமாக இருக்கலாம் .ஆனால் அந்த கூட்டமைப்புக்கு உரியவர்கள் கடந்த காலத்தில் என்ன செய்திருக்கின்றார்கள் என்பதை பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும்.ஒரு காலத்தில் ஒரு விடுதலை போராட்டம் என்பதனை உரிமையோடு போராடிய ஒரு கட்டமைப்பில் இருந்தவர்கள். ஒரு கட்டத்தில் அந்த இயக்கத்தை பிளந்து கொண்டு வந்து அந்த இயக்கத்தை காட்டி கொடுத்தவர்கள் என்று கூட சொல்லுகின்றார்கள் மக்கள். ஆகவே இவ்வாறானவர்கள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்குகிறார்கள், அதுவும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்று கூறுகின்றார்கள்.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்றால் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வடக்கு கிழக்கில் நாங்கள் இணைந்து செயல்படுகின்ற போதுதான் நாங்கள் ஒரு பலம் பொருந்திய சக்தியாக இருக்க முடியும். மாறாக கிழக்கு என்றும், வடக்கு என்றும், மலையகம் என்றும், மட்டக்களப்பு என்றும், யாழ்ப்பாணம் என்றும் நாங்கள் பிரிந்து செயல்படுகின்ற போது எங்களுடைய பலமான சக்தியை அழிக்கின்ற செயற்பாடாக தான் இருக்கும். ஆகவே கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்று உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு தமிழர்களின் பலத்தை குறைக்கின்ற அல்லது வடக்கு கிழக்கு என்று பிரிவினையை ஏற்படுத்தி பிரித்தாளுகின்ற ஒரு கூட்டமைப்பாக இருக்கின்றது.

கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டி போட்டு அங்கு தமிழ் பிரதிநிதியாக வரவேண்டிய கோடீஸ்வரனின் வெற்றியை தடுத்து அதாவுல்லாவின் வெற்றியை உறுதிப்படுத்தியவர் தான் இப்போது இந்த கூட்டமைப்பில் வந்து சேர்ந்திருக்கின்றார். கடந்த காலத்தில் பல்வேறுபட்ட தவறான செயற்பாடுகளில்,அதாவது லஞ்சம் வாங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களின் கட்சிகள் கூட இதில் இணைந்திருக்கின்றன.

எனவே கொலை,கொள்ளை,கப்பம்,கடத்தல்,காணாமல் ஆக்குதல்,திருட்டு, லஞ்சம்,தரகு போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பற்றி மக்கள் அறிவார்கள். எனவே இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களுக்கு நன்மை செய்கின்ற கூட்டமைப்பு என்பதை விட பேரினவாத்திற்கு துணை போகின்றவர்கள் எனலாம்.

கடந்த காலத்தில் பெரும்பான்மை இன பேரிடவாதத்திற்கு துணை போய் அங்கு பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள் முதலமைச்சராக இருந்தவர்கள்,இராஜாங்க அமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவரும் இணைந்து இருக்கிறார்கள். ஆகவே தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக விளங்கிக் கொள்வார்கள். கடந்த காலத்தில் தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள்,மக்களின் கடத்தலோடு சம்பந்தப்பட்டவர்கள்,காணாமல் ஆக்குதலோடு சம்பந்தப்பட்டவர்கள் என்று பல்வேறு பட்டவர்கள் இணைந்து செயல்படுகின்ற போது நிச்சயமாக இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக அமையும்.

ஆகவே நீதிமன்ற தீர்ப்புகள் சட்ட நடவடிக்கைகள் என்று எல்லாம் இருக்கின்றது. இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது இந்த கூட்டமைப்பால் தமிழ் மக்களுக்கு எதுவித பிரயோசனமும் இல்லை. இவர்கள் கிழக்கை பிரித்து துண்டாடி பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள்.

குறிப்பாக மாதவனை மைலத்தமடு இடங்களில் பெரும்பான்மை இனத்தவர்கள் அத்துமீறி குடியேறிய போது ஒரு சத்தமும் போடாதவர்கள் தான் இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் இருக்கின்றார்கள். ஆகவே மக்கள் இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பதற்கு வாக்களிக்க கூடாது வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.

https://akkinikkunchu.com/?p=317491

  • கருத்துக்கள உறவுகள்

‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ உண்மை என்ன?

March 24, 2025

‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ உண்மை என்ன?

— கலாநிதி சு.சிவரெத்தினம் —

சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான தமிழர் முற்போக்குக் கழகமும் இணைந்து ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் அரசியல் கூட்டணியினை 15.03.2025 அன்று உருவாக்கியுள்ளனர்.

‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ என்பது சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோருடைய சிந்தனையில் முகிழ்ந்த முத்தல்ல. 2018ம் ஆண்டு கிழக்குத் தமிழர்களின் அரசியல் சமூக, பொருளாதார, அரசியல் சீரழிவு கண்டு அவற்றை நிவர்த்திக்கும் முகமாக த.கோபாலகிருஸ்ணன், சட்டத்தரணி த.சிவநாதன் ஆகியோரின் முயற்சியினால் உருவாக்கிய ஓர் அமைப்பே ‘கிழக்குத் தமிழர் ஒன்றியம்’ ஆகும்.

கிழக்குத் தமிழர் ஒன்றியமானது அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பொதுச்சின்னத்தில் எதிர்காலத் தேர்தல்கள் அனைத்திலும் கிழக்கில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து, அனைத்துத் தமிழ் கட்சிகளையும் அழைத்து களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் ஒரு கூட்டத்தினையும் நடாத்தியிருந்தது. அங்கு நடந்த பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்குப் பின் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிப்பது என்றும் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உடன்பாடான கட்சிகள் அதில் கையொப்பம் இட்டு கூட்டமைப்பை உருவாக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டதுக்கு இணங்க கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அரசியல் பிரிவாக ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ உருவாக்கம் பெற்றது. இந்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டபோது அகில இலங்கை தமிழர் மகாசபை, தமிழர் விடுதலைக் கூட்டணி,(TULF) ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (TMVP), வரதாராஜப் பெருமாள் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி ஆகிய ஐந்து கட்சிகள் தங்களுடைய உடன்பாட்டைத் தெரிவித்திருந்தன. இருந்தபோதிலும் பின்பு வரதாராஜப் பெருமாள் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஆகிய இரு கட்சிகளும் விலகிக் கொண்டன. இறுதியாக அகில இலங்கை தமிழர் மகாசபை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி , ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் கைச்சாத்திடுவது என முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பல்வேறு இழுத்தடிப்புகளுக்குப் பின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதைத் தவிர்த்துக் கொண்டது. இறுதியாக அகில இலங்கை தமிழர் மகாபையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு அதன் அங்கீகாரத்துக்காக 2019ம் ஆண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்தது.

எனவே ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும்  பெயரைப் பயன்படுத்துவதற்கான தார்மீக உரிமை இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட மேற்படி இரு கட்சிகளுக்கும் உரியதே தவிர இதனை புறக்கணித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு அல்ல என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

இன்று கிழக்குத் தமிழர் ஒற்றுமை பற்றிப் பேசுகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 2020ம் ஆண்டுத் தேர்தலில் தங்களது கட்சி நலன் சார்ந்தே சிந்தித்தார்கள். கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனும் பெயரில் பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதை அவர்கள் விரும்பவேயில்லை. தங்களுடைய கட்சியின் பெயரும் படகுச் சின்னத்தையும் கிழக்குத் தமிழர்களின் நலனுக்காக விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை. ஆனால் அகில இலங்கை தமிழர் மகாசபை கிழக்குத் தமிழர்களின் நலனுக்காக மட்டக்களப்பில் தன்னை தியாகம் செய்யத் தீர்மானித்தது. அந்தவகையில் மட்டக்களப்பில் தனித்து தேர்தலில் போட்டியிடாது படகுச் சின்னத்தை ஆதரிப்பது என்றும் அகில இலங்கை தமிழர் மகாசபையின் சார்பில் தங்களுடைய இரு வேட்பாளர்களை நியமிப்பது என்றும் இது போன்று அம்பாறையிலும் திருகோணமலையிலும் அகில இலங்கை தமிழர் மகாசபை தனது சின்னமான கப்பல் சின்னத்தில் போட்டியிடுவதென்றும் அதனை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆதரித்து தனது வேட்பாளர்களை கப்பல் சின்னத்தில் நிறுத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவின்படி மட்டக்களப்பில் அகில இலங்கை தமிழர் மகாசபை தனது வேட்பாளர்களை படகுச் சின்னத்தில் நிறுத்தி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குச் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அம்பாறையிலும் திருகோணமலையிலும் அகில இலங்கை தமிழர் மகாசபையின் வேட்பாளர் பட்டியலுக்கு தங்களுடைய வேட்பாளர்களை நியமிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. அத்தோடு வி.முரளிதரன் (கருணா) அகில இலங்கை தமிழர் மகாசபையில் இணைந்து அம்பாறையில் போட்டியிட்டதையும் ஆட்சேபித்தார்கள். இவர்களுடைய இவ்வாறான சுயநலமான நடத்தையினால் அம்பாறையில் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒரேயொரு தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இத்தேர்தலில் இழக்கப்பட்டது. அதற்கான பெரும் பொறுப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையே சாரும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனும் பெயரில் பொதுச்சின்னத்தில் கிழக்கில் போட்டியிட்டிருந்தால் 2020ம் ஆண்டுத் தேர்தலில் மட்டக்களப்பில் இரு பிரதிநிதித்துவமும் அம்பாறையில் ஒரு பிரதிநிதித்துவமும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்புப்  பெற்று அத்துடன் மேலதிகமாக தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றும் கிடைக்கப் பெற்று கிழக்கில் தனித்துவம் பேணும் ஒரு மாற்று அரசியல் சக்தியாக உருவாகியிருக்க வேண்டிய கூட்டமைப்பை அப்போது இல்லாமலாக்கியது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியேயாகும்.

தேர்தலில் வெற்றியீட்டிய பின் மாற்று அரசியல் கலாசாரத்தினையும் கிழக்கிற்கான சிறந்த அபிவிருத்தித் திட்டங்களையும் உருவாக்கிச் செயற்பட வேண்டும் என்ற தூர சிந்தனை கொண்டு உழைத்த த.கோபாலகிருஸ்ணன் அவர்களை தேர்தலில் வென்றியீட்டிய சிவநேசதுரை சந்திரகாந்தன் எள்ளவும் பொருட்படுத்தாது தன்னுடைய நலனுக்காக எல்லாரும் சேர்ந்து உழைத்த வெற்றியினைப் பயன்படுத்திக் கொண்டார். அதற்கான பலனை 2024ம் ஆண்டு மக்கள் அவருக்கு வழங்கினர்.  

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 2020ம் ஆண்டில் அவர்களுக்கிருந்த அனுதாப அலையினையும் அபிவிருத்தி நோக்கையும் வைத்து தாம் வெற்றியடைவோம் என்ற நம்பிக்கையில் கிழக்கின் அரசியல் ஒற்றுமையினைச் சீர்குலைத்தார்கள். ஆனால் இன்று 2024ம் ஆண்டுத் தேர்தலில் கற்ற பாடத்தை அடிப்படையாகக் கொண்டு இப்போது கிழக்குத் தமிழர்களின் அரசியல் ஒற்றுமை, எதிர்கால நலன் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். இவர்கள் பேசுகின்ற இந்த ஒற்றுமை, நலன் என்பவை தாம் இழந்த அரசியல் நலன்களையும் சுகபோகங்களையும் மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக போடப்படும் அரசியல் கபட நாடகமேயாகும்.

எனவே கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இந்தக் கபட நாடகத்துக்குப் பின்னால் உள்ள சுயநல நோக்கத்தைப்  புரிந்து கொண்டு தமக்கான அரசியல் திசையை எதிர்காலத்தில் தீர்மானிக்க வேண்டும்.

https://arangamnews.com/?p=11912

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2025 at 07:53, ஈழப்பிரியன் said:

இதற்கு திரைமறைவில் உழைத்தவர்கள் யாரோ?

அயல்நாட்டு ராஜதந்திரிகள் தான் அண்மைக் காலங்களில்

குறுக்கும் நெடுக்குமா ஓடுப்பட்டுத் திரிந்தார்கள்.

வியாழேந்திரனும் எனும் போது நம்பாமல் இருக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கைத் துண்டாடி சிங்களவர்களுக்கு தாரைவார்க்கவே கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு!

[Monday 2025-03-24 06:00]

http://seithy.com/siteadmin/upload/srineshan-061224-seithy.jpg

கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது கிழக்கு தமிழர்களின் பலத்தினை குறைக்கின்ற, வடகிழக்கு பிரிவினை ஏற்படுத்தி பிரித்தாளும் ஒரு கூட்டமைப்பாகவே இருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

  

கிழக்கை பிரித்து துண்டாடி பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

"கூட்டமைப்பாக உருவாகினால் அது நல்ல கூட்டமைப்பாக இருக்கவேண்டும். நாங்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட்டவர்கள். ஊழல், மோசடி, இலஞ்சம், கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம் வாங்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிரானவர்கள் நாங்கள். ஆனால் கடந்த காலத்தில் ஒரு கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் போன்றோர் இணைந்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பதனை உருவாக்கி இருப்பதாக ஊடகங்கள் மூலமாகவும் உங்களது கேள்விகள் மூலமாகவும் நான் அறிந்து கொண்டேன். ஆனால் நான் சொல்ல வருகின்ற விடயம் என்னவென்றால் நீதிமன்ற தீர்ப்பு ஒன்று கூறப்பட்டிருக்கின்றது.

அண்மையில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் அந்த நீதிமன்ற தீர்ப்பு சொல்லப்பட்ட விடயத்தை அவ்வாறே கூறுகின்றேன். பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. நாங்கள் சொல்லவில்லை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது. ஆகவே கூட்டமைப்பு அமைப்பது என்பது சாதாரண விடயமாக இருக்கலாம். ஆனால் அந்த கூட்டமைப்புக்கு உரியவர்கள் கடந்த காலத்தில் என்ன செய்திருக்கின்றார்கள் என்பதை பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும்.

ஒரு காலத்தில் ஒரு விடுதலை போராட்டம் என்பதனை உரிமையோடு போராடிய ஒரு கட்டமைப்பில் இருந்தவர்கள். ஒரு கட்டத்தில் அந்த இயக்கத்தை பிளந்து கொண்டு வந்து அந்த இயக்கத்தை காட்டி கொடுத்தவர்கள் என்று கூட சொல்லுகின்றார்கள் மக்கள். ஆகவே இவ்வாறானவர்கள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்குகிறார்கள், அதுவும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்று கூறுகின்றார்கள்.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்றால் வடக்கு கிழக்கில் தமிழர்கள் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வடக்கு கிழக்கில் நாங்கள் இணைந்து செயல்படுகின்ற போதுதான் நாங்கள் ஒரு பலம் பொருந்திய சக்தியாக இருக்க முடியும். மாறாக கிழக்கு என்றும், வடக்கு என்றும், மலையகம் என்றும், மட்டக்களப்பு என்றும், யாழ்ப்பாணம் என்றும் நாங்கள் பிரிந்து செயல்படுகின்ற போது எங்களுடைய பலமான சக்தியை அழிக்கின்ற செயற்பாடாக தான் இருக்கும். ஆகவே கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்று உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு தமிழர்களின் பலத்தை குறைக்கின்ற அல்லது வடக்கு கிழக்கு என்று பிரிவினையை ஏற்படுத்தி பிரித்தாளுகின்ற ஒரு கூட்டமைப்பாக இருக்கின்றது.

கடந்த காலத்தில் ஒருவர் அம்பாறை மாவட்டத்தில் போட்டி போட்டு அங்கு தமிழ் பிரதிநிதியாக வரவேண்டிய கோடீஸ்வரன் அவர்களின் வெற்றியை தடுத்து அதாவுல்லாவின் வெற்றியை உறுதிப்படுத்தியவர் தான் இப்போது இந்த கூட்டமைப்பில் வந்து சேர்ந்திருக்கின்றார். கடந்த காலத்தில் பல்வேறுபட்ட தவறான செயற்பாடுகளில்,அதாவது லஞ்சம் வாங்குகின்ற செயல்பாடுகள் மற்றும் கையூட்டு வாங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என்று போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களின் கட்சிகள் கூட இதில் இணைந்திருக்கின்றது.

எனவே கொலை, கொள்ளை, கப்பம், கடத்தல், காணாமல் ஆக்குதல், திருட்டு, லஞ்சம், தரகு போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பற்றி மக்கள் அறிவார்கள். எனவே இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களுக்கு நன்மை செய்கின்ற கூட்டமைப்பு என்பதை விட பேரினவாத்திற்கு துணை போகின்றவர்கள் எனலாம்.

கடந்த காலத்தில் பெரும்பான்மை இன பேரிடவாதத்திற்கு துணை போய் அங்கு பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள் முதலமைச்சராக இருந்தவர்கள்,ராஜாங்க அமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவரும் இணைந்து இருக்கிறார்கள். ஆகவே தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக விளங்கிக் கொள்வார்கள். கடந்த காலத்தில் தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள்,மக்களின் கடத்தலோடு சம்பந்தப்பட்டவர்கள்,காணாமல் ஆக்குதலோடு சம்பந்தப்பட்டவர்கள் என்று பல்வேறு பட்டவர்கள் இணைந்து செயல்படுகின்ற போது நிச்சயமாக இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக அமையும்.

ஆகவே, நீதிமன்ற தீர்ப்புகள் சட்ட நடவடிக்கைகள் என்று எல்லாம் இருக்கின்றது. இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது இந்த கூட்டமைப்பால் தமிழ் மக்களுக்கு எதுவித பிரயோசனமும் இல்லை. இவர்கள் கிழக்கை பிரித்து துண்டாடி பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள்.

குறிப்பாக மாதவனை மைலத்தமடு இடங்களில் பெரும்பான்மை இணைத்தவர்கள் அத்துமீறி குடியேறிய போது ஒரு சத்தமும் போடாதவர்கள் தான் இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் இருக்கின்றார்கள். அது ராஜகா அமைச்சர்களாக இருந்தால் என்ன,பிரதி அமைச்சர்களாக இருந்தால் என்ன மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற போது ஒரு சத்தமும் போடாமல் இருந்து கொண்டு தரகு மற்றும் லஞ்சங்களை பெற்றுக்கொண்டு இருக்கின்றவர்கள் இந்த கூட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது.

ஆகவே, மக்கள் இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பதற்கு வாக்களிக்க கூடாது வாக்களிக்க மாட்டார்கள் என நான் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கிழக்கு மாகாணத்தை பொருத்தவரையில் நாங்கள் எந்த ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகளில் இதுவரையில் கைச்சாத்திடவில்லை. அவ்வாறு இடம்பெறவும் இல்லை. நான் அறிகின்றேன் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனியாக கேட்கின்றார்கள் நாங்களும் தனியாகத்தான் கேட்கின்றோம் எந்தவித ஒப்பந்த செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. வடக்கில் அவ்வாறான செயல்பாடுகள் இடம்பெறுகின்றதா என அறிவித்தாயின் நாங்கள் நிச்சயமாக அந்த சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அங்கு இருக்கின்ற கட்சியின் நிர்வாகத்தோடு தொடர்புடைய செயலாளர்களோடு அல்லது தலைவர்களோடு உரையாடுகின்ற போது அறியலாம் நான் நினைக்கின்றேன். அவ்வாறு கிழக்கில் இடம்பெறவில்லை அவ்வாறான ஒப்பந்தமும் செய்யவில்லை.

வடக்கிலும் குறிப்பாக யாழ் மாவட்ட மாவட்டத்திலும் செய்யக்கூடிய வாய்ப்புகள் இல்லை அவ்வாறு இல்லை என்றால் நான் நினைக்கின்றேன் வன்னி மாவட்டத்தில் அவ்வாறு ஏதேனும் நடைபெற்று இருந்தால் நாங்கள் அதனை கேட்டு தான் அறிய வேண்டும் இதுவரைக்கும் நான் அவ்வாறான விடயத்தை அறிந்து கொள்ளவில்லை. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கின்றபோது நான் நினைக்கின்றேன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒரே இடத்தில் சந்தித்தபோது நிழல் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த நிழல் படங்களை வைத்துக்கொண்டு ஒப்பந்தங்கள் செய்ததாக தவறான கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றது. சில சந்தர்ப்பத்தில் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கின்ற அடிப்படையில் சந்திப்போம் கைகளை கொடுப்போம் தோளில் தட்டி விட்டு வருவோம் இவ்வாறான விடையங்களை வைத்துக்கொண்டு சிலவேளைகளில் தவறான வதந்திகளை பிறக்கின்ற ஒரு செயல்பாடுகள் காணப்படுகின்றது.

நிச்சயமாக கூறுகின்றேன் அவ்வாறான தமிழரசு கட்சியும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ஒப்பந்த ரீதியாக எதுவும் செய்யவில்லை. இது வெறுமனே ஒரு வதந்தியான செயல்பாடாக தான் பார்க்கின்றேன.; அது நிழல் படம் என்பது கதைக்கின்ற போது கை கொடுக்கின்ற போது சில புரளிகளை ஏற்படுத்துவதற்காக படங்களை பிடித்து போடுவார்கள் அது படம் தானே தவிர அதை எதுவிதமான அர்த்தமும் இல்லாத விடயம்.

பட்டலந்த சித்திரவதை முகாம் என்பது உண்மையில் நடைபெற்ற விடயம் என்பதற்கான ஆதாரம் இப்போது பதிவுகளிலும் பேச்சுக்களிலும் வந்துவிட்டது. ஆகவே அதற்குரிய நடவடிக்கைக்கு முன் ஆயத்தமாக வருகின்ற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி பாராளுமன்றத்தில் ஒரு விவாதம் இடம்பெற இருக்கின்றது. அந்த விவாதத்தில் நாங்களும் கலந்து கொள்ள இருக்கின்றோம்.

ஆகவே, பட்டலந்தயில் சிங்கள இளைஞர்கள் ஜேவிபி இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்று எல்லாம் சொல்லப்படுகின்றது அதேபோன்று 88 89 காலப்பகுதியில் இந்த வேலைகளை செய்தவர்கள் 90 ஆம் ஆண்டு பிரச்சனைக்கு பின்னர் இதே போன்ற சித்திரவதைகள் கரடியினாறு முகாமாக இருக்கலாம் அல்லது கல்லடியாக இருக்கலாம் முறக்கொட்டான்சேனை, நாவலடி, கொன்டவெட்டுவான், சத்ருகொண்டான் போன்ற பல கிராமங்களில் சித்திரவதைகளும் கொலைகளும், பாலியல் பலாத்காரங்களும் தாராளமாக நடைபெற்று இருக்கின்றது.

சத்துருக்கொண்டானை எடுத்துக் கொண்டால் ஒரே நாளில் சுற்றி வளைப்பு செய்து கொக்குவில் சத்துருக்கொண்டான் பணிச்சையடி பிள்ளையாரடி போன்ற கிராமங்களை சேர்ந்த 186 அப்பாவி தமிழ் மக்களை அதிலும் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இவர்களை எல்லாம் அள்ளிக் கொண்டு சென்று சத்துருக்கொண்டான் முகாமில் அன்று இரவு படுகொலை செய்தார்கள் அதிலும் குழந்தை பிள்ளைகளை அங்கிருந்து தப்பி வந்த ஒருவர் கூறிய சாட்சியதின்படி வளைந்து இருந்த முந்திரிகை மரத்தின் மீது அவ்வாறே குழந்தைகளை வைத்து கத்திகளால் துண்டு துண்டுகளாக வெட்டி போட்டதை அவர் கண்டிருக்கின்றார்.

இவ்வாறு எல்லாம் படு மோசமான பாவகரமான செயல்கள் சத்துருகொண்டான் முகாமில் மாத்திரம் அல்ல கிழக்கு பல்கலைக்கழகத்திலும் 180 க்கும் மேற்பட்டவர்கள் அவ்வாறு ஏற்றிச் செல்லப்பட்டு நாவலடி முகாமில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள். எனவே பட்டலந்த முகாம் மாத்திரமல்ல வடக்கு கிழக்கில் அனேகமான படை முகாம்களில் இவ்வாறான சித்தரவதைகள் இடம் பெற்று இருக்கின்றது எனவே அதற்குரிய நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் செய்தால்தான் அவர்களை நாங்கள் சமத்துவவாதிகள் என்று கூறுவோம். அவர்கள் சமத்துவவாதிகள் என்றால் சட்டத்தின் முன்னிலையில் சிங்களவர்கள் முஸ்லிம்கள் தமிழர்கள் பரங்கியர்கள் மலாயர் அனைவரும் சமம் ஆகவே சட்டத்தின் மூலமாக அப்பாவிகளை பாதுகாக்க வேண்டியதும் குற்றம் செய்தவர்களை தண்டிக்க வேண்டியதும் அரசின் கடமை.

ஆகவே பட்டலந்த முகாம் நியாயத்தின் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது அது போன்று வடக்கு கிழக்கில் இருந்த முகாம்களில் இடம் பெற்ற அனைத்து சித்திரவதைகளும் படுகொலைகளும் காணமலாக்கப்பட்டதும் சந்திக்க வரவேண்டும் வெளிச்சத்துக்கு வரவேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். அதனை நாங்கள் பாராளுமன்றத்தில் பிரதிபலித்துக் கொண்டே இருப்போம்." என்றார்.

http://seithy.com/breifNews.php?newsID=331045&category=TamilNews&language=tamil

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.