Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச கண்காணிப்புடன் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் நடாத்தப்பட வேண்டும்!

adminJune 26, 2025

545.jpg?fit=861%2C556&ssl=1

சர்வதேச கண்காணிப்புடன் செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என செம்மணி மனித புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்ப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்  கிடம் கோரியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் செம்மணி புதைகுழி காணப்படும் இடத்திற்கு நேரில் சென்று புதைகுழிகளை பார்வையிட்டார்.

அதன் பின்னர் புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளிடம் நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார். அதன் போதே சட்டத்தரணிகள் அவ்வாறு கோரியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம் தாம் முன் வைத்த கோரிக்கைகள் தொடர்பில் சட்டத்தரணிகள் ஊடகங்களிடம் தெரிவிக்கையில்,

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிக்கான நிதியினை அரசாங்கம் தங்கு தடையின்றி விடுவிக்க வேண்டும். அதற்கான அழுத்தத்தினை கொடுக்க வேண்டும்.

மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்களை சரியான முறையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தற்போது மீட்கப்பட்டவற்றை கொழும்புக்கு எடுத்து செல்ல வேண்டிய தேவையுள்ளது.

ஏனெனில் யாழ்ப்பாணத்தில் அதற்கான வசதிகள் இல்லை. எனவே எச்சங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் , அதன் மீதான சோதனைகளை முன்னெடுக்க ஏதுவாக ஆய்வு கூட்டமொன்றினை யாழ்ப்பாணத்தில் நிறுவ வேண்டும் . அது பல விடயங்களில் பயனுள்ளதாக இருக்கும்

அகழ்வாராய்ச்சிக்கான தொழிநுட்ப வசதிகள் தேவையாக உள்ளது. அதே நேரம் நிபுணத்துவ மிக்க நிபுணர்கள் வேண்டும். நிபுணர்களின் பங்கேற்புடன் சர்வதேச கண்காணிப்புடன் இதன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என எடுத்து கூறியுள்ளோம் என தெரிவித்தனர்.

https://globaltamilnews.net/2025/217340/

  • Replies 106
  • Views 4.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    தயவு செய்து இவரின் தளத்திற்கு சென்று ஆதரவு தெரிவிக்கவும்.

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • இணையவன்
    இணையவன்

    புதைகுழி அகழ்வுகள் இந்த அளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதே பெரிய விடயம். மக்களின் சக்தி இங்குதான் வெளிப்பட வேண்டும். சர்வதேச மேற்பார்வையுடன் முழுமையான விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என யாழ் பொதுமக்க

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி சிந்துபாத்தி மையானத்தில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது

26 Jun, 2025 | 07:28 PM

image

செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள்  வியாழக்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு அமைய வியாழக்கிழமை (26) இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது நிலையில் குழந்தையின் மண்டையோட்டுத் தொகுதி உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 

செம்மணி, சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வுகள் இடம் பெற்றன. மூன்று குழந்தைகளின் மனிதச் சிதிலங்கள் உட்பட 19 மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் புதை குழி மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.

அத்துடன் 45 நாட்களுக்கு இரண்டாம் கட்ட அகழ்வுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இதன்படி அகழ்வுகளுக்கான செலவீன பாதீடு சமர்ப்பிக்கப் பட்ட நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றும் என்ற உத்தரவிற்கு அமைய  வியாழக்கிழமை (26) இரண்டாம் கட்ட அகழ்வுகளை முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினத்துடன் இதுவரை 22 மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 45 நாட்களுக்கு பாதீட்டு அளவு உள்ளதால் முதல் 15 நாட்களுக்கு  அகழ்வு பணிகள் சிறிய இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்து  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_20250626_162804.jpg

IMG_20250626_162941.jpg

IMG_20250626_163031.jpg


செம்மணி சிந்துபாத்தி மையானத்தில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

new-scaled.jpg?resize=750%2C375&ssl=1

செம்மணி மனித புதைகுழியில்-குழந்தை உள்ளிட்ட மூவரின் எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் முதல்நாள் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது

இதன்போது சிறு குழந்தையின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் அவைகள் அகழ்ந்து எடுக்கப்படவுள்ளன.

அதேவேளை அகழ்வு பணிகளை 45 நாட்கள் முன்னெடுக்க நிதியினை விடுவிப்பதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் , அதற்கான நிதி எதிர்வரும் திங்கட்கிழமையே கிடைக்கப்பெறும் எனவும் , 45 நாட்கள் அகழ்வு பணிகளுக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் , 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் நடைபெற்று , பின்னர் சிறு கால இடைவெளியின் பின்னரே பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1437316

  • கருத்துக்கள உறவுகள்

514300627_1140464504783589_4035962006968

512697365_1140464508116922_4739406367843

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும், மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம்.com

  • கருத்துக்கள உறவுகள்

new-scaled.jpg?resize=750%2C375&ssl=1

செம்மணி மனித புதைக்குழி விவகாரம் – மேலும் இரண்டு மனித சிதிலங்கள் கண்டுபிடிப்பு!

செம்மணி மனித புதைக்குழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கபட்டிருந்த நிலையில் இன்று(27) இரண்டாவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது இரண்டு மனித சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு அமைய நேற்று இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

நிலையில் குழந்தையின் மண்டையோட்டுத் தொகுதி உட்பட மூன்று மனித சிதிலங்கள் நேற்றைய தினம் மீட்கப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு மனித சிதிலங்களும், ஏனைய சிறு சிறு மனித எச்சங்களும் மீட்கப்பட்டிருந்தன.

செம்மணி, சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வுகள் இடம் பெற்றன.

மூன்று குழந்தைகளின் மனிதச் சிதிலங்கள் உட்பட 19 மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் புதை குழி மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.

அத்துடன் 45 நாட்களுக்கு இரண்டாம் கட்ட அகழ்வுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.

இதன்படி அகழ்வுகளுக்கான செலவீன பாதீடு சமர்ப்பிக்கப் பட்ட நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்ற உத்தரவிற்கு அமைய வியாழக்கிழமை இரண்டாம் கட்ட அகழ்வுகளை முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினத்துடன் இதுவரை 24 மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 45 நாட்களுக்கு பாதீட்டு அளவு உள்ளதால் முதல் 15 நாட்களுக்கு அகழ்வு பணிகள் சிறிய இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்து நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1437390

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக் கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டது!

28 JUN, 2025 | 06:43 PM

image

யாழ். செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட, மூன்றாவது நாள் அகழ்வாய்வு பணியின் போது மேலும் மூன்று மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

நேற்றுவரை 24 மனித எலும்புக்கூட்டுத்தொகுதி அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றையதினம் மேலும் 3 மனித மனித எலும்புக்கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனிதஎலும்புக் கூட்டுத்தொகுதிகளின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த நாட்களில் அடையாளம் காணப்பட்ட மனிதஎலும்புக் கூட்டு தொகுதியில், தாயொருவர் குழந்தையை அணைத்த வண்ணம் காணப்பட்ட மனித ஓட்டுத்தொகுதியானது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த புதைகுழியை அகழ்வதற்கு 45 நாட்கள் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகளை முன்னெடுத்து, பின்னர் சிறுகால இடைவெளியின் பின்னர் மீண்டும் அகழாய்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

VID-20250628-WA0028.jpg

VID-20250628-WA0040.jpg

Video.Guru_20250628_174354657_1_.jpg

https://www.virakesari.lk/article/218723

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனிதப் புதைகுழியை கொச்சைப் படுத்தியவர்களுக்கு முகத்தில் அறைந்த ஆதாரம் - சபா குகதாஸ் தெரிவிப்பு!

28 JUN, 2025 | 06:45 PM

image

செம்மணி மனிதப் புதைகுழியை கொச்சைப் படுத்தியவர்களுக்கு முகத்தில் அறைந்த ஆதாரம் வெளிவருவதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை இழிவு படுத்தி ஊடகங்களில் கதறிய சிங்கள இனவாதிகளுக்கும் கடந்த காலத்தில் பேரினவாத அரசுக்கு மீண்டு கொடுத்த தமிழ்க் குழுக்களும் மனிதப் புதைகுழியில் உள்ள எலும்புக் கூடுகள் விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இராணுவம் மற்றும் பொலிசார் உடையது எனவும் அத்துடன் சகோதர இயக்கங்களின் உறுப்பினர்களை படுகொலை செய்து புதைத்தவர்களினதும் என ஆதாரம் அற்ற குற்றச் சாட்டுக்களை முன் வைத்தனர்.

இனவாதி விமல் வீரவன்ச ஊடகத்தின் முன்னால் பொய்யுரைக்கும் போது செம்மணி புதைகுழியில் தாயும் கைக்குழந்தையும் கட்டியணைத்தபடியான எலும்புக் கூடு மற்றும் பத்து வயதிற்கு குறைந்த குழந்தைகளின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப் பெரும் உண்மையை திசை திருப்ப முனைந்த இனவாதிகளுக்கும் கோடரிக் காம்புகளுக்கும் முகத்தில் அறைந்தது போல் ஆதாரம் பதில் வழங்கியுள்ளது.

செம்மணிப் பகுதியில் புதைகுழி ஏற்படுத்தப்பட்ட சம காலத்தில் அப்பகுதி இராணுவ முகாமில் இருந்த   சிப்பாய்கள் சாட்சியாக இருக்கும் போது கடந்த கால அரசுகளின் கைக்கூலிகளும் தென்னிலங்கை இனவாதிகளும் யாரைக் காப்பாற்ற செம்மணிப் மனிதப் புதைகுழி விவகாரத்தை திசை திருப்ப முனைகின்றனர்? என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/218718

  • கருத்துக்கள உறவுகள்

513886152_1141386544691385_4688698831944

514186959_1141386618024711_2557167884558

512681556_1141386548024718_6696413011904

513757975_1141386621358044_9659188582482

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் சனிக்கிழமை மேலும் மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் மூன்றாம் நாள் பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய அகழ்வு பணிகளின் போது மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் 27 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 எலும்பு கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம்.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணியில் மண் மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதற்கு சென்ற குழு

29 JUN, 2025 | 03:55 PM

image

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மண்மாதிரிப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நட பிரத்தியேக குழுவொன்று ஞாயிற்றுக்கிழமை (29) யாழ்ப்பாணம் செம்மணிக்கு சென்றுள்ளது.

மனிதப்புதைகுழி அமைந்திருக்கும் இடத்தில் மண்மாதிரிகளைப் பரிசோதனை செய்வதற்காக, சட்ட மருத்துவ அதிகாரிகளால் விண்ணப்பம் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த விண்ணப்பத்துக்கு நீதிமன்றம் முறையான அனுமதிகளை வழங்கியதைத் தொடர்ந்தே, மண் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்காக கொழும்பிலிருந்து குறித்த குழு வருகைதந்து பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றது.

இதைவிட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இரசாயனவியல் பீட பேராசிரியர்களும் கார்பன் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். 

அத்துடன், செய்மதிப் படங்கள் மூலமும், ட்ரோன் மூலமும் மேற்கொண்ட ஆய்விலும் தற்போது அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு அருகாகவும் புதைகுழிகள் இருக்கலாம் என்று அகழ்வுப் பணிகளை முன்னெடுத்துவரும் பேராசிரியர் ராஜ் சோமதேவ சந்தேகம் வெளியிட்டிருந்தார்.

இந்த விடயமும் நீதிமன்றத்துக்கு அறிக்கை யிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் நீதிமன்ற உத்தர வுக்கு அமைய துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், அகழ்வுப் பணிகள் விரிவாக வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகின்றது.

IMG-20250629-WA0020__1_.jpg

IMG-20250629-WA0016__1_.jpg

https://www.virakesari.lk/article/218771

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 33 மனித எச்சங்கள் அடையாளம்!

29 JUN, 2025 | 03:50 PM

image

யாழ்.செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29)  வரையில் 33 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேவேளை புதைகுழி ஒன்றில் இருந்து பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன.  இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்று  பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் நான்காம் நாள் பணிகள்  இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டபோது மேலும்,  மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை (29) வரையில் 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 எலும்பு கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, செய்மதி படங்கள் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அப்பகுதிகளை துப்புரவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து வரும் நாட்களில் அவ்விடத்தில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை மனித புதைகுழி காணப்படும் இடத்தில் உள்ள மண் மாதிரிகள் பரிசோதனைக்காக  எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அகழ்வு பணிகளுக்கான செலவீன பாதீடாக 12 மில்லியன் வழங்கப்பட்ட போதிலும், அதற்கு அண்மித்த தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஞாயிற்றுக்கிழமை (29) அகழ்வு பணிகள் மதியம் 1 மணியுடன் நிறைவு பெற்றதுடன், நாளைய தினம் திங்கட்கிழமை காலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ac711de5-a00e-4d78-a279-c4521dd09d1f.jpe

014e2d49-4d9d-4d02-890a-eb80d22e2404.jpe

be9be5b4-c914-4440-865b-6b3c5b392123.jpe

https://www.virakesari.lk/article/218768

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் இராணுவத்தினரின் சடலங்கள் - அக்மீமன தயாரத்ன தேரர் கூறும் விடயம்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை மீளத் தோண்டுவதன் மூலம் இவர்கள் எதிர்பார்ப்பது என்ன? தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கூட அங்கு இருக்கக்கூடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் தற்போது மீண்டும் பேசப்படுகின்றது. இந்த விகாரம் மீளத் தோண்டப்படுவதன் நோக்கம்தான் என்ன? இந்த நாட்டில் போர் நிலவியது. பயங்கரவாதம் இருந்தது, மக்கள் கொல்லப்பட்டனர்.

chemmani mass grave

படையினர் கொல்லப்பட்டனர். அழிவுகள் ஏற்பட்டன. கடைசியில் படையினர்தான் போரை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை ஏற்படுத்தினர். செம்மணி மனிதப் புதைகுழியில் இருப்பவை யாருடைய சடலங்கள்? பூநகரி மற்றும் ஆனையிறவு மோதலின்போது படையினர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர்.

பொறுப்புடன் செயற்பட வேண்டும்

சில உடல்களே கிடைக்கப் பெற்றன. எனவே, செம்மணியில் மீட்கப்படும் மனிதச் சிதிலங்கள் இராணுவத்தினருடையவை என எம்மால் கூறமுடியும். செம்மணிப் புதைகுழியை எதற்காக மீண்டும் தோண்டிக் கொண்டிருக்கின்றனர்.

chemmani mass grave

இந்த விடயத்தைத் தோண்டத் தோண்ட அது யாசகனின் காயங்கள்போல் மாறிவிடும். எனவே, அரசும், தமிழ் அரசியல்வாதிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

https://tamilwin.com/article/venerable-akmeemana-dayaratne-thera-statement-1751175374#google_vignette

குழந்தைகளும் இராணுவத்தில் இருந்தவர்களோ?!

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து இவரின் தளத்திற்கு சென்று ஆதரவு தெரிவிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

குழந்தைகளும் இராணுவத்தில் இருந்தவர்களோ?!

அதுதானே!

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி

"மண்வெட்டி போடும் இடமெங்கும் எலும்புகள் தட்டுப்படும் நிலைமைதான் இப்போதுள்ளது. முப்பதிற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளபோதும், பெரும் எண்ணிக்கையிலான சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்ற இடங்களை நோக்கி இன்னமும் ஆய்வுக்குழு நகரவில்லை. அகழ்வுப்பணியை மேற்கொண்டுவரும் பிரதேசத்திற்கு அருகில் மிக முக்கியமான இடமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அகழ்வுக் குழுவினர் ஓரிரு நாட்களில் அல்லது வாரங்களில் அந்த இடத்தை அடையும்போது பல எலும்புக்கூடுகள் மீட்கப்படும் சாத்தியமுள்ளது"

செம்மணியில் தற்போது இடம்பெற்றுவரும் அகழ்வுப் பணிகளை நெருக்கமாகக் கண்காணித்துவரும் கொழும்பு வட்டாரங்களிலிருந்து பிந்திக்கிடைத்த தகவல்கள் இவ்வாறு தெரிவித்தன.

செம்மணி அகழ்வுப் பணிகள் ஆரம்பித்த நாள் முதல், அது குறித்த செய்திகளைத் தொடர்ச்சியாக அவதானித்துவருகிறேன். நம்பத்தகுந்த வட்டாரங்களுடன் பேசிவருகிறேன். சுருக்கமாகச் சொல்வதானால், தற்போது நடைபெறும் அகழ்வுப்பணிகள், தடையின்றி - வெளி அழுத்தங்களின்றி - தொடரப்படுமானால், உலகை உலுக்கிய கொசோவா, ருவாண்டோ புதைகுழிகள் போன்ற பேரதிர்ச்சிமிக்க உண்மைகள் அந்தப் பெருவெளியிலிருந்து வெளிவரலாம்.

செம்மணி என்பது எமது பால்ய காலத்தின் பேரச்சம். எனது ஊடகத்துறை ஆரம்பிக்கப்பட்ட நாட்களில், செய்திக்காக அந்தப் பெருவெளியில்தான் குகநாதன் சேருடன் கொண்டுபோய் நிறுத்தப்பட்டேன். "உதயன்" அடையாள அட்டை கிடைக்கத் தாமதமான காரணத்தினால், தொடர்ச்சியாகக் களத்திற்கு செல்ல முடியாமல்போக, பிரேம் நேரடிச் செய்தியாளனாக களத்தில் நின்றான். அப்போது, யாழ்ப்பாணத்தின் ஓரே ஊடகமான "உதயன்" பத்திரிகை, செம்மணிச் செய்திகளை உலகின் செவிகளில் உரக்கச் சொன்னது. பிபிஸிக்கான செய்திகளை வித்தியாதரன் அவர்கள் தினமும் வழங்கிக்கொண்டிருந்தார்.

இந்தப்புதைகுழிகளின் வரலாறும் அதனையொட்டிய அக்காலமும் குரூரமானவை.

95 இடப்பெயர்வுக்குப் பின்னர் குடாநாடு திரும்பிய மக்களை, யாழ்ப்பாணத்தின் மையத்திலிருந்த உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவம் ஆட்சி செய்தது. அந்த உயர்பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே காற்றில் நீந்தித்திரிந்த பு#லிக*ளின் பல சிறிய குழுக்கள், இராணுவத்திற்குப் பெரும் தலையிடியைக் கொடுத்தவண்ணமிருந்தன. ரோந்துப் படையினரின் மீது தாக்குதல், ஜாம்-போத்தல் குண்டுத் தாக்குதல், சோதனைச் சாவடிகள் மீது கெரில்லாத் தாக்குதல் என்று வகை தொகையின்றி இடம்பெற்றன. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிவிட்டதாகப் பீற்றிக்கொண்டாலும், ஒரு கணம் நிம்மதியாக தெருவில் நடமாடமுடியாத நிலையே இராணுவத்திற்கு நீடித்தது. மீளக்குடியமர்ந்த பொதுமக்களின் துணையின்றி புலிகளின் இந்தத் தாக்குதல்கள் நடைபெற வாய்ப்பில்லை என்று இராணுவம் உறுதியாக நம்பியது. மாலை ஐந்து மணி முதல் காலை ஐந்து மணிவரை ஊரடங்குச் சட்டத்தை அறிவித்தது. சனத்துக்குள் கநைந்திருந்த பு&லி*களைத் தேடிச் சல்லடைபோட்டது.

இதன்போதுதான் - கிட்டத்தட்ட 96 ஏப்ரலுக்குப் பிறகு - பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காணாமல்போகத் தொடங்கினார்கள். ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு சந்தேகத்திற்கிடமான வீடுகளுக்குச் சென்று கதவைத் தட்டிய இராணவுத்தினரால் பல அப்பாவிகள் காணாமல்போயினர். முதல்நாள் கண்டவர்கள் அடுத்தநாள் உயிருடன் உள்ளார்களா என்பதை காலை ஐந்து மணிக்குப் பின்னர்தான் உறுதிசெய்யமுடிந்தது. அக்காலப்பகுதியில் இடம்பெற்ற கிருஷாந்தி படுகொலையினால், யாழ்ப்பாணம் அச்சத்தில் உறைந்தது. அதாவது, காணாமல்போதல் என்ற மர்மம் நிறைந்த அச்சத்தை இராணுவம் யாழ் மக்கள் மத்தியில் ஆழமாகப் பதியவைத்துக்கொண்டிருந்தது.

இந்தக் கொடிய ப்ரொஜெக்டை நிறைவேற்றிக்கொண்டிருந்;தவர் அப்போதைய கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா. அவரது கட்டளையின் கீழ் இயங்கிய 51 ஆவது டிவிஷன் படையணி, மீளக்குடியமர குடாநாட்டுக்கு வந்த யாழ் மக்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதற்காக உருவாக்கப்பட்டதாக அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படையினரின் கண்களில் விரல் விட்டு ஆட்டிக்கொண்டிருந்த ஐயா அண்ணை, குலதீபன் போன்ற சிறிய கெரில்லாக் குழுக்களைப் பிடிக்க முடியாத, இந்தப் படையணியினால் அப்பாவிகள் காணாமல்போனவண்ணமிருந்தனர்.

தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த காணாமல்போதல் சம்பவங்கள், சுண்டுக்குளியிலிருந்த - நிமலராஜன் வீட்டுக்கு அருகிலிருந்த - மனித உரிமைகள் செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டன. அங்கு செய்திக்குப் போகின்ற ஒவ்வொரு நாளும், காணாமல்போனவர்களின் தகவல்களை அப்போதைய இணைப்பாளர் சிறிதரன் தந்துகொண்டேயிருந்தார்.

தொடர்ந்துகொண்டிருந்த இந்த மர்மத்தின் மீது, சர்வதேச அமைப்புக்களின் பார்வை விழத்தொடங்கியபோது, யாழ்ப்பாணத்திலிருந்து ஜானக பெரேரா மாற்றப்பட்டு, அதிகாரி பலகல்லே வந்தார். அவரது வருகையுடன் காணாமல்போதல் சம்பவங்கள் கிட்டத்தட்ட முற்றாக முடிவுக்கு வந்தன.

1998 இல் கிருஷாந்தி கொலைவழக்கில் குற்றவாளியான சோமரட்ண ராஜபக்ஷ, தனது குற்றங்களையும் தான் புதைத்த சடலங்கள் தொடர்பான தகவல்களையும் சொல்லத் தொடங்கியபோதுதான், அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜானக பெரேரா படைகளினால் நிரம்பிய செம்மணியின் மீது செய்திக்கண்கள் திரும்பின. ஆனால், பல்வேறு காரணங்களினால் செம்மணி அகழ்வுப் பணிகள் பின்னர் முடங்கின.

தற்போது, அரியாலை - சித்துப்பாத்தி மக்கள் மின் மயானத்திற்காக தோண்டத்தொடங்கிய இடத்திலிருந்து, பேரழிவின் சாட்சியங்கள் உயிர்பெறத்தொடங்கியுள்ளன.

செம்மணியின் சூத்திரதாரி ஜானக பெரேராவின் குருதி தோய்ந்த கைகளைத் தமிழ்மக்களுக்கு முன்னரே அறிந்தவர்கள் ஜே.வி.பியினர் அவர்களது 71 ஆம் ஆண்டு புரட்சியைக் கொடூரமாக - இரத்தச் சகதியில் போட்டு சிதைத்தமைக்காக கப்டன் பதவியைப் பரிசாகப் பெற்றவர். பிறகு, ஜே.வி.பியின் 87 ஆம் ஆண்டுப் புரட்சியின்போது, ரோஹன விஜயவீரவைக் கைது செய்து கொலைசெய்த நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்தவர். ஜே.வி.பியின் புரட்சியை அடக்கி நசித்தமைக்காக பிரிகேடியராய் பதவி உயர்த்தப்பட்டவர். பல கொடிய சம்பவங்களின் பிதாமகனாக தன் காரியங்களைச் செவ்வனே நிறைவேற்றியபடி 'நல்வாழ்வு' வாழ்ந்த ஜானக பெரேரா, இந்தோனேசியா - ஆஸ்திரேலியா நாட்டு தூதுவர் பதவிகளையும் வகித்தார். 2008 இல் அனுராதபுரத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் பலியானார்.

ஜானக பெரேரா கொலையில் தொடர்புடைய ஒருவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது அடைத்துவைக்கப்பட்டுள்ள சிறிலங்கா சிறையில்தான், கிருஷாந்தியைக் கொலைசெய்த சோமரட்ண ராஜபக்ஷவும் அடைக்கப்பட்டுள்ளார்.

நீதிக்காக நிலம் பிழந்துள்ள செம்மணி, வரலாற்றின் எல்லா முடிச்சுக்களையும் அவிழ்த்தபடி, உண்மைகளைப் பிரசவிக்கத் தொடங்கியுள்ளது.

https://www.facebook.com/share/1Bz7Z2CgBK/?mibextid=wwXIfr

  • கருத்துக்கள உறவுகள்

514045541_1174584161351107_7404948239310

513955910_1174584231351100_5451503370596

514010923_1174584248017765_8909615297956

514513338_1174584291351094_1049013163259

ஒரு ஆரம்பப்பள்ளி பிஞ்சுக்குழந்தையின் உடல் கொன்று புதைக்கப்பட்டிருக்கும் செம்மணியின் துயரம்!

யாழ்ப்பாணத்தில் (அரியாலை) உள்ள செம்மணி புதைகுழித் தளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 4வது நாளாக அகழ்வு பணிகள் நடைபெற்றன.

இந்த இரண்டாம் கட்ட நடவடிக்கைகளில் இன்று ஓர் 6 - 8 வயது மதிக்கத்தக்க குழந்தையின் உடல் எச்சம் ஓர் புத்தகப்பை மற்றும் கறுப்பு நிற பாசிமணி கைசங்கிலியோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நீல நிற புத்தகப்பையானது UNICEF அமைப்பால் யுத்த முடிவுக்கு முன்னரான காலப்பகுதியில் வட கிழக்கு பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பையோடு ஒத்துப்போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை, செம்மணியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது, 22 ஏற்கனவே தோண்டி எடுக்கப்பட்டு தடயவியல் பகுப்பாய்விற்காக கவனமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

இந்த அகழ்வுகளில், மிலேச்சத்தனமாக கொன்று குவித்து புதைக்கப்பட்டுள்ள குழந்தைகள், சிறுவர்கள் என பலரது உடல் எச்சங்களும் தொடர்ச்சியாக கிடைப்பது வேதனைக்குறியதாகும், இதற்கான நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பது மனிதாபிமானம் உள்ள மனித குலத்தின் பிரார்த்தனையாக இருக்கும்!

Vaanam.lk

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

515207697_1148125550685749_9370840053294

  • கருத்துக்கள உறவுகள்
On 30/6/2025 at 03:52, ஏராளன் said:

செம்மணியில் மீட்கப்படும் மனிதச் சிதிலங்கள் இராணுவத்தினருடையவை என எம்மால் கூறமுடியும். செம்மணிப் புதைகுழியை எதற்காக மீண்டும் தோண்டிக் கொண்டிருக்கின்றனர்.

பின் எதற்காக அச்சப்படுகின்றீர்கள்? முழு உண்மையும் வெளியில் வர விடுங்கள்.

On 30/6/2025 at 03:52, ஏராளன் said:

இந்த விடயத்தைத் தோண்டத் தோண்ட அது யாசகனின் காயங்கள்போல் மாறிவிடும்.

இவன் எதற்காக இப்போ பதற்றப்படுகிறான்? இராணுவத்தினுடைய உடல்கள் என்கிறான், ஏன் தோண்டுகிறார்கள் என்கிறான். இராணுவத்தினருடைய உடல்கள் என்றால்; அவர்களின் உறவினர் யாரும் இதுபற்றி வாய் திறக்கவில்லையே? ஒரு இனத்தையே கொன்று புதைத்துவிட்டு, யாசகனின் காயமாம். மக்களுக்கு காருண்யத்தையும் அன்பையும் போதித்து வழிகாட்ட வேண்டிய மதகுரு, அழிவை போதித்து அதை நிஞாயப்படுத்துகிறார். இது என்ன இனமோ? இவற்றைப்பார்க்கும் போது வாழ்க்கையே வெறுத்துப்போகிறது நமக்கு. உலக ஆசையை துறந்து வந்த துறவி பேசுகிற பேச்சா இது? ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட இரு சிறுவர்களின் எலும்புக் கூடுகள்! 

01 JUL, 2025 | 09:48 AM

image

செம்மணி மனிதப் புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூட்டுத் தொகுதியில், இரு சிறுவர்களின் எலும்புக் கூடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை (30) அகழ்ந்து எடுக்கப்பட்டன.   

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் ஐந்தாம் நாள் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. 

6__1_.jpg

செம்மணி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) வரையில் 33 மனித எலும்புக் கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அவற்றில் ஏற்கனவே 22 எலும்புக் கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம்  மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. 

இறுதியாக அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூட்டுத் தொகுதிகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து குழப்பமான முறையில் காணப்படுவதால் அதனை அகழ்ந்து எடுப்பதில் அகழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 33 எலும்புக் கூடுகளில் நேற்றைய தினம் வரையில் 24 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவற்றையும் அகழ்ந்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், புதிதாக எதுவும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை ஞாயிற்றுக்கிழமை புதைகுழி ஒன்றினுள் அடையாளம் காணப்பட்ட நீல நிற பை முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவில்லை. அதனை அகழ்ந்து எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

6__2_.jpg

6__3_.jpg

https://www.virakesari.lk/article/218897

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி புதைகுழிக்கு நீதி கிடைக்க வேண்டும் : சமூக செயற்பாட்டாளரான சகோதர மொழி இளைஞன் 

02 JUL, 2025 | 10:14 AM

image

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களுக்கு நீதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தென்பகுதி சிங்கள சமூக செயற்பாட்டாளரான அர்ஜுன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் அகழப்படுகின்றன. இதில் சிறுவர்கள், பெரியோர்கள் என கொடூரமாக கொலை செய்யப்பட்ட 38 பேரின் எலும்புக்கூடுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். இந்த விடயம் குறித்து சிங்கள மக்களாகிய நாங்களும் தமிழ் மக்களுடன் இணைந்து ஒன்றாக இருக்கின்றோம்.

யுத்த காலத்தில் ஏராளமானேர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நீண்ட காலமாக அவர்களை தேடும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே இந்த புதிய அரசாங்கத்திடம் நாங்கள் கேட்பது என்னவெனில், இதற்கு ஒரு தீர்வினை வழங்குங்கள். இதனால் அமைச்சர்களுக்கும் பெரிய பிரச்சினை இருக்கின்ற அதேவேளை மக்களுக்கும் இதனால் பிரச்சினை உள்ளது. புதிய அரசாங்கத்திடம் இருந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் தான் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.

https://www.virakesari.lk/article/218985

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2025 at 22:18, கிருபன் said:

மண்வெட்டி போடும் இடமெங்கும் எலும்புகள் தட்டுப்படும் நிலைமைதான் இப்போதுள்ளது. முப்பதிற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளபோதும், பெரும் எண்ணிக்கையிலான சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம்

large.IMG_8578.jpeg.6a8d08c7bf6b13b7c057

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களுக்கு நீதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தென்பகுதி சிங்கள சமூக செயற்பாட்டாளரான அர்ஜுன தெரிவித்துள்ளார்.

இடியோசை கேட்டால் “அர்சுனா அபயம்” என்று அழைத்தால் இடி விழாது ஓடிவிடுமாம். சிங்களவரோ, தமிழரோ அர்ச்சுனா என்று பெயர். கொண்டாலே அநீதிகள் அவர்கண்டு ஓடிவிடும்போல் தெரிகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 37 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன

Published By: VISHNU

05 JUL, 2025 | 12:07 AM

image

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டது.

IMG-20250704-WA0028.jpg

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக வெள்ளிக்கிழமை (4) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.

IMG-20250704-WA0027.jpg

மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் ஒன்பதாம் நாள் வெள்ளிக்கிழமை (4) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.

IMG-20250704-WA0025.jpg

யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 9வது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு முன்னெடுக்கப்பட்டது.

முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அழ்வுகளின் போது இதுரை 42 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகத்திற்குரியதாக கருதப்பட்டு புதிதாக அகழப்படும் பகுதியில் சிறுமி ஒருவரின் ஆடை ஒன்றும் ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டது - என்றார்.

https://www.virakesari.lk/article/219212

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலர் தாறுமாறாக புதைக்கப்பட்டுள்ளதை செம்மணி மனித புதைகுழியில் காணக்கூடியதாக உள்ளது – சட்டத்தரணி மணிவண்ணன்

05 JUL, 2025 | 10:49 AM

image

செம்மணி மனித புதைகுழியில் ஒரே தடவையில் ஏராளமானவர்கள் தாறுமாறாக புதைக்கப்பட்டிருப்பதை எங்கள் கண்ணால் பார்க்கக் கூடியதாக இருந்தது என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளை பார்வையிட்ட பின்னர்  வெள்ளிக்கிழமை (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சார்பிலும் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட மயானத்தில் அகழ்வாய்வு பணிகள் நடைபெறுகின்றன என்ற அடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் சார்பிலும் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.

செம்மணி சித்தப்பாத்தியிலே 11க்கு 11 என்ற விஸ்தீரணமான இடத்திலே அகழ்வு பணிகள் இடம்பெற்றாலும் சற்று அருகில் உள்ள ஏனைய பகுதியொன்றிலும் அகழ்வாய்வு பணி நடைபெறுகிறது. மேலதிகமான இடங்களிலும் அகழ்வாய்வு பணிகள் நடைபெறலாம் என்று அனுமானங்கள் காணப்படுகிறது.

மனிதப் புதைகுழிக்குள் சடலங்கள் மீடகப்படும் விதத்தை பார்க்கும் போது ஐந்துக்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள் ஒரே இடத்தில் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. 

ஒரே தடவையில் ஏராளமானவர்கள் தாறுமாறாக புதைக்கப்பட்டிருப்பதை எங்கள் கண்ணால் பார்க்கக் கூடியதாக இருந்தது.

நாற்பதை கடந்தும் மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருப்பது மிகப்பெரிய மனித புதைகுழி இந்த பிரதேசத்தில் இருப்பதற்கான அறிகுறிகளை தென்பட வைக்கிறது.

உலகம் முழுவதிலும் பல்வேறுபட்ட மனித புதைகுழிகள் அகழப்பட்டிருந்தாலும் கூட அவை எல்லாவற்றிலும் இருந்து சற்று வித்தியாசமானதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இந்த மனிதப் புதைகுழி காணப்படுவதாக ஊகங்கள் தெரிவிக்கப்படுகிறது.

இந்த எலும்பு கூட்டுத் தொகுதியிலே எந்த ஒரு உடைகளும் கண்டெடுக்கப்படாமல் இருப்பதும் சில குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மீட்கப்படுவதும் திட்டமிட்ட கொலை ஒன்று திட்டமிட்ட ரீதியிலே நடைபெற்று புதைகுழிக்குள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகங்கள் வெளியிடப்படுகின்றன.

தடயங்களை சரியாக கண்டுபிடிக்ககூடாதவாறு திசை திருப்பும் விதத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் சடலங்கள் புதைகுழிக்குள் புதைக்கப்பட்ட போது முன்னெடுக்கப்பட்டிருக்கலாமா என்று சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த அகழ்வுப் பணிகளை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்காக சட்டத்தரணிகள் நாங்கள் தயாராக இருக்கிறோம். மிக முக்கியமாக இந்த அகழ்வு பணி ஊடாக உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கிறது.

தற்போது கூட செம்மணி மற்றும் நாவற்குழி பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு எழுத்தானை மனு மீதான விசாரணை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. 

அதற்கான கட்டளை எதிர்வரும் 11 ஆம் திகதி வழங்கப்பட இருக்கின்ற நிலையில் இவ்வாறான தடயங்கள் வெளிப்பட்டிருப்பது மிக முக்கியமான விடயமாகும்.

செம்மணி புதைகுழியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று ஏராளமானவர்கள் இருக்கின்ற நிலையிலே ஆட்கொணர்வு மனுவிலே சம்பந்தப்பட்டவர்கள் எங்களுக்கு இப்போதும் சாட்சியாக இருக்கிறார்கள்.

அவர்களின் சாட்சியங்கள் இந்த எலும்பு கூட்டு பகுதியை அடையாளப்படுத்துவதற்கு மிக முக்கியமானதாக இருக்கும் என சந்தேகிக்கிறோம்.

அந்த வகையில் மிக நேர்மையாக அரசியல் தலையீடுகளுக்கு அப்பால் சர்வதே கண்காணிப்பின் கீழான ஒரு முழுமையான ஆராய்ச்சி இங்கு நடத்தப்பட வேண்டும்.

கொலைகள் மூடி மறைக்கப்பட முடியாதவை. இதன் பின்னணி உடனடியாக அடையாளம் காணப்பட வேண்டும். செம்மணியில் கிருசாந்தி குமாரசாமி படுகொலையில் தண்டிக்கப்பட்ட இராணுவ அதிகாரியின் சாட்சியத்திலே 600 வரையான உடல்கள் இங்கு புதைக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறார்.

இந்த அனைத்து பின்னணிகளும் ஆராயப்பட்டு இதிலே கொல்லப்பட்டவர்கள் மற்றும் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

அதுவரை சட்டத்தரணிகளாக நாங்கள் தொடர்ந்து அகழ்வாய்வு பணியின்போது சட்ட உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்து மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/219217

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவில்லை
"அவர்கள் திரும்பி வருவார்கள்..."
அந்த நம்பிக்கையில் தான் —
தாய்கள் தூங்காமல் வாழ்ந்தனர்,
சகோதரிகள் கண்கள் சோர்ந்தது எதிர்பார்ப்பில்,
பிள்ளைகள் கதவுகள் ஓரம் கண்பார்த்து வளர்ந்தனர்.
ஒரு நாள் –
ஒரு குரல் கேட்கும்,
ஒரு நிழல் திரும்பும்,
ஒரு நினைவாய் கதவு தட்டும்… என நம்பினோம்.
ஆனால் வந்தது அவர் இல்லை
வந்தது ஒரு செய்தி.
செம்மணியில் —
அவர் பெயரற்ற எலும்பாக மண்ணடியில் கிடப்பதாக.
அந்தக் குழியில் புதைந்தது —
ஒரு உடலல்ல,
ஒரு உறவின் கனவு,
ஒரு இனத்தின் நம்பிக்கை.
அவர்கள் காணாமல் போனவர்கள் அல்ல
காணப்படாமல் மறைக்கப்பட்டவர்கள்.
மண் இன்னும் உதிரும் உண்மை சொல்கிறது —
"அவர்கள் திரும்பவில்லை…
ஏனெனில் நீதி அவர்களுடன்
இந்த நிலத்துக்குள் புதைக்கப்பட்டது."
🕯️
நாம் அவர்களை திரும்ப பெற முடியாது…
ஆனால், நீதியை மட்டுமாவது திரும்ப பெற முடியாதா?
"அவர்கள் திரும்பி வருவார்கள்…"
அந்த நம்பிக்கையோடுதான் ஒரு இனத்தின் ஆயிரக்கணக்கான தாய்மார்களும், சகோதரிகளும், பிள்ளைகளும் தினமும் வாழ்ந்தனர்.
ஒரு நாளாவது –
அவர் மீண்டும் வருவார், ஒரு குரல் கேட்கும், ஒரு நினைவாய் கதவை தட்டுவார் என எதிர்பார்த்தனர்.
ஆனால் வந்தது அவர் அல்ல
வந்தது ஒரு தகவல்.
செம்மணியில்—அவர் பெயர் தெரியாத எலும்பாகக் கிடப்பதாக.
அந்தக் குழியில்தான் புதைந்தது,
அவர் மட்டும் அல்ல...
ஒரு உறவின் எதிர்பார்ப்பு, ஒரு இனத்தின் நம்பிக்கையும்.
அவர்கள் காணாமல் போனவர்கள் அல்ல
காணப்படாமல் மறைக்கப்பட்டவர்கள்.
அந்த மண் இன்னும் சொல்கிறது –
“அவர்கள் திரும்பவில்லை,
ஏனெனில் அவர்களுடன் நீதி ஒரு நாட்டின் நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளது.”
🕯️ நாம் அவர்களை திரும்பப் பெற முடியாது.
ஆனால் அவர்களுக்கான நீதியை மட்டுமாவது திரும்ப பெற முடியுமா?

(முகநூலில் படித்த கவிதை.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனித புதைகுழி : இதுவரை 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் : மற்றுமொரு புதிய குழியில் மண்டையோடு அடையாளம்

05 JUL, 2025 | 08:02 PM

image

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் புதிதாக அகழப்படும் புதைகுழியிலும் மண்டையோ ஒன்று அவதானிக்கப்பட்டதுடன் இன்று 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் பத்தாம் நாள் இன்று சனிக்கிழமை (5) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.

இதுவரை மொத்தமாக 45 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 42 மனித எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

இதேவேளை புதிதாக இன்றையதினம் மூன்று எலும்புக்கூடுகள்  அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறன.

செய்மதிப்படம் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு அகழப்படும் சந்தேகத்துக்கிடமான புதிய பகுதியில் மண்டையோடு ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது என்றார்.

WhatsApp_Image_2025-07-05_at_19.45.37__1

WhatsApp_Image_2025-07-05_at_19.45.37.jp

WhatsApp_Image_2025-07-05_at_19.45.36.jp

WhatsApp_Image_2025-07-05_at_19.45.35.jp

https://www.virakesari.lk/article/219259

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.