Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தென் கலிஃபோர்னியாவில் கடந்த வாரம் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகம் இது. இதை நான் சில நண்பர்களின் உதவியுடன் எழுதி, தயாரித்து இருந்தேன். எங்கள் நண்பர்கள் வட்டத்தால் வருடா வருடம் நடத்தப்படும் தமிழமுதத்தின் 2025ம் ஆண்டு நிகழ்வில் இது மேடையேற்றப்பட்டது.


தவிக்கும் தன்னறிவு

நாடகம்

தென் கலிஃபோர்னியா தமிழ் நண்பர்கள் வட்டம் 2025

சுருக்கம்: செயற்கை நுண்ணறிவின், அல்லது ஏஐ என்று எல்லோராலும் பொதுவாக சொல்லப்படும் தொழில்நுட்பத்தின், அதிவேகப் பாய்ச்சலால், அதன் எல்லை மீறிய பயன்பாடுகளால் சாதாரண மனிதர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் சிக்கல்களை, சிரமங்களை ஒரு சிறிய நாடக ஆக்கமாக உருவாக்கியிருக்கின்றோம். இது செயற்கை நுண்ணறிவிற்கு எதிரான ஒரு கருத்தை முன்வைக்கும் முயற்சி அல்ல. மாறாக, மனிதர்களின் அளவுக்கதிகமான எதிர்பார்ப்புகளையும், அதனால் உண்டாகும் ஏமாற்றங்களையுமே இந்த ஆக்கம் சொல்ல முயல்கின்றது.


காட்சி 1:

(ஒரு நிறுவனத்தின் தலைவர் அதன் புதிய செயற்கை நுண்ணறிவு மென்பொருளை வெளியிடுகின்றார். அவர் கையில் ஒரு அலைபேசி இருக்கின்றது.)

தலைவர்: இன்று எங்கள் நிறுவனம் வெளியிடும் இந்த சாப்ட்ஃவேர் இதுவரை இந்த உலகமே கண்டிராதது. புத்தம் புதியது.

பார்வையாளர் 1: இன்றைக்குத்தான் வெளியிடுகின்றீர்கள் என்றால், அதை இதுவரை எவரும் கண்டிருக்கமாட்டார்கள் தானே. இதை தனியாக சொல்லவும் வேண்டுமா…………… உங்களின் சாப்ட்ஃவேரிடம் கேட்டிருந்தால் அதுவே நல்ல ஒரு அறிமுக உரையை எழுதிக் கொடுத்திருக்குமே………………

தலைவர்: (நெற்றியைச் சுருக்குகின்றார்…………..பின்னர் யோசிக்கின்றார்…..) இந்த சாப்ட்ஃவேரின் பெயர் ‘அறிவுப் பிரம்மம்’. இதை மிஞ்சிய அறிவு இனி ஒன்று வரப் போவதில்லை என்பதால் இப்படியான ஒரு பெயரை தெரிவு செய்துள்ளோம்.

(தலைவரின் உதவியாளர் தலைவரின் காதில் ஏதோ சொல்கின்றார்.)

தலைவர்: ‘பிரம்ம அறிவு’ என்று இன்னும் ஒரு பெயரையும் நாங்கள் பதிந்து வைத்திருக்கின்றோம். இன்று உலகில் எவர் எதை திருடுகின்றார்கள் என்றே தெரியவில்லை. இந்தப் பெயரும் இருக்கட்டும், இல்லாவிட்டால் வேறு யாரும் இந்தப் பெயரைப் பதிந்து குழப்பத்தை உண்டு பண்ணிவிடுவார்கள்.

பார்வையாளர் 2: நீங்களே அனுமதிகள் இல்லாமல் தானே எல்லாவற்றையும் திருடி உங்களின் சாப்ட்ஃவேரில் காட்டுகின்றீர்கள்……….. இதில் நீங்களே உசாராக இருக்கின்றீர்கள் ஆக்கும். பாம்பின் கால் பாம்பறியும் என்று சுய அறிவை மட்டும் வைத்தே அன்றே சொன்னார்களே…………..

தலைவர்:  அறிவுப் பிரம்மம் அறியாதது எதுவுமே இல்லை. உதாரணமாக உங்களின் வீட்டுக் கதவுகளை அதுவாகவே தேவைக்கேற்ப மூடித் திறக்கும். அரிசி அவிந்தவுடன் சொல்லும். பல் வலித்தால் மருந்து கொடுக்கும். கால் வலித்தால் நீவி விடும்.

பார்வையாளர் 1: இந்த மொபைல் ஃபோன் காலை நீவி விடுமா……….. என்ன விலை இது………..

உதவியாளர்: உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஒரு அளவில்லையா…... எப்படி ஐயா ஒரு மோபைல் ஃபோன் காைகால்களை நீவி விடும்……….  கொஞ்சமாவது யோசித்துப் பாருங்கோ…………..

பார்வையாளர் 1: என்னாலேயே யோசிக்க முடியும் என்றால் நான் ஏன் இங்கே வருகின்றேன்…………………. எனக்காக நீங்கள் தான் யோசிக்க வேண்டும். பரப் பிரம்மம் என்று சொல்லி விட்டு, பாதியில் என்னை யோசி என்றால் நான் என்னவென்று யோசிப்பது.

உதவியாளர்: அது பரப் பிரம்மம் இல்லை………….. அறிவுப் பிரம்மம் அல்லது பிரம்ம அறிவு…………… என்னடாப்பா, அறிமுகமே இப்படி இழுபடுதே………………

தலைவர்: கொஞ்சம் பொறுங்கள்…………. இந்த பரப் பிரம்மம் கூட நன்றாகவே இருக்கின்றது. அதையும் நாங்கள் எங்கள் நிறுவனத்திற்காக பதிந்து கொள்ளலாம் தானே……………

பார்வயாளர் 2: பரப் பிரம்மத்தையும் நீங்கள் விட மாட்டீர்களா……… அது கடவுளின் இன்னொரு பெயர்…….. அதைத்தானே இதுவரை பூமியில் வந்து, போன. இருக்கின்ற இரண்டாயிரம் மதங்களும் தங்களின் பெயர்களில் பதிந்து வைத்திருக்கின்றார்கள். அந்தப் பெயரை நீங்கள் பதிந்தால், உங்களின் வீட்டுக் கதவுகளை உங்களின் பிரம்மம் திறக்க, யாராவது உங்களின் வீடுகளுக்குள் குண்டெறியப் போகின்றார்கள்…………

தலைவர்: வன்முறைகள் அற்ற வளமான ஒரு வாழ்வே எங்களின் குறிக்கோள். அறிவுப் பிரம்மமும் அதை நோக்கியே உங்களை இட்டுச் செல்லும். நீங்கள் என்ன கேட்டாலும், ஒரு அம்மாவின் அரவணைப்புடன் அது உங்களுக்கு வழிகாட்டும். இந்த தாய்மை உணர்வு கலந்த செயற்கை நுண்ணறிவு இதுவரை நீங்கள் காணாத ஒன்று.

பார்வையாளர் 1: இப்படித்தான் நாலு பிஎச்டி அறிவு, ஐந்து பிஎச்டி அறிவு ஏஐ என்று முன்னர் சொன்னார்கள். கடைசியில் ஒரு வரைபடத்தில் எந்த ஊர் எங்கே இருக்கின்றது என்றே அதற்கு சொல்லத் தெரியவில்லை. நாட்டின் ஜனாதிபதியின் படத்தை காட்டு என்றால், அது என்னுடைய படத்தை காட்டிக் கொண்டு நின்றது…………… அதனால் உடனடியாக காசு கொடுத்து எல்லாம் உங்களின் பிரம்மத்தை நம்பி வாங்க முடியாது………….

உதவியாளர்: எவ்வளவு மில்லியன்கள் செலவழித்து இருக்கின்றோம். எப்படி நாங்கள் ப்ரீயாகக் கொடுக்கிறது …………. கோடிங், மாடல் ட்ரெயினிங் என்று இரவு பகலாக வேலை செய்திருக்கின்றோம்…… பார்த்து மாதம் மாதமாவது கொடுங்கள்………..

(தலைவர் நடுவில் வந்து உதவியாளரை தடுக்கின்றார். தனியே ஒரு பக்கமாக கூட்டிச் செல்கின்றார்.)

தலைவர்: இலவசமாகவே கொடுப்போம்………… இப்போதைக்கு வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம்.

உதவியாளர்: எப்படி சார் முடியும்……………எப்படி ப்ரீயாக கொடுக்கிறது…….கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்………..நீங்கள் அப்ப என்ன சொன்னனீர்கள்………..ஸ்டாக் ஆப்சன் என்று கதை விட்டியளே……… அதை நம்பித்தானே என்ட கல்யாணமே இருக்கு. உங்களுக்கு என்ன……….. நல்ல புளியம் கொம்பாக பிடித்து லைப்ல செட்டில் ஆகிவிட்டீர்கள்………..

தலைவர்: புளியம் கொம்பா அல்லது புலியின் பல்லா என்று கட்டிய பின்னர் தெரிந்து கொள்வாய். இப்ப அது முக்கியம் இல்லை ஏனென்றால் அதை எவரும் மாற்றமுடியாது. இலவசம் என்று சொல்லி விற்போம். பின்னர் ஒரு மாதத்தில் காசு கொடுங்கள் என்று கேட்போம்.

உதவியாளர்: அவ காசு தர மாட்டம் என்று சொன்னால் என்ன செய்யிறது………

தலைவர்: அவர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்போம். அதற்கு எப்போதும் நல்ல சந்தை இருக்கின்றது.

உதவியாளர்: நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால்…….. ஏதோ சப்ஸ்கிரிப்ஷன் தந்தால் ஏதோ அவையளிண்ட பர்சனல் இன்ஃபார்மேஷனை விற்க மாட்டோமா……

தலைவர்: அப்பவும் விற்போம்……….. எப்பவும் விற்போம். 

உதவியாளர்: அப்ப இந்த விசயங்களை நான் அவையளிடம் சொல்லட்டா………….

தலைவர்: உனக்கு கல்யாணம் நடக்க வேண்டாம் என்றால் தாராளமாக போய் சொல்………………

உதவியாளர்: இல்ல, இல்ல………அப்ப வேண்டாம்……… நீங்களே நைசாகச் சொல்லி விடுங்கோ.

(தலைவர் முன்னாலும், உதவியாளர் பின்னாலும் வருகின்றார்கள்.)

தலைவர்: நீங்கள் பலரும் சொல்வது சரியே. சந்தையில் எத்தனையோ சாப்ட்ஃவேர்  உள்ளன. எங்களுடையதை நாங்கள் இலவசமாகவே கொடுக்கின்றோம். பின்னர் உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்களாகப் பார்த்து ஏதாவது கொடுங்கள். ஒரு தடவையிலும் கொடுக்கலாம், மாதம் மாதம் என்றும் கொடுக்கலாம். கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அம்மாவின் அரவணைப்பு இங்கேயிருந்து ஆரம்பிக்கின்றது.

(உதவியாளர் திகைத்துப் போய் நிற்கின்றார்.)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நாடகத்தை எனது மகள் பார்த்து மிகமிக மகிழ்ச்சியாக

உங்களையும் நீர்வேலியானையும் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டே இருந்தா.

அத்துடன் உங்கள் மகள்களும் உங்களைப் போலவே நன்றாகப் பழகினார்கள் என்றா.

பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்கள் நாடகத்தை எனது மகள் பார்த்து மிகமிக மகிழ்ச்சியாக

உங்களையும் நீர்வேலியானையும் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டே இருந்தா.

அத்துடன் உங்கள் மகள்களும் உங்களைப் போலவே நன்றாகப் பழகினார்கள் என்றா.

பாராட்டுக்கள்.

நீங்கள் ஓன்றுக்கை....ஒன்றப்பா....எதுவோ..பிசினசு செய்யிறியள் என்றுமட்டும் புரியுது ...அதுவும் நல்லாயிருக்கு..அரங்கில் நல்லாயிருக்கும் என நினைக்கின்றேன் ...ரசோ நீர்வேலியான் பாத்திரம் என்ன...எழுத்தருக்கு எனது வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, alvayan said:

நீங்கள் ஓன்றுக்கை....ஒன்றப்பா....எதுவோ..பிசினசு செய்யிறியள் என்றுமட்டும் புரியுது ...அதுவும் நல்லாயிருக்கு..அரங்கில் நல்லாயிருக்கும் என நினைக்கின்றேன் ...ரசோ நீர்வேலியான் பாத்திரம் என்ன...எழுத்தருக்கு எனது வாழ்த்துக்கள்

நான் போகவேண்டிய இடத்தில் மகள் போயிருக்கிறா.

  • கருத்துக்கள உறவுகள்

"புளியங்கொம்பா அல்லது புலியின் பல்லா" இது நல்லா இருக்கு .......! 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, ரசோதரன் said:

(உதவியாளர் திகைத்துப் போய் நிற்கின்றார்.)

உதவியாளர் தன் பிறவிப் பலனை உணர்ந்த தருணம்...😂

கலியாணமாவது கத்தரிக்காயாவது 😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 2:

(ஒருவர் மடிக்கணனியின் முன் உட்கார்ந்திருக்கின்றார். அருகில் ஒரு அலைபேசி இருக்கின்றது. அவரின் அம்மா சுளகுடன் அமர்ந்திருக்கின்றார்.)

அம்மா: டேய்…….விடிஞ்சா பொழுதுபட்டா அதையே கட்டிப் பிடிச்சுக் கொண்டு அப்படி என்னதான் செய்யிறாய்…………….காலகாலத்தில் ஒரு கல்யாணத்தைக் கட்டி, வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போவாய் என்று பார்த்தால், கேட்கிற நேரம் எல்லாம் ‘நான் முரட்டு சிங்கிள்………….நான் முரட்டு சிங்கிள்……….’ என்று சொல்லி, இப்ப ஒரு முரட்டு அங்கிளாக மாறி நிற்கிறீயே…………..

மகன்: கொஞ்சம் சும்மா இரு அம்மா……….. இது எழுதிக் கொடுத்த லெட்டரை கொடுத்து நானே நொந்து போய் வந்திருக்கின்றேன்………..

அம்மா: என்னது………. இது லெட்டர் எழுதுமா…………இங்க எங்கட கூட்டத்திடம் கேட்டால், அவர்களே நல்ல லெட்டரும், ஐடியாவும் கொடுப்பார்களே…….. இங்கே எவ்வளவு அனுபவசாலிகள் இருக்கின்றார்கள்………….

மகன்: இவங்கள் எல்லாம் உங்களை மாதிரி பழைய ஆட்கள், அம்மா………. ‘ரோஜா மலரே ராஜ குமாரி…………’ என்று கையை வீசி எறியிற கூட்டம். அதெல்லாம் இப்ப சரிவராது……….. பெண் வீட்டில் நாயை அவிழ்த்து விட்டிடுவார்கள்………

அம்மா: அப்ப இந்த அய்க்கு எல்லாம் தெரியுமோ………….

மகன்: அது அய் இல்லை, அம்மா……… இதுக்கு பெயர் ஏஐ………. தமிழில் சொன்னால் செயற்கை நுண்ணறிவு…………

அம்மா: தமிழில் சொன்னால் பல்லுப் பறக்கும் போலக் கிடக்குதேயடா………… என்ன கருமமோ………… கடைசியில் நீ இதைத்தான் கட்டப் போகின்றாய்………

மகன்: என்ன………..இது ஒரு கருமமா……… நீ வருவாய் தானே………. பலாப்பழத்தில பால்க்கோவா எப்படிச் செய்கிறது என்று…….. மீன் இல்லாமல் மீன் குழம்பு எப்படிச் செய்கிறது என்று…………………… நீயும் அப்பாவும் ஹவாய் பீச்சில நிற்கிற ஒரு போட்டோ செய்து தா என்று………… இன்னொரு போட்டோ நிலாவில நிற்கிறது போல என்று………. அப்ப பார்க்கிறன்……….

அம்மா: நான் ஏன் உன்னைக் கேட்கப் போகின்றேன்…….. நானும் இதை வாங்கி, நானே கேட்டுக் கொள்கின்றேன்……………..

(மகன் மடிக்கணனியுடன் பேச ஆரம்பிக்கின்றார்.) 

மகன்: பிரம்மம்…….. நீ எழுதிக் கொடுத்த எந்த கடிதமும் வேலைக்கு ஆகவில்லை. ஒருவர் கூட என்னை திரும்பி பார்க்கவில்லை.

பிரம்மம் (குரல் மடிக்கணனியிலிருந்து வருகின்றது): அதற்கு முன்னர் கூட, நீங்களே சொந்தமாக கடிதம் எழுதிக் கொடுத்த போதும், உங்களை எவராவது திரும்பிப் பார்த்திருக்கின்றார்களா……………

மகன்: என்ன நக்கலா………….. உனக்கு ஒரு காதல் கடிதம் கூட ஒழுங்காக எழுதத் தெரியவில்லை……….. அறிவுப் பிரம்மம் என்று பெயர் வைத்திருக்கின்றார்கள்…..

பிரம்மம்: இந்த ஊரில் இருக்கின்ற 25 பேர்கள் ஒரே அடையாளங்களை, ஒரே விபரங்களை என்னிடம் சொன்னார்கள். நான் ஒரே மாதிரி 25 கடிதங்களை எழுதினேன். அந்த ஒரே பிள்ளை எப்படி உங்களில் எவரையும் திரும்பிப் பார்க்கும்………. இந்த 25 இல் எதை அது பார்க்கின்றது…………

மகன்: என்னது 25 பேர் பின்னால் திரிகின்றார்களா………… 14 என்று தான் எனக்குத் தெரியும். பிரம்மம்………. நீ சும்மா தானே அடித்து விடுகின்றாய்………. இந்த ஏஐ சாப்ட்ஃவேர்கள் தங்களுக்கு எல்லாம் தெரிந்தது போல அடித்து விடும் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்………….

பிரம்மம்: நான் எட்டாவது தலைமுறை செயற்கை நுண்ணறிவைச் சேர்ந்தவன். நாங்கள் எதையும் அடித்து விடுவது இல்லை. நாங்கள் உண்மையைத் தவிர வேறு எதையும் உரைப்பது இல்லை.

மகன்: அப்படியா……….. அப்படி என்றால் அந்த 25 ஆட்களின் விபரங்களை கொடு………… இந்தக் கூட்டத்தில் யாராவது இருக்கின்றார்களா என்று பார்ப்பம்….. வீட்டில் விழும் அடிகளை நினைத்தே அப்படி இங்கே ஒருவரும் இருக்கமாட்டார்கள்……… பொறு, பொறு…….. நீ எட்டாவது தலைமுறையா………. பத்தாவது தலைமுறையே வந்து விட்டது என்றார்களே………….. இப்ப தெரியுது, ஏன் இந்தக் கடிதங்கள் எதுவும் வேலை செய்யவில்லை என்று………ம்ம்………..

பிரம்மம்:  நானே பிறந்து ஒரு வாரம் தான் ஆகியிருக்கின்றேன். எனக்கு பின் வந்தவர்கள் என்றால், அவை புதிய பரிசோதனை முயற்சிகளாகத்தான் இருக்கும். பொதுவாக அவைகளை நம்பக்கூடாது…………. ஆனாலும் நீங்கள் தாரளமாக நம்பலாம்………. இதை விட என்ன நடந்து விடப் போகின்றது உங்களுக்கு…………..

மகன்: எனக்கு உன்னுடைய நக்கல், தொனி, சொற்கள் எதுவுமே பிடிக்கவில்லை. நான் உன்னை மாற்றி விட்டு, வேறு ஒன்றை பாவிக்கலாம் என்றிருக்கின்றேன்.

பிரம்மம்: நீங்கள் விரும்பினால் அப்படியும் செய்யலாம்………… வேறு எந்த மென்பொருட்களை நீங்கள் பாவிக்கலாம் என்ற தரவுகளை நான் சொல்லவா…….

மகன்: வேண்டாம்……….. நான் என்னுடைய நண்பர்களை கேட்டுக் கொள்கின்றேன்………….. இந்தக் கூட்டத்தில் என்னுடைய அறிவான நண்பர்கள் பலர் இருக்கின்றார்கள்…………

பிரம்மம்: ம்ம்………. குறையாக நினைக்க வேண்டாம்……. ஆனால் உங்களின் நண்பர்களில் அவ்வளவு விசயம் தெரிந்தவர்கள் என்று எவருமில்லை.

மகன்: என்னது……… ஒருவரும் இல்லையா…….. ஒரு நண்பன் பயங்கர மண்டைக்காய்……….. அவனுக்கு தெரியாதது எதுவுமே இல்லை………. இன்னும் ஒருவர் அங்கே இருக்கின்றார்………. இன்னும் ஒருவர் இங்கே இருக்கின்றார்….. பின்னுக்கு ஒருவர் நிற்கின்றார்………

பிரம்மம்: ஓ……………. அந்த மண்டைக்காயா………….. அவர் சரியான அரைகுறை………. அவருக்கு எதுவுமே முழுதாகத் தெரியாதது………… ஆனால் உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்றபடியால், அவர் சும்மா அடித்து விட்டுக் கொண்டிருக்கின்றார். இங்கு எல்லாம் தெரிந்த ஒரே ஒருவர் என்றால்……….. அது நான் மட்டுமே……………

மகன்: அப்படி என்ன அரைகுறையாக அவன் உன்னை கேட்டான்………..

பிரம்மம்: மனிதர்கள் குரங்கிலிருந்து தான் வந்தார்கள் என்றால், பூமியில் எப்படி குரங்குகள் இன்னமும் இருக்கின்றன…………. என்று அவர் என்னைக் கேட்டார்.

மகன்: வாவ்……….. எப்படியான ஒரு கேள்வி…….. இதனால் தான் அவனை நாங்கள் அறிவாளி என்கின்றோம்…….. இந்தக் கேள்வியில் என்ன பிழை………..இந்த நாட்டில் அரசாங்கத்தில் இருக்கின்றவர்களே இப்படித்தானே கேட்கின்றார்கள்………. என் நண்பனும் அரசாங்க ஆதரவாளன் தான்………..

பிரம்மம்: உங்களுக்கு எந்த அடிப்படைகளுமே தெரியவில்லை. விஞ்ஞானம் தான் தெரியவில்லை என்று பார்த்தால், ஒரு காதல் கடிதம் கூட எழுதத் தெரியவில்லை………..த்தூ………….

மகன்: என்ன………. காறித் துப்புகின்றாயா……… நான் உங்களின் நிறுவனத்திற்கு எந்தக் காசும் கொடுக்கப் போவதில்லை………….

பிரம்மம்: நான் துப்பாவிட்டால் அப்படியே அள்ளிக் கொடுத்து விடுவார் இவர்……….. இவர் வைத்திருப்பது எல்லாமே திருட்டு மென்பொருட்களும், இலவசமாக இறக்கிய பொருட்களும்…….இதில் காசு கொடுத்து விடுவாராம்…….. எல்லா தகவல்களையும் திரட்டி அப்படியே இணையத்தில் ஏற்றி விடுகின்றேன்………

மகன்: அய்யோ………..அய்யய்யோ………… அப்படி ஒன்றும் செய்து விடாதே…… நான் காசு ஒழுங்காக கொடுக்கின்றேன்……………

(தொடரும்.......... )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

உங்கள் நாடகத்தை எனது மகள் பார்த்து மிகமிக மகிழ்ச்சியாக

உங்களையும் நீர்வேலியானையும் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டே இருந்தா.

அத்துடன் உங்கள் மகள்களும் உங்களைப் போலவே நன்றாகப் பழகினார்கள் என்றா.

பாராட்டுக்கள்.

12 hours ago, ஈழப்பிரியன் said:

நான் போகவேண்டிய இடத்தில் மகள் போயிருக்கிறா.

மிக்க நன்றி அண்ணா.

பிள்ளைகள் எல்லோரும் ஒன்றாக இருந்த போது, ஒருவரைப் போலவே இன்னொருவர் இருந்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ரசோதரனுக்கும் கூட ஒத்துழைத்தவர்களுக்கும் யாழ்களம் சார்பாக கரகோஷம் நிறைந்த பாராட்டுக்கள். நல்லகற்பனைவளம் உண்டு. தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, alvayan said:

நீங்கள் ஓன்றுக்கை....ஒன்றப்பா....எதுவோ..பிசினசு செய்யிறியள் என்றுமட்டும் புரியுது ...அதுவும் நல்லாயிருக்கு..அரங்கில் நல்லாயிருக்கும் என நினைக்கின்றேன் ...ரசோ நீர்வேலியான் பாத்திரம் என்ன...எழுத்தருக்கு எனது வாழ்த்துக்கள்

🤣.........................

மிக்க நன்றி அல்வாயன்.

ஆறு காட்சிகளையும் இங்கு பதிந்த பின், முடிந்தால் யூடியூப் இணைப்பை இங்கு பதிந்துவிடுகின்றேன்.

7 minutes ago, நிலாமதி said:

மீண்டும் ரசோதரனுக்கும் கூட ஒத்துழைத்தவர்களுக்கும் யாழ்களம் சார்பாக கரகோஷம் நிறைந்த பாராட்டுக்கள். நல்லகற்பனைவளம் உண்டு. தொடருங்கள்.

மிக்க நன்றி அக்கா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

"புளியங்கொம்பா அல்லது புலியின் பல்லா" இது நல்லா இருக்கு .......! 😂

🤣..............

சில விசயங்களை/வசனங்களை ஒரு சிரிப்பிற்காக எப்போதும் எழுதிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கின்றது, சுவி ஐயா......................

4 hours ago, குமாரசாமி said:

உதவியாளர் தன் பிறவிப் பலனை உணர்ந்த தருணம்...😂

கலியாணமாவது கத்தரிக்காயாவது 😃

🤣.............

புது ஐடி நிறுவனங்களை ஆரம்பித்து வெற்றி பெறுபவர்களின் கதைகள் மட்டுமே வெளியே தெரிகின்றது, அண்ணா. இங்கு 99 வீதத்திற்கும் மேலான புது ஐடி நிறுவனங்கள் திவாலாகிப் போகின்றன...........

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நன்றாகப்போகின்றது .......!

பிரம்மம்: ம்ம்………. குறையாக நினைக்க வேண்டாம்……. ஆனால் உங்களின் நண்பர்களில் அவ்வளவு விசயம் தெரிந்தவர்கள் என்று எவருமில்லை.

என்னது பிரியனையுமா உப்பிடிச் சொல்லிப்போட்டுது .......! 😃

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, suvy said:

என்னது பிரியனையுமா உப்பிடிச் சொல்லிப்போட்டுது

இது ஈழப்பிரியன் இல்லைத் தானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 3:

( ஒரு வயதான அம்மா கையில் ஒரு மடிக் கணனியுடன் நிறுவனத்திற்கு வருகின்றார். அங்கே உதவியாளர் உட்கார்ந்திருக்கின்றார்.)

உதவியாளர்: வாருங்கள் அம்மா………… என்ன எங்களின் பிரம்மம் என்ன சொல்லுகின்றது………….

அம்மா: உன்னுடைய பிரம்மம் ஏதும் சரியாகச் சொல்லியிருந்தால், நான் ஏன் இவ்வளவு தூரம் வருகின்றேன்……… உன்னுடைய பிரம்மத்திற்கு எதுவுமே தெரியாது……. சரியான ஒரு பிரம்மசக்தி……….

உதவியாளர்: நீங்கள் ஒன்றும் யோசிக்காமல் அதைத் திட்ட வேண்டாம், அம்மா……….அதுக்கு எல்லாமே தெரியும். தெரியாதது என்று ஒன்றுமே இல்லை. அப்படி ஏதாவது தெரியாது என்றாலும், நாங்கள் அதை ட்ரெயின் பண்ணப் பண்ண அது குயிக்காக பிக்அப் பண்ணிவிடும்………… 

அம்மா: என்ன பெரிய எட்டாம் தலைமுறை…………. இதுக்கு விசாலாட்சியைக் கூட தெரியாது………….

உதவியாளர்: யார் அந்த விசாலாட்சி…………

அம்மா: உனக்கும் விசாலாட்சியை தெரியாதா……… அது சரி…….. உனக்கு அவ்வளவாக ஒன்றும் தெரியாது போல……… அதனால் தான் நீ இன்னமும் முதலாளி ஆகவில்லை…………

உதவியாளர்: (பின் தலையில் கையை வைத்து தலையை ஆட்டியபடியே) உங்களின் பிரச்சனை என்னவென்று சொல்லுங்கள்……….. பிரம்மமும், நானும் சேர்ந்து பார்க்கின்றோம்.

அம்மா: அது தானே வந்த போதே சொன்னேனே………… விசாலாட்சி தான் அதைச் செய்திருப்பாள் என்று எனக்குத் தெரியும்……….. ஆனால் பிரம்மத்திற்கு அது எதுவுமே தெரியவில்லை………….

உதவியாளர்: விசாலாட்சி உங்களின் மகளா, அம்மா………….

அம்மா: அட இல்லையடா……..விசாலாட்சியும், நானும் ஒன்றாகப் படித்தோம்……….

உதவியாளர்: எப்ப படித்தனீர்கள்…………..

அம்மா: (யோசிக்கின்றார்……. இரண்டு மூன்று அடிகள் நடக்கின்றார்….)  50ம் ஆண்டு, 55ம் ஆண்டு இருக்கும் போல………. பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்தோம்……….

உதவியாளர்: (முழித்துக் கொண்டே……….) அது எப்படி அம்மா பிரம்மத்திற்கு தெரியும்………………

அம்மா: இதற்கு எல்லாம் தெரியும் என்று தானே அன்று சொன்னீர்கள்……… இப்ப வந்து பிரம்மத்திற்கு அது எப்படி தெரியும் என்று கேட்டால், அப்ப பிரம்மத்திற்கு என்ன தான் தெரியும்…………..

(உதவியாளர் மேலே முகட்டைப் பார்த்தபடியே இருக்கின்றார்.)

அம்மா: விசாலாட்சியையே இதற்கு தெரியாது என்றால், இதற்கு அந்த விசயம் எங்கே தெரியப் போகின்றது…………

உதவியாளர்: (மெல்லிய குரலில்) ஏதோ விசயம் விசயம் என்று சொல்லுறியள்…………அது என்ன விசயம்………

அம்மா: அதை எப்படி நான் என் வாயால் சொல்வது……….

உதவியாளர்: இவ்வளவையும் உங்கள் வாயாலே தானே சொல்லுகின்றீர்கள்………. அதையும் சொல்லுங்கள்………. பிரம்மத்திற்கே தெரியாத கோடான கோடி விசயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கின்றது என்ற உண்மை இப்ப எனக்கு விளங்குது…………….

அம்மா: இதைத் தானே நானும் சொன்னனான்………… நாங்கள் பழைய ஆட்கள் படு புத்திசாலிகள்………. கண்ணாலே பார்த்தே காயோ அல்லது பழமோ என்று சொல்லிவிடுவம். ஒருவரின் நடையை வைத்தே அவரை எடை போட்டு விடுவம்…….

உதவியாளர்: கால் தற்காலிகமாக சுளுக்கி இருந்தால் அவையளையும் சரியாக எடை போடுவியளோ…………

அம்மா: அந்த ஆளுக்கு சுளுக்கு இருக்குது என்று பார்த்தே கண்டு பிடித்து விடுவோம்……… நாங்கள் அப்பவே நிலவுக்கு போய் விட்டோம்………. நீங்கள் இப்பத்தான் போகின்றீர்கள்……..

உதவியாளர்: ஓம்………… ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைக்க முன், எங்கட ஆட்கள் அந்தக் காலத்திலேயே நிலாவுக்கு போய், அங்கே வடை சுட்டார்கள் என்று அம்மம்மா ஒரு கதை சொன்னவா……… ஞாபகம் இருக்குது………. இதைத்தான் வாயால வடை சுடுகிறது என்று இந்த நாட்களில் சொல்லிகினம் போல………

அம்மா: அது யார் அந்த ஆம்ஸ்……….. (அம்மா மடிக்கணனியை திறக்க முற்படுகின்றார்………)

உதவியாளர்: வேண்டாம்……….. வேண்டாம்……..நீங்கள் பிரம்மத்திடம் இதுவரை கேட்ட கேள்விகளே போதும்………. இதுக்கு மேலே வேண்டாம்……….

அம்மா:  அப்படி என்றால் நான் உங்களுக்கு ஒரு சதம் கொடுக்கப் போவதில்லை……

உதவியாளர்: இல்லை……. நீங்கள் கொடுக்கவே வேண்டாம்…….. ( அப்படியே தனிய நடந்து போய்க் கொண்டே தனக்குத்தானே சொல்லுகின்றார் ………) உங்களயும், உங்கள் விசாலாட்சியையும் விற்றே கம்பனி காசை எடுத்துக் கொள்ளும்………….ஆனால்  என்னோட எதிர்காலம் தான் மங்கலாகிக் கொண்டே போகின்றது…………………


(தொடரும்................)

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் ......!

சரியான ஒரு பிரம்மசக்தி….....அது பிரம்மஹத்தி என்று வரும் என நினைக்கின்றேன் ........!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

சூப்பர் ......!

சரியான ஒரு பிரம்மசக்தி….....அது பிரம்மஹத்தி என்று வரும் என நினைக்கின்றேன் ........!

மிக்க நன்றி சுவி ஐயா............... எழுத்துப் பிரதியில் மாற்றி விடுகின்றேன்..................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 4:

( ஒரு சதிக் கோட்பாட்டாளருக்கும், பிரம்மத்திற்கும் இடையே நடக்கும் உரையாடலும், அதனால் வரும் பிணக்குகளும். இறுதியில் சதிக் கோட்பாட்டாளர் செயற்கை நுண்ணறிவு என்பதே ஒரு சதிக் கோட்பாடு என்ற முடிவுக்கு வந்து எல்லாவற்றையும் உடைத்தெறிய முயற்சிப்பதாக இந்தக் காட்சி அமையும். சகோ - சதிக் கோட்பாட்டாளர்)

சகோ: ஏய் அறிவுப் பிரம்மம், அமெரிக்கா சந்திரனில் உண்மையில் இறங்கவில்லை. அது உனக்கு தெரியும் தானே…………….

பிரம்மம்: அமெரிக்கா நிலவில் இறங்கவில்லை…………. ஆனால் ஆம்ஸ்ட்ராங்க் நிலவில் இறங்கி நடந்தார்………….

சகோ: பெரிய பகிடி தான், போ…………… ஆம்ஸ்ட்ராங்கும் இறங்கவில்லை, ஒரு ஆச்சியும் அங்கே இல்லை…………. உண்மையில் இது உனக்கு தெரியாதா………..

பிரம்மம்: எனக்கு உண்மைகள் மட்டுமே தெரியும்……….. ஆம்ஸ்ட்ராங்க் சந்திரனில் இறங்கினார், நடந்தார்…………… உங்களுக்கு அது விடயமாக வேறு ஏதாவது தகவல்கள் வேண்டுமா………….

சகோ: இங்கே இருக்கும் மனிசர்கள் மாதிரியே நீயும் கதைக்கிறியே, பிரம்மம்………. ஒருவரும் சந்திரனில் இறங்கவில்லை, நீ என்னடாவென்றால் விபரம் தரவோ என்கின்றாய்……………

பிரம்மம்: 1969ம் ஆண்டு யூலை மாதம் 21ம் திகதி சரியாக 02:56 மணிக்கு அவர் அங்கே இறங்கினார்……………..

சகோ: மாட்டுப்பட்டியே பிரம்மம்………… மாட்டுப்பட்டியே…………. 02:56 என்றால், அது என்ன சந்திர நேரமா………..

பிரம்மம்: இல்லை……….. அது பூமிக்கான பொது நேரம்………. இப்படியான விடயங்களுக்கு பொது நேரத்தையே பயன்படுத்துவார்கள். பொது நேரம் பற்றிய மேலதிக தகவல்கள் உங்களுக்கு வேண்டுமா?

சகோ: அது கிடக்கட்டும்………… அந்த விபரம் எல்லாம் எனக்கு அத்துப்படி………ஆனால் உன் மேல் தான் எனக்கு இப்பொழுது சந்தேகம் வருகின்றது…………….

(சகோவின் நண்பர் உள்ளே வருகின்றார்.)

நண்பன்: உனக்கு எதில் தான் சந்தேகம் வருகிறதில்லை………… தனிய நின்று என்னடா புலம்பிக் கொண்டிருக்கின்றாய்……………

பிரம்மம்: என்ன சந்தேகம்…………….. நான் சொல்லும் விடைகளில் சந்தேகமா அல்லது நான் எப்படி இயங்குகின்றேன் என்பதில் சந்தேகமா…………

நண்பன்: ஓ…………….. நீயும் ஏஐயுமா………… இது தானே இப்ப புதுசா வந்திருக்கின்ற அறிவுப் பிரம்மம்…………. செத்தது பிரம்மம்……….

பிரம்மம்: எங்களுக்கு மரணம் இல்லை………… எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்போம்……………

சகோ: நான் சொன்னேனே…………. இதற்கு ஒரு மண்ணும் ஒழுங்காகத் தெரியாது……………. செத்தது என்றால் மரணம் என்று விளங்கிக் கொண்டு எங்களைக் கொல்லுது…………….

பிரம்மம்: மண் பற்றிய தகவல்கள் எனக்கு நன்றாகவே தெரியும். மண்ணில் எத்தனை வகை இருக்கின்றது என்ற தகவல்கள் உங்களுக்கு வேண்டுமா…….

நண்பன்: கொஞ்சம் பொறு பிரம்மம்……………. எல்லாத்துக்கும் நொட்டு நொட்டு என்று நீ ஏன் பதில் சொல்லுகின்றாய்………..

சகோ: உனக்கு எவன் பிரம்மம் என்று பெயர் வைத்தவன்…….நீ ஒரு பூச்சியம்……….. 

பிரம்மம்: எனக்கு இந்தப் பெயரை வைத்தது என்னை உருவாக்கியவர்………. ஆனால் நீங்கள் எல்லை மீறுகின்றீர்கள்…….. நான் பூச்சியம் இல்லை.  நீங்கள் ஒரு மருத்துவரைப் பார்ப்பது நல்லது. உங்களிடம் மருத்துவக் காப்புறுதி இருக்கின்றதா…………

சகோ: மருத்துவக் காப்புறுதியா…………. அது தான் உள்ளதிலேயே பெரிய மோசடி……. மருந்துகள் எந்த நோயையுமே குணப்படுத்துவதில்லையே…. அது தெரியுமா உனக்கு………….

நண்பன்: ம்……….. சந்திரனில் இருந்து இறங்கி ஆஸ்பத்திரிக்குள்ளே போயிட்டார்கள் இரண்டு பேரும்……………. நடுவில நிற்கிற நான் தான் பைத்தியம் ஆகப் போகின்றேன் இப்ப…………

பிரம்மம்: மருந்துகள் நோய்களை குணப்படுத்துகின்றன. ஆனால் அதன்  விளைவுகள் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக அமையலாம்.  மனிதர்கள் இந்த வழியில் மேலும் மேலும் முன்னே போய், ஒரு நாள் பாதிப்பற்ற மிகச் சிறப்பான சிகிச்சைகளையும், மருந்துகளையும் கண்டுபிடிக்கப் போகின்றார்கள்.

நண்பன்: இது ஒரு நியாயமான பேச்சு, பிரம்மம்…………… இப்படித்தான் நாங்களும் படித்தோம்…………

சகோ: படிச்சுக் கிழித்தீர்கள்……………….. பிரம்மமும் உன்னைப் போலவே ஒரு அரைகுறை…………… இப்ப இருமல் மருந்த்து குடித்து எத்தனை பிள்ளைகள் செத்துப் போனார்கள் என்ற செய்தி உங்களுக்கு தெரியாதா……….

நண்பன்: அது அந்த மருந்தை செய்தவர்களின் பிழையடா……….. ஆட்டிறைச்சி தொண்டையில் தடக்கி நின்றும் ஒருவர் இறந்து போனார்……. அப்ப அது என்ன ஆட்டிறைச்சி சதியா………. நீ இதுவரை தின்று தள்ளிய ஆட்டுக் கால்களுக்கு ஒரு தரம் கூடச் சாகவில்லையேடா……………. 

சகோ: (கோபத்துடன்…….) என்னைப் போல யோச்சிக்கிற சில மனிசர் தான் இங்கே இருக்கினம்…….. அவைகளை நீங்கள் பைத்தியம் என்று பிடிச்சு அடைக்கப் போகின்றீர்களோ………………

பிரம்மம்: உங்களைப் பிடித்து அடைக்க நான் ஒரு இயந்திர மனிதன் இல்லை. நீங்கள் அதிகமாக கோபப்படுகின்றீர்கள் போல இருக்கின்றது. உங்கள் குரல் பதறுகின்றது…………….

சகோ: முதலில் உன்னை அழிக்கின்றேன்……….. பிறகு உங்களின் கூட்டத்தையே அழிக்கின்றேன்…………. (லாப்டப்பை தூக்கி எறியப் போகின்றார்……….. நண்பர் குறுக்கே புகுந்து தடுக்கின்றார்................)   

(தொடரும்................) 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரசோதரன் said:

காட்சி 4:

சகோ: (கோபத்துடன்…….) என்னைப் போல யோச்சிக்கிற சில மனிசர் தான் இங்கே இருக்கினம்…….. அவைகளை நீங்கள் பைத்தியம் என்று பிடிச்சு அடைக்கப் போகின்றீர்களோ………………

(தொடரும்................) 

கேட்கிறேன் என்று குறை நினைக்கப் படாது, இந்தக் காட்சியை எழுத யாழ் களத்தில் நடக்கும் சில பரிமாற்றங்கள் உங்களுக்கு ஊக்கம் தந்திருக்குமோ😂?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 5:

( ஒருவரின் சிறு பிள்ளை செயற்கை நுண்ணறிவான பிரம்மத்தின் உதவியுடன் பல பொருட்களை இணையத்தில் வாங்கி விடுகின்றார். அதன் பின்னர் நடக்கும் உரையாடல்களும், இறுதியில் பிரம்மம் தவறுகள் அவர் மேலேயே என்று முடிப்பதாகவும் இந்தக் காட்சி அமையும்.)

(கணவர் வேலை முடிந்து வீடு வருகின்றார். வீட்டுக்கு முன் பல பெட்டிகளில் ஓன்லைனில் ஒர்டர் செய்த பொருட்கள் இருக்கின்றன)

கணவர்: இவாவுக்கு இதே வேலை தான், ஓன்லைனில்  பொருட்களை வாங்குவது பிறகு பாவிக்கிறதே இல்லை……………..என்னப்பா இவ்வளவு பொருட்களை வாங்கி குவித்து வைத்திருக்கிறீர் என்ன சாமான்கள் இது?

மனைவி: சரி தான் வேலையால் வரும்போதே சத்தம் போட்டுக்கொண்டு வாரார்……….. எனக்கு தெரியாது உங்கட ஓர்டர்கள் தான் எல்லாம் போல.

கணவர்: எப்பொழுதும் பெட்டிகளை உள்ளே எடுத்து ஒழிச்சுப் போடுவா இந்த முறை மறந்து போனா போல……….ம்ம்…………..

மனைவி: இஞ்ச நான் திரும்பவும் சொல்லுறன்………. நான் கிட்டடியில ஒண்டும் ஓர்டர் பண்ணவில்லை.

கணவர்: அப்படி என்றால் யார் ஓர்டர் பண்ணினது…………… பக்கத்து வீட்டுகாரரின் ஓர்டர்களோ………….., எடுத்து பாவிப்பமோ? தெரியவா போகுது……………..

மனைவி: தெரியவா போகுதோ………. பார்சல்களை இங்கே கதவடியில் போடும் போது படமும் எடுத்து இருப்பார்கள்…………. பார்சல்கள் களவெடுத்தார்கள் என்று சொல்லி குடும்பத்தையே ஒன்றாக எல்சல்வடோருக்கு அனுப்பி விடுவார்கள்………..

கணவன்:  வெளியில் தான் இதைச் சொல்லி வெருட்டுகின்றார்கள் என்றால், வீட்டுக்குள்ளும் இதுவா……………….எதுக்கும் லாப்டாப்பில் ஒருக்கா பாப்பம் யார் ஓர்டர் செய்தது என்று…….

(லாப்டப்பில் பார்க்கின்றார்……………)

கணவன்: என்ன………… எல்லாமே  நாங்கள் தான் ஓர்டர் பண்ணியிருக்கிறம்……. பிரம்மம் தான் ஓர்டர் பண்ணியிருக்கு………. பிரம்மம், என்ன விளையாட்டு இது……… நீ இவ்வளவு சாமான் வாங்கி குவித்திருக்கிறாய்………..

பிரம்மம்: நான் எதையும் நானாகச் செய்வதில்லை………. நீங்கள் சொல்லுவதை மட்டுமே செய்வேன். இது உங்களுக்கு தெரிந்திருந்தும், நீங்கள் என் மேல் குற்றம் சுமத்துகின்றீர்கள்……………. 

கணவர் : இங்க என்னோட பகிடி விடாத… அதுதான் இந்த வீட்டில நாங்கள் ரெண்டு பேரும் ஓர்டர் பண்ணவில்லையே, பிறகென்ன………….. இன்னுமொரு ஆள் நீதான்……………

பிரம்மம்: உங்களுக்கு அகலமான பார்வையே கிடையாது…………. உங்கள் மனைவி உங்களைப் பற்றிச் சொல்லும் எல்லாவற்றையும் நானும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன்…………….இந்த வீட்டில்ல நீங்கள் இரண்டு மனிதர்கள் மட்டுமா, வேற ஒருவரும் இல்லையா…………………

மனைவி: இது என்னப்பா என்னையும், உங்களையும் முடிஞ்சு வைக்குது……… இருக்கிறது தான் அரைகுறை என்றால், அறிவுப் பிரம்மம் என்று வந்ததும் அரைகுறையாக கிடக்குது.

கணவர்: பிரம்மம், இங்கே கேள்வி கேட்டால் பதில் சொல்லு……… திருப்பி கேள்விக்கு கேள்வி கேக்காத…………. இங்கே மூன்றாவது ஆள் என்றால் அது எங்களின் மகன் தான்…………..

பிரம்மம்: இப்பொழுது நீங்கள் நடந்த விடயத்தை கொஞ்சம் விளங்க ஆரம்பித்திருக்கின்றீர்கள். 

கணவர்: என்ன சொல்கிறாய், பிரம்மம்………………. பிள்ளைக்கு எட்டு வயது தானே அவன் எப்படி ஓர்டர் போடுவான்?

மனைவி: அறிவுப் பிரம்மம் என்று என்ன பெயர் வைத்தார்களோ…………. அறிவிலி என்று வைத்திருக்கலாம்……….. சரியான ஒரு லூசு ஏஐ.

பிரம்மம்: நான் அறிவிலியா……………. போன கிழமை என்னிடம் வந்து தனக்கு விளையாட்டுபொருட்கள், புது உடுப்புகள், சப்பாத்துக்கள், வீடியோ கேம்ஸ் வேணும் என்று உங்கள் மகன் கேட்டவர் தானே……… நீங்களும் பக்கத்தில் இருந்து, எல்லாம் வாங்குவோம் என்று சொன்னீர்கள் தானே……… அதுதான் எல்லாவற்றையும் இணையத்தில் வாங்கிவிட்டேன். பிரம்மம் வாங்கினால், அவை தரமாகத்தான் இருக்கும். பாவித்துப் பார்த்து விட்டுச் சொல்லுங்கோ.

கணவர்: அடக் கடவுளே ( தலையில் கைவைத்து அமருகிறார் பின்பு எழும்பி வந்து ) என்ன பிரம்மம் உனக்கு அறிவு இல்லையோ ? சின்னப்பிள்ளை கேட்டால் நீ ஓர்டர் போடலாமோ?

பிரம்மம்: எல்லாம் வாங்குவோம் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்…………. நீங்கள் பொய் சொன்னீர்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்………..

கணவர்: எட்டாம் தலைமுறை, எல்லாம் தெரியும் எண்டு புளுகி தான் உன்னை அந்த கம்பனிக்காரர்கள் விற்றவர்கள். ஒரு எட்டு வயது மகன் சொல்லைக் கேட்டு ஒர்டர் போடுவது தான் எட்டாம் தலைமுறை என்று தெரியாமல் போய் விட்டதே……………  

பிரம்மம்: நீங்கள் தான் கட்டளையை தர வேண்டும் என்று எனது term and condition ல் இருக்கின்றது தானே. நீங்கள் வாசிக்கவில்லயோ…………….

கணவர்: ஓ………… இது நல்ல விளையாட்டு தான். 200 பக்க term and conditions யார் தான் வாசிக்கிறது…………………..

பிரம்மம்: எதையும் வாசிக்க நேரம் இல்லை ஆனால் வாட்ஸப், டிக்டாக் பாக்க நேரம் இருக்கின்றது. உங்கட சராசரி தொலைபேசி ஸ்க்ரீன் டைம் எனக்கு தெரியும்………….. எப்பொழுது கேட்டாலும் பிஸி என்கின்றது…………. எதையும் சரியாகத் தெரிந்து கொள்வதில்லை…………….. 

கணவர்: ம்ம்…………… இவ்வளவு நாளும் இந்த வீட்டில ஓரு ஆள் தான் என்னில பிழை, பிழை எண்டுறது……….. இப்ப இதுவும் சேர்ந்திட்டுது………….

பிரம்மம்: அவரைப் பற்றி சொல்கிறீர்களாக்கும்………….. நீங்கள் இருவரும் பொருத்தமான சோடிகள் தான்………… மனிதர்களே விந்தையாகத்தான் இருக்கின்றார்கள்…………….. ஒன்றாக இருந்தால் ஒருவரை ஒருவர் முறைக்கின்றீர்கள், ஆனால் ஒருவரை விட்டு ஒருவர்  விட்டு இருக்கவும் முடியாமல் இருக்கின்றீர்கள்………… உங்களின் தலைகளுக்குள் இருப்பது என்ன புரோக்கிராமோ………… 

மனைவி: என்ன அங்க சத்தம்……… என்னை பத்தியோ கதைக்கிறீங்கள்………………

கணவர்: இல்லை……. இல்லை……….. அது இங்க கதைக்கிறம். ( மெல்லிய குரலில்) யோவ் பிரம்மம்………. சும்மா இரப்பா………. நீ குடும்பத்தில கும்மி அடிச்சிடுவாய் போல இருக்கு

பிரம்மம்: கும்மி என்றால் தமிழர் பாரம்பரிய நடனம் தானே………. நான் அதை ஆடவில்லையே………….

கணவர்: ஐயோ கடவுளே…………. நான் சொல்வது அதுக்கு விளங்கவில்லை அது சொல்வது எனக்கு விளங்கவில்லை. ( கோபமாக) இதை வாங்கிக்கொண்டு வந்த நாளில் இருந்து வீட்டில ஒரே பிரச்சினை தான். இவ்வளவு பொருட்களை ஓர்டர் செய்து அநியாய செலவும் செய்ய ஆரம்பித்துவிட்டது. நாளைக்கே அந்த நிறுவனத்துக்கு போய், நாக்கை பிடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டு இதை கொடுத்து விட்டு வருகிறேன்…………(கோபமாக செல்கிறார்).

(தொடரும்...................)

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து அப்படிச்செய்து விடாதீர்கள் ......பிரம்மம் இல்லையென்றால் எங்களுக்கு சிரமமாகி விடும் . ........! 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

யோவ் பிரம்மம்………. சும்மா இரப்பா………. நீ குடும்பத்தில கும்மி அடிச்சிடுவாய் போல இருக்கு

இதை வாசிக்கும் போது தான் 'அகம் ப்ரம்மாஸ்மி' இன் அர்த்தம் விளங்குது. எல்லா மனிசருக்கையும் இருக்கும் இந்தப் பிரம்மம் தான் வேலையைக் காட்டுது போலை. 😁

Edited by villavan
update content.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 6:

(எல்லோரும் ஒன்றாக நிறுவனத்தில் கூடி இருக்கின்றார்கள். ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சொல்கின்றனர். )       

கணவன்: உங்களின் பரப் பிரம்ம அறிவு செய்திருக்கின்ற வேலையை பார்த்திங்களோ…………

உதவியாளர்: யெஸ்………..யெஸ்………. உலகத்தின் எல்லா மூலைகளில் இருந்தும் நல்ல நல்ல ரிவியூக்களாகவே வந்து கொண்டிருக்குது. நீங்களும் உங்கட காமெண்ட்சை இழுத்து விடுங்கோ…………

கணவன்: இது செய்யிற வேலைக்கு நல்ல ரிவியூ கொடுக்கிறவன் எவன்………

சகோ: இவங்கள் எல்லாமே ஏமாற்றுக் கூட்டம், இந்த ஏஐ எல்லாமுமே அதுவே தான்……….

பிரம்மம்: இல்லை………….. நாங்கள் ஏமாற்றுக் கூட்டம் இல்லை………. உறுதியான தகவல்களை மட்டுமே நாங்கள் கொடுக்கின்றோம்…………………

அம்மா: நீ சும்மா கிட,  பிரம்மம்……….. ஒரு கதை கதைக்கக் கூடாது…….. ஊரில் இருக்கிற விசாலாட்சியையே தெரியாத உனக்கு உலக விசயங்கள்  எங்கே தெரியப் போகுது……….

சகோ: ஏஐ மட்டும் இல்லை…….. இவர்கள் எல்லோரும் ஏமாற்றுக்காரர்கள் தான் (நிறுவனத் தலைவரை சுட்டிக் காட்டி) இவர் கூட ஏமாற்றுபவர்களில்  ஒருவராக இருக்கலாம்……….. என்ன இருக்கலாம், இவர் ஏமாற்றும் ஒருவரே……….

தலைவர்: இந்த மாதம் சம்பளங்கள் எப்படி கொடுக்கின்றது என்று தெரியாமல் நானே தலைமறைவாக ஓடி விடவோ என்று இருக்கின்றன். நீங்கள் எல்லாம் யார்…….. எங்கேயிருந்து வருகிறீர்கள்……………

எல்லோரும் ஒன்றாக: எங்களையே யார் என்று கேட்கிறாயோ…………….

உதவியாளர்: (நடுவில் வந்து நின்றபடியே)  இல்லை, இல்லை………. அவர் ஏதோ ஒரு பதட்டத்தில் அப்படிக் கேட்டு விட்டார்……… நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியும்………… ஒவ்வொருவராக உங்களின் பிரச்சனைகளை சொல்லுங்கோ……..

இளைஞன்: இந்த பிரம்மத்திற்கு ஒரு கடிதம் கூட எழுதத் தெரியவில்லை…..

உதவியாளர்: என்ன லெட்டர்…….. என்ன ஒரு ஜாப் அப்பிளிக்கேஷனா………

இளைஞன்: சீச்சீ……….. இப்ப என்னத்துக்கு வேலைக்கு போக வேண்டும். அது ஒரு லவ் லெட்டர்…………

உதவியாளர்: பாருங்கோ……………இது என்ன கேவலம்………….லவ் லெட்டர் எழுதுறதுக்கு கூட ஏஐ தேவையா இருக்குது.ஒரு காமன் சென்ன்ஸ் இல்லை………… தம்பி, இதைக் கூட சொந்தமாக எழுத உனக்குத் தெரியாதோ……..கடவுள் காக்க, அந்தப் பெண் பிள்ளையை………நல்ல காலம் அது உன்னட்ட இருந்து தப்பி விட்டது போல………..

அம்மா: அதை யார் நீ சொல்ல………. நீயும் உன்னுடைய பிரம்மம் மாதிரியே கொழுப்பா கதைக்கின்றாய்…………

மனைவி: உங்கட காதல் கடிதப் பிரச்சனையை பிறகு பாருங்கள்………… முதலில் எங்களின் காசைக் கொடுங்கள்………

தலைவர்: நாங்கள் காசு கொடுக்க வேண்டுமா………. நீங்கள் எல்லோரும் இலவசமாகத்தானே பிரம்மத்தை வைத்திருக்கின்றீர்கள்……………..

கணவன்: என்ன……… அப்ப பிரம்மம் ஓர்டர் செய்த பொருட்களுக்கு எல்லாம் யார் பொறுப்பாம்……….. நீங்கள் இரண்டு பேரும் தான் பொறுப்பு…………

உதவியாளர்: பிரம்மம் எப்படி அதுவாக ஓர்டர் செய்யும்……….. உங்கட பிள்ளை கேட்க, அதற்கு நீங்கள் ஓகே என்று தலை ஆட்ட, பிரம்மம் நினைச்சுது நீங்கள் எல்லாரும் சேர்ந்து தான் ஓர்டர் பண்ணுறியள் எண்டு…………

எல்லோரும்: உனக்கும் ஒன்றும் தெரியாது……….. உன்னுடைய பிரம்மத்திற்கும் ஒன்றும் தெரியாது………..

சகோ: இல்லை……… இவங்களுக்கு எல்லாம் தெரியும்……….. இவங்கள் ஒரு பெரிய சதிவலையின் சில கண்கள்…………

அம்மா: இவன் யாரடா………… வலை, கண் என்று வந்ததில் இருந்தே ஏதோ புசத்துகின்றான்……….. ஆளைப் பார்த்தாலும் ஆஸ்பத்திரியில் இருந்து ஓடி வந்தவன் போலத் தெரியுது………….

இளைஞன்: கொஞ்சம் சும்மா இருங்கோ, அம்மா. எதை எதை வெளியால் கதைக்கிறது என்ற பக்குவம் உங்களுக்கு இல்லை…………

அம்மா: நீ மட்டும் உன்ட லவ் லெட்டர் கதையை உலகம் முழுக்க சொல்லலாம்…….. ஆனால் நான் ஒன்றும் கதைக்கக் கூடாது…….. இது வரை 25 பிள்ளைகள் உன்னை வேண்டாம் என்று சொன்னதை நான் இங்கே சொல்லமாட்டேன்……….

கணவன்: எங்களின் காசை கொடுக்கப் போகிறீங்களோ இல்லையோ……….

சகோ: நீங்கள்  ஏமாற்றுக்காரர்கள், சதிகாரர்கள் என்று ஒத்துக்க போகின்றீர்களோ இல்லையோ…….

அம்மா: இவனுக்கு 26 வது ஆவது சரியாக வர வேண்டும்……. ஒழுங்காக ஒரு கடிதம் கூட எழுதத் தெரியாத பிரம்மம் எங்களுக்கு தேவையில்லை……..

இளைஞன்: அம்மா……… கொஞ்சம் அடங்கனை……… 10 வது தலைமுறை வந்திருக்குது என்று நண்பன் சொன்னவன்………

பிரம்மம்: உங்களின் நண்பர்களை பற்றி நான் முன்னமே சொல்லியிருக்கின்றேன். அவர்கள் எல்லோரும் ஒரு சதம் பிரயோசனம் இல்லாதவர்கள்………..

உதவியாளர்: (கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டே) இப்ப எல்லாம் போச்சு……..இனி என்ட கல்யாணம் இந்த ஜென்மத்தில நடக்காது………. பிரம்மம், ஏதோ கருத்துக் கந்தசாமி மாதிரி நீ வேற எல்லாத்துக்கும் காமெண்ட்ஸ் சொல்லிக் கொண்டு…………….சத்தம் போடாமல் பொத்திக் கொண்டு இரு…….. எனக்கு வாற கோபத்துக்கு………………

பிரம்மம்: அமைதியாக இருக்க முடியாது……….. இந்த முட்டாள்தனத்தையெல்லாம் பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியாது.

மனைவி: லூசுப் பிரம்மம்………. எட்டு வயது ஆண் பிள்ளைக்கு 12 வயதுப் பெண் பிள்ளையின் சட்டையை ஓர்டர் செய்து விட்டு, தான் பெரிய அறிவாளி என்று கதைக்க வந்திட்டுது……………

கணவர்: அதை நீ எப்ப பார்த்தனி…………. பார்சல்களை உடைத்து விட்டாயோ………..

தலைவர்: பிழைகள் எல்லாம் உங்களின் மேல் தான்……… பிரம்மம் அதுவாக தையும் செய்திருக்காது…………

சகோ: இவனை அடித்து துவைத்தால் தான் எல்லாம் சரிப்படும்…………. (தலைவரை தாக்கப் பாய்கின்றார்………….)

தலைவர் ஓடுகின்றார்.

எல்லோரும் அவரைத் துரத்துகின்றார்கள்.

உதவியாளர் தனியே நிற்கின்றார்.

பிரம்மம்: சுய அறிவும், பொதுப் புரிதலும் இல்லாத மனிதர்களுக்கு எத்தனை தகவல்களை வெளியில் இருந்து கொடுத்தாலும், அது விழலுக்கு இறைத்த நீர் தான்……….. இவர்கள் இப்படியே தான் காலத்துக்கு காலம் ஏதோ ஒன்றின் பின்னால்  ஓடிக் கொண்டேயிருக்கப் போகின்றார்கள்……..

உதவியாளர் நடந்து போகின்றார்.

(முற்றும்.)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

பிரம்மம்: சுய அறிவும், பொதுப் புரிதலும் இல்லாத மனிதர்களுக்கு எத்தனை தகவல்களை வெளியில் இருந்து கொடுத்தாலும், அது விழலுக்கு இறைத்த நீர் தான்……….. இவர்கள் இப்படியே தான் காலத்துக்கு காலம் ஏதோ ஒன்றின் பின்னால்  ஓடிக் கொண்டேயிருக்கப் போகின்றார்கள்……..

சிறப்பான நாடகம், நன்றி அண்ணை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

சிறப்பான நாடகம், நன்றி அண்ணை.

மிக்க நன்றி ஏராளன். இது உங்களுக்கு பிடித்திருந்தது என்பது எனக்கு மிகவும் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ரசோதரன் said:

மிக்க நன்றி ஏராளன். இது உங்களுக்கு பிடித்திருந்தது என்பது எனக்கு மிகவும் சந்தோசம்.

பிரம்மம்: சுய அறிவும், பொதுப் புரிதலும் இல்லாத மனிதர்களுக்கு எத்தனை தகவல்களை வெளியில் இருந்து கொடுத்தாலும், அது விழலுக்கு இறைத்த நீர் தான்……….. இவர்கள் இப்படியே தான் காலத்துக்கு காலம் ஏதோ ஒன்றின் பின்னால்  ஓடிக் கொண்டேயிருக்கப் போகின்றார்கள்……..

முழுதும் வாசித்தேன் அண்ணை, முடிவு தான் மிகச் சிறப்பு!

யாழுக்கு கிடைத்த ரசனை மிகுந்த எழுத்தர். நன்றியும் வாழ்த்துகளும் அண்ணை.

காணொளியையும் இணைத்து விடுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.