Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறந்து போனோமா வழுக்கி ஆற்றை

sachinthaOctober 30, 2025

யாழ்ப்பாணத்தில் உள்ள அளவெட்டியின் தெற்கில் எழிற்சூழலில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. பெருமாகடவைப் பிள்ளையாரின் விழிகள் நிலைக்கின்ற இடத்தில் பிணக்கைக்குளம் விரிந்து கிடக்கிறது. மாரி காலத்தில் இக்குளம் நீரால் நிரம்பி வழியும் இக்குளத்தைச் சுற்றியுள்ள வயல்களுக்கு போதிய நீரை அக்காலத்தில் இக்குளத்தின் வழியாகவே வழங்குவார்கள். இது தென்புறமாக சிறு நதி ஒன்றினூடாக கடலை அடைகின்றது. அந்த நதி தான் யாழ்ப்பாணத்தின் ஒரே ஆறு! எழிலாறு! வழுக்கி ஆறு.

அகத்தியர் முனிவர் காவேரி நதியை கமண்டலத்திலே அடைத்து வைத்திருந்தார். விநாயகர் காக உருவில் பறந்து சென்று கமண்டலத்தை கவிழ்த்து விட காவேரி நதி பொங்கி பெருகிப் பாய்ந்தது. அதைப்போலத் தான் இந்த வழுக்கி ஆறும் விபீசணன் இலங்கையை ஆண்ட காலத்திலே பெருமாலியன் என்ற ஒரு அரக்கன் வழுக்கி ஆற்றை மறித்து யாழ்ப்பாணத்தை வெள்ளத்துக்குள் ஆழ்த்த நினைத்தான். அப்போது பிள்ளையார் வந்து அவனை கொன்று வழுக்கி ஆற்றினைப் பாயவிட்டார் என்பது புராணக்கதை. யாழ்ப்பாண பெரும் வரலாற்றோடு இணைந்த இவ் ஆற்றை கந்தரோடை அரசர்கள் வெட்டிய கடல்கால் என்றும் கூறுவார்கள்.

பிணக்கை குளத்தை பெருமாலியன் மறித்த போது, நீர் தேங்கியது. அக்குளத்துக்கு பக்கத்திலேயே பிள்ளையாரும் காவலாக இருந்து விட்டார் அவர்தான் பெருமாகடவைப் பிள்ளையார்.

உண்மை பொய் எதுவோ பிணக்கைக் குளத்தில் மழைக்காலத்தில் ஊர் வெள்ளம் எல்லாம் நிறைகின்றது. அதனால் மழைக்காலத்தில் வழுக்கி ஆறு பொங்கிப் பெருகி வழிகின்றது.

ஆனி, ஆடி மாதத்தில் மழை குறைவு என்பதால் வழுக்கியாறு வறண்டு காணப்படுகின்றது. வழுக்கி ஆற்றுப் படுகையில் புட்களும், முட்செடிகளும் பரவிக் கிடக்கின்றன. ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இந்த ஆற்றைப் பார்க்க வேண்டும். வெள்ளம் கரை புரண்டு ஓடும். வெள்ளத்துக்கு மேலால் தலையை தூக்கி படி பயிர்கள் நிற்கும். வழுக்கி ஆற்றின் இருகரைகளிலும் நீர் இறைப்புமேடைகள் காணப்படுகின்றன. ஆற்றில் நீர் பாயும் போது வயல்களில் காய்கறிப் பயிர்கள் பயிரிட்டால் நீரைக் குறைத்துப் பாய்ச்சுவார்கள். நீர் இறைப்பு மேடைகளைப் போலவே ஆற்றின் படுகையில் குறுக்கு அணைகள் கதவுடன் காணப்படுகின்றன.

பெருமாகடவைப் பிள்ளையார் கோயிலில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் பிணக்கைக் குளம் காணப்படுகின்றது அக்குளத்தின் தென்கிழக்கு மூலையில் தான் வழுக்கி ஆறு பிணக்கைக் குளத்தை விட்டு வெளியேறுகின்றது. அவ் ஆற்றுவரப்பில் நடந்து சென்றால் வழுக்கியாற்றின் போக்கில் உப்புக்குளம் குறுக்கிடும். வழுக்கி ஆறு போகின்ற பாதையில் உள்ள பல குளங்களை இணைத்துக் கொண்டே செல்கின்றது. இன்னும் கொஞ்ச தூரம் சென்றால், ஆற்றுக்குக் குறுக்கே ஒரு வீதி செல்கின்றது. அதுதான் கந்தரோடை- மாசியப்பட்டி வீதி. அதில் கந்தரோடை குளமும் நான்கு கோயில்களும் உள்ளன. அதாவது, வழுக்கியாற்றின் இடது பக்கத்தில் பிள்ளையார், மீனாட்சி, நாகம்மாள், கண்ணகி ஆகிய தெய்வங்களின் கோயில்களும், குளம் மற்றும் வயலும் உள்ளது.

இவ்வாறு அளவெட்டி- கந்தரோடையை கடந்தால் சிறு வாய்க்கால் ஒன்று வழுக்கி ஆற்றுடன் இணைகின்றது. அந்த இடத்தை தாண்டிச் சென்றால். சங்குவேலி, சண்டிலிப்பாய் ,கட்டுடை அதில் வழுக்கை ஆற்றின் பாதையில் குறுக்கிடும் பெரிய மதகு உள்ளது. இதனை ஐந்துகண் மதகு என்று கூறுவார்கள். இதில் 5 வாசல்கள் உள்ளன. இதனால் வெள்ளமானது வேகமாக பாயக்கூடிய வகையில் காணப்படுகின்றது. அதற்கு முன்னால் சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயமும் உள்ளது.

அளவெட்டி – கட்டுடை வரை வயல்களும் கோயில்களும் காணப்படும். கட்டுடைக்கு அப்பால் வயல்களும், சுடலைகளும் அதிகளவில் காணப்படுகின்றன. இதன் மூலம் இறைவனை மறக்காமல் வாழ்ந்து இறுதியில் மயானத்தை அடைந்தால் பேரின்ப கடலை ஈற்றில் சேரலாம் என்பது புலப்படும்.

இவ்வாறே சென்றால் வழுக்கி ஆற்றின் போக்கில் சில மாறுதல்கள் புலப்படும். வழுக்கி ஆற்றின் படுகை இரு மடங்காக அகலிக்கின்றது. அத்தோடு ஆற்றின் இரு மருங்கும் தென்னந் தோட்டங்களும் காணப்படும்.

இவ்வாறு கட்டுடையைத் தாண்டி நவாலியை அடையலாம். நவாலியைத் தாண்டிச் சென்றால் அராலிப் பாலத்துடன் கிட்டத்தட்ட 16 கிலோமீற்றர் தொலைவில் கடலோடு இணைந்து வழுக்கியாறு தனது நீண்ட பிரயாணத்தை முடிக்கின்றது.

யாழ்ப்பாண மக்களின் நீர் வளத்தில் பிரதான ஒரு இடத்தை வழுக்கியாறு பெறுகின்றது. விலங்குகளுக்கு பல சமயங்களில் தாகம்தீர்க்கும் வகையில் செயற்பட்டுள்ளது. அத்தோடு மக்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சாணியாகவும் இருக்கின்றது. இவ் ஆறு பருவகால மழைவீழ்ச்சி குறைவினாலும், காலநிலை மாற்றங்களினாலும் நீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது. வெயில் காலத்தில் ஆற்றுப்படுகை முழுமையாக வரண்டு விடுகின்றது. உவர்நீர் ஊடுறுவல் அதிகரிப்பு, காலநிலை மாற்றம், சனத்தொகை அதிகரிப்பு, கழிவுகளைக் கொட்டுதல் போன்றவற்றால் இவ் ஆறு மாசடைந்து வருகின்றது. சமையல் கழிவுகளை மக்கள் கொட்டுவதனால் அவை ஆற்றோடு கலந்து ஆற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. இவ்வாறாக பலவகையில் இவ் ஆறானது மாறுபடுகின்றது.

யாழ்ப்பாணத்தின் உயிர்நாடியில் ஒன்றான வழுக்கி ஆற்றினை மீள மாற்றியமைக்கும் வகையில் கழிவு மறுசுழற்சி ஊக்குவிப்பு, நீர்மட்டம் மற்றும் நீர்த்தரம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளல் போன்ற ஊக்குவிப்பு செயற்பாடுகள் மூலம் இதனைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் எமது தொன்மங்களை ஒப்படைக்கலாம்.

பானுஷா நிமல்…

ஊடகக் கற்கைகள் துறை,

யாழ் பல்கலைக்கழகம்

https://www.thinakaran.lk/2025/10/30/featured/161276/மறந்து-போனோமா-வழுக்கி-ஆற/

  • கருத்துக்கள உறவுகள்

2023 இல் நடந்தாய் வாழி வழுக்கை ஆறே என்ற பெயரில் இந்த மாரிகால ஆற்றின் வழி நடக்கும் ஒரு நடை பயணம் நடந்தது.

இதன் walk path ஐ ஒரு trekking போல பிரபல்ய படுத்தினால், சாரணரும் உள், வெளி நாட்டு பயணிகளும் ஆர்வமாக கலந்துகொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வழுக்கியாறு எம் வாழ்வில் மறக்கமுடியாத ஆறு . ....... ஐந்துகண் மதவு பற்றி ஒரு பழைய கதை உண்டு . ....... அம்மான் கண் என்பதுதான் ஐந்துகண் என மருவியதாக ........ சரி பிழை தெரியவில்லை .........! 🙂

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

கிட்டத்தட்ட 16 கிலோமீற்றர் தொலைவில் கடலோடு இணைந்து வழுக்கியாறு தனது நீண்ட பிரயாணத்தை முடிக்கின்றது.

எங்கள் ஊரில் இருந்து இ போ சவில் எந்தப்பாதையால் யாழ் நோக்கிச் சென்றாலும் நாங்கள் இங்கே வழுக்கித்தான் 😂செல்ல முடியும் 782 784 785 786

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

வழுக்கியாறு எம் வாழ்வில் மறக்கமுடியாத ஆறு . ....... ஐந்துகண் மதவு பற்றி ஒரு பழைய கதை உண்டு . ....... அம்மான் கண் என்பதுதான் ஐந்துகண் என மருவியதாக ........ சரி பிழை தெரியவில்லை .........! 🙂

நல்ல ஆனைக்கோட்டை எண்ணையில் உருட்டிய உருட்டு போல இருக்கண்ணை😀.

அந்த மதகில் ஐந்து நீரை கட்டுப்படுத்தும் துவாரங்கள் உள்ளன என்பதால் காரணப்பெயர் என நான் கேள்விப்பட்டேன்.

32 minutes ago, வாத்தியார் said:

எங்கள் ஊரில் இருந்து இ போ சவில் எந்தப்பாதையால் யாழ் நோக்கிச் சென்றாலும் நாங்கள் இங்கே வழுக்கித்தான் 😂செல்ல முடியும் 782 784 785 786

கல்லுண்டாய் வெளிக்குள்ளால் போவது 782 வா? முன்னர் நாவாந்துறையை நெருங்கும் போது ஆரம்பிக்கும் சுகந்தம், மாநகரசபையின் கருணையால் வெளியில் இறங்கியதுமே ஆரம்பிக்கிறதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

எங்கள் ஊரில் இருந்து இ போ சவில் எந்தப்பாதையால் யாழ் நோக்கிச் சென்றாலும் நாங்கள் இங்கே வழுக்கித்தான் 😂செல்ல முடியும் 782 784 785 786

வாத்தியார் நீங்கள் அந்தப்பக்கமா . ........ நான் காரைநகர் இ . போ . ச வில் 5 வருடங்கள் ( அது ஜெற்றியில் இருந்த காலத்தில் இருந்து, பின் புது டிப்போ கட்டி குடிபுகுந்தனங்கள் . ......அப்போது தியாகராஜ என்பவர் சேர்மன் ஆக இருந்தவர் , அதேநேரத்தில் இன்னொரு தியாகராஜ பார்லிமென்ட் எம் . பி என்று நினைக்கிறேன் இருந்தவர் )வேலை செய்தனான் .......!

9 hours ago, goshan_che said:

நல்ல ஆனைக்கோட்டை எண்ணையில் உருட்டிய உருட்டு போல இருக்கண்ணை😀.

அந்த மதகில் ஐந்து நீரை கட்டுப்படுத்தும் துவாரங்கள் உள்ளன என்பதால் காரணப்பெயர் என நான் கேள்விப்பட்டேன்.

கல்லுண்டாய் வெளிக்குள்ளால் போவது 782 வா? முன்னர் நாவாந்துறையை நெருங்கும் போது ஆரம்பிக்கும் சுகந்தம், மாநகரசபையின் கருணையால் வெளியில் இறங்கியதுமே ஆரம்பிக்கிறதாம்.

கோஷன் - சே அவர்களே அது ஐந்துகண் உள்ள மதகுதான் ........அதற்கு முதலே வழுக்கியாறு இருந்திருக்கு . .....அதற்குத்தான் மதகு கட்டியது . ..... ஆணைக்கோட்டை எண்ணை உருட்டுற சில குடும்பங்கள் என் நண்பர்கள் + சீனியர்கள் . ..... அவர்களுடன் நான் சக மெக்கானிக்காக இருந்திருக்கிறேன் . .........அவர்கள் வழி வழியாக வரும் கதை சொல்லித்தான் எனக்குத் தெரியும் ........அவ்வளவுதான் . .......!

784..... கல்லுண்டாய் வெளியால் செல்வது . .....!

786 .....ஆணைக்கோட்டை நவாலியால் செல்வது . ......!

782..... மானிப்பாய், சங்கானை, சுழிபுரம் , மூளாய் வழியாக செல்வது ......!

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, suvy said:

காரைநகர் இ . போ . ச வில் 5 வருடங்கள் ( அது ஜெற்றியில் இருந்த காலத்தில் இருந்து, பின் புது டிப்போ கட்டி குடிபுகுந்தனங்கள் . ......அப்போது தியாகராஜ என்பவர் சேர்மன் ஆக

அந்த காலத்தில் உங்கள் பிரதம எஞ்சினியராக ஒரு நெடு நெடு என வளர்ந்த மனிதர் இருந்தாரா அண்ணை?

அதேபோல் போர்மென் உதவியாளராக கொஞ்சம் கட்டையாக நிறைய தலைமுடியோ கொஞ்சம் ரஜனி சாயலில் இன்னொருவர் இருந்தாரா?

19 minutes ago, suvy said:

ஆணைக்கோட்டை எண்ணை உருட்டுற சில குடும்பங்கள் என் நண்பர்கள் + சீனியர்கள் . ..... அவர்களுடன் நான் சக மெக்கானிக்காக இருந்திருக்கிறேன் . .........அவர்கள் வழி வழியாக வரும் கதை சொல்லித்தான் எனக்குத் தெரியும் ........அவ்வளவுதான் . .......!

இப்பவும் எண்ணை மட்டும் அல்ல ரொம்ப சுவையான எள்ளுருண்டை தயாரிப்பும் வீட்டு கைத்தொழிலாக நடக்கிறது. பழக இனிமையான மக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

அந்த காலத்தில் உங்கள் பிரதம எஞ்சினியராக ஒரு நெடு நெடு என வளர்ந்த மனிதர் இருந்தாரா அண்ணை?

அதேபோல் போர்மென் உதவியாளராக கொஞ்சம் கட்டையாக நிறைய தலைமுடியோ கொஞ்சம் ரஜனி சாயலில் இன்னொருவர் இருந்தாரா?

இப்பவும் எண்ணை மட்டும் அல்ல ரொம்ப சுவையான எள்ளுருண்டை தயாரிப்பும் வீட்டு கைத்தொழிலாக நடக்கிறது. பழக இனிமையான மக்கள்.

அப்போது என்ஜினியராக உதயகுமார் இருந்தவர்.....அவர் உயரமானவர் . .....இப்போ வேறு நாட்டில் இருக்கிறார் என நினைக்கிறேன் . ...... அநேகமாய் அங்கு வேலை செய்தவர்கள் எல்லாம் காரைநகர் , சுழிபுரம் , மானிப்பாய் , சண்டிலிப்பாய், ஊர்காவற்துறை, நாரந்தனை என்று அதைச்சுற்றியுள்ள ஆட்கள்தான் வேலை செய்தவை ........அப்படியே சீ . நோரிலும் அந்த சுற்றாடலை சேர்ந்தவர்கள்தான் படகுகள் கட்டுறது , மீன் , கணவாய் , றால் எல்லாம் பைக்கட் செய்வது + விற்பது .......நிறைய பெண்பிள்ளைகள் வேலை செய்தவை . ........ அங்கு சில்லறை வியாபாரமும் இருக்கும் .....நாங்கள் வேலை முடிந்து வீட்டுக்கு போகும்போது வாங்கிக்கொண்டு போவது வழக்கம் . .....!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

வாத்தியார் நீங்கள் அந்தப்பக்கமா . ........

தலைவர் அந்தப்பக்கமா என்று நீங்கள் கேட்டது வழுக்கை ஆற்றின் அந்தப்பக்கமா என்றா அல்லது எந்தப்பக்கம் என்று கேட்ட நீங்கள் 😃

ஓம் நானும் அந்தப்பக்கம் தான் ஆனால் இப்போது இந்தப்பக்கம் 😃

அந்தப்பக்கமாக இருந்தால் என்ன எந்தப்பக்கம் என்றாலும்😇 அந்தப்பக்கத்திற்கும் ஒரு மறுபக்கம் இருக்கும் அல்லவா 😃

அந்தப்பக்கம் தீவா நகரா என்ற இழுபறியில் இருக்கு அதுவரைக்கும் அந்தப்பக்கம் அந்தப்பக்கமாகவே இருக்கட்டும்🤣🤪

கோஷான் வேறை இந்தப்பக்கம் நிக்கிறாப்பல 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

அப்போது என்ஜினியராக உதயகுமார் இருந்தவர்.....அவர் உயரமானவர் . .....இப்போ வேறு நாட்டில் இருக்கிறார் என நினைக்கிறேன் . ...... அநேகமாய் அங்கு வேலை செய்தவர்கள் எல்லாம் காரைநகர் , சுழிபுரம் , மானிப்பாய் , சண்டிலிப்பாய், ஊர்காவற்துறை, நாரந்தனை என்று அதைச்சுற்றியுள்ள ஆட்கள்தான் வேலை செய்தவை ........அப்படியே சீ . நோரிலும் அந்த சுற்றாடலை சேர்ந்தவர்கள்தான் படகுகள் கட்டுறது , மீன் , கணவாய் , றால் எல்லாம் பைக்கட் செய்வது + விற்பது .......நிறைய பெண்பிள்ளைகள் வேலை செய்தவை . ........ அங்கு சில்லறை வியாபாரமும் இருக்கும் .....நாங்கள் வேலை முடிந்து வீட்டுக்கு போகும்போது வாங்கிக்கொண்டு போவது வழக்கம் . .....!

நான் முதன் முதலில் பார்க்கும் போது சீனோர் இழுத்து மூடிய நிலையில் இருந்தது. அப்படியே கொஞ்ச தூரம் போனால் நேவி காம்ப்.

சின்னவயதில் செங்கை ஆழியான் கடற்கோட்டை நாவல் வாசித்ததில் இருந்து அதன் மீது ஒரு அதீத காதல்.

எப்படியாவது காசு உழைத்து அதை வாங்கி, அதில் குடியேறி விட வேண்டும், போர்ட்டில் வேலைக்கு வந்து போகவேண்டும் எனவெல்லாம் கூட யோசித்தது உண்டு.

ஜெட்டியில் போய் நின்று பார்த்து வருவதோடு சரி. அப்போ ஊர்காவற்துறை போகும் பாதையும் உடைந்து கிடந்தது.

யுத்த முடிவில், கடற்கோட்டை உள் போய் பார்க்கவும், பாதையில் பயணிக்கவும் வாய்ப்புக்கிட்டியது.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2025 at 00:10, goshan_che said:

கல்லுண்டாய் வெளிக்குள்ளால் போவது 782 வா? முன்னர் நாவாந்துறையை நெருங்கும் போது ஆரம்பிக்கும் சுகந்தம், மாநகரசபையின் கருணையால் வெளியில் இறங்கியதுமே ஆரம்பிக்கிறதாம்.

கொஞ்சம் தூரம் என்றாலும் பரவாயில்லை என்று நவாலி சங்கரத்தைப் பாதையைப் பயன்படுத்துவது ஓரளவுக்கு நல்ல சுவாசத்தைக் கொடுக்கும்

சில வேளைகளில் பிரதான வீதியே குப்பையால் நிறைந்திருக்கும்

அந்தளவுக்கு மாநகரசபை ஊழியர்கள் கவனமாக வேலை செய்வார்கள்🤨

On 2/11/2025 at 10:13, suvy said:

நான் காரைநகர் இ . போ . ச வில் 5 வருடங்கள் ( அது ஜெற்றியில் இருந்த காலத்தில் இருந்து, பின் புது டிப்போ கட்டி குடிபுகுந்தனங்கள் . ......அப்போது தியாகராஜ என்பவர் சேர்மன் ஆக இருந்தவர் ,

தலைவர் 🙏 80 களுக்கு முன்னர் அங்கு வேலை செய்திருக்கலாம் என நினைக்கிறேன்

சேர்மன் ஊரில் CTB தியாகராஜா என்று அழைக்கப்படடுவார் எங்கள் உறவினர் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2025 at 13:16, goshan_che said:

நான் முதன் முதலில் பார்க்கும் போது சீனோர் இழுத்து மூடிய நிலையில் இருந்தது. அப்படியே கொஞ்ச தூரம் போனால் நேவி காம்ப்.

அனுரா அரசு வந்த பின்னர் சீனோரும் இயங்க ஆரம்பித்துள்ளது

கடற்படை தங்கள் கட்டுப்பாட்டில் ஒரு உணவகம் நடத்துகின்றார்கள்

அது சுற்றுலாப் பிரயாணிகளுக்கு உகந்ததாக உள்ளது-

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வாத்தியார் said:

கொஞ்சம் தூரம் என்றாலும் பரவாயில்லை என்று நவாலி சங்கரத்தைப் பாதையைப் பயன்படுத்துவது ஓரளவுக்கு நல்ல சுவாசத்தைக் கொடுக்கும்

சில வேளைகளில் பிரதான வீதியே குப்பையால் நிறைந்திருக்கும்

அந்தளவுக்கு மாநகரசபை ஊழியர்கள் கவனமாக வேலை செய்வார்கள்🤨

தலைவர் 🙏 80 களுக்கு முன்னர் அங்கு வேலை செய்திருக்கலாம் என நினைக்கிறேன்

சேர்மன் ஊரில் CTB தியாகராஜா என்று அழைக்கப்படடுவார் எங்கள் உறவினர் தான்.

ஓம் ......அப்பொழுதுதான் வாத்தியார் ........ ஹமன் ஹில்ஸ் என்னும் கடற்கோட்டை , கசூரினா பீச் எல்லாம் மறக்க முடியாதது ........! 🙂

  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2025 at 11:23, suvy said:

அப்படியே சீ . நோரிலும் அந்த சுற்றாடலை சேர்ந்தவர்கள்தான் படகுகள் கட்டுறது , மீன் , கணவாய் , றால் எல்லாம் பைக்கட் செய்வது + விற்பது .......நிறைய பெண்பிள்ளைகள் வேலை செய்தவை . ........ அங்கு சில்லறை வியாபாரமும் இருக்கும் .....நாங்கள் வேலை முடிந்து வீட்டுக்கு போகும்போது வாங்கிக்கொண்டு போவது வழக்கம் . .....!

அந்த ஐந்து வருடங்கள் நீங்கள் அந்தப்பக்கம் வேலை செய்த பொது😅

நாங்கள் உங்கள் வீட்டுப்பக்கமாக யாழ் இந்து மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம் 😂

  • கருத்துக்கள உறவுகள்

அட எல்லாம் நம்ம ஏரியா பசங்களாக இருக்கினம்.😀

  • கருத்துக்கள உறவுகள்

"நடந்தாய் வாழி வழுக்கியாறு" செங்கை ஆழியான் 1984 இல் எழுதி வெளியிட்ட, வழுக்கியாற்றின் தடத்தினூடாக மாடு தேடிப் பயணிக்கும் கதை👇!

https://noolaham.net/project/176/17527/17527.pdf

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சுவைப்பிரியன் said:

அட எல்லாம் நம்ம ஏரியா பசங்களாக இருக்கினம்.😀

ஏரியா என்று சொன்னால் எப்படி

நீங்கள் வழுக்கை ஆற்றின் அந்தப்பக்கமா😂 இந்தப் பக்கமா 🤣அல்லது எந்தப்பக்கம் என்றாவது😅 சொன்னால் தானே புரியும்

  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2025 at 12:00, வாத்தியார் said:

தலைவர் அந்தப்பக்கமா என்று நீங்கள் கேட்டது வழுக்கை ஆற்றின் அந்தப்பக்கமா என்றா அல்லது எந்தப்பக்கம் என்று கேட்ட நீங்கள் 😃

ஓம் நானும் அந்தப்பக்கம் தான் ஆனால் இப்போது இந்தப்பக்கம் 😃

அந்தப்பக்கமாக இருந்தால் என்ன எந்தப்பக்கம் என்றாலும்😇 அந்தப்பக்கத்திற்கும் ஒரு மறுபக்கம் இருக்கும் அல்லவா 😃

அந்தப்பக்கம் தீவா நகரா என்ற இழுபறியில் இருக்கு அதுவரைக்கும் அந்தப்பக்கம் அந்தப்பக்கமாகவே இருக்கட்டும்🤣🤪

கோஷான் வேறை இந்தப்பக்கம் நிக்கிறாப்பல 😂

இந்த பக்கத்துக்கு வந்து வந்து போனாலும், நீங்கள் எழுதிய இந்த பதிவு இப்பதான் கண்ணில் பட்டது😂.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2025 at 10:23, suvy said:

காரைநகர் , சுழிபுரம் , மானிப்பாய் , சண்டிலிப்பாய், ஊர்காவற்துறை, நாரந்தனை

அந்தப் பக்கம், இந்தப் பக்கம், எந்தப் பக்கம் இந்த ஊர்மனைகள் இருந்தாலும் எனக்கு இவை அந்தமான் பக்கம் மாதிரித்தான்!

கண்னால் கண்ட இடங்களில் இவை இன்னமும் வரவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – வட்டுக்கோட்டை

February 3, 2025 | Ezhuna

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

சென்ற கட்டுரையில் மானிப்பாய்க் கோவிற்பற்றைப் பற்றி லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படம் தரும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றுத் தொடர்பாக அந்நிலப்படத்திலுள்ள தகவல்களைப் பற்றி ஆராயலாம். நிலப்படத்திலுள்ள விளக்கக் குறிப்பு வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றில் வட்டுக்கோட்டை மேற்கு, வட்டுக்கோட்டை கிழக்கு, அராலி ஆகிய மூன்று துணைப்பிரிவுகள் இருப்பதாகக் காட்டுகிறது. ஆனால், நிலப்படத்தில் இரண்டு துணைப்பிரிவுகளை மட்டுமே குறித்துள்ளனர். வட்டுக்கோட்டை கிழக்குப் பிரிவை நிலப்படத்தில் எல்லை குறித்துக் காட்டவில்லை (படம்-1).

I-1-1.jpg

நிலப்படம் காட்டும் வட்டுக்கோட்டைக் கோவிற்பற்று இன்றைய வலிகாமம் மேற்கு – சங்கானைப் பிரதேச செயலர் பிரிவுக்குள் அடங்குகிறது. நிலப்படத்தில் கட்டியுள்ள வடக்கு எல்லையும் அமைவிடத்தைத் துல்லியமாக அறிவது கடினம் என்றாலும், இன்றைய கிராம சேவையாளர் பிரிவுகளான வட்டுக்கோட்டை தென்மேற்கு, வட்டுக்கோட்டை வடக்கு, வட்டுக்கோட்டை மேற்கு, வட்டுக்கோட்டை கிழக்கு, சங்கரத்தை, அராலி மேற்கு, அராலி மத்தி, அராலி வடக்கு, அராலி தெற்கு, அராலி கிழக்கு ஆகியவை இந்தக் கோவிற்பற்றுக்குள் அடங்கியிருந்திருக்கும் எனலாம். பிற்காலத்தில் வடக்கு எல்லையை அண்டிச் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. அதேவேளை, உள்ளூராட்சி நிர்வாகத்தைப் பொறுத்தவரை இது, வலிகாமம் மேற்குப் பிரதேசசபையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

எல்லைகள்

வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றின் வடக்குப் பகுதியின் மூன்று பக்கங்களிலும் சங்கானைக் கோவிற்பற்றும், தெற்குப் பகுதியின் மேற்கு, தெற்கு எல்லைகளில் கடலேரியும் கிழக்கு எல்லையில் வழுக்கியாறும் உள்ளன. இக்கோவிற்பற்றின் கிழக்கு எல்லையை அண்டியே வழுக்கியாறு கடலேரியுட் கலக்கிறது. மேற்குப் பக்கம் உள்ள கடலேரிக் கரை எதிர்ப் பக்கத்திலுள்ள காரைநகர், வேலணை ஆகிய தீவுகளை நோக்கியபடி அமைந்துள்ளது. கிழக்கு எல்லையிலுள்ள வழுக்கியாற்றுக்கு அடுத்த பக்கத்தில் மானிப்பாய்க் கோவிற்பற்று உள்ளது. வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றின் தென் அரைப் பகுதியை அராலி துணைப்பிரிவு உள்ளடக்குகிறது. வடக்கு அரைப்பகுதியை வட்டுக்கோட்டை மேற்கு என நிலப்படம் குறித்துக் காட்டுகிறது. படத்தில் எல்லை குறித்துக் காட்டாவிட்டாலும், வட்டுக்கோட்டை கிழக்குப் பிரிவும் மேற்படி வடக்கு அரைப் பகுதிக்குள் அடங்குவதாகக் கொள்ளமுடியும் (படம்-2). குறிப்பாக, சங்கரத்தையும் அதை அண்டிய சில பகுதிகளும் வட்டுக்கோட்டை கிழக்குத் துணைப்பிரிவுக்குள் அடங்கியிருந்திருக்கக்கூடும்.

I-2-2.jpg

வீதிகள்

இக்கோவிற்பற்றுக்குள் அடங்கிய பல வீதிகளை நிலப்படத்தில் காணமுடிகிறது. வட்டுக்கோட்டைத் தேவாலயத்துக்கு அருகில் காணப்படும் சந்திப்பில் மூன்று வீதிகள் இணைகின்றன. இச்சந்திப்பிலிருந்து தென்கிழக்குத் திசை நோக்கிச் செல்லும் வீதி, தெற்கெல்லையை அண்டி அமைந்த வழுக்கியாற்றைக் கடந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் செல்கிறது. நிலப்படம் வரையப்பட்ட காலத்தில் இவ்வீதி வழுக்கியாற்றைக் கடக்கும் இடத்தில் பாலம் எதுவும் இருக்கவில்லை. அதனால், மழைக்காலத்தில் போக்குவரத்துக் கடினமாக இருந்திருக்கும். வழுக்கியாற்றுப் பாலம் பிரித்தானியர் காலத்தில் அப்போதைய அரசாங்க அதிபராக இருந்த பேர்சிவல் அக்லன்ட் டைக் அவர்களின் முயற்சியால் 1843 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.1

இன்னொரு வீதி மேற்கு நோக்கிச் சென்று மூளாய் – தொல்புரம் எல்லையை அண்டிக் கடற்கரையை அடைகிறது. வட்டுக்கோட்டையில் இது தொடங்குமிடத்தில் பெரிதாக வரையப்பட்டுள்ள தேவாலய இல்லத்துக்கு இடம் தருவதற்காகப் போலும், வீதியைப் பெரிதாக வளைத்து வரைந்துள்ளனர். உண்மையில் இது இவ்வாறு இருந்திருக்க வாய்ப்பில்லை. லெயுசிக்காமின் தொகுப்பிலுள்ள முழு யாழ்ப்பாணக் குடாநாட்டையும் தீவுப்பகுதிகளையும் காட்டும் நிலப்படத்தில் இவ்வீதி நேராகவே உள்ளது. இவ்வீதியின் முடிவிடமே தற்காலத்தில் புன்னாலைப்பாலம் தொடங்குமிடம் ஆகும். மேற்படி வீதி புன்னாலைப் பாலத்தினூடாகக் காரைநகருக்குச் செல்கிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டையும் தீவுப்பகுதிகளையும் முழுமையாகக் காட்டும் மேலே குறிப்பிட்ட லெயுசிக்காமின் நிலப்படம் இவ்வீதி முடிவுறும் மூளாய்க் கரையிலிருந்தே காரைநகருக்கான கடல்வழிப்பாதை தொடங்குவதாகக் காட்டுகிறது. 

1560 ஆம் ஆண்டில் முதன்முறையாகப் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்தபோது இடம்பெற்ற நிகழ்வுகளை விவரித்த கோட்டூ என்பவர், யானைத்துறைக்குச் செல்லும் வீதி பற்றிக் குறிப்பிட்டிருப்பதையும்2 அந்த யானைத்துறை காரை நகரில் இருந்ததுபற்றியும் ஏற்கெனவே குறிப்பிட்டோம். வழுக்கியாற்றிலிருந்து வட்டுக்கோட்டைக்கும், அங்கிருந்து புன்னாலைக்கும் செல்லும் வீதிகள் மேலே குறிப்பிட்ட யானைத்துறைக்குச் செல்லும் வீதியின் பகுதிகள் என்பதில் ஐயமில்லை. எனவே, இவ்வீதி போர்த்துக்கேயர் காலத்துக்கு முற்பட்டது என்பது தெளிவு. முற்காலத்தில் யானை ஏற்றுமதி அரசாங்கத்துக்கு நல்ல வருமானத்தைத் தரும் செயற்பாடாக இருந்தது. இதனால், காரைநகரில் யானைத்துறை இயங்கிய காலத்தில் இந்த வீதி பொருளாதார முக்கியத்துவம் கொண்ட ஒரு வீதியாக இருந்திருக்கும்.

அடுத்த வீதி, வட்டுக்கோட்டையிலிருந்து வடகிழக்குத் திசையிற் சென்று சங்கானையுடனான எல்லைக்கு அருகே கிழக்கு நோக்கித் திரும்பிச் சங்கானையூடாக மானிப்பாய்க்குச் செல்வதாக நிலப்படம் காட்டுகிறது. வட்டுக்கோட்டையிலிருந்து வரும் வீதி கிழக்கு நோக்கித் திரும்பும் இடம் சித்தன்கேணிச் சந்தியாக இருக்கவேண்டும். தற்கால நிலப்படங்களோடு ஒப்பிடும்போது லெயுசிக்காமின் நிலப்படத்தில் சித்தங்கேணிச் சந்தியின் அமைவிடம் கூடுதலாகக் கிழக்கு நோக்கி நகர்ந்திருப்பதால் வீதி வடகிழக்குத் திசையில் செல்வதுபோல் வரையப்பட்டுள்ளது. தற்காலத்தில் சித்தன்கேணிச் சந்தியிலிருந்து மேற்கு நோக்கிப் புன்னாலை வரை செல்லும் வீதியையும் நேரே பண்டத்தரிப்புவரை செல்லும் வீதியையும் நிலப்படம் காட்டவில்லை. இதனால் இன்று நாற்சந்தியாக இருக்கும் சித்தன்கேணிச் சந்தியை நிலப்படம் ஒரு சந்தியாகக் காட்டவில்லை. 

மடம் ஒன்றைக் குறிப்பதன் மூலம் அராலித்துறையை நிலப்படம் காட்டுகிறது. இத்துறையை அண்மையிலுள்ள பகுதிகளுடன் இணைப்பதற்கு அக்காலத்தில் வீதித் தொடர்பு இருந்திருக்க வேண்டும். ஆனால், அத்தகைய வீதித் தொடர்பு இருப்பதை நிலப்படம் காட்டவில்லை. தற்காலத்தில், வட்டுக்கோட்டைச் சந்தியிலிருந்தும் வழுக்கியாற்றுப் பாலத்துக்கு அருகிலிருந்தும் வீதிகள் அராலித்துறைக்குச் செல்கின்றன. இவை நிலப்படத்தில் இல்லை. இவை அக்காலத்தில் முக்கியத்துவம் அற்றவையாக இருந்திருக்கலாம் அல்லது, நிலப்படத்தின் நோக்கத்துக்கு அவை தேவையற்றவையாகக் கருதப்பட்டிருக்கலாம்.

கட்டடங்கள்

மானிப்பாய்க் கோவிற்பற்றுக்குள் இருப்பதாக லெயுசிக்காமின் நிலப்படம் காட்டும் கட்டடங்களுள் வட்டுக்கோட்டை கிறித்தவத் தேவாலயமும் அதனோடிணைந்த குருமனையும் முக்கியமானவை. இவற்றைத் தவிர அராலித் துணைப் பிரிவுக்குள் கடற்கரை ஓரமாக ஒரு மடமும் உள்ளது.

தேவாலயமும் குருமனையும்

நல்லூர்க் கோவிற்பற்றைத் தவிர, இந்தக் கட்டுரைத் தொடரில் இதுவரை எடுத்தாளப்பட்ட எல்லாக் கோவிற்பற்றுகளிலும் தேவாலயமும் குருமனையுமே முக்கியமான கட்டடங்களாக நிலப்படத்திற் குறித்துக் காட்டப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். மேற்குறித்த எல்லாத் தேவாலயங்களிலும் குருமனைகள் ஏறத்தாழ ஒரே மாதிரியான குறியீடுகளாகவே காணப்பட்டன. ஆனால், வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றில் குறித்துள்ள குருமனை சற்று வேறுபட்டுக் காணப்படுகிறது. இது, இதுவரை பார்த்த குருமனைகளைவிடப் பெரிதாகவும் விரிவானதாகவும் காணப்படுகிறது. வழமையான குருமனையுடன் இணைந்ததாக நீளமான கட்டட அமைப்பொன்றை நிலப்படம் காட்டுகிறது. வேறு கோவிற்பற்றுகளில் இல்லாதவாறு இவ்விடத்தில் இவ்வாறான கட்டடம் காட்டப்பட்டிருப்பதாலும், அதைக் காட்டுவதற்காக அருகிலுள்ள வீதியைக்கூட வளைத்துக் காட்டியிருப்பதாலும், உண்மையிலேயே அவ்வாறான பெரிய கட்டடம் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

இது, வட்டுக்கோட்டைத் தேவாலயத் தொகுதி ஏதோவொரு வகையில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்த ஏனைய தேவாலயத் தொகுதிகளைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததைக் காட்டுவதாகக் கொள்ளக்கூடும். ஆனாலும், போல்தேயஸ் பாதிரியாரின் நூலிலுள்ள குறிப்புகளைப் பார்க்கும்போது, ஒல்லாந்தர் ஆட்சியின் தொடக்கப் பகுதியில் வட்டுக்கோட்டைத் தேவாலயத்துக்குச் சிறப்பு முக்கியத்துவம் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், அந்நூலிலுள்ள வட்டுக்கோட்டைத் தேவாலயத்தின் படத்தில் தேவாலய இல்லம் ஓரளவு பெரிய கட்டடமாகவே காட்டப்பட்டுள்ளது (படம்-3). இப்படத்தை வரைந்தவர் கட்டடத்தைப் பார்க்கவில்லை என்பதால் இப்படத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதே. அக்காலத்தில் தெல்லிப்பழைத் தேவாலயமே தலைமைத் தேவாலயமாக இருந்துள்ளது.3 நிலப்படம் வரையப்பட்ட 1719 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் வட்டுக்கோட்டைத் தேவாலயம் புதிய வகிபாகத்தைப் பெற்று வளர்ச்சி பெற்றிருக்கக்கூடும். 

I-3-2.jpg

1820 களில், பிரித்தானியரின் ஆட்சியின்கீழ் வட்டுக்கோட்டைத் தேவாலயம் அமெரிக்க மிசனின் முக்கியமான நிலையங்களில் ஒன்றாக விளங்கியது. 1816 ஆம் ஆண்டில் அமெரிக்க மிசன் பணிக்குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வந்த பின்னர் அவர்களிடம் கையளிக்கப்பட்ட ஐந்து ஒல்லாந்தர் காலத் தேவாலயங்களில் முதலில் இயங்கவைக்கப்பட்ட இரண்டு நிலையங்களில் வட்டுக்கோட்டையும் ஒன்று. மற்றது தெல்லிப்பழை. அமெரிக்க மிசனின் புகழ்பெற்ற செமினரியும் பிற்காலத்தில் வட்டுக்கோட்டையிலேயே நிறுவப்பட்டது. ஒல்லாந்தர்காலப் பிற்பகுதியில் வட்டுக்கோட்டை பெற்றிருந்த முக்கியத்துவத்தின் தொடர்ச்சியாகவே அமெரிக்க மிசன் காலத்திலும் அது முக்கியத்துவம் பெற்றதா என்பது ஆய்வுக்குரியது.   

எவ்வாறெனினும், அமெரிக்க மிசன் கையேற்றபோது வட்டுக்கோட்டைத் தேவாலயமும் அதனோடிணைந்த குருமனையும் பயன்படுத்த முடியாத அளவுக்குச் சிதிலமடைந்து இருந்தன என்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும். அக்காலத்தில் ஒல்லாந்தர் தேவாலயம் 170 அடி நீளமும் 56 அடி அகலமும் கொண்டதாகவும், நான்கு அடி தடிப்புக் கொண்ட கற்சுவர்களுடன் கூடியதாகவும் இருந்துள்ளது.4

மடம்

நிலப்படம், அராலி துணைப்பிரிவின் தென்கிழக்குக் கரையோரத்தில் ஒரு மடம் இருப்பதைக் குறித்துக் காட்டுகிறது. ‘ராலி மடம்’ (Ralie maddam) என இதற்குப் பெயர் குறித்துள்ளனர். நிலப்படத்தில் பல இடங்களில் இவ்வாறான மடங்களுக்கு ஊர்ப்பெயரைத் தழுவியே பெயர் வழங்கப்பட்டிருப்பதால்,  இப்பெயரும் ‘அராலி மடம்’ என்பதன் திரிபாக இருக்கக்கூடும். இது இருக்குமிடம் இன்றைய அராலித்துறை என்பதில் ஐயமில்லை. நீண்ட காலமாகவே இவ்விடத்திலிருந்து இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் வேலணைத் தீவிலுள்ள வடக்குத்துறைக்கு, இடையிலுள்ள ஆழம் குறைந்த கடலேரியூடாகச் சிறு வள்ளங்கள் மூலமும் சிலவேளைகளில் கால்நடையாகவும் போக்குவரத்து இடம்பெற்றுள்ளது.5 எனவே, இங்கே குறிக்கப்பட்டுள்ள மடம், துறைகளை அண்டிப் பயணிகள் காத்திருப்பதற்காக அமைக்கப்பட்ட மடம் என்பதில் ஐயமில்லை. இதற்கு எதிர்க் கரையில் வேலணை வடக்குத் துறையிலும் ஒரு மடம் இருந்ததை லெயுசிக்காம் தொகுப்பிலுள்ள வேறு நிலப்படங்கள் காட்டுகின்றன.

குளங்கள்

வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றுக்குள் பதினாறு குளங்களை நிலப்படம் காட்டுகிறது. இவற்றுள் ஏழு குளங்களுக்கு மட்டுமே சிறப்புப் பெயர்கள் காணப்படுகின்றன. ஏனையவை குளம் (Tanck), கேணி (keúni) ஆகிய பொதுப் பெயர்களாலேயே குறிக்கப்பட்டுள்ளன. பதினாறு குளங்களில் வட்டுக்கோட்டை மேற்குப் பிரிவையும் கிழக்குப் பிரிவையும் உள்ளடக்கிய பகுதிக்குள் ஒன்பது குளங்கள் உள்ளன. இப்பிரிவில் இரண்டு நீர்நிலைகள் மட்டுமே வெட்டுத்துரவு, திக்கிராய்க் குளம் என்னும் சிறப்புப் பெயர்களுடன் காணப்படுகின்றன. எஞ்சியவற்றுள் மூன்று கேணிகளும் நான்கு குளங்களும் உள்ளன.  அராலிப் பிரிவுக்குள் காணப்படும் ஏழு குளங்களுள் கோணாவில் குளம், ஒல்லிக் குளம், பெரிய குளம், திக்கிரிக் குளம், பெந்தாலிக் குளம் ஆகிய சிறப்புப் பெயர்களுடன் கூடிய ஐந்து குளங்களும் குளம் என்ற பொதுப் பெயருடன் இரண்டு குளங்களும் உள்ளன.

தற்காலத்தில் அராலிப் பிரிவில் பதினாறு குளங்களும், வட்டுக்கோட்டைப் பிரிவில் அடங்கிய பகுதிகளுக்குள் பத்துக் குளங்களும் உள்ளதைப் பதிவுகள் காட்டுகின்றன.6 லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி அராலியில் ஏழு குளங்களே உள்ளதால், அக்காலத்தில் இருந்த பல குளங்களை நிலப்படம் காட்டவில்லை என்றே தோன்றுகிறது. வட்டுக்கோட்டையில் இன்று ஒரு குளமே கூடுதலாகக் காணப்படுகிறது. நிலப்படத்தில் கேணி, துரவு ஆகிய பெயர்களில் குறிக்கப்பட்டிருப்பவற்றைத் தற்காலத்தில் குளங்களாகக் கருதிப் பதிவு செய்துள்ளனரா என்பது தெரியவில்லை. 

நிலப்படத்திலுள்ள குளங்களுள் அராலிப் பிரிவிலுள்ள பெரிய குளம் இன்றுவரை பெயர் மாற்றமின்றி இருப்பதைக் காணமுடிகிறது. தற்காலப் பதிவுகளின்படி இதற்கு அராலிப் பெரிய குளம் என்ற பெயர் வழங்குகிறது. இதைவிட, வட்டுக்கோட்டைப் பிரிவுக்குள் இருப்பதாக நிலப்படம் காட்டும் திக்கிராய்க் குளம் என்ற பெயருடன் தற்காலப் பதிவில் சங்கரத்தைக் கிராம சேவையாளர் பிரிவுக்குள் ஒரு குளம் உள்ளது. மேற்படி குளங்கள் இரண்டும் ஒன்றாக இருக்கக்கூடும். நிலப்படத்தில் வட்டுக்கோட்டைப் பிரிவுக்குள் குறித்துள்ள வெட்டுத்துரவும், தற்காலப் பதிவிலுள்ள வெட்டுக்குளத்துக்கும் இடையில் பெயர் ஒற்றுமை இருந்தாலும் அவற்றின் அமைவிடங்களுக்கிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளதால் இவை குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது. ஏனைய பல குளங்கள் பெயர் மாற்றம் பெற்றுள்ளன என்பதில் ஐயம் இல்லை. ஆனால், ஒப்பிடும்போது அடையாளம் காணத்தக்க பெயர் ஒற்றுமை இல்லாததாலும் நிலப்படத்தில் அமைவிடங்களைத் துல்லியமாக அறிய முடியாததாலும் பெயர் மாற்றங்களைப் பற்றிய சரியான தகவல்களை அறிவது கடினமாக உள்ளது.

குறிப்புகள்

  1. செ. இராசநாயகம், யாழ்ப்பாணச் சரித்திரம் – ஆங்கிலேயர் காலம், (கொழும்பு: குமரன் புத்தக இல்லம், 2018), 133.

  2. Donald Ferguson (trans. and ed.), “History of Ceylon from the Earliest Times to 1600 A. D. as Related by Joao de Barrows and Diogo do Couto,” Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society XX, no. 60 (1908): 189.

  3. Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 318, 322.

  4. Miron Winslow, Memoirs of Mrs. Harriet L. Winslow (New York: American Tract Society, 1840), 192.

  5. கா. குகபாலன், தீவகம்-தொன்மையும் மேன்மையும் (கொக்குவில்: 2017), 221.

  6. விவசாய அபிவிருத்தித் திணைக்களப் பதிவுகளின்படி.


ஒலிவடிவில் கேட்க

Your browser does not support the audio element.

1-150x150.png


About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

1 hour ago, Justin said:

"நடந்தாய் வாழி வழுக்கியாறு" செங்கை ஆழியான் 1984 இல் எழுதி வெளியிட்ட, வழுக்கியாற்றின் தடத்தினூடாக மாடு தேடிப் பயணிக்கும் கதை👇!

https://noolaham.net/project/176/17527/17527.pdf

வடக்கன் சிவலையைத் தேடி.... அளவெட்டியிலிருந்து அராலி வரை விபரித்துள்ளார்.... வாசித்தால் ஒரு நாடகமே கண் முன் தோன்றும் 👍

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

வடக்கன் சிவலையைத் தேடி.... அளவெட்டியிலிருந்து அராலி வரை விபரித்துள்ளார்.... வாசித்தால் ஒரு நாடகமே கண் முன் தோன்றும் 👍

இதே போல செங்கை ஆழியானின் இன்னொரு கதை "யானை". வன்னிக்கும் கிழக்கிற்குமிடையேயான அடர் காடுகளின் புவியியலை விபரிக்கும் கதை. ஊரில் செங்கை ஆழியானின் புத்தகத்தை நூலகத்திலிருந்து கொண்டு வந்தால் ஒரு நாளில் வாசித்து முடிந்து விடும்😂! சிறியவை ஆனால், சுவாரசியமானவை!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வாத்தியார் said:

வடக்கன் சிவலையைத் தேடி.... அளவெட்டியிலிருந்து அராலி வரை விபரித்துள்ளார்.... வாசித்தால் ஒரு நாடகமே கண் முன் தோன்றும் 👍

8 hours ago, Justin said:

இதே போல செங்கை ஆழியானின் இன்னொரு கதை "யானை". வன்னிக்கும் கிழக்கிற்குமிடையேயான அடர் காடுகளின் புவியியலை விபரிக்கும் கதை. ஊரில் செங்கை ஆழியானின் புத்தகத்தை நூலகத்திலிருந்து கொண்டு வந்தால் ஒரு நாளில் வாசித்து முடிந்து விடும்😂! சிறியவை ஆனால், சுவாரசியமானவை!

மாடு தேடும் கதை யாழில் யாரோ அறிமுகபடுத்தி வாசித்தேன். ஜஸ்டின் அண்ணாவாகவும் இருக்கலாம். யாழின் சமூக சுரண்டலையும் காட்டி இருப்பார்.

யானை - யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் வன்னியில் போய் படிபிக்காமல், மாணவர்களை தொழிலாளர் போல் சுரண்டுவதை சுட்டும் கதையா? இப்படி ஒரு செ.ஆ கதை பல வருடம் முன்பு வாசித்தேன்.

குவேனி - யாழில் நான் எழுதி பாதியில் நிற்கும் கவிதை தொடர் ஒன்றின் இன்ஷ்பிரேசன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

மாடு தேடும் கதை யாழில் யாரோ அறிமுகபடுத்தி வாசித்தேன். ஜஸ்டின் அண்ணாவாகவும் இருக்கலாம். யாழின் சமூக சுரண்டலையும் காட்டி இருப்பார்.

யானை - யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் வன்னியில் போய் படிபிக்காமல், மாணவர்களை தொழிலாளர் போல் சுரண்டுவதை சுட்டும் கதையா? இப்படி ஒரு செ.ஆ கதை பல வருடம் முன்பு வாசித்தேன்.

குவேனி - யாழில் நான் எழுதி பாதியில் நிற்கும் கவிதை தொடர் ஒன்றின் இன்ஷ்பிரேசன்.

https://noolaham.net/project/169/16872/16872.pdf

தன் காதலியைக் கொன்ற ஒரு தனியன் யானையை ஒருவர் காடுகளில் துரத்தித் திரிவதைப் பற்றிய கதை. இதுவும் 3 பதிப்புகள் வெளிவந்த பிரபலமான செங்கை ஆழியான் நாவல்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

https://noolaham.net/project/169/16872/16872.pdf

தன் காதலியைக் கொன்ற ஒரு தனியன் யானையை ஒருவர் காடுகளில் துரத்தித் திரிவதைப் பற்றிய கதை. இதுவும் 3 பதிப்புகள் வெளிவந்த பிரபலமான செங்கை ஆழியான் நாவல்.

நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.