நாம், நம் கனவுகள்!
jeyamohanMarch 18, 2026
வைரமுத்து ஞானபீட விருது பெற்றதற்கு எதிராக கடுமையான எதிர்வினையை நான் முன்வைத்தேன். அது ஒரு முகநூல் பூசலாக முடிந்துவிடக்கூடாது, அது இந்திய அளவில் கவனிக்கப்பட வேண்டும் என எண்ணினேன். என் நூல்கள் உருவாக்கிய இந்திய அறிமுகம் அதை கொண்டுசெல்ல உதவியது.எனக்கு வைரமுத்து மேல் எந்த விரோதமும் இல்லை. அவரை வைத்து நம் கவிதையை இந்தியா மதிப்பிட்டுவிடக்கூடாது என்பது மட்டுமே என் கவலை.
இந்திய மொழிகளிலேயே நவீனக் கவிதை அழகியல்செறிவு கொண்டிருக்கும் மொழி தமிழ்தான். அடுத்தபடியாகத்தான் மணிப்புரி மொழியைச் சொல்வேன். மலையாளம், கன்னடம் எல்லாம் கூட பிறகுதான். அபி, தேவதேவன், தேவதச்சன், விக்ரமாதித்யன் என நம்மிடம் இன்று வாழும் பெருங்கவிஞர்கள் இழிவாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது.
நம் இலக்கியம் இவ்விருதை வைத்து மதிப்பிடக்கூடாதென்றால் பிறமொழிகளுக்கு நம் எதிர்ப்பு சென்றடையவேண்டும். அது நிகழ்ந்துள்ளது. இந்தியா முழுக்க எங்கள் எதிர்ப்பு சென்றடைந்துள்ளது. ஞானபீடத்தின் ஐம்பதாண்டுக்கால வரலாற்றில் இப்படி இதற்குமுன் நிகழ்ந்ததில்லை.
இன்று முழுக்க நேற்றைய காணொலிக்கான வசைகள். எண்ணிக்கையை மட்டுமே பார்த்தேன். நண்பர்கள் அழித்துக்கொண்டே இருந்தனர். வசைகள் ஆயிரம் தாண்டியிருக்கும். ஆனால் அவை நம்மை எதிர்மனநிலை நோக்கிக் கொண்டுசெல்லக் கூடாது. நம்மைச் சூழ்ந்திருப்பவர்களில் எதையேனும் எப்போதேனும் வாசிப்பவர்கள் ஒரு சதவீதம்கூட இல்லை என நாமறிவோம். ஆனால் அத்தனைபேருக்கும் தரப்புகள் உள்ளன. காழ்ப்புகளும் கசப்புகளும் உள்ளன. சாதி,மத, அரசியல் பற்றுகள் உள்ளன.
இலக்கியம் அல்லது அறிவுச்செயல்பாடு பற்றி மிகமிக அடிப்படையான விஷயங்களே இங்கே எவருக்கும் தெரிவதில்லை. எந்த வகை அறிவுச்செயல்பாட்டில் இருப்பவர்களும் இங்கே ஒருவகை அன்னியர், ஒருவகை தலைமறைவு மனிதர்தான். இந்த விவாதத்திலேயே முக்கால்பங்கு வசையாளர்கள் திகைப்புடன் ‘யார் நீ?’ என்று என்னைக் கேட்கிறார்கள். என் பெயர்கூட அவர்களுக்கு அறிமுகமாகியிருக்கவில்லை. ஆனால் எது சரி, என்ன செய்யப்படவேண்டும் என்று முடிவுசெய்து பேசுகிறார்கள்.
இதுதான் நம் சூழல். இதனுடன் மோதுவது வீண்வேலை. இவர்கள் மேல் கசப்பை உருவாக்கிக்கொள்வதிலும் பொருளில்லை- எல்லாச் சூழலிலும் எல்லா படைப்பாளிகளும் எதிர்கொள்வது இந்த பொதுவான மூர்க்கத்தையே. ஆனால் நாம் அவர்களுக்காகவும்தான் எழுதுகிறோம். ஆகவே எதிர்ப்பு கசப்பாக ஆகிவிடாமலிருக்கவேண்டும் என நாமே நம்மிடம் சொல்லிக்கொள்ளவேண்டும். இந்த வைரமுத்து இன்னும் மூன்றுமாதகாலம் அதிகபட்சம் பேசப்படுவார். அதன் பின் அவருடைய சினிமாப்பாடல் ரசிகர்களின் உலகுக்குள் செல்வார். அவர் நமக்கொரு பேசுபொருளே அல்ல. அவர் பெற்ற இந்த விருதும்கூட.
எதிர்ப்பை முடிந்த அளவு தீவிரமாக முன்வைத்துவிட்டேன். ஆனால் எதிர்ப்பு என் வழி அல்ல. எதிர்க்கவேண்டிய இடத்தில் கடுமையாக, கறாராக, அச்சமில்லாமல், தயக்கமில்லாமல் எதிர்ப்பை தெரிவிப்பேன். ஆனால் அந்த எதிர்ப்பு மனநிலையை அதிகபட்சம் ஐந்து நாட்களுக்கு மேல் நீட்டிப்பதில்லை. அது என் ஆற்றலைக் குறைத்துவிடும். என் ஆற்றல் என் கனவுகளிலேயே. ஆகவே இந்த எதிர்ப்பு முடிந்தது. முன்னரும் இப்படியே.
தமிழின் மூத்த பெரும்படைப்பாளிகள் பெரும்பாலானவர்கள் எந்த ஏற்புமின்றி இருக்கும் நிலை பற்றிய என் தொடர் ஆதங்கம் இயல் விருது உருவாவதற்கு ஒரு காரணம். ஆனால் அந்த விருது பல்கலையுடன் இணைக்கப்பட்டு, நடுவர்களாக பேராசிரியர்கள் அழைக்கப்பட்டபோது அவர்கள் அதை தங்களுக்கே மாறிமாறிக்கொடுத்துக்கொண்டார்கள். அந்த நிலைக்கு எதிராக என் கடும் எதிர்ப்பை நான் பதிவுசெய்தேன்- அவ்விருதை நிறுவிய அ.முத்துலிங்கம் என் பெருமதிப்புக்குரிய பெரும்படைப்பாளி என்ற போதிலும். அதையொட்டி உருவான கனவே விஷ்ணுபுரம் விருது. இன்று அது எந்த இடத்தில் உள்ளது என எவரும் அறிவார்கள்.
தமிழ் விக்கிபீடியாவில் இருந்த நசிவுக்கும்பலுடன் போராடி, தோற்றபின், என் எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். உருவானதே தமிழ் விக்கி. இன்று தமிழ்விக்கியின் பங்களிப்பென்ன என்று எவருக்கும் தெரியும். விக்கிபீடியாவே இன்று மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளமைக்கு தமிழ்விக்கியே காரணம்.
அதைப்போன்ற ஒரு சூழல் இது. நம்மை இழிவுசெய்த ஞானபீடத்திடம் இனி நமக்கு பூசல் இல்லை. நமக்கான விருதை நாம் உருவாக்குவோம். தமிழகத்தில் இருந்து அந்த விருதுக்காக உலகமே இங்கு வரட்டும். மிகப்பெரும் கனவு. கனவுகள் மலைப்பூட்டுபவைதான். ஆனால் ஒவ்வொரு சிறுபடியாக ஒவ்வொரு நாளும் காலெடுத்து வைத்தால் எய்திவிடமுடியும். இணைந்து செல்வோம்.
https://www.jeyamohan.in/230261/
By
கிருபன் ·