Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அங்கிருந்து இது வரை... இனி இங்கிருந்து எது வரை?...

Featured Replies

அங்கிருந்து இது வரை... இனி இங்கிருந்து எது வரை?...

[திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2009, 07:57 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]

இன்றைய கட்டத்திற்கு தமிழர் போராட்டம் எப்படி வந்தது, இங்கிருந்து இனி எப்படிச் செல்ல வேண்டும் என்பதை ஆராய்கின்றது இந்த கருத்துரை. வன்னிப் போரினதும், உலகளாவிய போராட்டங்களினதும் பின்னணயில் - காலத்தின் தேவை கருதியும், படித்தோரின் அறிவுரையின் படியும் இதை மீள் பிரசுரம் செய்கின்றது "புதினம்." நன்றி: "தமிழ்நாதம்".

ஜனவரி 18, 2009

அன்பானவர்களே!

அண்மையில் உங்களுக்கு 'இன்னொரு கடிதம்" எழுதியிருந்தேன். பதில்களுள் பல கேள்விகளாகவே வந்திருந்தன. முதன்மையாய் இருந்தது, "இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்ற சிந்தனைக் கேள்வி.

எம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கின்ற இந்தச் சர்வதேசச் சதி வலை எவ்வாறு படிப்படியாக [systematically] பின்னப்பட்டது என்பதையும், நாம் எப்படி அதற்குள் சிக்கிக்கொண்டோம் என்பதையும் தெளிவாக விளங்கிக்கொள்வதே எம் முதற் கடமை.

அந்தச் சதி வலையின் ஒவ்வொரு முடிச்சுக்களும் - ஒவ்வொரு நகர்வுகளாய் - எம்மைச் சுற்றி எப்படிப் போடப்பட்டன என்பதை விளங்கிக்கொண்டால் தான், அவற்றை அவிழ்த்துச் செல்வது எப்படி என்பது பற்றியும் நாம் சிந்திக்க முடியும்.

பெரும் இராணுவ சாதனையைப் படைத்து புலிகள் முன்னேறினாலும், அல்லது நிலைமை மேலும் சிக்கலாகி அவர்கள் பின்னடைந்தாலும் -

இதுவரை என்ன நடந்தது என்பதை உற்று நோக்குவது, இனிமேல் நாம் செயற்படும் போது என்ன முட்டுக்கட்டைகள் எம் வழியில் போடப்படும் என்பதை விளங்கிக்கொள்ளவும் அவற்றை மேவிக்கடந்து நாம் முன்னே செல்வது எப்படி என்பது பற்றிச் சிந்திக்கவும் உதவும்.

நிகழ்வு:

தமிழர்களுக்கு எதிரான இந்தச் சதிவலையை இந்தியாவும், மீதி உலகமும் [Rest of the world] இரண்டு முனைகளினூடாகப் பின்னுகின்றன.

முதலாவது - தமிழீழப் போர்க்களம். அது நேரடியான இராணுவப் படையெடுப்பு.

அடுத்தது - பன்னாட்டுப் போர்க்களம். அது இராஜதந்திர அரசியல் கபட நகர்வுகள்.

முதலாவது - பல கற்களை வீசியாவது ஒரே காயை வீழ்த்தும் நோக்கம்: இலக்கு விடுதலைப் புலிகள் இயக்கம்.

அடுத்தது - ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்தும் எண்ணம்: இலக்கு பன்னாட்டுத் தமிழ் சமூகம்.

முதலாவதின் நோக்கம் - புலிகள் இயக்கத்தின் மரபு வழிப் போர்த் திறனை அழித்து, பின்னர் அதனை அரசியல் ரீதியாகவும் ஒதுக்கி - தமிழர்களை நேர்த்தியான அரசியல் பிரதிநிதித்துவம் அற்றவர்களாக்கிச் சிதைப்பது.

அடுத்ததின் நோக்கம் - வெளிநாட்டுத் தமிழர்களைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரித்து, அரசியல் சக்தியற்றவர்களாக்கி, பின்னர் தமிழர்களது தேசியத் தன்மையையே சிதைப்பது.

இந்தப் போரில் பல பங்காளிகள் இருக்கின்றார்கள்: முதன்மைப் பங்காளி - இந்தியா; முக்கிய பங்காளி - மேற்குலகம்; உப-பங்காளி - மீதமுள்ள உலகம்.

இந்த இரண்டு போர்க் களங்களுமே அவற்றிற்குள் பல உப-முனைகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு முனையும் ஒவ்வொரு உடனடி இலக்கு நோக்கி நகர்த்தப்படுகின்றது.

நோக்கம்:

இந்த இரண்டு போர்க் களங்களையும் சேர்ந்த ஒட்டுமொத்தமான போரின் இறுதி இலக்கு - தமிழ் தேசிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைச் சிதைத்து, தமிழீழக் கோரிக்கையை அடிப்படை அற்றது ஆக்குவதாகும்.

ஆனால் ஏன் இப்படி எல்லோரும் சேர்ந்து தமிழர்களுக்கு எதிரான போரை நடாத்துகின்றார்கள்?...

இந்தியா ஒரு காரணத்திற்காக, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் வேறொரு காரணத்திற்காக, மேற்குலகிற்கு எதிரான கிழக்குலகம் இன்னொரு காரணத்திற்காக, இஸ்லாமிய உலகம் வேறொரு காரணத்திற்காக நடாத்துகின்றார்கள்.

ஆனால் - சுருக்கமாக - எல்லோரும் சேர்ந்து, தம் சொந்த கேந்திர அரசியல் நலன்களிற்காக - சிங்கள இனத்தைப் பகடைக் காய்களாகப் பாவித்து, தமிழினத்திற்கு எதிராகப் படை எடுக்கின்றார்கள்.

இந்தப் போரை நடாத்துகின்றவர்கள் மிகத் தெளிவாக ஒழுங்கமைத்து - நன்கு திட்டமிட்ட வழிமுறைகளினூடாக - படிப்படியாக, நிதானமாக அதைச் செய்கின்றார்கள்.

அதனால் - இந்தப் போருக்கு உட்பட்டு இருக்கின்ற தமிழர்களாகிய நாங்கள் இந்தச் சர்வதேசச் சதியின் பரிமாணங்களைப் போதிய ஆழத்திற்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.

இதுவரை காய்கள் எப்படி நகர்த்தப்பட்டன, இப்போது எப்படி நகர்த்தப்படுகின்றன என்பதை மிகவும் நுணுக்கமாகவும், நெருக்கமாகவும் நோக்கி நாம் ஆராய வேண்டும்.

அப்போது தான் - இனிமேல் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சரியாகச் சிந்தித்துச் செயலாற்ற முடியும்.

நகர்வு - 1:

2001 இன் சூழலைப் பற்றி எனது முதற் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஆனையிறவை வீழ்த்தி, புலிகள் முகமாலை வரை முன்னேறியதிலிருந்து கதை ஆரம்பிக்கின்றது.

போர்க் களத்தில் விடுதலைப் புலிகளின் கை என்றுமில்லாத அளவிற்கு ஓங்கியிருந்ததும், பொருளாதாரத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் கை என்றுமில்லாத அளவிற்குத் தாழ்ந்திருந்தது மேற்குலகத்திற்கப் பிடிக்கவில்லை.

புலிகளின் போர் எழுச்சியைக் கட்டுப்படுத்தவும், சிறிலங்காவின் பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தவும் அப்போது அதற்கு இருந்த ஒரே உடனடி வழி - சண்டையை நிறுத்த வைத்துப் புலிகளைப் பேச்சு மேசைக்கு இழுத்து வருவது தான்.

2002 இல் - இந்தியாவின் மனம் நிறைந்த ஆசீர்வாதத்துடனும், மேற்குலகத்தின் ஏகோபித்த ஆதரவுடனும் சமரச முயற்சிகள் ஆரம்பமாகின. அனுசரணையாளர் ஆகியது நோர்வே; இணைத் தலைமை நாடுகள் என அதனுடன் கூடிக் கொண்டன அமெரிக்காவும், யூரோப்பின் யூனியனும், ஜப்பானும்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும், புலிகள் இயக்கத்திற்கும் இடையில் எழுதப்பட்ட இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையானது - எல்லைகளை வரையறுத்து, பிரதேசங்களை அங்கீகரித்து - விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த பொது முகாமைத்துவக் கட்டமைப்பினை ஒரு நடைமுறை அரசாங்கமாகவே [De-Facto State] அங்கீகரித்தது.

இந்த வரலாற்றுப் புரிந்துணர்வு உடன்படிக்கையை வரைந்துருவாக்கிய பெருமை பாலா அண்ணையையே சேரும். இருந்தாலும், அவரது எண்ணங்களுக்கு இடமளித்து - கடல் தொடர்பான விவகாரங்கள் தவிர வேறு எதற்கும் முட்டுக்கட்டைகள் போடாமல் - உடன்படிக்கை கையெழுத்தாவதற்கு அனுசரணைகள் செய்தது மேற்குலகம்.

அதற்கு ஒரு மௌனப் புன்னகையோடு ஒப்புதல் கொடுத்தது இந்தியா.

போர்ச் செயற்பாடுகள் அனைத்தையும் இடைநிறுத்திவிட்டு தமிழ் தேசியப் போராட்டத்திற்கு சமரச வழியில் அரசியல் தீர்வு காணும் முயற்சிகளில் இறங்கினர் விடுதலைப் புலிகள்.

மேற்குலகம் நியாயத்துடன் செயற்படும் என்று நம்பினர் தமிழ் மக்கள்.

நகர்வு - 2:

ஆனால் - இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதப்படும் வரை நல்லவர்களாக நடித்து, ஆசீர்வாதங்கள் வழங்கி, அனுசரணைகள் செய்த மேற்குலகம், அது நடைமுறைக்கு வந்த பின்னர் தமது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தது.

ஓன்றன் பின் ஒன்றாக - தமிழர்களுக்குப் பாதகமான விடயங்கள் அரங்கேற்றப்பட்டன. சிலவற்றை சிறிலங்கா அரசும், சிலவற்றை மீதி-உலகமும், சிலவற்றை இருதரப்பும் சேர்ந்தும் அரங்கேற்றினர்.

1) போர் நிறுத்த உடன்படிக்கையில் ஒப்புக்கொண்டபடி, சிறிலங்கா அரசு -

* உயர்-பாதுகாப்பு வலயங்களை நீக்கவில்லை.

* பாடசாலைகளிலும், வீடுகளிலும், கோவில்களிலும் குடியிருந்த தமது படையினரை அகற்றவில்லை.

* போரினால் இடம்பெயர்ந்து அல்லற்பட்ட மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கவில்லை.

* மீள்-கட்டுமான மற்றும் புனர்-வாழ்வுப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட உப-குழுக்கள் செயற்பட இடமளிக்கவில்லை.

* அந்த உப-குழுக்களால் கண்டறியப்பட்ட 75 வரையான வேலைத் திட்டங்களில் எதனையும் செய்ய உடன்படவில்லை.

2) விடுதலைப் புலிகளின் கடற்-கலங்கள் பல தடவைகள் தாக்கப்பட்டு போராளிகள் கொல்லப்பட்டனர்.

3) இவ்வளவும் நடந்துகொண்டிருந்த போது - நோர்வேயோ அல்லது இணைத் தலைமை நாடுகளோ, உடன்பட்ட விடயங்களைச் செய்து முடிக்கும் படி சிறிலங்கா அரசின் மீது அழுத்தங்கள் போடவில்லை.

எல்லாவற்றிற்கும் ஒரு மௌனப் புன்னகையோடு ஊக்கமளித்தது இந்தியா.

இந்த நேரத்தில் -

உடன்படிக்கையிலும், அதுவரை நடந்து முடிந்த பேச்சுக்களிலும் ஒப்புக்கொண்ட விடயங்கள் நடக்காதவரை, மீதிச் சுற்றுப் பேச்சுக்களுக்குப் போவதில் பயனேதும் இல்லை என முடிவுக்கு வந்தனர் புலிகள்.

இந்த இடத்தில் தான் - மேற்குலகம் அதிர்ச்சியடைந்தது.

சண்டை நிறுத்தத்தை முறித்துக்கொண்டு, புலிகள் மீண்டும் போருக்குப் போய் விடுவார்களோ என்று அது திகைப்புற்றது. புலிகள் திரும்பவும் போருக்குப் போனால், 2001 ஆம் ஆண்டின் கள நிலவரங்கள் தொடர்ந்தால், போர் வலுச் சமநிலையில் புலிகளின் கை இன்னும் ஓங்கினால், சிறிலங்காவின் 'சீர்நிலை" [stability] குலைக்கப்பட்டால், அதன் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியுற்றால்... விளைவு என்னவாகிவிடுமோ என்று கவலையுற்றது மேற்குலகம்.

தமிழ் தேசியம் மீண்டும் பேரெழுச்சி பெற்றுவிடுமோ என்று அச்சமுற்றது இந்தியா.

ஆனால் - புரிந்துணர்வு உடன்படிக்கையைச் செவ்வனே நடைமுறைப்படுத்தி, சொன்னவற்றைச் செய்யுமாறு சிறிலங்கா அரசின் மேல் அழுத்தங்களைப்; போடுவதற்குப் பதிலாக -

எது நடந்தாலும் அந்த உடன்படிக்கையில் இருந்து விலகாமல் இருக்கப் புலிகள் மீது மட்டும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வழிமுறையை இந்த உலகம் கையாண்டது.

அதை அது படிப்படியாகச் செய்தது.

நகர்வு - 3:

முதற் படியாக - அடிப்படையாக - தடைசெய்யப்பட்ட ஒர் அமைப்பாகப் புலிகள் இயக்கத்தின் மீது அனைத்துலக ரீதியாக சட்டங்களைக் கொண்டு வந்தது இந்த உலகம்.

இந்தப் போர் நிறுத்த உடன்படிக்கை எழுதப்படுவதற்கு முன்னர் இரண்டு நாடுகள் மட்டுமே புலிகள் இயக்கத்தைப் 'பயங்கரவாதிகள்" என்ற வரைமுறைக்குள் அடக்கியிருந்தன.

ஒன்று - இந்திய;அடுத்தது - அமெரிக்கா.

இப்போது -

அரசியல் சமரச முயற்சிகளில் புலிகள் ஈடுபட்டிருந்த வேளையிலேயே, அவர்களை ஒரு 'பயங்கரவாத" இயக்கமாக ஏனைய மேற்கு நாடுகள் சட்டங்களைக் கொண்டு வந்தன.

பிரிட்டன், யூரோப்பியன் யூனியன், கனடா, ஓஸ்ரேலியா என ஒவ்வொரு நாடுகளாக, மேற்குலகம் புலிகள் இயக்கத்தைப் 'பயங்கரவாதிகள்" ஆக்கியது.

போரை நிறுத்திவிட்டு, தமிழரது அரசியல் அபிலாசைகளை அடைவதற்கு சமரச முயற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு இயக்கத்தைப் 'பயங்கரவாத" இயக்கமாகப் பட்டியலிடுவதற்கு நியாயமான எந்த ஒரு காரணமும் இந்த நாடுகளுக்கு இருக்கவில்லை. ஆனாலும், அவை அதைச் செய்தன.

தமக்கு எவ்வகையிலும் பயமுறுத்தலாக அமையாத - தமது நலன்களுக்கு எதிராக என்றும் செயற்படாத - ஒர் அமைப்பைப் 'பயங்கரவாத" இயக்கமாகப் பட்டியலிடுவதற்கு எந்தத் தேவையும் இந்த நாடுகளுக்கு இல்லை. ஆனாலும், அவை அதைச் செய்தன.

எல்லாவற்றுக்கும் ஒரு மௌனப் புன்னகையோடு ஊக்கமளித்தது இந்தியா.

புலிகள் இயக்கம் மீதான இந்தத் தடை ஒரு Cluster-குண்டு போன்றது. ஒரே பெரிய குண்டு பலவாகப் பரிந்து பல முனைகளில் தாக்குவதைப் போல, பல்பரிமாண நோக்கம் கொண்டது.

நகர்வு - 4:

இந்தத் தொடர் தடைகளின் தொடர்ச்சியாக -

'புரிந்துணர்வு உடன்படிக்கை"யின் ஒரு தரப்பை 'அரசாங்க"மாகவும், அடுத்த தரப்பைப் 'பயங்கரவாதிக"ளாகவும் தரம் பிரித்து நடாத்த ஆரம்பித்தது உலகு.

'யுத்த நிறுத்தம்" நடைமுறையில் இருந்த போதே கொண்டுவரப்பட்ட இந்தப் 'பயங்கரவாத"ப் பட்டியலிடுதல்களின் உடனடி நோக்கம் -

* சமரச முயற்சியிலேயே ஈடுபட்டிருங்கள் என புலிகள் இயக்கத்தை அழுத்துவது.

* பேச்சு மேசையில் கிடைப்பதை வாங்குங்கள் எனப் புலிகளை நிர்ப்பந்தம் செய்வது.

* சிறிலங்கா அரசு உடன்பாட்டின்படி செய்யாது விடினும் சமரச முயற்சியிலிருந்து விலகாமலிருக்கப் புலிகளை எச்சரிக்கை செய்வது.

* சமரச முயற்சிகளிலிருந்து விலகினால் எதிர்காலம் எல்லா வகையிலும் கடுமையானதாக அமையும் எனப் புலிகள் இயக்கத்தைப் பயமுறுத்தல் செய்வது.

அதே நேரத்தில் -

இந்தப் 'பயங்கரவாத'ப் பெயர் சூட்டல்களின் பின்னாலிருந்த நீண்டகால உள்நோக்கம் -

மேற்சொல்லப்பட்ட எல்லாவற்றையும் மீறிப் புலிகள் புரிந்துணர்வு உடன்பாட்டிலிருந்து விலகினாலோ, அல்லது சிறிலங்கா அரசாங்கமே போரை ஆரம்பித்தாலோ -

* ஒன்று - உள்நாட்டில் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" நடாத்தும் சிறிலங்கா அரசுக்கு அனைத்து போர்-தொடர்புபட்ட உதவிகளையும் செய்வது.

* இரண்டு - அனைத்துலக ரீதியாக, தத்;தமது நாடுகளிலிருக்கும் தமிழ் செயற்பாட்டாளர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுப்பதுடன், வெளிநாட்டுத் தமிழர்களிடமிருந்து புலிகளுக்கு எவ்வித உதவிகளும் போகாமல் தடுப்பது.

* மூன்றாவதும், முக்கியமானதும் - வெளிநாட்டுத் தமிழர்கள் மீது அழுத்தங்கள் போட்டும், உள்நாட்டுத் தமிழர்கள் மீது செல்வாக்குச் செலுத்தியும் - அரசியல் ரீதியாகத் தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிப்பது.

நகர்வு - 5:

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையானது, இரண்டு தரப்பையும் சம பங்காளிகளாக்கி, படைவலுச் சமநிலையைப் பேணுவதற்கு இரு தரப்பிற்கும் இடமளித்திருந்தது.

ஆனால் - புலிகள் இயக்கம் தமது படை பலத்தைப் பேணுவதற்கு எல்லாவகையான முட்டுக்கட்டைகளையும், எல்லா வழிகளிலும் போட்டுக்கொண்டு, மறு புறத்தில் -

சிறிலங்காவின் பொருளாதாரத்தையும், அதன் இராணுவ இயந்திரத்தையும் முழுமையாகப் பலப்படுத்தும் காரியங்களை இந்தியாவும், மீதி உலகமும் மும்முரமாகச் செய்தன.

அதாவது - ஒரு பக்கத்தில், சீர்குலைந்து போயிருந்த சிறிலங்காவின் படைத்துறை, சமரச முயற்சிகள் ஆரம்பித்து மூன்று வருடங்களிலேயே முழுமையாகக் கட்டி எழுப்பப்பட்டுவிட, மறு பக்கத்தில், புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்ச்சியாகத் தாக்கி மூழ்கடிக்கப்பட்டன.

போர்க் களம்:

முன்னரே போரை எதிர்பார்த்து - அதற்கு முன்னேற்பாடாக இவ்வளவு நகர்வுகளும் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு, மிகத் துல்லியமாகச் செயலாக்கப்பட்ட பின்பு -

உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக - இரண்டு போர்க் களங்களைத் தமிழர்களுக்கு எதிராகத் திறந்தன சிறிலங்காவும், மீதி உலகமும்.

பி.ஜே.பி-யின் ஆட்சி முடிவுக்கு வந்து, சோனியா அம்மையாரின் காங்கிரஸ் ஆட்சியல் ஏறியது. ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்குப் பின்னர் - நல்ல தருணம் பார்த்துக் காத்திருந்த பின்னர் - ஓரளவுக்கு நேரடியான தலையீட்டை ஆரம்பித்தது இந்தியா.

பாகிஸ்தானின் மிரட்டல்களுக்கும், அதன் அணு குண்டுக்கும் பயந்ததைவிட, பிரபாகரனின் மனவுறுதிக்கும், அவரது தலைமையில் எழுச்சிகொண்ட தமிழ் தேசியத்திற்கும் பயந்தது காங்கிரசின் இந்தியா.

இதுவரையும் மேற்குலகம் மேற்கொண்ட நகர்வுகளுக்கு - பின்னாலே இருந்து ஆசிகள் தந்த இந்தியா, இப்போது, சோனியா அம்மையரின் தலைமையில் - மெல்ல மெல்ல - தானே தலைமை ஆட்டக்காரன் ஆகியது.

பூதாகரமாய் உருவெடுத்த சைனாவை எதிர்கொள்ள வழி தேடிக்கொண்டிருந்த மேற்குலகம், இன்னொரு பூதமாய் வளர்ந்த இந்தியாவோடு - வேறு வழியின்றித் தோள் சேர்ந்தது.

தமிழர்களுக்கு எதிரான போர்க் களங்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் திறக்கப்பட்ட போது - தென்னாசியாவில், இந்தியாவின் விருப்பமே மேற்குலகின் விருப்பம் ஆனது.

முதலாவது களம்:

தமிழீழப் போர்க் களம். அதன் அகன்ற பரிமாணங்கள் பற்றி எனது முதற் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

அது நேரடி யுத்தம். மிக வெளிப்படையானது. முழுமையாக இராணுவ மயப்பட்டது. புலிகளின் மரபுவழிப் போர்வலுவை நிர்மூலம் செய்து, அவர்களது அரசியல் சக்தியையும் அழிக்கும் இலக்கைக் கொண்டது. மறைமுகக் காரணிகள் என பெரிதாக எதுவும் அற்றது.

புலிகளைப் 'பயங்கரவாதிகள்" ஆக்கிவிட்டு, "பயங்கரவாதத்திற்கு எதிரான" போர் என்ற பெயரில் - உலகமே பின்னாலே திரண்டு சிறிலங்காவின் படைகளை முன்னாலே தள்ளுகின்றது.

பணத்தை வழங்கி, ஆயுதங்களை வழங்கி, போரியல் ஆலோசனைகளை வழங்கி, போர்க் கருவிகளையும் அவற்றை இயக்குவதற்கு ஆட்களையும் வழங்கி, வானூர்தி ஒட்டிகளை வழங்கி, புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பற்றிய உளவுத் தகவல்களை வழங்கி, வெளிநாட்டுத் தமிழர்கள் மீது சட்ட அழுத்தங்களைப் போட்டு - எல்லோருமாகப் பின்னாலே திரண்டு சிறிலங்காவின் படைகளை முன்னாலே தள்ளுகின்றனர்.

அந்த நேரடிப் போர்க் களத்தைப் புலிகள் தான் வெல்ல வேண்டும். ஆனால், அந்தக் களத்தில் அவர்கள் வெல்லுவதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் எம்மாலான எல்லா வழிகளிலும் நாம் தான் செய்ய வேண்டும். அதனைத் தவிர, அதன் ஆழமான போரியல் விபரங்களில் நாம் கவனம் செலுத்துவதற்குப் பெரிதாக எதுவும் இல்லை.

அடுத்த களம்:

அனைத்துலகப் போர்க் களம். தமிழீழத்திற்கு வெளியே திறக்கப்பட்டிருக்கும் இந்தக் களத்தைத் தான் நாம் ஆழமாக - அலகு அலகாகப் பிரித்து - உற்று நோக்க வேண்டும்.

ஏனெனில் - இது தான் நமக்கான களம். நாம் போராட வேண்டிய களம். நாமே வெல்ல வேண்டிய களம். புலிகளை நம்பியிருக்கத் தேவையில்லாத களம்.

தமிழர்களது தேசிய சுய நிர்ணய உரிமைக்கு [National Self-Determination] ஒரு சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதும், தமிழர்களுக்கு எனத் தமிழீழத் தனியரசை அமைப்பதுமே எமது அரசியல் இலட்சியம்.

அந்த இலட்சியத்தை அடைவதற்காகவே விடுதலைப் புலிகள் இயக்கமும் - எமது சார்பில் - ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

தமிழர்கள் தமது தனியரசுக் கோரிக்கையை சர்வதேச அளவில் முன்னெடுப்பதற்கு முட்டுக்கட்டைகள் போடுவதற்கு நேரடியான எந்த வழியும் இல்லாத நிலையில், இந்த உலகு வேறு மார்க்கத்தைத் தேடியது.

அது கண்டுபிடித்த ஒரு வழி தான் - புலிகள் இயக்கத்தின் மீது உலகெங்கும் கொண்டுவரப்பட்ட அந்த Cluster-குண்டு பாணியிலான தடை. அந்த தடையின் ஒர் இலக்கு - தமிழர்களால் உலகெங்கும் முன்னெடுக்கப்படும் 'தமிழீழம்" என்ற கோட்பாடு.

அதே தமிழீழக் கோரிக்கையை முன்வைத்துப் போராடும் விடுதலைப் புலிகளைப் 'பயங்கரவாத" இயக்கம் ஆக்கியதன் மூலமாக -

தனியரசைக் கோருவதும், சுய நிர்ணய உரிமையை வலியுறுத்துவதும் - அவை நியாயபூர்வமான அபிலாசைகளாக [Legitimate Aspirations] இருந்தாலும் - அதே கோட்பாடுகளை ஒரு 'பயங்கரவாத" இயக்கமும் முன்வைப்பதால் -

அந்தக் கோட்பாடுகளை முன்னெடுப்பதே ஒரு பயங்கரவாத இயக்கத்தின் கருத்தை முன்வைப்பது போன்றதாகும் எனும் விதமான ஒர் அச்சச் சூழலை வெளிநாட்டுத் தமிழர்கள் மத்தியில் இந்த உலகு உருவாக்கியது.

அந்த வகையில் - தமிழீழத்தைக் கோருவதும், சுய நிர்ணய உரிமையை வலியுறுத்துவதும், இந்த உலகம் ஏற்றுக்கொள்ள மாட்டாத ஒரு கோட்பாடு என்ற ஒரு கருத்தையும் தமிழர்கள் மத்தியில் உருவாக்கி, அதனை நிராகரித்தது.

இதன் மூலமாக - தமிழீழம் பற்றிப் பேசினாலே 'பயங்கரவாத"ப் பட்டம் சூட்டப்பட்டு விடுவோம் என்ற பயத்தையும், அந்தப் பட்டம் சூட்டப்பட்டுவிட்டால் வேறு கருத்துக்கள் கூட சொல்ல முடியாமல் நாம் நிராகரிக்கப்பட்டுவிடுவோம் என்ற தயக்கத்தையும் தமது நாட்டுப் பிரஜைகளாக உள்ள தமிழர்கள் மத்தியிலேயே உருவாக்கியது.

இதன் விளைவாக - தமது சொந்த நாட்டுப் பிரசைகளுக்கே, அவர்கள் தமது உணர்வுகளையும், அபிலாசைகளையும் வெளிப்படுத்துவதற்கும், பேசுவதற்கும் உள்ள சுதந்திரத்திற்கு [Freedom of Speech and Freedom of Expression] அந்தந்த நாட்டு அரசுகளே முட்டுக்கட்டைகளைப் போட்டன.

இவற்றின் முடிவாக - தமிழர்களுக்காக தமிழர்களுக்குள் நடாத்தப்படும் கூட்டங்களில் தமிழீழம் பற்றியும், புலிகள் இயக்கம் பற்றியும் வானுயரப் புகழும் நாங்கள், அதை உண்மையிலேயே சொல்ல வேண்டிய எங்களது நாட்டு அரசியல் தலைவர்களுடனான சந்திப்புக்களில், எதுவும் சொல்ல முடியாதவர்களாய் வாயடைக்கப்பட்டோம்.

இவ்வாறான சூழலில் தான் - தமிழீழம் பற்றிப் பேசினால் தமது பேச்ச எடுபடாது என்ற முடிவுக்கு வந்த எமது வெளிநாட்டுத் தமிழ் செயற்பாட்டாளர்கள் தத்தமது நாட்டு அரசுகளை அணுகுவதற்குப் புதிய ஒரு தந்திரோபாயத்தைக் கையிலெடுத்தார்கள்.

அது என்னவெனில் - எமக்குத் தேவையானதாக இருந்தாலும், மேற்குலகத்திற்குப் பிடிக்காத விடயங்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, எமக்கு முக்கியமற்றதாக இருந்தாலும் மேற்குலகத்திற்குப் பிடித்த விடயங்களை மட்டுமே மேற்குலகத்துடன் பேசுவது.

அதாவது - தமிழ் தேசிய இனப் போராட்டத்தின் நிரந்தர முடிவுக்கான எமது அடிப்படை அரசியல் இலட்சியம் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, அந்தப் போராட்டத்தின் வழியில் நாம் சந்திக்கும் துன்பங்களைப் பற்றிய தற்காலிக மனிதாபிமானப் பிரச்சனைகளை [Humanitarian Crisis] பற்றி மட்டும் பேசுவது.

இந்த இடத்தில் தான் -

தனது ஆறு ஆண்டுகாலம் நீண்ட - பொறுமையான - நுட்பம் மிகுந்த - நகர்வுகளினதும், நடவடிக்கைகளினதும் துல்லியமான வெற்றியை மேற்குலகம் பெற்றது.

மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கு உதவி வேண்டி நாம் அதன் காலடியில் விழ வேண்டும் என அது காத்திருந்தது. அப்படி விழுந்து - நாங்கள் அவற்றைச் சார்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்த்திருந்தது. அப்படிச் சார்ந்திருந்து - அது சொல்வதையே கேட்கும் ஒரு நிர்ப்பந்த சூழலுக்குள் எம்மைச் சிக்க வைக்க அது விரும்பியிருந்தது.

அப்படியாக - மனிதாபிமானப் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேசும் முடிவை நாம் எடுத்த போது, தனது விருப்பத்தில் வெற்றி கண்ட மேற்குலகு, எம் மீது ஒரு மாய வலையை விரித்தது.

எமது கஸ்டங்களைச் சொல்லி நாம் அழும் போது அக்கறையோடு கேட்பது போல நாடகமாடியது. தனக்கு ஏற்கெனவே தெரிந்த விடயங்களையே - நாம் சொல்லும் போது - ஏதோ புதிதாகக் கேட்பது போலப் பாசாங்கு செய்தது.

நாமும் - 'மேற்குலகிற்குப் பிடித்த விடயங்களைப் பேசும் போது அது அக்கறையோடு கேட்கின்றதே" என்று, அதற்குத் தெரிந்த விடயங்களையே பேசிப் பேசி, கடைசியில் தமிழர்களுக்கு என்ன தேவை என்பதைச் சொல்லுவதை விடுத்துவிட்டு, மேற்குலகத்திற்கு என்ன பிடித்ததோ அதை மட்டுமே பேசப் பழகிக்கொண்டோம்.

இப்பொழுது -

முப்பது ஆண்டு காலம் போராடியதன் பின்பு, நூறாயிரம் மக்களை உயிர்ப்பலி கொடுத்த பின்பு, இருபத்தி மூவாயிரம் பேராளிகளது கல்லறையின் மேல் நின்று கொண்டு -

"தமிழீழத் தனியரசு" பற்றிப் பேசுவதை நாங்கள் தவிர்க்கின்றோம். தமிழரின் சுய நிர்ணய உரிமை பற்றிப் பேசுவதற்கு நாங்கள் தயங்குகின்றோம். "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே எமது ஏக அரசியல் பிரதிநிதிகள்" என்று வெளிப்படையாகச் சொல்லுவதற்குப் பின்னடிக்கின்றோம்.

சொல்லப்பட வேண்டிய இவற்றைச் சொல்லி, எமக்கான அங்கீகாரத்தைத் தலைநிமிர்ந்து கோருவதைத் தவிர்த்துவிட்டு - உணவும், உடையும், மருந்தும், போர் நிறுத்தமும் வேண்டி - பிச்சைக்காரர்கள் போல - உலகத்தின் முற்றத்தில் கையேந்தி நிற்கின்றோம்.

வன்னித் தமிழர்கள் அழிகின்றார்கள், கிழக்குத் தமிழர்கள் படுகொலையாகின்றார்கள், வடக்குத் தமிழர்கள் கடத்தப்படுகின்றார்கள், கொழும்புத் தமிழர்கள் காணாமல் போகின்றார்கள், மலையகத் தமிழர்கள் கைதாகின்றார்கள் என்று உலகத் தமிழர்கள் நாம் புலம்பி அழுகின்றோம்.

இந்த உலகத்திற்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும் எங்கள் துயரங்களைத் திரும்பவும் சொல்லுவதற்காக - ஊர்வலங்கள் வைத்து, மட்டைகள் பிடித்து, கோசங்கள் எழுப்பி, கடிதங்கள் எழுதி, மனுக்கள் அனுப்பி - எம்மையே நாம் ஏமாற்றுகின்றோம்.

போராட்டத்துக்கு அடிப்படையான 'தமிழீழம்" என்ற தீர்வை வலியுறுத்துவதை விட்டுவிட்டு, போரை நிறுத்தும்படி மன்றாடுகின்றோம்.

பிரபாகரனும் அவருடைய போர் வீரர்களும் தலை குனியாது நிகழ்த்தும் கம்பீர யுத்தத்தின் தார்ப்பரியங்களை நாம் கேவலப்படுத்துகின்றோம்.

ஆனால் - இந்த நாளுக்காகத்தான் இந்த உலகமும், காங்கிரசின் இந்தியாவும் காத்திருந்தன, தமது கடைசி நகர்வை மேற்கொள்வதற்காக.

அந்தக் கடைசி நகர்வு தான் - புலிகள் இயக்கத்தின் மீது கொண்டுவரப்பட்ட அந்த Cluster-குண்டு பாணியிலான உலகத்-தடையின் கடைசி இலக்கு.

அது - வெளிநாடுகளில் வாழும் தமிழர்களைப் புலிகளிடமிருந்து பிரிப்பது; உள்நாட்டில் வாழும் தமிழர்களின் மீது போலித் தீர்வு ஒன்றைத் திணிப்பது.

ஒரு புறம் - மனிதாபிமானப் பிரச்சனைகளைச் சொல்லித் தம்மைத் தேடி வந்த வெளிநாட்டுத் தமிழர்களை, மானிட நேய முகத்தைக் காட்டி மயக்கியது இந்த உலகம்.

மறு புறம் - 'ஈழத்தமிழர்களைக் காப்பாற்று!” என்று பொங்கியெழுந்த தமிழகத் தமிழர்களை, 'இதோ முகர்ஜியை அனுப்புகின்றோம், மேனன் போயிருக்கின்றார்" என்று கூறியே அடக்கியது இந்தியா.

இப்போது -

தமிழர்களின் அவலங்களைத் தீர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு மேற்குலகும், அவர்களை அழிவிலிருந்து காப்பதாகக் கூறிக்கொண்டு இந்தியாவும் காலத்தை இழுத்தடிக்கின்றன.

கிளிநொச்சியின் வீழ்ச்சிக்காய் காத்திருந்து, ஆனையிறவின் வீழ்ச்சிக்காய் காத்திருந்து - இப்போது, முல்லைத்தீவினதும், புதுக்குடியிருப்பினதும் வீழ்ச்சிக்காய் காத்திருக்கின்றன.

முப்படைகளையும், நெடுந்தூரப் பீரங்கிகளையும் வைத்திருக்கும் புலிகளின் மரபுவழிப் போர்வலுவை உடைத்து, மீண்டும் அவர்களை ஒரு கெரில்லாப் படையாக காட்டிற்குள் பதுங்க வைக்கும் நம்பிக்கையோடு, சிறிலங்காவுக்கு காலத்தை எடுத்துக் கொடுக்கின்றன.

அதே நேரத்தில் - இன்னொரு பக்கத்தில் - விடுதலைப் புலிகளோடு இருக்கும் வரை தமிழர்களது துன்பங்கள் எதுவும் நீங்கப் போவதில்லை என்ற சமிக்ஞையை கொடுத்து -

'புலிகள் அழிந்து போவதைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் பிரச்சனைக்கு நாங்கள் நல்ல தீர்வைப் பெற்றுத் தருகின்றோம், நீங்கள் புலிகளை விட்டு விலகுங்கள்" என்று தமிழர்களுக்குச் சொல்லாமல் சொல்லுகின்றன.

இந்த அணுகுமுறையோடு -

முதலாவது, அது சரிவராமல் போனால் அடுத்தது என இரண்டு நோக்கங்களோடு இந்தியாவும் இந்த உலகமும் செயற்படுகின்றன:

* புலிகளிடமிருந்து தமிழர்களையும், தமிழர்களிடமிருந்து புலிகளையும் பிரித்து, விடுதலைப் புலிகளுக்கு உதவிகள் செல்வதைத் தடுப்பது. உதவிகள் போகாமல் நிர்க்கதியாகி நிற்கும் புலிகளை இராணுவ ரீதியில் அழிப்பது. புலிகள் அழிந்த பின் - கேட்பதற்கு யாருமற்ற நிலையில் தமிழர்கள் இருக்கும் போது, பிச்சை போல, தீர்வே இல்லாத ஒரு தீர்வை அவர்கள் மீது திணிப்பது.

* வெளிநாட்டுத் தமிழர்களது நிதியுதவியில் தான் புலிகள் இயக்கம் தங்கியிருக்கின்றது என்பதால், வெளிநாட்டுத் தமிழர்களைக் கபடமாய்க் கவர்ந்து, அவர்கள் மூலமாக புலிகள் இயக்கத்தின் மீது அழுத்தங்களைப் போடுவது. அந்த அழுத்தத்தின் மூலமாக – விடுதலைப் புலிகளைத் தமது வழிக்குக் கொண்டு வந்து, பிச்சை போல, தீர்வே இல்லாத ஒரு தீர்வை ஏற்க வைப்பது.

இந்த இரண்டு நோக்கங்களில், ஏதாவது ஒன்றை அடையும் எண்ணத்தோடு தான் இந்தியாவும், இந்த உலகமும் இப்போது செயற்படுகின்றன.

இப்போது -

உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்ன என்ற அந்த மிக முக்கியமான கேள்வியை எம்மைப் பார்த்தே நாம் கேட்போம்.

இந்தியாவில் காங்கிறஸ் ஆட்சி இறங்கினால் என்ன நடக்கும் எனக் காத்திருக்கவோ, அமெரிக்காவில் ஒபாமாவின் ஆட்சி ஏறினால் என்ன நடக்கும் எனக் காத்திருக்கவோ எமக்கு இப்போது நேரம் இல்லை.

விடுதலைப் புலிகளின் இராணுவ வெற்றிக்காகக் காத்திருக்கவும் எமக்கு இனி நேரம் இல்லை.

போராட்டத்தை உடனடியாக நாமே கையில் எடுப்போம்.

சரியான நகர்வுகளை நாம் தெளிவாக மேற்கொண்டால், புலிகளின் போர் வெற்றிக்கே நாம் வழியமைக்கலாம்.

அல்லது - நாம் காத்திருப்பதைப்போல, புலிகள் இயக்கம் ஒரு மாபெரும் இராணுவ வெற்றியைச் சாதித்தால், அதற்கெதிராக இந்த உலகமும், காங்கிரசின் இந்தியாவும் முன்னரைப் போல குறுக்கே வர முடியாத ஒரு சூழலை உருவாக்கலாம்.

எப்படி?

எம் முன்னால் இரண்டு பணிகள் உள்ளன. ஒன்று உடனடியாகச் செய்யப்பட வேண்டியது. அடுத்தது, மிக உடனடியாகச் செய்யப்பட வேண்டியது.

உடனடியாகச் செய்யப்பட வேண்டியவை என்ன என்ன என்பதை நீங்களும் சிந்தித்து எமக்கு எழுதுங்கள், நானும் சிந்திக்கின்றேன்.

அவற்றைச் சிந்திக்கின்ற அதே வேளையில், பெரிதாகச் சிந்தனை எதுவும் தேவைப்படாத - மிக உடனடியாகச் செய்;யப்பட வேண்டிய பணியை இப்போதே சொல்லிவிடுகின்றேன்.

சுருக்கமாகச் செல்வதானால் - உலகெங்கும் இருக்கும் இந்தியத் தூதுவரகங்களைத் தமிழர்கள் உடனடியாக 'முற்றுகை" இட வேண்டும்.

இங்கே நான் 'முற்றுகை" என்று குறிப்பிடுவது மனிதர்கள் கூடி வளைப்பதை மட்டுமல்ல. எம் எண்ணங்களால், கருத்துக்களால், ஆக்கபூர்வமான செயல்களால் முற்றுகை இட வேண்டும்.

எமது பிரச்சனையில் இந்தியாவே இப்போது முதன்மையானதும் முக்கியமானதுமான ஆட்டக்காரர்: தமிழர் போராட்டத்தை இந்தியா எதிர்த்தால், முழு மேற்குலகமும் எதிர்க்கும்; இந்தியா அங்கீகரித்தால், முழு மேற்குலகமும் ஆதரிக்கும்.

தென்னாசியாவில் இன்று இந்தியாவே எல்லாம்: இந்தியாவை மீறி இந்து சமுத்திரத்தின் அலை கூட அசையப் போவதில்லை.

பாகிஸ்தானோடு பரவசப்பட்டு, சைனாவோடு சல்லாபித்துக் கொண்டிருக்கும் சிறிலங்காவுக்கு, தனது நாட்டின் ஏழு கோடி மக்களினது விருப்பமின்மையையும் மீறி இந்தியா உதவி செய்வது இரண்டு காரணங்களுக்காக -

ஒன்று - 'எங்கள் நாட்டுப் பிரதமரைக் கொன்றவர்களை நாம் சும்மாவிடுவதா?" என்ற காங்கிரஸ் காரர்களின் அர்த்தமற்ற வரட்டுக் கௌரவம்.

அடுத்தது - தமிழீழத் தனிநாடு தென்னிந்தியாவில் தனியரசுக் கிளர்ச்சிகளை உருவாக்கும் என்ற அடிப்படையற்ற பயம்.

தனது தென் கோடியில் ஒரு பெரும் காப்பரனாகவும், என்றும் தளம்பல் அற்ற ஒரு வரலாற்று நண்பனாகவும் இருக்கக்கூடிய ஒரு மக்கள் இனத்தை அழிக்க இந்தியா இன்று முன்னின்று முயல்வதற்கு வேறு எந்த உருப்படியான காரணமும் இல்லை.

செய்தி:

முக்கியமான மூன்றே மூன்று விடயங்களை இந்தியாவிடம் நாம் - மீண்டும் மீண்டும் - எல்லா வழிகளிலும் வலியுறுத்த வேண்டும்.

அந்த மூன்று விடயங்களையும் செய்யுமாறு - கடுமையான அழுத்தங்களைத் தொடர்ச்சியாகப் பிரயோகிக்க வேண்டும்.

* தமிழீழப் போராட்டத்தை அங்கீகரித்து, தனியரசு உருவாக உதவுங்கள்:

அது தான் இந்தியாவின் பாதுகாப்புக்கும் நிபந்தனையற்ற உத்தரவாதம்.

* தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக அரசியல் பிரதிநிதிகள்:

வேறு எவரையும் எம் பிரதிநிதிகளாக நாம் எற்றுக்கொள்ளப் போவதில்லை.

இந்தியாவின் நலன்களுக்கு எதிராகப் புலிகள் எப்போதும் செயற்படவில்லை.

புலிகள் மீதான தடையை நீக்கி இராஜதந்திரத் தொடர்புகளை எற்படுத்துங்கள்.

* சிறிலங்காவுக்கான போர்-சார் உதவிகளை உடனடியாக நிறுத்துங்கள்:

கருவிகள், உளவுத் தகவல்கள், ஆளணி, ஆலோசனைகள் என எல்லாவற்றையும்.

சிறிலங்கா உங்களின் நம்பிக்கையான நண்பனாக எப்போதுமே இருந்ததில்லை.

செயல் - 1:

உலகிலுள்ள ஒவ்வொரு இந்தியத் தூதுவரகத்தையும் நாம் அணுக வேண்டும். ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்களும், இளையோர் அமைப்புக்களும் தேர்ந்த பிரதிநிதிகள் குழக்களை [Delegations] உருவாக்கி அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதுவர்களைச் சந்தித்து இந்த மூன்று விடயங்களையும் வற்புறுத்த வேண்டும். இன்றே இதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்.

ஒரு தடவையோ, இரு தடவையோ, மூன்று தடவையோ போய்விட்டு விட்டுவிடாமல், தொடர்ச்சியாக - மாதத்தில் இரு தடவையாவது - செல்ல வேண்டும். இந்தியத் தூதுவரகங்கள் மீது அழுத்தங்களை இடைவிடாது போட வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாமும் ஓயப் போவதில்லை என்ற தெளிவை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

தற்போதைய போரை நிறுத்துவது பற்றியும், வன்னி மக்கள் எதிர்கொண்டு நிற்கும் மனிதப் பேரவலத்தைப் பற்றியும், அவர்கள் எதிர்நோக்கியிருக்கும் பெரும் இனப் படுகொலை ஆபத்தைப் பற்றியும் சொல்லுகின்ற அதே வேளையில் -

இந்த ஒவ்வொரு சந்திப்பினதும் கடைசி 40 வீதமான நேரம், மேற்சொல்லப்பட்ட இந்த மூன்று விடயங்களையும் வலியுறுத்துவதற்கு ஒதுக்கப்பட வேண்டும்.

இந்த மூன்று விடயங்களயும் நாம் முன்வைக்கும் போது - பல மழுப்பல் கதைகளை இந்திய தூதுவர்களும், அங்குள்ள அதிகாரிகளும் எமக்குச் சொல்லுவார்கள்.

"சோனியா காந்தி இருக்கும் வரை இவை எதையும் செய்ய முடியாது," "அவர் பழைய கோபத்தில் இருக்கின்றார்," "டெல்லியிலுள்ள காங்கிறஸ் தலைவர்கள் இவற்றுக்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள்," "பிரபாகரன் மீது எல்லோரும் கோபத்தில் இருக்கின்றார்கள்," என்ற விதமாக ஆயிரத்தெட்டுக் கதைகளை அடுக்குவார்கள்.

"பிரபாகரன் இல்லாமல் போனால் அடுத்ததாக யார் வருவினம்?," "அடுத்த இடத்தில யார் இருக்கினம் என்று?" என்று கேள்விகள் கேட்பார்கள். ஏதோ, பிரபாகரன் இல்லாமல் போனால் தமிழருக்கு விடிவு கிடைத்துவிடும் என்ற எண்ணத்தை எமக்கு ஊட்டுவது போல நடிப்பார்கள்.

ஆனால், நாங்கள் மயக்கமடையாமல், திடமாகவும், ஒரே சீராகவும் இருந்து, தொடர்ச்சியாக எமது அந்த மூன்று கோரிக்கைகளையும் திரும்பத் திரும்ப வலியுறுத்த வேண்டும்.

செயல் - 2:

இந்தியத் தூதுவரகங்களின் முன்னால், இந்த மூன்று விடயங்களையும் வலியுறுத்தி பேரணிகளை தொடர்ந்து நிகழ்த்த ஆரம்பிக்க வேண்டும். இந்த முயற்சியை ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழ் செயற்பாட்டாள்களும், இளையோர் அமைப்புக்களும் மிக உடனடியாக ஒழுங்கமைக்க வேண்டும்.

ஆகக் குறைந்தது ஆயிரம் பேராவது ஒவ்வொரு தடவையும் அங்கு திரள வேண்டும். பேரணிகளின் முடிவில், தூதுவரையும், தூதுவரக அதிகாரிகளையும் வெளியில் அழைத்து எமது கோரிக்கைகளைக் கையளிக்க வேண்டும். எமது கோரிக்கைகள் நிறைவேறாது விட்டால், நாம் அடங்கிப் போக மாட்டோம் என்பதையும் உணர்த்த வேண்டும்.

ஆனால், இந்தப் பேரணிகளின் முக்கியத்துவம் இவை அல்ல -

முக்கியமானது என்னவெனில் - பேரணிகள் ஒழுங்கு செய்வதற்கு ஒதுக்கப்படும் சக்தியின் அதே அளவு, அல்லது அதைவிட அதிகமான அளவு சக்தி வெளிநாட்டு ஊடகங்களை [Foriegn Medias] அந்த நிகழ்வுக்கு வரவைப்பதிலும், அந்தப் பேரணிகள் பற்றிய செய்திகளை வெளியிட வைப்பதிலும் செலவிடப்படவேண்டும்.

பேரணிகளை வைத்துவிட்டு, சும்மா "புதினத்"திலும், "தமிழ்நெற்"றிலும் மட்டும் "சங்கதி"களைப் "பதிவு" செய்து, படங்களைப் போடுவதில் எந்தப் பலனும் இல்லை.

அந்தந்த நாடுகளிலுள்ள தமிழர்களது-அல்லாத ஊடகங்களை [Non-Tamil Medias] அங்கு வரவழைக்க வேண்டும். எமது இந்த மூன்று கோரிக்கைகளையும் அவர்களுக்கு விளக்கி - வலியுறுத்தி - அந்த ஊடகங்களை நாம் தெளிவுபடுத்த வேண்டும்.

பன்னாட்டு ஊடகச் செய்திகள் தான் இந்தியாவின் மீதும், இந்தியத் தூதுவர்கள் மீதும் அழுத்தங்களை அதிகரிக்கும். அதே வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தான் அந்தந்த நாட்டு அரசுகளின் கவனத்தையும் ஈர்க்கும். ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்தியாவுக்கும், அந்தந்த நாடுகளுக்கும் ஏற்படுத்தும்.

எந்த ஒரு மாபெரும் பேரணியின் வெற்றியும், பலனும் - அந்தப் பேரணிக்குப் பன்னாட்டு ஊடகங்களில் கிடைக்கும் இடத்தில் தான் தங்கியுள்ளது.

செயல் - 3:

கும்பல் கும்பலாக மின்னஞ்சல்களை அனுப்புவது எந்தப் பலனையும் தராது. அவற்றைத் திறந்து பார்க்கவே மாட்டார்கள். திறக்காமலேயே "குப்பைத் தொட்டி"க்கள் போட்டுவிடுவார்கள்.

தாள்களில் கடிதங்களை எழுதி இந்தியத் தூதுவரகங்களுக்கு இலட்சக் கணக்கில் நாம் அனுப்ப வேண்டும். இந்த முயற்சியை ஒவ்வொரு நாடுகளிலும் தமிழ் செயற்பாட்டாள்கள், இளையோர் அமைப்புகளது துணையுடன் மிக உடனடியாக ஒழுங்கமைக்க வேண்டும்.

சோனியா காந்தி அம்மையாருக்கும், மன்மோகன் சிங் ஐயாவுக்கும், அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதுவர்களுக்கும் - சுருக்கமான ஒரு பக்கக் கடிதங்களைத் தனித்தனியாக எழுதி, உறைகளில் இட்டு இலட்சக் கணக்கில் அனுப்ப வேண்டும்.

அவ்வளவு பிரமாண்டமான தொகையில் வந்து குவியும் கடிதங்களை அவர்கள் திறந்து பார்த்தே ஆக வேண்டும். அவை அவர்களை ஏதோ ஒரு வகையிலான நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கும்.

முக்கியமாக - அந்தக் கடிதங்கள் எமது இந்த மூன்று கோரிக்கைகளையும் உறுதியாக வலியுறுத்த வேண்டும்: தமிழர்கள் தொடர்பாக இந்திய அரசின் வேறு எந்த அணுகு முறையையோ அல்லது நடவடிக்கையையோ நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

தமிழீழத்தின் பிறப்பே இந்தியாவின் நலன்களையும் பாதுகாக்கக்கூடியது என்பதை ஆதாரபூர்வமாக வலியுறுத்த வேண்டும்.

கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பலாம்: t.r.vazhuthi@gmail.com

http://www.puthinam.com/full.php?2b1VoKe0d...d434OO3a030Mt3e

யாவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய கட்டுரை.. :rolleyes:

Edited by Netfriend

  • தொடங்கியவர்

புலிகள் தமது முழுப் பலத்தையும் பாவிக்கின்றார்களா? : வி.சபேசன் ஆய்வு

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0d...d436QV2b02ZLu3e

  • கருத்துக்கள உறவுகள்

* தமிழீழப் போராட்டத்தை அங்கீகரித்து, தனியரசு உருவாக உதவுங்கள்:

அது தான் இந்தியாவின் பாதுகாப்புக்கும் நிபந்தனையற்ற உத்தரவாதம்.

* தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக அரசியல் பிரதிநிதிகள்:

வேறு எவரையும் எம் பிரதிநிதிகளாக நாம் எற்றுக்கொள்ளப் போவதில்லை.

இந்தியாவின் நலன்களுக்கு எதிராகப் புலிகள் எப்போதும் செயற்படவில்லை.

புலிகள் மீதான தடையை நீக்கி இராஜதந்திரத் தொடர்புகளை எற்படுத்துங்கள்.

* சிறிலங்காவுக்கான போர்-சார் உதவிகளை உடனடியாக நிறுத்துங்கள்:

கருவிகள், உளவுத் தகவல்கள், ஆளணி, ஆலோசனைகள் என எல்லாவற்றையும்.

சிறிலங்கா உங்களின் நம்பிக்கையான நண்பனாக எப்போதுமே இருந்ததில்லை.

30 வருடங்கள் இந்தியா செய்த அழிவு காணாதனென்று மீண்டும் இந்தியாவா?

கியூபா, அமெரிக்கா பக்கத்தில் இருக்கிறதென்ற காரணத்துக்காக அமெரிக்க ஆதரவுடன்தான் விடுதலை என்று இருந்திருந்தால் அப்படியே அமெரிக்க முதலாளிகளின் அடிமையாக இன்றும் இருந்திருக்கும்.

இந்தியாவின் பிரச்சினை, தமிழீழம் உருவானால் அது தமிழ்நாட்டில் தமிழ் தேசிய உணர்வை ஊக்குவிக்கும் என்பதாகும். இதற்கு இன்றுவரை இந்தக்கருத்துரையில் மட்டுமல்ல எந்த மட்டத்திலும் நாம் இந்திய அரசின் பயத்தை நீக்கும் வழியை முன்மொழியவில்லை. உதாரணமாக,

  1. தமிழீழம் என்று கேட்பதை விட்டு இந்துக்கள் இலங்கையில் கொல்லப்படுவதால், இந்துஸ்தான் கேட்டுப்போராடியிருந்தால் ஒருவேளை இந்தியா ஆதரவளிக்க கூடும்.
  2. இந்தியாவில் உள்ள தமிழ் மற்றும் திராவிட கட்சிகள், அமைப்புகளுடன் உறவுகளை முறித்துக்கொண்டு இந்திய தேசிய அமைப்புகளுடன் உறவுகளை பலப்படுத்தியிருந்தால் இந்தியா ஆதரவளிக்க கூடும்.

பிரச்சாரம் மட்டும் பலனளிக்காது.

இந்தியாவை கையாள, இராஐதந்திரமான முறையில் இந்தியாவுடன் போட்டியிடும் பலமிக்க நாடுகளான சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் அவற்றின் தேவைகள் பற்றி பேரம் பேசி வேலை செய்வதுவான் ஒரேவழி.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

படித்தோரின் அறிவுரைப் படி எழுதப் பட்ட கட்டுரையில் இந்தியாவைக் கெஞ்சுவது தான் தனியே நிற்கிறது. மேலே யூட் சொன்னது போல நாம் இந்தியாவிடமிருந்து நிரந்தரமாக விலகி நடப்பது நான் நீண்ட கால, (குறுகிய காலத்திலும் கூட) ப் போக்கில் நன்மை தரக்கூடியது. மேற்கு நாடுகள் மேல் நம்பிக்கை வைக்க எமக்கு பல காரணங்கள் உண்டு

1. இந்தியாவில் போலன்றி சாதி, சமய கட்சி வர்க்க வேறுபாடுகளால் பிரிந்து நிற்காத ஊடகங்கள் எங்கள் நியாயத்தைச் சொல்லும் வாய்ப்பு அதிகம்.

2. இந்தியாவைப் போலன்றி மனித உரிமை, மனித கௌரவம் என்பன மேற்குலக மக்களால் மதிக்கப் படுகின்றன (தலைவர்களை இந்த மக்களே தேர்ந்தெடுக்கின்றனர்)

3.மேலும் இந்தியா ஒரு நாளும் அதன் சிறுமைத் தனங்கள், உட் பகைகள் தாண்டி உலக வல்லரசாக வர வாய்ப்பில்லை. மூழ்கும் படகில் எதற்குத் தொங்க வேணும்?

இனியாவது எங்கள் பாரம்பரிய தொப்புள் கொடி உறவு வாதிகள் தெளிவாகச் சிந்திக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிருந்து இது வரை... இனி இங்கிருந்து எது வரை?... இக்கட்டுரை நாங்கள் இன்று இந்தியா மற்றும் ஏனைய உலகத்தில் இருந்து தனிமைப்பட்டுள்ளமைக்குக் காரணத்தை ஆரய்கிறது. அதற்க்குக் காரணம் இத்தகைய தனிமைப் படுத்தும் தத்துவார்த்தப் பார்வைதான். அரசியலை கணிதச் சமன்பாட்டுபோல புரிந்து கொள்ள முனைகிற, விவாதம் விமர்சனம் சுய விமர்சனத்துக்கு இடமில்லாத, இத்தகைய யாந்திரிக பார்வை எம்மை மேலும் தனிமைப் படுத்திவிடும். நமக்கு ஒரு நாடு அல்லது அந்த நாட்டின் கட்ச்சியொன்று அல்லது அந்த நாட்டுக் கட்சித் தலைவர்கள் எதிராக இருக்கலாம். முழு உலகமுமே எமக்கு எதிராக இருக்கிறது என்கிற பார்வை அபத்தமான பார்வையாகும். ரூசிய இனம் சீன இனம் போன்ற பெரிய இனங்களே உனகத்தை அன்னியப்பட்டு இயங்க முடியாது என்பதை உணர்ந்துள்ள நிலைமையில் எம்மில் சிலர் இப்படி யோசிப்பது அழிவுக்கே வழி வகுக்கும்.

ஒரு தத்துவ ஆசிரியரின் பணி உலக நாடுகளுக்கும் நமக்குமிடையிலான தொடர்ந்து மாறிவரும் உறவின் சிக்களை அதன் வரலாற்று தத்துவார்த்தப் பிரச்சினைகளை விமர்சனம் மட்டுமன்றி சுய விமர்சனம் அடிப்படையிலும் ஆராய்ந்து தெளிவுபடுத்துவதாகும். ஊருக்குள்லேயே குடும்பத்துக்குள்ளேயே உறவுகளுக்காக உறவின் பயனைப்பெறுவதற்காக நாம் விலை கொடுக்க வேண்டியிருக்கும். உலகக் கிரமத்திலும் நிலமை இதுதான். கூடிய வரை நமது சுதந்திரத்தை தற்காத்துக்கொண்டு குறைந்த விலையில் கூடிய பயனை அடைகிற அடிப்படையில் உறவுகளை அமைகின்ற போராட்டம்தான் இராஜதந்திரம் எனப்படுகிறது. உறவு சிக்கல் பட்டிருந்தால் அந்த உறவிம் முக்கியத்துவம் அச் சிக்கலின் எதிர்பக்க நம்பக்க நிலைபாடுகளின் சரி தவறுகலை ஆராய்வது முதல் பணியாகும். தீர்க்க இயலுமெனில் பொருத்தமான காலம் இடம் அமையும் வகையில் செயல்ப்பட்டு சிக்கலைச் செம்மைப் படுத்துவது அல்லது பிற உறவுகளைப் பலப்படுத்துவது என்று முன்னோக்கிச் செல்வது என்கிற அடிப்படையிலேயே சிறு நாடுகளின் கதை முன்னோக்கி நடக்கிறது. எப்பவும் சிந்தனை உலகத்தை விமர்சிக்கிற அடிப்படையில் மட்டுமே முன்னோக்கி நகர முடியாது. விமர்சனம் மட்டுமன்றிச் சுய விமர்சனமும் இல்லாமல் சரியான பதையை எந்த தத்துவஞானியும் கண்டதில்லை. உலகின் பல நாடுகளின் வெளிவிவகாரக் கொள்கைகளில் நாம் இல்லை.இன்னிலையில் உலகம் முழுவதும் நமக்கு எதிராக அணிதிரழ்கிறது என்கிற பார்வை முழு உலக்த்தையும் எதிரியாக்கும் பார்வையாகும். இங்கு விரிவான விவாதம் வீண் சிக்கல்களை உருவாகும் என்கிற அனுபத்தால் தனிக் கட்டுரையை தவிர்த்துவிட்டேன்.

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடைசித் தருணத்தில் பதட்டத்துடனான ஆய்வாக அமைவது வேதனைதருகிறது. ஏன் முன்னரே இவைபற்றிய சிந்தனைகளை வெளியிடவில்லை என்ற வினாவும் கூடவே எழுகிறது.

எதுஎப்படி இருந்தாலும் நியூட்டனின் விதி பொய்த்துப் போவதாக ஆய்வு அமைவதானது ஆச்சரியத்தைத் தருகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

முழு உலகுமே எங்களுக்கு எதிரானது என்பது அபத்தமான கருத்துத் தான். ஆனால் ஒரு நாட்டுத் தலைமை, அதை ஆளும் கட்சி என்பன எங்களுக்கு எதிர் என்றால் அந்த நாடு எமக்கு எதிர் என்று தான் அர்த்தம். எந்த நாடு பற்றிப் பேசுகிறோம் என்பது இங்கே சொல்லாமலே யாருக்கும் விளங்கும் என நம்புகிறேன். மேலும் எதிராக இருக்கிற நாட்டின் மனித உரிமை நிலைமகள், அந்த நாட்டில் சிறு பான்மையினருக்கு இருக்கும் உரிமை, மதிப்பு, அந்த நாட்டில் பிரிவினை வாதக் கோரிக்கைகள் கையாளப் படும் விதம் என்பன அந்த நாடு இனியேனும் எங்களுக்கு ஆதரவாகத் திரும்புமா என்ற கேள்விக்கு நாம் பதிலளிக்க உதவும் தரவுகள் என நான் நம்புகிறேன்.இந்தத் தரவுகள் கணிதச் சமன் பாடுகள் போலவே அரசியல் சமூகவியல் எதிர்காலத்தையும் விளங்கிக் கொள்ள உதவும் பெறுமதியான தரவுகளாகும். சில விட்டுக் கொடுப்புகள், தவறு திருத்துதல்கள் குறித்து கவிஞர் மீண்டும் மீண்டும் பேசுகிறீர்கள், அக்கறையில் தான் பேசுகிறீர்கள் ஆனாலும் எந்த மாதிரியான விட்டுக் கொடுப்புகள் எதிர்பார்க்கப் படுகின்றன என்ற நுண்ணிய தகவல்களை தெரியாமல் அல்லது தெரிந்தும் தெரியாத மாதிரி நடந்து கொள்கிறீர்களோ என ஐயுறுகிறேன். உதாரணம்: நாம் அயல் நாட்டின் விருப்பத்துக்குரியவர்கள் ஆக வேணுமெண்டால் மாற்றுத் தலைமையை ஏற்றுக் கொள்ள வேணும் என்கிறார்கள். யார் அந்த வளர்க்கப் படும் மாற்றுத் தலைமை என்பதும் இங்கே சொல்லாமலே எல்லோருக்கும் புரியும். இன்னும் ஒரு உதாரணம்: "தனியாகப் பிரியக் கூடாது, பிறகு எங்கள் நாடும் பிரிவினை நோக்கிச் செல்லும், சேர்ந்தே இருங்கள்" என்கிறார்கள். ஏன் பிரியக் கேட்கிறோம் என்பது நன்றாக விளங்கிய பின்னும் எங்களிடம் "நீ செத்தால் பரவாயில்லை, அட்ஜஸ்ட் பண்ணிப் போ, எங்கள் நாட்டுக்கு அது தான் நல்லது, உன் இனத்துக்கு எப்படியானாலும் சரி" என்று சொல்வது போல தான் இது. இதையெல்லாம் ஏற்றுக் கொள்வதும், குறைந்த பட்சம் பேச்சு வார்த்தைக்குரிய கோரிக்கைகளாகவேனும் ஏற்றுக் கொள்வதும், இராஜ தந்திரம் மாதிரித் தெரியவில்லை.அதனால் தான் திறக்கப் படும் நம்பிக்கையே இல்லாத கதவுகள் தட்டப் படாமல், கொஞ்சமாவது வெற்றி வாய்ப்புகள் உள்ள இடங்களில் எங்கள் சக்தி நேரம் செலவிடப் பட வேணும். அருகிலுள்ள சக்திகளை மீறி , தூர தேசங்கள் வந்து தீர்த்து வைத்த பிரச்சினைகள் உலகில் உண்டு. இதை நாமும் நடத்திக் காட்ட வேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.