Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் (2009.10.30) 19 வருடங்கள் பூர்த்தி

Featured Replies

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் (2009.10.30) 19 வருடங்கள் பூர்த்தி ‐ வெளியேற்றப்பட்ட விடயத்தை மறக்கலாம் என்று சொல்கிறார்கள் ‐ நாங்கள் போட்ட செருப்பில்லையே எங்களுடைய வாழ்க்கை.

1990 ஒக்.30ஆம் திகதி வடக்கிலிருந்த முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் 24 மணி நேரத்துள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் 19 வருடங்கள் கழிந்து விட்டன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வந்த இம்மக்கள் மீது காட்டிக் கொடுப்பு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு 24 மணித்தியாலத்துள் தமது இருப்பிடம் மற்றும் உடமைகள் அனைத்தையும் விட்டு உடனடியாகவே வெளியேறுமாறு விடுதலைப் புலிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டதன் காரணமாக அங்கிருந்து வெளியேறினார்கள்.

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விடயத்தை மறக்கலாம் என்று சொல்கிறார்கள். நாங்கள் போட்ட செருப்பில்லையே எங்களுடைய வாழ்க்கை. செருப்பு என்று சொன்னால் கழற்றி விட்டு இன்னொன்று புதிதாக வாங்கிக் கொள்ளலாம். ஆனால் எங்களுடைய உரிமைகள் உடமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு அனாதைகளாக, இன்று வரைக்கும் பசுமரத்தாணிகளாக அகதி என்ற அந்தஸ்துடன் எந்த சமூகத்திலும் வாழ இயலாத நிலைமையில் தான் நாங்கள் இருக்கிறோம் என்கிறார் ஜனூஷா முஜீப் என்கிற முன்பள்ளி ஆசிரியர். புத்தளத்தில் வசித்து வரும் இவர் இவர் தற்போது முன்பள்ளி ஆசிரியராக இருக்கிறார்.

ஓரே இரவில் ஏறத்தாழ எண்பதாயிரம் முஸ்லிம்கள் மேற்குறித்த ஐந்து மாவட்டங்களிலிருந்தும் அகதிகளாக வெளியேற்றப்பட்டார்கள். அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வந்த இம்மக்களில் பெரும்பன்மையானவர்கள் புத்தளத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு குடியேற்றப்பட்டார்கள். இது தவிர கொழும்பு, குருநாகல், மாத்தளை ஆகிய இடங்களிலும் குடியேறினார்கள்.

பெரும்பான்மையான இடம் பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட முகாம்களிலேயே இன்று வரை வாழ்ந்து வருகிறார்கள். அறுபதாயிரம் முஸ்லிம்கள் 141 இடம் பெயர்ந்தோர் தங்கியிருக்கும் முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள் என்று அரசாங்கப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஒரு இலட்சத்து 25 ஆயிரம் முஸ்லிம்கள் இடம் பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருவதாக முஸ்லிம் கவுன்ஸில்; தெரிவித்துள்ளது.

2002ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை தமது மீள் குடியேற்றத்திற்கு வழிகோலும் என்று இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் நம்பினார்கள். இக்காலகட்டத்தின் போது சில முஸ்லிம்கள் தமது சொந்த ஊர்களுக்குச் சென்று குடியேற ஆரம்பித்தார்கள்.

2006இல் போர் மீள ஆரம்பித்ததோடு அவர்களுடைய மீள் குடியேற்றமும் ஆபத்துக்குள்ளானது. எனினும் 2009இல் போர் முடிவடைந்த பிற்பாடு தாம் மீளவும் தமது சொந்த இடங்களில் குடியேறலாம் என்ற நம்பிக்கை அவர்களிடம் துளிர்விட ஆரம்பித்துள்ளது. நாங்கள் அரசாங்கத்திடமும் அமைச்சர்களிடமும் சர்வதேச உதவி நிறுவனங்களிடமும் கேட்டுக் கொள்வது என்னவென்றால் நாம் எமது சொந்த இடங்களுக்குச் சென்று குடியேறவும் நாம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் எமக்கு உதவி செய்யுங்கள் என்று கல்பிட்டி அகதி முகாமிலிருக்கும் எம் ரெய்சுடீன் வலியுறுத்துகிறார்.

முஸ்லிம் கவுன்ஸில் இந்த மக்கள் மீளவும் தமது இருப்பிடங்களுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீள்குடியேற்றத்துக்குத் தயாரானவர்கள் குறித்த தகவல்களைச் சேகரிப்பதற்காக அச்சிடப்பட்ட விண்ணப்பங்களைக் கொடுத்து அவற்றை பூர்த்தி செய்து பெற்று வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அவ்வமைப்பால் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் மக்களுடன் சேர்ந்து அப்பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் மீளவும் தத்தமது வீடுகளுக்குச் சென்று குடியேறுவதற்கான அவர்களுடைய வாழ்வுரிமை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே நாம் இவ்விடயத்தில் அதிக சிரத்தை எடுத்து வருகிறோம் என்று முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்துள்ளார்.

இவ்விண்ணப்பப்படிவங்களை ஒன்றாக ஆராய்ந்து காணி உள்ளவர்கள் வேறாக காணியற்றவர்கள் வேறாகப் பிரித்து அதற்கேற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு, அவர்கள் அங்கு மீள் குடியேறுவதற்கு ஏதுவான அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு, தொழில் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் செய்வதற்கான திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன்.

கொழும்புக்கு அண்மித்தாக உள்ள மட்டக்குளியில் இடம் பெயர்ந்த 125 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. 1990ஆம் ஆண்டு இடம் பெயர்ந்ததிலிருந்து இங்குள்ள முகாம் ஒன்றிலேயே வாழ்ந்து வருகிறோம். எமது மீள் குடியேற்றம் பற்றி எம்முடன் வந்து பேசினார்கள். எனினும் நாம் உடனடியாகவே எமது பிரதேசங்களில் குடியேறுவதற்கு சில பிரச்சினைகள் இருக்கின்றன. குறிப்பாக அங்கு எமக்கு தற்போது வீடுவாசல் எதுவும் இல்லை. அவை எல்லாம் அழிந்து கிடக்கின்றன. தமிழர்களை மீள் குடியேற்றம் என்ற பெயரில் தற்போது கொண்டு வைத்து அவர்கள் சீரழிவதைப் போல நாம் சீரழிய விரும்பவில்லை. எங்களுக்கென்று வீடுவாசல் ஏதாவது அமைத்துத் தந்து போய் இருங்கள் என்று சொன்னால் நாம் போகத் தயார். வீடுவாசல் இல்லாமல் அங்கு போய் எங்கே இருப்பது தான் எம்முடைய கேள்வி என்கிறார் மட்டக்குளி முகாமில் இருக்கும் சக்காரியா.

வீடுகட்டித் தந்து அங்கு போய் இருங்கள் என்று சொன்னால் நாம் நாளைக்கும் போகத் தயாராக இருக்கிறோம். இல்லாவிட்டால் நாம் தொழில் ரீதியாக மிகவும் பாதிக்கப்படுவோம். 19 வருடங்களாக இங்கு தொழில் செய்து பழகிய எங்களுக்கு அங்கு போய் தொழில் செய்வது சாத்தியமில்லை. அங்கு போய் தொழிலை ஆரம்பிப்பது என்றால் முதலிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் எமது பிள்ளைகளுக்கு அங்கு போக விருப்பமில்லை. வடக்கில் தொழிற்சாலைகள் ஏதாவது இருக்கும் என்றால் கூட நாம் அங்கு போய் தொழில் செய்யலாம். அப்படி எதுவும் அங்கில்லை. இடம் பெயர்ந்து இங்கு வந்த நாங்கள் தொழில் தான் செய்து வருகிறோம். யாரும் களவெடுக்கவில்லை. பிச்சை எடுக்கவில்லை. ஆனால் எமக்கு சொந்த வீடுவாசல் கட்டித் தருவீர்களானால் எமது பிள்ளைகள் வராவிட்டாலும் நாங்கள் அங்கு போகத் தயாராக உள்ளோம் என்கிறார் மட்டக்குளி முகாமிலிருக்கும் என்.எம்.ஹனீபா.

தனக்கோ அங்கு மீண்டும் போக விருப்பமில்லை என்கிறார் இன்னொரு முகாம்வாசியான முஹமட் ஜாஹிர். எங்களுக்கு ஏதாவது நஷ்டஈடு கிடைச்சால் எங்களுடைய பிரச்சினையை நாங்களே பார்த்துக் கொள்வோம் என்கிறர் அவர்.

இரண்டு மூன்று பிள்ளைகளுடன் அங்கிருந்து வந்தோம். இப்போது அவர்களும் மணம் முடித்து அவர்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். எல்லோரும் ஒரு வீட்டுக்குள் வாழ முடியாது. அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இரண்டு அல்லது மூன்று வீடுகள் தேவைப்படுகின்றன. அரசாங்கம் அவ்வாறு கட்டித் தருமா? அப்படி இல்லாமல் அங்கு போய் வாழ முடியாது. அதற்கு முடியாவிட்டால் நஷ்ட ஈடு ஏதாவது தந்தால் நாங்கள் எங்காவது காணி பார்த்து வாங்கிக் குடியேறுவோம் என்கிறார் என்.எம்.ஹனீபா.

முஸ்லிம் சமாதான பேரவையின் புத்தளம் கிளை ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு புத்தளம் முஸ்லிம் சமாதான செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் (2009.10.30) பத்தொன்பது வருடங்கள் பூர்த்தியடைந்தன. 1990ஆம்ஆண்டு இம்மக்கள் வடமாகாணத்தில், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து வெளியேறி தற்போது புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமது வெளியேற்றம் குறித்தும், இத்தினத்தை நினைவு கூரும் வகையிலும் முஸ்லிம் சமாதான பேரவையின் புத்தளம் கிளை ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு புத்தளம் முஸ்லிம் சமாதான செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

சமாதான செயலகத்தின் பிராந்திய பணிப்பாளர் எஸ்.என்.எல்.எம்.சுஹைர் தலைமையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பதினொரு தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை வெளியிடப்பட்டது.

அவை வருமாறு :

1) இரண்டு மணித்தியால அவகாசத்தில் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பாக விசாரித்து, ஆராய்ந்து, தேவையான பரிந்துரைகளுடன், அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.

2) பலவந்த வெளியேற்றத்தினால் படுமோசமாக பாதிக்கப்பட்டு, இன்னமும் அகதிவாழ்வு நடத்திவரும், வடக்கு முஸ்லிம்களுக்கு உரிய நஷ்டஈடுகள் துரித கதியில் வழங்கப்பட வேண்டும்.

3) மீள்குடியேற்ற நிகழ்வில் முஸ்லிம்களின் விவகாரம், தெரிவிக்கப்பட்டு அது அவர்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.

4) மீள்குடியேற்றத்தின் போது 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

5) பலவந்தமாக வெளியேற்றப்படடுள்ள முஸ்லிம்களின்,வடக்கிலுள்ள பூர்வீக சொத்துக்களுக்கு PசுநுளுஊசுஐPவுஐழுN ழுசுனுஐNயுNஊநு எக்காரணம் கொண்டும் பிரயோகிக்கப்படக் கூடாது.

6) பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வடக்கிலுள்ள காணிகள் அவர்களுக்கே மீண்டும் கையளிக்கப்பட வேண்டும்.

7) 1990இல் முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த 19 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. எனவே அதிகரித்துள்ள குடும்பங்களுக்கு மீள்குடியேற்றத்தின் போது புதிதாகக் காணிகள் வழங்கப்பட வேண்டும்.

8) பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு 1990 ஆம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டு வரும், நிவாரணத் தொகை ஆரம்பம் முதல் அதே தொகையாகவே இருந்து வருகின்றது. சுமார் 19 வருடகாலப் பகுதியில், ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கவனத்திற் கொண்டு தற்போதைய நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும்.

9) அரச நியமனங்கள், வளப்பகிர்வுகளின் போது பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு உரிய பங்குகள் சரியாக, நிறைவாக வழங்கப்பட வேண்டும்.

10) யுத்த காலத்தில் கடத்தப்பட்டு இதுவரை காலமும் தகவல் இல்லாத முஸ்லிம் குடும்பங்களுக்குத் துரிதமாக நஷ்டஈடு வழங்கப்படுவதுடன், மரண அத்தாட்சி பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும்.

11) பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சுமார் இரு தசாப்தங்களாக புத்தளம் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். இதன் நிமித்தம் புத்தளம் பிரதேச பூர்வீக மக்களுக்கு ஏற்பட்டுள்ள காணிப் பங்கீடு, கல்வி, அரச நியமனங்கள், தொழில்வாய்ப்பு, சுகாதாரம், பல்கலைக்கழக அனுமதி உட்பட எல்லா வகைகளிலுமான, இழப்புகளும் அவசரமாக உரிய முறையில் ஈடு செய்யப்பட வேண்டும்.

இக்கோரிக்கைகள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

நன்றி globaltamilnews.net

இதன் மூல இணைப்பு

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக 19 வருசம்தானோ? நான் ஏதோ 6 மாதமாக்கும் மீள்குடியேற்றப்படேல்ல எண்டு நினைச்சன். அதுசரி யாராவது இங்க உவங்கட மீள்குடியேற்றம்பற்றி எழுதினதா தெரியேல்ல!! செய்தியளிலயும் சொன்னதா கானேல்ல.

யாழ்ப்பனத்துக் கட்சிக்காறன்தான் கொஞ்சமெண்டாலும் கதைச்சதுபற்றி எழுதியிருந்தாங்கள், மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கிறதா செய்தி சொன்னாங்கள் உண்மையாயிருக்குமோ அல்லது அம்புலன்ஸ் கதைமாதிரித்தானோ?

அப்ப வன்னி வதை முகமில்யுள்ள வன்னி பூர்வீக தமிழர்கள் நிலை என்ன. அவர்கள் வந்து 180 நாட்கள் ஆகின்றது அதைபற்றி கதைப்பார் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று தசகாப்தங்கள் மூவாயிரம் கோடி முரண்பாடுகள்.

ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாறு மூன்று சகாப்தங்கள் இதையும் விட அதிக கால அளவைக் கொண்டிருந்தாலும், ஆயுதப் போராட்டம் தலையெடுக்க ஆரம்பித்த காலங்களே இன்றும் உலகின் கண்களுக்கு “பளிச்” எனத் தெரிகிறது. இந்த முரண்பாடுகள் “தமிழர்கள்” எனும் சொற்பதத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது.

சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கைத் தீவின் கட்டமைப்பில் சமவுரிமைக்குப் பதிலாக பெரும்பாண்மை, சிறுபாண்மை எனும் இடைவெளியைக் கொண்டு அரசியல் சூற்சுமங்களால் அன்று உருவாக்கப்பட்ட முரண்பாடுகளை பேசித் தீர்க்க முடியாது என்று ஆயுதப் பேராட்டம் தலையெடுத்தது. தலையெடுத்த ஆயுதப்போராட்டமும் தறிகெட்டுப் போனதால் முரண்பாடுகளும், முடிச்சுகளுமே மக்களுக்குக் கிடைத்தனவே தவிர, அவர்கள் உரிமைகள் “அன்றும்”, ”அதற்குப் பிறகும்”, ”இன்றும்” கூட உண்மையாகக் கிடைக்கவில்லை.

பயங்கரவாத்திற்கு எதிரான போர் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் ஆரம்பித்த போரில் அவர் உலகத்திற்கு இரண்டே இரண்டு தெரிவுகளையே வழங்கினார்.

ஒன்றில் சேர்ந்து நண்பனாக இரு அல்லது, விலகி எதிரியாக இரு என்பனவே அந்தத் தெரிவுகள்.

தமது நாட்டுக் குடிமக்களுக்கான பாதுகாப்பு எனும் பெயரில் தமது உலக அரசியல் “இருப்புக்கு” கேள்விக்குறியாக இருக்கும், வளரும் எந்த சக்தியையும் வளரவிடக்கூடாது எனும் தத்துவம் தான் அதில் ஒளிந்திருந்தாலும், அதை “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்று இன்றும் வர்ணிக்கிறார்கள்.

அதில் அழிக்கப்பட்ட சதாம் உசைனும் முன்னாள் ஒரு காலத்தில் மக்களுக்காக வாழ்ந்த தலைவனாக இருந்தாலும், நாளடைவில் தன் அரசியல் முடிச்சுகளை மக்களுக்குள் முரண்பாடாகத் தோற்றுவித்து, எப்போதும் தன் “இருப்பையே” பாதுகாப்பாகக் கவனித்துக்கொண்டார்.

ஆனால் மக்கள் நலனை அடிப்படையாக வைத்து ஆரம்பித்த கியுபப் புரட்சியோ அரை நூற்றாண்டு தாண்டியும், அதிருப்தியாளர்கள் உள்ளிருந்து உருவாகியும், வெளியிலிருந்து உருவாக்கப்பட்டும் கூட இன்னும் அசையாமல் இருக்கிறது.

இலங்கைத் தீவில் மட்டும் தமிழர் உரிமைப் போராட்டம் என்பது முரண்பாட்டு முடிச்சுகளை இன்னும் அவிழ்க்க முடியாமல் தவிக்கிறது.

இன்றைய நிலையில், மக்களுக்குத் தேவை “தாம் உயிர் வாழ முடியும்” எனும் அடிப்படை உத்தரவாதம் மட்டுமே என்று குறுகி விட்டது.

சுதந்திரமாகத் தன் மானத்துடன் வாழ்ந்திருந்த ஒரு சமுதாயம், இன்று கால் வயிற்றுக் கஞ்சிக்கெல்லாம் கால் கடுக்க வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் இந்த மக்களுக்காக ஒரு உரிமைப் போராட்டம் அதுவும் முப்பது வருடங்கள் நடந்ததாக வேறு வரலாறு பேசுகிறார்கள்.

தெளிவில்லாமற் சென்ற இந்த போராட்டப் பாதையின் முதல் முரண்பாடே “யார் தமிழர்கள்?” என்பதிலிருந்து ஆரம்பிக்கிறது.

ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த போராளிக் குழுக்கள் அத்தனையும் முதன் முதலாக பேச்சு வார்த்தை மேடையில் அமர்ந்த அந்த நாட்களில் இவை இருக்கவில்லை, ஒரு உறையில் ஒரு கத்திதான் என்று ஒரே நோக்கத்திற்காகத் தம் உயிர்களை துச்சமாக நினைத்து போராட வந்த அந்த சகோதரர்கள் அழிக்கப்பட்ட நாளிலிருந்து இது ஆரம்பமாகிறது.

அவர்கள் அழிக்கப்பட்டதன் நோக்கமும் “தமிழர்களுக்காக அவர்கள் போராட” வந்தது தான், என்றால் அவனை அழித்தவர்கள் “தமிழர்களுக்காகப் போராட வில்லை” என்பதுதான் உண்மை. எல்லாவற்றிற்கும் காரணம் கூறும் இந்த முரண்பாட்டு மனிதர்கள், இதற்கும் வெவ்வேறு விளக்கங்களை அளித்தார்கள், தம் சகோரர்களைக் கொன்றுவிட்டு அவற்றிற்கு முழு நியாயமும் கற்பித்தார்கள்.

சரி, அத்தோடு விட்டார்களா?

ஒன்றோடு ஒன்றாகப் போராடக் கிளம்பிய சகோதர இனத்தை முற்று முழுக்கத் துண்டாடி வேட்டையாடினார்கள்.

இந்தியாவில் “மொழி” எனும் பொது விடயத்தின் மூலம் அனைத்து மதங்கள் சார்ந்த மக்களும் ஒரு அடையாளத்திற்குள் வருகிறார்கள்.

உதாரணமாக மராட்டியர்கள், கன்னடர்கள், மலையாளிகள் என்று நீளும் அவர்கள் பட்டியலைப் பொறுத்த வரை “தமிழர்கள்” என்றால் அது தமிழ் நாட்டின் அத்தனை குடிமக்களையும் சேர்த்த ஒரு இனமாக மட்டுமே அறியப்படுகிறது, அதுதான் நியாயமும்.

இலங்கையில் பெரும்பாண்மை இனத்திற்கும் சிறுபாண்மை இனத்திற்கும் தான் மோதல் நடக்கிறது என்று உலகை நம்ப வைத்து, இலங்கை அரசை கேலிக்கூத்தாக்கி, கேள்விகளுக்கும் உள்ளாக்கிய 1983 இனக்கலவரம் இந்தப் போராட்டத்தின் மிகப்பெரிய பலமாகவே கணிக்கப்பட வேண்டும்.

13 சிங்கள இராணுவச் சிப்பாய்களை, தமிழ்ப் போராளிகள் கொன்றுவிட்டார்கள் என்ற இனத் துவேசம் தான் நாட்டைத் துண்டாடியது.

அதில் தமிழர் என்று சிங்கள இனத் துவேசக்காரர்கள் அடையாளம் கண்டு கொண்டது தமிழ் மொழியைப் பேசும் அனைவரையும் ஆகும்.

ஆனாலும், இந்த சந்தர்ப்பத்தை தமக்கு ஆதரவாகப் பயன்படுத்திய “காடையர்கள்” அதாவது சமூக விரோதிகள் தான் தமிழ் மக்களின் உடமைகள், உயிர்களையும் சூறையாடினார்களே தவிர, “நல்ல மனம் படைத்த” மக்கள் எப்போதும் ஒற்றுமையாகவே இருக்க விரும்பினார்கள்.

"மிக முக்கியமாக இக்கலவரத்தின் போது தம் நண்பர்களை, அயலவர்களைப் பாதுகாப்பதில் பல முஸ்லிம், சிங்கள மக்கள் முனைப்பாகச் செயற்பட்டதுடன் அவர்களைப் பாதுகாக்கவும் செய்தார்கள். சமுதாயத்தில் மரியாதையுடன் வாழ்ந்த பல சிங்கள மக்கள் இப்படி எத்தனையோ குடும்பங்களுக்கு உதவி செய்திருந்தார்கள், அதே போன்று தமிழர்கள் என்று அடையாளப்படுத்துவோரைத் தம் சொந்த சகோதரர்களாகவே நினைத்து எத்தனையோ முஸ்லிம் குடும்பங்கள் இந்நேரத்தில் பெரும் பங்கெடுத்து அரணாக நின்றிருக்கிறார்கள்.

இந்தக் கலவர காலத்தில் உண்மையில் அங்கு வாழ்ந்திருக்காமல், அவ்வளவு ஏன் அந்தக்காலத்தில் பிறக்கக்கூட இல்லாத தீவிர சிந்தனை உள்ள இணையப் பரப்புரையாளர்களுக்கு இந்த உண்மைகள் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

உண்மையில் பாதிக்கப்பட்டு, சில வேளை அரசாங்க உத்தியோகங்கள் காரணமாக வெவ்வேறு இடங்களில் இப்படி மாட்டிக்கொண்டு, ஆனால் பின்னர் கலவரத்தில் “தப்பிக்கொண்ட” வடமாகாண மக்களில் ஒரு பகுதியினராவது அவர்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருந்தால் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

இப்படியான “இலவசமாகச் சூறையாட”க் கிடைத்த சந்தர்ப்பங்களைப் பாவித்துப் பலன் அடைந்தவர்கள் காடையர்களாகவே இருந்தார்கள்......."

அத்தோடு அதை நிறத்திவிடவும் முடியாது, சில கரையோர சிங்களக் கிராமங்களில் மக்களும் உணர்ச்சியூட்டப்பட்டார்கள், அவர்களுக்கும் இனத்துவேசம் அரசியல் சக்திகளால் நன்கு ஊட்டப்பட்டது. எனினும், அவர்கள் வெகுண்டெழுந்து வந்து எதையும் சாதிக்கும் அளவுக்கு அப்பகுதிகளில் தமிழ் மக்கள் வாழ வில்லை, ஆயினும் இந்த அரசியல் முரண்பாடு சிறுபாண்மையினத்துக்கு உலக அரங்கில் சாதாகமாகவே அமைந்திருந்தது.

தம்மைத் தாக்க ஒரு சக்தி இருக்கும் போது, தம்மைக் காக்கவும் ஒரு சக்தி வேண்டும் எனும் நிலைப்பாட்டுக்கு சிறுபாண்மை மக்கள் தள்ளப்பட்டார்கள் என்றால் அது கூட மிகையாகாது.

தம்மைக் காக்க வேண்டிய அரசாங்கம் தவறிழைத்ததனால் அவர்கள் மீதிருந்த மதிப்பையும்,நம்பிக்கையையும் சிறுபாண்மையினத்தவர்கள் இழந்திருந்தார்கள் என்றாலும், வட மாகாணத்தில் இதைப் பயன்படுத்தி எழுச்சிகொள்ள நினைத்த சக்திகளுக்குத்தான் இவை பயன்பட்டதே தவிர, மீண்டும் கொழும்பை நோக்கி வாழ நினைத்திருந்த யாருக்கும், அதற்குப் பிறகு இது ஒரு அச்சுறுத்தலாக இருக்கவே இல்லை.

எனினும், வட கிழக்கில் சிறுபாண்மையினம் காப்பதற்கு தமக்குள்ளும் ஒரு ஆயுத சக்தி இருக்க வேண்டும் எனும் நிலைப்பாடு ஒவ்வொருவர் மனதிலும் அதிகரிக்கத்தான் செய்தது.

(ஒரு இனக் கலவரத்தைத் தூண்டுவதன் மூலம் மக்களை இந்த நிலைப்பாட்டை எடுக்க வைக்க வேண்டும் என்று எதிர்பார்த்துத்தான் 13இராணுவச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனரா இல்லை இது தற்செயலாக திட்டமில்லாமலே நடந்தேறியதா என்றொரு கேள்வி அப்போது இல்லாவிட்டாலும், அதன் பின்னர் இதை மனதில் வைத்து பல தடவைகள் இனக்கலவரங்களை உருவாக்க முயற்சி செய்த “ஆயுத சக்தி”யை ஒப்பீட்டுப் பார்க்கும் போது ஒருவேளை அப்போதும் அவர்களுக்கு அந்த எண்ணம் இருந்திருக்கலாமோ என்று சந்தேகம் வருகிறது. அது அப்போது இல்லாமல் பின்னர் உருவானதாகவும் கூட இருக்கலாம்...."

"எது எப்படியோ, சிறுபாண்மை மக்களின் எண்ணங்கள் ஒருமுகப்படுத்தப்பட இந்தக் கலவரம் வழி சமைத்திருந்தது......"

அப்போதும் எல்லோரும் “தமிழர்கள்” என்றே பார்க்கப்பட்டார்கள், ஒற்றுமையாகவும் இருந்தார்கள்.

ஆனால், அதை அத்தனை காலம் நீடிக்க விடுவதற்கு சர்வதிகாரத் தலைமைகள் விரும்பவில்லை.

எனவே, “தமிழர்கள்” என்போர் சமுதாயத்திலிருந்து பிரிக்கப்பட்டே ஆக வேண்டும் என்ற ஒரு நிலையை அவர்கள் அன்றே எடுத்தார்கள்.

இதன் முதற்கட்டமாக சிறுபாண்மையினத்தின் இன்னொரு கையாக இருந்த “முஸ்லிம்” சமுதாயத்தைத் துண்டாட நினைத்தார்கள்.

உலகெல்லாம் வாழும் முஸ்லிம்களிடம் ஒரு ஒற்றுமையிருக்கிறது, அது அவர்கள் தம் இறைவனுக்கும்,மதத்துக்கும் வழங்கும் மிகச் சிறந்த ஈடுபாடும், மரியாதையுமாகும்.

அது அவர்கள் வாழ்க்கை மற்றும் உணர்வு சம்பந்தப்பட்ட விடயங்களாகவே எப்போதும் பார்க்கப்படுகின்றன. டென் மார்க்கில் ஒருவர் ஏதோ நினைப்பில் கார்டூன் என்று தம் அன்பிற்குரிய நபிகளை கேலி செய்யத் துணிந்தால் முழு உலகமும் உள்ள அனைத்து முஸ்லிம்களும் வெகுண்டெழுகிறார்கள்.

எனவே, அவர்களது மதத்தோடு விளையாடி அவர்களைத் துண்டாடுவது என்பது மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்ட ஒரு இன விரோதச் செயலாகவே இருக்கும்.

அப்படித்தான் கிழக்கு மாகாணத்தில் சிறுபாண்மையினத்திற்கு மாத்திரமன்றி ஆயுதப் போராட்டத்திற்கும் பலமாக இருந்த “முஸ்லிம்” சமுதாயம் “தமிழர்கள்” எனும் அடையாளத்திலிருந்து திட்டமிட்டுத் துண்டாடப்பட்டது.

இந்த வெறியாட்டத்தின் பின்னணியில் ஏதோ ஒரு “அரசியல்” நலன் மாத்திரமன்றி “தமிழர்கள்” எனும் சிறுபாண்மையின் பலமும் சேர்ந்தே அடகு வைக்கப்பட்டது என்பதை அன்றைய “பலம் வாய்ந்த” ஆயுத சக்தியாக இதை முன்நின்று நடத்திய விடுதலைப் புலிகள் ஏன் உணர மறுத்தார்கள் என்பது அவர்களும் அறிவாளிகள் என்று நினைப்பவர்கள் கேட்கும் கேள்வி, அவர்கள் அப்படித்தான் என்று தெரிந்தவர்களுக்கு “இதுதான் புலியின் அறிவு” என்பது விடையாக இருக்கும்.

கிழக்கு மாகாண பூகோள அமைப்பைப் பொறுத்தவரை முஸ்லிம்களின் பங்கு அனைத்துப் பகுதிகளிலும் வலுவானது, “தமிழினத்தின்” வர்த்தக,கலாச்சாரப் பங்களிப்போடு மட்டும் நிற்காமல் புலிகளின் “வளர்ச்சியிலும்” அவர்களுக்கான “கடத்தல்களிலும்” கூட முஸ்லிம் சமுதாயம் பஙகெடுத்தே வந்தது.

பலமான சிறுபாண்மையினத்தைத் துண்டாடுவதற்கு இவர்கள் துணை போனதன் விளைவாக அப்பாவி உயிர்கள் அதுவும் வணக்கஸ்தலங்களில் வைத்து அநியாயமாக் கொன்றொழிக்கப்பட்டது.

அத்தோடு நின்று விடாமல் வடக்கிலிருந்தும் இரவோடு இரவாக முஸ்லிம்கள் துரத்தப்பட்டு, சிறுபாண்மையினத்தில் “தமிழர்கள்” எனும் அடையாளம் முஸ்லிம்களுக்கு இல்லையென்று இலங்கையில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருந்தது.

இதன் விளைவாக, முஸ்லிம் அரசியல் தலைமைகளும் “முஸ்லிம்” என்பது “தமிழர்” என்பது போல் இன்னொரு இனம் என்று தமது அரசியல் அத்தியாயங்களை முன் நகர்த்தினார்கள்.

பலமாக இருந்த புலிகளின் ஆதரவாளர்கள் “முஸ்லிம்கள் வேண்டுமானால் எம் “தமிழ்” மண்ணில் சேர்ந்து வாழலாம் ” என்று அதிகாரத்திலும், ஆளுமையிலும் அவர்கள் செழித்து விளங்கிய காலகட்டத்தில் கூறினார்கள்.

எனவே, “தமிழர்” எனும் போராட்ட அளவுகோளுக்குள் “முஸ்லிம்கள்” என்ற ஒரு இனம் பிரிக்கப்பட்டு இணைக்கப்படவில்லை.

அப்படியானால், முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் “தமிழர்கள்” என்று குறிப்பிடப்படுவது யார்?

இந்துமதத்தையும், கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றிய பெரும்பாலானோர் ஒரு வகையில் சிறுபாண்மையினத்தில் வாழ்ந்த “முஸ்லிம்” மக்களிலிருந்து வேறுபட்ட ஆனால் சிறிதளவு ஒருங்கிணைக்கப்பட்ட வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தார்கள்.

மத ரீதியாக இரு வேறுபட்ட நடைமுறைகளைப் பின்பற்றினாலும் கிறிஸ்தவர்களும்,இந்துக்களும் ஏறத்தாழ “தமிழர்” எனும் குடையின் கீழ் வருவதாக எண்ணிக்கொள்ளலாம்.

ஆனாலும், போராட்ட காலத்தில் பலமாக இருந்த ஆயுத சக்தி, “இந்துக்களையோ” அல்லது “கிறிஸ்தவர்களையோ” தம் அகராதி கூறும் “தமிழர்களாக” நினைத்தார்களா என்பது அவர்கள் சித்தார்ந்தத்தோடு முட்டி மோதி அறியப்பட வேண்டிய விடயம்.

ஏனெனில், அவர்களாலேயே கொல்லப்பட்ட பல அரசியல் தலைவர்கள் மத நம்பிக்கையில் இந்துக்களாகவும், சில அரசியல் தவைர்கள் கிறிஸ்தவர்களாகவும் கூட இருந்திருக்கிறார்கள்.

இந்த அடிப்படையில் பார்க்கும் போது, முஸ்லிம் மக்களை சிறுபாண்மையினத்தில் இருந்து அப்புறப்படுத்திய அவர்களது சித்தார்ந்தம் இந்துக்களை கிறிஸ்தவர்களிடமிருந்து அன்னியப்படுத்த முயற்சிக்கவில்லையாகினும், சாதீயத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு தமக்குள் இரு பிளவுகளை உருவாக்கிக்கொண்டார்கள்.

அது ஏறத்தாழ முன்னாள் அதிபர் புஷ் கூறியது போன்ற அதே கோட்பாடாகும்.

அதாவது தம்மை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என்று இரு சாராரை பிளவு படுத்தி அடையாளப்படு்த்தினார்கள்.

இந்த இரு சாராரும் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் இந்த இரு பிரிவுக்குள்ளும் அடங்கினார்கள், ஆனால் அந்த இரு பிரிவினரில் ஏதாவது ஒரு பிரிவினருக்காகவாவது இந்த உரிமைப்போராட்டம் உண்மையுடன் நடந்ததா என்பதே அடுத்த கேள்வி.

அந்தக் கேள்வி எழுப்பப்படும் போது, இவர்களும் “தமிழர்கள்” இல்லையென்றால், விடுதலைப் புலிகளின் அகராதியில் “தமிழர்கள்” என்று இறுதி நாள் வரை பறை சாற்றப்பட்டது யாரை? என்னும் பெரும் கேள்வி எழுந்து நிற்கும்.

மக்களின் மதங்களையும், அவர்கள் உணர்வுகளையும் பந்தாடுவதில் மிகவும் கெட்டித்தனமாக நடந்து கொண்ட புலிகள் இயக்கம், தமக்குப் பிடிக்கவில்லை என்றால் கிறிஸ்தவர்களைக் கொன்று மின் கம்பங்களிலும், இந்துக்களைக் கொன்று டயரில் போட்டும் கொளுத்துவதற்கும் தயங்கவில்லை.

எனவே, இவர்களின் போராட்ட சித்தார்ந்தத்தின் அடிப்படையே தமது “இருப்பு” என்பதாக மாறிவிடுகிறது.

தலைமை, அதைச்சுற்றி இருந்த ஒரு குறுகிய வட்டம் என்பதோடு குறுகிக்கொண்ட இவர்களது சித்தார்ந்த வலைப்பின்னல், இறுதி வரை ஒருவொருக்கொருவர் உண்மையானதாக இருக்கவே இல்லை என்பது மிகத் தெளிவாக நடந்தேறியிருக்கும் வரலாறு.

எனவே, புலிகளாய் இருப்பவர்கள் மட்டுமே “தமிழர்கள்” எனும் நிலைப்பாடுதான் இவர்களது சித்தார்ந்தமாக உலகெங்கும் பரப்புரை செய்யப்பட்டது.

அந்த அடிப்படையில் தான் “தமிழர்கள்” கொல்லப்படுகிறார்கள் என்று புலி ஆதரவு தமிழ்நாட்டு அரசியல் வாதிகளும் குரல் கொடுக்கிறார்கள், அவர்களால் கூட அந்தப் புலி நிலைப்பாட்டுக்கு வெளியே லட்சோப லட்சம் “தமிழர்கள்” உயிரோடு இருக்கிறார்கள் என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ள முடிவதே இல்லை.

இதற்குக் காரணம் புலிகளின் “தமிழர்களுக்கான” வரைவிலக்கணம் தான்.

இதை சாதாரண மக்களிடமும் அவர்கள் சேர்க்கத் தவறவில்லை.

புலிகள் தான் மக்கள், மக்கள் தான் புலிகள் என்ற அவர்களது கோஷத்தினை மக்கள் மனதில் வலுப்படுத்தியதன் மூலம் புலிகளாய் இருந்தால் தான் நீங்கள் தமிழர்கள் இல்லாவிடின் தமிழர்களே இல்லை என்று அவர்களது அடிப்படை உரிமைகளையும் பறித்தெடுத்தார்கள்.

இதை மறைமுகமாக உள்வாங்கிக்கொண்ட ஒரு சிலர் விரும்பியே தம்மைப் புலிகளின் “தமிழர்களாகவும்” ஒரு சிலர் விடயமே தெரியாமல் தம்மைத் “தமிழர்” எனவும், இன்னும் சிலர் நாமும் தானே தமிழர்கள் நம்மை ஏன் இவர்கள் தமிழர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று கதிகலங்கிப் போயிருக்கிறார்கள்.

புலியில் இருக்கும் ஒரு தமிழ்ச்செல்வன் “தமிழனாக” அறிவிக்கப்படுகிறான் ஆனால் வேறு ஒரு இயக்கத்திலோ அல்லது எந்த இயக்க சார்பும் இல்லாமலோ இருக்கும் ஒரு தமிழ்ச்செல்வன் “தமிழனாக” கணக்கிலெடுக்கப்படவே இல்லை.

இங்கிருந்துதான் புலிகளின் போக்கிற்கு எதிரான மாற்றுக் கருத்துகள் உருவாகிறது.

புலி பேசும் அதே தமிழையே தம் மொழியாகக் கொண்ட அதே தமிழ்ச்செல்வன்கள் தான் புலிகளின் இந்தக் கொடூரமான சமூக விரோதச் செயல்களுக்கு எதிராகக் கருத்துரைத்தார்கள்.

ஆனால், முந்திக்கொண்ட புலிகள் எப்போதுமே அவர்களை விலை போனவர்களாக மட்டும் காட்டிக்கொள்வதில் மிகக் கவனமாக இருந்தார்கள், சிங்களவன் பணம் கொடுத்துவிட்டான் என்று பரப்புரை செய்தார்கள், அதை அவர்களின் “தமிழர்கள்” நம்பினார்கள், நம்ப மறுத்தவர்கள் அனைவரும் ஒட்டுண்ணிகள், துரோகிகளாக பட்டம் சூட்டப்பெற்றார்கள்.

ஆனால் அந்தப் பக்கமும் இருந்தது அதே கடவுளைக் கும்பிடும் தமிழி்ச்செல்வன், இந்தப்பக்கமும் இருப்பது அதே கடவுளைக் கும்பிடும் தமிழ்ச்செல்வன், இவர்கள் இருவர் இடையிலும் இருக்கும் வித்தியாசம் புலியின் நிலைப்பாட்டை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்பது மட்டும் தான்.

ஆனாலும் அதில் ஒருவன் மட்டுமே புலிகளின் கண்களுக்கும், புலி ஆதரவாக தமிழ்நாட்டில் பேசும் அரசியல் வாதிகளின் கண்களுக்கும் “தமிழனாக”த் தென்பட்டான்.

இது அடிப்படையில் கருத்துச் சுதந்திரத்தை கழுத்தில் நெரித்துக்கொன்ற செயல் என்பதை இனியும் உணர மறுத்தால், வெளிநாட்டில் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இதே கருத்துச் சுதந்திரத்தைப் பாவித்து தெருக்களில், தைரியமாக நீங்கள் உங்கள் கருத்துக்களைச் சொல்லு்ம் தகுதியை இழக்கிறீர்கள்.

புலிகளின் அகராதியில் “தமிழர்கள்” என்பது, தாம் சார்ந்த சிறுபாண்மையினமோ அல்லது இன்னும் தெளிவாகக் கூறினால், இந்துவோ, முஸ்லிமோ, கிறிஸ்தவரோ இல்லை மாறாக அவர்களது சித்தார்ந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே.

அவர்களது சித்தார்ந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் மாத்திரம் தான் “தமிழர்கள்” என்றால், பிறப்பாலும் மொழியாலும் உணர்வாலும் கலாச்சாரத்தாலும் பரம்பரை பரம்பரையாக “தமிழனாக” இருந்த, இருந்து வரும் ஒவ்வொருவருக்கும் முதல் எதிரி சிங்களவன் அல்ல “தமிழன்” எனும் புலிகள் தாம்.

எனவே, தம் அடையாளத்தைத் தொலைத்த புலித்தமிழர்களை இவர்கள் ஒதுக்கி வைப்பதில் எந்தவிதமான குறையும் இல்லை.

நமக்கொரு நாடு எதற்காகத் தேவை? நம் சுய நிர்ணயம், நம் கலாச்சாரம், நம் பண்பாடு, நம் மொழி, நம் அடையாளத்தைக் கட்டிக் காத்து சுய மரியாதையுடன் வாழ்வதற்காகத்தான் நமக்கொரு நாடு தேவை.

ஆனால், நாம் கூறும் அதே நாட்டில் நாம் சாரும் அதே சமுதாயத்தை இப்படிப் பல துண்டுகளாகப் பிளவு படுத்தி அவர்களுக்குரிய அடையாளத்தையே பறித்தெடுத்த பின்னர் யாருக்காக நாடு தேவை?

எனவே இந்தப் போராட்டம் தம் முரண்பாடுகளை உலக சந்தையில் அடகு வைக்க ஆரம்பித்தது.

உலகத் தரகர்களோ இந்தப் பிளவுகளை சரியாகப் பயன்படுத்தி, இனத்துக்குள் இருக்கும் இன முரண்பாடுகளை வைத்து தமது அரசியல் வியாபரத்தை தெற்கிலும்,வடக்கிலும் மிகச் சிறப்பாக நடத்தி வந்தார்கள்.

இறுதியில் பேராடச் சென்றவர்களும் “வியாபாரம்” தான் செய்தார்கள்.

புலிகளின் கடற்படைப் பொறுப்பாளராக இருந்த சூசையின் இறுதிச் செவ்வியும் இதைத்தான் மிக ஆழமாக வலியுறுத்தியிருந்தது.

250 புலிகளே அடைபட்டுக் கிடந்த 300 x 300 சதுர மீ்ற்றர் நிலப்பரப்புக்குள் 25000 மக்கள் இருப்பதாகவும், அதில் 3000 பேர் தெருக்களில் இறந்து கொண்டிருப்பதாகவும் அவர் விட்ட “உணர்ச்சியூட்டும்” அறிக்கையும் இறுதியில் இதைத்தான் நிரூபித்தது.

அதாவது அவர்கள் கூறும் “தமிழ் மக்கள்” என்பது புலிகள் இயக்கத்து உறுப்பினர்கள், அதில் எந்த மாற்றுக்கருத்தும் அவர்களுக்கு இறுதி வரை இருகு்க வில்லை.

இதன் அடிப்படையில், புலிகளின் மிக நெருக்கிய நண்பர்களான இந்திய அரசியல் வாதிகள் கூச்சல் போட்ட “தமிழர்களும்” இவர்கள் கூறும் இந்தத் தமிழர்கள் தாம்.

“தமிழர்கள்” என்ற சொற்பதத்தைப் பாவித்து அதற்குள் இவர்கள் அடைக்கலம் தேடிய காரணத்தினால் லட்சோப லட்ச அப்பாவித்தமிழர்கள் அகதிகளானார்கள், இடம் பெயர்ந்தோர் ஆனார்கள், உடமை இழந்தார்கள், தம் உரிமைகளையும் இழந்தார்கள்.

“தமிழ் மக்கள்”, “தமிழ் மக்கள்” என்று புலிகள் இருக்கும் வரை கூச்சல் போட்ட நெடுமாறன்கள், வை.கோக்கள், சீமான்கள் வகையறாக்களால் இப்போது இராணுவ கட்டுப்பாட்டில் இயங்கும் நலன் புரி முகாம்களில் வாழும் மக்களுக்காக ஏன் ஒரு கூட்டம் கூட்ட முடியவில்லை? ஏந் ஒரு மேடையில் முழங்க முடியவில்லை? ஏன் ஒரு வேளை உண்ணா நோன்பாவது இருக்க முடியவில்லை? அவர்களைப் பொறுத்தவரை “தமிழர்கள்” என்பதற்கான அர்த்தமே வேறு.

அதிலும் “தமிழன்” என்பதன் அர்த்தம், அவர்கள் மிகவும் நேசித்த பிரபாகரன் எனும் தனி நபர் தான் அவர்களது “தமிழன்”.

இப்போது இலங்கை அரசு அவரைக் கொன்றதாகக் கூறினாலும், இந்த வகையறாக்கள் அவர் உயிரோடு இருப்பதாகக் கூறுவதனால், இவர்களது சித்தர்ந்தப்படி “தமிழன்” காப்பாற்றப்பட்டு விட்டான், எனவே இவர்கள் கடமை முடிந்து விட்டது.

இனியொரு அரசியல் தேவை வந்தால் தவிர, இந்த வகையறாக்கள் அந்த அப்பாவி மக்களைப் பற்றிக் கவலைப் படப்போவதில்லை.

ஆனால், வீராப்பாக போரை நடத்தி ஒரு முடிவைக் கண்ட அரசாங்கம் கட்டாயம் கவலைப்பட வேண்டும்.

சர்வதேச சமூகத்தில் இருக்கும் அரசியல் இடைவெளிக்குள் நெளிந்து, சுளிந்து அவர்கள் பெற்றுக்கொண்ட வெற்றியைத் தங்க வைத்துக்கொள்ள உண்மையான “தமிழ் மக்களுக்கு” அவர்கள் தோள் கொடுக்க வேண்டும்.

அப்போது, பாதிக்கப்பட்டு, நாதியிழந்து தவிக்கும் மக்களுக்குத் தம் நண்பர்கள் யார் என்று தெரியாவிடினும், அதை யோசிக்கும் சூழ்நிலை இல்லாவிடினும், புலிகள் தம்மைத் “தமிழராக” க் கூட மதிக்கவில்லை என்கிற உண்மை தெரியவரும்.

அதற்காக அவர்கள் சிங்கள அரசாங்கங்களிடம் மீண்டும் தம் உரிமையை அடகுவைக்கும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பார்களாயின் அது அவர்கள் மீண்டும் தமக்குத் தாமே குழி தோண்டிப் புதைக்கும் செயலாகவே அமையும்.

அவர்கள் சிந்திக்க வேண்டும், அவர்களது உரிமையை அவர்களே வென்றெடுக்க வேண்டும், அதற்கு யாரைத் தலைமை தாங்க வைப்பது என்று அவர்கள்தான் சிந்திக்க வேண்டும்.

தன் சொந்த அடையாளத்தையே இழக்க வைத்த இது போன்ற போராட்டங்கள் இனிமேலும் வேண்டுமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

போராடித்தான் ஆக வேண்டும் எனும் நிலை வந்தால், அந்தப் போராட்டத்தை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்ற அவர்களாகவே ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

இப்போதிருக்கும் எந்தத் தலைவர்கள் அவர்கள் முன் வந்தாலும், அவர்கள் என்னதான் செய்தாலும், மக்கள் சுதந்திரமாக, சுயமாக சிந்தித்துத் தம்மை, தம் சமுதாயக் கட்டுமானத்தைக் காப்பாற்றும் பொறுப்பை அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் தம்மைப் பராமரிப்போரிடம் தம் சுய புத்தியை அடகு வைக்காமல், தற்காலிக நலன்களில் மயங்கி விழாமல் சுதந்திரமாகத் தம் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தொலைந்து போன தம் அடையாளத்தை சிறுபாண்மையினமாக அல்ல இலங்கைத் தீவின் சுய மரியாதை உள்ள பங்காளிகளாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்கான அரசியல் பாடத்தை இவர்கள் ஏற்கனவே கற்றுக்கொண்டு விட்டாலும், சரியான முறையில் வழி நடத்தப்படுவார்களா? இல்லை மேலும் பல பிளவுகளாகத் துண்டாடப்படுவார்களா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயம்.

புலிகள் சார்ந்த, புலிகள் சாராத அரசியல் சக்திகளும், மக்கள் நலன் சார்ந்த, அரசியல் நலன் சார்ந்த சக்திகளும், அடங்கிப் போகும், உரிமைக்காகக் குரல் கொடுக்கும் சக்திகளும் என்று பல மக்கள் குழுமங்கள் இந்த இடம்பெயர்ந்த மக்களுக்குள் இருப்பார்கள்.

இதில், தமக்கெதிராக வெகுண்டெழக்கூடிய விறைப்புள்ளவர்களை அரசாங்கம் இப்போதிருந்தே பிரித்தெடுக்க ஆரம்பித்திருக்கம், அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்ட பின் அவர்களது நிலைப்பாடு அறியப்படாமல் அவர்கள் பொதுசனத்தோடு கலக்கப்படுவதை இன்னும் ஒரு புலி உருவாகக்கூடாது எனும் நோக்கிலாவது அரசாங்கம் அனுமதிக்காமல் விடும்.

அத்தோடு தமக்கிருக்கும் கல்வி “அறிவை” வைத்து மொழிபெயர்ப்பு,குரல் கொடுப்பு என்று ஒரு சிறு பிரிவு மக்கள் மீது ஆளுமை செலுத்தவும், அனாதரவாய் தவிக்கும் குழந்தைகள், பெற்றோர்கள் என்று ஒரு புறமும் இருக்கப் போகும் இடைவெளியைப் பாவித்து இன்னொரு குழு தம் செல்வாக்கை உயர்த்திக்கொள்ளும்.

போராட்டம் என்ன போராட்டம் வளைந்து கொடுத்து வெளியேறி தம் பிள்ளைகள் வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பணத்தில் இறுதிக்காலத்தையாவது சுகமாகக் கழிக்கலாம் என்று ஒரு குழு வெளியேறத் துடிக்கும்.

இப்படி பல்வேறு பிளவுகளைக் கொண்ட இந்த சிறுபாண்மையினத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமை அவர்களது “சுய சிந்தனையிலேயே” தங்கியிருக்கிறது.

அங்கே மக்கள் அல்லல் படுகிறார்கள் என்றவுடன் தெற்கிலும் அவர் சார்ந்த சிறுபாண்மையினரும், பெரும்பாண்மையினத்தவரும் கூட சும்மாயிருக்க வில்லை, தம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்து, அம்மக்களுக்கு தம்மால் முடிந்ததை அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

புலித்தலைமை ஒழிந்ததே தவிர, புலி இன்னும் இருக்கும் எனும் பயம் அரசிடம் இருந்து அகலப் போவதில்லை.

மீண்டும் பழைய “தலையாட்டி” கலாச்சாரம் கூட அறிமுகப்படுத்தப்படலாம்.

ஆக மொத்தத்தில் முப்பது வருடங்கள் இந்த உரிமைப்போராட்டம் சுமந்து வந்த முரண்பாடுகள் பல ஆயிரம் கோடிகள் இருக்கும்.

இவை, ஏலவே சரியான பாதையில் பயணித்திருந்தால் இன்றைய தலைமுறையாவது நன்றாக வாழ்ந்திருக்கும், இன்றும் ஒன்றும் குறையவில்லை, இனி வரும் தலைமுறையினர் வாழ்வதற்கு வழி காட்டும் திறன் உங்களிடம் இருக்கிறது.

அவர்களை சரியான முறையில் நீங்கள் வழி நடத்துவீர்களா என்பதைத்தான் வரலாறு பொறுமையாகப் பார்க்கப்போகிறது.

ஆளும் வர்க்கம் எப்போதுமே தம் ஆளும் நலனைக் கருத்திற்கொண்டே தம் திட்டங்களை முன்வைக்கிறது, அது சமூகத்தின் அடி மட்ட மனிதனுக்கும் அவன் அல்லலுக்கும் திருப்தியான பதிலைத் தராதவரை அது ஒரு சமூகம் சார்ந்த தீர்வாக இருக்கப்போவதில்லை.

சமூகப்பிளவுகளை உருவாக்குவதன் மூலம் எப்படி சிறுபாண்மையினமே சிறு சிறு இனமாகத் துண்டிக்கப்பட்டதோ அவ்வாறே அவதிப்படும் மக்களும் துண்டாடப்படுவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது.

இழந்து போன ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்புவது அவ்வளவு இலகுவானதல்ல, சிங்கள மக்கள் முஸ்லிம்கள் கலந்த “தமிழ்” மக்கள் மீதும், முஸ்லிம் மக்களோ “தமிழ்” மக்கள் மீதும், தமிழ் மக்கள் நாணிக் குறுகிய நிலையில் “முஸ்லிம்” மக்கள் மீதும், ஆளும் வர்க்கமோ இவ்வனைத்து மக்கள் மீதும் ஒரு “சந்தேகக் கண்ணை” எப்போதும் வைத்திருக்கத்தான் போகிறது.

சர்வதேசத்தோடு வளைந்து,நெளிந்து நீந்சிச்செல்லத் தெரிந்த இந்த அரசாங்கம், எதிர்வரும் காலத்தை மக்கள் தம் அடிப்படைப் பிரச்சினைகளைக் களைந்து அபிவிருத்தியில் வேலை வாய்ப்புகளைக் கண்டு, தம் சுய தேவைகளை உழைத்துப் பெற்றுக்கொள்ளும் ஒரு சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் இவ்வாறான சமூகப் பிளவுகளைத் தவிர்க்கக்கூடிய சாத்தியக் கூறுகளும் உண்டு.

சீனா,ரஷ்யா,இந்தியா,பாகிஸ்தானுடன் இலங்கை வைத்திருக்கும் இந்தக் கூட்டுறவு உடன்படிக்கை யார் தலை கீழாக நின்றாலும் நி்ச்சயமாக எதிர்காலப் பொருளாதார நலன் சார்ந்ததாகவே இருக்கும்.

அவ்வாறே அது அமையப்பெற்றால், நிச்சயமாக மக்களின் அபிலாஷைகள் வேறு வடிவத்தில் பிறக்க ஆரம்பிக்கும், ஆனால் அப்போதும் “அரசியல்” இருக்கும்.

அந்த “அரசியலை” நிர்ணயிக்கும் சக்தியாக மக்கள் இருந்தால், நம் கடந்த கால முரண்பாடுகளை மறந்து சுபீட்சமான ஒரு எதிர்காலத்தை நோக்கி சுய மரியாதையுடன் செல்லலாம்.

இவையனைத்தும், இன்றோ நாளையோ நடக்கப்போகும் விடயங்களல்ல, காலப்போக்கில் அரசியல் நியதிப்படி அமையக்கூடிய எதிர்வு கூறல்கள் மாத்திரமே.

அவற்றின் கள நிலை அறிந்து செயற்படும் பொறுப்பு ஒவ்வொரு மனிதரையும் சாரும், அவரை வழிநடத்த வரும் தலைமையை அறிந்து செயற்படும் தேவையும் அவரையே சாரும்.

இப்போதைக்கு அது “நடந்து முடிந்த” முரண்பாடுகளோடு தூக்கி வீசப்படடாலும், எதிர்கால முரண்பாடுகளை எதிர்க்கொள்வதும், அவற்றை உருவாகம் தடுப்பதும் மக்கள் கைகளிலேயே இருக்கிறது!

http://www.ilakkiyainfo.com/index.php?id=355

(அறிவென்றொன்று..?

இணையதளத்திலிருது)

திருமலையில் மூதூர் சம்பூர் போண்ற இடங்கள், கிண்ணியா கிளிவெட்டி முதல் கட்டை பறிச்சான் வரைக்கும் பெரும்பான்மையான நிலங்கள்...

காங்கேசன் துறை, மயிட்டி, பலாலி போண்ற இடங்களில் இருந்தும்.

வெலிஓயா எனபடும் மணலாற்று மாவட்டத்தில் மண்கிண்டி, சிலோன் தியட்டர், முந்திரிக்குளம், டெலர்பாம், கென்பாம், பதவிக்குளம், கருவாட்டு கேணி, கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், தென்னமரவாடி, புல்மோட்டை, போண்ற முழுமையான இடங்களில் இருந்தும்..

மன்னாரில் தீவகத்தின் பல நிலங்களிலும்.. தள்ளாடி, சிலாவத்துறை, அரிப்பு, முதல் விடத்தல் தீவு வரைக்கும்..

வவுவியாவில் வணாங்குளம்( கட்டுப்பெத்த கந்துருவெல, வீரவெல என பிரிக்கப்பட்ட) முதல் பாவல்குளம் வரைக்கும் தமிழ் மக்கள் சிங்கள முஸ்லீம் குண்டர்களால் இடம் பெயர வைக்கப்பட்டமையை யாராவது எப்போதாவது நினைவு கூருகிறீர்களா... அவை எப்போது நடந்தது எனும் காலத்தை கூட தெரிந்து வைத்து இருக்கிறீர்களா...???

(மட்டக்களப்பு அம்பாறையை நான் இதில் சேர்க்கவில்லை... அதில் அரைப்பங்கு தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு சிங்களவரும் முஸ்லீம்களும் குடியேறி இருக்கிறார்கள்)

Edited by தயா

எமது போராட்டம் சிங்கள குடியேற்றத்திற்கு எதிரானதென்பதுதான் முக்கியமானது.அதையே நாங்கள் எங்களுக்குள் இருக்கும் சிறுபான்மையினத்தவருக்கு செய்தால் சிங்களவ‌னுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்.

  • தொடங்கியவர்

எமது போராட்டம் சிங்கள குடியேற்றத்திற்கு எதிரானதென்பதுதான் முக்கியமானது.அதையே நாங்கள் எங்களுக்குள் இருக்கும் சிறுபான்மையினத்தவருக்கு செய்தால் சிங்களவ‌னுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்.

தமிழரின் கண்ணீருக்கும் முஸ்லிம்களின் கண்ணீருக்கும் இடையில் சுவையில் வேறுபாடு இருக்கென்று சொல்கின்றவர்கள் மத்தியில் இப்படியான நியாயமான கருத்துகள் எடுபடாது அர்ஜுன்.

தமிழரின் கண்ணீருக்கும் முஸ்லிம்களின் கண்ணீருக்கும் இடையில் சுவையில் வேறுபாடு இருக்கென்று சொல்கின்றவர்கள் மத்தியில் இப்படியான நியாயமான கருத்துகள் எடுபடாது அர்ஜுன்.

இவை நடப்பதுக்கு எல்லாம் முன் முஸ்லீம்களால் தமிழர்கள் யாரும் அடித்து, வெட்டி கொல்லப்படவில்லை எண்று நீங்கள் உறுதிப்படுத்துவீர்கள் எண்றால் நானும் அதுக்காக கவலை கொள்வேன்... ஆனால் நிலமை அப்படி இல்லையே...

கொழும்பில் ஆகட்டும் மன்னாரில் ஆகட்டும் மட்டக்களப்பில் ஆகட்டு, மட்டக்களப்பு அம்மாறை ஆகட்டும், தமிழர்கள் உடமைகளை மட்டும் இழக்கவைத்து வெளியேற்ற படவில்லை உயிரையும் சேர்த்துத்தான்.... அதில் முஸ்லீம்களின் பங்கும் ஆதரவும் கணிசமாக இருந்தது என்பதை நீங்கள் உனரவில்லையா...???

ஏன் இண்றைக்கும் புதியவரான நீங்கள் சம்பூர் நகருக்குள் போய் ஒரு இரவு தங்க முடியும் எண்றா நினைக்கிறீர்கள்...

எனது இனத்தை என்னால் காக்க முடியவில்லை... நான் மற்ற இனத்துக்காக எல்லாம் கவலை கொள்கிறேன் என்பது வெறும் நடிப்பாக மட்டுமே அமையும்...

  • தொடங்கியவர்

இவை நடப்பதுக்கு எல்லாம் முன் முஸ்லீம்களால் தமிழர்கள் யாரும் அடித்து, வெட்டி கொல்லப்படவில்லை எண்று நீங்கள் உறுதிப்படுத்துவீர்கள் எண்றால் நானும் அதுக்காக கவலை கொள்வேன்... ஆனால் நிலமை அப்படி இல்லையே...

கொழும்பில் ஆகட்டும் மன்னாரில் ஆகட்டும் மட்டக்களப்பில் ஆகட்டு, மட்டக்களப்பு அம்மாறை ஆகட்டும், தமிழர்கள் உடமைகளை மட்டும் இழக்கவைத்து வெளியேற்ற படவில்லை உயிரையும் சேர்த்துத்தான்.... அதில் முஸ்லீம்களின் பங்கும் ஆதரவும் கணிசமாக இருந்தது என்பதை நீங்கள் உனரவில்லையா...???

ஏன் இண்றைக்கும் புதியவரான நீங்கள் சம்பூர் நகருக்குள் போய் ஒரு இரவு தங்க முடியும் எண்றா நினைக்கிறீர்கள்...

எனது இனத்தை என்னால் காக்க முடியவில்லை... நான் மற்ற இனத்துக்காக எல்லாம் கவலை கொள்கிறேன் என்பது வெறும் நடிப்பாக மட்டுமே அமையும்...

முஸ்லிம்கள் தமிழர்களை வெட்டவில்லை என்றோ, அல்லது தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடவில்லை என்றோ யாரும் இங்கு கூறவும் இல்லை, கூறவும் முடியாது. அதே போல், முஸ்லிம்களை ஏதிலிகளாக்கி வெளியேற்றிய நாளை நினைவு கொள்வதற்கான திரியில், அவர்களின் தமிழ் மக்கள் மீதான வன்முறை பற்றி இரண்டு வரி எழுதிப்போட்டு தமிழ் தேசிய ஆதரவாளன் நான் என்றோ அல்லது நடுநிலைவாதி என்றோ போலித்தனமாக நடிக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.

நன்றி, வணக்கம்

Edited by நிழலி

முஸ்லிம்கள் தமிழர்களை வெட்டவில்லை என்றோ, அல்லது தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடவில்லை என்றோ யாரும் இங்கு கூறவும் இல்லை, கூறவும் முடியாது. அதே போல், முஸ்லிம்களை ஏதிலிகளாக்கி வெளியேற்றிய நாளை நினைவு கொள்வதற்கான திரியில், அவர்களின் தமிழ் மக்கள் மீதான வன்முறை பற்றி இரண்டு வரி எழுதிப்போட்டு தமிழ் தேசிய ஆதரவாளன் நான் என்றோ அல்லது நடுநிலைவாதி என்றோ போலித்தனமாக நடிக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.

நன்றி, வணக்கம்

உங்களை பொறுத்த வரைக்கு தமிழன் எண்று சொல்லி கொள்பவன் நடிகனாக இருக்கலாம்...

எல்லா இனங்களும் தங்களின் இனங்களின் நலனிலும் வளர்ச்சியிலும் அக்கறை காட்டும் போது எல்லாம் தமிழர்கள் மட்டும் தான் மற்றவர்களை பற்றி மட்டும் கவலை கொள்கிறார்கள்...

இப்ப எல்லாம் எங்கட இனத்தை விட மற்றவனுக்கு நடந்ததை நினைத்து கவலை கொண்டு.. எங்கட மனிதாபிமானத்தை வெளியில் காட்டி கொள்ள வேண்டி கிடக்கிறது...

எங்கட இனத்தை பற்றி நாங்கள் கவலைப்பட்டால் அதை பற்றி யார் கவனிக்கிறான்...

கருத்து சொன்னதுக்கு நண்றி வணக்கம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களை பொறுத்த வரைக்கு தமிழன் எண்று சொல்லி கொள்பவன் நடிகனாக இருக்கலாம்...

எல்லா இனங்களும் தங்களின் இனங்களின் நலனிலும் வளர்ச்சியிலும் அக்கறை காட்டும் போது எல்லாம் தமிழர்கள் மட்டும் தான் மற்றவர்களை பற்றி மட்டும் கவலை கொள்கிறார்கள்...

இப்ப எல்லாம் எங்கட இனத்தை விட மற்றவனுக்கு நடந்ததை நினைத்து கவலை கொண்டு.. எங்கட மனிதாபிமானத்தை வெளியில் காட்டி கொள்ள வேண்டி கிடக்கிறது...

எங்கட இனத்தை பற்றி நாங்கள் கவலைப்பட்டால் அதை பற்றி யார் கவனிக்கிறான்...

கருத்து சொன்னதுக்கு நண்றி வணக்கம்...

முஸ்லிம்களை தமிழர்கள் விரட்டும் முன்பே முஸ்லிம்கள் தமிழர்களுக்கு எதிராக கிளம்பி விட்டார்கள். எத்தனையோ தமிழ் கிராமங்கள் அவர்களால் சூறையாடப்பட்டு பல்லாயிரக்கணக்கான தழிழ்மக்கள் இன்றும் ஏதிலிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது தென் தமிழீழ மக்களால் மட்டுமே உணரக்கூடிய வலி.

முஸ்லிம்கள் திரத்தப்பட்டு 19 வருடம் என்று திரி போட்டு வக்காலத்து வேண்டும் எம் இன கோடாரிக்காம்புகளுக்கு தென்தமிழீழ மக்களின் வரலாறு தெரியாமல் போனது வேடிக்கை

  • தொடங்கியவர்

முஸ்லிம்கள் திரத்தப்பட்டு 19 வருடம் என்று திரி போட்டு வக்காலத்து வேண்டும் எம் இன கோடாரிக்காம்புகளுக்கு தென்தமிழீழ மக்களின் வரலாறு தெரியாமல் போனது வேடிக்கை

நன்றி.... வளமுடன் வாழ்க..

இத்தகைய பார்வை சர்வதேச அரங்கில் அரசியல் அநாதைகளாக ஒவ்வொரு நாட்டிடமும் பிச்சை கேட்கும் எம் நிலையை மாற்றி, சிறிலங்கா போன்ற ஒற்றை இன ஆட்சிக்கு எதிராக பல்லின சமூக வாழ்வை தமிழீழத்தில் நாம் உருவாக்குவோம் என்ற நம்பிக்கையை கொடுக்கும்.

நம்புங்கள் தமிழீழம் உங்களைப் போன்ற தமிழ் தேசிய வெறியர்களால் நிச்சயம் நாளை உருவாகும்

:கோடாரிக் காம்பு

Edited by நிழலி

தமிழனில் சிலர் எப்போதும் நம்புறது சர்வதேச மட்டத்தில் இருக்கும் மக்கள் எல்லாம் முட்டாள்கள் எண்று... சிங்களவர் செய்யும் கொடுமைகளை சகிக்க மாட்டார்களாம் ஆனால் மற்றவர்களுக்காக கவலைப்படுவார்களாம் எண்று இனம் காட்டினால் உடனே நம்பி விடுவார்களாம்...

ஏன் எண்றால் இஸ்லாமியர்களின் மதத்துவேசத்தை உலகம் அறியாதது தானே...

எனக்கு ஒரு இஸ்லாமியன் நேரடியாக சொல்கிறான்... உன்னோடு நட்ப்பாக இருப்பது எனது மதவளக்கப்படி தவறு எண்று.... இதை உலகம் உணர்ந்து இருக்க வில்லையாம்...

அவன் தனது இஸ்லாமிய மதத்தவரை யாரையும் தமிழர்கள் எண்று சொல்வது கூட இல்லை... இலங்கை இஸ்லாமியர்கள் எண்றுதான் விளித்து கொள்கிறான்...

ஆனால் தமிழராகிய நாங்கள் செய்து கொண்டு இருப்பது எல்லாம் எங்கட புண்ணுகளை கிண்டி நாங்களே மணந்து பார்க்கிறோம்... இன்னும் நாற்றம் அடிக்கிறதா எண்று...

இதைத்தாண்டி எங்களுக்கு அரசியல் எல்லாம் வராது...

Edited by தயா

அன்புத்தம்பி கருணா முரளிதரனின் சிந்தனைக்கு, தலைவரின் செயல்வடிவமே முஸ்லீம் மக்களின் வெளியேற்றம்.

அன்புத்தம்பி கருணா முரளிதரனின் சிந்தனைக்கு, தலைவரின் செயல்வடிவமே முஸ்லீம் மக்களின் வெளியேற்றம்.

1990 களின் கடைசியின் RAW வின் செயற்திட்டத்துக்கு உபதலைவராகவும், அரசியல் துறைக்கு பொறுப்பாக இருந்த மாத்தையா செயல்வடிவம் கொடுத்தார் எண்று சொன்னால் ஏற்று கொள்ள மாட்டியளோ...

அந்த நிகழ்வால் மாத்தையா இரு பொறுப்புகளில் இருந்தும் தூக்கப்பட்டார் எண்றால் நம்புவீங்களோ...???

உங்களுக்கு இப்ப இருண்டது எல்லாம் பேயாகத்தான் தெரியும்..

1990 களின் கடைசியின் RAW வின் செயற்திட்டத்துக்கு உபதலைவராகவும், அரசியல் துறைக்கு பொறுப்பாக இருந்த மாத்தையா செயல்வடிவம் கொடுத்தார் எண்று சொன்னால் ஏற்று கொள்ள மாட்டியளோ...

அந்த நிகழ்வால் மாத்தையா இரு பொறுப்புகளில் இருந்தும் தூக்கப்பட்டார் எண்றால் நம்புவீங்களோ...???

உங்களுக்கு இப்ப இருண்டது எல்லாம் பேயாகத்தான் தெரியும்..

அப்ப நீங்கள் சொல்ல வாறீங்கள், மாத்தையா முஸ்லீங்களை வெளியேற்றும்போது, தலைவர் கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தார் என்றா? :D

அப்ப நீங்கள் சொல்ல வாறீங்கள், மாத்தையா முஸ்லீங்களை வெளியேற்றும்போது, தலைவர் கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தார் என்றா? :D

அவர் தகவலை அறிந்து கொள்ள முடிந்து இருந்தது தொலைத்தொடர்பினூடாக மட்டுமே.

கொக்காவில், மாங்குளம் தாக்குதல்களின் தயாரிப்பு வேவு, வரைபடம் வேலைகளை கவனித்து கொண்டு இருந்தார். அதன் பின்னரான சிலாவத்துறை தாக்குதலின் பின்னர் தான் அவர் யாழ்ப்பாணத்து வந்து சேர்ந்தார்.

வந்து சிலகாலங்களில் மக்கள் முன் தோண்றி சாவகசேரியில் உரையாற்றினார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி.... வளமுடன் வாழ்க..

இத்தகைய பார்வை சர்வதேச அரங்கில் அரசியல் அநாதைகளாக ஒவ்வொரு நாட்டிடமும் பிச்சை கேட்கும் எம் நிலையை மாற்றி, சிறிலங்கா போன்ற ஒற்றை இன ஆட்சிக்கு எதிராக பல்லின சமூக வாழ்வை தமிழீழத்தில் நாம் உருவாக்குவோம் என்ற நம்பிக்கையை கொடுக்கும்.

நம்புங்கள் தமிழீழம் உங்களைப் போன்ற தமிழ் தேசிய வெறியர்களால் நிச்சயம் நாளை உருவாகும்

:கோடாரிக் காம்பு

முஸ்லிம் வெறியர்களாக இருப்பதால் தான் அவர்களால் இன்று பரந்த இஸ்லாமிய தேசங்களை உருவாக்கமுடிந்துள்ளது.

இன்றளவும் எந்த முஸ்லிமாவது தாம் தமிழருக்கு ஏதாவது தீங்கிளைத்தார்கள் என்று ஒத்து கொள்வார்களா ? மாட்டார்கள். தாம் ஒன்றுமே செய்யாத அப்பாவிகள் போன்றும் நாம்தான் அவர்களுக்கு தீங்கிழைப்பதாகவும் கூறுவார்கள். ஆனால் நாம் தமிழர்கள் தான் இழிச்சவாயர்கள். எங்கட சுயநலத்திற்காக எமது இனமானத்தை எவனுக்கும் விற்க தயங்காத விபச்சாரிகள்.

இப்பிடி திரி போட்ற நேரத்தில கொள்ளுப்பிடில சிங்களவன் அப்பாவி தமிழனை கொண்ட செய்தியை வேற நாட்டுக்காரனுக்கு தெரிவியுங்கோ புண்ணியமா போகும். அத விட்டிட்டு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சரைமாதத்தில 120000போர மீள்குடியேத்தினதா இண்டைய செய்தி சொல்லுது, சனவரி 31 ம் திகதியளவில அனேகமா எல்லாரும் மீள குடியமர்த்தப்பட்டுவிடுவினம் எண்டு அந்த செய்தி தொடருது ஆனா இதுகள் 19 வருசமா அகதியா இருக்குதுகள். இதைப்பற்றி யாழ்ப்பாண கட்சிக்காரர்தான் கதைக்கிறார்கள். மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்போறதாகவும் வரலாம் எண்டும் இண்டைய அறிக்கை போகுது. யாழ்ப்பாணத்திலயிருந்து வாற ரிவியில சொல்லிச்சுது. :D

1990 ஆண்டு யுத்தம் வெடித்தது. இரவோடிரவாக நாங்கள் திருமலை நகரில் இருந்து நிலவெளி நோக்கி ஓடினோம். மக்கள் ஓடிய காட்சி தேர்த் திருவிளா தோற்றுவிடும்.

நிலாவெளியில், திருமலை நகரில் இருந்து ஒன்பதாம் கட்டை பகுதியில் ஆயிர‌க்கணக்கில் தமிழர்கள் மரங்களின் கீழும் பாதையோரங்களிலும் தங்கியிருந்தனர். எட்டம் கட்டையில் முஸ்லீம் கிராமம் ஒன்று இருக்கின்றது.

ஷெல்கள் நாம் இருந்த பகுதி நோக்கி வர ஆரம்பிக்கின்றன. நிலாவெளி மக்கள் இடம்பெயர்ந்தவகளுக்கு உணவு கொடுக்கின்றார்கள். உணவுக் கையிருப்பு முடிகின்றது.

புலிகளின் காட்டுப் பகுதி முகாமில் இருந்து ஒரு வாகனம் வருகின்றது. அதில் கோதுமை மா முட்டைகள். பிறிமா மா ஆலையில் இருந்து கொள்ளை அடிக்கப் பட்டவை. தமிழர்கள் தமக்கு உணவு வருகின்றது என்று சந்தோசப் பட்டார்கள். வாகனம் தமிழர்களை கடந்து எட்டம் கட்டை நோக்கிச் செல்கின்றது. முஸ்லீம் கிராமத்தவர்களுக்கு மா இறக்கப் படுகின்றது.

இராணுவம் கடற்கரையில் தரையிறங்குகின்றது. நிலாவெளி சுற்றிவளைக்கப்பட்டு, தமிழர்கள் மந்தைகளாக திருமலை நகருக்கு ஏற்றப் படுகின்றார்கள்.

எட்டம் கட்டையச் சேர்ந்தவர்களால், நிலாவெளியைச் சேர்ந்த‌ போராட்ட ஆதரவாளர்கள் காட்டிக் கொடுக்கப் படுகின்றார்கள். எந்தவித அரசியற் தொடர்பு மற்ற இளம் பெண்களும் காட்டிக் கொடுக்கப் பட்டவர்களுள் அடங்குவர். பெரும் பாலானவர்கள் மீண்டும் திரும்பவில்லை.

நிலாவெளியின் மத்தியில் அமைந்த்திருந்த பிள்ளையார், காளி கோவில்கள் அவர்களால் சூறையாடப் படுகின்றன. நிலாவெளியில் கிட்டத்தட்ட பத்து பட்டிகள் இருந்தன. ஒவ்வொரு பட்டியிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாடுகள் இருந்தன. மாடுகள் இறைச்சிக்காக சிங்கள நாட்டிற்கு இவர்களால் அபகரித்து ஏற்றப் படுகின்றது.

ஒரு காலத்தில் பச்சை பசேல் என்று தோட்டங்களும், நீர் இறைக்கும் பம்பிகளின் சப்தமும், மாடுகள் மேய்ச்சலுக்குச் செல்லும் காட்சிகளுமாக இருந்த நிலாவெளி ஆள் அரவமற்ற இடமாகின்றது.

எட்டம் கட்டை செளித்து வளர்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1990 ஆண்டு யுத்தம் வெடித்தது. இரவோடிரவாக நாங்கள் திருமலை நகரில் இருந்து நிலவெளி நோக்கி ஓடினோம். மக்கள் ஓடிய காட்சி தேர்த் திருவிளா தோற்றுவிடும்.

நிலாவெளியில், திருமலை நகரில் இருந்து ஒன்பதாம் கட்டை பகுதியில் ஆயிர‌க்கணக்கில் தமிழர்கள் மரங்களின் கீழும் பாதையோரங்களிலும் தங்கியிருந்தனர். எட்டம் கட்டையில் முஸ்லீம் கிராமம் ஒன்று இருக்கின்றது.

ஷெல்கள் நாம் இருந்த பகுதி நோக்கி வர ஆரம்பிக்கின்றன. நிலாவெளி மக்கள் இடம்பெயர்ந்தவகளுக்கு உணவு கொடுக்கின்றார்கள். உணவுக் கையிருப்பு முடிகின்றது.

புலிகளின் காட்டுப் பகுதி முகாமில் இருந்து ஒரு வாகனம் வருகின்றது. அதில் கோதுமை மா முட்டைகள். பிறிமா மா ஆலையில் இருந்து கொள்ளை அடிக்கப் பட்டவை. தமிழர்கள் தமக்கு உணவு வருகின்றது என்று சந்தோசப் பட்டார்கள். வாகனம் தமிழர்களை கடந்து எட்டம் கட்டை நோக்கிச் செல்கின்றது. முஸ்லீம் கிராமத்தவர்களுக்கு மா இறக்கப் படுகின்றது.

இராணுவம் கடற்கரையில் தரையிறங்குகின்றது. நிலாவெளி சுற்றிவளைக்கப்பட்டு, தமிழர்கள் மந்தைகளாக திருமலை நகருக்கு ஏற்றப் படுகின்றார்கள்.

எட்டம் கட்டையச் சேர்ந்தவர்களால், நிலாவெளியைச் சேர்ந்த‌ போராட்ட ஆதரவாளர்கள் காட்டிக் கொடுக்கப் படுகின்றார்கள். எந்தவித அரசியற் தொடர்பு மற்ற இளம் பெண்களும் காட்டிக் கொடுக்கப் பட்டவர்களுள் அடங்குவர். பெரும் பாலானவர்கள் மீண்டும் திரும்பவில்லை.

நிலாவெளியின் மத்தியில் அமைந்த்திருந்த பிள்ளையார், காளி கோவில்கள் அவர்களால் சூறையாடப் படுகின்றன. நிலாவெளியில் கிட்டத்தட்ட பத்து பட்டிகள் இருந்தன. ஒவ்வொரு பட்டியிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாடுகள் இருந்தன. மாடுகள் இறைச்சிக்காக சிங்கள நாட்டிற்கு இவர்களால் அபகரித்து ஏற்றப் படுகின்றது.

ஒரு காலத்தில் பச்சை பசேல் என்று தோட்டங்களும், நீர் இறைக்கும் பம்பிகளின் சப்தமும், மாடுகள் மேய்ச்சலுக்குச் செல்லும் காட்சிகளுமாக இருந்த நிலாவெளி ஆள் அரவமற்ற இடமாகின்றது.

எட்டம் கட்டை செளித்து வளர்கின்றது.

ம்.....மந்தைத்தமிழருக்கு விட்ட அறிக்கையா தெரியிது. கிழக்கு மக்கள் புத்திசாலியள், அதான் புறிச்சாளுற புத்திய தெரிஞ்சு புத்திசாலித்தனமா நடக்கிதுகள். :D

ம்.....மந்தைத்தமிழருக்கு விட்ட அறிக்கையா தெரியிது.

எதை வச்சு சொல்றீங்க‌ ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.