Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுயவிமர்சனம் தற்கொலைக்கு ஒப்பானதல்ல

Featured Replies

சுயவிமர்சனம் தற்கொலைக்கு ஒப்பானதல்ல

புலிகளின் வீழ்ச்சியும் தமிழக* ஆதரவு சக்திகளின் அரசியல் புரிதலும்: சில குறிப்புகள் - யதீந்திரா

எங்கே அது எம்மைக் கொண்டு சேர்க்கும்

என்றறியாமலே

இருளில் நாங்கள்

ஒரு பாதையைத் தேர்ந்தோம்.

- ஸபான் இலியாஸ் மேஸடோணுயா

01.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான சூழல் குறித்து எழுதவோ பேசவோ முயலும்போதெல்லாம், முதலில் சிறிய வயதில் படித்த சைவ சமயவழிக் கதையொன்று நினைவுக்கு வருவதுண்டு.

அது உலகத்தை முதலில் சுற்றிவருபவர்கள் யார் என்ற போட்டி தொடர்பான கதை.

இதில் தமிழர்களின் முழுமுதற் கடவுளென அறியப்படும் சிவபெருமானின் புதல்வர்களான முருகனும் தும்பிக்கையான் எனப்படும் விநாயகனுமே போட்டியாளர்கள்.

முருகன் தனது மயில் வாகனத்திலேறி உலகத்தைச் சுற்றிவரும் போட்டியில் களமிறங்க, தும்பிக்கையானோ நாரதரின் ஆலோசனையின்படி தன் பெற்றோரான சிவனையும் பார்வதியையும் சுற்றிவந்து ஞானப்பழத்தைப் பரிசாகப் பெற்றுக்கொள்வார்.

உலகிற்கே படியளக்கும் சிவனையும் பார்வதியையும் சுற்றிவந்தால் இவ்வுலகத்தைச் சுற்றியதற்குச் சமம் என்னும் நாரதர் ஆலோசனையின் சூட்சுமங்களை விளங்கிக்கொண்ட தும்பிக்கையான் போட்டியில் லகுவாக வெற்றிபெற்றான்.

உலகத்தையே சுற்றிவந்துவிட்டேன் என்னும் இறுமாப்பிலிருந்த முருகனுக்கோ பேரதிர்ச்சி காத்திருந்தது. இறுதியில் பெற்றோருடன் கோபித்துக்கொண்டு கோவணத்துடன் திரிந்தார் முருகன்.

இந்த நாட்களில் நாவல்மரமொன்றில் நின்றுகொண்டு, சமாதானம் பேச வந்த அவ்வையாரைப் பார்த்து “உனக்குச் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா?” என்று வசனம் பேசுவதாக அந்தக் கதை செல்கிறது.

கதையின்படி முருகனிடம் இருந்ததோ வீராவேசம் ஆனால் தும்பிக்கையானிடம் இருந்ததோ மதிநுட்பம். மதிநுட்பமே இறுதியில் வென்றது.

மிகவும் பிரம்மாண்டமான தோற்றம் காட்டிய, பெரும் தியாகங்களைச் செய்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் அதிர்ச்சியளிக்கத்தக்க வகையில் மூன்றே வருடங்களில் எவ்வாறு நிர்மூலமாக்கப்பட்டது?

இது குறித்துச் சிந்திக்கும்போதெல்லாம் நான் இந்தக் கதையையே நினைத்துக்கொள்வதுண்டு. அப்போதெல்லாம் நான் புலிகளின் தலைவர் பிரபாகரனை முருகனின் இடத்திலும் மகிந்த ராஜபக்சவைத் தும்பிக்கையானின் இடத்திலும் வைத்துப் பார்ப்பதுண்டு. நாரதரின் இடத்தை யாருக்குக் கொடுக்கலாம்?

தமிழர் தரப்பின் நாரதர் இடத்தைப் புலிகளின் தத்துவ ஆசிரியர் அன்ரன் பாலசிங்கத்திற்குக் கொடுக்கலாம். ஆனால் மகிந்த ராஜபக்சவின் பக்கத்திலோ ஏராளமான நாரதர்கள் இருந்தனர்.

புலிகள் ஏன் இத்தகையதொரு முடிவைச் சந்திக்க நேர்ந்தது? இந்திய ஆய்வாளர் ஒருவர் சொல்வது போன்று அது அவமானகரமான முடிவு [inglorious end].

புலிகளின் தோல்விக்குப் பலரும் தங்களது இருப்பிடம் சார்ந்து பலவிதமான பதில்களைச் சொல்லக்கூடும். புலிகளின் ஆதரவாளர்களோ இந்தியாவே புலிகளை அழித்தது என்று வாதிடலாம் - அதற்கு அமெரிக்கா முண்டு கொடுத்தது என்றும் சொல்லலாம்.

புலி எதிர்ப்பாளர்களோ புலிகளை எவரும் அழிக்கவில்லை அவர்களது எதேச்சாதிகாரப் போக்கே இறுதியில் அவர்களின் கழுத்துக்குச் சுருக்குக் கயிறானதென்று கூறலாம்.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான அரசியல் உரையாடல்களைத் தொகுத்து நோக்கினால் அவற்றை மேற்படி இரு வகைப்படுத்தல்களுக்குள் அடக்க முடியும்.

ஆனால் இந்தக் கட்டுரையோ விடயங்களைப் பிறிதொரு தளத்தில் ஆராய விழைகிறது.

புலிகள் அதிக விலைகொடுத்துக் கைப்பற்றிய ஒவ்வொரு இடத்தையும் இழந்து, அழிந்துகொண்டிருந்தனர். புலிகளின் இறுதி நாள்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருந்தன. இந்தச் சூழலில் புலிகளை அழிவிலிருந்து காப்பாற்றக்கூடிய ஒரேயொரு சக்தியாகத் தமிழகமே இருந்தது.

ஆனால் முடிந்ததா? தமிழகத்தை எவ்வாறு அப்படிச் சொல்ல முடியுமென்ற கேள்வி எழலாம். அதற்கான பதிலை இந்தக் கட்டுரையின் பிற்பகுதியில் பார்ப்போம்.

இங்குதான் ஈழத்தமிழர் போராட்ட ஆதரவுச் சக்திகள் தங்களை சுயவிமர்சனத்திற்குள்ளாக்கிக்கொள்ள வேண்டியதன் அவசியம் உணரப்படுகிறது.

02.

ஒரு நேர்காணலிலிருந்து தொடங்கலாம் என எண்ணுகிறேன். அது நான் சமீபகாலத்தில் மிகவும் கருத்தூன்றிப் படித்த நேர்காணல்களில் ஒன்று.

தியாகு தனது நக்சலைட் அரசியல் குறித்து விமர்சனபூர்வமாகப் பேசியிருக்கிறார். ‘வர்க்க எதிரியின் ரத்தத்தில் கைநனைக்காதவன் புரட்சியாளனே அல்ல’ என்னும் சாரு மஜும்தாரின் புரட்சிகர அரசியல் நிலைப்பாட்டை இன்று திரும்பிப் பார்க்கும்போது அது எவ்வளவு குறைபாடுள்ளது என்பதைத் தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது எனக் குறிப்பிட்டிருக்கும் தியாகு முன்னர் அதைச் சரியென்று நம்பியவர், அதன் வழியில் வர்க்க எதிரியான பண்ணையார் ஒருவரின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக்காளாகிப் பின்னர் பொதுமன்னிப்பின் பேரில் விடுதலையானவர்.

தான் நம்பிய அரசியல் வழிமுறையைச் சுயவிமர்சனத்துடன் அணுகும்போது அதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதைத் தியாகுவால் கண்டுகொள்ள முடிந்திருக்கிறது.

இதே தியாகு பின்னர் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளராகவும் புலிகள் தலைமையிலான ஈழ விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளராகவும் செயற்பட்டவர். ஆனால் எவ்வளவு தூரம் தியாகு போன்றவர்களால் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான நிலைமைகளை சுயவிமர்சனத்துடன் அணுக முடிந்திருக்கிறது என்பது கேள்விக்குறியே!

எனது அவதானிப்பிற்கு உட்பட்டவகையில் ஈழப் போராட்டம் குறித்து சுயவிமர்சனத்துடன் கூடிய அரசியல் உரையாடல்கள் எவையும் தமிழகச் சூழலில் இடம்பெற்றதற்கான சான்றுகள் மிகவும் குறைவே.

புலிகள் பலமாக இருந்த காலத்தில் விமர்சனபூர்வமான பார்வைகள் எவையும் அவசியப்பட்டிருக்கவில்லை அல்லது அது அவசியமானதல்ல என்னும் கருத்துநிலையொன்று ஊடகமயப்படுத்தப்பட்டிருந்தது. அப்படியொரு வாதத்தை ஊடகமயப்படுத்தியவர்களில் நானும் ஒருவன் என்பதைச் சொல்லிக்கொள்வதில் எனக்குத் தயக்கங்கள் இல்லை. ஆனால் இப்போது நிலைமை வேறு. இப்போதாவது சில விடயங்கள் குறித்து நாம் ஆழமாகப் பேசியாக வேண்டியிருக்கிறது.

புலிகள் எதேச்சாதிகாரமாக நடந்துகொண்டனர், மாற்றுக் குரல்களை நசுக்கினர் என்ற விமர்சனங்கள் தவறானவை அல்ல. ஆனால் புலிகளின் வீழ்ச்சியில் இவையெல்லாம் பெரியளவில் செல்வாக்கு செலுத்தியிருக்கவில்லை.

2001 செப்டம்பர் 11இல் அமெரிக்காவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் உலகெங்கும் இயங்கிக்கொண்டிருந்த ஆயுதரீதியான விடுதலை இயக்கங்களுக்கான சாவுமணியாகவும் இருந்தது. இதன் முதல் பலிதான் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்.

உண்மையில் அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தப் பிரகடனம், [War on terror] அமெரிக்க எதிர்நிலைப் போக்கைக் கொண்டிருந்த இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களைக் குறிவைத்திருந்ததே தவிர விடுதலைப்புலிகளைக் கருத்தில் கொண்டிருக்கவில்லை.

விடுதலைப்புலிகள் இயக்கமும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமெரிக்க நிகழ்நிரலுக்கு எதிரானவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டதும் இல்லை. ஆனால் அமெரிக்காவின் மேற்படி போர்ப் பிரகடனம் ஆயுதரீதியான அரசியல் அமைப்புகளை அழிப்பதற்கான சர்வதேச ஆதரவு வெளியை உருவாக்கியது. கொழும்பு மேற்படி ஆதரவு வெளியை மிகவும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக்கொண்டதன் விளைவாகப் புலிகள் மிகவும் மோசமாகத் தோற்கடிக்கப்பட்டனர்.

நான் மேலே குறிப்பிட்ட சாவுமணி எச்சரிக்கையானது, விடுதலைக்காகப் போராடும் இயக்கங்கள் பயங்கரவாத அமைப்புகளிலிருந்து - குறிப்பாக அமெரிக்க எதிர்ப்பு மதவாத அமைப்புகளிலிருந்து -தங்களை வேறுபடுத்திக்காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

இங்கு வேறுபடுத்திக்காட்டுவது என்பதன் பொருள் - ஒரு அமைப்பு தனது அரசியல் இலக்கை மறுவரையறை செய்வதிலிருந்து, தன்னையொரு அரசியல் பண்புநிலை மாற்றத்திற்குள்ளாக்கிக்கொள்வதாக அமைய வேண்டும்.

அந்தவகையில் விடுதலைப்புலிகளின் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தமும் சமாதானத்திற்கான விருப்பும் முன்னேறிய அரசியல் காய்நகர்த்தலாக அமைந்தது. ஆனால் அதைப் பொறுமையாகவும் பயங்கரவாதத்திற்கு எதிரான நிகழ்ச்சிநிரலுடன் முரண்படாத வகையிலும் முன்னெடுப்பதில்தான் புலிகளின் தலைமை சறுக்கியது. ஆனால் இங்கே பலரும் விமர்சிப்பது போன்று, புலிகள் விடயத்தில் மேற்கு நாடுகள் பெரிய இறுக்கத்தைக் கடைப்பிடித்திருக்கவில்லை.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டிருந்தபோதும் அவர்கள் எவரும் பிரபாகரனைப் பின்லேடனாகப் பார்த்திருக்கவில்லை. இதன் விளைவாகவே மேற்குலம் புலிகளை அரசியல் இணக்கப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் கரிசனை எடுத்துக்கொண்டது.

இந்த இடத்தில் மேற்கினது அனுசரனை எல்லையையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். சுருங்கச் சொன்னால், தமிழீழ விடுதலைப்புலிகள் என்னும் பயங்கரவாத இயக்கத்தின் மீது படிந்துள்ள பயங்கரவாதமெனும் அழுக்கை அகற்றிச் சுத்தப்படுத்த மேற்குலம் முற்பட்டது.

இதை இன்னும் சற்று விரிவாகச் சொல்வதானால் - பிரபாகரனை ஒன்றில், மேற்கின் நவநாகரிக (கோட் வகை ஆடை) ஆடைக்கு மாற்றுவது அல்லது ஏற்கனவே ஈழத் தமிழ்ச் சூழலுக்குப் பரிச்சயமான வேட்டி சால்வைக்கு மாற்றுவது என்பதே மேற்கின் நிகழ்ச்சிநிரலாக இருந்தது. ஆனால் பிரபாகரன் இறுதிவரை சீருடை நீக்கத்திற்கு இணங்க மறுத்ததன் விளைவே புலிகளின் அவமானகரமான வீழ்ச்சி.

அதாவது, ஈழத்து அரசியல் சூழலில் சீருடைக்கான அவசியமே இல்லாமலாக்கப்பட்டு மீண்டும் முன்னைய ‘வேட்டி சால்வை’ அரசியலே ஒரேயொரு தெரிவாகப்பட்டுள்ளது.

ஈழத் தமிழரின் மிதவாத அரசியல் தலைமைகள் [Moderate Leaders] தேர்தல் காலங்களில் மக்களை எதிர்கொள்ளும்போது, பொதுவாக வேட்டி சால்வையில் தோன்றுவதே வழக்கம் - இதைச் சுட்டிக்காட்டும் வகையிலேயே ‘வேட்டி சால்வை அரசியல்’ என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

03.

மேற்படி விடயங்களை உணர்ச்சிவசப்படாமல் கருத்தூன்றி நோக்குவோமாயின், புலிகளின் வீழ்ச்சியை விளங்கிக்கொள்வது கடினமானதல்ல.

நாங்கள் முன்னெடுக்கும் ஒரு விடயம் நீதியின்பாற்பட்டது என்று நாங்கள் நம்புவதன் காரணமாக மட்டுமே, அது வெற்றிபெற்றுவிடுமென்று எண்ணுவது அடிப்படையிலேயே உலக அரசியலைப் புரிந்துகொள்ள முடியாமையின் பலவீனமாகும். விடுதலைப்புலிகள் விடயத்திலும் இதுதான் நடந்தது.

இந்தக் கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும்போது இலங்கையின் சமாதான முன்னெடுப்புகள் குறித்த நோர்வேயின் அறிக்கை வெளியாகியிருக்கிறது.

இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய சமாதான முன்னெடுப்புகளுக்கான சிறப்புத் தூதுவராகவும் செயற்பட்ட, நோர்வேயின் சுற்றாடல் மற்றும் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் - இந்தியாவே போர்நிறுத்த உடன்பாட்டிற்குப் பின்னால் இருந்ததை வெளிப்படுத்தியிருக்கிறார்.

RAW அதிகாரிகள் இந்த முயற்சியின் பின்னால் தாங்கள் இருந்ததைப் பகிரங்கப்படுத்த வேண்டாமென்று கோரியதால்தான் இந்தப் போர்நிறுத்த உடன்பாடு, நோர்வேயின் ‘தனித்துவமான குழந்தை’ போல் கருதப்பட்டது.

சமாதான முயற்சிகளில் ‘பிரதான அனைத்துலக சக்தி’ தொடர்புபடுவதை இந்தியா விரும்பியிருக்கவில்லையென்று குறிப்பிட்டிருக்கும் எரிக், போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் எந்தெந்த நாடுகள் பங்குபற்ற வேண்டும் என்பதையும் கூட இந்தியாவே தீர்மானித்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

2002இல்,போர்நிறுத்த உடன்பாடு ஏற்படுவதற்கு முன்னர் இந்திய அதிகாரிகள் விடுதலைப்புலிகளை ரகசியமாகச் சந்தித்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை விடயத்தில் இந்தியாவே ஒரேயொரு தீர்மானகரமான சக்தி என்பதையே மேற்படி தகவல்கள் வெள்ளிடைமலையாகக் குறிப்பிடுகின்றன.

இதை எனது மொழியில் சொல்வதாயின், இந்தியாவின் பிராந்திய நலன்களுடன் முரண்பட்டுக்கொண்டு ஈழத் தமிழ் அரசியல் சக்திகள் எதையும் சாதிக்க முடியாது. ஈழத் தமிழர்களைப் பொருத்தவரையில் சர்வதேச அரசியல் என்பது முதல் அர்த்தத்தில் இந்தியாவின் மூலோபாய அரசியல் என்பதுதான் உண்மையிலும் உண்மை. இந்த விடயத்தை விளங்கிக்கொள்ளாமல் முன்னெடுக்கப்படும் எந்த அரசியல் முன்னெடுப்பும் ஈழத் தமிழர்களின் அரசியல் இருப்பை மேலும் பலவீனப்படுத்தவே வழிவகுக்கும்.

இந்த விடயத்தைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எந்த வகையில் புரிந்துகொண்டிருந்தார் என்பதை ஊகிக்க முடியவில்லை. ஆனால் அவரது இறுதி முடிவு, அவர் இந்தியாவைக் குறைத்து மதிப்பிட்டிருந்ததாகவே தெரிகிறது.

தனது உணர்ச்சிவசப்பட்ட முடிவால் இந்தியாவுடன் தீராத பகையை வளர்த்துக்கொண்ட பிரபாகரன், பின்னர் இந்திய எதிர்ப்பு அரசியல் உள்ளடக்கத்தையும் தனது [சிங்கள எதிர்ப்புக்கு நிகராக] தமிழ்த் தேசியவாத அரசியலுடன் இணைத்துக்கொண்டார். ஆனால் புலிகளின் தத்துவ ஆசிரியர் அன்டன் பாலசிங்கம் இந்தியா தொடர்பில் பிறிதொரு பார்வையைக் கொண்டிருந்தார்.

இந்திய-அமெரிக்க மூலோபாய உறவின் பின்னணியில் இந்தியாவின் முக்கியத்துவத்தைப் புரிந்துவைத்திருந்த பாலசிங்கம், 2006இல் ஒரு ராஜதந்திர நகர்வைச் செய்யும் நோக்கில் ராஜீவ் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

"இது வரலாற்று ரீதியான நிரந்தரத் தன்மைமிக்க துன்பியல் சம்பவம். இதற்காக நாங்கள் ஆழந்து வருந்துகின்றோம். இந்திய அரசும் இந்திய மக்களும் இந்த விடயத்தை மிகவும் பெருந்தன்மையுடன் புறம்தள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் இந்தியாவுடன் புதிய புரிந்துணர்வையும் புதிய உறவையும் கட்டியெழுப்பத் தயாராக இருக்கிறோம். இந்தியா இது தொடர்பில் ஒரு சாதகமான சமிக்ஞையைக் காட்ட வேண்டும்."

ஆனால் வழமைபோல் இதிலும் பாலசிங்கத்தின் ராஜதந்திர அணுகுமுறையானது, அவருடன் கலந்துரையாடப்படாமலேயே புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனால் நிராகரிக்கப்பட்டது.

இதன் பின்னர் புலிகளின் தத்துவ ஆசிரியராகப் பெயரளவில் செயற்பட்டு வந்த அன்டன் பாலசிங்கம் இறக்கும்வரை, புலிகள் இயக்கத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தார் என்பது பலருக்கும் தெரியாத விடயம்.

04.

இந்த இடத்தில்தான் தமிழகத்தின் ஈழ ஆதரவுச் சக்திகளின் அரசியல் புரிதல் குறித்த கேள்வி எழுகிறது.

ஈழத் தமிழரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் இந்தியாவின் தீர்க்கமான இடத்தைத் தமிழக தேசியவாத சக்திகள் புரிந்துகொண்டிருந்தனரா அல்லது ஆகக் குறைந்தது புரிந்துகொள்வதற்கான முயற்சிகளையாவது மேற்கொண்டிருந்தனரா?

தெற்காசிய அரசியல் சிக்கல்களில் இந்தியா தீர்மானகரமான சக்தி என்பதை விளங்கிக்கொண்டு தமிழக ஆதரவுச் சக்திகள் செலாற்றியிருக்கவில்லை என்பதே இந்தக் கட்டுரையின் துணிபாகும்.

விடுதலைப்புலிகளின் ஒட்டுமொத்தத் தலைமையும் முள்ளிவாய்க்காலுக்குள் சிக்குண்டு அழிந்துகொண்டிருந்தபோது, அவர்களை அழிவிலிருந்து காப்பாற்றக்கூடிய ஒரேயொரு சக்தியாக இந்தியாவே இருந்தது. இது கொழும்பின் புத்திஜீவிகளே மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லிவருகின்ற விடயம். ஆனால் இந்தியாவை அத்தகையதொரு நிலையை நோக்கிக் கீழிறக்குவதற்கான ஆற்றல் யாரிடம் இருந்தது?

இந்தக் கட்டுரையாளரின் அவதானிப்பில் அது நிச்சயமாகத் தமிழகத்திடமே இருந்தது. தமிழகத்தின் ஈழ ஆதரவுச் சக்திகள் புலிகளின் நிகழ்ச்சிநிரலைப் பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டனரே தவிர, இந்தியாவின் பிராந்திய நலன்களைக் கருத்தில் கொண்டு புலிகள்மீது அழுத்தங்களைக் கொடுக்கக்கூடியவர்களாக இருந்திருக்கவில்லை. ஆனால் பிழையான நம்பிக்கைகளையே கொடுத்துவந்தனர். இதன் தொடர்ச்சிதான் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர்கூடத் தமது செயற்பாடுகளைச் சுயவிமர்சனம் செய்ய முடியாமல் இருப்பதற்கான காரணம்.

கடந்த காலங்களில் தமிழக ஆதரவு சக்திகள் ஈழத் தமிழர் நலன் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதை இந்தக் கட்டுரை மறுக்கவில்லை. ஆனால் அவற்றின் விளைவுகள் என்ன என்பதில் இந்தக் கட்டுரை அக்கறைகொள்கிறது. தமிழகம் ஆரம்ப காலங்களில் புலிகளின் பின்தளமாக [Rear base] இருந்தது. புலிகளுக்கு மட்டுமல்ல இந்தியாவால் பயிற்சியளிக்கப்பட்ட பல்வேறு இயக்கங்களின் பின்தளமாகவும் தமிழகமே இருந்தது.

ராஜீவ் கொலையைத் தொடர்ந்து புலிகள் இந்தியாவில் செயற்பட முடியாத இயக்கத்தினராகத் தடைசெய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்தே புலிகளின் பின்தளம் மேற்கு நோக்கி [புலம்பெயர் சமூகம்] நகர்ந்தது.

ஈழ விடுதலை இயக்கங்கள் தமிழகத்தில் முகாமிட்டிருந்த காலத்தில் பல்வேறு தமிழக அரசியல் சக்திகளுடனும் தொடர்பிலிருந்தனர். இந்தக் காலத்தில் ஒருசில சிறு குழுக்களைத் தவிரத் தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஈழ விடுதலை அரசியலைத் தங்களது கட்சிசார் அரசியல் நலன்களுடனும் இணைத்துக்கொண்டன.

இதன் பின்னர் ஈழ ஆதரவுநிலை என்பது தமிழக அரசியலில் பிரதான இடத்தைப் பெற்றது. ஆனால் இந்தப் ‘பிரதான இடம்’ என்பது உணர்ச்சிவசமான அரசியல் சுலோகமாக இருந்ததே தவிர இன்றுவரை இந்தியாவின் பிராந்திய நலன்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப ஈழ அரசியலைப் புரிந்துகொள்ளும் நிலைக்கு முன்னேறவில்லை. இதுவே, தமிழகத்தின் இதுவரையான ஈழ ஆதரவுச் செயற்பாடுகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகியதன் காரணம்.

புலிகள் வீழ்ச்சியடைந்து இரண்டு வருடங்களாகின்றன. உலக வரலாற்றில் பல இயக்கங்கள் தோல்வியடைந்திருக்கின்றன. ஆனால் புலிகள்போல் இவ்வாறு மூன்றே வருடங்களில் ஒட்டுமொத்தத் தலைமைத்துவமும் துடைத்தழிக்கப்பட்ட இயக்கம் வேறு எதுவும் இல்லை.

எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் உணர்வுசார் அரசியலை விடுத்து, நிலைமைகளை அறிவுபூர்வமாக அணுகும் முறையொன்றே அவசியம்.

ஈழத் தமிழர்களின் அரசியல் என்பது தமிழக அரசியலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. தமிழகக் கட்சி நலன்சார் அரசியலுக்குள் சிக்குண்டுகிடக்கும் ஈழத் தமிழர் அரசியலைப் பிரித்தெடுக்கும் பார்வை அவசியம். தமிழக ஆதரவு சக்திகள் இந்தியாவின் மீது 'அழுத்தங்'களைப் பிரயோகிப்பதன் மூலம் ஈழத் தமிழர் நலனை வென்றெடுக்கும் உபாயங்கள் குறித்துச் சிந்திக்க வேண்டிய பொறுப்புடையவர்களாக இருக்கின்றனர். ஆனால் அதை முன்னைய ‘சவால்வகை’ அணுகுமுறையால் செய்ய முடியாது.

இங்கு நாம் 'அழுத்தம்' என்பதை எவ்வாறு விளங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதும் இன்னொரு பிரச்சினை. நமது தமிழ்த் தேசிய அரசியல் மரபில் அழுத்தம் என்பதை எதிர்ப்பு அரசியலாகச் சுருக்கிக்கொண்டுள்ளோம். இது தமிழகத்தின் கடந்த கால ஈழ ஆதரவுநிலை அரசியலில் காணப்படும் பிரதானக் குறைபாடாகும்.

புதுதில்லிக்குச் சவால் விடுவதன் மூலமோ பின்லேடனைக் கொன்றது சரியென்றால் ராஜீவ் காந்தியைக் கொன்றதில் என்ன தவறு என்று கேட்பதன் மூலமோ ஒருபோதுமே ஈழத் தமிழ் மக்களுக்கு நன்மையைச் செய்துவிட முடியாது. இதுவரை இத்தகைய சவால்வகை அரசியல் வாதங்கள் எவையும் ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்றவும் பயன்பட்டிருக்கவில்லை. ஆனால் அவர்களை அழித்ததில் இப்படியான வாதங்களுக்குப் பங்குண்டு.

இந்தியாவின் பிராந்திய நலன்களை விளங்கிக்கொண்டு, ஈழத் தமிழர்களின் நலன்களை வெற்றிகொள்ளும் வகையில் ஈழ ஆதரவு சக்திகளின் அரசியல் செயற்பாடுகள் மீள்பரிசீலனைக்கு ஆளாக வேண்டியது காலத்தின் தேவை. அத்தகையதொரு நிலை ஏற்பட்டாலன்றித் தமிழக ஆதரவு சக்திகளின் அனைத்துச் செயற்பாடுகளும் வெற்றுக் கோசங்களாகவே சுருங்கிப் போகும்.

கடந்த காலத்தின் செயற்பாடுகள் ஏன் எதிர்பார்த்தது போன்று தாக்கங்களை ஏற்படுத்தவில்லை?

ஏன் எட்டுக் கோடித் தமிழ் மக்கள் இருந்தும் சில மைல்கள் தூரத்தில் நடந்த அவலத்தைத் தடுத்து நிறுத்த முடியாமல் போனது?

ஏன் புதுதில்லி தமிழகத்தின் தீக்குளிப்பு அரசியலைக் கருத்தில் கொள்ளவில்லை?

தமிழகத்தின் இத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் எவ்வாறு புலிகள் அழித்தொழிக்கப்பட்டனர். கூடவே [ஐநாவின் கணிப்பில்] நாற்பதாயிரம் மக்களும் யுத்தத்துக்குள் சிக்கி மாண்டனர்?

இத்தகைய கேள்விகளின் அடிப்படையில் தமிழக ஆதரவு சக்திகள் தங்களைச் சுயவிமர்சனத்துக்கு ஆட்படுத்திக்கொள்வதொன்றும் தற்கொலைக்கு ஒப்பானதல்ல.

http://www.puthinappalakai.com

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான கட்டுரை. பல உண்மைகளை தெளிவாக கட்டுரையாளர் கூறியிருக்கின்றார்.

முதலில் தமிழகத்தில் பணத்துக்காக உணர்வாளர்களாகச் செயற்படும் நெடுமாறன், சீமான் போன்றோருக்கு அனுப்பப்படும் புலம்பெயர் சமூகத்தின் பணம் நிறுத்தப்பட்டால் யாவும் நன்றாகவே நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான கட்டுரை. பல உண்மைகளை தெளிவாக கட்டுரையாளர் கூறியிருக்கின்றார்.

முதலில் தமிழகத்தில் பணத்துக்காக உணர்வாளர்களாகச் செயற்படும் நெடுமாறன், சீமான் போன்றோருக்கு அனுப்பப்படும் புலம்பெயர் சமூகத்தின் பணம் நிறுத்தப்பட்டால் யாவும் நன்றாகவே நடக்கும்.

:o :o :o

//இந்தியாவின் பிராந்திய நலன்களுடன் முரண்பட்டுக்கொண்டு ஈழத் தமிழ் அரசியல் சக்திகள் எதையும் சாதிக்க முடியாது. ஈழத் தமிழர்களைப் பொருத்தவரையில் சர்வதேச அரசியல் என்பது முதல் அர்த்தத்தில் இந்தியாவின் மூலோபாய அரசியல் என்பதுதான் உண்மையிலும் உண்மை.//

புலிகளை அழித்ததன் மூலம் இந்தியா எங்கனம் தனது பிராந்த்திய நலனைப் பாதுகாத்துக் கொண்டது? சீனாவுக்கு பல ஒப்பந்த்தங்கள் வழங்க்கப்பட்டுள்ளன.மேற்குலக இராஜதந்திரிகள் ,பலர் இந்தியாவால் சிறிலங்காவை ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பதாகக் கூறுகிறார்களே? அப்படியாயின் ஏன் இந்தியா புலிகளை அழித்தது? ஆளாமாக ஆரயப் படமால் உதீந்திராவால் எழுதப்பட்ட கட்டுரை.

//கடந்த காலத்தின் செயற்பாடுகள் ஏன் எதிர்பார்த்தது போன்று தாக்கங்களை ஏற்படுத்தவில்லை?//

தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய பலம் அரசியல் ரீதியாக இல்லை.குறைந்த பட்டச்சம் காங்கிரசைத் தோற்கடிக்க முடிந்த்து.முல்லைப் பெரியார் அணை முதல் தமிழக மீனவர் பிரச்சினை வரை ,தமது பிரச்சினைகளயே அவர்களால் டெல்லிக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை.அந்தளவு பலவீனமான நிலையையயே தமிழ் நாடு கொண்டுள்ளது.இதற்க்கு தமிழ்னாட்டு அரசியலுக்குள் இருக்கும் சாதிய குழு நிலைகளை மத்திய ஆளும் வர்க்கம் சாதகமாகப் பாவிக்கிறது.இவற்றைத் தகர்ப்பது இலகுவானதல்ல.

//

//ஏன் எட்டுக் கோடித் தமிழ் மக்கள் இருந்தும் சில மைல்கள் தூரத்தில் நடந்த அவலத்தைத் தடுத்து நிறுத்த முடியாமல் போனது?//

மேற் சொன்ன காரணங்கள் தான்.

//ஏன் புதுதில்லி தமிழகத்தின் தீக்குளிப்பு அரசியலைக் கருத்தில் கொள்ளவில்லை?//

தமிழரியும் தமிழ் நாட்டையும் டெல்லி என்றும் கவனத்தில் கொள்ளவில்லை.அதற்க்கு தி மு க அதி முக என்னும் கட்ட்சிகளின் தனினபர் சொத்துச் சேர்ப்பது மக்களின் அறியாமை அரசியல் விழிப்புணர்வின்மை எனப் பல காரணங்கள் உண்டு.

//தமிழகத்தின் இத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் எவ்வாறு புலிகள் அழித்தொழிக்கப்பட்டனர். கூடவே [ஐநாவின் கணிப்பில்] நாற்பதாயிரம் மக்களும் யுத்தத்துக்குள் சிக்கி மாண்டனர்?

இத்தகைய கேள்விகளின் அடிப்படையில் தமிழக ஆதரவு சக்திகள் தங்களைச் சுயவிமர்சனத்துக்கு ஆட்படுத்திக்கொள்வதொன்றும் தற்கொலைக்கு ஒப்பானதல்ல.//

இந்திய ஆளும் வர்க்கம் என்னும் பொது எதிரிக்கு எதிராக மக்கள் அணிதிரளாத வரை , அது மக்களைக் கூறு போட்டு அவர்களை பலவீனமானவர்களாகவே வைத்திருக்கும் யதீந்திரா.இந்தியாவையும் தமிழ்னாட்டையும் ஆளமாகப் பார்க்காமல் மேலோட்டமான கட்டுரைகளால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.முக்கியமாக இந்தியாவை தட்டையாக ஒரு அலகாகப் பார்க்கும் உங்கள் பார்வை தவறானது.

பணம் செலவழிப்பது, அதன் மூலம் தமது சார்பு கொள்கைகளை முன்னெடுப்பது சாதாரண உலக அரசியல். அந்த வகையில் தமிழர் தரப்பும், உலக நாடுகளின் தலைநகரங்களில் இதுக்கென்றே உள்ள நிறுவனங்கள் (lobby firms)ஊடாக அயராது முயற்சிக்கவேண்டும்.

:o :o :o

என்னைக்கேட்டால் இப்பொழுதுதான் கூடுதலாக கொடுக்கவேண்டும், அதுவும் கூட்டமைப்பு ஊடாக, சென்னைக்கும் மற்றும் புதுடெல்லிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தமிழரிடமிருந்தோ புலிகளிடமிருந்தோ

தமிழகத்தலைவர்களுக்கு பணம்போகின்றது என எழுதுபவர்களை நாம் உடனேயே புரிந்து கொள்ளமுடியும் அவர்கள் போராட்டத்திலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி இருந்தார்கள் என்பதை.

மிக அருமையான கட்டுரை. பல உண்மைகளை தெளிவாக கட்டுரையாளர் கூறியிருக்கின்றார்.

முதலில் தமிழகத்தில் பணத்துக்காக உணர்வாளர்களாகச் செயற்படும் நெடுமாறன், சீமான் போன்றோருக்கு அனுப்பப்படும் புலம்பெயர் சமூகத்தின் பணம் நிறுத்தப்பட்டால் யாவும் நன்றாகவே நடக்கும்.

அப்படியா..!? கோத்தபாஜ ராஜபக்ஸைக்கு பணத்தை நேரே அனுப்பினால் பிரச்சனையை தீர்த்து வைப்பாரா...!!!!??? நீங்க தானும் படான் தள்ளியும் படான் கேசுகள், மன்னிக்கனும் நிர்மலன் நீங்கள் எழுதும் கருத்துக்கள் ஒரு சிங்களவன் எழுதும் கருத்தை ஒட்டியே இருக்கு,,, திருந்தப்பாருங்க...!

புலம் பெயர் வாழ் மக்களை உளவியல் ரீதியாக குழப்பும் ஓர் நோக்கத்தைகொண்டதோ இந்தக்கட்டுரை என நான் கருதுகிறேன்.ஆனால் நடந்து முடிந்த தேசிய மாவீரர் நிகழ்வுகளின் மூலம் புலம் பெயர் தமிழர்கள் எவ்வளவு தெளிவாகவும், உணர்வுடனும் இருக்கிறார்கள் என்பதையும் யாரும் அவர்களைக்குழப்பவும் முடியாது என்பதை மிகத்தெளிவாகக்காட்டியது எமக்கெல்லாம் மிகவும் ஆறுதல் தருகிறது.ஆனாலும் எம்மைக்குழப்பும் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் .நாம் மிகவும் விழிப்புடனும் ,

நிதானத்துடனும் இந்த சோதனை வேதனை நிறைந்த காலத்தை கடந்து சொர்க்கத்தின் வாசல் திறக்கப்படும் அந்த நன்நாளை நோக்கி துணிவுடன் பயணிப்போம்.

post-7765-0-33526200-1323200268.jpg

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் வாழ் மக்களை உளவியல் ரீதியாக குழப்பும் ஓர் நோக்கத்தைகொண்டதோ இந்தக்கட்டுரை என நான் கருதுகிறேன்.ஆனால் நடந்து முடிந்த தேசிய மாவீரர் நிகழ்வுகளின் மூலம் புலம் பெயர் தமிழர்கள் எவ்வளவு தெளிவாகவும், உணர்வுடனும் இருக்கிறார்கள் என்பதையும் யாரும் அவர்களைக்குழப்பவும் முடியாது என்பதை மிகத்தெளிவாகக்காட்டியது எமக்கெல்லாம் மிகவும் ஆறுதல் தருகிறது.ஆனாலும் எம்மைக்குழப்பும் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் .நாம் மிகவும் விழிப்புடனும் ,

நிதானத்துடனும் இந்த சோதனை வேதனை நிறைந்த காலத்தை கடந்து சொர்க்கத்தின் வாசல் திறக்கப்படும் அந்த நன்நாளை நோக்கி துணிவுடன் பயணிப்போம்.

உண்மை

தலைகள் அடிபட்டுக்கொண்டபோதும்

மக்கள் தெளிவுடன் தமது வரலாற்றுக்கடமையைச்செய்து முடித்தனர். அந்த மக்களின் முடிவுக்காவது இனி மற்றவர் தலைவணங்கணும்.

உண்மை

தலைகள் அடிபட்டுக்கொண்டபோதும்

மக்கள் தெளிவுடன் தமது வரலாற்றுக்கடமையைச்செய்து முடித்தனர். அந்த மக்களின் முடிவுக்காவது இனி மற்றவர் தலைவணங்கணும்.

அண்ணா

மௌனித்துகொண்டிருக்கும் அண்ணனின் தலை ஓர் நாள் உயரும் அப்போது அடித்து அடிபட்டுக்கொண்டிருக்கும் தலைகள் அனைத்தும் அடிபணியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்களத்தின் தோற்றுப்போகப்போகும் தவறான அணுகுமுறை மாவீரர் துயிலுமில்லங்களை அழிப்பது மக்கள் மனங்களில் உள்ள மாவீரர்களின் எண்ணங்களை அழிப்பதற்கு இவ்வாறாண இணையங்களுக்கும் அதன் பத்தி எழுத்தாளர்களிற்கும் செலவழிக்கும் பணத்தை இவர்களால் சீரழிக்கப்பட்ட மக்களிற்கு குறைந்த பட்ச நட்ட ஈடாக வழ்ங்குவதன் மூலம் ஓரளவாவது அந்த மக்களின் மனங்களை வெல்லலாம் அதை விடுத்து இந்த பெருச்சாளிகளிற்கு இறைக்கும் பணம் விழலுக்கு இறைத்த நீர்.

Krisna Saravanamuttu on Tamil Sovereignty Cognition

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.